அழகிய மணவாள தாசரின் அகரவரிசைப் பாடல்

அழகிய மணவாள தாசர் என்ற ஓர் அடியவர்; ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்’ என்றும் அழைப்பர். இவர் எழுதியது ‘அஷ்டபிரபந்தம்’ என்னும் நூல். எட்டு நூல்களின் தொகுப்பான இந்த நூலில் ‘திருவரங்கக் கலம்பகம்’ என்னும் நூலும் அடங்கும்.

திருவரங்கக் கலம்பகத்தின் ஒரு பாடல் உயிர் எழுத்துகளின் வரிசையில் அமைந்துள்ளது. இப்பாடல் பெருமானுடைய ஐந்து நிலைகளையும் விளக்குவதாகவும் திகழ்கிறது. எளிய மொழி அமைப்பும், பொருட்செறிவும் மனதைக் கவர்வதாக உள்ளது.

அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
ஆலிமா முகிலை வாலி காலனை
இந்த ளூருறை எந்தைபெம் மானை
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை
உள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை
ஊரகம் நின்றருள் நீரகத் தடிகளை
எவ்வுள் மாயனைத் தெய்வநா யகனை
ஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை
ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை
ஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே !
ஓதநீர் ஞாலத் துழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே.

இந்தப் பாடலில் மாலவன் மகிழ்ந்தினிதுறையும் தலங்களும், அவனுடைய திருநாமப்பெருமையும், அவன் உயிர்களில் கரந்துறையும் மாண்பும் மனங்கவரும் வண்ணம் இடம்பெற்றுள்ளன.

இவர் வாழ்ந்தது 17 ம் நூற்றாண்டில். மன்னர் திருமலை நாயக்கரின் அரசவையில் பணிபுரிந்து வந்தார். வைணவர்; அரங்கனுக்கே பித்தேறி இருந்தவர். இவருக்குப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்றும் திருநாமம் உண்டு. தமது ஈடற்ற புலமையால் ‘திவ்ய கவி’ (தெய்வக் கவிஞர்)என்ற பட்டமும் பெற்றார். இவர் உண்ணும்போதும், உறங்கும்போதும், பணிகளில் ஈடுபடும்போதும் அரங்கனின் நினைவிலிருந்து அகலாதவராகவே திகழ்ந்தார்.

ஒரு நாள் அலுவலில் ஈடுபட்டிருக்கும்போது திடீரெனத் தமது மேல்துண்டை இரு கரங்களாலும் ‘கிருஷ்ண, கிருஷ்ண’ என்று கூறியபடிக் கசக்கினார். அருகிலிருந்தோர் ‘புத்தி மாறாட்டம் ஏற்பட்டதோ!’ எனக் கூறிச் சிரித்தனர். ‘நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகையில் திரைச் சீலையில் தீப்பற்றியது; அதை அணைக்கவே இவ்வாறு செய்தோம்’ என்றார் அந்த மெய்யடியார்.

செய்தி மன்னரின் காதுகளுக்கு எட்டியது. கூர்மதி படைத்த அம்மன்னர் உடனே திருவரங்கத்துக்கு ஆளனுப்பிச் செய்தி அறிந்து வரச் செய்தார். சம்பவம் ஊர்ஜிதமானது. மன்னர் ஐயங்காரைப் பணியிலிருந்து விடுத்து, அரங்க நகருக்கே அனுப்பி வைத்தார்.

இப்பெருந்தகை அரங்கன் ஆலயத்தில் சலவைக்கல் மண்டபப் பிராகாரத்தின் ஓர் அறையில் தங்கிக்கொண்டு, இறுதிவரை அரங்கனுக்குத் தொண்டுசெய்து வாழ்ந்து வந்தார். இறைப்பணியும், தமிழ்ப்பணியும் இவருடைய இரு கண்கள். சீடர் பலரும் இவரை அடுத்து, அருந்தமிழ் கற்று, ஆன்ம ஈடேற்றத்திற்கான வழியையும் அறிந்து உய்ந்தனர். இவர் ‘ஆண்டவனே முழுமுதற் பொருள்; அவனே எனக்குப் புகல்; வேறு யாருக்கும் பொய்யடிமை செய்யேன்’ என்று பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்ந்தார். ‘உண்டென்றிரு;தெய்வம் உண்டென்றிரு!’ என்னும் உண்மையான ஆன்மிக வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு இம்மாமனிதர்.

இவர் எழுதிய எட்டு நூல்கள்:

1. திருவரங்கக் கலம்பகம்
2. திருவரங்கத்து மாலை
3. திருவரங்கத்தந்தாதி
4. சீரங்க நாயகர் ஊசல் திருநாமம்
5. திருவேங்கட மாலை
6. திருவேங்கடத்தந்தாதி
7. அழகர் அந்தாதி
8. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி

இவை ‘அஷ்டபிரபந்தம்’ எனும் பெயரோடு புகழ்பெற்று விளங்கிவருகிறது. ‘அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்’ என்றும் தமிழறிந்தோர் கூறுவர்; இவருடைய நூல்களை ஆழ்ந்து கற்றால் தமிழ் இலக்கிய-இலக்கணங்களில் பாதியளவு தேர்ச்சி பெற்றவராகலாம் என்பது உட்கருத்து.

முருகதாச சுவாமிகள் இயற்றிய புலவர் புராணத்திலும் இவர்தம் வரலாறு இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *