ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11

சூரியன் எழுவதால் உலகில் பல காரியங்கள் நடந்தாலும், அவைகளின் பயன் சூரியனை அடையாது என்று கண்டோம். அதைப் போலவே இங்கு கிட்டத்தட்ட அசையாது நிற்கும் நிலவையும், நீரில் அதன் பிம்பத்தின் அசைவையும் எடுத்துக்கொண்டு ஆத்மாவின் சன்னிதானத்தில் காரியங்கள் இயற்றப்பட்டாலும் ஆன்மா அதற்கு பொறுப்பாகாது என்று விளக்குகிறார். ஒவ்வொருவனும் தான் ஆன்ம சொரூபம் என்பதை அறிவால் மட்டும் தெரிந்துகொண்டு, தான் செய்யும் காரியங்களையும் அதனால் அடையும் அனுபவங்களையும் “நான் செய்கிறேன்”, “நான் அனுபவிக்கிறேன்” என்று எண்ணுவதாலும், தான் ஆன்ம வடிவம் என்பதை தெரிந்து கொண்டதாலும், இயற்றப்படும் காரியங்களையும் அடையப்பெறும் அனுபவங்களையும் தேக இந்திரியங்கள் தொடர்பானவை என்று புரிந்துகொள்ளாமல், ஆத்மாவினுடையது என்று தவறாக கணிக்கிறான். ஆன்மாவிற்கு எந்தச் செயலும் கிடையாது என்பதால், இந்தக் கணிப்பு தவறானது என்பதை அசையா நிலவின் அசைவுகள் என்ற இந்த உவமையால் சங்கரர் விளக்குகிறார்.

நீர் அசைவதால் தண்ணீரில் தெரியும் சந்திரன் அசைவதுபோல் தெரிகிறதே தவிர சந்திரனே அசைவதில்லை என்பதுபோல், தேக இந்திரியங்களின் இயக்கத்தால் நடைபெறுவதை ஆன்மாவினுடையது என்று கருதுவது தவறு. அதன் உண்மை புரிவதற்கு தண்ணீரையே பார்த்துக் கொண்டிருக்கும் மனிதனின் பார்வையை நிலவின் பக்கம் திருப்புதல் அவசியம். அப்போதுதான் அவனுடைய பிரமை விலகும்.

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11