இன்று வைகாசி விசாகம்: வெற்றிவேல்! வீரவேல்!

ஷண்முகர்முருக வழிபாட்டுக்கு உகந்த நாட்களில் முக்கியமானது வைகாசி விசாகம். கந்தனாகிய சக்தி வெளிப்பட்ட திருநாள். அதனால் விசாகன் என்பதும் முருகனுடைய திருப்பெயர்களில் ஒன்று. மாசியில் சிவபிரான் மன்மதனை எரித்துப் பின்னர் உயிர்ப்பித்த காமதகனம் (ஹோலி, காமன் பண்டிகை). பின்னர் பங்குனி உத்திரம், சித்திரா பௌர்ணமியில் சிவ-பார்வதி திருக்கல்யாணம். வைகாசி விசாகத்தில் குமரன் உதயம். அழகாக, தொடர்ச்சியாக இந்த தெய்வத் திருவிழாக்கள் வருகின்றன.

அசுரசக்திகளை அழிக்க பரமனின் நெற்றிக்கண்ணில் உதித்த சக்திச் சுடர்களை அக்னிதேவன் கங்கையில் சரவணப் பொய்கையில் இட, அங்கு தோன்றினர் ஆறு குமாரர்கள். கார்த்திகைப் பெண்கள் அவர்களைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். அதனால் அக்னிகர்ப்பன், காங்கேயன் (கங்கையின் மைந்தன்), சரவணன் (சரம் என்ற நாணல் புதர்கள் மண்டிய பொய்கையில் அவதரித்தவன்), கார்த்திகேயன் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவன்) ஆகிய திருநாமங்களால் முருகப் பெருமானை வணங்குகிறோம். பரம்பொருளாகிய பிரம்மமே திருமுருகனாகி உலகைக் காக்கின்றது.

“அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய”

என்று கந்தபுராணம் கூறுகிறது.

சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்றது என்பதனை, “ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே” என்று அருணகிரியார் பாடுவார்.

முருகனுக்குரிய எல்லாத் திருத்தலங்களிலும், குறிப்பாக திருச்செந்தூரில் விசாகப் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

“துள்ளியோடும் மீன்களின் விளைடாட்டால் செந்தூரின் வயல்கள் அழிந்தன. அவன் கடம்பமலர் மாலையின் மயக்கும் வாசத்தால் பூங்கொடிபோன்ற பெண்கள் மனம் அழிந்தது. மயிலேறிவரும் அந்த மாவீரனின் வேல் பட்டு கடலும், மலையும், சூரனுமாய் வந்த அசுர சக்திகள் அழிந்தன. அவன் திருவடிகள் பட்டு பிரமன் என் தலைமேல் எழுதியிருந்த தலையெழுத்து அழிந்து விட்டது”

என்று அருணகிரியார் முருகனை வணங்கித் தான் உய்வு பெற்றதைக் கூறுகிறார்.

“சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட்டழிந்ததது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே”

– கங்தரலங்காரம், 40

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் முருகப் பெருமானின் பூரண அருள் பெற்றவர். முருகனே அவருக்கு ஞான குருவாய் வந்ததால் “குரு குஹ” என்பதையே தனது எல்லா இசைப் பாடல்களிலும் முத்திரையாக அமைத்தார்.

சூரனின் சேனைகளை அழித்த குமரன், திருச்செந்தூர் படைவீட்டில் தேவ சைன்யங்கள் சூழ அமர்ந்திருக்கிறான். சகல தேவ சக்திகளும் அவனை வாழ்த்த அங்கு கூடியிருக்கின்றனர். இந்தக் காட்சியை இசைக் கோலமாக விரிக்கிறார் தீட்சிதர், சுத்தசாவேரி ராகத்தில் அமைந்த ஒரு அழகிய கீர்த்தனையில் –

ஸ்ரீகுருகுஹ தாரயாஸு மாம் – சரவண பவ (ஸ்ரீ)
சுரபதி ஸ்ரீபதி ரதிபதி வாக்பதி
க்ஷிதிபதி பசுபதி ஸேவித (ஸ்ரீ)

(முழுப்பாடலையும் இங்கே கேட்கலாம். பாடியவர் திருமதி அருணா சாய்ராம். பாடலுக்கு முன்வரும் “மயூராதிரூடம்” என்ற சுலோகம் ஆதிசங்கரர் அருளியதாகக் கூறப்படும் சுப்ரமண்ய புஜங்கம் துதியில் உள்ளது).

நம்மாழ்வார்வைகாசி விசாகத் திருநாளுக்கு மேலும் பல சிறப்புகளும் உண்டு. புத்த பெருமான் அவதரித்த “புத்த பூர்ணிமா” என்ற திருநாளும் வைகாசி மாதம் பௌர்ணமியன்று தான். சில சோதிட விதிவிலக்குகள் தவிர்த்து, அநேகமாக எல்லா ஆண்டுகளும் ஒரே நாளில் தான் இந்த இரண்டு திருவிழாக்களும் வரும். இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இந்தத் திருவிழாவிற்கு “விசாக்”(Vesak) என்றே பெயர்.

“வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்று வைணவ ஆசாரியர்களில் முதலாவதாக வணங்கப் படும் நம்மாழ்வார் உதித்த நாளும் இது தான். நெல்லை மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அருகிலேயே ஆழ்வார் திருநகரி என்ற திருத்தலத்தில் அவதரித்தவர். எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாள் திருவடியில் சடாரியாக வீற்றிருந்து என்றென்றூம் அடியார்களை ஆசிர்வதிக்கிறார் ஆழ்வார். நம்மாழ்வார் திருநட்சத்திர விழா பற்றி மேலும் அறிய இங்கே பாருங்கள்.

நாற்புறமும் பல்வேறு அபாயங்கள் நம் தேசத்தையும், மக்களையும் சூழ்ந்துள்ள நிலையில், வெற்றிவேல் நமக்கு உற்ற துணையாகட்டும்.
வீணரை வீழ்த்திய வீரவேலின் சக்தி நம் நெஞ்சில் குடிகொள்ளட்டும்.
சூரனை வென்ற சுடர்வேல் நம்மை முப்போதும் எப்போதும் காக்கட்டும்.

வெற்றிவடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்!

– பாரதி

4 Replies to “இன்று வைகாசி விசாகம்: வெற்றிவேல்! வீரவேல்!”

  1. Our entire family liked this article very much. Thank you tamilhindu admin and thank you Jataayuji.

    Kannan & Family, Pune.

  2. சேல் பட்டு அழிந்தது என்ற பாடலில் வேல் பட்டு அழிந்தன என்று இருக்க வேண்டும் . அழிந்தது என்று இருக்கிறது. பலர் இதை பிழையாகவே பாடி வருகிறார்கள். வேலையும் சூரனும் வெற்பும் என மூன்று பொருள்கள் வருவதால் பன்மை தானே வரவேண்டும்?

  3. திரு ஜகதீச்வரன்./ ” வேல்பட்டு அழிந்தன’ என்று பன்மை விகுதி அல்லவா வரவேண்டும்?/ உரைநடை இலக்கணத்தின்படி நீங்கள் கூறுவது சரியே. இது ஓசை நயமுடைய ஆன்றோர் செய்யுள். மாமயிலோன் வேல்பட்டு வேலையும் அழிந்தது,சூரனும் அழிந்தது, வெற்பும் அழிந்தது என அழிந்தது என்னும் வினைமுற்றை வேலை, சூரன். வெற்பு ஒவ்வொன்றுடனும் தனியே கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு கொள்வதால் பொருளும் சிறக்கும், பாட்டி ன் ஓசையும் சிறக்கும். அழிந்தன என்று கொண்டால் யாப்பிலக்கணம் சிதையாதபோனாலும் பாட்டின் ஓசை சிறக்காது. ஜடாயு எழுதியுள்ள பாடமே ஆன்றோர்கள் ஏற்றுக் கொண்ட பாடம்.

  4. இச்சை சக்தி கிரியா சக்தி ஞான சக்தி ஆகிய மூன்றின் நேர்த்தியான ஒருங்கிணைப்பே முருகப்பெருமானின் அவதார விளக்கம். அவன் புகழ் பாடி, நோய்களை எதிர்த்துப்போராடி நல்ல உடல் நலமும், தெளிந்த மனநலமும் பெறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *