புவனேஸ்வரி நவரத்ன மணிமாலை

2000ம் ஆண்டு நவராத்ரியில் அன்னை புவனேஸ்வரியின்மேல் நான் ஒரு நவரத்ன மணிமாலை இயற்ற வேண்டும் என்று இணையப் பிதாமகர் டாக்டர் ஜெயபாரதி விரும்பினார். நவரத்ன மணிமாலை என்பது (காப்பு, பலச்ருதி நீங்கலான) ஒன்பது பாடல்களில் விருத்தம், வெண்பா, கட்டளைக் கலித்துறை போன்ற யாப்பினங்கள் கொண்டதாக இயற்றப்பட வேண்டும். ஒவ்வொரு பாடலிலும் ஒரு மணியின்–இரத்தினத்தின்–பெயரையும் சொல்ல வேண்டும். பாரதி இயற்றியுள்ள பாரதமாதா நவரத்ன மணிமாலையும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

டாக்டர் ஜேபி, வழக்கமான யாப்பு விதிகளைக் காட்டிலும் சில அதிகமான, சிறப்பான விதிகளையும் சேர்த்தார். ஐந்தாவது பாடல் தொடங்கி ஒன்பதாவது பாடல் வரையில் ஒவ்வொரு பாடலிலும் பயிலவேண்டிய தொனி, அதன் தன்மை, அதில் பதிக்கப்பட வேண்டிய பீஜாட்சரங்கள், எந்த அட்சரத்துக்குப் பிறகு எந்த அட்சரம் வரவேண்டும் என்றெல்லாம் விரிவாக எடுத்துச் சொன்னார். முக்கியமான விஷயம் என்னவென்றால், மேற்போக்காகப் படிக்கும்போது ‘இதில் பீஜாட்சரம் பதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வெளிப்படையாகத் தெரியக்கூடாது என்பதும்; அவை பாடலில் பயிலும் ஏதேனும் ஒருசொல்லின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பதும் ஆகும்.

வெண்பா, விருத்தம், கட்டளைக் கலி்த்துறை போன்ற யாப்பியல் வடிவங்கள்; ஒவ்வொரு பாடலிலும் ஒரு ரத்தினத்தின் பெயரைச் சொல்லவேண்டிய அவசியம். அதற்குமேல் பாடலின் தொனி, அதில் பதிக்கப்படவேண்டிய அட்சரங்கள், அட்சரங்களின் வரிசைமுறை என்று எல்லாவற்றையும் மனத்தில் வாங்கிக் கொண்டு இச்சிறு நூலை இயற்றும்படியாக என்னைச் செலுத்திய பேரருளின் எண்ணம் என்வழியாக வெளிப்பட்டது என்பது என் பாக்கியம். முதல் ஏழுபாடல்களிலும் சொன்னது போக, எட்டாவது பாடலில் ஒன்பது மணிகளின் பெயரும் வருமாறும் அமைத்திருக்கிறேன்.

பின்னால் வருபவை டாக்டர் ஜேபி எனக்கு அமைத்துக் கொடுத்த வழிமுறைகள்:

0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o

வாலையை ஐந்தில் வழுத்த முயலுங்கள்.

எட்டில் துர்க்கையைக் குறிப்பிடலாம். புவனையே துர்க்கையாக வருவதாக வைத்துப்பாடலாம்.

ஒன்பதில் நாமகள். ஆனால் அது, உங்களுக்கு அவள் கொடுத்திருக்கும் ஆற்றலை வியந்து நன்றி சொல்வதாக அமையவேண்டும். அதில் ‘வம்‘ என்னும் அட்சரம் வந்தால் சிறப்பு. ‘வத வத‘ என்னும் நான்கு எழுத்துக்களையும் எங்காவது வரச்செய்யுங்கள். ஆனால் அது அறமாகப் போய்விடக்கூடாது. ‘வம்’முக்குப் பின்னால் அவை வரவேண்டும். நாமகளை ‘வாக்வாதினி’ என்று அழைத்துப்பாடுங்கள். இப்பெயர் ‘வத வத’வுக்குப் பின்னால் வந்தால் சிறப்பு.

பத்து ஒரு பலசுருதியாக அமையலாம். பதிகத்தில் திருக்கடைக்காப்பு பதினொன்றாக அமையும். சம்பந்தரும் சுந்தரரும் பாடியிருக்கின்ற வழி.

ஹ்ரீம் என்னும் பீஜம், ஒன்றில் அல்லது பத்தில் அல்லது இரண்டிலுமே வரலாம். மஹாகணபதியே ஸ்ரீவித்யாவின் ஆரம்பத்தில் வருவார். வல்லபையை இணைத்துப்பாடலாம்.

நீங்கள் கேட்டதால் இவ்வளவும் தோன்றியது. உங்கள் மூலம் அவள் பேசுகிறாள்:-)

அன்புடன்

ஜெயபாரதி

0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o

இத்தனையையும் செய்திருக்கிறேனா என்பதைப் பாருங்கள். குறிப்பாக ஒன்பது. அமைப்பதற்குச் சவாலாக இருந்த பாடல் என்ற வகையில் ஒன்பதாம் பாடல் எனக்கு முக்கியமானது. இந்த நூலில் இத்தனைக் கட்டுகளும் அட்சரங்களும் பதிந்திருக்கின்றன என்ற உண்மையை இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

மணிகளின் பெயர்களை நீல வண்ணத்திலும், ஜேபி அவர்கள் சொன்ன நாம, பீஜ அட்சரங்களை சிவப்பு வண்ணத்திலும் மாற்றிக் காட்டியிருக்கிறேன்.bhuvaneshwari

புவனேஸ்வரி நவரத்ன மணி மாலை

காப்பு

தவனுடையோர் சிந்தையிலே தங்கிக் கிடக்கும்
கவுரியின்தன் மூத்த களிறே – புவனையின்மேல்
சொல்லால் நவமணிநான் சூட்டத் துணைபுரிவாய்
வல்லபை தன்னோடு வந்து.

-:)oOo(:-

உடலுற்றெழு வுயிராய்உட னுணர்வுற்றெழு கவியாய்
உலையுற்றெழு கொதியாயலை உததிப்பெரு நிதியாய்
உதரத்துதி மகவாயது உருவுற்றெழு ஜகமாய்
உரசிச்சர வெடியாய்க்கரு முகில்வெட்டிடு மிடியாய்
அடிதொட்டிடு கனலாய்முடி யதுவெட்டிடு மினலாய்
அருவித்திரள் புனலாய்வரு கதிர்கொட்டிடு தணலாய்
அடலுற்றெழு பொறியாயுடல் அழிவுற்றிடு நெறியாய்
அதிர்வுற்றிடு கழலாய்விதி யதுசெற்றிடு தழலாய்
வடவைக்கனல் தனையும்சுடு வயிரப்படை துணையாய்
மகிடத்தலை எரியச்சிகை புகையப்புகு மரியாய்
வலியாய்ப்பெறு நிலையாயொலி ஹ்ரீமென்றிடும் அலையாய்
மழையாகிய திரளாய்ப்பொழி மனநாடிய அருளாய்
புடவித்திரு வடிவாய்ப்பட புனிதத்தொரு மடியாய்
பரையாய்த்திரி புரையாய்ப்பெரு புவனைப்பெயர் மறையாய்
படர்பொற்கொடி பதந்தொட்டிட குறைகெட்டினி யிதமே
படிதொட்டிடும் வினைகெட்டிடும் திடமாயிரு மனனே. (1)

மனமே பேயே பெரும்பாழே
மாயக் கனவின் பிறப்பிடமே
வாழ்வும் மயர்வும் ஒன்றாக
மயங்கிக் கலக்கு மிருளொளியே
கனக்கும் சிந்தை கற்பனையும்
கவிதைப் பரவச அதிர்வுகளும்
கவலை பொய்கள் பெருமோகம்
கலந்து கிடக்கும் உள்வெளியே
உனக்காய் நினைத்தால் பறக்கின்றாய்
உயரே போகையில் சரிகின்றாய்
ஒவ்வொரு நாளும் ஓர்வடிவம்.
உனக்கும் எனக்கும் என்னபகை?
சினத்தைப் புகைக்கும் செயலாளின்
செக்கர் பவளத் திதழாளின்
தெரிசனம் உள்ளே வைப்பாயேல்
தெளிவேன் உன்னைக் கும்பிடுவேன். (2)

கும்பிடுவேன் நெஞ்சம் குளிர்வேன் குறைசூழ்ந்து
வெம்பும் மிடியழிந்து மேனிமிர்வேன் – அம்புயமேல்
பம்புபொற் பாதசர பச்சைத் திருமேனி
அம்பிகைதாள் உச்சி அணிந்து. (3)

துணிந்தவர் நெஞ்சிற் சுடர்விடும் சூலி தொடர்ந்தவள்தாள்
பணிந்தவர் உள்ளம் பயின்றிடும் நீலி யவள்வடிவை
அணிந்தா ரறிவினில் ஆழ்ந்தொரு ஞானத் தொளியுமிழ்வாள்
சிணுங்கிடும் தண்டை யனுங்கிடும் தோகைப் பசுமயிலே. (4)

மயிலாகி என்னுள் வளர்ந்தாடி வந்து
வடிவாகி நின்ற உமையே
வளமான சொல்லில் நடமாடி யென்றும்
மகிழ்வாகும் என்றன் மகளே
துயிலூடு வந்து தொடுவானில் சின்ன
சுடராகும் வாலை யமுதே
சுகமான வண்ணக் கவியாவி ளைந்து
துடியாட்ட மாடு மொளியே
பயில்கின்ற வேளை கிளியாக வந்து
பரிகாச மென்ன பெண்ணே
பண்ணோடு பாதம் கிண்ணென்று துள்ள
பறந்தோடி வாவென் மயிலே
அயலேயும் நின்று அருகாக வந்து
அழகாக நோக்கு மம்மே
அடிவாடி யென்றன் அபிராம வல்லி
அமுதூறு முத்து மொழியே.(5)

மொழியான சிந்தை அறிவாலயம்
முடிவான எண்ணம் அன்பாலயம்
வழியான கண்கள் விழிவாகனம்
மனமீதில் அம்மை ஆவாகனம்
பொழிகின்ற சொல்லில் பதிவாகிடும்
புகழேறு கின்ற கோமேதகம்
மெழுகென்ற போதும் என்றன்மனம்
மினலாகி வெட்டும் அம்மைதினம். (6)

அம்மா சுகவாணி ஆழியில் வந்தவளே
இம்மா மலையுதித்த எம்மிதய – சிம்மத்தில்
பொற்பதும ராகம்சேர் பூணிற் பொலிபவளே
சிற்பரையே சிந்தை தெளி. (7)

தெளித்த கோலம் வானெல்லாம்
சிதறிக் கிடக்கும் செம்பவளம்
தீப்பட் டெரியும் மாணிக்கம்
செக்கச் சிவந்த கெம்புக்கல்
வளிமண் டலமே வயிரக்கல்
மஞ்சள் பச்சை நீலத்தில்
மாயா ஜால வைடூர்யம்
வானக் கடலில் நன்முத்து
வெளிதட விடுமொளி புவனையின்கண்
விரிந்த நீலம் அவளுடலே
மெய்யாய் துர்க்கை கெளரியுமாய்
விமலை நிமலை கமலையுமாய்
அளித்துக் காக்கும் அன்னையுமாய்
அன்பிற் கனிந்த தேவியுமாய்
அடியாற் கெல்லாம் இன்னுயிராய்
ஆகும் செம்மை மாமணியே. (8)

செம்மாமணி என்பொன்மணி திவ்யத்திருக் கோலம்
தெளிவானவள் அருளானவள் அறிவானவெண் கமலச்
சிம்மாசனி மயில்வாகனி மனவாலயப் படிவம்
செய்தெய்வத வதனத்திரு சிறுபுன்னகை மலர
எம்மாதவர் எக்காரணர் எவ்வேதமும் நாடும்
எழிற்பொற்பதம் தருமற்புதம் தனிலொர்பொடி யாலே
எனையாள்கிற வாக்வாதினி யிடுபிச்சையி னாலே
எளியேன்மனம் கவிதைக்கடல் தனையுற்றொளி சேரும்
அம்மாஉனை கண்பொங்கிட கரம்கும்பிட நாளும்
அருவீணையின் இசையின்கதி அமைவுற்றிட நெஞ்சம்
அதிகாலையில் நனிமாலையில் உனைநாடிடச் செய்வாய்
அகிலங்களை வசமாக்கிட அருகுற்றருள் பெய்வாய்
எம்மைச்சுடு மறியாமையின் இருள்முற்றிலும் போக்கி
இதயத்தினை கமலத்தொரு வெள்ளைமல ராக
ஏற்றந்தரு மாற்றம்பெற எமையாக்குதல் கடனே!
இறைவிப்பெரு வாணிக்கழல் துயர்போக்கிடு முடனே! (9)

நூற்பயன்

கேட்ட பொருளெதுவும் கேட்காத நற்பயனும்
வாட்டம் தொலைத்த மனநிலையும் – கூட்டும்
புவனைக்கு நாம்பூட்டும் பூந்தமிழ்ப் பாட்டாம்
நவரத்ன மாலை நலம்.

6 Replies to “புவனேஸ்வரி நவரத்ன மணிமாலை”

  1. அற்புதம். அருமை. அதிசயம். இறையருள் பெற்றவர்களாலேயே இது போன்ற மந்திர சக்தி, சித்தி வாய்ந்த பாடல்களை இயற்ற இயலும். ஹரிகிருஷ்ணனுக்கு அது பூரணமாய் வாய்த்திருக்கிறது. படிக்கும் போதே இறையுணர்வோடு ஒன்றச் செய்யும் வல்லமையுடையதாய், இனிய, ஸ்வரங்களோடு ஒன்றுவதாய் இருக்கிறது. வாழ்த்துகள். தொடர்ந்து இது போன்றனவற்றை எழுதுங்கள். தகுதியுள்ளவர்கள் படித்து பலனடையட்டும். ஓம் சக்தி!

  2. கேட்காத நற்பயனாய் இக்கட்டுரை மற்றும் கவிதையைக் கண்டேன். களிப்புற்றேன். இறைப்பாடல் இன்பத் தேன் போல வந்து பாய்கிறது. இறை உணர்வைத் தூண்டும் அற்புதமான பாடல் வரிகள். யாத்தவருக்கு மிக்க நன்றி.

  3. மிக அருமையான பாடல். ஸ்ரீ புவனேஸ்வரி பற்றிய விவரங்களை வலையில் தேடிக் கொண்டிருந்தபோது அம்பிகையின் அருளால் இந்த அருமையான பாடல் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. இதன் ஆசிரியரைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.

  4. புவனேஸ்வரி தத்வ ப்ரகாசம் புத்தகம் கிடைக்குமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *