இந்துமதம் என்றால் என்ன?: பாரதியார் கவிதை

“காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின்மீது வாழ்த்துப் பாக்கள்” என்ற தலைப்பில் கீழ்வரும் பாடல் பாரதியாரின் “பல்வகைப் பாடல்கள்” தொகுப்பில் உள்ளது. மூன்றே விருத்தங்களில் மிக அழகாகவும், ரத்தினச் சுருக்கமாகவும் இந்துமதத்தின் மேன்மைகளையும், உட்பொருளையும் இந்தக் கவிதை சொல்லிச் செல்கிறது.

மண்ணுலகின் மீதினிலே எக்காலும்
அமரரைப்போல் மடிவில் லாமல்
திண்ணமுற வாழ்ந்திடலாம்; அதற்குரிய
உபாயமிங்கு செப்பக் கேளீர்!
நண்ணியெலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச்
செய்கையெலாம் நடத்தும் வீறாய்த்
திண்ணியநல் அறிவொளியாய்த் திகழுமொரு
பரம்பொருளை அகத்திற் சேர்த்து.

(மடிவில்லாமல் – அழியாமல்; நண்ணீயெலாப் பொருளினிலும் உட்பொருளாய் – எல்லாப் பொருள்களிலும் உட்பொருளாக, அந்தராத்மாவாக வீற்றிருந்து; வீறாய் – சக்தியாய்; திண்ணிய – உறுதியான)

செய்கையெலாம் அதன்செய்கை, நினைவெல்லாம்
அதன் நினைவு, தெய்வமே நாம்
உய்கையுற நாமாகி நமக்குள்ளே
ஒளிர்வதென உறுதி கொண்டு,
பொய், கயமை, சினம், சோம்பர், கவலை, மயல்,
வீண்விருப்பம், புழுக்கம், அச்சம்,
ஐயமெனும் பேயையெலாம் ஞானமெனும்
வாளாலே அறுத்துத் தள்ளி,

(உய்கையுற – உய்வடையுமாறு, மேன்மையடையுமாறு; சோம்பர் – சோம்பல்; மயல் – மயக்கம்; புழுக்கம் – பொறாமை)

எப்போதும் ஆனந்தச் சுடர்நிலையில்
வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர்
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
பெற்றிடுவார்: சதுர்வேதங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால்
இவ்வுண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமதம்
எனப்புவியோர் சொல்லு வாரே.

(வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர் – வாழ்ந்து உயிர்களுக்கு இனியது செய்வோர்; சதுர்வேதங்கள் – நான்கு வேதங்கள், மெய்ப்பான – உண்மையான, துப்பான – தூய்மையான)

அடுத்த பாடலில், இத்தகைய பெருமை மிக்க ஹிந்துமதத்தைப் பின்பற்றி அதன்படி நடக்காதிருப்போர் கவலை என்னும் நரகில் வீழ்கிறார் என்கிறார் (பொய்க் கற்பிதமான நரகத் தீயைக் கூறவில்லை). மேலும் தன்னைச் சாரும் அன்பர்கள் அனைவருக்கும் பெருமைமிகு வாழ்வை அளிக்கும் நல்ல துணை இந்துமதம் என்று பறைசாற்றி, “சேர வாரும் ஜெகத்தீரே” என்றும் அழைக்கிறார்.

அருமையுறு பொருளிலெலாம் மிக அரிதாய்த்
தனைச்சாரும் அன்பர்க் கிங்கு
பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
ஹிந்துமதப் பெற்றி தன்னைக்
கருதி அதன் சொற்படியிங் கொழுகாத
மக்களெலாம் கவலை யென்னும்
ஒருநரகக் குழியதனில் வீழ்ந்துதவித்-
தழிகின்றார் ஓய்விலாமே.

(பெற்றி – சிறப்பு)

3 Replies to “இந்துமதம் என்றால் என்ன?: பாரதியார் கவிதை”

  1. பாரதியின் கவிதைகள் அனைத்தும் சாகாவரம்பெற்றவை. அவர் வருமுன் குறிசொல்லிப்பாடிய வரகவி.. அவர் எழுதிய இந்தக் கவிதையும் அருமை…

  2. வாழ்க பாரதி! அருமை! என்ன வரிகள், என்ன சொல்லாண்மை, என்ன ஆளுமை! சரஸ்வதி தேவியின் பரிபூரண கடாட்சம். யாரேனும் மறுக்கவியலுமா?

  3. நம் சிந்தனையும், நம் செய்கையும் எல்லாமே அந்த பரம்பொருளின் விளையாட்டே என்று ஆணித்தரமாக பாரதி அவர் கவிதையில் உணர்த்தியுள்ளார். நமது ஈகோ முற்றிலும் தரைமட்டமாகிவிடுகிறது இந்த கவிதை வரிகளை படித்தவுடன். பாரதி உன் கவிதைகளை படிக்க நாங்கள் பாக்கியம் செய்தவர்கள். இறைவனுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *