
மத்தால் கடையப்படும் தயிர் போல, உடலுக்குள் வந்தும் வெளியே சென்றும் தத்தளிக்கிறது அவனது உயிர். அந்த உயிருடனே, ஐந்து புலன்களையும் வீழ்த்துகின்ற பித்து நிலையும், நின் பிரிவாலே தோன்றிய வேதனையும் எவ்வளவு? அதை அளவிட்டுச் சொல்ல முடியுமோ?…. இராவணனுடைய மூன்று கோடி ஆயுளையும், முயன்று பெற்றிருந்த பெரிய தவப் பயனையும், வரத்தையும், மற்றும் திசைகளையும், உலகங்கள் எவற்றையும் போரால் வென்ற தோள் ஆற்றலையும் உண்டு விட்டு, அவனுடைய மார்பில் நுழைந்து, உடல் எங்கும் சுழன்று ஓடி, உயிரைப் பருகிவிட்டு வெளியே சென்றது இராகவன் செலுத்திய புனிதம் நிறைந்த அம்பு…