கிடார் பிரசன்னாவுடன் ஒரு மாலை

ரீதிகெளளை கட்டுரையில் மதுரை மணி ஐயரின் கச்சேரியைக் கேட்பதற்காக, வந்த சவாரியை வேண்டாமென்று ஒரு ரிக்ஷாக்காரர் சொன்னதாக திருவெண்காடு ஜெயராமன் சொன்னதை மேற்கோள் காட்டியிருந்தேன். அதைப் படித்துவிட்டு ஒரு நண்பர், “அவர்தான் சொல்கிறார் என்றால், நீங்களும் அதை நம்பிக் குறிப்பிட்டீர்களாக்கும்!” என்றார். “என்ன செய்வது நம்பமுடியாத அளவுக்கு நிலை மாறிவிட்டதுதான்! ஒரு காலத்தில் கர்நாடக சங்கீதத்துக்குப் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு இருந்திருக்கிறது. கச்சேரியைக் கேட்பதற்காக அந்த காலத்தில் பெரிய மதிப்பாகக் கருதப்பட்ட அரசாங்க வேலையையே விட்ட ஆளைப் பற்றி அவரே சொன்ன குறிப்பெல்லாம் இருக்கிறது” என்று பதில் சொன்னேன்.

அந்த நண்பர் சென்ற சனிக்கிழமை (14.03.2009) சென்னையில் நடந்த கிடார் பிரசன்னாவின் கச்சேரிக்கு வந்திருந்தால், ‘அந்த காலத்தில் கூட்டம் வருமாம்” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கும் என்னை ஒரு சிறந்த புனைவெழுத்தாளர் என்றே முடிவு செய்திருப்பார். கச்சேரிக்கு அதிகபட்சம் இருபது பேர் வந்திருந்தார்கள். உடன் வந்திருந்த நண்பர் ‘இது பரவாயில்லை. இதற்கு முன் நான் சென்ற பிரசன்னாவின் கச்சேரிக்கு இதைவிடக் குறைவான கூட்டம் வந்திருந்தது. வீணை காயத்ரியின் கச்சேரிகளுக்கு அதைவிடக்குறைவான கூட்டம் வரும்.” என்றார்.

இத்தனைக்கும் அது ஓர் இலவசக் கச்சேரிதான். சென்னை வில்லிவாக்கத்திலிருக்கும் பத்மா சாரங்கபாணி பள்ளியின் க்ஷீரசாகரா ஹாலில் அந்தக் கச்சேரி நடைபெற்றது. பத்மா சாரங்கபாணி கல்ச்சுரல் அகாடமி ஒரு சேவையாக இப்படிப்பட்ட கச்சேரிகளை ஏற்பாடு செய்துவருகிறது. ‘வடசென்னையில் இப்படிப்பட்ட கச்சேரிகளுக்கு வரவேற்பு குறைவுதான். தென்சென்னையிலும் எங்களுடைய பள்ளியின் இன்னொரு கிளையில் கச்சேரிகள் நடத்துகிறோம். இவ்வளவு குறைவான கூட்டமில்லையென்றாலும் அதிகக் கூட்டம் வருவதில்லை” என்றார் சபா செக்ரட்டரி திரு.எஸ்.வரதன்.

ஆனால் இப்படிப்பட்ட குறைவான கூட்டம் வந்த கச்சேரிக்குச் சென்றதிலும் ஒரு நன்மை இருந்தது. அரங்கிலிருந்தவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேச முடிந்தது. அந்தக் கச்சேரியைக் கேட்பதற்காகவே பெங்களூரிலிருந்து வந்திருக்கிறேன் என்று தெரிந்தவுடன் இந்தக் கச்சேரியை ஏற்பாடு செய்ததில் முக்கிய பங்கு வகித்த திரு.வாசுதேவன் என்னையும், என் நண்பர்களையும் கச்சேரி தொடங்குவதற்கு முன் பிரசன்னா, மிருதங்க வித்வான் திரு.மன்னார்குடி ஈஸ்வரன், கஞ்சிரா அநிருத் ஆத்ரேயா ஆகியோருடனும், பிரசன்னாவின் தந்தை திரு.ராமசாமியுடனும் அறிமுகப்படுத்திவைத்தார்.

கிடார் பிரசன்னாவின் Be the Change என்ற ஆல்பம்தான் முதலில் அவரைப் பற்றிய கவனத்தை எனக்குத் தந்தது. அப்போதிலிருந்து அவருடைய அத்தனை ஆல்பங்களையும் பலமுறை கேட்டு வருகிறேன். வயலின் மேதை கன்னியாகுமரியின் சிஷ்யரான இவர், சம்பரதாயமான கர்நாடக இசைக்கச்சேரிகளையும் நிறைய செய்திருக்கிறார். பல கர்நாடக இசைத்தட்டுகளும் வெளிவந்திருக்கின்றன. இதில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும் விஷயம், முழுக்க முழுக்க மரபு சார்ந்த கர்நாடக இசையில் அவர் தன்னுடைய சிறப்பான ஆளுமையைக் காட்டிவரும் அதே நேரத்தில் ஜாஸ் இசையிலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்திருக்கிறார். அமெரிக்காவின் தற்போதைய குறிப்பிடத்தகுந்த ஜாஸ் கலைஞராக அறியப்படுகிறார்.

prasanna-1Allaboutjazz.com என்ற மிகச்சிறந்த கறாரான ஜாஸ் இணையதளம் ‘பிரசன்னாவைப் போல் கிடார் வாசிப்பவர்கள் அரிது’ என்று சொல்கிறது. விக்டர் வூட்டன், ஆகா மூன் போன்ற சிறந்த ஜாஸ் இசைக்கலைஞர்களுடனும், குழுக்களுடனும் பிரசன்னா வாசித்திருக்கிறார். இந்தியாவுக்கு வருவதற்கு சிலநாட்களுக்கு முன் இந்தோனேஷியாவில் நடக்கும் ஜாவா ஜாஸ் இசைத்திருவிழாவில் ஜாஸ் வாசித்திருக்கிறார். சென்ற வாரம் மும்பையில் Hard-Rock Cafe-இல் நடந்த விழாவில் இவர் இசைத்தது ராக் மற்றும் ஜாஸ். சனிக்கிழமை சென்னை வில்லிவாக்கத்தில் கர்நாடக இசைக்கச்சேரி. இப்படி முற்றிலும் இரண்டு வெவ்வேறு இசை வகைகளில் மிகச்சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற தமிழ்த்திரை இசையமைப்பாளர்களின் திரைப்படைப்புகளிலும் பிரசன்னா கிடார் வாசித்திருக்கிறார். இந்த வருடம் சிறந்த டாகுமெண்டரிக்கான ஆஸ்கர் விருதை வென்ற Smile Pinki என்ற படைப்புக்குப் பின்னணி இசையமைத்ததும் பிரசன்னாதான். அந்த விதத்தில் பிரசன்னா ஒரு தனித்துவம் வாய்ந்த கிடார் இசைக்கலைஞர்.

சனிக்கிழமை கச்சேரியும் மிகப்பிரமாதமாகவே அமைந்தது. நாட்டையில் மஹாகணபதிம் வாசித்து கச்சேரியைத் தொடங்கினார் பிரசன்னா. இந்தக் கீர்த்தனை பெரும்பாலும் அரங்கின் ஒலியமைப்புடன் வாத்தியக்கலைஞர்கள் நடத்திய ஒரு jamming ஆக இருந்தது. அதுவும் ஒருவிதத்தில் ரசிக்கும்படியாக இருந்தது. கீர்த்தனை பதினைந்து நிமிடங்களாகத் தொடர்ந்து வாசித்து முடிக்கப்பட்டபோது அரங்கின் ஒலியமைப்பு ஓரளவு நிலைபெற்றிருந்தது.

அதன்பின் சித்தரஞ்சனி ராகத்தில் அமைந்த தியாகராஜர் இயற்றிய ‘நாத தனுமனிஷம்’ என்ற கீர்த்தனை கச்சேரிக்கானதொரு வேகத்தைத் தந்தது. முன்வரிசையில் அமர்ந்திருந்த முதியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டார்கள். நீண்ட நாட்களுக்குப் பின் இந்தக் கீர்த்தனையைக் கேட்டார்களாயிருக்கும்! அதன்பின் சாமா ராகத்தை விரிவாக அலசிவிட்டு அதே ராகத்திலமைந்த ‘குருகுஹாய’ என்ற முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனையை வாசித்தார் பிரசன்னா. சாமா போன்ற அவ்வளவாக ஸ்கோப் இல்லாத ராகத்தில் அவ்வளவு நேரம் செலவழித்ததற்கு பதிலாக வேறெதாவது விரிவான ஆலாபனைக்கு உகந்த ராகத்தில் வாசித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அப்படிப்பட்ட ராகத்தையும் கணக்கு, வழக்காக இல்லாமல் இனிமையானதொரு இசைக்கோர்வையாக வழங்கினார் பிரசன்னா.

சித்தரஞ்சனிக்கடுத்து ‘தேவ தேவ’ என்ற மாயமாளவகெளளை கீர்த்தனையை வாசித்தார். இதில் அவர் செய்த ஸ்ருதிபேதம் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. இந்தக்கச்சேரியின் ஹைலைட்டான சண்முகப்ரியா ராகமும், மோகனமும் இதன்பின்புதான் வந்தன. சண்முகப்ரியா ராகத்தை கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் விரிவாக வாசித்தார் பிரசன்னா. பிரயோகங்கள் மிக அற்புதமாக இருந்தன. சண்முகப்ரியா வாசித்துக்கொண்டிருந்தபோதே சரேலென்று ஒரே ஒரு நிமிடம் அவருடைய Peaceful என்ற ஆல்பத்திலிருக்கும் Culture of silence என்ற மேற்கத்திய காம்போசிஷனை வாசித்துவிட்டு மீண்டும் சண்முகப்ரியாவுக்குள் வந்தார். நீண்ட நாட்களாய் அந்த காம்போசிஷனை எப்படி வாசித்தார் என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருந்த எனக்கு அன்று நேரிலேயே விடை கிடைத்தது. ஒரு வித்தியாசமான fingering technique-ஆல் அதை சாத்தியப்படுத்தியிருந்தார் பிரசன்னா. அதன்பின் சண்முகப்ரியாவில் அமைந்த மரிவேரே கீர்த்தனையை வாசித்துவிட்டு கச்சேரியின் மெயின் ஐட்டமான மோகனத்தின் ராகம்-தானம்-கிருதிக்குள் நுழைந்தார். மன்னார்குடி ஈஸ்வரனும், அநிருத்தும் மிக அருமையாக ஒத்துழைப்பு தந்தார்கள். இந்த ராகத்தில் அவர் வாசித்த கீர்த்தனை ‘காதம்பரி ப்ரியாயை’ என்ற முத்துஸ்வாமி தீக்ஷிதரின் படைப்பு. ராக ஆலாபனையில் பிரசன்னா கீழ் ஸ்தாயியில் செய்த சஞ்சாரங்கள் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தன. பொதுவாகவே பிரசன்னாவின் கீழ் ஸ்தாயி சஞ்சாரங்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன.
Prasanna-2

கச்சேரியில் இந்த இடத்தில் இடைவெளி விட்டு, பிரசன்னா சபாவால் கெளரவிக்கப்பட்டார். பிரசன்னாவைப் பற்றியும், இதர கலைஞர்களைப் பற்றியும் மிக விரிவாகவும், உயர்வாகவும் பேசினார் திரு.வாசுதேவன். அதன்பின் பிரசன்னாவிடம் கேள்விகள் கேட்கலாம் என்று சொல்லப்பட்டது.

கச்சேரி ஆரம்பத்திலிருந்து அப்போது வரை தூங்கிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று விழித்து, (இவரும், இவருடைய சிறுவயது மகனும் ஒருவர் மேல் ஒருவர் தலை சாய்த்து A போல தூங்கிக்கொண்டிருந்தனர்) “கர்நாடக சங்கீதத்தை கிடாரில் வாசிப்பதற்கு உங்களுக்கு எத்தனை நேரம் ஆனது?” என்றார். பிரசன்னாவும் சம்பரதாயமாக பதில் சொல்லிவிட்டு, “கிடாரில் நான் எப்படி கர்நாடக சங்கீதம் வாசிக்கிறேன், அது எவ்வளவு கஷ்டம், அதற்காக எவ்வளவு உழைக்கிறேன் என்ற கவலையெல்லாம் உங்களுக்கு வேண்டாம். அது என்னுடைய தனிப்பட்ட கவலை. நீங்கள் இசையை மட்டும் ரசித்தால் போதும். அதை வைத்து என்னை மதிப்பிட்டால் போதும்” என்றார். ஆனால் கேள்விகேட்டவர் பதிலுக்காகவெல்லாம் காத்திருக்கவில்லை. அடுத்த சுற்று உறக்கத்துக்குத் தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தார்.

பேச்சு பிரசன்னா இசையமைத்த ‘Smile Pinki’ டாகுமெண்டரியைக் குறித்துத் திரும்பியது. “எனக்கு பணத்தை விட ஆத்ம திருப்தி முக்கியமானதாகப் படுகிறது.” என்று ‘Smile Pinki’-க்காக இசையமைத்ததைக் குறித்துக் குறிப்பிட்டார் பிரசன்னா. உண்மையில் Slumdog Millionaire பேரலையில் அடித்துச்செல்லப்பட்டவிட்ட மிகவும் முக்கியமானதொரு படைப்பு ‘Smile Pinki’. ‘Smile Train’ என்ற அமைப்பால் தயாரிக்கப்பட்ட இந்த டாகுமெண்டரி உதட்டுப்பிளவு (cleft) குறைபாட்டைக் கொண்ட சிறுவர்களைப் பற்றிப் பேசுகிறது. மேலுதடு இரண்டாகப் பிளந்து முகவாயுடன் ஒட்டிக்கொள்வதற்கு ‘உதட்டுப்பிளவு’ என்று பெயர். இந்தக் குறைபாட்டைக் கொண்டவர்களால் சரியாகப் பேசவோ, உணவு உட்கொள்ளவோ முடியாது. மேலும் இக்குறைபாடு முக அழகைக்கெடுப்பதால் மிகப்பெரிய உளவியல் ரீதியான பாதிப்பை குழந்தைகள் மனதில் ஏற்படுத்துகிறது. ஆனால் இக்குறைபாட்டை ஒரு எளிய அறுவை சிகிச்சை மூலம் சரியாக்கலாம். பெரும்பாலான ஏழைக்குழந்தைகள் இந்த அறுவைசிகிச்சைக்கு வழியில்லாமல் வாழ்நாள் முழுதும் இக்குறைபாட்டுடனே அவதியுறுகின்றனர். Smiletrain நிறுவனம் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தி இலவச அறுவை செய்து வைக்கிறது. Pinki என்ற உதட்டுப்பிளவு கொண்ட ஒரு இந்தியக்குழந்தை இந்த நிறுவனத்தின் இலவச முகாமில் பங்கு கொண்டு பிற குழந்தைகளைப்போல் இயல்பான புன்னகையைப் பெறுவதை ஒரு டாகுமெண்டரியாகக் காட்டிய படைப்புதான் Smile Pinki.

ஸ்மைல் பிங்கியின் ட்ரெய்லரை இங்கே பார்க்கலாம்:

பிரசன்னா இப்படத்திற்கு அமைத்திருந்த பின்னணி இசையை கர்நாடக சங்கீத வரையறைக்குள் கல்யாணி, காபி ராகங்களில் அமைந்த ஒரு அழகான ராகமாலிகையாக்கி அன்றைய கச்சேரியில் வாசித்திருந்தார். மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது இந்த படைப்பு.

நானும் என் நண்பனும் விரும்பிக்கேட்டிருந்த ‘சமயமிதே’ என்ற புத்தமனோஹரி கீர்த்தனையையும் வாசித்தார் பிரசன்னா. மிகவும் துரித கதியில், பல்வேறு ஸ்தாயிகளுக்கு வெகுவேகமாகச் சென்று வரும் இக்கீர்த்தனை பிரசன்னாவின் ‘ரா ராமா’ என்ற இசைத்தட்டில் இடம்பெற்றது. ‘ரா ராமா’ ஆல்பத்தின் கீர்த்தனையை கீழே கேட்கலாம். கிடாரிலும், கர்நாடக சங்கீதத்திலும் பிரசன்னாவின் ஆளுமையை இந்தக் கீர்த்தனையில் அறியலாம்.

Get this widget | Track details | eSnips Social DNA

இனிதே மங்களம் பாடப்பட்டு கச்சேரி நிறைவடைந்தது. கச்சேரியில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது திரு.மன்னார்குடி ஈஸ்வரனின் பங்களிப்பு. தன்னைவிட பல்லாண்டுகள் வயதில் சிறிய பிரசன்னாவையும், அநிருத்தையும் தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார் அவர். அவருக்கும் பிரசன்னாவுக்கும் இடையே தொடர்ந்து நடந்த உற்சாகமான இசைப் பரிமாற்றங்கள் அவர்கள் முகத்திலும் வெளிப்பட்டு பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தியது.

கச்சேரி முடிந்து தனியாகத் தன்னுடைய கருவிகளை மூட்டை கட்டிக்கொண்டிருந்த பிரசன்னாவுடன் மீண்டுமொருமுறை பேசினேன். அவருடைய படைப்புகளில் எனக்குப் பிடித்தமானவற்றைப் பற்றியும், எனக்கு ஜாஸ், கர்நாடக சங்கீதம் இரண்டிலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியதற்காக நன்றி சொல்லிவிட்டும் வந்தேன். “எனக்கு இருபதாயிரம் பேருக்காக ஒரு ஸ்டேடியத்தில் வாசிப்பது, இது போன்ற ஒரு கச்சேரியில் வாசிப்பது இரண்டும் ஒரே விதமாகத்தான் இருக்கிறது. நேற்று முன்தினம் மும்பையில் ஒரு பெரிய கூட்டத்துக்காக வாசித்த ராக் இசையில் கிடைத்த மகிழ்ச்சியும், இங்கே தனிப்பட்ட முறையில் ஒரு சிலருக்காக கர்நாடக சங்கீதம் வாசிக்கும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தியும் ஒன்றாகவே இருக்கின்றன. என்னளவில் மேற்கத்திய இசை, கர்நாடக சங்கீதம் இரண்டு வடிவங்களிலும் செளகரியமாகத்தான் உணர்கிறேன்” என்று கச்சேரி நடுவே பேசும்போது குறிப்பிட்டிருந்தார் பிரசன்னா.

இசைத்தட்டுகளில் பதிவு செய்யப்படும் கச்சேரிகளைக் கேட்பதற்கும், வாசிக்கும்போதே நேரடியாகக் கேட்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. நேரடிக் கச்சேரிகள் இசை மீதான உத்வேகத்தையும், புரிதலையும் பன்மடங்கு அதிகப்படுத்துகின்றன. பிரசன்னாவுடன் பேசிவிட்டு ஒரு charged-up மனநிலையோடு வெளியே வந்தபோது பெங்களூருக்குத் திரும்பி கிடாரைத் துடைத்து சுத்தம் செய்து வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

அரங்கவாசலில் B.Com இறுதியாண்டு மாணவரான, 20 வயது கஞ்சிரா வித்வான் அநிருத் ஆத்ரேயா நட்பாகப் புன்னகைத்து விடை கொடுத்தார்.

10 Replies to “கிடார் பிரசன்னாவுடன் ஒரு மாலை”

  1. ஆங்கிலச் சொற்களைக் கூடிய மட்டில் தவிர்த்து எழுதினால் வாசிப்புக்குத் தடை குறையும் என்று சில பத்தாண்டுகள் முன் திரு. சுந்தர ராமசாமி என் கட்டுரை ஒன்றுக்கு மறுவினை தெரிவித்திருந்தார். அதை நான் வெகுநாட்களாய் நினைவு வைத்திருக்க ஒரு காரணம் அந்தக் கட்டுரை முதல் தடவை நான் எழுதிப் பிரசுரமான ஒரு கட்டுரை.
    அதே கருத்தை நான் நிறைய பேரிடம் சொல்லி வந்திருக்கிறேன். ஆங்கிலத்தை விலக்கித் தமிழைச் சுத்திகரிக்கும் நோக்கம் இல்லை. தமிழில் சொல்வளம் பெருகி அது ஒரு ஜீவநதியாய்க் கரை புரண்டு ஓடும் அற்புத நதியாய் ஆகவேண்டும் என்ற பேராசைதான். எல்லாரும் சுட்டும் கதைகளான ஜப்பானியர் ஜப்பானிய மொழியிலும் சீனர் சீன மொழியிலும் கொரியர் கொரிய மொழியிலும் படித்து உலகரங்கில் நடமிடவில்லையா, நாம் ஏன் தமிழில் கற்று, யோசித்து உலகரங்கில் உலாவக் கூடாது என்ற கேள்வியை நானும் எழுப்பத் தேவை இல்லை. வெறும் மொழியைக் கற்றுப் பேசினால் உலகரங்கு கை வசப்படாது. சொற்கள் எதார்த்த உலகைக் கைப்பற்றுமளவு காத்திரமாகவும், கறாராகவும், எளிமையாகவும் பல துறைகளில், பல தரங்களில், பல வகைச் சமூகத் தள மனிதரிடையேயும் உலவும் வகையில் நம்மிடம் ஏராளமாக இருந்தால் மொழி தன்னளவிலேயே உலகெங்கும் புகழுடன் மிளிரும்.

    இதைக் குறையாகச் சொல்லவில்லை. விடுவிடுவென எழுதிப் பல வகை வாழ்வம்சங்களைக் கட்டுரையில் வடித்து வாசகருக்கு மகிழ்வூட்டும் நீங்கள், இந்த ஒரு அம்சத்தையும் சேர்த்துக் கவனித்தால் சொல்லாக்கத்திற்காகவும் பெயர் பெற்று விட வழி உண்டு என்று சுட்டவே எழுதினேன்.
    மேலே Fingering techniqஉஎ என்று எழுதியதைத் தமிழாக்கினால் பின்னால் உங்களுக்கே உதவும். அதே போல charged up என்ற சொல்லும் அதே வழியில் தமிழாலேயே நல்லபடியாக வரும்.

    500 சொற்களில் இரண்டுதான் ஆங்கிலம் அதற்குப் பொய் இத்தனை நீளமாகக் குறை சொல்ல வேண்டுமா என்று கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்! 🙂
    தந்தி வாத்தியங்கள் நம் இசையிலும் உண்டு. வீணை, சிதார், சரோட், சந்தூர், வயலின். இவற்றை வாசிப்பவர் விரல் பிரயோகங்களை எப்படிக் குறிக்கிறார் என்று கேட்டறிந்தால் அங்கு புழக்கத்தில் உள்ள சொல் கிட்டும்.
    மற்றபடி பல விவரங்களைப் பல இடங்களில் இருந்து இழுத்து இணைத்துக் கதை போலச் சொல்வது நல்ல உத்தி.
    மைத்ரேயா

  2. சேதுபதி,

    நல்ல கட்டுரை. பிரசன்னாவின் எளிமையையும், அவரது இசை அறிவையும் மிக அழகாகக் கட்டுரைப்படுத்துயுள்ளீர்கள். நான் முன்பே சொன்னதுதான், உங்களுக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது. அதை இந்தக் கட்டுரையிலும் பார்க்க முடிகிறது. மிக்க மகிழ்ச்சி. இது போன்ற கட்டுரைகளில், சமயங்களில் ஆங்கில வார்த்தைகளைத் தவிர்க்க முடியாது என்பது என் கருத்து. இசையில் தொடங்குதம்மாவின் மற்ற பாகங்களை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நல்ல படைப்புகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் தமிழ் இந்து ஆசிரியர் குழுவினருக்கு வாழ்த்துகள்!

  3. Dear Sethupathi Arunachalam,

    From your article it seems like you have wide range of musical interests, like Prasanna himself. People like you should involve yourself in music more. In my opinion, Music transcends religion, region, race et al. Music alone can be the saviour of all the troubles that surround us today!

    Regards,
    Karthik.V

  4. முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். எனக்கு கிடாரில் கர்நாடக சங்கீதம் என்ற விஷயமே அவ்வளவாக ருசிக்கவில்லை. என் தலைமுறை போல வருமா, எதோ ஒரு சின்ன பையன் வசிக்கிறான், ஒரு சின்ன பையன் அதைக் கேட்டு சிலாகித்து எழுதுகிறான் என்றுதான் நினைத்தேன். (ஒரு நண்பரின் சிபாரிசின் பேரில் இதைப் படித்தேன்). நல்ல வேலை நீங்கள் அந்த சமயமிதே கிர்த்தனையை உங்கள் கட்டுரையிலேயே கேட்கும்படி செய்திருந்தீர்கள். அப்பா, என்ன வேகம், லாவகம். கிடாரிலா அப்படி ஒரு கர்நாடக இசை? சில முன்முடிவுகளை நான் இனி மறு பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்தக் கீர்த்தனையை வேதவல்லியோ யாரோ பாடி பல வருடங்களுக்கு முன் கேட்டிருக்கிறேன். அந்த உணர்வை நான் பிரசன்னா வாசித்துக் கேட்டபோதும் மீண்டும் அடைந்தேன்.
    பிரசன்னாவுக்கு என் பாராட்டுகளும், அறிமுகப் படுத்திய சேதுபதிக்கு என் நன்றிகளும்!

    -முரளிதரன்

  5. சேதுபதியின் பல்துறை வித்தகம் வியக்கச் செய்கிறது. வாழ்க. வளர்க.

  6. // “எனக்கு இருபதாயிரம் பேருக்காக ஒரு ஸ்டேடியத்தில் வாசிப்பது, இது போன்ற ஒரு கச்சேரியில் வாசிப்பது இரண்டும் ஒரே விதமாகத்தான் இருக்கிறது. நேற்று முன்தினம் மும்பையில் ஒரு பெரிய கூட்டத்துக்காக வாசித்த ராக் இசையில் கிடைத்த மகிழ்ச்சியும், இங்கே தனிப்பட்ட முறையில் ஒரு சிலருக்காக கர்நாடக சங்கீதம் வாசிக்கும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தியும் ஒன்றாகவே இருக்கின்றன. //

    இதே கருத்தை வாழ்க்கையில் உறுதியாக கடைப்பிடித்தவர் இசையரசி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் என்று பலர் எழுதிப் படித்திருக்கிறேன். நல்ல கலைஞர்களுக்கு அவர்கள் எப்போது எங்கு யாருக்காக வசித்தாலும் ஒரே மாதிரி வாசிப்பார்கள், அல்லது பாடுவார்கள். அது பத்து பேராக இருந்தாலும் சரி, அரங்கு நிறைந்த சபையாக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான்..

    உங்களது எழுத்து லாவகம் அருமை.. இசையைத் தேடி தேடிச்செல்லும் உங்கள் கட்டுரைகளுடன், அங்கதமான நடையுடன் எழுதப்படும் கட்டுரைகளும் ரசிக்க வைக்கின்றன. அனால் இசை விமர்சகர் ஆவதற்கான முகாந்திரங்கள் தென்படுகின்றன உங்கள் எழுத்தில்.. அதில் உச்சம் அடையவும், இதர விரும்பும் கலைகளிலும் உச்சம் அடைய வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  7. பதி,
    நல்ல சுவார‌ஸ்ய‌மான நடை , கொசுரு தகவல்கள் மற்றும் உன் இசை வல்லமையோடு பிரசன்னாவின் கிடார் மற்றும் கர்னாடக இசையின் ஆளுமையை அழகாக தொகுத்து அளித்திருக்கிறாய்.வாழ்த்துக்கள்!

    “இந்தியாவுக்கு வருவதற்கு சிலநாட்களுக்கு முன் இந்தோனேஷியாவில் நடக்கும் ஜாவா ஜாஸ் இசைத்திருவிழாவில் ஜாஸ் வாசித்திருக்கிறார். சென்ற வாரம் மும்பையில் Hard-Rock Cafe-இல் நடந்த விழாவில் இவர் இசைத்தது ராக் மற்றும் ஜாஸ். சனிக்கிழமை சென்னை வில்லிவாக்கத்தில் கர்நாடக இசைக்கச்சேரி.”

    இத‌ன்பின் பிரசன்னா ,sunday leave விட்டுவிட்டு ம‌றுப‌டியும் திங்க‌ள‌ன்று ம‌யிலையில் PS ப‌ள்ளியில் மீண்டும் ஒரு க‌ர்னாட‌க‌ இசை விருந்து அளித்தார்.
    அன்று பில‌ஹ‌ரி ராக‌த்தில் RTP highlight ஆக‌ அமைந்த‌து. கிட்ட‌த‌ட்ட‌ 40 நிமிட‌ங்க‌ள் இந்த‌ RTP யை மிக‌ விரிவாக‌ வாசித்தார்.சுத்த‌மாக‌ க‌ர்னாட‌க‌ இசை ப‌ற்றிய‌ அறிவற்ற என‌க்கு கூட‌ RTP யின் க‌ண‌க்கு வ‌ழக்கு சிறிது சிறிது அன்றுதான் புறிய‌ ஆர‌ம்பித்த‌து.
    மேலும் படிப்படியாக கீழ் string களில் இருந்து மேலே போவதை பார்க்கவும் கேட்கவும் உண‌ர்ச்சி பூர்வமாக இருந்தது. BASS string களில் தனியே சில நிமிடங்கள் அருமையாக விளையாடினார்.
    வில்லிவாக்க‌ம் போல் இல்லாம‌ல் , மயிலையில் 75% ஹால் நிர‌ம்பி இருந்தது.
    தென்சென்னைக்கே உரித்தான‌ க‌ர்னாட‌க‌ இசை பிரிய‌ர்க‌ள் இந்த நிக‌ழச்சிக்கும் வ‌ந்திருந்தார்க‌ள்.ஆனால் கிடார் இசைக்கு நான் இவ்வளவு எதிர் பார்க்க‌வில்லை.(முரளிதரன் Sir போல் பிரசன்னாவின் “கிடாரில் கர்னாடக இசை”யை முன்பே புரிந்தவர்கள் போலும்.)

    உன‌க்கு (அ) உங்களுக்கு ஓரு suggestion,

    இசை பற்றிய‌ உன‌து அடுத்த‌ ப‌திவாக‌ , “இளையராஜாவின் இசையில் கிடார்” என்று concept – ஐ வைத்துக்கொண்டு எழுத‌லாம்.
    ஏன் என்றால், இளையராஜாவின் ர‌சிக‌னாக‌வும் மேலும் நீயே ஒரு கிடார் மாணவனாக‌வும் (அ) கலைஞ‌னாகவும் இருப்ப‌தால் இது உனக்கு நல்ல‌ முறையில் சாத்திய‌ப்ப‌டும் என்று நினைக்கிறேன்.
    உனது “இசையில் தொட‌ங்குத‌ம்மா பாக‌ம் 2 ” ஆக‌ கூட‌ இதை அமைத்துக்கொள்ள‌லாம்.

    – dili

  8. அருமையான கட்டுரை. பழம்பெரும் கலையைப் பற்றி இளமை ததும்பும் மொழியில் சேதுபதி எழுதியிருக்கிறார். பிரசன்னா ஒரு அபூர்வமான கலைஞர். ஐ.ஐ.டியில் என் பேட்ச் மேட். அப்போது ஒரு சக மாணவர், நண்பர் என்ற முறையில் பார்த்தாலும் அவருடைய அபார இசையறிவு எங்களுக்கெல்லாம் புரிந்தே இருந்தது. இளையராஜாவின் ‘நின்னுக்க்கோரி வர்ணம்’ என்ற அக்னிநட்சத்திரம் படப்பாடலை அடிப்படையாக வைத்து மோகன ராகத்தில் ‘சரஸ்வ்தி’ என்ற ஃபூயஷனை அப்போதே அவர் வடிவமைத்த்ருந்தார். இதில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய இன்னொரு அம்சம் மேற்கத்திய இசையின் சில அசாத்திய கலைஞர்களும், படைப்ப்பாளர்களும் நான் உட்பட எங்கள் காலேஜின் இசைப்பித்து பிடித்த நண்பர்களுக்கு தெரிந்திருந்தது. அதைவிட எங்களுக்க் ஆச்சரியம் அப்படிப்பட்ட சிறந்த கலைஞர்களின் இசை வெளிப்பாடுகளுக்கு சிறிதும் குறைவில்லாமல் இளையராஜா சிறந்த ஃபூயஷனைத் தந்தார். பல உலகக் கலைஞர்கள், பண்ணைப்புரம், ஐ.ஐ.டி, பிரசன்னா எல்லோரும் ஒரே புள்ளியில் இணைய முடிந்ததும் அதன் ஒரு துளித்தெறிப்பில் நான் நின்றதும் சந்தோஷ அனுபவம்.

    இஙே வந்திருக்கும் ஒரு ஃபீட்பேக்கிலிருந்து சேதுபதியும் ஒரு கிடார் கலைஞர் என்றும், இளைஞர் என்றும் அறிகிறேன். இத்தளத்திலிருக்கும் பிற கட்டுரைகளிலிருந்து கரண்ட் டே ட்ரெண்டான, எனக்கு மிகவும் அருவருப்பூட்டும் இணைய இறக்குமதி செய்து போலி பம்மாத்து செய்யாத, சென்ஸிபிளான உண்மையான கலைஞர் இவர் என்றும் தெரிந்து மகிழ்ச்சி. தமிழ் இலக்கியம், அரசியல், திரைப்படம், பெய்ன்மன் என பல திசைகளில் இயங்குவடும் அபூர்வம். இவரைப் பற்றி மேல் விவரங்கள் தெரிந்தால் மகிழ்வேன்.

  9. மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றி.

    திரு.ஷங்கர் உங்களுடைய வருகைக்கு நன்றி. பிரசன்னாவின் கல்லூரி நாட்கள் சுவாரசியமாக இருந்திருக்கும் என்பதை உங்களுடைய அந்த சிறு தகவலிலிருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது. டில்லி என் மீதிருக்கும் ஏதோ கோபத்தால் நான் ஒரு கிடார் கலைஞன் என்று ஒரு புரளியைக் கிளப்பியிருக்கிறார். ம‌ற்ற‌ப‌டி யாராவது ‘கிடார்’ என்று எழுதினால் அதை நான் பிழையில்லாமல் ந‌ன்றாக‌ வாசிப்பேன்.

  10. சேதுபதி, நன்றாக எழுதியிருக்கிறீர்கள். கச்சேரி விமர்சனம் என்பதோடு பல ரசமான செய்திகளையும் உடன் வழங்கியது சிறப்பு.

    // க‌ச்சேரிக்கு அதிகபட்சம் இருபது பேர் வந்திருந்தார்கள். உடன் வந்திருந்த நண்பர் ‘இது பரவாயில்லை. இதற்கு முன் நான் சென்ற பிரசன்னாவின் கச்சேரிக்கு இதைவிடக் குறைவான கூட்டம் வந்திருந்தது. வீணை காயத்ரியின் கச்சேரிகளுக்கு அதைவிடக்குறைவான கூட்டம் வரும்.” என்றார். //

    அடடா! விளம்பரம் சரியாக இல்லை என்று தோன்றுகிறது. சென்னை போன்று இசை ரசிகர்கள் பெருகிய ஊரிலேயே இப்படியா? சமீபத்தில் பெங்களூரில் அல்சூரில் வீணை காயத்ரி கச்சேரிக்கு நல்ல கூட்டம் வந்தது (200 பேர்) என்று நண்பர் சொன்னார்.

    கிடார் பிரசன்னாவின் சக்தி என்ற ஆல்பம் கேட்டிருக்கிறேன். அதில் தீட்சிதர் மீட்ஸ் பாக் என்ற ‍அழகான ஃப்யூஷன் நெஞ்சை அள்ளும் ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *