ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

முழுப் பொறுப்பையும் நம் தோள்மீதே சுமத்திக் கொள்ளும்பொது, நாம் மேலும் உயர்ந்தவர்களாவோம், சிறந்தவர்களாவோம். நாம் சாய்ந்துகொள்ள வேறு ஒருவரைத் தேடாமல் இருக்கும்போது, நம் பழியைச் சுமத்த எந்தச் சாத்தானும் இல்லாதபோது, நம் சுமையைச் சுமக்க நமக்கென்று ஒரு தனிப்பட்ட கடவுள் இல்லாதபோது, நாம் மட்டும் நமக்குப் பொறுப்பானவர்கள் என்ற நிலையில் மட்டுமே நாம் உயர்ந்த நிலைக்கு வருவோம், சிறந்தவர்களாவோம். வாழ்க்கை என்பது கடினமானதொரு விஷயம். அதை தைரியமாகக் கடந்து செல். அது எந்தச் சின்னக் கடவுள் மீதும் பொறுப்பைச் சுமத்துவதல்ல. ஏனென்றால் நீயே உன் விதியைச் சமைக்கிறாய்.

சுவாமி விவேகானந்தர்

சென்னையில், பாடி என்ற ஒரு ஊர். எனது பத்தாவது வயதுவரை எங்கள் குடும்பம் அங்கே வசித்து வந்தது. பாடியின் பழைய பெயர் திருவலிதாயம். அங்கே பழைமையானதொரு சிவன் கோவில் இருக்கிறது. இறைவனின் பெயர் திருவல்லீஸ்வரர், இறைவி ஜகதாம்பிகை. அருமையான சிறிய கோவில். திருஞானசம்பந்தர் இந்தப் பகுதிக்கு விஜயம் செய்தபோது அவரால் பாடல்பெற்ற பெருமை உடையது. அதனால் ‘பாடி’ என்று பெயர் பெற்றது என்று எனக்குச் சிறுவயதில் என் பாட்டி சொன்ன ஞாபகம். வேறு ஒரு அறிஞர், “கரிகால் சோழன் பாடிவீடு (army camp) கட்டி அங்குத் தங்கினான். அதனால் அந்தப் பெயர்” என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். வசிஷ்டர், குருவி உருவில் இருந்து சிவனை வழிப்பட்ட தலம் என்றும் ஒரு கதை உண்டு.

guru_jupiterஎது எப்படியோ, இன்று அந்தக் கோவில் இந்தக் காரணங்களுக்காக அல்லாமல் ‘குரு ஸ்தலம்’ என்ற பெயரில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் அங்கு வசித்தபோது, அந்தக் கோவிலுக்கு அப்படி ஒரு சிறப்பு இருந்ததாக எங்களுக்கே தெரியாது. இந்த பிராபல்யம் தொடங்கியதெல்லாம் கடந்த சில வருடங்களாகத்தான். புதிதாக குருவுக்காக ஒரு மண்டபமும் கட்டி விட்டார்கள். பக்கத்தில் இருக்கும் ரயில் நிலயத்தில் ‘குரு ஸ்தலத்திற்குச் செல்ல இங்கே இறங்கவும்’ என்ற போர்டும் மாட்டியாகிவிட்டது. இப்பொழுது பரிஹாரங்கள் செய்ய மக்கள் கூட்டம் படை எடுத்துக் கொண்டிருக்கலாம். நான் அங்குச் சென்று சில வருடங்கள் ஆகிவிட்டன.

சரி, இதில் என்ன பிரச்சனை? பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு, பாடல்பெற்ற சிவன் கோவில், திருஞானசம்பந்தரின் தொடர்பால் வெளி உலகிற்குத் தெரியவர வேண்டிய தலம், ஜோதிடத்தின் மூலம் வேறு சாயம் பெற்றுவிட்டது.

கோவில்கள் வெறும் பரிஹார நிவர்த்தி நிலையங்களாக மட்டுமே பலரால் அணுகப்படுகின்றன. “நான் இதைச் செய்கிறேன். நீ எனக்கு இதைச் செய்” என்று வியாபாரம் மேலோங்கத் தொடங்கி விட்டது. அந்தச் சிவன் கோவிலில் முன்னொரு காலத்தில் குரு வழிபாடு நடந்ததா என்ற ஆராய்ச்சிக்கு நான் செல்லவில்லை. பெரும் தத்துவங்களை உணர்த்தும் சிவன், திருமால் போன்றவர்களை விட, அவர்களுக்குக் கீழே இருக்கும் ஊழியர்களான நவகிரஹங்களுக்குச் செல்வாக்கு அதிகமாகி விட்டது என்பது வருத்தத்திற்குரியது.

dakshinamurthiஒருநாள், மாங்காடு காமாக்ஷி அம்மன் கோவிலுக்குச் சென்றபோது, தக்ஷிணாமூர்த்தி சன்னதி முன் யாரோ ஒருவர் ஒரு ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சகர் திடீரென்று அதட்டலான குரலில் “ஓய்! என்ன மந்திரம் சொல்றீர்? பிரைம் மினிஸ்டர் முன்னாலே நின்னுண்டு MLA-வைக் கும்பிடலாமா? நீங்க சொல்ற மந்திரத்துக்கு உரியவர் அங்கே இருக்கார். அங்கே போய்ச் சொல்லுமையா” என்று நவகிரஹ சன்னதியைக் காண்பித்தார். முதலில் என்னவென்று யாருக்கும் விளங்கவில்லை. மந்திரம் சொன்னவர் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தார். பின்னர்தான் தெரிந்தது, அவர் நவகிரஹத்தில் ஒருவரான குரு பிருஹஸ்பதி ஸ்தோத்திரத்தை தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் சொல்லியிருக்கிறார். அந்த குருவுக்கும், இந்த குருவுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு நம்மை ஜோதிடம் ஆக்கிரமித்துள்ளது.

தென்திசை பார்த்து, கால்மேல் கால் போட்டு, ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தி சிவபெருமானின் ஞான வடிவம். நவகிரஹ குரு என்பவர் வேறு, இவர் வேறு. ஆனால் ‘குரு பெயர்ச்சிப் பலன்’ என்று புத்தகம் போட்டாலும், அட்டைப் படத்தில் தக்ஷிணாமூர்த்தியைச் சித்தரிக்கிறார்கள். மௌனமாக உட்கார்ந்து ஞானதீட்சை அளிக்கும் சிவ மூர்த்தியை, ஜோதிடம் என்ற சிறிய உலகாயத விஷயத்தில் அடக்கி விட்டார்கள். இது தவறு என்று சுட்டிக்காட்ட, விஷயம் தெரிந்த ஜோதிடர்களாவது முன்வர வேண்டாமா?

navagrahasமுற்காலத்தில் சிவன் கோவில்களில் நவகிரஹ சன்னதி என்று தனியாக ஒன்று இருக்கவில்லை. இதெல்லாம் பின்னர் கட்டப்பட்டதுதான் என்று ஒரு கருத்து உண்டு. இது எந்த அளவுக்க்கு உண்மை என்று தெரியவில்லை. நான் ஜோதிடத்தை வீணான விஷயம் என்று சொல்பவனல்ல. இங்கே நான் பேசுவது, ஆன்மீகத்தை மறைக்கும் அளவிற்குப் போய்க் கொண்டிருக்கும் ஜோதிட மயக்கத்தை பற்றித்தான்.

டி.வி.யிலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, ஏதாவது ஒரு ஜோதிடர் “இந்த ராசிக்காரர்கள், இந்த ஊரில் இந்தக் கோவிலில் உள்ள இந்த அம்மனுக்கு நெய் விளக்கை ஏற்றி இந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்” என்று கூறிவிடுகிறார். அவர் சொல்வதைப் பார்த்தால், அந்த கோவிலில் உள்ள ஆட்களுக்கும் இவருக்கும் ஏதாவது உடன்படிக்கையோ என்றுகூடத் தோன்றி விடுகிறது. ரியல் எஸ்ட்டேட்காரருக்கு இந்த கோவில், சாஃப்ட்வேர் எஞ்சினியருக்கு இந்தக் கோவில் என்ற ரேஞ்சுக்கு போய்க் கொண்டிருக்கிறது கதை.

ஜனவரி மாதம் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கோவில்களும் பரிஹார மந்திரங்களும் என்கிறார்கள். இந்த விவகாரங்கள் எல்லாம் நம் முன்னோர்களுக்குத் தெரியாமல் போய் விட்டது! பாவம். இல்லை என்றால் ராமனும், பாண்டவர்களும் ‘லோ லோ’ என்று காட்டில் அலைந்திருப்பார்களா? வாழ்க்கையில் சிலவற்றை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்று ‘தப்புக் கணக்கு’ போட்டு விட்டார்கள்..

நவரத்தின ராசிக்கற்கள் வியாபாரம் ஒரு பக்கம். பரமஹம்ச யோகானந்தர் என்ற மகான், தன்னுடைய ஒரு யோகியின் சுயசரிதம் என்ற நூலில் ரத்தினக் கற்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, இந்த கற்களின் அதிர்வு (vibration) நமக்குப் பலனளிக்க வேண்டுமானால் குறைந்தது ஒரு காரட் எடை இருக்க வேண்டும் என்கிறார். நம் மக்கள் பல பேருக்கு இதெல்லாம் இன்னும் தெரிய வரவில்லை. நகைக்கடை வியாபாரிகளுக்குத் தெரிய வந்தாலும் ஆகப்போவது என்ன? ஒரு காரட் வாங்கு என்றால் எவன் வாங்குவான்? சரி. அவன் வாங்குகிற அளவுக்கு, அதைக் கடுகளவு சிறிய அளவில் மோதிரத்தில் பதித்து ‘வீடு கட்ட, திருமணம் நடக்க’ என்று, விதவிதமாகச் சொல்லி விற்க வேண்டியதுதான்.

திருவண்ணாமலையில் கிரிவலம். கடந்த பத்து வருடங்களாகத்தான் சூடு பிடித்தது. அதற்கு முன்னர் இவ்வளவு பிரபலம் இல்லை. பக்தி இருந்தது. அமைதி இருந்தது. பரபரப்பு இல்லை. வியாபாரமும் இல்லை. இந்தக் கிழமையில் கிரிவலம் செய்தால் இப்படி ஆகலாம் என்று இப்போது ஒரு பட்டியல் வேறு. கேட்டால் இந்த விவரம் இந்தப் புராணத்தில் இருக்கு என்பார்கள். நமக்கேன் வம்பு? நண்பர் ஒருவர் சொன்னார் “பௌர்ணமி என்றால் திருவண்ணாமலை போயிடுவேன் சார். அப்படித்தான் பாருங்க. ரெண்டு நாளுக்கு முன்னால் போனேன். கிரிவலம் ஆரம்பிக்க கொஞ்சம் லேட்டாயிடுச்சு. பௌர்ணமி டயம் வேற முடியப் போகுது. இன்னும் பாதி தூரம் இருக்கு. ஒரே ஓட்டமா ஒடி மூச்சிரைக்க ஒருவழியா கிரி வலத்தை முடித்தோம்.”

அடக் கடவுளே! எப்படி, கிரிவலம் என்பது வெறும் சடங்காகி விட்டது பாருங்கள். ‘ஒரு நிறைமாத கர்ப்பிணியான மகாராணி நடப்பது போல கிரிவலம் செய்ய வேண்டும்” என்றார் ரமணமகரிஷி.

வாழ்க்கையில் சில தருணங்களில் ‘என்ன செய்தால் இந்த துன்பத்திலிருந்து விடுபடலாம். எத்தைத் தின்னால் பித்தம் தீரும்’ என்பது போன்ற நிலை வரும். அப்பொழுது ஜோதிட பரிஹாரங்களில் ஆறுதல் தேடுவது தவறாகாது. நான் மேலே சுட்டிக் காட்டியவை அவையே ஆன்மீகம் என்று நினைத்து உழல்பவர்களுக்கு. குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன்று ஆன்மீகம் என்றாலே முக்கால்வாசி ஜோதிடம்தான் என்ற நிலை.

நாயன்மார்களோ, ஆழ்வார்களோ, ஆதிசங்கரரோ, ஸ்ரீ ராமகிருஷ்ணரோ நாம் படும் துன்பங்களுக்கு ஜோதிட பரிஹாரமா சொல்லிக் கொண்டிருந்தார்கள்? வாழ்வென்று வந்துவிட்டால் இன்ப துன்பங்கள் நிச்சயம்; இரண்டிலிருந்தும் விடுபட வழியைப் பார். துன்பம் வரும்போது இறைவனைச் சரணடை” என்றுதானே போதித்தார்கள்.

திருஞானசம்பந்தர், ஒரு படி மேலே போய், தன்னுடைய கோளறு பதிகத்தில் “சிவபெருமான் என் இதயத்தில் புகுந்து விட்டதால் ஒன்பது கிரஹங்களும் நல்லவையே. அவை அடியவர்க்கு நல்லதையே செய்யும்” என்று பாடி வைத்தார்!

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே”

“எனக்கு மேலும் மேலும் துன்பத்தைக் கொடு. அப்பொழுதுதான் உன்னை எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பேன்” என்று கண்ணனிடம் வேண்டினாளாம் குந்தி. அந்த அளவுக்கு நாம் இல்லையென்றாலும் கொஞ்சமாவது பக்திக்காக பக்தி செலுத்தப் பழகிக்கொள்வோமே.

15 Replies to “ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?”

  1. நல்ல கட்டுரை. ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. ஜோதிஷம் தேவையில்லை என்கிறீர்களா அல்லது ஆன்மீகம் மட்டுமே போதும் என்கிறீர்களா என்பது புரியவில்லை. மக்கள் எல்லோரும் விவேகாநந்தர் அல்லவே!

    ஆனால் நீங்கள் சொல்வது போல் ஜோதிடத்தின் பெயரால் நடக்கும் கூத்துக்களைப் பார்க்கும் போது மனம் வருத்தமாகத் தான் இருக்கிறது. தம்மை நாடி வரும் மக்களுக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டும் என்ற நல்லெண்ணம் போய் இன்று அவர்களை ஏமாற்றிக் காசு பறிக்க வேண்டும் என்ற எண்ணமே பல ஜோதிடர்கள் இருக்கிறது. இது மிகவும் வருத்ததற்குரியது. கண்டிக்கத்தக்கது.

    தன்னையே ஒருவன் நம்பினால் ஜோதிஷமும் தேவையில்லை, பரிகாரங்களும் தேவையில்லை என்பதையே உங்களது கட்டுரையின் கருத்தாகக் காண்கிறேன். அதே சமயம் ஜோதிஷம் என்பது சில வான இயல் சூத்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்ற உண்மையையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த ஆண்டு, இந்தத் தேதியில், இன்ன நேரத்தில் கிரகணம் வரும் என்றெல்லாம் ஒரு தனி மனிதனால் கணித்துக் கூற முடிகிறது, பல ஆண்டுகளுக்கு முன்னால் முடிந்திருக்கிறது, இன்றும் பஞ்சாங்கம் கணித்துக் கூற முடிகிறது என்றால் அதன் பெயர் என்ன, அந்த ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியுமா என்ன?

    அதே சமயம் ஆன்மீகத்தைன் பெயரால் சமுதாயத்தைச் சீர்குலைக்கும் போலி ஜோதிடர்களை இனம் கண்டு ஒதுக்க வேண்டும். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லாத காரியம். ஒருவன் ஏமாந்த பிறகு தானே போலி என்று தெரிய வருகிறது. 1- 1/2 — 3.00 ராகு கால நேரத்தில் எல்லாம் கோயிலைத் திறக்கச் செய்வதும் பரிகாரங்கள் செய்வதும் ஆகம சாஸ்திரங்களுக்கு முரணானது. இதெல்லாம் உண்மையான பக்திக்கு வளம் சேர்க்காது என்பதே உண்மை. நல்ல கட்டுரைக்கு பாராட்டுக்கள்.

  2. //நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. ஜோதிஷம் தேவையில்லை என்கிறீர்களா அல்லது ஆன்மீகம் மட்டுமே போதும் என்கிறீர்களா என்பது புரியவில்லை.//

    வேதம் என்னும் புருஷனுக்கு ஆறு அங்கங்கள் (உறுப்புகள்). அவைகளில் ஜ்யோதிஷம் (ஜோதிடம்) என்பது நேத்ரம் (கண்) போன்றது. ஒரு மனிதனின் அனைத்து உறுப்புகளிலும் கண்கள் எவ்வாறு முக்கியமானவைகளோ அவ்வாறே அனைத்து சாஸ்திரங்களிலும் ஜ்யோதிஷ சாஸ்திரம் மிக முக்யமானதாகும். ஸூரியன் சந்திரன் போன்ற கிரஹங்களின் ஸஞ்சாரத்தையும், அமைப்பையும், நக்ஷத்ரங்களின் விபரங்களையும் தெரிவிக்கும் ஜ்யோதிஷ சாஸ்திரம், வானவெளியில் உலாவரும் கிரஹங்களுக்கும், பூமியில் வாழும் உயிர்னங்களுக்கும் உள்ள தொடர்பை விவரித்து அவற்றின் நன்மை தீமைகளையும் கூறுகின்றது.

    நமது முன்னோர்கள், கிரஹங்களின் போக்கை தெரிந்துகொள்வதற்கும் விரதம்-பண்டிகை-செய்யவேண்டிய நாட்களையும் – காலத்தையும் – அறிந்து கொள்வதற்கும் மட்டுமே ஜோதிடத்தை உபயோகித்து வந்தார்கள். அவசியத் தேவை ஏற்படும்போது மட்டும், எதிர்கால பலன்களை ஜோதிடம் மூலம் பரிசீலித்துத் தெரிந்து கொண்டார்கள். ஆனால், இன்றைய சூழ்நிலையில் ஜோதிடம் என்றாலே எதிர்கால பலன்களைத் தெரிந்து கொள்வதற்காக மட்டும்தான் என்று பலர் எண்ணுகிறார்கள். செய்யவேண்டிய அனுஷ்டானங்களின் (கடமைகளின்) காலங்களை (பஞ்சாங்கங்கள் மூலம்) தெரிந்துகொள்ளவே நாம் ஜோதிடத்தை அதிகமாக உபயோகிக்க வேண்டுமே தவிர, அடிக்கடி நமது எதிர்காலத்தை ஆராய ஜோதிடத்தை உபயோகிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் ஜோதிஷ சாஸ்திரங்களில் கூறப்படும் பலன்கள் நிஸ்சயமற்றவை. ஒருவரின் நல்ல-தீய-செயல்களால் பலன்கள் எதிர்காலத்தில் மாறலாம். ஆகவேதான் பலன்களைக்கூறும் வராஹ மிஹிரர்கூட, பலன்களைத்தான் நாங்கள் கூறுகிறோமே தவிர, பலன்களில் அதிகம்-குறைவு என்னும் பாகுபாட்டை ஸ்ருஷ்டி செய்த ப்ருஹ்மதேவனால் மட்டுமே கூறமுடியும் என்கிறார். மேலும் ஸ்தாஸானுக்ரஹா: க்ரஹா: என்பதாக எப்போதும் தனது கடமைகளைச் சரிவரச் செய்துவரும் நபர்களுக்கு அனைத்து கிரஹங்களும் ஒருபோதும் தீங்கு செய்யாது எப்போதும் நன்மையையே செய்யும் என்றும் கூறுகிறார். பொதுவாக ஜாதகம் (பிறப்பு) என்பது மிகவும் ரஹஸ்யமாக பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. ஜாதகம், பிறந்த நக்ஷத்திரம்-பிறந்த லக்னம், ராசி, (சர்மா) பெயர், ஆகியவற்றை மற்றவரிடம் காரணிமின்றி தெரிவிக்காமல் ரஹஸ்யமாக பாதுகாக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆகவேதான் நமது முன்னோர்கள் அடிக்கடி ஜாதகங்களை ஆராய்வதில்லை. கடமையை மட்டும் செய்து வந்தார்கள். அதனாலேயே அவர்களுக்கு எப்போதும் நன்மை கிட்டியது.

    தற்காலத்தில் பலர் அடிக்கடி தாங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து பலன்களைக் கேட்கிறார்கள். குறிப்பாக குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, வருடப்பிறப்பு போன்ற நாட்களில் எனது நக்ஷத்திரத்திற்கு எப்படி இருக்கும்? நல்லதா? கெட்டதா? என்று கேட்கிறார்கள். இதை பயன்படுத்தி பத்திரிக்கை, டி.வி. போன்ற மீடியாக்களும் தன் பங்கிற்கு விளம்பரங்கள் செய்கின்றன.

    சிலர் ஜோதிடர் சொல்லும் பரிஹாரத்தை செய்கிறார்கள். பலர் மறுபடியும் வேறு ஜாதகரிடம் சென்று அதே ஜாதகத்தைக் காண்பித்து மறுபடியும் பலனைக் கேட்கின்றார்கள். மேலும் பலர் ஜோதிடர்கள் கூறும் பரிஹாரங்களை செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் பரிஹாரத்துக்குரிய கிரஹங்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக எண்ணிக்கொண்டு அதிகமான துன்பத்தைத்தர முயற்சிக்கின்றன.

    ஜாதகத்தை பரிசீலிப்பதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று கிரஹங்களின் ஸஞ்சாரத்தை ஆராய்ந்து சுப அசுபத்தன்மையை கண்டுபிடித்தல். இரண்டாவது கிரஹங்களின் தோஷங்களுக்கான பரிஹாரங்கள். இவற்றில் முதலில் கூறப்பட்ட பகுதியை அனைவரும் செய்யலாம். கம்ப்யூட்டர்கூட கிரஹ ஸஞ்சாரத்தைக் கணக்கிட்டு (தோஷமுள்ள) கிரஹங்களை கண்டுபிடித்து விடுகிறது. ஆனால் இரண்டாவதாக உள்ள பகுதியை அனைவராலும் செய்ய இயலாது. ஏனென்றால் கிரஹ தோஷத்திற்கான பரிஹாரங்கள் அனைத்தும் வேத,சாஸ்திர, ஆகம-புராணங்களில் அமைந்துள்ளன. ஜோதிடம்-வேதம் ஆகிய இரண்டையும் நன்றாக அறிந்தவர்களால் மட்டுமே தோஷத்திற்கும் பரிஹாரத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி பரிஹாரங்களைக் கூற முடியும்.

    ஆகவே அடிக்கடி நக்ஷத்ரங்களைச் சொல்லி பலனைக் கேட்கக்கூடாது. ஜாதகத்தை மற்றவரிடம் காரனமின்றி காண்பிக்கவும் கூடாது. திருமணப்பொருத்தம் போன்ற தேவையான நேரங்களில் வேதம்-சாஸ்திரம் கற்று ஆச்சாரத்துடன் இருப்பவர்களிடம் மட்டும் ஜாதகத்தைக் காண்பிக்கலாம். இந்த மஹான்கள் ஜாதகத்தைக் கூடியவரை ஆராய்ந்து, தனது வாக்கால் பலனைக் கூறி, தேவையென்றால் மட்டும் சக்திக்குத்தக்கவாறு பரிஹாரமும் கூறுவார்கள். அந்தப் பரிஹாரமும் உடனேயே பலனைத்தரும். ஆகவே, கூடியவரை பலனை எதிர்பாராமல் நமது கடமைகளை ஸரிவரச்செய்து தெய்வ ஆரதனைகளை செய்து கொண்டிருக்கலாம். அடிக்கடி ஜாதகம் பார்ப்பதையும் தகுதியற்றவர்களிடம் நமது நக்ஷத்ரத்தைச் சொல்லியும், ஜாதகத்தைக் காண்பித்தும் பலனைக் கேட்பதையும் தவிர்க்க முயற்சிக்கலாம். ஸ்ரீ பகவான் ரக்ஷிக்கட்டும்.

    நன்னிலம் V ராஜகோபால கனபாடிகள்

  3. கொண்டைக்கடலை, மஞ்சள் துணி முதலானவை
    வியாழ பகவானுக்கு உகந்தவையாகலாம்.
    அவற்றுக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும் கடுகளவும் தொடர்பில்லை.

    தேவ்

  4. The article of Shri Raja and the Advice/explanations of Shri Rajagopal Ganapadigal are really praiseworthy. They have together brought out the miserable state of affairs that is prevalent nowadays. Jyothisham has become an object of amusement for the magazines, TV channels etc. People who are facing difficulties in their life are seeking solace from the advice provided by these media and so called astrologers. Human beings have to face happiness and sorrow in their life. I do believe that planets have an impact on the personality, behaviour and life style of a person. But I could not understand how performing a particular pooja or going to a particular temple can change the destiny of a person and free him from his/her sufferings. The poojas, pariharams and prayers can only help a man to face a problem with the belief that he has fulfilled his duties and the Almighty will be helping him in overcoming the problem. This belief alone will take him through his bad times.
    Even though i have given my opinion above, I feel I am not a learned person understand and comment on such supernatural activity.

  5. ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராமா…

    நான் இங்கே சொன்னது ஜோதிஷத்துக்கு எதிராக எதுவும் இல்லை. பரிகாரம் என்ற பெயரில் ஏமாற்றும் சில ஜோதிடர்களைப் பற்றித் தான் சொன்னேன். அதற்கு வைதிக ஸ்ரீ ஜயராம நன்னிலம் ராஜ கோபால கனபாடிகள் அளித்த‌ மிக நீண்ட விளக்கத்திற்கு மிக்க நன்றி.

    மற்றுமொரு விஷயம் குரு தக்ஷிணாமூர்த்திக்கும் ஆலயங்களில் உள்ள பிருஹஸ்பதிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஆனால் குருஸ்தலமாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆலயத்தில் குருவாக வீற்றிருப்பவர் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி தான். அவருக்குத் தான் அங்கே சிறப்பு வழிபாடு. அதுவும் குருப் பெயர்ச்சியின் போது எல்லா சிறப்பு ஆராதனைகளும் அவருக்குத் தான் செய்யப்படுகின்றனவேயன்றி நவக்கிரஹ பிருஹஸ்பதிக்கு அல்ல.

    ஆக‌வே அட்டையிலோ, கால‌ண்டிரிலோ த‌க்ஷிணாமூர்த்தியின் ப‌ட‌த்தைப் போடுவ‌தும், அவ‌ருக்கு வ‌ழிபாடு செய்வ‌தும் த‌வ‌றாகாது, த‌வ‌றுதான் என்றாலும். ஏனென்றால் ஆல‌ங்குடியான‌ குருஸ்த‌ல‌த்தில் சர்வ லோக‌ குருவாக அவ‌ர் தானே வீற்றிருக்கிறார்? அப்புற‌ம் ம‌க்க‌ள் என்ன‌ செய்வார்க‌ள்? அதனைப் பின்பற்றித் தான் எல்லா ஆல‌ய‌ங்க‌ளிலும் குரு என்றால் ந‌வ‌க்கிர‌ஹ‌ பிருஹ‌ஸ்ப‌தியை விட்டுவிட்டு த‌க்ஷிணாமூர்த்திக்கே ம‌ஞ்ச‌ள் துணி, கொண்ட‌க்க‌ட‌லை எல்லாம் வைத்து வ‌ழிப‌டுகிறார்க‌ள். ஆக இதில் தவறு எங்கே வருகிறது என்று பாருங்கள். மூலமே அப்படி இருந்தால் வழி அப்படித் தான் இருக்கும்.

    ப‌ல்வ‌லி என்றால் ப‌ல் டாக்ட‌ரிட‌ம் செல்ல‌ வேண்டும். வ‌யிற்று வ‌லி என்றால் அத‌ற்கான‌ சிற‌ப்பு ம‌ருத்துவ‌ரிட‌ம் தான் செல்ல‌ வேண்டும். அதை விடுத்து பொது ம‌ருத்துவ‌ரிட‌ம் சென்றால் குண‌மாக‌லாம். ஆகாம‌லும் போக‌லாம். அது நோயாளியின் விதியைப் பொறுத்த‌து. அதுபோல‌த் தான் வ‌ழிபாடும்.

    இறுதியாக‌ ஒன்று. எந்த‌ப் ப‌ரிகார‌ங்க‌ள் செய்தாலும் குருவின் திருவ‌ருள் இல்லை என்றால் அதில் எந்த‌ப் ப‌ய‌னும் இல்லை.பரிகாரங்களினால் எந்த நற் ப‌லனும் ஏற்ப‌டாது. குருவருளின்றித் திருவருள் இல்லை. இதை மக்கள் உணர்ந்தால் சரி!

    ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம!

  6. //ஆனால் குருஸ்தலமாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆலயத்தில் குருவாக வீற்றிருப்பவர் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி தான். அவருக்குத் தான் அங்கே சிறப்பு வழிபாடு. அதுவும் குருப் பெயர்ச்சியின் போது எல்லா சிறப்பு ஆராதனைகளும் அவருக்குத் தான் செய்யப்படுகின்றனவேயன்றி நவக்கிரஹ பிருஹஸ்பதிக்கு அல்ல.//

    ஆலங்குடி எப்பொழுது “நவகிரஹ” ஸ்தலமானது என்று ஒரு ஆய்வு செய்ய வேண்டும். ஆலங்குடியில் தக்ஷிணாமூர்த்திக்கு குருப் பெயர்ச்சியின் போது பூஜை நடப்பதால், மற்ற இடங்களிலும் நவகிரஹ குருவுக்கு பதிலாக தக்ஷிணாமூர்த்திக்குப் பரிஹாரம் செய்யும் வழக்கம் இருப்பதில் தவறு என்ன என்று நீங்கள் கேட்க்கிறீர்கள். எனக்கு என்னவோ, ஆலங்குடியே இந்தத் தவறான பழக்கத்திற்க்கு உட்பட்டு விட்டதோ என்ற கேள்வி எழுகிறது.

    திரு. ராஜகோபால கனபாடிகள் இங்கு குறிப்பிட்டது போல ஜோதிடம் ஒரு சாஸ்த்திரமாக (science) அணுகப்படுவது தான் சரி. அதை விட்டுவிட்டு அதுவே எல்லாம் என்பது தவறு என்பதைத்தான் என் கட்டுரையில் நான் கூற முயற்சித்திருக்கிறேன்.

    //ப‌ல்வ‌லி என்றால் ப‌ல் டாக்ட‌ரிட‌ம் செல்ல‌ வேண்டும். வ‌யிற்று வ‌லி என்றால் அத‌ற்கான‌ சிற‌ப்பு ம‌ருத்துவ‌ரிட‌ம் தான் செல்ல‌ வேண்டும். அதை விடுத்து பொது ம‌ருத்துவ‌ரிட‌ம் சென்றால் குண‌மாக‌லாம். ஆகாம‌லும் போக‌லாம். //

    இதுதான் தவறு. ஹிந்து மதம் கடவுள் ஒருவர்தான் என்றுதான் கூறுகிறது. உருவங்கள்தான் அவரவர் விருப்பப்படி மாறுகிறது. இதில் இந்த டாக்டர் உதாரணம் பொருந்தாது. கடவுள் என்பவர் நம் தனிப்பட்ட குறைகளைத் தீர்க்கும் மருத்துவர் இல்லை (சில நேரங்களில் அதுவுமாகத் தோன்றினாலும்). கடவுள் என்பது நாம் அடைய வேண்டிய ஒன்று. அதை மறந்து விட்டு “இதற்கு இந்த மருத்துவர்” என்கிற ரீதியிலேயே அணுகுவதுதான் ஆன்மீகத்தை வியாபாரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்பது என் கருத்து.

  7. // எனக்கு என்னவோ, ஆலங்குடியே இந்தத் தவறான பழக்கத்திற்க்கு உட்பட்டு விட்டதோ என்ற கேள்வி எழுகிறது.//

    இதைத் தான் நான் — மூலமே அப்படி இருந்தால் வழி அப்படித் தான் இருக்கும் — என்று சொல்லியிருக்கிறேன்.

    // ஹிந்து மதம் கடவுள் ஒருவர்தான் என்றுதான் கூறுகிறது//

    ஆம். கடவுள் ஒருவர் தான். இல்லையென்று சொல்லவில்லையே. பரப்ரம்ம சொரூபமே பல வடிவங்கள் எடுத்து நிற்கிறது. ஆனால் வழிபாடு என்று வரும்போது அது பலபிரிவுகளுக்கு உட்பட்டு விடுகிறது. வேத கால ருத்ர, அக்னி வழிபாடாயினும் சரி. பரிபாடல் கூறும் மால். முருகன், சிவன் வழிபாடாயினும் சரி. சிலம்பு கூறும் இந்திரன், சாத்தன், கொற்றவை வழிபாடாயினும் சரி, சங்கரர் ஸ்தாபித்த ஷண்மதமாயினும் சரி எல்லாம் பல பிரிவுகளைக் கொண்டவையாகத் தானே விளங்குகின்றன. கிராம தேவதைகள், குல தெய்வங்கள், இஷ்ட தெய்வங்கள் என வழிபாடு பல பிரிவுகளைக் கொண்டதாகத் தான் விளங்குகிறது. அதைத் தவறு என்று எவ்வாறு கூற இயலும். இது நம்பிக்கை சார்ந்த விஷயம் அல்லவா? இது எப்படி ஆன்மீக வியாபாரத்திற்கு வழி வகுக்கிறது என்பது புரியவில்லை. மக்களின் மூடத்தனம், போலிச் சாமியார்களிடம் சரண்புகுதல் போன்றவை தான் காரணமேயன்றி ஜோதிடமோ, சாஸ்திரமோ, வழிபாட்டு முறைகளோ அல்ல.

    // கடவுள் என்பவர் நம் தனிப்பட்ட குறைகளைத் தீர்க்கும் மருத்துவர் இல்லை (சில நேரங்களில் அதுவுமாகத் தோன்றினாலும்). கடவுள் என்பது நாம் அடைய வேண்டிய ஒன்று. அதை மறந்து விட்டு “இதற்கு இந்த மருத்துவர்” என்கிற ரீதியிலேயே அணுகுவதுதான் ஆன்மீகத்தை வியாபாரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்பது என் கருத்து.//

    கடவுள் மருத்துவர் என்று நான் சொல்ல வரவில்லை. நான் சொல்ல வந்ததே வேறு! ஜோதிட சாஸ்திரத்தில் இது இதற்கு இந்தத் தேவதைகள் காரகர்கள். இந்த இந்த கிரகங்களை, இந்த இந்தத் தெய்வங்களை வழிபட வேண்டும். ப்ரீதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த இந்தப் பிரச்சனைகள் நீங்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படியே பல ஆலயங்களில் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. உதாரணமாக உடல் பிணி என்றால் வைத்தீஸ்வரன் ஆலயம் சென்று வழிபடுகிறார்கள். சர்ப்ப தோஷம் என்றால் காளஹஸ்திக்கோ, நாகேஸ்வரத்துக்கோ, கீழ்ப்பெரும்பள்ளத்திற்கோ சென்று வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியத்திற்கு, பித்ரு தோஷம் நீங்க ராமேஸ்வரம் செல்கிறார்கள். அது போன்று கிரக் ப்ரீதிகளுக்காக சூரியனார் கோவிலோ, கஞ்சனூரோ, திருநள்ளாறோ, வெண்காடோ ஏதோ சில நவக்கிரகத் தலங்களுக்குச் செல்கிறார்கள். அதைத் தான் நான் குறிப்பிட்டுச் சொன்னேன். இதையெல்லாம் தவறு என்று சொல்ல இயலாதே! கடவுள் மருத்துவர் அல்ல என்றாலும் இந்த இந்த தெய்வங்களை (உங்கள் பார்வையில் தெய்வ ரூபங்களை) உபாசித்தால் இன்னின்ன பலன் ஏற்படும் என்பது சாஸ்திரம் கூறும் செய்தி. அது தவறாகாது.

    இத்தகைய தொன்றுதொட்ட புராண கால நம் பாரம்பரிய வழிபாட்டிற்கும் ஆன்மீக வியாபாரத்திற்கும் சம்பந்தமில்லை. அது போலி ஜோதிடர்கள், ஆலயக் குருக்கள்கள், புரோகிதர்கள் போன்றவரால் செய்யப்படும் புரட்டுத்தனம். ஆக, கண்டிக்கப்பட வேண்டியவர்கள் அத்தகைய போலிகள் தானே தவிர தொன்று தொட்ட நமது வழிபாட்டு முறைகள் அல்ல.

    // கடவுள் என்பது நாம் அடைய வேண்டிய ஒன்று//

    அடைபவன் யார், அடையப்படுவது எது, ஏன் அடைய வேண்டும் என்றெல்லாம் ஆராயப் புகுந்தால் அது மற்றுமொரு கட்டுரையாகி விடும் என்ற அச்சத்தால் இத்துடன் அமைகிறேன்.

    நன்றி! வணக்கம்

  8. நன்னிலம் ராஜ கோபால கனபாடிகள் அளித்த‌ மேதாவியாசத்திற்கு மிக்க வந்தனம்.

  9. சூப்பர்.

    மிகவும் அருமையான கட்டுரை

  10. நான் சென்றவாரம் திருப்புகலூருக்குச் சென்றிருந்தேன். அது தேவாரம் பாடிய மூவராலும் பாடப் பெற்ற திருத்தலம். முருகநாயனார் என்ற நாயனார் திருமடம் அங்கிருந்தது. அங்கு திருஞானசம்பந்தரும் அப்பர் பெருமானும் பலநாட்கள் தங்கி அகமகிழ்ந்தனர். சுந்தரமூர்த்தி நாயனார் உறங்கும்போது தலைக்கு உயரம் வேண்டும் என்று அங்கிருந்த செங்கல் ஒன்றை வைத்துப் படுத்தார். அவர்க்குப் பொருள் அருல வேண்டும் எனக் கருதிய இறைவன் அந்தச் செங்கல்லையே பொன்கட்டி யாக்கினான். இது பெரிய புராணவரலாறு. இது இறைவன் சுந்தரமூர்த்தி நாயனாரின் தொண்டுக்கு அளித்த பரிசு.
    இந்தநிகழ்ச்சியைத் திருப்புகலூர் திருக்கோவிலில் உள்ள சிலர் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதைக் கண்டேன். வீடுகட்டுபவர்கள் நான்கு செங்கல்களைக் கொண்டுவந்து இங்கு பூசைசெய்து அச்செங்கல்களை வீட்டின் நான்கு மூலைகளில் வைத்துக் கட்டினால், குபேரனைப் போலச் செல்வம் பெருகும் என்றும் வாஸ்து நிறையும் என்றும் என்னென்னவோ சொல்லி மயக்குகின்றனர்.

    திருத்தலத்தின் பெருமையையும் இறைவன் பெருமையையும் பயன்பெற்ற அடியார் பெருமியும் பேசுவதற்குப் பதிலாக, மனிதனின் பேராசையைத் தூண்டுவதாக அவர்களுடைய செய்கை அமைந்திருந்தது. இந்த இழிசெயல் திருப்புகலூர் போன்ற சிவத்திருத்தலங்களில்தான் நடைபெறுகின்றது. அருகிலுள்ள திருக்கண்ணபுரம் பளிச்சென்று கண்ணுக்கும் மனத்துக்கும் மங்கலமாக அமிந்துள்ளது. நவ்கிரகங்களைப் போற்றாத பெருமாள் திருக்கோவில்களில் இது போன்ற அவலங்கள் நடப்பதில்லை என்பதை அறியவேண்டும்.
    இந்தத் திருட்தலை யார் செய்வது?

  11. அருமையான கட்டுரை! மிகவும் தாமதமாக படிக்க கிடைத்தது! விளக்கங்கள் அருமை! மக்களை அறியாமையிலிருந்து விடுபடச் செய்யாமல் மென்மேலும் அதிலேயே உழலச் செய்யும் எதையுமே இந்து மதம் ஏற்பதில்லை! மக்களை அறியாமையில் வைத்து அரசியல் வாதிகள் மட்டுமல்ல எல்லா துறையில் இருப்பவர்களுமே வாழ்ந்து வருகிறார்கள்! இதை தவிர்க்க தமிழ் ஹிந்துவில் ஜோதிடத்தைப் பற்றி கட்டுரைகள் வந்தால் நல்லது!

  12. நல்ல கட்டுரை. கனபாடிகள் விளக்கத்திற்கு நன்றி பல. ஜோதிடம் முறையாக பயின்று அதை கூறுபவர் குறைவே. வியாபாரம் அதிகம். குழப்பம் அதிகம். இந்து சமூகம் இதை விளக்கி போராட வேண்டும். இதனால் குழப்பம் கேடுகள் பல.

    புற்று நோய் உள்ளவன் சிகிச்சை இன்றி 1 வருடம் இருப்பன் என்று மருத்துவர் கூறுகிறார். ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் 10 வருடமும் மருந்து உண்டால் 5 வருடமும் என்றால் அவர் அவர் என்ன செய்ய வேண்டுமோ அதை யோசித்து செய்ய வேண்டும். அதே போல் ஒன்றும் செய்யாமல் இருந்தால் இப்படி நம் வாழ்க்கையில் நாம் நம்மை நம்பி நம் முயற்சியை நம்பினால் இப்படி என்றும் உள்ளது. ஆனால் விதியை மதியால் வெல்லலாம் என்றும் அறிவோம். விதி என்பது ஒன்றும் செய்யாமலோ அல்லது நம் முயற்சியை மட்டும் நம்புவோருக்கும் அமைந்தது. மதியை கடைபிடித்து இறைவனை வழி படுவோருக்கு அந்த விதியை வெல்லும் சந்தர்ப்பம் இறைவன் அனுக்கிரகத்தால் விளையலாம்.
    இறைவன் விதியை மாற்ற‌ வல்லவன். நவக்கிரங்களும் தேவர்களே. ஆனால் எல்லாம் வல்ல இறைவன் நவக்கிரகங்களுக்கும் மேலானவன். அவன் அனுக்கிரகத்தால் எல்லாம் முடியும் என்ற வழிபாட்டுடன் இருக்க வேண்டும்

    வியாபாரக்காரர்களிடம் பலியாக வேண்டாம்.
    நம்மையே நம்பி நம் முயற்சியை நம்பி ஆண்டவனை வணங்கவேண்டும். மக்கள் கவலைகள் அதிகமாகவும் பலர் பேராசையாலும் அடிமை பட்டவர்களாக இருக்கிறார்கள்.
    எல்லாம் இறைவனுக்கே ஒப்படைத்து காரியம் செய்து அவன் கொடுப்பதை ஏதாயினும் பிரசாதமாக ஏற்பதே நன்று
    எல்லாம் மங்களம்

  13. இந்த வெப்சைட் ஹிந்து மதம் பற்றிய பல நல்ல கருத்துக்களை வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சிக்குறியது. இந்த உலகம் படைக்கப்பட்டதன் காரனம் என்ன?எதற்காக கடவுள் உயிர்களை படைத்து அவற்றிக்கு பல பிறவிகளையும் கொடுத்து இருக்கிறார்.இதை பற்றி புராணங்கள் கூறும் கருத்து என்ன?

  14. இந்த உலகம் தோன்றியதற்கு காரணமாக இதிகாசங்கள் கூறும் கருத்துக்கள் என்ன?

  15. ஜோதிடமா மயக்கமா ஆன்மீகமா? என்ற ராஜா அவர்களின் கேள்வி நியாயமானதுதான். ஜகத் குருவான தட்சினாமூர்த்திக்கும் தேவர்களின் குருவான பிருகஸ்பதிக்கும்(வியாழன்) வித்யாசம் தெரியாத ஜோதிடர்கள் மக்களை த்தவராக வழி நடத்துகிறார்களே. என்ற ஆதங்கம் சரியானதே.
    இங்கே தென்முகக்கடவுளாம் ஆலமர்செல்வர் குருவாம் வியாழ பகவானின் தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜ்யோதிடம் வேதாங்கம் நமது சமயத்தின் முக்கிய அம்சம். ஜ்யோதிட அறிவு பயன் பாடு இன்னும் நமக்கு உள்ளது. அது மட்டுமின்றி இன்றைய காலக்கட்டத்தில் ஜ்யோதிடர்கள் நம் சமய நம்பிக்கைகளைப்பாதுகாப்பதில் முக்கிய பணியாற்றுகிறார்கள் என்பது என்னுடைய கணிப்பாகும். நவகிரகங்களுக்கு இறைவனை விட முக்கியதத்துவம் அள்ளிப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை என்றாலும் நோய் நீங்க பிரச்சினை தீர கோயிலுக்கு போ பூஜை செய் விரதம் இரு என்று சொல்பவர்கள் இவர்களே. பல சிவத்தலங்களை மீண்டும் பிரபலப்படுத்துபவர்கள் இவர்களே. இவர்களால் மக்களின் நம்பிக்கை ஆலய வழிபாட்டில் அதிகமாகிறது. இதில் குறைபாடு ஜ்யோதிடர்களில் சிலருக்கு சமய நூல்கள் தத்துவம், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவை தெரியாமல் இருப்பதே. ஜ்யோதிடத்தையும் சமயக்கல்வியையும் ஆர்வலர்களுக்கு சமய நிறுவனங்கள் அமைப்புகள் அளித்தால் இந்நிலை மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *