பெண்கள், குடும்பம் – 1

துர்கா-லக்ஷ்மி-சரஸ்வதிநம் கடவுளர்கள் கூட மனைவியரோடு தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் நாம் கல்யாணம், குடும்பம் என்றெல்லாம் கூறி மகிழ்கின்றோம். இவ்வாறு இருக்கையில் மனிதரான நமக்குத் திருமணம் என்பதும் அவசியம், மனைவி, மக்கள் என்பதும் அவசியமான ஒன்றே ஆகும். இல்லறமே நல்லறம் ஆகும் என்பது ஆன்றோர் வாக்கு.

ஈசன் உடலில் சரிபாதியை அன்னைக்குக் கொடுத்திருக்கின்றான். காக்கும் கடவுளான விஷ்ணுவோ தன் நெஞ்சிலேயே அவளைச் சுமக்கின்றார். படைப்பவரான பிரம்மாவோ தன் நாக்கிலேயே மனைவியை வைத்திருப்பதாகக் கூறுவார்கள். கல்விக்கு அதிபதியாக நாம் கூறுவது சரஸ்வதி என்னும் பெண் தெய்வமே. அதே போல் வீரத்துக்கு மலைமகளையும், செல்வத்துக்கு அலைமகளையும் அதிபதியாகக் கூறுகின்றோம்.

அன்னையைப் பூஜித்து அம்பாள் வழிபாடுகள் செய்தவர் ஹயக்ரீவர் என்றும் அறிவோம். இப்படி நம் புராணங்களும் சரி, இதிஹாசங்களும் சரி பெண்ணைப் போற்றியே வந்திருக்கின்றன.

ஆனால் இன்றைக்கு நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்ளும் நிலைமை வந்தது எதனால்?

நம்மாலேயேதான். விளக்கேற்ற ஒரு பெண் வேண்டும் என்று சொல்வது வெறும் வார்த்தைக்கு மட்டும் இல்லை. பெண்ணே ஒரு குத்துவிளக்கைப் போல் அடக்கமாக, நிதானமாக ஒளியைப் பரப்பவேண்டும் என்ற உள்ளார்ந்த அர்த்தமும் அதில் அடங்கி உள்ளது. ஒரு சிறிய அகலையோ, குத்துவிளக்கையோ ஏற்றி வைத்தால் பரவும் வெளிச்சம் தண்மையைத் தரும், இதத்தைத் தரும், ஆறுதலைத் தரும், நம்பிக்கையைத் தரும், நிம்மதியைத் தரும். ஆனால் அதே ஒரு தீவட்டி எரிந்தால்? அது எப்படி மேற்சொன்ன அனைத்தையும் தரமுடியும்? இன்று பெண் ஒரு தீவட்டியைப் போல் ஆகிவிடுவாளோ என்று அச்சம் ஏற்படுகின்றது. இந்த பூமி, பூமியின் நதிகள் என்று அனைத்தையுமே நாம் பெண் உருவிலேயே பார்க்கின்றோம். நம் நாட்டின் முக்கிய நதிகள் அனைத்துமே பெண்பால் பெயர்களைத் தாங்கியவையே பிரம்மபுத்திராவையும், சோன் நதியையும் தவிர. பூமியில் போடும் அனைத்து விதைகளும் முளைக்கின்றன. செடியாகின்றன, கொடியாகின்றன, மரமாகின்றன, காய்த்துப் பழுத்துப் பின் அடுத்து வாரிசுக்குத் தயார் ஆகின்றன.

அனைத்து விதைகளும் சரியான அளவில் முளைக்கின்றனவா? அனைத்துமே பயனுள்ளவையாய் இருக்கின்றனவா? அதேபோல்தான் பெண்ணாய்ப் பிறந்த நம்மில் பலரும் நம்முடைய உழைப்பையும், அதனால் விளையும் பயனையும் பயனற்ற வழிகளில் செலுத்திக் கொண்டு இருக்கின்றோம்.

இல்லறம் என்பது இல்வாழ்க்கையை முறையான வழியில் அறவழியில் அதாவது தர்மத்தின் பாதையில் இருந்து விலகாமல் செல்லுவது என்று அர்த்தம். திருமணத்தின் அர்த்தமே இல்லறத்தின் மூலம் நல்லறத்தைப் பெறுவது ஆகுமே தவிர, வெறும் உடல் இன்பத்திற்காக மட்டும் அல்ல. நாம் செய்யும் அறம் நமக்குப் பின்னர் வரும் சந்ததிகளும் தொடரவேண்டும், அதற்கான பரம்பரையை உருவாக்க வேண்டும், அந்தப் பரம்பரை நல்லறத்தைச் செய்யவேண்டும். அறம் தொடர்ந்து செய்யப்படவேண்டும், நிற்கக் கூடாது என்பதற்கே ஆகும். நம் நல்லறம் வளர வாழ்நாள் முழுதும் நமக்குத் துணையாக வருபவளே சகதர்மிணி என்று அழைக்கப் படுகின்றாள். வாழ்நாள் முழுதும் அறம் செய்பவளும், அந்த அறச் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பவளும் சகதர்மிணி ஆவாள். தஞ்சைக்கு அருகே திருவையாற்றில் கோயில் கொண்டிருக்கும் ஐயாறப்பரின் அம்பிகையை அறம் வளர்த்த நாயகி என்ற பெயரிலேயே அழைக்கப் படுகின்றாள்.

அருணகிரிநாதர் தன் இளவயதில் இல்லறத்தைப் பற்றிச் சிறிதும் நினையாமலேயே, பிற மாதரின் தொடர்பு கொண்டு தன்னிலை இழந்திருந்தார். அதனாலேயே தான் உய்யும் வகையை அறியாமல் போய்விட்டதாய் அவரே வருந்தி இருக்கின்றார். ஒரு நல்ல கணவன் தன் மனைவி, குழந்தைகளுக்காக எவ்வாறு நேர்மையான வழியில் உழைக்கின்றானோ, அதேபோல் ஒரு நல்ல மனைவியும் தன் குடும்பத்துக்காகவும், கணவனுக்காகவும் உழைக்கவேண்டும். நல்ல மனைவி என்பது இறைவன் கொடுக்கும் பரிசு என்பார்கள். நல்ல மனைவியும், சிறந்த மக்கட்செல்வமும் சொர்க்கத்தை மண்ணுலகுக்கே கொண்டு வரும்.

ரிக் வேதம் மனைவிதான் வீடு, குடும்பம் என்று சொல்லுவதாய்ச் சொல்லுவார்கள். ஆகவே நல்ல மனைவிதான் ஒருவனுக்கு மிகப் பெரிய செல்வம். மற்றச் செல்வங்கள் தானே வந்து சேரும் அவனை. ‘இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றில்லை’ என்பது ஆன்றோர் வாக்கு.

2 Replies to “பெண்கள், குடும்பம் – 1”

  1. அழகாக எழுதியிருக்கிறீர்கள். பல கருத்துக்களை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். இன்றைய நாகரீக, பரபரப்பான உலகில் அடிப்படை தத்துவத்தையும், வாழ்க்கையின் முக்கிய நோக்கத்தையும் ஆண், பெண் இருபாலரும் இளவயதில் அறிந்து அதை கடைபிடித்தால் இல்லறம் தழைக்கும், சந்ததிகள் புகழ்பெறுவார்கள். நம் இறைவர்களின் பெயர்களில் பெண்களுக்கே முதலிடம் (லட்சுமிநாராயணன், உமாமகேசுவரன் முதலிய…). எந்த வீட்டில் பெண் அழுகிறாளோ, அந்த வீட்டில் மங்களங்கள் தங்காது என்கிறது மனு ஸ்்ம்ருதி. பெண் அனுமதியில்லாமல் எந்த தானமும், தருமமும் நம் ்சாத்திரங்களில் அனு்மதிக்கப்படவில்லை. இப்படி பெண்்ணை மையமாக வைத்தே நம் இல்லற கலாசாரம் தழைத்து வந்திருக்கிறது.

    தமிழ்இந்துவின் அற்புதமான கட்டுரைகளில் பல முத்தாயப்பா்ன கட்டுரைகளில் இதுவும் ஒன்றே. கீதாசாம்பசிவம் அவர்கள் தன் அனுபவங்களை ஒத்த பார்வையை இதில் அழகாக வழங்கியிருக்கிறார்.

    நன்றி

    ஜயராமன்

Leave a Reply

Your email address will not be published.