நவ இரவுப் பண்டிகை

புனிதமான காலமிது
புரட்டாசித் திங்களிது!
மனிதகுலம் வாழ்ந்திடவே
மழைதொடரும் காலமிது!

மலைமகளும் அலைமகளும்
மகிழ்வுடவே கலைமகளும்
குலமகளிர் இல்லமெலாங்
குடியிருக்குங் காலமிது!

நவயிரவுப் பண்டிகையில்
நங்கையர்தாம் கொலுவமைத்துச்
சிவபாகத் துமையருளைச்
சிந்திக்கும் நேரமிது!

மாவிலையுந் தோரணமும்
மாக்கோலத் திருவழகும்
கோவிலென விளங்குகிற
திருவிளக்கும், கமழ்மணமும்,

இன்னிசையால் செவியினிக்கும்
இன்பநிலை கண்டிடவும்,
மன்னர்போல் மதலையுலா
வீதிகளை நிறைத்திடவும்,

பேதமின்றி மக்களெலாம்
பூஜையிலே மனமுவக்க,
கோதில்லாப் பக்தியிலே
கட்டுண்பாள் அன்னையவள்;

மந்திரத்தில் அடங்குபவள்
மகமாயி தேவியவள்,
தந்திரத்தில், யந்திரத்தில்
தனைவணங்க வருகுபவள்;

நாயகியை இவ்வாண்டும்
நாம்கூடி அழைத்திடுவோம்,
தாயவளின் தாள்நிழலில்

தவமுனிவர் பேறடைவோம்!

2 Replies to “நவ இரவுப் பண்டிகை”

  1. ஆறொடுமூன் றிரவினிலும்
    அம்மையவள் திருப்புகழைக்
    கூறிடவும் தொழுதிடவும்
    கூறுகவி மிகஇனிது!

  2. தலைமகளாம் தாயை மலைமகளாக – அலைமகளாக – கலைமகளாக விரித்துக் கூறி நவ இரவு எனத் தலைப்பு கொடுத்து உள்ளீர்கள். நவராத்திரியை நவ இரவு என தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து உள்ளீர்கள். யாராவது நவ என்பதையும் உரிய முறையில் தமிழ் மொழியில் கூறினால் இன்னும் இனிமையாக இருக்கும். மொழி வெறி அல்ல. தொலைந்ததைத் தேடுகிறேன். அவ்வளவே. மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *