காந்தி நிகேதன்

Gandhi Niketan Ashramகாந்தி வாழுமிடம். (காந்திநிகேதன் ஆஸ்ரமம்)

1980ம் ஆண்டு. மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி – திருநெல்வேலி. முதலாமாண்டு மாணவர்கள் வகுப்பிற்குள் நுழைகின்றனர். எல்லா மாணவர்களும் ஒரு கையால் “குட்மார்னிங் சார்” என கல்லூரி முதல்வருக்கு முகமன் கூறிக் செல்கின்றனர். ஒரே ஒரு மாணவர் மட்டும் நின்று “வணக்கம் அய்யா” என இருகரம் கூப்பி வணங்குகிறார். அவரை கல்லூரி முதல்வர் ஆரத்தழுவி “எந்தப் பள்ளியில் படித்தாய்?” எனக் கேட்கிறார். “காந்திநிகேதன் மேல்நிலைப் பள்ளி, கல்லுப்பட்டி” எனக் கூறுகிறான் அந்த மாணவன். தற்போது பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இயக்குனராக பணிபுரிகிறார் அந்த மாணவர். வயதில் மூத்தவர்களிடம் யாராவது “வணக்கம் அய்யா” அல்லது வணக்கம் என இரண்டு கைகளையும் மார்புக்கு குறுக்கே வைத்து முகமன் கூறினால் அவர் காந்திநிகேதனத்திலிருந்து வந்திருப்பவராக இருக்க வாய்ப்புகள் மிக அதிகம். வேஷ்டியை விரும்பி அணிபவராகவும், நமது பாரம்பரியம், மற்றும் இந்துப்பண்டிகைகள் குறித்து நல்ல அபிப்ராயத்துடன் ஒருவர் பேசினால் அவரும் காந்திநிகேதனத்து மாணவராய் இருக்க வாய்ப்புண்டு.

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் உள்ள “தே.கல்லுப்பட்டி”யில் இருக்கும் காந்திநிகேதன் ஆச்ரமத்தைப் பற்றிய குறிப்புதான் இது.

G.Venkatachalapathy1940ம் ஆண்டு காந்திய சிந்தனைகளே உலகின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு என்ற எண்ணத்தில் திரு. கோ. வெங்கடாசலபதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது இந்த காந்திநிகேதன் ஆஸ்ரமம்.

அந்த காலகட்டத்தில் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமாக செயல்பட்டு பல சுதந்திரப் போராட்ட தியாகிகளை உருவாக்கிய நிறுவனம் காந்தி நிகேதன். அதன் பின்னர் காந்தியடிகளின் ஆதாரக் கல்வித்திட்டத்தை அடிப்படையாக வைத்து கல்லுப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும் இடமாக சுதந்திரம் அடைந்த பின்பு மாற்றப்பட்டது. அதன் பின்னர் காலத்தின் தேவைக்கேற்ப காந்திநிகேதன் ஆரம்பப்பள்ளியாக மாறி, மேனிலைப்பள்ளியாக வளர்ந்து பின்னர் காந்திநிகேதன் உயர் நிலைப்பள்ளியாக இன்று கிட்டத்தட்ட மூவாயிரம் கிராமப்புற குழந்தைகளுக்கு காந்தியக்கல்வியை போதிக்கும் இடமாக வளர்ந்துள்ளது.

கல்வி போதிக்கும் முறைகள்..

மாணவர்கள் காலையில் வந்ததும் தங்கள் வகுப்பறையை சுற்றியுள்ள இடங்களை தாங்களே சுத்தம் செய்ய வேண்டும். ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. நான்காம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இது பொருந்தும். எந்த வேலையும், இதெல்லாம் கேவலமான பணி என நாம் நினைக்கக் கூடாது என்பதும் சுற்றுப்புறத்தை தூய்மையாய் வைத்துக்கொள்ள இளம் வயதிலிருந்து கற்பிப்பதே இதன் நோக்கம்.

samadhiஇயற்கைப் பாதுகாப்பு..

காந்திநிகேதனில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஆயிரம் மரங்களாவது பள்ளியிலும் அதனைச்சுற்றியுள்ள இடங்களிலும், பக்கத்து கிராமங்களிலும் வைக்கப்பட்டு சீரிய முறையில் பராமரிக்கப்படுகிறது. மரம் நடுவதிலிருந்து அது தானாகவே வளரும் காலகட்டம் வரை மாணவர்களே அதனைப் பராமரிக்கின்றனர்.

சீருடை

ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஆண்களுக்கு வெள்ளை சட்டையும், நீலநிற கால்சட்டையும், பெண்களுக்கு வெள்ளை சட்டை, பச்சைப்பாவாடையும் சீருடை. பதினொன்றாம் வகுப்பிலிருந்து ஆண்களுக்கு வெள்ளை சட்டையும், வெள்ளை வேஷ்டியும், பெண்களுக்கு பச்சைக்கலர் பாவடை தாவணியும், வெள்ளைக்கலர் சட்டையும் சீருடையாக இருக்கிறது. நடிகர்களின் படங்களை சட்டையில் பதித்துக்கொண்டு வருவது போன்ற ஒழுங்கீனங்களுக்கு இடமில்லை. திங்கள் மற்றும் வெள்ளியில் கதராடை மட்டுமே அணிய வேண்டும். ஏழைக்குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இரண்டு சீருடைகள் வீதம் பள்ளியிலிருந்து நன்கொடைகள் தருவோர்களிடமிருந்து பெறப்பட்டு வழங்கப்படுகிறது.

எங்கள் பள்ளிக்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்காகவும் கூட்டுப்பிரார்த்தனைகள் நடத்தப்படுவதுண்டு. பொள்ளாச்சி மகாலிங்கம் அய்யா அவர்கள், காஞ்சிப்பெரியவர் அவர்கள், பாபா ஆம்தே , மற்றும் பல மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டினர் வந்து எங்கள் பள்ளி இயங்கும் அழகைக்கண்டு வியந்திருக்கிறார்கள்.

ஆசிரிய மாணவர் உறவு.

ஆசிரியர்களை அய்யா எனவும், ஆசிரியைகளை அக்கா எனவும் அழைக்க வேண்டும் எங்கள் பள்ளியில்.
ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பாராமை, சர்வ மதங்களும் சம்மதம் என்ற எண்ணத்தை படிக்கும் குழந்தைகளின் மனதில் பதிய வைத்தல், கல்வியை விட ஒழுக்கமே முக்கியம் (ஒழுக்கமில்லாத கல்வி பாவம்) என்ற அடிப்படையில் கல்வி கற்பிக்கப்படுகிறது காந்தி நிகேதனத்தில்.

கிராமப்புற குழந்தைகளுக்கு தரமான கல்வி.

1940 ம் ஆண்டு முதல் இன்றுவரை கல்லுப்பட்டியை சுற்றியுள்ள கிட்டத்தட்ட நாற்பது கிராமங்களுக்கு மேல் உள்ள குழந்தைகள் படிக்கும் பள்ளியாக காந்திநிகேதன் இருக்கிறது. கல்வி என்ற பெயரில் கொள்ளைக்கூட்டம் இருக்கும் இன்றைய நாளில் வெறும் நூறு ரூபாய் கல்விக்கட்டணத்தில் பனிரெண்டாம் வகுப்பை முடித்து மாணவர்கள் வெளியேறுகின்றனர். கிட்டத்தட்ட அறுபத்தைந்து ஆண்டுகளாக சிறந்த தலைமுறைகளை , தாய் நாட்டின்மீது பற்றுக் கொண்ட ஒரு தலைமுறையை, சேவை மனப்பான்மையை கொண்ட தலைமுறையை, சாதி மத வேறுபாடின்றி வாழ கற்றுத்தரும் நிறுவனமாக காந்திநிகேதன் இன்றுவரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. காந்திய சிந்தனைகளை இன்றும் கடைபிடித்து வாழும் ஒரு நிறுவனம் இருக்கிறது எனில் அது காந்திநிகேதன் ஆச்ரமமாகத்தான் இருக்க முடியும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் உயர் திரு. அப்துல் கலாம் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்தது குறித்தான த ஹிந்துவின் செய்தி இது.

எங்கள் பள்ளியின் வரைபடம் விகிமேப்பியாவில்

எங்கள் ஆச்ரமம் தயாரித்த புகையில்லா அடுப்பு

ஆசிரமத்தின் செயல்பாடுகள் பற்றிய வீடியோ படத்தை இங்கே காணலாம்.

நான் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தேழாம் ஆண்டுமுதல் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு வரைபடித்தேன், முதல் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை. ஆனால் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக எனக்கும் பள்ளிக்குமான தொடர்பு அறுந்துபோக வில்லை .. இன்னும் பள்ளியிக்குள் நுழைந்த உடன் அந்த மாணவனின் மனது வந்து விடுகிறது. எல்லோரையும் அய்யா அக்கா என்றே இன்றும் அழைக்கிறேன், படிக்கும்போது இருந்த அதே பரவசத்துடன்.

பள்ளியால் நானும், என்னால் பள்ளியும் பெருமையுறுவதாக.

6 Replies to “காந்தி நிகேதன்”

  1. மிக்க மகிழ்ச்சி. கட்டுரையாளருக்கு பிரத்யேகமான நன்றி. இந்த அரிய முயற்சி, எங்கும் பரவுக!

    இந்த‌த் த‌ள‌த்தில் இதுபோன்ற‌ வெற்றிச் செய்திக‌ள், மேலும் வெளியிட‌ப்ப‌ட‌வேண்டுமென்று வேண்டுகின்றேன்.

    ரமணன்‌

  2. நல்ல கட்டுரை. மனதை பால்ய கால நினைவுகளுக்கு அழைத்துச் சென்று விட்டது. ஊர் ஊராக மாறிச் சென்றதால் இது போன்ற பள்ளிகளில் படிக்க இயலாமல் போய் விட்டதே என்ற ஏக்கமும் தலை தூக்குகிறது. அருமையான புகைப்படங்கள். அழகான மொழி நடை. ’தான் தாம் எல்லாம், தமக்கே எல்லாம் தெரியும்’ என்ற ’அறிவுஜீவிகள்’ நிரம்பியிருக்கும் இந்தக் காலத்திலும் பள்ளியையும் அதன் ஆசிரியப் பெருமக்களையும் மதிக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள் என்பது பெருமையைத் தருகிறது. வெற்றிச் செல்வன் உங்கள் ஆசிரியர்களின் ஆசிகள் என்றும் உங்களைக் காக்கும்! நல்ல கட்டுரைக்கு நன்றி!வாழ்த்துகள்!

  3. திரியும் கலியுகம் நீங்கி எஙகும் கிருத யுகம் மேவுக என்றார் பாரதி. காந்தி நிகேதன் போன்ற பள்ளிகள் எல்லா மாவட்டங்களிலும் இருந்திருந்தால் நினைக்கவே மகிழ்ச்சியாய் உள்ளது ஆனால் என்ன செய்வது கனவு காணும் உரிமை மட்டும்தான் எனக்குள்ளது.

  4. வெற்றி செல்வன் அவர்களே

    மிக எளிமையான ஆனால் அழுத்தமான கட்டுரை. கல்வி வியாபாரமாகி விட்ட சூழலில் இப்படியும் ஒரு எளிமையான பள்ளி சூழல் கவனத்துடன் இயங்கி வருவது ஆறுதல் அளிக்கும் செய்தி. பள்ளியைப் பற்றிய விபரங்களை அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள். இந்தப் பள்ளியில் படிக்கப் பேறு செய்திருக்கிறீர்கள் ஐயா. குற்றாலம் போகும் வழியில் இந்த ஊரைக் கடந்து பல முறை சென்றிருக்கிறேன், மதுரையில் உள்ள கல்லுப்பட்டி காந்தி ஆசிரமத்து கடையில் பனை பொருட்கள் வாங்கியிருக்கிறேன் ஆனால் இந்தப் பசுமையான பள்ளி பற்றி இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன். கல்லுப் பட்டி என்றால் கரடு முரடான மழை மறைவு பிரதேசம் என்ற எண்ணத்தைப் போக்கி விட்டீர்கள். நன்றி

    அன்புடன்
    ச.திருமலை

  5. அடியேனும் இப்பள்ளியில் படித்தேன் என்பதை பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *