பல கடவுளரா, ஒரே கடவுளா?

வீட்டில் சுழலும் மின்விசிறி காற்று வீசுகிறது. அதே வீட்டின் குளியலறையில் இருக்கும் வெந்நீர்த் தொட்டியில் சுடுநீர் வருவதற்கும் காரணம் அதே மின்சாரம்தான். அதே மின்சாரம் ஏ.சி.யில் குளிர்ச்சியைத் தருகிறது. மின்விளக்கில் ஒளியாக இருக்கிறது.

எனக்கு ஆற்றலின் இந்தப் பல வடிவங்கள் பிடிக்கவில்லை என்று சொல்கிறவன் நேரடியாக மின்சாரக் கம்பியைத் தொட்டால் ஷாக் அடித்து விழவேண்டியதுதான். மின்சாரம் நேரடியாக எந்தப் பலனையும் தருவதும் கிடையாது.

குணம் குறியில்லாத இறைத்தத்துவம் எல்லாவற்றையும் கடந்தது. அது கடவுள், பிரம்மம் என்ற சொற்களுக்கும். ஏன் மனதுக்கும் கூட அப்பாற்பட்டது. அப்படிப்பட்ட ஓர் இறைவனைச் சொல் வடிவத்தில் அழைக்கும்போதே அதற்கு ஒரு பெயர் வந்து விடுகிறது. அவரைச் சிம்மாசனத்தில் அமர்த்தும்போதே அவருக்கு ஓர் வடிவம் இருப்பது உணர்த்தப்படுகிறது. ஆகவே வடிவம், பெயர் இல்லாத கடவுளைத் தொழுபவர்களின் நூல்கள் கூட அவரை வர்ணிக்கத் தொடங்கும்போது அவருக்குப் பெயரும் வடிவமும் வந்துவிடுகிறது.

ஆனாலும் சனாதனமான இந்து மதம் பெயரும் உருவமுமற்ற கடவுளையும் ஏற்கிறது. அதே நேரத்தில் கடவுளை மனிதன் எந்த வடிவில் அழைக்கிறானோ அந்த வடிவில் வந்து அருளைத் தர வல்லவன் என்ற தத்துவத்தையும் ஏற்கிறது. எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்தவன், எல்லாம் வல்லவன் என்று கூறும்போதே இறைவன் எல்லாவற்றிலும் இருக்கிறான், எந்தப் பெயரில் பக்தியோடு அழைத்தாலும் வருவான் என்பவற்றையும் ஒப்புக்கொண்டுதானே ஆக வேண்டியிருக்கிறது?

வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி
ஊனாகி, உயிராகி, உண்மையுமாய், இன்மையுமாய்

என்று பள்ளிக்கூடத்திலே புரிந்துகொள்ளாமலே படித்தோம். கடவுள் இருக்கிறார் என்று சொல்பவருக்கு உண்மைத் தத்துவமாக அவனே இருக்கிறான். இல்லை என்பவருக்கு இல்லாத அவ்வெறுவெளியாக எங்கும் நிற்பவனும் அவனே என்பதைப் புரிந்துகொண்டால் நல்லது.

மின்சாரம் நமது உபகரணத்துக்கு ஏற்ப வெப்பமாகவோ, குளிராகவோ, காற்றாகவோ, காந்தமாகவோ, நீர்பாய்ச்சும் சக்தியாகவோ மாறுகிறது. ஆனால் குறுகிய பார்வை கொண்டவர்கள் மின்சாரம் நீர்தான் பாய்ச்சும், காற்றுத்தான் வீசும் என்று தாம் அறிந்த ஒரே செயல்பாட்டுக்குள் அதை அடைக்கப் பார்க்கிறார்கள்.

பிரம்மம் என்னும் இறைத் தத்துவமும் அப்படித்தான். நிர்விகல்ப சமாதியில் உணர்ந்தவர்களுக்கு பரப்பிரம்மமாகவே எல்லாவற்றிலும் தென்படும். அல்லாதவர்க்கு அவரவர் கும்பிடும் தெய்வமாக வந்து அருள் செய்யும்.

7 Replies to “பல கடவுளரா, ஒரே கடவுளா?”

  1. thankyou for your good sirvice.and god will be bless for continue your service.

  2. இந்து சமயம் இஸ்லாம், கிறிஸ்தவ சமயத் தாக்கங்களினாலேயே ஒரு கடவுள் என்ற Monotheism கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதாக சொல்கிறார்கள்.

    எங்கும் எல்லாவற்றிலும் கடவுளைக் இந்து சமயம் காணுகிறது என்பது ஒரு இந்து சமயக் கூற்று. அதுதானே பிரம்மம் என்ற கருத்துரு அல்லது இறை தத்துவத்தின் அடிப்படை. இது ஒன்று, ஆனால் கடவுள் வேறு மனிதன் வேறு என்ற Monotheistic அடிப்படையில் இருந்து வேறு பட்டது அல்லவா?

    இந்து சமய வழக்கத்தில் பல கடவுள்கள் (Polytheism) வழிபாடு இருக்கின்றது. எனவே இந்து சமயத்தை Polytheistic சமயம் என்று கூறுவதுதானே கூடிய பொருத்தம்.

    இஸ்லாம் Monotheistic சமயங்களை விட்டுவைத்த அளவு Polytheistic சமயங்களை விடவில்லை (Shiria Law). எனவே இந்து சமயம் இசைந்து சென்றுது என்று கூறலாமா?…

    அதேபோலதான் The Trinity கருத்துரு என்றும் தோன்றுகிறது. கிறிஸ்தவ சயமத்தில் இருந்து முற்றிலும் மாறுபடாமல் இருக்க Sivan, Vishnu, Brhaman Trinity ஏற்படுத்தப்பட்டிக்கலாம் என்று எனது Hindu Modernity Course ஆசிரியர் ஒரு முறை குறிப்பிட்டார்.

  3. // இந்து சமயம் இஸ்லாம், கிறிஸ்தவ சமயத் தாக்கங்களினாலேயே ஒரு கடவுள் என்ற Monotheism கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதாக சொல்கிறார்கள். //

    ஒரு ஆதாரமும் இல்லாத, இந்த அப்பட்டமான அண்டப் புளுகை யார் சொல்கிறார்கள்? கிறிஸ்தவ மிஷனரிகளும், இஸ்லாமிஸ்டுகளும் இந்துக்களைக் குழப்புவதற்காக வேண்டுமென்றே இப்படிச் சொல்லி வருகிறார்கள்.

    இந்துமதம் கூறும் “ஒருமை” கடவுளுக்கும், இந்த மதங்கள் கூறும் “ஒரே” கடவுளுக்கும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.

    பார்க்க: கட்டுரை “ஒன்று என்றால் ஒன்று தானா?”-
    https://www.thinnai.com/?module=displaystory&story_id=80704195&format=html

    பிரம்மம், அத்வைதம் ஆகிய கோட்பாடுகள் வேதகாலத்திலேயே உருவாகி விட்டன.
    எனது வலைப்பதிவு ஒன்றிலிருந்து (https://jataayu.blogspot.com/2008/06/1.html) ஒரு பகுதி –

    வேதம் கூறும் தெய்வம் ஒன்றே. “ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி” (சத்தியம் ஒன்றே; முனிவோர் அதைப் பலவாறாகக் கூறுகின்றனர்) என்று விவேகானந்தர் சிகாகோவில் மேற்கோள் காட்டிய அமுதவாசகம் இந்திரனையும், அக்னியையும், யமனையும் துதிக்கும் ஒரு ரிக்வேத சூக்தத்தில் தான் வருகிறது.

    பரம்பொருள் என்றால் என்ன என்று பிரம்ம சூத்ரம் முதல் கீதை வரை கூறும் விளக்கங்கள் அனைத்தின் மூலமும் வேதத்தில் உள்ளது. “சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம” “அஸ்தி, ப்ரீதி, பாதி” (அது என்றும் இருப்பது, அன்பு வடிவானது, ஒளிப்பொருள்) ஆகிய வாசகங்கள் கர்மகாண்டம் எனப்படும் சம்ஹிதை மந்திரங்களிலேயே உள்ளன.

  4. // கிறிஸ்தவ சயமத்தில் இருந்து முற்றிலும் மாறுபடாமல் இருக்க Sivan, Vishnu, Brhaman Trinity ஏற்படுத்தப்பட்டிக்கலாம் என்று எனது Hindu Modernity Course ஆசிரியர் ஒரு முறை குறிப்பிட்டார். //

    இந்து மும்மூர்த்திகள் பற்றிய உருவாக்கம வேத இலக்கியத்திலேயே உள்ளது. இதிகாச, புராணங்களில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று வளர்த்தெடுக்கப்பட்டது. பௌத்த, சமண காலங்களுக்கும் முற்பட்டது.

    சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற கருதுகோளுக்கும் கிறிஸ்தவத்தின் Trinity சமாசாரத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.. சொல்லப் போனால், கிறிஸ்தவத்தில் Trinitiy கருத்தாக்கம் நுழைந்ததே மிகப் பிற்காலத்தில்!

    கிறிஸ்தவத்திலிருந்து காப்பியடித்தது என்று இதைச் சொல்வது ஒரு மகா பெரிய அபத்தமும், திட்டமிட்ட மோசடியும் ஆகும். மூன்று என்ற எண் இருப்பதாலேயே இரண்டுக்கும் தொடர்பு இருக்குமா – என்ன கொடுமை இது?

    இந்து மதத்தையும் அதன் அடிப்படைகளையும் சரிவரப் புரிந்துகொண்டிருக்கும் எந்த இந்துவும் இப்படிச் சொல்லமாட்டான். உள்நோக்கங்களைக் கொண்ட சில மாற்று மதத்தவர் இப்படிச் சொல்லும் வழக்கம் இருக்கிறது. தாங்கள் Hindu Modernity Course படிப்பது ஹிந்து நிறுவனம் நடத்தும் பயிற்சி வகுப்பில்தானா? இந்து நிறுவனங்கள் நடத்தும் எந்தப் பயிற்சி வகுப்புகளிலும் இப்படிப்பட்ட கருத்துகளை விதைப்பதில்லை.

  5. ஜடாயு, உங்களின் விரிவான பதில்களுக்கு நன்றி.

    உங்களின் பின்வரும் கூற்றில் இரண்டாவது தடவை “மற்ற மதங்கள்” என்று வந்திருக்க வேண்டுமா?

    “இந்துமதம் கூறும் “ஒருமை” கடவுளுக்கும், இந்த மதங்கள் கூறும் “ஒரே” கடவுளுக்கும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.”

    நீங்கள் குறிப்பிட முயன்ற மாதிரி, ஒருமை என்ற கருத்துரு அல்லது இறை தத்துவத்துக்கும் ஒன்று என்றதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. ஒருமை மனிதனையும் சேர்த்து சொல்கிறது. ஒன்று மனினை வேறுபடுத்திக் காட்டுகிறது. ஒருமை மனிதனை அண்டத்தின் ஒரு கூறாகப் பாக்கிறது. ஒன்று மனிதனையும் அண்டத்தையும் படைக்கப்பட்ட பொருளாகப் பாக்கிறது. நான் சொல்வது பொருந்தி வருகிறதா? இங்கு வேறு வேறு இந்து தத்துவங்கள் வேறுபாடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அதனால் தான் கிறிஸ்தவம், இஸ்லாம் சுட்டும் Monotheism கருத்துருவை இந்து கருத்துரு/இறை தத்துவத்தையும் ஒன்றே என்று சுட்ட முடியாது. ஆனால் பலர் அவ்வாறு செய்வதை அவதானித்துள்ளேன்.

    நான் மும்மூர்த்திகள் கிறிஸ்தவதத்தில் இருந்து வந்தது என்பது போல எனது வாக்கியங்கள் அமைந்து விட்டன. தவறு என்னது. கூற வந்தது என்ன வென்றால் The Trinity என்ற கருத்துரு கிறிஸ்தவ தாக்கத்தினால் முதன்மைப்படுத்தப்பட்டது என்றே ஆசிரியர் குறிப்பிட்டார். குறிப்பாக
    Ram Mohan Roy போன்றோரால். Ram Mohan Roy உருப வழிபாட்டையும் வெறுத்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவத்துக்கு முற்றிலும் தம்மை இழக்காமல், தம்மை நிலைநிறுத்த சமரசம் செய்ய வேடியதால் இவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம்.

    மேலும் சோதிடம் பற்றிய உங்கள் கட்டுரைகளைப் படித்தேன். நிச்சியமாக உங்களிடம் எதிர்பாக்காத ஒரு நிலைப்பாட்டை நீங்கள் விளக்கியிருந்தீர்கள். இப்படியான கலந்துரையாடல்கள் ஆக்கபூர்வமாக அமைகின்றன. நன்றி.

  6. வேதகளை நான் தமிழில் படிக்க வேண்டும் அதற்கு நான் எந்த வலை தளத்தை பார்க்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *