காடென்னும் கடவுள்

வீட்டில் ஒரு வேப்பமரம்என் கிராமத்து வீட்டில் ஒரு மிகப்பெரிய தோட்டம் இருந்தது. வீட்டின் சுற்றுச்சுவருக்குள்ளேயே இருந்த அந்தத் தோட்டத்தில் பலவிதமான பூச்செடிகளோடு பாதாம்மரம், வேப்பமரம் இந்த இரண்டும் இருந்தன. என்னுடைய மிகப்பழைய சிறுவயது நினைவுகள் இந்த மரங்களோடு தொடர்புடையவை. ஐந்தாம் வகுப்பின் கோடை விடுமுறைக்காக நான் என் அம்மாவுடனும், அக்காவுடனும் உறவினர் வீட்டில் ஒருமாதம் தங்கியிருந்துவிட்டு வந்தேன். அப்பா மட்டும் வீட்டிலேயே இருந்தார். விடுமுறை முடிந்து ஊருக்குத் திரும்பிவந்து பார்க்கையில் மொத்தத் தோட்டமும் அழிக்கப்பட்டிருந்தது. மரங்களும் வெட்டப்பட்டிருந்தன. அந்தத் தோட்டமிருந்த இடத்தில் ஒரு விசைத்தறித் தொழிற்சாலை கட்டுவதாக என் சகோதரர் முடிவு செய்திருந்தார். என் அப்பாவும் எங்களிடம் தோட்டத்தை அழிக்கப் போவதைப் பற்றித் தெரிவிக்கவில்லை.

அந்தப் பூச்செடிகளையும், மரங்களையும் பெரிதும் நேசித்த என் அம்மா வெட்டவெளியாக இருந்த நிலத்தைப் பார்த்து பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார். எனக்குப் பெரிய வலியோ, இழப்போ இருக்கவில்லை. விசைத்தறிக் கருவிகளைப் பார்ப்பதற்கான ஒரு பெரிய ஆர்வம்தான் இருந்தது. சந்தோஷமாகச் சுற்றிக்கொண்டிருந்த எனக்கு அம்மாவின் அழுகை எரிச்சலைத் தந்தது!

என்னுடைய சொந்த வீட்டில் எங்கள் குடும்பத்தால் வளர்க்கப்பட்ட மரங்களை இழந்ததற்காகச் சிறுவயதில் வருந்தாத நான், பெங்களூரில் சாலைகளை விரிவாக்குவதற்காகச் சாலையோர மரங்கள் வெட்டப்படுவதைப் பார்க்கும்போதெல்லாம் பெரும் வலியை உணர்கிறேன். நம் இந்திய வாழ்வில் சூழலியல் வகித்த பெரும்பங்கை நான் விளக்கிக் கூறத் தேவையில்லை. தாவரங்களும், விலங்குகளும் நம் தெய்வங்களோடும், வாழ்க்கை முறையோடும் இணைந்தவை. இது மேற்கின் பார்வையில் பழங்குடி முறைகளைப் பற்றித் திரும்பத் திரும்பக் கூறப்படும் “Fear of unknown” காரணமாக விளைந்ததல்ல. மாறாக, இயல்பாகவே சூழலியல் குறித்து நம் மண்ணில் ஒரு ஆழமான புரிதல் இருந்தது. மனிதனைத் தவிர மற்றெல்லாவற்றையும் கீழானதாகக் கருதும் மேற்குலகுக்குத் தாவரங்களுக்கும் உயிரும் உணர்வும் இருக்கிறது என்பதை அறிவியல்பூர்வமாக நிறுவியதும் ஜகதீஷ்சந்திரபோஸ் என்ற இந்திய விஞ்ஞானிதான்.

‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் வரும் ஒரு மறக்கமுடியாத கதாபாத்திரம் தினமும் மரக்கன்றுகளை நட்டு, அவற்றைப் பராமரித்து வரும் ஒரு முதியவர். கிட்டத்தட்ட அந்தத் முதியவரை நினைவூட்டும் வகையில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கும் அய்யாசாமி என்ற பெரியவரைப் பற்றிய செய்திக்குறிப்பு ஒன்றை ‘தி இந்து’ நாளிதழில் படிக்க நேரிட்டது.

பெரிய கொடிவேரி நகரப் பஞ்சாயத்துக்குட்பட்ட வேட்டுவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த C.அய்யாசாமி என்ற 76 வயது முதியவர், தான் வளர்த்த மரங்களை “குழந்தைகள்” என்றுதான் குறிப்பிடுகிறார். அப்பகுதியைச் சேர்ந்த மக்களும், பறவைகளும் சந்தோஷமான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்காக இந்த மரங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும், சூழலியல் குறித்தும் பெருங்கவலை அவருக்கு இருக்கிறது.

“மரங்களில்லாமல் நாம் எப்படி மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்?” என்று கேட்கிறார் அவர். மிகக்குறைவான வருவாயைக் கொண்ட ஒரு சாதாரண பண்ணைத் தொழிலாளியான அவர் மரம் நடுதலை ஆரம்பித்தது ஒரு வானொலிச் செய்தியைக் கேட்டபின். “25 வருடங்களுக்கு முன்னால் நான் கேட்ட ‘வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்ற அனைத்திந்திய வானொலியின் வேண்டுகோள்தான் மரம்நடுதலைக் குறித்த தீவிரமான எண்ணத்தைத் தந்தது” என்கிறார் அய்யாசாமி. “வீட்டுக்கு மட்டுமில்லாமல் கிராமம் முழுவதுமே மரக்கன்றுகளை நடலாமே என்று யோசித்தேன். ஏனென்றால் அப்போது பறவைகள் ஓய்வெடுப்பதற்காக நிறைய மரங்கள் இருக்கவில்லை” என்கிறார் அவர்.

“அய்யாசாமி இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்” என்கின்றனர் அந்த கிராமத்து மக்கள். ஆனால் அய்யாசாமியோ ’25 வருடங்களாக மரக்கன்றுகளை நட்டுவந்ததைப் பார்க்கையில் பத்தாயிரம் என்பது குறைவான எண்ணிக்கை’ என்கிறார். ஆனால் அய்யாசாமியின் அத்தனை உழைப்பும் பயனில்லாமல் போகும் ஒரு நிலை இப்போது வந்திருக்கிறது. விறகுக்காகவும், மரச்சாமான்களுக்காகவும் மரங்களைச் சில பேர் வெட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

“எப்படியாவது இந்த மரங்களைக் காப்பாற்றியாக வேண்டும். ஆனால் எப்படியென்றுதான் தெரியவில்லை!” என்று ஊர்மக்கள் அனைவரும் ஒரேகுரலில் சொல்கின்றனர். வருவாய் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் இந்த மரங்களைப் பாதுகாக்கத் தங்களுக்கு உதவ வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். அய்யாசாமி மாவட்ட நிர்வாகத்துக்குக் கூட ஒரு புகார் மனு அளித்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் அதனால் இதுவரை எந்தப் பயனும் இல்லை. நம்மைச் சுற்றியிருக்கும் மரங்களுக்காக நாம் அய்யாசாமி போன்ற தன்னலமில்லாத பெரியவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். தான் நட்ட மரங்கள் தன் கண் முன்னாலேயே சட்டவிரோதமாக வெட்டப்படும் அவலத்தைக் காண நேரிடும் அவரைப் பற்றிய அந்த செய்திக்குறிப்பு மனதைக் கணக்கச் செய்வதாக இருந்தது!

இன்றைய இந்தியாவின் சராசரி காட்டுப்பரப்பின் சதவீதம் 23.41 சதவீதம். ஆனால் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த மகாராஷ்டிராவில் இன்றைய காட்டுப்பரப்பு, தேசிய சராசரிக்கும் கீழான 20 சதவீதம்தான். Afforestation எனப்படும் வனவளர்ச்சிக்குப் பெரும்தடையாக இருப்பவர்கள் மாவோயிஸ்டுகள் என்று கடந்த டிசம்பரில் அகர்த்தலாவில் நடந்த ஒரு இந்திய அளவிலான கருத்தரங்கில் வனத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

வனத்துறை அதிகாரிகள் மீதும், வனவளர்ச்சி நடவடிக்கைகள் மீதும் மாவோயிஸ்டுகள் தொடர்ந்து தங்கள் வன்முறையைப் பிரயோகித்து வருவதால் தங்கள் பணிகளை மேற்கொள்வது உயிருக்கே ஆபத்தான விஷயமாக இருக்கிறது என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரா, பீஹார், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளாலும், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களாலும் வனவளர்ச்சித்துறைப் பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் வனங்கள் அடர்ந்த கிழக்குப் பகுதிகளிலிருந்து மரங்கள் வெட்டப்பட்டு பங்களாதேஷுக்குக் கடத்தப்படுகின்றன. “எரிபொருள், வீட்டு உபயோகப்பொருட்கள் போன்ற பயன்பாடுகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டு பங்களாதேஷுக்குக் கடத்தப்படுகின்றன” என்கிறார் திரிபுராவின் வனத்துறை அமைச்சர் ஜிதேந்திர செளத்ரி. கொஞ்சம் கொஞ்சமாக பச்சைப் போர்வையை இழந்து வருகிறது இந்தியா.

மரங்களை சட்டவிரோதமாக வெட்டிப் பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது ஒரு உலகளாவிய பிரச்சினை. ஆப்பிரிக்காவின் காட்டுப் பகுதியிலுள்ள மரங்களை வெட்டி ஐரோப்பிய நிறுவனங்கள் அமெரிக்காவுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றன. இதனால் அந்தக் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் தொடர்ந்து இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதால் ஏற்படும் ஒரு காட்டின் அழிவை, ஜெயமோகன் தன்னுடைய ‘காடு’ நாவலில் மிக அழகாகப் பதிவுசெய்திருந்தார். காட்டின் ஒவ்வொரு அசைவையும், செடி, கொடி, விலங்குகளையும், வாழ்க்கையையும் மிக சுவாரசியமாகயும், நுணுக்கமாகவும் விளக்கிவிட்டு, அப்படிப்பட்ட காட்டை சில தனிநபர்கள் எப்படித் தங்கள் சுயலாபத்துக்காக அழிக்கிறார்கள், அவர்களுக்கு அரசு அதிகாரிகள் எப்படித் துணை போகிறார்கள் என்றும் அவர் எழுதியிருந்ததைப் படித்தபோது உண்மையிலேயே ஏதோ ஒரு சொல்லமுடியாத துக்கம் நெஞ்செல்லாம் பரவியது.

பூத்துக் குலுங்கும் பீச் மரங்கள்

பூத்துக் குலுங்கும் பீச் மரங்கள்

அகிரா குரோஸாவாவின் Dreams என்ற குறும்படத் தொகுப்பை சமீபத்தில் பார்த்தேன். அதில் ஒரு கதையில் தங்கள் வீட்டுத் தோட்டத்திலிருக்கும் பீச் (peach) மரங்களை அந்த வீட்டினர் வெட்டிவிடுகின்றனர். வெட்டப்பட்ட பீச் மரங்களின் ஆத்மாக்கள் அந்த வீட்டு பொம்மைகள் வழியாக வந்து, அந்த வீட்டுச் சிறுவனைக் கடுமையாக மிரட்டுகின்றன. பயந்து போய் அழும் சிறுவன், அந்த மரங்கள் வெட்டப்பட்டபோது சோகமாக அழுதான், உண்மையிலேயே அந்த மரங்களை அவன் பெரிதும் நேசித்தான் என்று அந்த ஆத்மாக்களுக்குத் தெரியவருகிறது. அதனால் அந்த பொம்மைகள் அவனை மன்னித்து, வெட்டப்பட்ட பீச் மரங்களை, அவன் பார்வைக்கு மட்டும் தெரியும்படி ஒரே ஒருமுறை தோன்றச்செய்து அவனை மகிழ்வித்து மறைகின்றன. இந்தக் குறும்படம் வழியாக என் வீட்டு மரங்கள் வெட்டப்பட்டபோது சந்தோஷமாக சுற்றிக்கொண்டிருந்த என்னைப் பெரும் குற்ற உணர்வுக்குள்ளாக்கிவிட்டுச் சென்றிருக்கிறது அகிரா குரோஸாவாவின் ஆத்மா.

14 Replies to “காடென்னும் கடவுள்”

  1. காடுகள் வெட்டபடுவதைப் பற்றி படிக்கும்போது வயிற்றினுள் ரொம்ப வேதனையை உணர்கிறேன்.

    மன் மரம் மனிதன் என்னும் வலைபதிவை படியுங்கள்.vincent2511@gmail.coம்.,என்பது அவரது முகவரி.கோவையில் இருக்கிறார்.அவரால் இயன்ற அலோசனையை தருவார்.

  2. maravalamblogspot.இதுதான் திரு வின்சென்ட் அவர்களின் வலைபதிவு

  3. சேது,

    பெங்களூரின் பிரதான வீதிகளில் மெட்ரோ ரயிலுக்கு இடம் ஏற்படுத்துவதற்காக வீழ்த்தப்படும் மரங்களையும் இடிக்கப்படும் வீடுகளையும் பார்க்கும்போது வயிற்றைப் பிசைகிறது. ஒரு பக்கச் சுவர் திறந்து, வீட்டின் உள்புறம் முழுக்க ஹோ என்று திறந்துகிடக்கும் சமையல் அறைகளையும் கட்டில் அறைகளையும் பார்க்கும்போது வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது. ‘வீடுகள் இவையென்றார்கள்’ என்று போகும் ஞானக்கூத்தனுடைய கீழ்வெண்மணிக் கவிதை அவ்வப்போது நினைவில் வந்துபோகிறது. வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலைதானா இதுவெல்லாம்? மனங்களையும் உணர்வுகளையும் மழித்துக் கட்டப்படுவதுதான் வளர்ச்சி எனப்படுவதா என்றெல்லாம் மனம் சஞ்சலப்படுகிறது. நகரக் காட்சி வெண்பாக்களுக்காகப் புகைப்படங்களை எடுத்திருக்கிறேன். வேற என்ன செய்ய முடியும்? கவிதை எழுதலாம். அதுக்கு மேல? நகரம் நகர்கிறது. அமீபா போல, ஏதோ ஒரு பக்கத்தில் தன் காலை நீட்டி, காலையே உடலாக்கி, காலையே வாயாக்கி, காலையே சீரண மண்டலமாக்கிக் கொண்டு நகரம் நகர்ந்தபடி இருக்கிறது. இன்றைக்குச் சிலரின் வலி, நாளைக்கு நகரத்தின் வசதி என்று அமைதிப்படுத்திக் கொள்ள முயன்றாலும் சிரமமாகத்தான் இருக்கிறது. ஒரே இரவில் மரியப்பன பாளையா பார்க்கில் பேரளவு‍‍ (காடு மாதிரி மனோகரமாகக் கிடந்த பெரும்பகுதி) வெட்டவெளியாக நிற்கும்போது மனத்தைப் பிசைகிறத. நம்ம மெட்ரோ! என்று மூலைக்கு மூலை அறிவிப்பபுப் பலகைகள் சிரிக்கின்றன. வளர்ச்சியில் அசுரத்தன்மை கலந்தே இருக்கிறது. It is like saying sex has an innate and inevitable share of violence in iட். நம்மால் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள மட்டும்தான் முடியும். இதுவும் பழகிப்போகும். வாழ்க்கையே அப்படித்தானே நகர்கிறது!

  4. //அந்தப் பூச்செடிகளையும், மரங்களையும் பெரிதும் நேசித்த என் அம்மா வெட்டவெளியாக இருந்த நிலத்தைப் பார்த்து பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார்.//

    மரங்களை நட்டு வளர்த்தவங்களுக்கு, இழப்பின் வலி மிகக் கடுமையாக இருக்கும். உங்களுக்கு அதை உணரும் வயது இல்லை, அப்போ.

    //இந்தக் குறும்படம் வழியாக என் வீட்டு மரங்கள் வெட்டப்பட்டபோது சந்தோஷமாக சுற்றிக்கொண்டிருந்த என்னைப் பெரும் குற்ற உணர்வுக்குள்ளாக்கிவிட்டுச் சென்றிருக்கிறது அகிரா குரோஸாவாவின் ஆத்மா//

    கன்னடத்தில் கூட கிரீஷ் கர்நாட்(பல வருடங்கள் முன்பே) எடுத்து ஒரு படம் வந்திருக்கிறது, மரங்களை வெட்டக் கூடாது என்பதை அறிவுறுத்தி. மற்ற நாடுகளில் ஒரு மரத்தை நாம் வெட்டும் முன்னர் அனுமதி பெறவேண்டும், எதற்கு வெட்டுகிறோம், எனச் சொல்லவேண்டும், பின்னர் அதே இடத்திலோ, அல்லது அந்த இடத்தில் இருந்து சற்று தூரத்திலோ மற்றொரு மரத்தை நட்டு, அது வளரும் வரையில் நம் செலவில் பராமரிக்க வேண்டும், எனக் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதே மாதிரி இங்கேயும் வந்தால் ஓரளவு முன்னேற்றம் அடையலாம். அதிலும் நம்மவர்கள் முனைந்து ஊழலில் இறங்கலாம், அதுவும் எதிர்பார்க்கக் கூடியதே!

  5. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் மரங்களின் பெரிய கிளைகள் (நிழல் தந்துகொண்டிருந்தவை) கேபிள் ஒயர்கள் தடையின்றி செல்ல வெட்டப்பட்டன. யார் அனுமதித்தது என்று தெரியவில்லை. எல்லாம் வல்ல இறைவன் தான் இந்நாட்டு மக்களுக்கும் மரங்களுக்கும் துணை.

  6. சிந்தனையை தூண்டும் ந‌ல்ல பதிவு. பூனே மாந‌கரிலும் சாலையொர மரங்களை அழித்து சாலையை விரிவுபடுத்துகிறார்கள். அதை பார்க்கையில் வேதனையாகயிருக்கிறது. அய்யாசாமியின் பணி தொடர வாழ்த்துக்கள்

  7. உங்களது வீட்டில் இருந்தது போலவே எங்களது வீட்டின் பின்புறம் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் பழமையான புளியமரம் இருந்தது. எங்கள் வீட்டின் ஓராண்டு உபயோகத்திற்கு எடுத்து வைத்தது போக கிட்டத்தட்ட முன்னூறு, நானூறு ரூபாய்க்க் விற்போம். அவ்வளவு பெரிய மரம். முப்பது மீட்டர் சுற்றளவுக்கு பறந்து விரிந்திருந்த மரம் அது. பக்கத்து வீட்டுக்காரர்கள் பழத்தைப் பறிக்கிறார்கள் என சொல்ல முடியாது.. ஏனெனில் அவர்களது வீட்டிலும் கிளைபரப்பி இருந்தது அது. என்ன காரணத்துக்காகவோ அது வெட்டப்பட்டு அந்த இடத்தை ஹோ என்ற வெட்டவெளியாகப் பார்த்தபோது ஒரு இனம் புரியாத பயம் வந்து வயிற்றைப் பிசைந்தது. எதோ ஒரு பாதுகாப்பை இழந்துவிட்டது போன்ற ஒரு எண்ணம். அந்தப் பாவத்தையெல்லாம் எங்களது பள்ளியில் நாங்கள் வைத்து வளர்த்த மரம் மூலமாக தொலைத்தேன் என நினைக்கிறேன்.

    நல்ல கட்டுரை.

    அன்புடன்,

    ஜெயக்குமார்

  8. மரம் இறைவன் தந்த வரம். மனித குலத்தை வாழ்விக்க வந்த தாவரம். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரம்.
    மண்மகள் மேல் முளைத்துள்ள பலவிதமான தாவரம்
    மழையை மேகத்திடமிருந்து பெற்று தன் வேர்க்கால்களில் தேக்கி நீர்வீழ்ச்சியாகவும், நதியாகவும் பாய்ந்து வாழ்விக்க வந்த கண்கண்ட தெய்வம் மரங்களே அனைத்து உயிர்களும் வெளியிடும் கரிம வாயுமனைத்தையும் அனைத்து இயந்திரங்கள், மற்றும் சாதனங்களிளிருந்தும் வெளிவரும் நச்சு வாயுக்களையும் உட்கொண்டு பிராண வாயுவினை அளித்து உயிரினங்களையும் மனித குலமனைத்தையும் காக்கும் மரங்கள் எல்லாம் சிவபெருமானின் வடிவங்கள்தானன்ரோ.
    இதிஹாச புராணங்களில் குறிப்பிட்டுள்ள ஆலகால நஞ்சுவினை தான் உட்கொண்டு அகிலத்து உயிரினங்களை காத்த அந்த சிவம் தாவரங்களாய் மரங்களாய் கண்ணுக்கெதிரில் நின்றிருந்தும் கண்ணிருந்தும் குருடராய் போய்விட்ட சிலர் கடவுள் கண்ணுக்கு தெரியவில்லை என்று பிதற்றுவது மடமையன்றோ?
    பரந்தாமனை பச்சை மாமலை என்றும் அன்னை பார்வதியை பச்சை நிறமுடையாள் என்றும்
    புராணங்களில் வர்ணித்திருப்பது அதனால்தானன்ரோ .
    காண்பவை யாவிலும் அனைத்திலும் கலந்து
    நம் கண் முன்னே நிற்கின்ற அவளை அறியாமல்
    எங்கேயோ எதிலேயோ தேடிகொண்டிருக்கும் மக்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?
    எல்லோரையும் ஈன்றவள், எல்லோரையும் காப்பவள் ,
    முடிவில் எல்லோரையும் தன்னில் கொள்பவள்
    அவள் யார் தெரியுமா? மரங்களூடே,மலைகளூடே கடல்களூடே, மற்றும் மண் முழுதும் படர்ந்தவள்
    இலையாகவும் பூவாகவும் பிஞ்சாகவும் காயாகவும் கனியாகவும் விதையாகவும் உணவாகவும் மருந்தாகவும் அமைந்து அனைத்து உயிர்களையும் காப்பவள் தானும் இவ்வுலகில் இருந்துகொண்டு
    அனைத்தையும் வாழ்விப்பவள்.
    இதை அறிந்துதான் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வம்கள் என போற்றி வழிபாடு செய்யும் நெறியை ஏற்படுத்தினரோ?

  9. மறுமொழி இட்ட அனைவருக்கும் நன்றி.

    உண்மைதான் ஹரிகி. பெங்களூரின் குளிர் இருள் சூழ்ந்த பல பகுதிகள் வெளிச்சமாகிக் கொண்டிருக்கின்றன. மரங்களில்லாத எம்.ஜி ரோடு, கோரமங்களா பகுதிகளைப் பார்க்கவே மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. வேறு வழியில்லை. பெங்களூர் தன் சக்திக்கு மீறி வளர்ந்துவிட்டது. இத்தனை வாகனங்கள் செல்லவேண்டுமென்றால் சாலையை விரிவாக்கியே தீரவேண்டும்.

    அதீதமான வளர்ச்சிக்கு நாம் தரும் அதீதமான விலை இது.

  10. காடு என்ற படத்தை எடுத்த கிரீஷ் கார்நாட் குறித்து கீதா சாம்பசிவம் ஒரு குறிப்பைப் பதித்தார். அந்தப் படம் காடு என்பதை ஒரு உருவகமாக மட்டும்தான் பயன்படுத்தியது. அதில் காடு என்ற ஒரு உயிருள்ள பேருரு உடைய தூலமான எந்தப் பிரச்சினையும் மையப்படுத்தப்படவில்லை என்பது என் நினைவு.

    அதன் மையக் கதை கிராமத்து இந்தியா வன்முறையிலும், மூடத்தனத்திலும், ஆணாதிக்கத்திலும், ஜாதிய அடக்குமுறையிலும் ஊறி இருக்கிறது. காட்டைப் போல இருள் மண்டிய சமுகவாழ்க்கை நிலவும் இடம் அது என்று சுட்டியது.

    அக்கருத்தை நிலை நாட்டவோ என்னவோ துவக்க கால இந்திய கலைப்படங்களுக்கே உரித்தான கருமை மண்டிய படப் பிடிப்பு அதில். எடுத்தவர் சிறப்பான ஒளிப்பதிவாளர்தான். கோவிந்த் நிஹ்லானி. ஆனால் இயக்குநர் கிரீஷ் கார்நாட்.

    இந்திய சமூகத்தையும், இந்தியாவையுமே மேற்கின் சிந்தனையாலும், அதன் மதிப்பீடுகளாலும் மட்டுமே பார்த்து அதன் மீது எப்போதும் தீர்ப்பு சொல்லவே முனைந்து நிற்கும் ஒரு கூட்டம் இந்திய மேல்தட்டு அறிவு சீவிகள் இந்தியாவில் நிரம்பவே உண்டு. இந்தியாவில் எல்லா சுதந்திரத்தையும் அரசு அதிகாரிகளுக்குத் தாரை வார்த்து மக்களை அரசிடம் கை ஏந்தும் பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்கும் முனைப்போடு நடந்த ஒரு மோசமான ஆட்சி முதல் 40 வருடங்கள் போல நடந்தது. அந்த வருடங்களில் கல்வித் துறையில் ஆட்சி செலுத்திய அரசியல் கருத்துகள் இன்றளவும் பெருமளவு (கல்லூரி வரை சென்ற) இந்தியரின் பார்வையில் சுயவெறுப்புப் புகையை ஊதி, அவர்தம் மொழியைக் கூட அன்னியமாக்கி இந்தியப் பண்பாட்டிலிருந்து அவர்களை வெற்றிகரமாகப் பிரித்து வைத்திருக்கின்றன.

    இந்த வகைக் கருத்துப் பிரச்சாரத்தை நடத்திய சில முதல் கட்ட அறிவு சீவிகள் (நேருவைப் போலவே) அன்னிய மண்ணில் உயர்கல்வி பெற்றவர்களாக இருந்தனர். அந்த வரிசையில் வந்தவர் கிரீஷ் கார்நாட். கன்னடத்தில் எழுதினாலும் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கிலம் போலவே அதையும் கையாண்டிருப்பார் என்பது என் ஊகம். ஏன் இப்படிச் சொல்கிறேன்? (எனக்கோ கன்னடம் தெரியாது). அவருடைய காடு படம் அப்படி ஒரு அன்னியப் பார்வையோடு இந்திய மக்களை அணுகியது என்பது பிற்பாடுதான் தெரிந்தது.

    அதை ஒரு அன்னியர் உடனே இனம் காண்கிறார் என்பது எனக்கு இப்போது தெரிந்து அந்த அன்னியருடைய திறமை மீது வியப்பு வந்தது. அவருடைய ஒரு விமர்சனம் இங்கே கிடைக்கும்.

    https://www.dogheaddevilbarking.com/3wc/kaadu.html

    இந்தியாவையே ஒரு காடாகப் பார்த்து பீதியோடும், கவலையோடும்தான் ஆங்கிலேயர் நம்மை ஆண்டிருக்கின்றனர். இது இன்று அவர்களுடைய வாரிசுகளே தாம் இந்தியாவை எப்படி அணுகினோம் என்று விவரமாக சோதித்துப் பார்த்து எழுதும் வரலாற்றியல் நூல்களில் இருந்து புலப்படத் துவங்கி இருக்கிறது.

    இந்த மோசமான அணுகுமுறை இந்தியாவில் இன்றும், மேல் தட்டு மக்களிடம் மறுக்கப் பட முடியாத பொது அறிவுத் தேற்றமாகவே புழங்குகிறது. இந்தப் ‘பொது அறிவை’ பரவலாக பொதுமையாக்கியதில் ஆங்கிலேயர், ஜெர்மானியர், அமெரிக்கர் போன்ற வெள்ளைத் தோல் மக்களின் அறிவுத் தேட்டைக்கு நிறைய பங்களிப்பு உண்டு.

    ஒரு மோசமான, இனவெறிப் பார்வையை மைய உந்து சக்தியாகக் கொண்ட இந்த வகை உலகப் பார்வையை, உலகமயமான மனிதாபிமானப் பார்வை என்று எடுத்துக் கொண்டு, அப்படியே இந்தியாவை அணுகி ‘கலைப் படங்களை, படைப்புகளை’ ஆக்கிய பல அறிவு ஜீவிகளில் திரு.கார்நாடும் ஒருவர் என்பதை வருத்தத்துடன் இங்கு குறிக்க வேண்டி இருக்கிறது. ஏதோ கன்னட மொழியில் எழுதி, நடித்து, திரைப்படம் எடுப்பதால் அவர் மண்சார் சிந்தனையாளராகி விடவில்லை. மேல்தட்டு காலனிய வாதம் இவரையும் பாதித்திருக்கிறது. மண்சார் சிந்தனை வேண்டும் என்று மேற்கின் பல்கலை அரங்க மேடைகளில் பேசும் அனந்த மூர்த்தி போன்றாருமே இப்படிப் பட்ட மேலைச் சிந்தனையின் போலியோ நோயால் அறிவு சூம்பியவர்கள்தாம்.

    இந்தியா, இந்திய சமூக அமைப்பு ஆகியவற்றைக் காட்டுக்கு உருவகித்து இந்தாலஜி என்ற துறையில் எழுதித் தள்ளிய மேலைநாட்டவரின் குறுகிய இனவெறிப் பார்வையைச் சாடி ரானல்ட் இண்டன் ஒரு நீண்ட புத்தகம் எழுதி இருக்கிறார். ‘Imagining India’ என்ற இந்த நூலின் அனைத்துக் கருத்துகளையும் நாம் ஏற்கத் தேவை இல்லை எனினும், அதன் மையக் கருத்து‍‍ இந்தியர் தம்மை அறிய விடாமல், தம் வாழ்வைத் தாமே தொடர்ந்து மறு உருவமைக்க முடியாமல் அவர்களுடைய சிந்தனை மரபு, வரலாற்று ஞானம், மேலும் உளவியல் அறிதலைக் கூடப் பழுதாக்கிய சாதனை இந்த இந்தாலஜி வல்லுநர்களுடையது என்பது, அதை நாம் சுலபமாகவே ஏற்க முடியும்.

    சேதுபதி அருணாசலத்தின் காடு குறித்த அவல அறிக்கை மேற்கண்ட குறியீட்டுலகக் காரிருள் பற்றிய நினைவுடன் சேர்ந்து விட என் மனதில் கசப்பு ஊறுகிறது. ஆனால் நொய் நம்மைப் பீடித்திருக்கிறது என்பதைப் பேசத் துவங்குவதே சிகிச்சையின் துவக்கப் படி. அடுத்தடுத்து நாம் எங்கெங்கே சென்று நோயைத் தீர்க்கலாம் என்று யோசிப்போம் என்று நம்புகிறேன். இதை ஏதோ அவரவர் ஓரிரு மரம் நடுவதில் தீர்க்க முடியாது. காடுகளைப் பெருமளவில் மறுதுவக்கம் செய்ய இந்திய சமுதாயமே பங்கெடுத்து இறங்கினால்தான் முடியும். அதை மேற்கு காடுகளை அணுகிய விதத்தில் நாமும் அணுகினால் அது மற்றுமொரு பெரும் சாபக் கேடான முயற்சியாகத்தான் முடியும்.

  11. கீதா சாம்பசிவன் அவர்கள் கருத்து தொடர்பாக-
    இப்போதும் சட்டம் இருக்கிறது பச்சை மரங்களை வெட்ட வேண்டும் என்றால் கோட்டாச்சியர் அனுமதி பெறவேண்டும் என்று. சட்டம் உள்ளது.
    ஆனால் சட்டத்தை காலின் கீழ் போட்டு மிதிக்கும் சமூக விரோதிகளால் அது செயலிழந்து போய் விட்டது.

  12. திரு மைத்ரரேயா,நஅமது சமுதாயத்தினை குறித்து சுய பரிசோதனை தேவையில்லை என்ஙீற்களா?இந்து மதம் என்றாலே எதையும் கேள்வி கேட்காமல் ஒத்துகொள்ள வேண்டாம் என்றும் ஒரு எண்ணமும் உண்டல்லவா?

  13. அன்புள்ள சீதா,

    நியாயமான விமர்சனம் முக்கியமானதுதான். ஆனால் அதே சமயம் நியாயமில்லாத, மேற்கின் கண்ணாடி வழியே எல்லாவற்றையும் பார்க்கும் அபத்தமான, நேர்மையில்லாத விமர்சனங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. கிரீஷ் க‌ர்நாட்டின் பார்வையிலிருக்கும் இட‌து சாரி பார்வை சார்ன்த‌ இந்தியா மீதான‌ ம‌திப்பீட்டையே மைத்ரேயா சாடுகிறார். கிரீஷ் க‌ர்நாட் இன்திய‌ சூழ‌லிய‌ல் குறித்து விம‌ர்சிப்பது, சாதிய‌த்தைப் ப‌ற்றி திராவிட‌க்க‌ட்சிக‌ள் பேசுவ‌தைப் போன்ற‌ ஒன்று. திராவிட‌க் க‌ட்சிக‌ளை விம‌ர்சிப்ப‌வ‌ர்கள் விம‌ர்ச‌ன‌மே கூடாது என்று சொல்கிறார்க‌ள் என்று அர்த்த‌மாகாது.

    அன்புட‌ன்,
    சேதுப‌தி

  14. வனம் பற்றிய இக்கட்டுரையிலும், இது தொடர்பான மறுமொழிகளிலும் ஜப்பானிய அனிமேஷன் பட இயக்குனர் Hayao Miyazaki அவர்கள் இயக்கிய Princess Mononoke படம் குறிப்பிடப்படாதது வியப்பைத் தருகிறது.

    கிரீஷ் கர்னாட் போன்ற வக்கிர அறிவுசீவிகளின் படங்கள் தவறான உதாரணங்களாக (சரியாகவே) முன்வைக்கப்படும்போது, மியாஜகியின் படங்கள் சரியான சான்றுகளாக முன்வைக்கப்படுதல் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *