ஒரு சொல் தொலைவு

ஒரு இருபதாண்டுகளுக்கு முன்னர் சென்னை பெசன்ட்நகர் ரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆதிசங்கரரின் அன்னையைப் பற்றிப் பாட அழைத்திருந்தார்கள். மகாபெரியவரின் ஆசியுடன் நடந்த கவியரங்கம் அது. துறவி என்பவன் அன்னையின் சம்மதத்தோடுதான் துறவேற்க முடியும் என்பது நமக்குத் தெரிந்த ஒன்று. ஒரு பக்கம் பந்தங்களை இறுத்துக் கொணடு விடுபட்டுப் போகும் உறுதியான நிலையில் ஒரு சிறுவன்; மறுபக்கம், வாழ்க்கையில் இழக்க இனி ஏதும் இல்லை என்று நினைத்திருந்தவளுக்கு, ‘தன் வாழ்க்கைக்கு ஒரேஒரு பிடிப்பாக மிகுந்திருக்கும் இந்தப் பிள்ளையையும் இழந்தே ஆகவேண்டும்’ என்ற கட்டாயச் சூழல். அந்த அன்னையின் மனநிலையைப் படம் பிடித்திருக்கிறேன்.

ஒரு சொல் தொலைவு

sankara childஅம்மா எனக்குப் பொழுதில்லை – காலை
அழுந்தப் பிடித்த தொருமுதலை
இம்மா நிலத்தில் நிலைப்பதற்கும் – கண்
இமைப்பொ ழுதிலுயிர் துறப்பதற்கும்

உன்வா யுதிர்க்கும் ஒற்றைச்சொல் – ஆம்
ஒருசொல் தொலைவே மிகுந்துளது – சொல்
உன்மக னுலகைத் துறப்பதுவா – அன்றி
உலகினி லுயிரைத் துறப்பதுவா?

ஒருகணப் போதே அவகாசம் – உன்
உதடுகள் தருமொலி கதைபேசும் – இனி
மறுமுறை நினைக்கப் பொழுதில்லை – உன்
மகனுயிர் தனக்குன் சொல்எல்லை.

சின்னச் சங்கரன் நதியினிலே – காலைத்
திருகிப் பிடித்த பிடியினிலே – ஒரு
கன்னங் கறுத்த பெருமுதலை – அது
கவ்விட நடுங்கிச் சிதறுதலை.

அன்னை யொருத்தி நதிக்கரையில் – பதறி
அகலப் பிரிந்த கைகளுடன் – அவள்
தன்னிலை பார்ப்ப தொருநொடியே – இளந்
தனயனைப் பார்ப்ப தொருநொடியே.

மரணம் ஜனனம் எனச்சுழலும் – புலை
வாழ்க்கைச் சகடம் எற்றிவிட – இது
தருணம் என்று சிரித்தபடி – அவன்
சாற்றுதல் கேட்ப தொருநொடியே.

எப்படிச் சொல்வாள் துறவேற்க – இலை
எப்படிப் பொறுப்பாள் உயிர்துறக்க?
எப்படிச் சொல்லினும் இலையெனினும் – இந்த
ஈட்டி முனையவள் நெஞ்சுக்கே.

நான்கு வயதுப் பிள்ளையினை – தந்தை
நலிவுற விட்டுவான் ஏகியதும்
ஏங்கித் துயர்கொண் டுழலாது – கல்வி
ஏற்கத் தான்வழி புரிந்ததுவும்

வேத வித்தாய் மகன்வளர – மனம்
விம்மிப் பெருமித முற்றதுவும் – அலை
மோதும் திரளாய் மனக்குகையில் – பிள்ளை
முதலையின் வாய்ப்பிடி படும்வரையில்.

ஒற்றைச் சொல்லா அவகாசம் – சொல்
உதிர்த்த வுடனே இறும்பாசம் – உளம்
முற்றிலும் ஓலம் மோதிவர – உயிர்
மூச்சே பாரம் ஆகிவிட

அன்னை சொன்னாள் அந்தச்சொல் – உயிர்
அறுந்து வேரறச் சாய்க்கும்சொல் – வரும்
பின்னைப் பிறப்பினை மாற்றும்சொல் – ஒளிப்
பிள்ளையை ஞானியாய் நிறுத்தும்சொல்.

ஷண்மத ஸ்தாபனம் அந்தச்சொல் – உயர்
சதுர்மறைக் காப்பே அந்தச்சொல் – சுடர்
உண்மையின் ஒளியினைத் துலக்கும்சொல் – பரம்
ஒன்றே ‘நீ’யென விளக்கும்சொல்.

துறவறம் கொள்ளென வாய்திறந்து – மனத்
துயரம் மீதுறத் தெறித்திடும்சொல்.
ஒருதளிர் சுமந்த பட்டமரம் – மதம்
உயிர்தழைத் திடவெனத் தந்தவரம்.

அன்பினால் துறந்தேன் சங்கரனே – உற
வனைத்தையும் துறப்பாய் என்மகனே – இனி
உன்கைப் பிடிநெருப் பொன்றைத்தான் – தாய்
உடலுனை வரமாய்க் கேட்டிருக்கும்.

சின்னச் சங்கரன் நடக்கின்றான் – மனம்
தின்னத் தவிக்கச் செல்கின்றான்.
அன்னை இன்னும் நதிக்கரையில் – அவள்
ஆவி பிரிந்திடும் நாள்வரையில்.

5 Replies to “ஒரு சொல் தொலைவு”

  1. மரபுக் கவிதைகள் புதுக்கவிதைகள் இரண்டையும் எளிமையாகப் படைக்கமுடியும் என நிறுவும் படைப்புகளை திரு. ஹரிகிருஷ்ணன் உருவாக்குகிறார். மிக எளிமையான முறையில் ராமாயண, மகாபாரத சூக்குமங்களை விளக்குகிறார். மகிழ்ச்சி அளிக்கும் எழுத்தாளர்.

    இந்தக் கவிதை குறித்த இரண்டு சிறிய சந்தேகங்கள்:

    1. முன்னுரையில் “சென்ன பெசன்ட்நகர்” என்பது “சென்னை பெசன்ட்நகர்” என்று இருக்கவேண்டுமோ?

    2. வகைகள் என்பதில் கவிதை, ராமாயணம் என்று உள்ளன. இந்தக் கவிதைக்கும் ராமாயணத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?

  2. மதிப்பிற்குரிய ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு

    குற்றம் காண்பது குறியல்ல
    குறை களைவதே குறி எமக்கு.

    உயிரெழுத்தில் ஒரு சொல் தொட‌ங்கும் போது, அத‌ன் முன்னே ‘ஓர்’ என்று வ‌ர‌வேண்டும். ‘ஒரு’ என்ப‌து சொற்பிழை.

    சொற்குற்ற‌ம் பொறுத்தாலும், ‘இருபதாண்டுகள்’ என்பது பன்மை ஆதலின், ‘ஒரு இருபதாண்டுகள்’ என்றால் பொருட்குற்றம் வருகிறது. தமிழுக்கும் ஆங்கில‌த்துக்கும் உள்ள‌ முக்கிய‌ வித்தியாச‌ம் பொருட்குற்ற‌ம் பார்ப்ப‌துவே.

    சிறந்த கவிதை, மனம் ஒன்றிப் படித்தேன்.

    மரணம் ஜனனம் எனச்சுழலும் – புலை
    வாழ்க்கைச் சகடம் எற்றிவிட – இது
    தருணம் என்று சிரித்தபடி – அவன்
    சாற்றுதல் கேட்ப தொருநொடியே

    இதைப் படிக்கும் போது, பகவத் பாதர் பின்னாளில் ‘புனரபி ஜனனம் புனரபி மரணம்’ எழுத இத்தருணமே காரணமோ எனத் தோன்றுகிறது.

    உமாசங்கர்

  3. நன்றி திரு உமாசங்கர். இந்த இலக்கணத்தை நான் நன்றாகவே அறிவேன். இணையத்தில் தமிழிலக்கணம் பயிற்றுவித்து வருபவன் என்ற முறையில் எனக்கும் கொஞ்சம் இலக்கணம் தெரியும் என்பதையும் சொல்லிக்கொள்ள விழைகிறேன். ஓர் ஒரு குறித்த என் கருத்துகளை இந்தப் பக்கத்தில் காணவும்:

    https://www.maraththadi.com/article.asp?id=2524

    கம்பராமாயணத்திலிருந்து மட்டுமே உயிரெழுத்துக்கு முன்னால் ஒரு, உயிர்மெய்க்கு முன்னால் ஓர் என வரும் இடங்களை நூற்றுக்கணக்கில் சுட்ட முடியும். அடுத்ததாக, சிலம்பு, பெரியபுராணம் என்று மற்ற இலக்கியங்களையும் காட்ட முடியும். நானும் கொஞ்சம் படித்திருக்கிறேன் என்பதையும் சொல்லிக்கொள்ள விழைகிறேன். உரைநடையிலும் சரி, கவிதையிலும் சரி, இலக்கண ஒழுங்கமைவு என்பது தொனிப்பொருளின் அடிப்படையிலேயே தீர்மானமாகிறது. நான் மேலே எழுதியிருக்கும் ‘ஒரு இருபதாண்டுகளுக்கு முன்னால்’ என்ற சொற்றொடரில் ‘ஒரு’ என்பது எண்ணுப் பொருளன்று. ஒரு இருபதாண்டு, இரு இருபதாண்டு, மூன்று இருபதாண்டு என்றெல்லாம் நாம் சொல்வதில்லை. ‘ஒரு இருபதாயிரம் செலவாகலாம்’ என்று ஒருத்தர் சொல்வாரேயானால், ‘சுமார் இருபதாயிரம் செலவாகலாம்’ என்று சொல்ல வருகிறார் என்பது நமக்குச் சொல்லாமலேயே புரிகிறது. இந்த இடத்தில் ‘ஒரு’ என்பதன் தொனிப்பொருள் ‘சுமார்’என்பது மட்டுமே. ஆகவே நான் எழுதியிருப்பதில் சொற்குற்றமும் இல்லை, பொருட்குற்றமும் இல்லை. நான் புதிதாக இலக்கணம் கற்கவேண்டிய நிலையிலும் இல்லை. (பொதுவாகச் சொன்னேன். உங்களுடைய மறுமொழியைக் குறித்து குறிப்பாகச் சொல்லவில்்லை.) கவிதை உங்களுக்குப் பிடித்திருந்தது என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.

    நான் இவ்வாறு சொன்னேனாயினும், பிழை என்று படுபனவற்றைத் தயங்காது சுட்டுங்கள். மீண்டும் நன்றி.

  4. ஸ்ரீ. உமாசங்கர்,
    தமிழ்ஹிந்துவுக்கு வரவேற்பு.’ஒரு’ என்பது எல்லா மொழிகளிலும் பன்மைக்கு முன்பு உண்டு. ஆங்கிலத்தில் கூட ‘a few, a couple, a ton, a million dollars’ என்பதெல்லாம் சகஜம்தானே?

    இது மாதிரி ஒரு சில கேள்வியோட விட்டுவிடாதீர்கள். ஒரு பத்து கேள்வியாவது விடாமல் எழுதிக் கேளுங்கள். அப்பதானே அவர் ஒரு நாலு கேள்விக்காவது பதில் சொல்வார். ஹரிகி யைப் பேசவைப்பது தங்கத்தை உரசுவது போல.
    ‍‍‍
    ‍ஹரிகி ஐயா, இவை அற்புதமான வரிகள் :

    ஷண்மத ஸ்தாபனம் அந்தச்சொல் – உயர்
    சதுர்மறைக் காப்பே அந்தச்சொல் – சுடர்
    உண்மையின் ஒளியினைத் துலக்கும்சொல் – பரம்
    ஒன்றே ‘நீ’யென விளக்கும்சொல்.

    மிக்க‌ ந‌ன்றி.

    கார்கில் ஜெய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *