யோகம் – ஒரு எளிய அறிமுகம் (பகுதி – 3)

எட்டு அங்கங்களைக் கொண்டு ஆன்ம விடுதலைக்கு வழி செய்யக் கூடிய நான்கு யோக முறைகளைப் (மந்திர யோகம், ஹட யோகம், லய யோகம், ராஜ யோகம்) பற்றி சுருக்கமாக இப்போது பார்ப்போம். முன் பகுதியில் சொன்னது போல், யோகத்தின் குறிக்கோள், ஆன்மா இந்த பிறவி துன்பங்களிலிருந்து விடுபட்டு, தன்னைப் பற்றிய ஞானத்தை அடைந்து ஆனந்த நிலையை அடைதல் ஆகும். இந்த முயற்சி, புலன்களை அடக்குவதில் தொடங்கி, ஞானத்தில் முடிவடைகிறது. யோக சாத்திரத்தில் ஞானத்தை பல விதமாக பிரித்து மிக விரிவாக விளக்கப் பட்டிருக்கிறது.

இனி யோக முறைகளைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம். முதலாவதான மந்திர யோகம் என்பது ஒரு அற்புதமான வழிமுறை. இந்த உலகில் பொருள்கள் எல்லாமே பருவுருவாக ஒவ்வொரு பெயர் கொண்டு இருக்கிறது – அதாவது யோகிகள் மொழியில் நாமமும், ரூபமும் கொண்டு இருக்கின்றன. இவற்றை பார்ப்பதால், பயன்படுத்துவதால் திரும்ப திரும்ப ஓயாமல் எண்ண ஓட்டங்கள் ஏற்படுகின்றன. புதிய யோசனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆக இவற்றை ஒதுக்காமல், தரையில் விழுந்த ஒருவன் அந்த தரையையே ஊனிக்கொண்டு எழுந்திருப்பது போல், மன சலனங்களை ஏற்படுத்தும் இந்த நாமங்களையும், ரூபங்களையுமே பயன்படுத்தி, மந்திர வடிவாக கண்டு வழிபாட்டு யோகத்தில் ஈடுபடுவதே மந்திர யோகமாகும்.

ஒரு தெய்வ மூர்த்தியை பிரதிஷ்டை செய்து, தோத்திரங்கள் சொல்லி, பூஜை ஆராதனைகள் செய்து, அந்த மூர்த்தியின் மீது மேல் நாளடைவில் அன்பை வளர்த்துக் கொண்டு, மனதை அந்த மந்திர தோத்திரங்களில் லயிக்கச் செய்வதே இந்த மந்திர யோகத்தின் வழிமுறை. மற்ற யோக முறைகளைவிட இது கொஞ்சம் இலகுவானது. ஆனால் மந்திர சித்தி (Siddhi) பெற பல வருடங்கள் ஆகும். இந்த யோகத்தில் எளிய யோகாசனங்களுடன், உடலை விட மனதை அதிகம் கரைப்பதே இந்த முறையில் நோக்கமாக இருக்கிறது. அதிலும் இந்த யோகத்தில் ஈடுபடுவது அந்த யோகி மட்டும் அல்ல – அவர் மந்திரம் சொல்லி ஆராதனை செய்யும் அந்த தெய்வமும் அவருக்கு உதவுகிறது. ஒரு பாதி யோகியின் முயற்சி என்றால், வெளிப்புறத்தில் இயற்கையிலிருந்து உபாசனையால் எழுப்பப் பட்ட தெய்வ சக்தியும் உதவுகிறது. இவ்வாறு மந்திரங்களை விடாமல் ஜபம் செய்து, தியானித்து வரும் யோகி தெய்வ அருளால் சமாதி நிலை அடைகிறார்.

அடுத்த ஹட யோகம் என்பது உடலை கொண்டு விதவிதமான வகையில் யோகப் பயிற்சிகள் செய்வதில் தொடங்குகிறது. இதில்தான் குண்டலினி என்கிற அபூர்வ சக்தியை மனித உடலில் எழுப்புவது பெரும் முயற்சியாக மேற்கொள்ளப் படுகிறது. குண்டலினி என்னும் சக்தி சிறு பாம்பு வடிவில் முதுகுத்தண்டின் முடிவில் உறங்குகிறது. இந்த சக்தியை உறக்கத்தில் இருந்து எழுப்புவதற்கு யோகிகள் பல்வேறு ஹட யோக ஆசன முறைகளை உபயோகப்படுத்துவர். ஹட யோகத்தின் மற்றொரு கருத்து, இந்த மனித உடல் ஆன்மாவின் சூக்கும சரீரத்திலிருந்தே உருவாகிறது. தூலமான இந்த உடலில் நிகழும் மாற்றங்கள் சூக்கும உடலையும் பாதிக்கும். அதனால் வெவ்வேறு ஆசன முறைகளால் உடலில் இயங்கும் வாயுக்களையும், நாடிகளையும் கட்டுப் படுத்தி, குண்டலினி சக்தியை எழுப்பலாம். அதன் மூலம் ஆன்மா விடுதலை அடையலாம் என்பதாகும். ஹட யோகத்திற்கு ஆரோக்கியமான உடலே அடிப்படை தகுதி. அதற்காக முதலில் உடலில் இயங்கும் வாயுக்கள், சுவாசம், நாடித்துடிப்புகள் ஆகியவற்றை சீர் படுத்த பயிற்சி மேற்கொள்ளுவர். அடிப்படையில் ஹ என்றால் சூரியனையும், ட என்பது சந்திரனையும் குறிப்பதாக பொருள். அதாவது ஒன்று வெப்பத்தையும் இன்னொன்று குளிர்ச்சியையும், இரு எதிர் நிலைகளை குறிக்கிறது. இவற்றை ஒன்றுடன் ஒன்றை இணைத்து சமனப் படுத்தி விடுவது ஹட யோகம்.

ஹட யோகத்தின் அடுத்த நிலையே லய யோகம் ஆகும். லய யோகத்தில் உடலில் பல்வேறு உருவகங்கங்கள் எழுப்பப் படுகின்றன. அதாவது, முதல் உருவகம் உடலில் ஏழு சக்கரங்கள் இருக்கின்றன – அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபுரம், அநாஹதம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் சகஸ்ராரம் ஆகும். இதில் மூலாதாரம் என்கிற சக்கரம் முதுகுத்தண்டின் முடிவிலும், சகஸ்ராரம் என்னும் சக்கரம் உச்சந்தலையிலும் இருக்கிறது. குண்டலினியை சக்தியாக உருவகித்து அவள் மூலாதாரத்தில் உறங்குவதாக பாவனை செய்யப் படுகிறது. சகஸ்ராரத்தில் சிவ பெருமான் வீற்றிருப்பதாக பாவனை செய்யப் படுகிறது. குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து எழுப்பி ஆறு சக்கரங்களை துளைத்து மேலெழுப்பி சிவத்துடன் இணைப்பதே லயயோகமாக விளங்குகிறது. இதற்கு மந்திர யோகத்தின் சில பகுதிகளும், ஹட யோக ஆசனங்களும் உபயோகப் படுத்தப் படுகின்றன. ஆனால் மந்திர யோகத்திலோ, ஹட யோகத்திலோ இருப்பது போல், உடலை முக்கியமாக கொள்ளுவதோடு அல்லாமல் மனதாலும் லய யோகத்தில் பயிற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. லய யோகத்தில் யோகிகள் ஆக்ஞா சக்கரத்தில் குண்டலினியை ஒளி வடிவமாக தரிசிப்பர். ஒளியை பிந்து என்று குறிப்பிடுவார்கள். அதே நேரத்தில் ஓங்காரமாக நாத வடிவிலும் குண்டலினி தேவியை தரிசிக்க கூடும்.

மந்திர யோகத்தில் முக்கிய பாகம் மந்திரங்களை உச்சரித்தல் – ஜபம் செய்தல் ஆகும். ஹட யோகத்தில் ப்ராணாயாமமே முக்கிய பாகமாக இருக்கிறது. லய யோகத்தில் தாரணை – புலன்களை உள்ளிழுத்து மனதை ஒருநிலைப் படுத்தலே முக்கியப் பாகமாக இருக்கிறது.

அடுத்த யோக முறை ராஜ யோகம். இந்த யோக முறையில் உடலை விட மனதிற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப் படுகிறது. துறவும், ஆசை, காமம், போன்றவற்றிலிருந்து விலகிய வைராக்கியமும் ராஜ யோகிக்கு அவசியம். ராஜ யோகி, உடலை விட, புத்தியால் மனதை அடக்க முயற்சிக்கிறார். தர்க்க வாதங்களை நிகழ்த்தி மனதை ஒரு நிலைப்படுத்துகிறார். உபநிடதங்கள் போன்றவற்றை கற்று, தெளிந்து, ஞானத்தை அடைகிறார். ராஜ யோகத்திலும் மற்ற எட்டு அங்கங்கள் உண்டு. ஆன்மாவை பற்றி நிகழ்த்தும் ஆராய்ச்சிக்கு விசாரம் என்று பெயர். ராஜ யோகி இந்த விசாரத்திலிருந்து, நிர்விசார – கேள்விகள் இல்லாத நிலைக்கு, அமைதியான சமாதி நிலையை அடையும் போது, அவரது ஆன்மா பேரின்ப விடுதலை அடைந்து விடுகிறது. ராஜ யோகத்திற்கு மற்ற யோகப் பயிற்சிகளும் அவசியம்.

யோகம் என்பது ஏதோ மூச்சு பயிற்சியோ, அல்லது உடற்பயிற்சியோ மட்டும் அல்ல. அது ஒரு ஆன்மீகத் தேடலுக்கான சிறந்த வழிமுறை. யோகம் சனாதன தருமத்தின் ஆணிவேர். இந்த கட்டுரை யோகத்தின் வெவ்வேறு பெயர்களை சொல்லி அவற்றை சுருக்கமாக விளக்க மேற்கொள்ளப்பட முயற்சி மட்டுமே. யோக சாத்திரத்தின் ஒவ்வொரு யோக முறையும் கடலளவு பெரியது. சனாதன தருமத்தில் பங்கு வகிக்கும் எந்த மார்க்கத்திலும், அது முருக வழிபாடாகட்டும், அனுமனின் வழிபாடாகட்டும், சக்தி வழிபாடாகட்டும், வைணவ வழிபாடாகட்டும், எந்த வழிபாட்டிற்கும் அடிப்படையானது யோகம். இதுவே அந்தந்த இஷ்ட தெய்வங்களின் அருளை பெற்றுத்தந்து முக்தி அடைய உதவக் கூடியது. இந்த கட்டுரையை படிப்பவர்கள் மேற்கொண்டு யோகத்தில் ஆர்வம் பெற்று யோக சாதனைகள் செய்ய எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்கட்டும்.

3 Replies to “யோகம் – ஒரு எளிய அறிமுகம் (பகுதி – 3)”

  1. Good artilce on Yoga.

    Nowadays this kind of alternative therapies have caught on the fancy of people. There are so many self-styled yoga teachers marketing yoga with atchy names.

    I heard that even a Muslim lady is conducting yoga sessions in a club.

    May be it is good for the society.

    Thanks

    Avinash

  2. ஸ்ரீகாந்த்

    மிக எளிமையாக விளக்குகிறீர்கள். நிறைய விஷயங்கள். நல்ல தொடர் தொடருங்கள்

    அன்புடன்
    விஸ்வா

  3. vivekanadharin rajayogam puthagam tamil il kidaikuma, appadi irunthal theriyapaduthavum.
    nandri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *