‘பாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா?‘ ஒரு அலசல்

bharathiarபாரதியாருக்கு உயிர் தமிழா, ஆரியமா? என்ற கட்டுரை இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்தபோது திகைப்பு ஏற்பட்டது. அந்தக் கட்டுரையைப் பற்றிய என் எண்ணங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். திராவிடக் கழகத்துக்காரர்களுக்கு பாரதியார் தமிழை வெறுத்தார் என்று சொல்ல அருகதை இல்லை. ஏன் இல்லை என்பதை இக்கட்டுரையில் ஆங்காங்கே சொல்கிறேன்.

மேலே சொல்லப்பட்ட கட்டுரையில் பின்வருமாறு காணப்படுகிறது:

1915இல் சுதேசமித்திரனில் ‘தமிழ், தமிழ்நாடு’ முதலியவற்றின் சிறப்பைக் குறித்து, எழுதும் சிறந்த கவிதைக்கு மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் பரிசளிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதைப் பாரதியார் பார்த்தும் பார்க்காததுபோல் விட்டுவிட்டார்.

ஆனால் இதைப் பார்த்த பாரதியின் புதுவை நண்பரான வாத்தியார் சுப்பிரமணி அய்யரும் மற்றும் சில நண்பர்களும் விளம்பரத்தைக் கூறி, கவிதை எழுதும்படி வேண்டினர். அவர்களின் கட்டாயத்தின் பேரிலேயே இப்பாடல்களைப் பாரதியார் எழுதியதாக பாரதியின் நண்பர் எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு கூறியுள்ளார். இதே கருத்தைப் பாரதிதாசன் அவர்களும் கூறியுள்ளார். பாரதி நண்பர்களுடைய வேண்டுதலாலும், கட்டாயத்தாலும் தான், “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலையும், “யாமறிந்த மொழிகளிலே” என்ற பாடலையும் எழுதினார்.

இதில் ஒரு முக்கியமான அம்சம் மறைக்கப்பட்டிருக்கிறது. இப்படி பாரதியார் மறுத்ததற்கு ஒரு காரணம் உண்டு என்பதையும் ‘பாரதியார் சொல்வதுபோல்’ பாரதிதாசனே கூறுகிறார்:

‘நாமெல்லாம் வெள்ளைக்காரருக்கு எதிர்ப்பானவர்கள். பாண்டித்துரைத் தேவர் போன்றோருக்கு இது போன்ற செய்திகள் பிடிக்காது. இந்நிலையில் நம்முடைய பாடலை அவர் ஏற்பது என்பது ஐயம். நாம் வறிதே எழுதி அவர்களுடைய அவமதிப்பைப் பெறுவதில் என்ன பயன்?’

(நூல்: பாரதியாரோடு பத்தாண்டுகள்)

இதுதான் பாரதியின் எண்ணமாக இருந்தது. இந்தக் காரணத்தை மறைத்துவிட்டு ‘பாரதி வேண்டுமென்றே எழுதவில்லை’ என்று கூறுவது அவரை முழுமையாகப் படித்தறியாமல் எழுதுவதாகும்.

ஆங்கிலக் கல்லூரிக்கு பணம் தந்து உதவிய பெரியார் தமிழ்மொழியை வளர்க்க ஒரு கல்லூரி நிறுவுமாறு பாவணர் கடிதம் எழுதி நேரிடையாக கொடுத்து கேட்டும் பெரியார் செய்யவில்லை. அக்கடிததத்திற்கு பதில் கூட தரவில்லை. (நூல்: பாவணர் வரலாறு)

ஆனால் பாரதி கூறுகிறார்: தமிழா, பயப்படாதே! ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்.(பாரதியார் கட்டுரைகள், வர்த்தமானன் பதிப்பகம், ப. 200)

பாரதியைப் பற்றி வெறுப்பை உமிழும் இந்தக் கட்டுரையாளர் பின்வருவதையும் சொல்கிறார்:

இந்தியாவிலுள்ள மொழிகள் யாவும் சமசுகிருத மொழியோடு கலந்த பிறகே மேன்மை பெற்றதாகப் பாரதி கருதுகிறார். தமிழுக்கு முறையான இலக்கணம் இல்லாதிருந்ததாகவும், ஆரியர்கள் இலக்கணம் வகுத்ததாகவும் பாரதி கூறுவதாவது:

“தமிழ் பாஷைக்கோ, இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமேசமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே” என்கிறார் பாரதியார்.

பதில்: தமிழுக்கு முறையான இலக்கணம் இல்லாதிருந்ததாக கூறி பாரதி எழுதிய கட்டுரையில் இருந்து எடுத்துக்காட்டப்பட்ட வரிகள் உண்மைதான். ஆனால் இந்த வரிகளைக் குறிப்பிட்டவர் அடுத்த வரிகளையும் வேண்டுமென்றே விட்டுவிட்டார். இதோ பாரதி எழுதிய மற்ற வரிகள்:

சமைக்கப்பட்டிருக்கின்றதென்பதும் மெய்யே. எனினும் வடமொழிக் கலப்புக்கு முந்தித் தமிழுக்கு வேறு வகையான இலக்கணமிருந்து ஒருவேளை பின்னிட்டு மறைந்திருக்கக் கூடுமென்று நினைப்பதற்குப் பல ஹேதுக்களிருக்கின்றன. இஃது எவ்வாறாயினும் ஸம்ஸ்கிருத பாஷையின் கலப்புக்கு முன்னதாகவே, தமிழ்நாட்டில் மிகவும் உயர்ந்த நாகரிகமொன்று நின்று நிலவி வந்த்தென்பதற்கு அடையளமாக தமிழில் மிக உயர்ந்த தரமுடைய பல பழைய இலக்கிய நூல்கள் காணப்படுகின்றன.

ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், பல இடங்களிலும் காணப்படும் நாகரிகங்களுக்கெல்லாம் முந்தியதும் பெரும்பான்மையான மூலாதாரமுமாக நிற்பது ஆர்ய நாகரிகம். அதாவது, பழைய ஸம்ஸ்கிருத நூல்களிலே சித்தரிக்கப்பட்டு விளங்குவது. இந்த ஆர்ய நாகரிகத்துக்கு ஸமமான பழமை கொண்டது தமிழருடைய நாகரிகம் என்று கருதுவதற்குப் பலவிதமான ஸாக்ஷ்யங்க ளிருக்கின்றன. ‘ஆதியில் பரம சிவனால் படைப்புற்ற மூலபாஷைகள் வடமொழியென்று சொல்லப்படும் ஸம்ஸ்கிருதமும் தமிழுமேயாம்’ என்று பண்டைத் தமிழர் சொல்லியிருக்கும் வார்த்தை வெறுமே புராணக் கற்பனை அன்று. (பாரதியார் கட்டுரைகள், வர்த்தமானன் பதிப்பகம், ப.146)

இப்படி பாரதி தமிழையும் வடமொழியையும் ஒன்றாகவே பார்த்தார். அவர் தமிழை எந்த இடத்திலும்–பெரியாரைப் போல–சிறுமைப்படுத்தியதே இல்லை.

பாரதி கூறுகிறார்: நமது தற்கால வசன நடையில் சரியான ஓட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாக்காணப்படுகிறது. உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக் கொண்டால், கை நேரான தமிழ் நடை எழுதும். (பாரதியார் கட்டுரைகள், வர்த்தமானன் பதிப்பகம், ப.256)

பாரதிகூறுகிறார்: கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மகாகவிகளுக்கு ஞாபகச் சிலைகளும் வருஷோத்ஸவங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும்…. மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலைச் செம்மையாகக் கட்ட வேண்டும். இப்பொது மிகவும் ஏழை நிலைமையில் இருக்கிறது. திருவெழுந்தூரிலும் கரூரிலும் ஞாபகச் சின்னங்கள் ஏற்படுத்த வேண்டும். (பாரதியார் கட்டுரைகள், வர்த்தமானன் பதிப்பகம், ப.263)

பெரியார் கூறுகிறார் : திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக்கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றார். கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். (நூல்: தமிழும் தமிழரும்)

கட்டுரையாளர் மேலும் சொல்கிறார்:

இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் வரவேண்டும் என்று முதன்முதலில் சொன்னவர் பாரதியே! 1906லேயே இக்கருத்தை இவர் வலியுறுத்தியுள்ளார்.

பதில்: பாரதியாவது வெறும் ஏட்டளவிலே சொன்னார். ஆனால் பெரியார் என்ன செய்தார் தெரியுமா? 1922ல் ஈரோட்டில் ஹிந்திப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார். திரு வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் ‘ நூலில் திருவிக எழுதுவதாவது ‘ராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே’ என்று எழுதியிருக்கிறார்.

பாவணர் கூறுகிறார்: பெரியார் இந்தியையும் தமிழ்ப்பற்றால் எதிர்க்கவில்லை. பேராயத்தைத் தாக்க இந்தியெதிர்ப்பு ஒரு நல்ல கருவியாய்க் கிடைத்ததென்றே வெளிப்படையாகச் சொன்னார். (பாவணர் வரலாறு)

மேற்படிக் கட்டுரையாளர் மேலும் சொல்வது:

பாரதியார் சமசுகிருதத்தின் மீது கொண்ட வெறியினால் சப்பானில் சமசுகிருதம் எப்பொழுது எவ்வாறெல்லாம் பரவியது என்பதைத் தன்னுடைய ‘பருந்துப் பார்வை’ என்னும் கட்டுரையில் ஆய்வு செய்து எழுதியுள்ளார். உலகில் சுமேரியா, சப்பான், கொரியா, அங்கேரி, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளின் மொழிகளில் தமிழ்மொழிக் கூறுகள் ஏராளமாகக் கலந்துள்ளன.

எங்கெல்லாம் தமிழ் பரவியிருக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், சமசுகிருதம் எங்கெல்லாம் பரவியுள்ளது என்பதை ஆய்வு செய்கிறார்.

பதில்: பாரதியாரின் பருந்துப்பார்வை கட்டுரையில் 5 தகவல்களை தருகின்றார். அதில் 5வது தகவல்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பாரதி 3வது தகவலில் ஒரு செய்தியைக் கூறியிருக்கிறார். அதைக் கட்டுரையாளர் விட்டுவிட்டார். இதோ அந்த 3வது தகவல்:
தக்ஷிணத்துப் பாஷைகளிலே – அதாவது தமிழிலும் தெலுங்கிலும், கன்னடத்திலும் மலையாளத்திலும் சாஸ்திர (சயின்ஸ்) பாடம் கற்றுக் கொடுப்பதற்கு மேற்படி பாஷைகள் தகுதியில்லை என்று பச்சையப்பன் காலேஜ் தலைமை வாத்தியார் மிஸ்டர் ரோலோ என்பவர் சொல்லுகிறார். அவருக்கு இவ்விடத்துப் பாஷைகள் தெரியாது. ஸங்கதி தெரியாமல் விரிக்கிறார். சாஸ்திர பாஷை நமது பாஷைகளில் மிகவும் எளிதாகச் சேர்த்துவிடலாம். மேலும் இயற்கை நடையிலே இங்கிலீஷைக் காட்டிலும் தமிழ் அதிக நேர்மையுடையது. ஆதலால் சாஸ்திரப் பரவசனத்துக்கு மிகுந்த சீருடையது. இந்த ஸங்கதி நம்மவர்களிலே கூடச் சில இங்கிலீஷ் பண்டிதருக்குத் தெரியாது… என்று சொல்கிறார் பாரதி.

இதையெல்லாம் மறைத்துவிட்டு எழுதுவது நேர்மையான எழுத்து இல்லை. பாரதி எந்த அளவுக்கு தமிழை நேசித்தார் என்பதை என் அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன். பாரதியின் உயிர் மூச்சே தமிழ்தான். இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

பெரியாரின் தமிழ்ப்பற்றை கேள்விக்குரியதாக்கியதால்தான் இன்று பாரதியாரின் தமிழ்ப்பற்றை கேள்விக்குரியாக்குகிறார்கள் திகவினர். அதனால் பெரியாரும் பாரதியாரும் தமிழைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்பதையும் நாம் அலச வேண்டியிருக்கிறது. அதையும் அடுத்து பார்ப்போம்.

7 Replies to “‘பாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா?‘ ஒரு அலசல்”

  1. திரு வெங்கடேசன், மிக அருமையாக வாதங்களை வைத்துள்ளீர்கள்.இணையத்தில் நீங்கள் குறிப்பிட்ட கட்டுரை போன்று வேண்டுமென்றே திரித்து எழுதப்பட்ட கட்டுரைகளை இப்படித்தான் சாட வேண்டும்.
    இவர்கள் எழுத்தைப் படிக்கும் எவரும் வேறெதையும் படிக்காதவர்கள் என்ற நம்பிக்கையில் இப்படிப்பட்ட பொய்களையும் , வெறுப்பை வளர்க்கவென்றே கட்டுக் கதைகளையும் எழுகிறார்கள். எப்படியாவது மீண்டும் இந்த [இல்லாத] ஆரிய – திராவிடப் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியே இப்படிப்பட்ட கட்டுரைகளின் பின்னணியில்… தமிழ் மக்கள் உணர வேண்டும். வரிக்கு வரி சரியான ஆதாரங்களுடன் இவர்கள் ஆடும் நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளீர்கள். கட்டுரைக்கு மிக நன்றி!

  2. எந்தவொரு விஷயத்தையும் சரியாக படிப்பதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு “பகுத்தறிவு” சேர்ந்திசையில் ஈடுபடும் வழக்கம் ராமசாமி நாயக்கரால் பிழைப்புக்காக ஆரம்பிக்கப்பட்டது. பாரதியார் “பார்ப்பனர்” ஆகையால் கழகக் கண்மணிகள் அவரைத் தமிழராக ஏற்றுகொள்ளவில்லை. பாரதியின் நூற்றாண்டு விழா கூட மலையாளி எம்ஜியார் ஆட்சியில்தான் கொண்டாடப்பட்டது. புறம் பேசித்திரிவதும் நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பதும் “ நாயக்கரின்” மாணாக்கர்களின் வழக்கம். நெஞ்சில் உரமின்றி நேர்மைத் திறமின்றி திரியும் இவர்களின் புன்செயலால் பாரதிக்கு ஒரு இழிவுமில்லை. ஆதாரங்களுடன் உரைத்த திரு வெங்கடேசனுக்கு நன்றி.

  3. பொய்மை இருள் பரவும்போது உண்மை எனும் விளக்கேற்றுபவர்கள் வணங்கத்தக்கவராகிறார்.

    வணங்குகிறேன் ம. வெங்கடேசன் ஐயா.

  4. ரொம்ப அருமையாகவும், ஆய்வு செய்தும் உண்மையான கருத்துக்களை இவண் எடுத்துச் சொல்லியிருக்கிறார் வேங்கடேசன்.
    வாழ்க அவரது நுண்மாண் நுழைபுலம்,
    யோகியார்

  5. திரு ம. வெங்கடேசன்,

    நீங்கள் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் உங்கள் எதிர்க்கருத்துகளை சான்றுகோள்களுடன் ஏறத்தாழ அவர்களுடைய எழுத்திலேயே சுட்டிக்காட்டி எழுதியது சிறப்பாக உள்ளது. என் பாராட்டுகள்.

    ஆனால் உண்மைகள் என்று நீங்களும், நீங்கள் எதிர்க்கும் மூல கட்டுரையாளரும் (யார் எங்கே கூறினார்கள் என்று நீங்கள் கூறாதது குறை) கூறும் பாரதியின் கருத்துகள்:

    1) “தமிழ் பாஷைக்கோ, இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமேசமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே” என்கிறார் பாரதியார்.”

    2)கட்டுரையாளர் மேலும் சொல்கிறார்:

    இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் வரவேண்டும் என்று முதன்முதலில் சொன்னவர் பாரதியே! 1906லேயே இக்கருத்தை இவர் வலியுறுத்தியுள்ளார்.

    பதில்: பாரதியாவது வெறும் ஏட்டளவிலே சொன்னார்.

    இக்கருத்துகள் பாரதியின் ஆரியச்சார்பை பறைசாற்றுவனதானே?

    பாரதி ஓர் ஒப்பரிய புரட்சிப் பாவலன், தமிழ்ப்பாவலன். இந்தியத் திருநாட்டின் மீதும் அதன் மக்கள் மீதும் அருங்காதல் கொண்ட நாட்டுப் பற்றாளன். அரிசெயல் ஆற்றல் வீரன். என்னைப் போல பலர் உள்ளத்தைக் கவர்ந்த மாபெரும் கவிஞன். ஆனாலும், அவர்பால், அவர் கருத்துகள் பால் உள்ள குற்றங்குறைகளை, ஒருபாற்கோடல் சாய்வுகளை நேர்மையுடனும், மதிப்புக் குறையாமலும் இட்டுக் கருத்துத்தேர்தல் தவறல்ல. இன்னும் இத்தகைய எழுத்துப்பண்பாடு – அதாவது நேர்மையாக சாதி, சமய, இன, மொழி சாய்வில்லாமல் காணும் பக்குவம் நம்மிடையே வளரவில்லை என்றே நினைக்கத்தோன்றுகின்றது. திரு வெங்கடேசனின் இச்சிறு மறுப்புரை ஒரு நல்ல முன்காட்டு. மகாகவி பாரதியைப் பற்றிக் கூற ஓர் அருகதை வேண்டும், தகுமொழி வேண்டும். இதனால் அவரைக் குறை கூறலாகாது என்பதல்ல, என் கருத்தோ நோக்கமோ. எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் பக்குவம் வேண்டும்.

    செல்வா,
    வாட்டர்லூ, கனடா

  6. பாரதியாரை தமிழ்விரோதி என்று சித்தரிக்க இம்மாதிரி திரிப்பு கட்டுரைகள் போடுபவது ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும்? பகுத்தறிவுப் பகல்வேடம் போட்டு காசு பார்ப்பவர்களின் சந்தோஷத்துக்காக ஆடும் கழைக்கூத்தாடிகள் இவர்கள். சாதி வெறி பிடித்துவிட்டதால் இம்மாதிரி இழிசெயல்கள் செய்து தமிழ்வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். முண்டாசுக்கவிஞனுக்கு இவர்கள் கரிபூசப் பார்த்து இப்போது முகம் மட்டுமல்ல முமுதுமாய் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள். தேவசகாயம் என்ற போலியின் கிருத்துவப் புரட்டு வரலாற்றைத் தோலுரித்த தமிழ்இந்து இப்போது ஐயன் வெங்கடேசன் மூலமாய் இம்மாதிரி காசுக்குப் பொய் பேசும் தமிழ்விரோதிகளையும் தோலுரிக்கக் கிளம்பியது குறித்து மிக்க மகிழ்ச்சி.

    இணையத்தில் களையெடுக்கப் புறப்பட்ட வெங்கடேசன் ஐயாவுக்கு என் வணக்கம்.

    ஜயராமன்

  7. திரு வெங்கடேசன் அவரகளுக்கு நன்றி!
    “20 வருஷம் தீவிரமா ப்ரசாரம் பண்ணினா கழுதையைகூட சாமியக்கிபுடலாம்” நு சொன்ன பெரியார் அடிப்பொடிகள்தானே?
    (கணையாழி பேட்டியில்)
    அவர்களுக்கு ப்ரசாரத்தின் பலம் தெரியும்!

    சத்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *