ஜெகா மாமா

Uncle Jega“ஜகா மாமா” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் தத்தோ J. ஜெகதீசன் மலேசியாவில் பிறந்து அங்கு டாக்டர் பட்டம் பெற்றவர். மலேசிய அரசின் “தத்தோ” (இங்கிலாந்தின் சர் விருது போன்ற) விருது பெற்றவர். தன் 33 வயது வரை இறைநம்பிக்கை இல்லாமல் இருந்தார். யாரும் இந்து மதத்தின் உண்மைப் பொருளை அவருக்கு எடுத்துச் சொல்லாததே இதற்குக் காரணம் என்கிறார் அவர்.

ஆனால், 1976ல் ஒரு ஆன்மீக உணர்வால் உந்தப்பட்டு இந்து மதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். கிருத்துவம், புத்தம், இஸ்லாம் போன்ற பிற மதக் கோட்பாடுகளையும் படித்து அறிந்தார். மலேசிய அரசின் தொழில்மேம்பாட்டு இயக்குனராக உயர்ந்த பதவியில் இருந்து தற்போது ஐ.நாவில் பதவி வகிக்கும் இவர் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.

“7000 வருட செழிப்பான இந்துக் கலாசாரங்கள் கடந்த ஒரு தலைமுறை காலத்துக்குள் இளைய சமுதாயத்தினரிடம் வேகமாக மறைந்து வருவதை என் அனுபவத்தில் காண்கிறேன்.

இதற்குக் காரணம், இந்துப் பெற்றோர்கள் தங்கள் மதத்தையோ, இந்துச் சடங்குகளின் நோக்கத்தையோ சரியாக அறிந்திருக்கவில்லை. இக்காலக் குழந்தைகளும் இளைஞர்களும் இந்து மதத்தை ஒரு பழைய மதம், வினோதமான வடிவங்களில் பல கடவுள்களைக் கொண்ட மதம், குழப்பமான மதம் என்று தவறாக நினைக்கிறார்கள். அவர்கள் தங்கள் TRAC குறித்து வெட்கப்படுகிறார்கள்” என்கிறார் அவர்.

TRACTRAC என்பது Tradition, Religion, Aspiration & Culture என்பதன் சுருக்கம். (தமிழில்: சம்பிரதாயம், மதம், இலட்சியம், பண்பாடு). இதுவே இவர் நடத்தும் சிறந்த இயக்கத்தின் பெயர். அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் இது இயங்கி வருகிறது. இந்து மதத்தின் நாடித்துடிப்பை வலுவாக்கும் முயற்சியில் இந்த இயக்கம் ஈடுபட்டுவருகிறது. இந்த இயக்கத்தின் மூலம் “சாதனா” என்ற பெயரில் இவர் இளைஞர்களுக்கு முகாம் நடத்துகிறார். (TRAC அமைப்பின் அட்லாண்டா கிளையின் அங்கத்தினர்களை படத்தில் காணலாம்)

ஜகா மாமாவின் கருத்தில், வெறும் கோவில்களை கட்டுவதால் அதிக பலன் இல்லை. இந்துக்கள் அந்த கோவில்களுக்குப் போய் கருத்து அறியாமல் பூசை செய்கிறார்கள். இந்து மதம் வெறும் சிலை வழிபாட்டு மதம் அல்ல. ஆனால், பெரும்பாலான இந்துக்கள் வெறும் சிலை வழிபாட்டாளர்களாக ஆகியிருக்கிறார்கள். கோவிலுக்குச் செல்வது என்பது அவசியமானது அல்ல. நம் உள்ளத்தில் கோவிலைக் காண்பதே அவசியம்.

இந்துமதம் ஒரு முழுமையான அறிவியல் மதம். இந்து மதம் தன் குறியீடுகளில் பலப்பல உள்கருத்துகளைச் சொல்கிறது. இந்த குறியீடுகள் காலத்தையும், மொழியையும் கடந்து நிற்கின்றன. இவற்றை உணர்வதே இந்து மதத்தினருக்குத் தேவையானது. இந்த குறியீடுகள் நமக்கு மூன்று உண்மைகளை உணர்த்துகின்றன:

1) கடவுள் யார்?
2) கடவுளை அடைவது எப்படி?
3) நாம் முழு மனிதாக ஆவது எப்படி?

இவை எல்லாமே சத்தியத்தைத் தெளிவுபடுத்துகின்றன. இந்த சத்தியங்களை உணர்ந்தவன், குறியீடுகளை தாண்டி விடுகிறான்.

பலப்பல விஞ்ஞானிகள் இந்து மதக் கோட்பாடுகளில் நவீன விஞ்ஞானத்தை கண்டிருக்கிறார்கள். இயற்பியலின் தந்தை எனப்படும் Frijof Capra நடராசரின் தாண்டவத்தில் நவீன இயற்பியலை அழகாக நிரூபித்திருக்கிறார். “ஒவ்வொரு அணுவும் நடராசரின் இந்த சக்தி-நடனத்தை நடத்துகிறது. அணுக்களின் இந்த தாண்டவம் முடிவில்லாமல் சக்திகளை ஏற்படுத்தியும், அழித்தும் இடைவிடாது நடக்கிறது” என்கிறார் அந்த விஞ்ஞானி.

நவீன விஞ்ஞானிகளுக்கு கூத்தாடும் நடராசனின் தத்துவம் இந்தப் பேரண்டத்தின் அணு இயக்கத்தையே குறிக்கிறது. இந்துக்களின் புராணங்களிலும், இந்த நடனம் அழிப்புக்கும், உற்பத்திக்கும் மூலமாகவே சித்தரிக்கப்படுகிறது.

இந்து மதத்தில் இருக்கும் மூத்தவர்கள் சரியாக இவற்றை எடுத்துச் சொல்லாததால், இளைய சமுதாயம் இந்து மதத்திலிருந்து விலகிச் சென்றுகொண்டிருக்கிறது, என்கிறார் ஜகா மாமா. கடவுள்கள், சடங்குகள், இந்து மத அடையாளங்களைப் பற்றி வேறு மதத்தினரின் கேள்விகளும், கேலிகளும் நம் இளைஞர்களை – குறிப்பாக வெளிநாடு வாழ் இளைஞர்களை – வெட்கப்பட வைக்கின்றன. ஒரு நிலையில், இந்து மதத்திலிருந்து இவர்கள் நழுவி விடுகிறார்கள், என்று வருத்தப்படுகிறார் ஜகா மாமா.

“பெரும்பாலான இந்துக்கள் மந்திரங்களை கிளிப்பிள்ளை மாதிரி பொருள் தெரியாமல் யந்திரமாக சொல்கிறார்கள். ஆனால், இந்த மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவற்றின் முழு பலனைப் பெற அமைதியான மனத்தில், மிகப் பொறுமையாக, பக்தியுடன், அசையாத நம்பிக்கையுடன் இவை ஜபிக்கப் பட வேண்டும். இந்த மந்திரங்களின் பொருளை அறிந்து அவற்றை மனக்கண்ணில் கண்டு இவை ஜபிக்கப்படவேண்டும்” என்கிறார் ஜகா மாமா.

லிங்க்: https://www.nripulse.com/CityNews_TracAtlanta06.html

3 Replies to “ஜெகா மாமா”

  1. Thank you for news about this wonderful man and his mission. Such organizations are a boon to youngesters like me who are being drawn to Hinduism. Hari om!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *