சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009

‘புத்தகக் கண்காட்சிக்குள் பெய்திடும் மாமழை’ என்று ஹரன்பிரசன்னா எழுதியிருந்ததால் பயந்துபோய் குடை, ஜெர்கின் சகிதம்தான் பெங்களூரிலிருந்து கிளம்பினேன். சென்னையில் இறங்கியதும் மழைக்கான அறிகுறியே இல்லை. ரமணன் என்பவரிடம் புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்கள் காசு கொடுத்து ‘இன்னும் பத்து நாட்களுக்கு கனமழை பொழியும்’ என்று சொல்லச் சொன்னதே மழை திடீரென்று நின்றதற்குக் காரணம் என்று ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது என்று பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்குப் புத்தகக் கண்காட்சி திறந்து பத்து நிமிடங்களுக்குள்ளாகவே போய் சேர்ந்தேன். ஆட்களே இல்லாமல் ஈயாடிக் கொண்டிருந்தது. ஹரன் பிரசன்னாவை அழைக்க வெகுநேரம் முயற்சி செய்தும் இணைப்பே கிடைக்கவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கையில் ‘ஹரன் பிரசன்னா எங்கிருக்கிறீர்கள்?’ என்று கத்தியிருந்தாலே அவருக்குக் கேட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அத்தனை நிசப்தமாக, தூங்கி வழிந்து கொண்டிருந்தது கண்காட்சி. பொதுவாகவே அரங்குக்குள் செல்ஃபோன் இணைப்பு மோசமாக இருந்தது. எழுத்தாளர் சுப்ரமணியன் சுவாமிநாதன் புத்தக அரங்குக்குள் என்னைத் தேடி அனுப்பிய SMS இரவு 12 மணிக்குதான் கிடைத்தது.

கடைசியாக ஹரன்பிரசன்னா தொலைபேசியில் கிடைத்தார்:
“ஹலோ.. சேது சொல்லுங்க.. வந்துட்டீங்களா?…
ஏஏஏஏய்… அந்தப் பெட்டியை அங்க வைக்காதப்பா… ஆங்… ஆங்.. அங்கதான்… எத்தனை புத்தம் இருக்கு?”

“சாரி சேது சொல்லுங்க.. நான் கிழக்கு ஸ்டால்ல இருக்கேன்… ஒரு நிமிஷம் இருங்க… ஏம்பா.. நான்தான் அதை அங்க வைக்க வேண்டாம்னு சொன்னேன்ல.. மத்தப் புத்தகம்லாம் எங்க..? இன்னும் வரலியா?”

இப்படி ஒரு ஐந்து நிமிடம் எனக்கும் அவருக்குமிடையே ‘உரையாடல்’ தொடர்ந்தது. சரி, நேரில் பார்த்துக் கொள்வோம் என்று நினைத்து இணைப்பைத் துண்டித்தேன்.

முதலில் கண்ணில் பட்டது ‘எனி இந்தியன்’ ஸ்டால்தான். உள்ளே நுழைந்து நூல் தடுப்புகள் மேல் சாய்ந்திருந்த புத்தகங்களை, ஜோசியக்கிளி சிரமப்பட்டு ஒரே ஒரு சீட்டை எடுப்பது போல் கலைக்காமல் புரட்டிக் கொண்டிருந்தேன். இரண்டு புத்தகங்களையும் வாங்கினேன். வெளியே வந்து தேவராஜனிடம் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு பேசிவிட்டுத் திரும்பியவுடன், நூலிழையில் ஒட்டிக்கொண்டிருந்த புத்தகங்கள் தடதடவென்று சரிந்தன.

ஒவ்வொரு வரிசையாகப் புகுந்து புகுந்து வெளிவந்தேன். ‘தமிழினி’ வசந்தகுமார் தன்னந்தனியாக ‘தமிழினி’ ஸ்டாலில் அமர்ந்திருந்தார். என்னைப் பற்றி ஏற்கனவே ‘தினமணி கதிர்’ சிவக்குமார் அவரிடம் சொல்லி வைத்திருந்ததால் என்னை எளிதில் அடையாளம் கண்டுகொண்டார். அவருடன் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். நிறைய எழுத்தாளர்களைப் பற்றியும், உலகத் திரைப்படங்களைப் பற்றியும் சொன்னார். நான் வாங்கவிருந்த பெரும்பாலான புத்தகங்களிலிருந்து என்னைக் காப்பாற்றினார்.

அவருக்குப் பயணம் செய்வதில் பெரும் ஆர்வம் இருக்கிறது. தமிழினி வெளியீடாக வரும் பெரும்பாலான புத்தகங்களின் அட்டைகளின் புகைப்படங்கள் அவரே எடுத்தது. வசந்தகுமாருக்கு ஒரு தேர்ந்த விஷுவல் ரசனை இருப்பது புரிந்தது. ‘ஆனால் இப்படிப்பட்ட நேர்த்தியான வடிவமைப்பு பெரும்பாலானோருக்குப் புரிவதில்லை. கிட்டத்தட்ட இதுவரை யாருமே அந்த அட்டைப்படங்களைக் கவனித்ததில்லை’ என்று வருத்தப்பட்டுக்கொண்டார்.

Chennai-Book-fair-1அவரிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் கண்காட்சியில் அலைந்தேன். ஒரு கட்டத்தில் கிழக்கு பதிப்பகமும் கண்ணில் பட்டது. ஹரன் பிரசன்னா, இறுக்கமான கிழக்கு டி-ஷர்ட்டில் தன் Single Pack-ஐக் காண்பித்துக்கொண்டிருப்பார் என்று ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த எனக்குப் பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. வழக்கமான, பேண்ட் ஷர்ட்டிலேயே அருகில் யாருமே இல்லாதபோதும், யாரையோ விரட்டிக் கொண்டிருந்தார்.

அப்புறம்தான் பத்ரி அருகில் இருந்ததே ஹரன் பிரசன்னா அப்படிப் பரபரப்பாக எல்லோரையும் வேலை வாங்கிக்கொண்டிருந்ததன் காரணம் என்று புரிந்தது. எழுத்தாளர் பாரா, பத்ரி இருவரிடமும் அறிமுகப்படுத்தி வைத்தார். என் நண்பர் sishri.org-யின் சுவாமிநாதனும் கிழக்கு ஸ்டாலில் என்னுடன் இணைந்து கொண்டார். ‘பாரா’ பிள்ளையாருக்கு மட்டும்தான் ‘மாவா’ கொடுப்பாரா, எனக்கெல்லாம் தரமாட்டாரா என்று கேட்க நினைத்து கேள்வியை விழுங்கினேன்.

பத்ரியுடன் பேசிக்கொண்டிருந்தபோது குறும்பட இயக்குநர் அருண் வைத்தியநாதனும் சேர்ந்து கொண்டார். அவர் தற்போது இயக்கி முடித்த ‘அச்சமுண்டு, அச்சமுண்டு’ என்ற முழுநீளத் திரைப்படம் பற்றியும், பொதுவான தமிழ்த் திரைப்படச்சூழல் பற்றியும் நிறைய சுவாரசியமான விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். (“ரெட் கேமரால படம் எடுத்தேன்னு சொன்னா, நெறைய பேர் கேமரா சிவப்பா இருக்குமான்னு கேக்கறாங்க!”)

“திரைப்படத்துக்கு இசை யார்?” என்றேன்.
“கார்த்திக்ராஜா.”
“ஓ! கிரேட்!”

பெரும்பாலானோர் ‘கார்த்திக்ராஜா’ என்றதும் ‘ஏன் இந்தக் கொலைவெறி?’ என்று கேட்டிருப்பார்கள் போல. நான் Great என்றதும் நிறைய சந்தோஷப்பட்டார். பத்ரியிடம் “இவருக்கு கார்த்திக்ராஜாவைப் பற்றித் தெரிந்திருக்கிறது. படம் வந்தபின் எல்லோரும் கார்த்திக்ராஜா Great என்று புரிந்து கொள்வீர்கள்” என்றார்.

பத்ரியும் ‘வித்தியாசமான, பல்துறைப்புத்தகங்களைப் படிக்க ஆட்கள் இருக்கிறார்கள், எழதுவதற்குதான் ஆட்கள் இல்லை’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். இருளர்கள், நான் சரவணன், அடியாள் புத்தகங்களை உதாரணமாகச் சொன்னார்.

Chennai-Bookafair-2பத்ரி, அருண் வைத்யநாதன் இருவரிடமும் விடைபெற்று எழுத்தாளர் சுகாவைச் சந்திக்கப் போனேன். தன் வேலையில் பிஸியாக இருக்கும் அவர் என்னைப் பார்ப்பதற்காகவே கண்காட்சிக்கு வந்திருந்தார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. கட்டுரைகளில் இருக்கும் நகைச்சுவை அவருக்கு நேர்ப்பேச்சிலும் இருக்கிறது. அடுத்த இரண்டு மணி நேரத்தை அவருடன் செலவழித்தேன். மீண்டும் தலை முதல் வால் வரை அவரோடு சேர்ந்து புத்தகக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தேன். அவருடன் திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் ‘பாப்’ மனோகரும் வந்திருந்தார்.

சுகாவுடன் நேரம் செலவழித்தது ஒரு இனிய அனுபவம். இசையைக் குறித்தும், இலக்கியம் குறித்தும் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். அவருடனும், மனோகருடனும் சேர்ந்து கேண்டீனுக்குச் சென்றோம். மொத்தமாக ஐந்து கைப்பைகளை வைத்திருந்த என்னால் இன்னொரு கையில் வடையையும் பிடித்துக் கொள்ள முடிந்தது ஒரு வாழ்வியல் அனுபவம். கேண்டீனில் ஒரு மூலையில் அழுக்காக இருந்த ஒரு அலமாரியில் அத்தனை பொருட்களையும் வைத்துவிட்டு வடையைச் சாப்பிட்டு, காபி குடித்து விடை பெற்றோம்.

‘வார்த்தை’யில் வெளிவந்திருந்த ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு எனக்கு ஃபோன் செய்தது முதல் எனக்கு சுகா நண்பராக இருக்கிறார். என்னுடனான சந்திப்புக்குப் பின், முன்பின் தெரியாத யாருக்கும் ஃபோன் செய்து பாராட்டுவதைக் குறித்து மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறேன்.

சனிக்கிழமை மதியம் மீண்டும் என் நண்பர்களுடன் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். கூட்டம் இருந்தது என்று சொன்னாலும், இரண்டு வருடங்களுக்கு முன் நான் பார்த்த கூட்டமில்லை. ஷாமியானாவுக்குக் கீழ் உட்கார்ந்து அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அருகே அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் ‘வார்த்தை’ முதல் இதழில் வந்திருந்த என் ‘இசையில் நனையும் காடு’ கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தார். நண்பர்களிடம் கூப்பிட்டுக் காட்டினேன். அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்திருந்தால் ‘அவனா நீயி?’ என்று சட்டையைப் பிடித்திருக்கலாம். இருந்தாலும் அவர் ரசித்துப் படித்துக் கொண்டிருக்கிறார் என்ற சந்தோஷமான கற்பனையுடன் உள்ளே நுழைந்தேன்.

முதல்நாள் நிறைய இலக்கிய அரங்குகளுக்குள் நுழைந்துவிட்டதால், இலக்கியமல்லாத மற்ற அரங்குகளுக்குள்ளும் நுழைய முடிந்தது. நண்பர்கள் யாருமே பணமாக எடுத்துக்கொண்டு வர மறந்துவிட்டிருந்தோம். இருந்தாலும் க்ரெடிட் கார்ட் நிறைய ஸ்டால்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உயிர்மை வாசலில் எஸ்.ராமகிருஷ்ணனைப் பார்த்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவரைச் சுற்றி நிறையக் கூட்டம் இருந்தது. மனிதர் சிரித்துக்கொண்டேயிருந்தார். ஜெயமோகன் எஸ்.ரா.வைப் பற்றி எழுதிய அங்கதக்கட்டுரை நினைவுக்கு வந்தது. ஜெயமோகன் எழுதியதுபோல் ‘சாருநிவேதிதா’ என்று சொன்னால் இன்னும் அதிகமாகச் சிரிக்கிறாரா என்று பார்க்க வேண்டும் என்ற விபரீத ஆசையைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

எஸ்.ரா.விடம் ஆச்சரியப்படுத்திய விஷயம் அவருடைய அபார ஞாபக சக்தி. நான் எங்கோ எப்போதோ எழுதிய திருந்துதேவன்குடி பற்றிய நான்குவரிக் குறிப்பைக் கூட நினைவில் வைத்திருந்து குறிப்பிட்டார். எஸ்.ரா. ஒரு நல்ல பயணி என்பதை முன்பே அறிந்திருந்தாலும், நேர்ப்பேச்சில் அதை உறுதி செய்து கொண்டேன். சிறு சிறு கிராமங்களும், கோயில்களும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கர்நாடகாவிலும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. தமிழில் பயண இலக்கியத்தின் போதாமையை இவர் போன்ற இயல்பாகவே பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் தீர்த்து வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அவரிடமிருந்து விடை பெற்றேன்.

மொத்தமாக இரண்டு நாட்களிலும் சேர்த்து 25 புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். அடுத்த புத்தகக் கண்காட்சிக்குள் இவற்றையெல்லாம் படித்து முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை!

நான் வாங்கிய புத்தகங்களில் முக்கியமான புத்தகங்கள் சில:

1) விசும்பு – அறிவியல் சிறுகதைகள் – ஜெயமோகன் – எனி இந்தியன் வெளியீடு
ஏற்கனவே பலமுறை படித்த சிறுகதைகள் இவை என்றாலும் தமிழின் முக்கியமான சிறுகதைகள் என்று நான் நினைப்பதால், ஒரு கலெக்ஷனுக்காக வாங்கிக்கொண்டேன். இன்று காலையே மீண்டுமொருமுறை படித்தும் விட்டேன்.

2) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம் – தமிழினி வெளியீடு
நான் இன்னும் படிக்காத தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று.

3) கன்னி – ஜெ.பிரான்சிஸ் கிருபா – தமிழினி வெளியீடு
தமிழினி வசந்தகுமாரின் பலத்த பரிந்துரையைப் பெற்ற நாவல்.

4) குவாண்டம் கணினி – வெங்கட்ரமணன்- தமிழினி வெளியீடு
டோக்யோ வெங்கட் என்றறியப்படும் வெங்கட்ரமணின் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு.

5) கடவுளும், 40 ஹெர்ட்ஸும் – அரவிந்தன் நீலகண்டன்- தமிழினி வெளியீடு
இந்த அறிவியல் கட்டுரைகளை கணினியில் படித்தபோது புரியவில்லை. புத்தகத்தில் படித்தாலாவது புரிகிறதா என்று தெரிந்துகொள்வதற்காக வாங்கினேன்.

6) இன்னும் தொலையாத தனிமை – நா.மகுடேஸ்வரன்- தமிழினி வெளியீடு
கவிதைத் தொகுப்பு

7) அகி – முகுந்த் நாகராஜன் – கவிதைத் தொகுப்பு – ‘வரப்புயர’ வெளியீடு

8. அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு – யூமா.வாசுகி – கவிதைத் தொகுப்பு

9) கருத்த லெப்பை – கீரனூர் ஜாகிர்ராஜா – மருதா பதிப்பகம்
மிகுந்த கவனத்தைப் பெற்றதொரு முக்கியமான குறுநாவல்.

10) அங்கே இப்ப என்ன நேரம்? – அ.முத்துலிங்கம் – கட்டுரைத் தொகுப்பு – தமிழினி
அ.முத்துலிங்கம் உரைநடையின் பெரிய விசிறி நான்.

11) வியத்தலுமே இலமே – அ.முத்துலிங்கம் – காலச்சுவடு
அ.மு. கண்ட முக்கியமான பல நேர்காணல்களின் தொகுப்பு.

12) காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ்.ராமகிருஷ்ணன் – கட்டுரைத் தொகுப்பு – உயிர்மை
எஸ்.ரா.வின் சில முக்கியமான கட்டுரைகள் இப்புத்தகத்தில் இருக்கின்றன.

13) கு.அழகிரிசாமி கடிதங்கள் – உயிர்மை
கி.ரா.வுக்கு கு.அ. எழுதிய கடிதங்கள். சுகாவின் பரிந்துரையின் பேரில் வாங்கினேன்.

14) இலக்கியவட்டம் – இதழ்த்தொகுப்பு

15) விருட்சம் – இதழ்த்தொகுப்பு

16) இருளர்கள் – ஓர் அறிமுகம் – க.குணசேகரன் – கிழக்கு பதிப்பகம்
தமிழில் வந்திருக்கும் மிக முக்கியமான சமூகவியல் புத்தகங்களில் இதுவும் ஒன்று என்று சொல்கிறார்கள்.

17) மாணிக்க வீணை – சுவாமிநாத ஆத்ரேயா – பண்மொழி பதிப்பகம்
சுவாமிநாத ஆத்ரேயன் மணிக்கொடி காலத்து எழுத்தாளர். கு.ப.ரா, சிட்டி, நா.பிச்சமூர்த்தி, தி.ஜா போன்றவர்களின் நெருங்கிய நண்பர். அவருடைய சில முக்கியமான படைப்புகளின் தொகுப்பு இது.

18) சங்கீத யோகம் – கல்கி – வானதி பதிப்பகம்
எழுத்தாளார் கல்கி ‘கர்நாடகம்’ என்ற புனைப்பெயரில் எழுதிய பல இசைவிமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு. இப்புத்தகத்தைப் பரிந்துரைத்த எஸ்.கே-வுக்கு என் நன்றி.

19) இருபதாம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள் – சு.ரா. – அல்லயன்ஸ் வெளியீடு
சில முக்கியமான, அவ்வளவாக அறியப்படாத கர்நாடக இசைக்கலைஞர்களைப் பற்றிய கட்டுரைத்தொகுப்பு.

20) Galaxy of Carnatic Musicians – SVK – அல்லயன்ஸ் வெளியீடு
கர்நாடக இசைக்கலைஞர்களைப் பற்றிய ஆங்கிலக்கட்டுரைகளின் தொகுப்பு.

21) தினமணி இசைமலர்
தமிழின் மிகச்சிறந்த பொக்கிஷங்களுள் ஒன்று தினமணி ஒவ்வொரு வருடமும் வெளியிடும் இசைமலர். இந்த வருடமும் ஒரு சிறந்த படைப்பாக வந்திருக்கிறது. Indian Express Stall-இல் கிடைக்கிறது.

14 Replies to “சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009”

  1. உண்மையில் நவீன இலக்கியப் பெயர்களெல்லாம் கூட தமிழ்ஹிந்துவில் வருவது ஆச்சரியமாக இருக்கிறது 🙂

    ‘கன்னி’ தமிழில் வந்த மிக மிக முக்கியமானதொரு நாவல். ‘அகி’யும் ஒரு நல்ல கவிதைத் தொகுதி. இதுவரை ‘கடவுளும் 40 ஹெர்ட்ஸும்’ மொத்தமாக பதினைந்து பேர் வாங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் 14-வது ஆள் 🙂

    இருளர்கள் வரிசையில் படிக்க வேண்டிய இன்னொரு கிழக்கு பதிப்பக வெளியீடு ‘அடியாள்’.

  2. //இதுவரை ‘கடவுளும் 40 ஹெர்ட்ஸும்’ மொத்தமாக பதினைந்து பேர் வாங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் 14-வது ஆள் :‍)//
    மனது நிம்மதியாச்சா? ஒருத்தனை இப்படி கும்மினாத்தான் மனசு நிறையும் போல. அடிங்க அடிங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன் நான். ஏன்னா நான் ரொம்ப நல்லவன்.

  3. //ஏன்னா நான் ரொம்ப நல்லவன்//

    என்னது நீங்க நல்லவரா? அப்போ உங்க புத்தகத்தை காசு குடுத்து வாங்கின 15 பேரையும் என்னன்னு சொல்லுவீங்க? அதுல நானும் ஒருத்தன் 🙁

  4. There is good humor in the article. அறிவியல், இலக்கியம், சமூகவியல், இசை என எல்லாத் தரப்பு புக்ஸையும் வாங்கியிருக்கிறீர்களே, இதையெல்லாம் படிப்பீர்களா? இல்லை, அலமாரியில் அடுக்கப் போகிறீர்களா? 🙂

    I too suffered bad cellphone connection in the bookfair. Reachability of the venue is also so bad!

    I don’t know why you value Visumbu so high. Sujatha wrote better Sci-fi stories.

  5. ‘சுகா’ என்ற நல்ல எழுத்தாளரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. எஸ்.ரா பற்றி ஜெ.மோ எழுதிய அந்த நகைச்சுவைக் கட்டுரை எங்கு கிடைக்கும்?

  6. அன்புள்ள கோவிந்த்,

    //அறிவியல், இலக்கியம், சமூகவியல், இசை என எல்லாத் தரப்பு புக்ஸையும் வாங்கியிருக்கிறீர்களே, இதையெல்லாம் படிப்பீர்களா? இல்லை, அலமாரியில் அடுக்கப் போகிறீர்களா?//

    நல்ல கேள்வி கோவிந்த் 🙂 படிக்க வேண்டும். அதுதான் அடுத்த புத்தகக் கண்காட்சி வரை டைம் கேட்டிருக்கிறேனே!

    //I don’t know why you value Visumbu so high. Sujatha wrote better Sci-fi stories.//

    இல்லை கோவிந்த். அடிப்படையில் சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகளிலிருந்து ஜெயமோகனின் அறிவியல் சிறுகதைகள் வெகுவாக மாறுபட்டவை. சுஜாதாவின் அ.சி.கதைகள் பெரும்பாலும் எதிர்காலம், வியத்தகு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டவை. அவை நம் மண்ணில் இல்லையென்றாலும் வேறெங்கு வேண்டுமானாலும் நிகழும். இடம் அங்கே ஒரு பொருட்டே இல்லை.

    ஆனால் ஜெயமோகனின் அ.சி.கதைகள் நம் மண் சார்ந்த நம்பிக்கைகளையும் முன்வைப்பவை. ((இதை அவரே புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருக்கிறார்). அவை இங்கே நம்மிடையே மட்டுமே நிகழ முடியும். குறிப்பாக ரமணரைப் போன்ற ஒரு முனிவரை முன்வைத்து அதை அறிவியலுடன் தொடர்புபடுத்துவது, சித்த மருத்துவத்திலிருந்து எயிட்ஸுக்கு மருந்து கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கையை முன்வைப்பது போன்றவை. நம்பிக்கையாளன் சிறுகதையின் பின்புலம் மிகவும் முக்கியமானது.

    அந்த வகையில் ஜெயமோகனின் இந்த அ.சி.கதைகள் முக்கியமானவை. ஆனால் இக்கதைகளின் ஒருகுறையாகப் பட்டது, பெரும்பாலானவை ஒரு அதிர்ச்சியான முடிவைத் தருவது. ஆனால் எந்த ஒரு இலக்கிய வடிவமும் இப்படித்தான் ஆரம்பிக்க முடியும். அந்த வடிவங்கள் மீண்டும் மீண்டும் எழுதப்படும்போதுதான் அவை மேலும் செறிவாகும். அழகியல், இலக்கியத்தன்மை போன்றவை அப்போதுதான் மெருகேறும்.

    கவித்துவமான முடிவைக் கொண்ட ஐசக் அசிமோவின் “What If”, கதையெங்கும் எளிமையும், நகைச்சுவையும் இழையோடும் “My son, the physicist” போன்ற அ.சி.கதைகள் தமிழில் வரவேண்டுமென்றால் அ.சி.கதைகள் தமிழில் தொடர்ந்து முயற்சிசெய்யப்பட வேண்டும். மொழி, இனம் சார்ந்த அரசியலை மட்டுமே முன் வைப்பதிலிருந்து தமிழ் இலக்கியச்சூழல் விடுபட வேண்டும்.

    அந்தவகையில் மூத்த எழுத்தாளர்களான சுஜாதா, ஜெயமோகன் ஆகியோரின் பங்களிப்பு அ.சி.கதைகளில் மிகவும் முக்கியமானது. (ஜெயமோகனை மூத்த எழுத்தாளராக்கியது ஒரு குரூரமான திருப்தியைத் தருகிறது 🙂 ‘மூத்த எழுத்தாளர் என்று சொல்லும்போதே ஓரங்கட்டுகிறார்கள் என்று அர்த்தம்’ என்று எழுதியது அவர்தான்).

  7. //எஸ்.ரா பற்றி ஜெ.மோ எழுதிய அந்த நகைச்சுவைக் கட்டுரை எங்கு கிடைக்கும்?//

    தெரியவில்லை ராஜேஷ். அந்தக் கட்டுரையை தன் வலைப்பக்கத்திலிருந்து எடுத்துவிட்டார் என்று நினனக்கிறேன். எஸ்.ராவைக் கிண்டலடித்தால் கூட ஃபோனில் கூப்பிட்டு செந்தமிழில் திட்ட ஆட்கள் இருக்கிறார்கள் போல!

  8. எஸ்,ரா.கட்டுரை இணைப்பு.

    எஸ்.ராவை கிண்டல்செய்தால் அடிக்க வரவேண்டியவர் ஆர்தர் வில்சன். ஆனால் அவரையே கிண்டல்செய்தபின்பும் ஒரு பிரச்சினையும் இல்லை
    https://jeyamohan.in/?p=155

  9. ஆச்சரியப்படுத்தும் வகையில் நீங்களே எனக்கு இந்தக் கட்டுரைக்கான இணைப்பைத் தந்ததற்கு மிக மிக நன்றி ஜெயமோகன். மிகவும் ரசித்துப் படித்தேன்! ஆர்தர் வில்சனை நீங்கள் பதிந்திருந்த ‘நான் கடவுள்’ புகைப்படங்களில் பார்த்தேன். எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள் 🙂

    அன்புடன்,
    ராஜேஷ்

  10. படு சுவாரஸ்யம். எஸ்ராவைக் கிண்டல் செய்த பதிவு (மீள்)வாசிக்கப்படுவதில் ஜெமொவுக்குத்தான் எத்தனை ஆர்வம்! :))

    அனுஜன்யா

    ஆமாம், ‘சுவாரஸ்யம்’ என்பது ‘சுவாரச்யம்’ என்றே வருகிறது ‘ஹைகோபி’யில். எனக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

  11. அனுஜன்யா,

    Capital “S” (or shift+s) அச்சிட்டால் அது “ஸ்” ஆகும். பின் நீங்கள் “சுவாரஸ்யமாக” தமிழ் இந்து தளத்தில் எழுதலாம்! 🙂

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *