குரலிசையில் பெரிய புராணம்

நால்வர்பெரிய புராணம் முழுவதையும் குரலிசையில் பதிவு செய்யும் பணி துவங்கியுள்ளது.

தேவாரம் மின்தளத்தில் பன்னிரு திருமுறைப் பாடல் ஒவ்வொன்றுக்கும் இசை வடிவம் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் வாழும் தமிழர் 18,246 பாடல்களை இசையாகவும் கேட்டுப் பயனுற வேண்டும்.

எட்டாம் திருமுறை திருவாசகம் முழுவதையும் (658 பாடல்கள்) குரலிசையாக தேவாரம் மின்னம்பல தளத்தில் கேட்கலாம்.

பதினொன்றாம் திருமுறையில் உள்ள 1,385 பாடல்களில் 392 பாடல்களைக் குரலிசையாக தேவாரம் மின்னம்பல தளத்தில் கேட்கலாம்.

ஏனைய பாடல்களுக்குக் குரலிசை வடிவம் சேர்க்கும் முயற்சியில் பன்னிரண்டாம் திருமுறையின் 4,274 பாடல்களுக்கும் குரலிசை அமைக்கத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் 12ஆம் திருமுறை முழுமையும் குரலிசையாக இதுவரை பதிவாகவில்லை.

ஏற்கனவே பன்னிரு திருமுறைப் பாடல்களில் பெரும் பகுதியை இசைப்பேரறிஞர் தருமபுரம் சுவாமிநாதன் குரலிசையாகப் பதிவுசெய்த காலங்களில் அவருடன் முழுமையாக ஒத்துழைத்த பெருந்தகையாளர், பொற்றாளம் ஆறுமுகம் அவர்கள். சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் அரங்க இராமலிங்கம், தருமை ஆதீனப் புலவர் க. ஆறுமுகம், சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் பொருளாளர் திரு. அ.ச.ஞா. மெய்கண்டான் ஆகிய நால்வரும் ஒரு குழுவாகி, சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீச்சரர் கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன் குரலிசை வழங்க, இசைக்கருவிகள் துணைநிற்க, 12ஆம் திருமுறைப் பாடல்களைக் குரலிசையாகத் தரமான ஒலிப்பதிவகமொன்றில் பதிவு செய்து வருகிறார்கள்.

மாசி 4ஆம் நாள் திங்கள்கிழமை (16.2.2009) இத்திருப்பணி தொடங்கியது. முதல் நாளன்று 50 பாடல்கள் பதிவாயின. அடுத்த பதிவு நாள்கள், முறையே மாசி 13, 15 (25, 27.2.2009) ஆகும். திருவருள் துணையுடனும் தருமை ஆதீனம் குருமகாசந்நிதானம் அருளாசியுடனும் இப்பணி தொடர்ந்து 4,274 பாடல்களும் குரலிசையாகப் பதிவாக 6-7 மாதங்கள் ஆகலாம். ஒரு பாடலைக் குரலிசையாகப் பதிவு செய்ய ரூ. 100 வரை செலவாகிறது. இத்திட்டம் உரிய காலத்தில் நிறைவேறுமாயின் மொத்தச் செலவு ரூ. 500,000 ஆகலாம்.

சிங்கப்பூர் அருள்மிகு உருத்திரகாளி அம்மன் கோயில் திருமுறை மாநாடு ஏற்பாட்டுக்குழுவினர் இந்த முயற்சிக்கு உற்சாகமூட்டி உள்ளனர். தொடக்கத் தொகையாக அவர்கள் வழங்கிய தொகையை நன்கொடையாளர் பட்டியலில் பார்க்கலாம்.

பாயிரம் தொடக்கம் வெள்ளானைச் சருக்கம் வரை புராணங்களாகவோ, தனித்தனிப் பாடல்களாகவோ அன்பர்கள் பொறுப்பேற்று நிதி வழங்கி இத்திட்டம் விரைந்து நிறைவு பெற உதவலாம். நன்கொடைகளை, க. சச்சிதானந்தன் என்ற பெயருக்கு, காந்தளகம், 68, அண்ணா சாலை, சென்னை 600002, இந்தியா என்ற முகவரிக்கு அனுப்பலாம். (Donations in favour of K. Sachithananthan, may be mailed to Kaanthalakam, 68, Annaa Saalai, Chennai 600002, India).

மின்னஞ்சல்: tamilnool@gmail.com

பதிவாகிய குரலிசையைத் தேவாரம் மின்னம்பல தளத்தில் அவ்வப்பாடல் பகுதியில் கேட்கலாம்.

இச்செய்தியை ஆர்வமுள்ள அன்பர்கட்கெல்லாம் கூறவும்.

Leave a Reply

Your email address will not be published.