அழகியல் அரசியல்

ரோஹிந்தன் மிஸ்த்ரி என்ற இந்திய ஆங்கில எழுத்தாளரின் “Family Matters” என்ற நாவல் தீவிர இலக்கிய வாசகர்களிடையே பரவலான கவனிப்பைப் பெற்ற ஒன்று. சுவையாக எழுதப்பட்ட இந்த நாவலில் மும்பையில் வசிக்கும் ஒரு பார்ஸி குடும்பத்தின் வாழ்க்கை முறை மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும். இக்கதையின் நாயகன் நாத்திகனாக இருக்கும்போது மிக நல்லவனாகவும், வாழ்க்கை மேல் காதல் கொண்டவனாகவும், கலகலப்பான ஆசாமியாகவும் சித்தரிக்கப்பட்டு, கதையின் இறுதிக்கட்டங்களில் பார்ஸி வாழ்க்கை, மதக்கோட்பாடுகள் மேல் நம்பிக்கை வரும்போது மிகவும் கோபக்காரனாகவும், வாழ்வின் சிறு சிறு சந்தோஷங்களைக் கூட அனுபவிக்க விரும்பாதவனாகவும் காட்டப்பட்டிருக்கும்.

மிகவும் நுணுக்கமாக, ஒரு மனிதனின் இறை நம்பிக்கை, அவன் தன்னியல்பை இழக்கச்செய்வது போல் இந்த நாவலில் ரோஹிந்தன் மிஸ்த்ரி காட்டியிருப்பார். இது பெரும்பாலான நவீன இந்திய-ஆங்கில எழுத்தாளர்களிடம் காணக்கிடைக்கும் ஒன்று. இந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் சிறு சிறு விவரங்களினால் ஒரு நம்பகத்தன்மை எழுப்பப்பட்டு யதார்த்த வாழ்வைப் பிரதிபலிப்பது போலக் காட்டப்படுகிறது. ஆனால் அவற்றினூடே ஓடும் ஒரு கருத்துச் சார்பு நமக்கு உடனே புலப்பட்டு விடுவதில்லை. எழுத்தாளரின் மனச் சாய்வு, அல்லது முன் தீர்மானப் பார்வை ஆகியன நாவலின் கதைப் போக்கைத் தீர்மானிக்கின்றன என்பது விவரப் பெருக்காலும், சொல்லழகினாலும், வார்த்தைகளின் கச்சித நளினத்தாலும் திறம்பட மறைக்கப்பட்டிருக்கும்.

ஒரு தனிமனிதனின் பிரச்சினை சமூகப் பின்னணியில் கேள்விகளை எழுப்பாத விதமாகப் பொருத்தப்பட்டு, மிக லாகவமாக சமூகமும், கலாச்சாரமும், இறை நம்பிக்கைகளுமே, அவன் தோல்விக்குக் காரணங்களாக அடுக்கப்பட்டுவிடுகின்றன.தனிமனிதரின் அத்தனை குணாதிசயங்களும், குற்றம் குறைகளும் சமூகக் காரணிகளால்தான் தோற்றுவிக்கப்படுகின்றன என்று நம்மை நம்ப வைக்க முயலும் ஒரு எழுத்து இது. இந்த வகை விரிந்த விவரணைகளைப் படித்து இலக்கியத்தை அணுகும் வாசகருக்கு யதார்த்த உலகைத் தாம் புரிந்து கொண்டு விட்டதான பிரமை கூட இந்தப் புத்தகங்களில் இருந்து கிட்டும். உலகத்தை விளக்க வந்த புத்தகம், உலகத்தைப் பற்றிய புனைவே உலகம் என்று வாசகரை நம்ப வைத்துவிடும். மிஸ்திரியின் இந்த எழுத்து மோசம் என்று சொல்ல நான் முயலவில்லை. ஆனால் இவருடைய எழுத்துக் கலை யதார்த்தத்தின் திறப்பு அல்ல, யதார்த்தத்தின் மீது செய்யப்படும் மறுகாலனியப் பூச்சு வேலை. இந்த வருடம் புக்கர் பரிசு பெற்ற அரவிந்த் அடிகாவின் White Tiger புத்தகமும் இப்படிப்பட்ட ஒரு புத்தகமே.

அழிப்பைக் கொண்டாடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் எந்த சமூகத்தை அழிக்க வேண்டும் என்று கருதுகிறார்களோ அதே சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவர்களாகவும், புகழ் அடைந்தவர்களாகவும் இருக்க முயல்வது ஒரு வரலாற்று வக்கிரம். ஆனால் இந்த வகை கருத்தாளர்கள் நிரம்பி வழியும் கருத்துலகு இந்தியக் கருத்துலகு. இவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரியத்தையும், மரபு சமுதாயத்தையும் எந்தப் புத்தகம் இருளாகக் காட்டுகிறதோ அது முற்போக்கான, உற்சாகமளிக்கக் கூடிய பொக்கிஷம்.

இது ஒருபுறமிருக்க, இன்னொருபக்கம், சமூகத்தின் எந்த ஒரு பிரச்சனையையும் உளவியல் ரீதியாக அணுகி, சமூக அமைப்பின் மீது பழியைப் போடும் கூத்தும் நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடந்த மோதல் பொதுமக்களால் கண்டிக்கப்பட்டபோது, தொலைக்காட்சித் துண்டுப்படத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தலித் மாணவர்கள் என்பதால், வன்முறையைக் கண்டித்த புத்தி பிராமணீயக் கட்டமைப்பின் உருவாக்கம் என உளவியல் ரீதியாக நிறுவினார் ஒரு பிரபல மனநல மருத்துவர்.

இதில் ஆச்சரியப்படுத்தும் விஷயம் இப்படி உளவியல் ரீதியாகப் பிரச்சனையை அணுகுபவர்கள் பெரும்பாலும் இடதுசாரிகள் என்றாலும், எல்லாவற்றையும் உளவியல் ரீதியாக அணுகுதல் மார்க்சியத்திலேயே கூட இல்லை. உளவியல் என்பதே மார்க்சியப் பார்வையில் சந்தேகத்துக்கு உரியது. உளவியல் வல்லுநர் ஃப்ராய்டைக் கூட மார்க்சியம் வெகு காலம் தீண்டத்தகாத ஒரு சிந்தனையாளராகவே கருதியது. உளவியல் பார்வையால் உலகை அணுகிய காஃப்காவைக் கூட இடதுசாரி அறிவுஜீவுகள் வெகு காலம் ஒரு இழிவான சிந்தனையாளர் என்று கருதி அப்படியே அவர் குறித்துப் பிரசாரமும் செய்தனர்.

எல்லாத் தனிமனிதக் குறைகளுக்கும் ஒரு சமூக அமைப்பில் விடை தேடுவது ஒருவித தப்பித்தல் மனப்பான்மைதான். தம் குறைகளுக்குப் பொதுச் சமூகத்தையோ, அண்டை வீட்டாரையோ, இஸ்லாமியத் தீவிரவாதிகளையோ, பார்ப்பன சமூகத்தையோ காரணமாகக் காட்டி அவர்கள் அனைவரையும் அழித்து ஒரு புது சமுதாயத்தைப் நிர்மானம் செய்வோம் வாருங்கள் என்று அறைகூவி, அதற்குப் பல ஆயிரம் இளைஞர்கள் பலியாவதைப் போல அபத்தம் வேறெதுவுமில்லை.

பெரும்பாலான பொதுமனிதர்களுக்கு மக்களின் துயரங்களையும், ஏழ்மை, நோய், மற்றும் சமுதாய அடுக்குகளால் நேரும் துன்பங்களையும் கண்டு நெக்குருகிப் போகும் இயல்பு உண்டு. எந்தக் கட்சியையோ, கொள்கையையோ சார்ந்திராத இதுபோன்ற மக்கள்தான் எந்த ஒரு சமூகத்திலும் பெரும்பான்மையானவர்கள். இந்தப் பொதுமனிதர்களின் அடிப்படைக் கருணை உணர்வை வெகு சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் பல தேர்ந்த உள்நோக்கங்கள் கொண்ட எழுத்தாளர்களும், அறிவியல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ பேசும் அறிவுஜீவிகளும்.

எந்தவிதப் பிரச்சாரநெடியும் அடிக்காமல், மிக நுட்பமாகவும், அழகியலோடு கூடியும், பொது மனிதத் துன்பங்கள் மேல் மிகுந்த கரிசனம் கொண்டவர்கள் போல் காட்டி, வெகு நுணுக்கமாக இந்திய தேசியத்தையோ, இறை நம்பிக்கையையோ, பொத்தாம் பொதுவாக பிராமணீயத்தையோ துன்பங்களுக்கான காரணங்களாக நிறுவிவிடுகிறார்கள். ஏழை, எளிய மக்கள் மேலும், துன்பப்படுபவர்கள் மேலும் அன்பும், கரிசனமும் இருப்பதாகக் காட்டிக்கொள்தல்; அவர்கள் துன்பங்களுக்கான காரணங்களை அறிவியல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ, சமூகவியல் ரீதியாகவோ நிறுவுதல். வேறென்ன வேண்டும் மக்களைத் தம் பக்கம் கவரவும், தம்மைப் புரட்சியாளராகவும், அறிவுஜீவியாகவும் காட்டிக்கொள்ள?

நான்கு வருடங்களுக்கு முன்னால் ‘அன்பே சிவம்’ என்றொரு திரைப்படம் வெளிவந்தது. அதில் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டவர் ஒரு சிவபக்தர். எந்நேரமும் ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்று சொல்பவர். திருடனாக வந்து எல்லோருடைய பெட்டி படுக்கைகளும் சுருட்டிக் கொண்டு ஓடுபவர் சமஸ்கிருதம் தெரிந்தவர்; உபநிஷத்துகளைச் சரளமாகச் சொல்பவர். அவர் திருடி வைத்திருக்கும் பொருட்களுக்குக் காவலிருப்பவர் ஒரு இந்து சாமியார்.

அதே சமயம் ஏழைகளுக்காக இறுதிவரை பாடுபடுவர் கடவுள் நம்பிக்கையில்லாத ஒரு கம்யூனிஸ்ட். அந்த கம்யூனிஸ்ட்டைக் காப்பாற்றி அன்பே உருவாக நிற்பவர் கிறிஸ்துவர். இது எதுவுமே கறுப்பு-வெள்ளை எனப் பிரச்சாரம் போல் செய்யாமல், நாயகனை இறுதிவரை நல்லவனாகவும், கடுமையான துன்பங்களைத் தாங்கி சமூகத்துக்கு சேவகம் செய்பவனாகவும் காட்டி, மக்கள் மனதில் நுட்பமாகத் தம் கருத்துகளைப் பதித்துவிடுகிறார் இப்படத்தின் படைப்பாளி.

சமீபத்தில் வெளிவந்த ‘வாரணம் ஆயிரம்’ என்றொரு திரைப்படத்தில் குழந்தைகளைக் கடத்துபவர்களாகக் காட்டப்படுபவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், நன்றாகக் குலுக்கப்பட்ட கோகோ-கோலா போலக் கொதித்தெழுந்த சாருநிவேதிதா ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் இந்துக்கள் படுமோசமாக சித்தரிக்கப்பட்டதற்காகக் கொதித்தெழவில்லை. இத்தனைக்கும், ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் இஸ்லாமியர்களைச் சித்தரித்த விதத்துக்கும், ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் இந்துக்களை சித்தரித்த விதத்துக்கும் கருத்தியல் ரீதியாகவே மிகப்பெரிய வேறுபாடு உண்டு.

எத்தனையோ திரைப்படங்களில் கெட்டவர்களாக பல்வேறு ஜாதியினரும், மதத்தினரும் வந்து போவது போல் ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் இரண்டு காட்சிகளில் வந்துபோயின. ஆனால் ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் மரணப்படுக்கையிலிருக்கும் நாயகனிடம், “நான் தெனமும் பூஜை செய்யறேண்டா… நான் வணங்கற சிவன் என்னைக் கைவிடமாட்டான்.. நீ செத்துப்போவடா” என்று ஒரு கதாபாத்திரம் சொல்வதுபோல் அப்பட்டமாக, இறை நம்பிக்கையையும், வஞ்சகத்தையும் சமமாக்கி வெளிப்படையாகவே காட்டியிருப்பார்கள். ஆத்திகம் பேசுபவரை அடியார் என்றும், நாத்திகம் பேசுபவரை நல்லவர் என்றும் அப்படப்பாடல் சொல்வது தற்செயல் இல்லை. இந்து மத நம்பிக்கைகளையோ, இந்துக் கடவுள்களையோ இழிவுபடுத்துவது நம் அறிவுஜீவிகளால் முற்போக்கான விஷயம் என்று முடிவுசெய்யப்பட்ட ஒன்று.

ஆனால் சிறுபான்மையினரை ஒரு கதாபாத்திரமாகக் கூட கெட்டவர்களாகக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்துக்காகக் கொதித்தெழும் நம் முற்போக்குவாதிகள் இதுவரை மும்பை குண்டுவெடிப்புகளை ஒரு சம்பிரதாயத்துக் கூட கண்டிக்காதது எந்த அளவுக்கு இவர்கள் நடுநிலையானவர்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டிவிட்டது.

எத்தனையோ சிவபக்தர்களும், ஆத்திகர்களும் ‘அன்பே சிவம்’ திரைப்படத்தைப் பார்த்துக் கண்கள் குளமாகி, நெக்குருகி நின்றிருக்கிறார்கள். காரணம் திரைப்பட ஊடகத்தின் அழகியல். அரசியல் கட்சிகள் போல மேடை போட்டு, கெட்ட வார்த்தை பேசவில்லை இப்படம். ஒரு மிகப்பெரிய அறிவுஜீவித்தனத்தை முன்வைப்பது போலவே, ரோஹிந்தன் மிஸ்த்ரி, அரவிந்த் அடிகா நாவல்கள் போலவே, அருந்ததிராயின் அரைகுறைக் கட்டுரைகள் போலவே ஒரு தத்துவம் போல், இலக்கியம் போல் தன்னை முன்வைத்துக் கொண்டது ‘அன்பே சிவம்’ திரைப்படம்.

ஒரு கருத்தியலை முன்வைக்கவோ, எதிர்கொள்ளவோ பிரச்சார மொழியில் மேடை போட்டுக்கூவுவது எவ்வளவு அவசியமோ, அதே அளவு தன்னை நடுநிலையாகக் காட்டிக்கொண்டு, அறிவியல், இலக்கிய, கலை ரீதியாகப் பேசுவதும் அவசியமாக இருக்கிறது. இதைப் புறந்தள்ளும் எந்த ஒரு இயக்கமும் வெற்றிபெற சாத்தியமில்லை. இதற்கான சான்றுகளை சர்வதேச அரசியலிலிருந்து, திராவிடக் கட்சிகளின் அரசியல் வரையும், உள்ளூர் சிறுபத்திரிகைகள், அறிவுஜீவிகள் வரையிலும் காண முடியும்.

தொடர்ந்த இடதுசாரிப் பிரச்சாரத்தையும், அறிவுஜீவிகளையும் எதிர்கொள்ள அமெரிக்க வலதுசாரிகள் நடத்திய இலக்கிய பத்திரிகை ‘The Encounter’ என்பது. 1953-இல் தொடங்கப்பட்ட இந்தப் பத்திரிகைக்கான பண உதவிகளை ரகசியமாகச் செய்து வந்தது அமெரிக்க அரசாங்க உளவு நிறுவனமான CIA. ‘The Encounter’ கீழ்த்தரமான அரசியல் நெடியடிக்கும் கட்டுரைகளையோ, வெகுஜன கதைகளையோ பிரசுரிக்கவில்லை. இந்தப் பத்திரிகையில் பிரசுரமானவை அரசியலைப் பூடகமாகக் கொண்ட பல சிறந்த கலைப்படைப்புகள், கவிதைகள், கட்டுரைகள். பல இடதுசாரி அறிவுஜீவிகள் கூட தொடர்ந்து படித்து வந்த புத்தகம் இது.

அறுபது வருடங்களாக தமிழகத்தைச் சுரண்டி வரும் திராவிடக்கட்சிகளின் விதை, ஏழைகளுக்காக கோர்ட்டில் அவேசமாக முழங்கிய பராசக்தி திரைப்படத்தில் இருக்கிறது; வெறும் பாட்டுக்களால் நிரம்பி இருந்த திரை ஊடகத்தை, வசனங்களால் நவீனப்படுத்தித் தன்னை முன்னிருத்திக் கொண்டதில் இருக்கிறது; ஆரியர்-திராவிடர் என நிரூபணமேயில்லாத பிரிவினையை அறிவியல் ரீதியாகக் கண்டுபிடித்தது போல் நம்பவைத்து, மக்கள் மனதில் ஆழமான காழ்ப்புணர்வையும், வேற்றுமையையும் தூண்டியதில் இருக்கிறது.

‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்ற தத்துவத்துக்கு, ‘நானே பிரம்மம், என்னைத் தவிர மற்றெல்லாவற்றையும் அழிப்பேன்’ என்ற வெகு குழந்தைத்தனமான அர்த்தத்தை ஆதிசங்கரருடன் வாதிட்டவரால் கூட சொல்லியிருக்க முடியாது. ஆனால் அதையே தவளை, காகம் என்றெல்லாம் படிமங்களைக் கொண்டு பேசும்போது அழகான கவிதையாகிறது. இப்போது வெளிவரும் சிறுபத்திரிகைகளில் தரமானதான ஒன்றான ‘வார்த்தை’ இதழில் கூட இக்கவிதை பிரசுரமாகிவிடுகிறது. ஏனென்றால் அக்கவிதை முன்வைக்கும் காழ்ப்புணர்வு வெகு திறமையாக வார்த்தைகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ளாமல் கலை, இலக்கியம், அறிவியல் துறைகளிலிருந்து தூர ஓடிப்போகும் எந்த ஒரு இயக்கமும் மக்களைச் சென்றடைவது சாத்தியமேயில்லை.

என் நண்பர் ஒருவர் சிறந்த சமூக சேவகர். துன்பப்படும் மக்களுக்கு உண்மையான பரிவுடனும், அக்கறையுடனும் உதவி செய்பவர். மறைமுகமான லாபங்களுக்காக மக்களுக்குச் சேவை செய்வதுபோல் நடிக்கும் இயக்கங்களைக் கடுமையாகச் சாடி எதிர்த்து வரும் அவருக்கு அறிவுஜீவிகள் என்றாலே ஆகாது. இரண்டு வரிகளுக்கொரு முறை திடீர் திருப்பத்தைத் தராத எந்தக் கட்டுரையையும் அவர் நான்கு வரிகளுக்கு மேல் படித்தது கிடையாது. பலதுறைகள் தொடர்பான கட்டுரைகளை வெளியிடும் ‘திண்ணை’ இணையதளத்தைக் கூடப் பார்வையிடுவது கிடையாது. ஓய்ந்திருக்கும் வேளையில் அவர் புரட்டிப்பார்ப்பது தன் அலமாரியிலிருக்கும் மறைந்த எழுத்தாளர் தேவன் எழுதிய புத்தகங்களைத்தான். கடுமையாக திராவிடக் கட்சிகளைச் சாடும் அவர் தினமும் பார்த்துப் புளகாங்கிதம் அடைவது கலைஞர் டிவி, ஜெயா டிவி, சன் டிவி இவைகளைத்தான்.

சென்றமுறை அவர் வீட்டுக்குச் சென்றபோது கலைஞர் டிவியில் அவர் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது தசாவதாரம் திரைப்படத்தில் வரும் ‘கல்லை மட்டும் பார்த்தால் கடவுள் கிடையாது’ என்ற ‘அர்த்தம் மிகுந்த’ பாடலை! கடவுள் சிலையுடன் கட்டிக் கடலில் வீசியது கமலஹாசனை இல்லை, தன்னைத்தான் என்பதை அவர் எப்போது புரிந்து கொள்ளுவார் என்று தெரியவில்லை.

27 Replies to “அழகியல் அரசியல்”

  1. இன்று ஏஷியாநெட்டில் ராஷ்ட்ரம் என்ற படத்தைக் காண்பித்தார்கள். கம்யூனிஸ்டுகளும் கிறிஸ்தவர்களும் மக்களுக்கு நன்மை செய்வதாகக் காண்பித்திருந்தனர், வில்லன்களை எதிர்த்து ஹீரோ(இவர் ஒரு கிறிஸ்தவர்) முதன் மந்திரியானதும் ஒரு வில்லனின் மகன் கேட்கிறார், “இதற்குத்தான் கோவில் கோவிலாகச் சென்றும், குருவாயூருக்கும் தேவிக்கும் வழிபாடு செய்தீர்களா “ என்று..இதைக் கேட்டதும் நான் ”அன்பே சிவத்தையும்” நாசரின் பாத்திரப்படைப்பையும், அவர் கூறும் “தென்னாடுடைய சிவனே “ என்ற வசனத்தையும் தான் நினைத்துக்கொண்டேன்.

    மிக நல்ல கட்டுரை. உங்கள் பணி தொடரட்டும்.

    -ஸ்ரீனி

  2. தலைப்புக்கு ஏற்ற அருமையான கட்டுரை. முற்போக்கு வாதிகள் என்ற பட்டம் இந்துக்களையும், அவர்தம் சடங்குகள், சம்பிரதாயங்களை இழிவு படுத்துவதன் மூலமும், பார்ப்பனீயம் மற்றும் ஆரிய வந்தேறிகளை அழித்தால் உலகமே சுத்தமாகிவிடும் என்பது போல எழுதுவதன் மூலமே பெறமுடியும் என அறிந்தவர்கள்.

    சிறுபான்மையினருக்கு சாதகமாக எழுதுவதும் அதற்காக கையூட்டு பெற்றும், பெறாமலும் இருப்பதும் முற்போக்கு வாதியின் குணாதிசயங்கள். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய எனது இந்தியா என்ற கட்டுரையிலும் இந்த முற்போக்குவாதிகளின் மற்றும் சிறுபான்மையினரின் காவலர்களின் உண்மையான முகத்தை தோலுரித்திருப்பார்.

    நல்ல அருமையான நடையில் எழுதியுள்ள வனமாலிக்கு வாழ்த்துக்கள்.

    ஸ்ரீதர்

  3. நான் பார்த்த பலத் திரைப்படங்கள் நல்லது செய்யும் கிறிஸ்த்தவபாதிரிகளையும் இஸ்லாமியப்
    பெரியவர்களையும் கதாநாயனுக்கு(?) உதவி செய்யும் பாத்திரங்களாகத்தான் காட்டியுள்ளன்.
    வெகுசில படங்களே இந்து சாமியார்கள், பெரியவர்களை நல்ல பாத்திரங்களாக காட்டியுள்ளன.
    பல மலையாளத் திரைப்படங்கள் எல்லா மதத்திலும் உள்ள போலிகளைக் காட்டியுள்ளதாக நினைக்கி
    றேன். அன்ப்பே சிவம் நேர்த்தியான படம் என்று சொல்லலாம் ஆனால் நேர்மையான படம் அல்ல.

  4. இன்னமும் உயிரோடு இருக்கும் தேவனின் எழுத்தில் என்ன மட்டமாக போய் விட்டது? 🙂 தேவனுக்கு பிறகு அவ்வளவு எளிமையான எழுத்தை எழுதுபவர்கள் மிகவும் குறைவு. எளிமையான விஷயத்தை தேடினால் கிடைப்பது இது போன்ற காழ்ப்புணர்ச்சி மறைத்து வைக்கப்பட்டு கட்டப்பட்ட படைப்புகள்தான்.

    திண்ணை, காலச்சுவடு மாதிரி சில தளங்களில் வரும் பல கட்டுரைகள் மலை மலையாக சொற்கள் குவிந்தவை – அவற்றில் ஒரு வித வரட்டுத் தனமே இருப்பதாக படுகிறது. எளிமையாக இல்லாத தன்மையால் என்னதான் வலது – இடது இரண்டு பக்க சிந்தனைகளையும் எடுத்து வைத்தாலும் ஒரு மலைப்பை ஏற்படுத்தி விரட்டி விடுகின்றன.

    அன்பே சிவம் படத்துக்கு மாற்றாக தமிழில் வந்த படமோ, கதையோ என்ன இருக்கிறது? அல்லது ஏன் ஒன்று கூட இல்லை? அப்படி ஆனதற்கு என்ன காரணம்? அறிவு ஜீவிகள் என்று சொல்லப் படுகின்ற அத்தனை பேருமே இந்து மதத்தை இழிவு படுத்தி வெறுப்பை வளர்ப்பவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா? இந்து மதத்தை இழிவு படுத்தாமல், எழுதப்பட்ட கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள் என்று நீங்கள் அடையாளம் காண்பது எவை? (தேவன் கதைகளைத் தவிர)

  5. //அன்பே சிவம் படத்துக்கு மாற்றாக தமிழில் வந்த படமோ, கதையோ என்ன இருக்கிறது?//
    பின்தொடரும் நிழலின் குரல் படமாக வரும் வாய்ப்பு மிக மிக குறைவு.
    //இன்னமும் உயிரோடு இருக்கும் தேவனின் எழுத்தில் என்ன மட்டமாக போய் விட்டது? //
    கட்டுரை மட்டமாக எதுவும் சொன்னது போல என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.

  6. ஸ்ரீகாந்தின் எதிர்வினையைப் படிக்கும்போதுதான் வனமாலி என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது. ஸ்ரீகாந்த் நீங்கள் பல்வேறு புத்தகங்களைப் படித்து தேவனையும் தாண்டி மேன்மேலும் வளர வாழ்த்துகள். நீள வாக்கியங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். படிக்கப்படிக்கப் பழகிவிடும். மனம் தளர வேண்டாம். ‘பின்தொடரும் நிழலின் குரல்’ தமிழில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட கம்யூனிஸ விமர்சன நாவல். போலவே நிறைய உலகத் திரைப்படங்களையும், வெறும் பொழுதுபோக்குக்காக இல்லாமல், கலை வடிவத்தைக் கமலஹாசன் போன்றவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவும் பாருங்கள். உங்களைப் போன்ற சேவையுள்ளம் கொண்டவர்கள் – அறிவுஜீவிகளில் நல்லவர்கள், மோசமானவர்களைப் பற்றியும், தேவனைத் தவிர மற்றவர்கள் எழுதிய புத்தகங்களைப் பற்றியும், அவர்கள் பின்னணியில் இருக்கும் அரசியலைப் பற்றியும் தெரிந்திருப்பதும் மிகவும் அவசியமான ஒன்று.

  7. வனமாலிக்கு வாழ்த்துக்கள். அருமையாக எழுதியுள்ளீர்கள். குறிப்பாக “அன்பே சிவம்” திரைப்படத்தின் உதாரணம் நல்ல முறையில் கையாண்டுள்ளீர்கள்.

    கமலஹாசன் தன்னை அறிவு ஜீவியாகக் காட்டிக் கொள்ள நினைக்கும் ஒரு முட்டாள். அவருடைய ஆரம்ப காலத்தில் இருந்தே பல படங்களில் ஹிந்து, பிராம்மண எதிர்ப்பு மற்றும் எள்ளி நகையாடுதல் ஏராளமாக இடம் பெற்றிருக்கும். சொல்லப்போனால், “கமல ஹாசன் படங்களில் ஹிந்து எதிர்ப்பு” என்று ஒரு ஆராய்ச்சி நூல் கூட வெளியிடலாம். அந்த அளவுக்கு காழ்ப்புணர்ச்சி உடையவர். மேலும், அவருக்கு தன்னை உலகுக்கு எப்படி அடையாளப் படுத்திக்கொள்வது என்பதில் பிரச்சனை உள்ளது. மிகவும் குழம்பிப் போய் சில சமயங்கள் ஒரு கோமாளியைப் போல் கூட காட்சியளித்ததுண்டு.

    திரைபடங்களில் மட்டுமல்லாமல் தொலைகாட்சி தொடர்களிலும் ஹிந்து எதிர்ப்பும், எள்ளி நகையாடுதலும் மிகவும் அதிகமாகிவிட்டன. உதாரணத்திற்கு பல ஆண்டுகளாக “கோலங்கள்”, “ஆனந்தம்”, என்று பல தொடர்கள் நம் “ஜந்துக்களை” (ஹிந்துக்களை) கட்டிப் போட்டிருகின்றன. “மீடியா வாட்சர்” என்கிற முறையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பழக்கம் இருப்பதால் சில நேரங்களில் இந்த வக்கிரமான கோலங்களையும் ஆனந்தம் சிறிதும் இன்றிப் பார்ப்பதுண்டு.

    இந்தத் தொடர்களில் ஹிந்துக்களை எவ்வளவு மட்டமாகக் காண்பிக்க முடியுமோ அவ்வளவு மட்டமாகக் காண்பிக்கிறார்கள். நம் கோவில்களில் தான் குடும்பங்கள், புறம் கூறுதலும், சண்டை போட்டுக் கொள்வதும், அசிங்கமாகப் பேசிக்கொள்வதும், அடுத்தக் குடும்பத்தை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுவதும், பிரதக்ஷிணம் செய்யும்போது ஊர் வம்பு அளப்பதும், என்று கேவலமாக சித்தரிக்கிறார்கள். அதே சமயத்தில் சர்ச்சுகள் ஏதோ அன்பின் வழி மட்டுமே நடப்பதாகவும் அவற்றின் பாதிரிகள் சமூக சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாகவும் காண்பிக்கிறார்கள். முஸ்லீம் கதா பாத்திரங்கள் மிகவும் நல்லவர்களாக சித்தரிக்கப் படுகிறார்கள்.

    வேண்டுமென்றே பிராம்மண சாயலில் தமிழ் பேச வராத ஆட்களை கோவில் குருக்களாகக் காண்பித்து கொச்சை படுத்துகிறார்கள். அதே போல் பிராம்மண கதா பாத்திரங்களை இழிவு படுத்திக் காண்பிக்கிறார்கள். இந்தப் பிராம்மண துவேஷம் என்பது நம் சமூகத்தில் புரையோடி இருப்பதற்கு காரணம் திராவிட இன வெறியர்களின் கூத்துக்களே தான். நீங்கள் சொன்ன மாதிரி “பராசக்தி” படத்தில் ஆரம்பித்து இன்று வரை நம் தமிழ் மக்களை வெற்றிகரமாக சீரழித்து வருகிறார்கள்.

    திரையுலகம் ஆகட்டும்; சின்னத் திரையாகட்டும்; தயாரிப்பவர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகர்கள் என்று அனைவருமே சிறு பான்மை இனங்களைச் சார்ந்தவர்களாகவும், திராவிட, கம்யுனிச, ஸெக்யுலரிஸ சிந்தாந்தங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே தான் ஹிந்து எதிர்ப்பு மிகவும் அதிகமாகிப் போய் விட்டது. ஆனாலும், பெரும்பான்மையின ஹிந்துக்கள் வெறும் ஜந்துக்களாக திரை, சின்னத்திரை மோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள். மிகவும் வேதனையான விஷயம்.

    பெரியவர்கள், தங்கள் முட்டாள்தனம் போதாதென்று, தங்கள் குழந்தைகளையும் பைசா பெறாத சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து சீரழிக்கிறார்கள். பெற்றோர்களும் “ஜோடிப் பொருத்தம்” போன்ற நிகழ்ச்சிகளில் அருவருப்பு ஏற்படும் வகையில் பங்கேற்கிறார்கள். தமிழ் ஹிந்துக்கள் தங்களை அறியாமல் தங்கள் கலாச்சாரத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். சில வருடங்களில் தமிழ் ஹிந்து கலாசாரம் என்பது நூலகங்களில் தேடப்படும் நிலை வரும்.

    வேதனையுடன்

    தமிழ்செல்வன்

  8. வனமாலி,

    நல்ல கட்டுரை. இன்னமும் கலாசாரக் காவலர்களாகத் தன்னைக் காண்பித்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தையும், மக்களையும் தொடர்ந்து இழிவுபடுத்திக் கொண்டிருக்கும் பாலசந்தரர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்களை விட்டுவிட்டீர்களே! தமிழ் சினிமாவின் சீரழிவுக்கு முதல் முக்கிய காரணம் மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் உமிழும் இவர்களைப் போன்றவர்கள் தான். திருந்தாத ஜென்மங்கள்.

  9. சாம்பு சார், அதுதான் தமிழ் ஹிந்து படிக்கிறேனே போதாதா…

    பின்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம் போன்ற நெடுங்கதைகளையும் படித்தேன்.

    (பின் தொடரும் குரலை படித்ததில், மனதில் பதிந்ததில், திடகாத்திரமான ஒரு பெண்ணை ஒரு கம்யூனிஸ்ட், காதல் திருமணம் செய்துவிட்டு பின்னால் காதல் கசந்து போவானே – அவளை புணரும் வேளையில் அவள் சிறிதும் காதல் இல்லாமல் சத்தமாக “அம்மா மாடு மேய்கிறது பார்.. இழுத்துக் கட்டு” என்பாள் – இது போலத்தான் கதை போகும். பல நூறு பக்கங்கள் வெறும் புலம்பலாகவே இருக்கும்).

    இதைத்தானா தேவனின் கதைகளுக்கு மாற்றாக சொல்கிறீர்கள்.. இதை புரிந்து கொள்ள எனக்கு இன்னும் ஐம்பது வருஷம் ஆகும் 🙂 என்னைப் பொறுத்தவரை, பி.தொ.நி போன்ற புத்தகங்கள், இந்து மதத்தைப் பற்றிய காழ்ப்புணர்ச்சி கொண்ட அறிவு சீவிகளுக்கானது – எனக்கானது அல்ல.

    பின் தொடரும் நிழலின் குரலை விட, விஷ்ணுபுரத்தை விட, ஜெய மோகனின் விசும்பு எனக்கு கொஞ்சம் புரிகிற அளவில் இருக்கிறது.

    ஒன்று மட்டும் சொல்வேன். தசாவதாரம், அன்பே சிவம் போன்ற எதிர் பிரச்சாரங்கள் எளிமையாக ரசிகனை அடையும் வகையில் இருக்க, பதிலுக்கு இதற்கு மாற்றாக என்ன இருக்கிறது என்று கேட்டால் ஒரு ஐந்நூறு பக்க புத்தகத்தை முகத்தில் அடிப்பது நியாயமா?

  10. அன்புள்ள ஸ்ரீகாந்த்,

    //
    தசாவதாரம், அன்பே சிவம் போன்ற எதிர் பிரச்சாரங்கள் எளிமையாக ரசிகனை அடையும் வகையில் இருக்க, பதிலுக்கு இதற்கு மாற்றாக என்ன இருக்கிறது
    //

    நேர்மையான உங்களைப் போன்ற சிந்தனையாளர்கள் கலை, இலக்கியத்திலிருந்து விலகிப் போவதே காரணம். இதையே கட்டுரை எப்படி போலி அறிவுஜீவிகள் இந்தத் துறைகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாக மக்களைச் சென்றடைகிறார்கள்; அதே சமயம் நேர்மையான சிந்தனையாளர்கள் இவற்றிலிருந்து விலகிப்போவதன் மூலம் பல போலிகளுக்கு இடம் தருகிறீர்கள் என்று சொல்கிறது. எளிமையை எதிர்பார்ப்பது நீங்கள் மட்டுமல்ல, உங்களைப் போலவே, எனக்கும், இன்னும் பலரும் இருக்கிறது. அது தேவனோடு நின்றுபோய் இன்னும் ஏன் அவரையே படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. உங்களைப் போன்ற நேர்மையான இந்துத் தத்துவங்களில் ஆழமான அறிமுகமிருக்கும் சிந்தனையாளர்கள் கலை, இலக்கியங்களைப் புரிந்து கொண்டு தரமான, எளிமையான படைப்புகளைத் தரவேண்டும். ஆனால் அதுபோன்ற படைப்பு இப்போதிருக்கும் நவீன இலக்கியம், திரைப்படங்களைப் பற்றிய அறிமுகம் இல்லாமல் சாத்தியம் இல்லை. இல்லையென்றால் கமலஹாசனைப் போன்ற மிக மேலோட்டமான கலைஞரின் பின்னணியில் இருக்கும் வன்மம் கூடப் புரியாமல் போகும்.

    அன்புடன்,
    வனமாலி

  11. வனமாலி,

    நீங்கள் எழுதுவதைப் படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து கலக்குங்கள்.

  12. கட்டுரை நன்றாக இருக்கிறது. அன்பே சிவம், தசாவதாரம்; இவ்விரு படங்களுக்கும் அடிநாதம் வைணவ வெறி. அது வெளிப்படும் விதம்தான் நாத்திகம்/இந்து மத எதிர்ப்பு/நடுநிலை வக்கிரங்களெல்லாம். என் கடவுள் மட்டுமே உண்மை/உயர்வு என்கிற ஆபிரகாமிய விஷச்சூழலில் வளர்ந்தால் இதுதான் பொதுக்கூறாய் இருக்கிறதாய் எனக்குத் தோன்றுகிறது.

    வெறியின் தீவிரத்தைப் பொறுத்து, சதவிகிதக் கணக்கில் வேண்டுமானால் இக்கூறுகள் மாறுபடலாம். எவ்வளவு புத்திக்கூர்மை இருந்தாலும், ஞாபக சக்தி, விஷயங்களை பிரிக்கும், கோர்க்கும் திறன் இருந்தாலும் அறிவு ஒரு பக்கம் இருண்டுதான் கிடக்கிறது. இவ்விருள் இருக்கும் வரை இந்து மதத்தில் ஒருங்கே எழுந்து நிற்கும் எளிமையும், பிரம்மாண்டமும் பிடிபடாது. தூணிலும், துரும்பிலும் இருப்பதும், சரணாகதியும் பிடிபடாது. அறிவுக்கூர்மையைப் பொறுத்து, வெளிப்படையாகவோ, மறைபொருளாகவோ வக்கிரங்களே வெளிப்படும்.

    அன்பே சிவத்தில் விபத்துக்குக் காரணமான, பின் வளர்ப்புப் பிள்ளையாகும் நாயின் பெயர் சங்கு என்கிற சங்கரன்! தசாவதாரத்தில் வைணவ வெறி வெளிப்படை. உற்சவர் சிலையைத் தலைகீழாகப் பிடித்தால்தான் அதற்குள் ஒரு குண்டூசியையாவது போட முடியும். (குற்றுயிராய் இருக்கும் திரைக்கதை அங்கே பிணமாகிறது) அது அங்கேயே இருக்க தலைகீழாகவே பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தசாவதாரத்தயும், கிருமிப்பெட்டியையும் சாக்கிட்டு கோவிந்தராஜருக்கு ஆராதனை; நேர்மையில்லாமல், நாத்திகம் பேசிக்கொண்டு . இவர்தான் கலையுலகத்தின் மூத்த அறிவுசீவி.

  13. மிக தெளிவான கட்டுரை வனமாலி, எத்தனையோ ஊடங்கள் நமது பண்டைய கலாச்சாரத்தை இருட்டடிப்பு செய்து வருகின்றன. sishri.oர்க் இன் ஒரு ஒலி தொகுப்பில் தன்னை ஆன்மீகவாதி என்று கூறிக்கொள்ளும் ரஜினி போறோரும் இதில் அடக்கம், சந்திரமுகியில் ஒரு காட்சியில் கர்நாடக இசை எல்லாம் Waste போய் சினிமா பாருங்கள் என்று ஒரு சிறுமியிடம் சொல்லுவார். Sishri.org ல் பிரவாஹன் குறிப்பிட்டுள்ளார், தமிழ் சினிமா நமக்கு செய்யும் தீங்கு கொஞ்ச நஞ்சமல்ல நமது கலாச்சாரத்தை மெல்ல மெல்ல அது அழிக்கின்றது என்று, முற்றிலும் உண்மை அது.

  14. எனக்கு தெரிந்து ஜனரஞ்சகமான படைப்புகளில் பாலகுமாரனின் வரலாறு பற்றிய படைப்புகள், அழகாக இந்து மத தத்துவங்களை விவரிக்கின்றன, அவருடைய பேய்கரும்பு, கடிகை, குன்றிமனி, சக்தி போன்றவை அழகான அர்த்தம் பொருந்தியவை. எனக்கு தெரிந்து அவர் பட்டிணத்தார், தாயுமானவர், ரிஷ்யசிருங்கர், பாடகச்சேரி சாமியார் போன்றோரைப் பற்றி எழுதியுள்ளார்

  15. Sishri.org ல் பிரவாஹன் குறிப்பிட்டுள்ளார், தமிழ் சினிமா நமக்கு செய்யும் தீங்கு கொஞ்ச நஞ்சமல்ல நமது கலாச்சாரத்தை மெல்ல மெல்ல அது அழிக்கின்றது என்று,

    ராம்குமரன், நீங்கள் சொல்வதுபோல் நான் எங்கும் எழுதியதாகவோ, பேசியதாகவோ நினைவில்லை. சரியான சுட்டியைக் கொடுத்தால் நன்றியுள்ளவனாவேன்.

  16. “ஆய்வாளர் ப்ரவாஹன் கட்டுரை மீதான விவாத அரங்கம்”

    இந்த தலைப்பில் உள்ள ஒலிதொகுப்பில் நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள்

    நன்றி

  17. கட்டுரை நன்று; மிக நன்று.

    வனமாலி பாராட்டுக்குரியவர்; பாராட்டுகிறேன்.

  18. பல இடதுசாரி அறிவுஜீவிகள் கூட தொடர்ந்து படித்து வந்த புத்தகம் இது.

    – இத்தகைய ஒரு கருத்தை எழுதும்போது கவனமாக இருப்பது அவசியம். வலதுசாரி இலக்கியப் புத்தகம் ஒன்றைத் தொடர்ந்து படிப்பது இடதுசாரி அறிவுஜீவிகளின் பெருந்தன்மையையும், கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் தன்மையையும் நிறுவுகிறது என்று சில மூட, மெளடீக இடதுசாரிகள் மார்தட்டிக்கொள்ள நாம் இடமளித்துவிடக்கூடாது.

    மாறாக, இக்கருத்தைப் பின்வருமாறு எழுதுவது சிறந்தது:

    ”பல இடதுசாரி அறிவுஜீவிகள்கூட, வேறுவழியின்றி அந்தப் புத்தகத்தைப் படித்தே தீர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர் என்பதிலிருந்தே அப்புத்தகத்தின் வீச்சை நாம் உணரலாம்”

  19. தங்களின் கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மையே.இந்திய கலை இலக்கிய உலகம் நடுநிலையாளர்கள் கையில் இல்லை. தீவிர இடது சாரிகள் , நடுநிலமையாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கம்யுனிஸ்ட்கள், சுதந்திர சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர்கள் தான் தற்போது முன்னிலைப் படுத்தப் படுகின்றனர். ஜெய மோகனின் ‘விஷ்ணு புரம்’ , டான் ப்ரோவ்னின் ‘டா வின்சி கோட்’ , தஸ்லிமா நஸ்ரினின் ‘வெட்கம்’ , சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் கவிதைகள்’ போன்றவை எதிர்க்கப்பட்டது இலக்கிய தரம் கருதி அல்ல.இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை பற்றி எதிர்மறையான விமர்சனம் வைத்ததற்காக. அதிலும் ‘விஷ்ணு புரம்’ பற்றிய விமர்சனங்கள் மிகவும் கிறுக்குத் தனமாக, ஒரு நோக்கம் இன்றி வைக்கப் பட்டவை.

    ஆனாலும் நாம் இதற்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும். இந்திரா சௌந்தர ராஜன் தனது நாவல்களில் ஹிந்து மத தத்துவங்களை சிறப்பாக பயன் படுத்தி இருப்பார். அது போல் நிறைய பேர் எழுத வேண்டும். பார்ப்போம்……………..

  20. ராம்குமரன்,நீங்கள் குறிப்பிட்ட ஒலிக்கோப்புகளை நன்கு பரிசீலித்துவிட்டேன். ஆனால் அவற்றில் நான் எங்கும் அப்படிக் குறிப்பிடவில்லை. நன்றி.

    “ஆய்வாளர் ப்ரவாஹன் கட்டுரை மீதான விவாத அரங்கம்”

    இந்த தலைப்பில் உள்ள ஒலிதொகுப்பில் நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள்

    நன்றி

  21. Ok Vanamali. I see the point. I got sidetracked while thinking that, is there really a lack of balance (pro and anti hindu) or the entire media has become anti-hindu… I dont know the answer though but that is not the point of this article, I think.

    The idea that this article proposes is, in popular media there is so much hatred shown against Hinduism and they are spreading their hatred both subtle and blunt ways… Even movies like Anbe sivam that seemingly depict an altruistic theme has so much subtle elements that denigrate Hinduism… I get it 🙂

    This is true, but people are yet to realize it. Its good that you are bringing this up in public.

  22. there was a movie by the name `gnanap paravai` story by vietnam veedu sundaram. leading role by sivaji ganesan.the movie dealt about the spiritual persuit of an individual. there was no attempt to decry hindu beliefs in the movie. if i remember right this movie had the backing of yagava munivar. has anyone seen this movie?

  23. //இடதுசாரிகள் மார்தட்டிக்கொள்ள நாம் இடமளித்துவிடக்கூடாது.//
    மார்தட்டிக்கொண்டு போவதில் தவறில்லை. ‘பின் தொடரும் நிழலின் குரல்’ கூட ஒரு deep-left பார்வையில் நிறுவன இடதுகளை விமர்சிக்கும் நூலாகவே எனக்கு பட்டது. அதில் ஓடும் மற்றொரு இழை எப்படி விவசாய மக்கள் சமுதாயம் இயந்திரம் சார்ந்த இடதுசாரி நிறுவனத்துக்கு தன்னியல்பிலேயே எதிராக இருக்கிறது என்பது. இடதுசாரிகளை நல்லவை ஏதுமற்ற தீயசக்திகள் என நாம் முத்திரை குத்துவது தவறு என நினைக்கிறேன். இடதுசாரி சிந்தனைக்கு ஒரு முக்கிய இடம் எந்த தளத்திலும் இருக்கிறது. அதனை நாம் அளித்தே ஆகவேண்டும். (அருணகிரி எழுதிய இந்து இடதுசாரிகள் குறித்த கட்டுரை திண்ணையில் உள்ளது) இல்லாவிட்டால் நாம் மூடிய குழுவாகிவிடுவோம். இடதுசாரிகள் செய்யும் மிகப்பெரிய தவறுகள் கண்மூடித்தனமான முத்திரை குத்தல் மற்றும் நேர்மையான சுயவிமர்சனம் இன்மை. இவற்றினை நாம் தவிர்க்க வேண்டும். இன்றைய இந்து சமுதாய இயக்கங்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களை குறித்து கவலைப்ப

  24. <>

    அவர்களை மார்தட்டிக்கொண்டு போகவிட்டால் நாம் மாரடித்துக்கொண்டு அழவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்பது தமிழக/இந்தியச் சூழலில் தவிர்க்கமுடியாதது என்பதைக் கவனிக்க வேண்டும்.

  25. திரு பிரவாஹன் அவர்களே முதற்கன் எனது மன்னிப்பைக் கோருகிறேன், நான் குறிப்பிட்ட ஒலித் தொகுப்பில் திரு. மாணிக்கம் ராகவராஜ் அவர்களின் பேச்சில் அக்கருத்து எனக்கு புலப்பட்டது, அவருடைய வார்த்தையில் ‘ கடவுள்கள் மேல் மக்களின் நம்பிக்கை குறைந்து வருகின்ற‌து, முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நம்பிக்கை இப்பொழுது இல்லை, நம்பிக்கையைக் குலைக்கும் பணியை டிவிக்களும், செல்போன்களும் செய்து கொண்டிருக்கின்றன’ என்று கூறியுள்ளார். பெயரை தவறாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டு விட்டேன் அதனால் உங்கள் பெயரை குறிப்பிட்டு விட்டேன், மன்னிக்கவும்.

  26. மிகத் தெளிவான, கூர்மையான விமர்சனம் வனமாலி. மனிதநேயத் தோல் போர்த்தி வரும் இந்த அரசியல் அறிவுசீவி மிருகங்களை சரியாக அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்.

    ஞாநி ஒரு நல்ல உதாரணம். சமூக அக்கறை பீறிடும் சில பதிவுகளுக்கு நடுவே தீவிர இந்திய விரோத, இந்து விரோத நிலைப்பாடுகளை அள்ளித் தெளிப்பதில் தேர்ந்தவர் அவர் போன்றவர்கள். மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக தேசமே குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், குமுதத்தில் இந்த ஆள் கட்டுரை எழுதுகிறார் – அத்வானி தான் பெரிய தீவிரவாதியாம். ஜிகாதி தீவிரவாதம் தொடங்கியதே 1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பின் தானாம். அதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதச் செயலாம். (1980களில் ஆயிரக் கணக்கில் காஷ்மீர இந்துக்கள் படுகொலை செய்யப் பட்டு தங்கள் மண்ணிலிருந்து துரத்தப் பட்டது பயங்கரவாதம் இல்லையோ? ஒரு வழிபாடில்லாத பழைய, மசூதி என்றழைக்கப் படும் சர்ச்சைக்குரிய கட்டிடம் பெரும் மக்கள் இயக்கத்தின் மூலம் கூடிய ஜனத்திரளால் உடைக்கப் பட்டது பயங்கரவாதமாம்!!). பயங்கரமான லாஜிக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *