
இராமர் எங்கிருக்கிறாரோ அதுதான் அயோத்தி. ஆக அயோத்தி போகவேண்டும் என்பது இறைவனை அடைய வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. அப்படிப் போய் இறைவனை அடைவதற்கு, வானரர்கள் இராமரைத் தவிர வேறு யாரிடம் போய் வேண்டுவது? இறைவனுக்கு நாம் வேண்டிக்கொள்வதில், “இறைவா! நாங்கள் உன்னை அடைவதற்கு வழி காட்டு” என்பதைத் தவிர வேறு எந்த கோரிக்கை அதை விடச் சிறந்ததாக இருக்கிறது?… வால்மீகி ஒவ்வொரு இன்னல்களிலும் மனிதனான இராமர் எப்படி தன் நிலைப்பாடை எடுக்கிறார் என்பதைக் காட்டும்போது, அந்தக் காலத்தைய அவல நிலைச் சூழல்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார். இப்படியும் ஒருவனால் இருக்க முடியும் என்று காட்டுவதே இந்த இலக்கியத்தின் இலக்கு. அதைக் கேட்டு ரசித்து, அது சொல்லும் வழியில் நடக்க நமக்கு அந்த இராமரே வழி காட்டட்டும்….