அழியட்டும் சாதியம் மலரட்டும் ஆன்மநேயம்

அம்பேத்கர் சட்டக்கல்லூரி சம்பவம் தமிழ்நாட்டின் மனச்சாட்சியை உலுக்கியிருக்கும். கத்தியுடன் ஒரு மாணவன் பாய்வதும் பின்னர் மாணவர்கள் சூழ்ந்து கீழே கிடக்கும் ஒரு மாணவனை தடிகளால் அடிப்பதும் காவல்துறை அதிகாரிகள் அதனை வேடிக்கை பார்ப்பதும் – ஏறக்குறைய சினிமா காட்சியோவென தோன்றவைக்கும் ஒரு பயங்கரம். தாய் தந்தையர்கள் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி தம் செல்வங்களை படிக்க பட்டணத்துக்கு அனுப்புகிறார்கள், அவர்கள் தங்கள் செல்வங்கள் படித்து பட்டம் வாங்கும் காட்சியை காணும் தருணத்துக்காக காத்துக்கிடக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு காணக் கிடைப்பதோ தம் கனவுகளை நிறைவேற்ற காத்திருக்கும் அவர்களது நம்பிக்கைகள் கல்லூரி வாசல்களிலேயே கொடூரங்களில் உறைந்து சோக அவலங்களாக உலகுக்கே காட்சியளிக்கும் பரிதாபம். ஏன் இந்த நிலை? யார் காரணம்? பாபா சாகேப் அம்பேத்கரும் சரி பொன் முத்து ராமலிங்க தேவரும் சரி இந்த கொடூர வக்கிரங்களை அவர்கள் பெயர்களில் நடத்திட அனுமதிக்க மாட்டார்கள். மிக மோசமான சாதியக்கொடுமையையும் அன்பாலும் அறிவாலும் எதிர்த்து நின்றவர் அண்ணல் அம்பேத்கர். இன்றைய போலி தலித் தலைமை பீடங்களைப் போலல்லாமல் பாரத தேசியத்தை அனைத்திற்கும் மேலாக மதித்தவர். சாதி எனும் குறுகிய வட்டத்தில் அவரை அடைத்து அவருக்கு சிறிதும் ஏற்புடையதல்லாத வன்முறையை அவர் பெயராலேயே நடத்தும் அவலத்தை என்னவென்பது?

இன்றைக்கு முத்துராமலிங்க தேவரை குறித்து பேசும் அவரது சாதியினர் என தம்மை கருதிக்கொள்பவர்கள் என்ன செய்கிறார்கள்? ஒரு நடிகருடன் இணையாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்தை போஸ்டரில் போடுகிறார்கள். நேதாஜியை தேசிய நாயகனாகவும் முருகப்பெருமானை தெய்வீக ஊற்றாகவும் கண்ட தமிழகத்தின் வீரத்திருமகன் முத்துராமலிங்க தேவருக்கு இதைவிட கேவலமான அவமானத்தை உருவாக்க முடியாது. அவரை சாதி எனும் குறுகிய வட்டத்தில் அடைத்தது முதல் அவமானம் என்றால் அவரை சாதி எனும் ஒரே அடிப்படையில் நடிகர்களுக்கு இணையாக்கியது அடுத்த அவமானம். ஆனால் அவர் பெயரைச் சொல்லி சாதி மோதல்களில் ஈடுபடுவது அதுவும் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே ஈடுபடுவது என்பது அவரது நினைவுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதி.

ஆரிய படையெடுப்பு/இனவாதம், சமஸ்கிருத வெறுப்பு ஆகியவற்றை எதிர்த்தவர் அண்ணல் அம்பேத்கர். தலித் மக்கள் கட்டாயமாக பாகிஸ்தானில் மதமாற்றம் செய்த போது அவர்களை பாரத இராணுவத்தின் உதவியுடன் மீட்டு அவர்களை தாய்மதம் திருப்பியவர் அவர். இந்த தேசத்தின் தேசியக் கொடியாக காவிக்கொடி அமையவேண்டுமென விருப்பம் தெரிவித்தவர் அண்ணல் அம்பேத்கர். சீனா இந்திய தேசத்தை கபளீகரம் செய்ய முயற்சித்ததை அன்றே எடுத்துக்கூறிய தொலைநோக்கு அறிஞர். பாரதத்தின் அரசியல் நிர்ணய சட்டத்தின் சிற்பி. அவரது பெயரால் அமைந்த சட்டக்கல்லூரியில் அவரது பெயரால் வன்முறை என்பது எவ்வளவு பெரிய அவமானம் அந்த பெருமகனாருக்கு.

வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்ட குற்றவாளிப்பரம்பரை எனும் சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர்கள் அண்ணல் அம்பேத்கரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரும். ஆரிய இன/படையெடுப்புக்கோட்பாட்டை எதிர்த்தவர்கள் இருவரும். பாரத தேசியத்திலும் பாரத தேச ஒருமைப்பாட்டிலும் ஒத்த கருத்துள்ளவர்கள் இருவரும். எனவே இவர்கள் இருவரது பெயர்களும் இணைவது சமுதாயத்தின் ஒட்டுமொத்த நன்மைக்கு தேவையானதாகும். ஆனால் இந்த பெருந்தலைவர்களின் பெயரால் துவேசஷத்தை இளம் நெஞ்சங்களில் விதைத்தக் கொடியவர்கள் யார்? அண்ணல் அம்பேத்கரின் பெயரைச் சொல்லி வன்முறையை தேசப்பிரிவினையை வளர்க்கும் கயவர்கள் யார்? பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரால் மிருகத்தனமான சாதி வெறியை தூண்டி அதில் மனித இரத்தத்தைவிட்டு குளிர்காய நினைப்பவர்கள் யார்? தென்மாவட்டங்களில் சிலை உடைப்பு கலவரங்கள் நடைபெற்ற போது சில ஜிகாதி தேசவிரோத சக்திகள் தலைவர்களின் சிலைகளை உடைத்து சாதிவெறியை தூண்டின என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. தங்களை புரட்சிகர உலகநாயகர்களாக காட்ட நினைக்கும் நடிகர்கள் சாதி அபிமானத்தை வெறியாக மாற்றும் படியாக திரைப்பாடல்களை உலவவிட்டதும் அவையே சாதி மோதல்களாக வெடித்ததும் நினைவுக்கு வருகிறது. சாதி வெறியை தூண்டி அரசியல் நடத்திய மாபாவிகளே இதோ உங்கள் வெறிபிடித்த வெறுப்பு அரசியல் எத்தனை மாணவர்களை சிதைத்துவிட்டது. எத்தனை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பெற்றோர்களது கனவுகளை சிதைத்துவிட்டது.

சாதியத்தில் பிரிந்து வீழ்ந்துவிட்டோ ம். போதும். ஆன்மநேய ஒருமைப்பாடுடைய பாரத தேசியத்தில் இணைந்திடுவோம். வாருங்கள், அண்ணல் அம்பேத்கரும் பசும்பொன் தேவரும் பாரத தாயின் மைந்தர்கள். மீனவப்பெண்ணின் மகன் தந்த வேதத்தை இடையன் அளித்த பகவத் கீதையை புலையனாக வந்த சங்கரனை வணங்கும் இந்த தருமத்தில் சாதியம் அழியட்டும். தருமம் வளரட்டும். ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வு ஓங்கட்டும்.

9 Replies to “அழியட்டும் சாதியம் மலரட்டும் ஆன்மநேயம்”

  1. அரவிந்தன் நீலகண்டனின் இந்த கட்டுரை கல்லூரியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களின் மனசாட்சி. எத்தனை துக்ககரமான விஷயம்?? படிக்க போன இடத்திலேயே கத்தியை தூக்கும் இந்த கலாச்சாரம் எங்கு போய் முடியும்??

    படிக்காத மாணவனால் இந்த சமூகத்திற்கு பாதிப்பொன்றும் இல்லை. ஆனால் ஒழுக்கம் கெட்ட தலைமுறை அந்த நாட்டின் சாபக்கேடு.

    கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரும் சரி, கல்லூரி நிர்வாகமும் சரி ஒழுக்கத்தை முச்தலில் போதிக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் அடையாளம்.

    நல்லதே நடக்கட்டும்.. இனிமேலாவது..

    ஸ்ரீதர்

  2. //…சாதியம் அழியட்டும். தருமம் வளரட்டும். ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வு ஓங்கட்டும்.//

    உங்கள் எண்ணமும் விழைவும் உயர்வே; மறுக்கவில்லை.

    ஆனால் தமிழகத்தில் இன்றுள்ள உண்மையான நிலை உங்கள் விழைவுக்கு எதிராக உள்ளது.

    அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் வாணிகத்தைக் கெடுத்துக்கொள்ள உடன்படுவார்களா?

    சாதியத்தை அழியவிடுவார்களா?

    தருமத்தை வளரவிடுவார்களா?

    ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வை ஓங்கவிடுவார்களா?

    `என்ன இவன், எதிர்மறையாகச் சிந்திக்கின்றானே!’ என்று நீங்கள் எண்ணக்கூடும்.

    உண்மை அவ்வாறுதான் எண்ணத் தூண்டுகிறது. மன்னியுங்கள்.

    – அ.நம்பி
    https://nanavuhal.wordpress.com

  3. இது தேவர்-தலித் பிரச்சினை இல்லை.

    அடித்தவர்கள் கிருத்துவர்கள். தனியாக அவர்களை எதிர்த்து அடிவாங்கியவர் ஒரு வன்னியர். திருவண்ணாமலையை சேர்ந்தவர்.

  4. மிருகஙகள் மனித உருவில் சட்டக்கல்லூரியில். காவல்துறை என்கிற பெயரில் பொம்மைகள்.

  5. மிக அருமையான கட்டுரை.
    இதை எல்லா பெற்றோரும் மடிக்கும் மாணாக்கர்களும் படித்துப் பயனடையவேண்டும்.
    சாதிகள் கூடாது எனக்கூறும் திராவிட கழகங்களும் (எல்லா கழகங்களும் தாசேர்த்து தான் சொல்கிறேன்) இதைக் கூறாவிட்டால் அவர்களை அரசியலில் தக்கவைத்துக்கொள்ள மற்ற எந்த காரணமும் கிடைக்காது. இது இல்லாவிட்டல், அவர்களும் இல்லை. இந்து என்ற எண்ணம் ஓங்கிட எல்லா இந்துக்களும் சேர்ந்து கழகங்களை ஒழித்துவிட்டால் தமிழ்நாடும், பாரத தேசமும் சிறப்பாகிவிடும். ஐயமில்லை.

    மாணவர்கள் அடிபடும்போது அதைக்கண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளை அப்படி இருக்கச்சொன்னது அரசியல்வாதிகள் தானே!!

  6. Tamizharukku thalaikunivu.Sattam paditthu neethi kakka vendiya makkalay saathi peryaril aditthu kondu savatha um vazhvin latchiyam.ethanai kaikatti vaipotthi kavalthurai vedikkai parththu ava(r)latchanam.Ethavathu anniya sakthigal ooduruva parthal appozhuthu veeram katti irundal venbha paadi poomalai sooti iruupean. Vedhanai padacheythathal kanneer sindhukindren.

  7. அருமையான கட்டுரை .சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியின் பாடலைச் சொல்லித் தரும் பள்ளிகளில்தான் சாதிச் சான்றிதழ்கள் கேட்கப்படுகிறது .அடிப்படையில் சாதியக் கட்டமைப்பு தகர்க்கப்படவேண்டிய இடம் பள்ளிக்கூடங்கள்தான்.மாமேதை அண்ணல் அம்பேத்காரின் பெயராலும்,தெய்வீகத்திருமகன் முத்துராமலிங்கத் தேவரின் பெயராலும் நடைபெறும் சாதிய வன்முறைகள் கட்டாயம் கண்டிக்கப்படவேண்டிய செயலாகும்.இந்த சாதிய வன்முறைகளைத் துண்டும் அரசியல் தலைவர்கள் தண்டிக்கப் படவேண்டியவர்கள் .இதை இருதரப்பு மக்களும் உணரவேண்டும். உணர்ந்து செயல்பட்டால் சாதிய மோதல்கள் தவிர்க்கப்பட்டால் அதுவே அண்ணல் அம்பேத்காருக்கும் ,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கும் நாம் செய்யும் கைமாறாகும்.நன்றி.
    அன்புடன்
    ச.ந.இளங்குமரன் . நிறுவுநர் -செயலர்
    வையைத் தமிழ்ச் சங்கம் ,நாகலாபுரம் ,
    தேனி மாவட்டம் .

  8. இது போன்ற எண்ணிறந்த அயோக்கியத்தனங்கள் திமுக ஆட்சியில் நடைபெற்றதால் தான் திமுக கூட்டணி மண்ணை கவ்வியது.

    இந்த தாக்குதல் தொடர்பாக சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தமிழக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது ? பொறுப்புள்ள யாராவது விளக்குவார்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *