‘ம்யூனிக்’ முதல் மாலேகாவ் வரை – 1

இந்தியத் திரைப்படங்கள் தீவிரவாதம் கதைக்கருவாக அமையும் போது காமெடிப் படங்களை மிஞ்சும் விதத்திலேயே இருக்கிறது. ஒரு முஸ்லீமைத் தீவிரவாதியாகக் காட்டினால் ஏதோ பாவம் செய்ததுபோல எண்ணி, அதற்குக் கழுவாயாக, பிற முஸ்லீம்களைத் தியாகிகளாகச் சித்தரித்து விடுவார்கள். ஏதோ சிறிய எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் மட்டுமே தீவீரவாதிகளாகச் செயல்படுவது போலவும், அவர்களை முஸ்லீம் சமுதாயம் ஆதரிக்காதது போலவுமே சித்தரிக்கிறார்கள். தீவீரவாதிகளை அழிக்கும் ஹீரோக்களோ அநியாயத்துக்குக் காமெடி செய்கிறார்கள். என்றைக்குமே தீவீரவாதிகள் குறித்த படங்கள் யதார்த்தத்துடன் எடுக்கப்படுவதே இல்லை. மலையாளத்தில் சில படங்களும், ப்ளாக் ஃப்ரைடே போன்ற சில படங்களும் மட்டுமே விதிவிலக்குகளாக இருக்கின்றன.

பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து தப்பி ஓடிவரும் எம்ஜிஆர், இந்திய எல்லை என்றொரு வேலியை நோக்கி ஓடிவருவார். வேலியைத் தாண்டிக் குதித்தவுடன் தமிழ்நாட்டின் எல்லை வந்துவிடும். அவ்வளவுதான் நம் சினிமாக்காரர்களின் பூகோள அறிவும் பொது அறிவும். எம்ஜிஆர் தொடங்கி விஜயகாந்த் வரை இத்தகைய அபத்தங்களுக்கு எல்லையே இல்லை. தீவீரவாதிகளைச் சித்தரிக்கும் யதார்த்தமான சினிமாக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காணலாம்.

அதற்கு முன்பாக ‘இந்துத் தீவீரவாதிகள்’ என்னும் முரண்தொடர் குறித்துச் சில வார்த்தைகள்:

இஸ்லாமியத் தீவிரவாதம் குறித்த இணையப் பதிவுகள், செய்தித்தாள் கட்டுரைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் சிலர் இந்திய முஸ்லிம்கள் வறுமையில் வாடுவதாகவும் அல்லது அவர்கள் பெரும்பான்மை இந்துக்களிடம் அஞ்சி வாழ்வதாகவும் சித்தரிக்கின்றனர். முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கும் இவையே காரணமாக அமைவதாகச் சாக்குக் கூறுகின்றனர். இது உண்மைக்கு முரணானது.

எது அச்ச உணர்வில் செய்வது?

அமெரிக்காவில் செப்டம்பர் 11-ல் விமானத்தைக் கொண்டு இடித்து ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்ற தீவிரவாதிகள், பணக்கார அரபிக்கள் எந்த விதமான அச்ச உணர்வில் வாழ்ந்தார்கள்? காஷ்மீரப் பழங்குடியினரான பண்டிட்களைக் கொன்று, கற்பழித்துக் கொள்ளையடித்துத் துரத்தி இன்று அகதிகளாக வாழ வைத்திருக்கிறார்களே அந்தக் காஷ்மீரி முஸ்லீம்கள் எந்த விதமான அச்ச உணர்வில் வாழ்கிறார்கள்?

ஒரு சில முன்னாள், இந்நாள் ராணுவ அதிகாரிகளும் ஒரு சில இந்துத்துவத் தொண்டர்கள் மீதும் குண்டு வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இன்னும் எதுவும் நிரூபிக்கப் படவில்லை. அதற்குள் அவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று இந்தியாவின் அனைத்து பீ-செக்குகளும் (pseudo-secularists), மவுண்ட் ரோடு மாவோக்களும், அறிவு ஜீவிகளும் கருவிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப் பட்டாலும் அவர்களுக்குச் சட்டத்தின்படிதான் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் அப்படி அவர்கள் செய்திருக்கும் குற்றம்தான் என்ன? இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கில் இந்துக்கள் உடல் சிதறிச் சாகிறார்கள். காசியிலும், டெல்லியிலும், மும்பையிலும், அகமாதாபாத்திலும், அஸ்ஸாமிலும் நம் அருமைச் சகோதரர்கள் கொடூரமான முறையில் உயிர் இழக்கிறார்கள்.

பொதுமக்களின் உயிரைக் காக்க வேண்டிய அரசாங்கமோ வேடிக்கை பார்க்கிறது. இஸ்லாமியத் தீவீரவாதிகளைக் கண்டுகொள்ளாமல் நடந்து கொள்கிறது. போலீஸார் கைது செய்து சுப்ரீம் கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்ட தூக்கு தண்டனை கைதியைக் கூட தண்டனை அளிக்காமல் இஸ்லாமிய ஓட்டுக்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் இந்துக்களின் உயிரையும் உடமையையும் பாதுகாப்பதில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் ஒரு சில இந்துக்கள் எத்தனை நாள்தான் பொறுப்பது என்று சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்து கொடூரமான சிமி தீவீரவாதிகளைக் கொல்ல முயன்றனர் என்பதுதான் இப்பொழுது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றசாட்டே.

சிமி என்ற இஸ்லாமிய அமைப்பு பல்லாயிரக்கணக்கான இந்துக்களின் உயிர்களைக் கொடூரமான முறையில் பறித்து வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்கமோ வேடிக்கை பார்க்கிறது. அரசில் பங்கு வகிக்கும் முலாயம், லல்லு பிரசாத், சூர்ஹாட் லாட்டரி புகழ் அர்ஜுன் சிங் ஆகியோர் தீவீரவாதிகளுக்குப் பரிந்து அவர்களுக்காக வாதாடுகிறார்கள். ஒட்டுமொத்த இந்திய அறிவுஜீவிகளும் சிமிக்காகப் பரிதாபப் படுகிறார்கள். ஆனால் உடல் சின்னபின்னமான, உயிரை இழந்த இந்துக்களுக்காகப் பரிதாபப்பட ஒரு ஜீவனும் இந்தியாவில் இல்லாமல் போனார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசாங்கமும், போலீஸும் நடவடிக்கை எடுத்து இந்துக்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் அரசும் போலீசும் இஸ்லாமிய, கிறிஸ்தவத் தீவீரவாதிகளுக்கே ஆதரவாக இயங்குகின்றன. பிரதம மந்திரியோ ஆஸ்திரேலியாவில் கைதான இஸ்லாமியத் தீவிரவாதிக்காக உறக்கத்தை இழக்கிறார்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு சில தேசபக்தர்களும் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் வீரர்களும் தீவீரவாதிகளை அழிக்கும் கடமையை தங்கள் கைகளில் எடுத்ததாகச் சொல்லப்படுவதே இப்பொழுது மிகப் பெரிய குற்றமாகிப் போனது. பத்ரி சேஷாத்ரிகளும், லல்லுக்களும், ராஜ்தீப் சர்தேசாய்களும் ‘இந்துத் தீவிரவாதிகளைக் கொல்’ என்று உச்சபட்ச டெசிபல்களில் கூக்குரல் இடுகிறார்கள்.

இந்தியா துணிவுடன் நடந்திராத தருணங்களின் பொழுது ‘இஸ்ரேலைப் பார் எப்படி துணிவுடன் எதிரிகளைத் தண்டிக்கிறது!’ என்று சொல்வது ஒரு ஃபேஷனாகிப் போனது. இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்கள் கொல்லப்பட்ட பொழுது இஸ்ரேலும் அதன் இரும்புப் பெண்மணியான கோல்டா மேயரும் எப்படி நடந்து கொண்டனர்? தேசநலன் கருதித் தீவிரவாதிகளை ஒழிக்க முயன்றதாகச் சொல்லப் படும் இன்னும் விசாரணையில் இருக்கும் உறுதிப் படுத்தப் படாத செயலை அங்கே ஓர் அரசாங்கமே மேற்கொண்டு செய்துள்ளது. எப்படிச் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? பார்க்கலாமா?

ம்யூனிக் (2005)

அசாதாரணமான படங்களையே எடுக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் மற்றுமொரு பிரமாதமான படம் 2005 ஆண்டு வெளிவந்த ம்யூனிக். ஹாலிவுட் பிரமாண்டங்களை அள்ளித் தந்த இதே இயக்குனர் ஒரு சர்ச்சைக்குரிய, தன் இனத்தாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த அரசியல் திரில்லரைக் கொடுத்தார்.

கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். 1972ம் ஆண்டு ஒலிம்பிக்கின் பொழுது 11 இஸ்ரேலிய தடகள வீரர்கள் அரேபியத் தீவீரவாதிகளால் முதலில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். பின்னர் ஜெர்மன் போலீஸ் செய்த குளறுபடிகளால் அனைவரும் கொலை செய்யப்பட்டனர். இஸ்ரேலுக்குப் படுகொலைகளும் கடத்தல்களும் துரோகங்களும் புதிதல்லதான். ஆனால் நாட்டுக்காக விளையாடச் சென்ற வீரர்களின் சிதறிய உடல்கள் யூதர்களிடம் கடுமையான கோபத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. பிரதமர் கோல்டா மேயர் ஓர் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுகிறார். இஸ்ரேலிய ஒலிம்பிக் போட்டியாளர்களின் கோரக் கொலையைச் செய்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அனைவரையும் அழிக்க முடிவு செய்யப்படுகிறது. பழிக்குப் பழிதான்.

இஸ்ரேலின் பிரதமர் இரும்புப் பெண்மணி கோல்டா மேயர், உலக நாடுகளின் போலி நாகரீகங்களைப் புறக்கணித்துவிட்டு, தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, என்ன செய்தால் தன் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குச் சமாதானம் கிட்டுமோ, எதைச் செய்தால் இஸ்ரேலை அழிக்க நினைக்கும் எதிரிகளுக்குத் தன் நாட்டின் இருப்பை அறியச் செய்யுமோ அதைச் செய்யுமாறு உத்தரவிடுகிறார். தீவீரவாதிகளைத் தேடிப் பிடித்து வேட்டையாடக் கட்டளையிடுகிறார், பிரதமரும், மொஸாட் மற்றும் ராணுவத் தலைவர்களும் தங்கள் ரகசிய ஆலோசனைக்குப் பின், பிரதமரின் முன்னாள் பாதுகாவலரும் ஒரு மொஸாட் ஏஜெண்டுமான அவ்னெரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கின்றனர்.

அதிகாரபூர்வமற்ற ஒரு தீவீரவாத ஒழிப்புப் படை உருவாக்கப் படுகிறது. எவ்வளவு செலவானாலும் சரி, விளையாட்டு வீரர்களின் கொலைக்குக் காரணமான 11 இஸ்லாமியத் தீவீரவாதிகளையும் கண்டுபிடித்துக் கொல்லும் பணி 5 பேர் கொண்ட ரகசியக் குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்களும் 11 பேர்களில் 9 பேர்களைப் பல நாடுகளுக்கும் சென்று வேட்டையாடுகின்றனர். எஞ்சியவர்களை இஸ்ரேல் தொடர்ந்து கொல்ல உறுதி பூணுகிறது.

ஏபிசி வர்ணனையாளர் பீட்டர் ஜென்னிங்ஸின் நிஜமான, நெஞ்சை உறைய வைக்கும் வர்ணனையோடு படம் தொடங்குகிறது. பாலஸ்தீனியத் தீவீரவாதிகளால் ‘ப்ளாக் செப்டம்பர்’ என்று பெயரிடப்பட்ட பயங்கரச் செயலை, பணயக் கைதிகளாக எடுக்கப்பட்டுப் பின்னர் கொலை செய்யப் படுவதை வர்ணிக்கிறார் பீட்டர் ஜென்னிங்ஸ்.

ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் எடுத்து யூதர்களின் பாராட்டைப் பெற்ற இணையற்ற இயக்குனர் ஒரு யூதர். இந்தப் படத்தில் இஸ்ரேலின் முடிவுகளைக் கேள்விக்கு உள்ளாக்கி அவர்களது கடுமையான அதிருப்தியைச் சம்பாதித்திருப்பதாகத் தெரிகிறது. ஸ்பீல்பெர்கின் துடிப்பான இயக்கத்தில் ஒரு தத்ரூபமான திகில் படம் உருவாகியுள்ளது. படத்தின் முன்னே இயக்குனர் இது ஒரு டாக்குமண்டரி அல்ல. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப் பட்ட தி வெஞ்சன்ஸ் என்ற 1984ல் வெளிவந்த புத்தகத்தை ஆதாரமாக வைத்து எடுக்கப்பட்ட பரபரப்பான அரசியல் படுகொலைத் திரைப்படமே என்கிறார். இதில் தான் எந்த நீதியையையும் சொல்ல முயலவில்லை, யாரையும் ஆதரித்தோ எதிர்த்தோ எடுக்கவில்லை, நடந்த சம்பவங்களை மக்களின் பார்வைக்கு வைக்கிறேன், எது சரி, எது தவறு என்பதை அவர்கள் முடிவு செய்யட்டும் என்றும் கூறுகிறார். இந்தப் படத்தின் மூலம் எந்தத் தீர்வையும் கொடுக்க முயலவில்லை, அது தன் வேலை அல்ல என்றும் திட்டவட்டமாக அறிவிக்கிறார். ஸ்பீல்பெர்கின் இயக்கத்தில் அழிப்புப் படைத் தலைவன் அவ்னெராக எரிக் பானா அற்புதமாக நடித்துள்ளார்.

நமக்குப் புதிய ஜேம்ஸ்பாண்டாக அறிமுகமாயிருக்கும் டேனியல் கிரெய்க், குறிபார்த்துச் சுடும் மொஸாட் வீரராகவும், லின் கோகன் என்ற பிரபல டி.வி. நடிகை இஸ்ரேலியப் பிரதமராகவும் பிரமாதமாக நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதை வசனத்தை ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் படத்தின் வசனகர்த்தாக்களான டோனி கிரெக், எரிக் ரோத் அமைத்துள்ளனர். இந்தப் படம் மூன்று உண்மைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்கிறார் இயக்குனர். 11 தடகள வீரர்கள் கொல்லப்பட்டது உண்மை, அதற்கு பதிலடியாக கோல்டா மெயர் நடவடிக்கை எடுத்தது உண்மை, 12 தீவீரவாதிகளில் 10 பேர் கொல்லப்பட்டது உண்மை. இந்த உண்மைகளின் அடிப்படையில் பல்வேறு சங்கடமான கேள்விகளை எழுப்புகிறார் இயக்குனர், பதிலைப் பார்வையாளர்களிடமே விட்டு விடுகிறார்.

கைகழுவி விடப்பட்ட படை

அவ்னெர், தன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தேசத்தின் கட்டளையை ஏற்று எதிரிகளை ஒழிக்கும் பொருட்டு இஸ்ரேலை விட்டு நாடு நாடாகச் செல்கிறார். அவர் கிளம்பும் முன்பு இஸ்ரேலின் மொஸாடுக்கும் அவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு, பதவி விலக்கப்பட்டே அனுப்பப்படுகிறார். இந்தக் குழு எந்த நாட்டிலாவது கொலைக் குற்றத்துக்காக பிடிபட்டாலும் இஸ்ரேலுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்றும், இஸ்ரேல் சட்டத்தை மீறித் தன் ஒற்றர் படையைப் பிற நாடுகளுக்கு அனுப்பாது என்று காட்டவும் இந்தக் குழு ஆரம்பத்திலேயே கைகழுவி விடப்படுகிறது. விளையாட்டு வீரர்களின் படுகொலைக்குக் காரணமான தீவீரவாதிகள் எப்படியாவது கண்டுபிடிக்கப் பட்டு கொல்லப்பட வேண்டும்; உலகிற்கு இஸ்ரேலின் இரும்புக் கை புலப்பட வேண்டும்; அதே நேரத்தில் இஸ்ரேல் மீது உலக நாடுகள் எவ்விதக் குற்றசாட்டும் வைத்துவிடக் கூடாது என்பதில் இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது. அவ்னெருக்கான பணம் ஒரு ஸ்விஸ் வங்கியில் ரகசியமாக வைக்கப்படுகிறது, செலவாகும் ஒவ்வொரு பைசாவுக்கும் துல்லியமாகக் கணக்கும் ரசீதும் இருக்கவேண்டும், ஊதாரித்தனமான செலவுகளுக்கு இஸ்ரேல் அரசின் கஜானாவில் இடமில்லை என்றும் கறாராகச் சொல்லப்படுகிறது. “We deposit money from a fund that does not exist, into a box that we dont know about, in a bank that we never set our foot in” என்கிறார் மொஸாட் தலைவர் எப்ராகிம்.

இந்தப் பணியை ஆவ்னெரோ அவரது குழுவோ ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; மிகவும் ஆபத்தான பணி; அரசின், ராணுவத்தின் உதவியும் கிடைக்காது; எவ்வித பாராட்டோ, பதக்கமோ கிடைக்காது; செத்துப் போனால் எடுத்துப் போட நாதி கிடையாது; பேரும் புகழும் கிடைக்காது; இவர்களின் பணி ரகசியமாகவே வைக்கப்படும்; பெரும் பதவிகளோ, செல்வமோ, செல்வாக்கோ இருக்காது; உயிரைப் பணயம் வைத்து அந்தச் சிறிய குழு மேற்கொள்ளப் போகும் பணி ஒரு ஈ, காக்கைக்குத் தெரியப் போவதில்லை, பதவி உயர்வு இருக்காது, இலக்கில் வெற்றி பெற்றால் ஒரு நன்றி, ஒரு கை குலுக்கல் அதோடு சரி, மறு நாள் அவர்கள் சாதாரணர்கள். இருந்தாலும் இஸ்ரேலுக்கு, தங்கள் தாய்நாட்டுக்கு, செய்ய வேண்டிய கடமையைக் கேள்வி கேட்காமல் உயிரைப் பணையம் வைத்துச் சிரமேற்கொண்டு செய்கிறார்கள் தங்கள் நாட்டுக்காகத் தங்கள் உடல், பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்ட அந்த 5 தேசபக்தர்கள். பதவிக்காகவோ, பணத்திற்காகவோ, அல்லது யாரும் சொல்லிக் கொடுத்தோ வருவதில்லை அவர்களது தேசபக்தி.

தார்மீகக் குழப்பம்

பழிவாங்கும் கடமையினை ஏற்றுக்கொண்ட யூதர்கள் அது தமது ஒவ்வொருவரின் தாய்நாட்டை நிலை நிறுத்திக் கொள்வதின் ஓர் அங்கம் என்பதை மறுக்கவில்லை, ஆனால் ஸ்பீல்பெர்க் என்ற இயக்குனர், பழிவாங்குவதிலும், மரண தண்டனையிலும் எவ்விதப் பயனும் விளையப் போவதில்லல, அமைதியும் கிட்டப் போவதில்லை, பழி வாங்குதல் மேலும் மேலும் அழிவைத்தான் வளர்க்கும், கண்ணுக்குக் கண் என்றால் உலகமே குருடாய் விடும் என்னும் தன் காந்தியவாத சிந்தனைகளைப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மூலம் படம் பார்ப்பவர்களிடம் வெளிப்படுத்துகிறார். தீவிரவாதிகளை அழிக்கக் கிளம்பும் 4 பேர்களிடம் பெருத்த சஞ்சலம் நிலவுவதாகக் காட்சிகளையும் வசனங்களையும் அமைத்துள்ளார். தங்கள் தாய்நாட்டின் கட்டளையை எப்படியாவது செயல்படுத்தவேண்டும் என்பதில் அவர்களுக்கு அசாத்திய உறுதி இருக்கிறது.

ஆனால் தாம் செய்வது சரியான காரியம்தானா? சட்ட விரோதக் கொலையல்லவா? தர்மம்தானா? மனசாட்சிக்கு நியாயமான செயல்தானா? கொல்லப்போகும் அரபுத் தீவீரவாதிகள்தான் நிஜமாகவே அந்த விளையாட்டு வீரர்களின் கொலைக்குக் காரணமானவர்களா? அல்லது இஸ்ரேல் தங்கள் அரசியலுக்குத் தமது சேவையைப் பயன்படுத்திக் கொள்கிறதா? தீவிரவாதிகளின் அருகில் வேறு யாரும் இருந்தால் அவர்களைக் கொல்லுவது தர்மம்தானா என்று அர்ஜுனனுக்கு ஏற்பட்ட குழப்பம்போல் முழுவதும் அவ்னெரின் குழுவினருக்குச் சுய விசாரணைகள் நடைபெறுவதாக இயக்குனர் ஸ்பீல்பெர்க் அமைத்துள்ளார்.

உண்மையில் இந்தக் கடமையை மேற்கொண்ட வீரர்கள் அப்படி எந்தவொரு சஞ்சலத்துக்கும் உள்ளாகவில்லை, மிகத் துணிவாகவும், உறுதியுடனும், தாங்கள் செய்யும் கொலைகளின் நியாயத்தை உணர்ந்தும், தங்கள் தாய்நாட்டின் இருப்புக்காக இதைச் செய்ய வேண்டியதன் அவசியத்தைத் தெரிந்தும்தான் எதிரிகளை அழித்தனர். ஸ்பீல்பெர்க் தேவையில்லாமல் தனது கருத்துக்களை இஸ்ரேல் வீரர்கள்மேல் ஏற்றித் தவறான செய்தியைச் சொல்லியுள்ளார் என்று இஸ்ரேல் தரப்பு ஸ்பீல்பெர்க்மீது தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. அங்குதான் வருகிறது அவர்மேல் வரும் சுயவிமர்சனக் குற்றசாட்டுக்கள். இந்தப் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தேசபக்த யூதர்கள் நிஜமாகவே அவ்வாறு நினைத்திருப்பார்களா? இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். நமக்குத் தெரியாது. ஆனால் அவ்விதக் குழப்பம் ஒவ்வொரு கொலையை, ஒவ்வொரு பழிவாங்கலை நிகழ்த்துமுன் அந்தக் குழுவினருக்கு ஏற்படுவதாகக் காட்டுகிறார் ஸ்பீல்பெர்க். அதுபோன்ற தார்மீகக் குழப்பம் சாத்தியம்தான்.

நிச்சயம் சுயமாய் சிந்திக்கத் தெரிந்த எந்தவொரு யூதருக்கும் அவ்விதமான குழப்பங்கள் ஏற்பட்டிருக்க அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளனதான். ஒவ்வொரு கொலையின் போதும் ஒரே ஒரு யூதரைத் தவிர, தலைவன் உட்படப் பிறருக்கு தர்ம சங்கடங்களும், சுய பரிசோதனைகளும், நியாய அநியாய, தர்க்க விவாதங்களும் நிகழ்கின்றன. அதுபோல் கேள்வி எழுப்பும் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் கொலையும் செய்யப்படுகின்றனர். அதுபோன்ற கொலைகளை இஸ்ரேல் செய்கிறதா எதிரிகள் செய்கிறார்களா என்பதை ஸ்பீல்பெர்க் கூறுவதில்லை. அதைப் பார்வையாளர்களின் தீர்வுக்கு விடுகிறார். பழிவாங்கும் பணியை ஏற்கும் தலைவனுக்கும் அவ்வித ஆத்ம பரிசோதனைகள் நிகழ்கின்றன. இருந்தாலும் அவன் தாய்நாட்டின் கட்டளையை எந்தவொரு சமயத்திலும் மறக்காமல் தன் கடமையில் உண்மையானவனாக இருக்கிறான்.

(இன்னும் வரும்…)

3 Replies to “‘ம்யூனிக்’ முதல் மாலேகாவ் வரை – 1”

  1. இதுபோன்ற படங்களை அறிமுகப்படுத்தும் நல்ல பணி தொடரட்டும் விஸ்வாமித்ரா. இஸ்ரேலின் மனத்திண்மை நம்முடைய அரசுக்கு வருமா என்பதும் நமது ”தமிழ்” இயக்குனர்கள் இது போன்ற படங்களை எடுக்கும் “அறிவு”டையவர்களா என்பதும் சந்தேகமே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *