வேதங்களே இந்துக்களின் பிரமாண நூல்கள் – மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி

-மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி கூறுகிறார்…

வேதரிஷிவேதம் என்றால் அறிவு என்று பொருள். அறிவின் உறைவிடம் இறைவன். இறைவனிடமிருந்து நாத வடிவில் தோன்றிய அறிவை ரிஷிகள் மன ஒருமைப்பாட்டுடன் தரிசித்தனர் அல்லது கேட்டனர். அதை அவர்கள் சீடர்களுக்கு நல்கினர். இவ்வாறு பரமாத்மாவிடமிருந்து தோன்றியதும், ரிஷிகள் தரிசித்ததுமான சனாதன உண்மைகளையே வேதம் என்று சொல்கிறோம். இறைவனிடமிருந்து கேட்டதாலும், வார்த்தைகள் மூலம் சீடர்களுக்கு உபதேசித்ததாலும் வேதத்தை ‘ஸ்ருதி’ என்றும் சொல்கிறோம். மந்திரங்களை தரிசித்த ரிஷிகளை ‘மந்த்ர த்ரஷ்டாக்கள்’ (மந்திரங்களை தரிசித்தவர்கள்) என்றும் சொல்கிறோம்.

மெய்ப்பொருளை அனுபூதியில் அறிந்த ரிஷிகளின் அனுபவமே வேதம். ஒரு கொலை நடந்தால் அதைக் கண்ட ஒரு சாட்சி இருந்தால் அந்த சாட்சியின் வார்த்தையையே நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அவ்வாறின்றி, ஆயிரம் பேர் அதைக் காணவில்லை என்று சொல்வதை ஒரு நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதில்லை. வேதம் என்பது ஒரு ரிஷியின் அனுபவம் மட்டுமல்ல. மெய்ப்பொருளை அறிந்த பல ரிஷிகளின் அனுபவமாகும். நாம் அதை அறியவில்லை என்பதால் அதை மறுப்பது முட்டாள்தனமாகும். புத்தி உள்ளவர்கள் ரிஷிகள் சொல்லித்தந்த பாதை வழியாகச் சென்று, அந்த மெய்ப்பொருளை உணர முயற்சி செய்ய வேண்டும்.

இறைவன் மற்றும் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட எல்லா சனாதன உண்மைகளும் வேதங்களில் அடங்கியிருக்கின்றன. அவை ஏதோ ஒரு மனிதன் படைத்ததல்ல. பரமாத்மாவிலிருந்து தோன்றிய நிலையான சத்தியங்களாகும். அதனால் வேதத்தை ‘அபௌருஷேயம்’ என்று சொல்வர். இந்த வேதங்களே ஹிந்துகளின் முடிவான பிரமாணம். எல்லா தர்மத்தின் மூலமாகத் திகழ்வது வேதம். சநாதன தர்மத்தில் எல்லா சாஸ்திரங்களுக்கும் வித்தைகளுக்கும் அடிப்படையாகத் திகழ்வது வேதமே.

வேத உண்மைகள் சகல உலகங்களுக்கும் நன்மையைத் தருபவை. ஆன்மீகமான, பௌதிகமான உயர்வையே வேதம் குறிப்பிடுகிறது. அங்கே பிரிவினைக்கு இடமில்லை. உலகம் முழுவதும் அமைதியையும் சமாதானத்தையும் அளிக்கும் தத்துவங்களே வேதத்தில் உள்ளன. ‘லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து’ என்பதே ரிஷிகளின் உபதேசமாகும். அபௌருஷேயம் என்று சொல்லி எதையும் நாம் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, சத்தியம், தர்மம், தவம், கருணை, அன்பு, தியாகம், அஹிம்சை போன்ற நிலையான உலகியல் நற்பண்புகளை வேதம் போதிப்பதால்தான் அவற்றை ஹிந்துக்கள் பரம பவித்ரமாகவும், பரம பிரமாணமாகவும் ஏற்றுக்கொள்கின்றனர்.

நன்றி: மாத்ருவாணி

One Reply to “வேதங்களே இந்துக்களின் பிரமாண நூல்கள் – மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி”

Leave a Reply

Your email address will not be published.