நகரம் நானூறு – 6

நகரம் நானூறு

cuckoo-009மழைக்காலத்தில் கூவுகின்ற குயில் ஒரு அற்புதமா வாழ்க்கைச் சித்திரமல்லவா! துணையைத் தேடிக் கூவுகிறது குயில் (mating call). பருவம் கடந்து போனபின்பும் இந்தக் குயில் கூவிக்கொண்டிருக்கிறது. பருவம் கடந்தபின்னும் துணையைத் தேடிக்கொண்டிருக்கும் இந்தப் படிமம் எத்தனையோ சேதிகளைச் சொல்கிறதில்லையா! மழையில் நடுங்கிக் கொண்டு கூவிக் கொண்டிருக்கும் குயிலின் புகைப்படத்துக்காக கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் காத்திருந்தேன். இந்தப் படத்தில் நடுக்கம் தெரிந்தால், அதற்குக் காரணம் குளிரால் குயில் நடுங்கிக் கொண்டிருக்கிறது என்பது.cuckoo-006 காட்சியைப் படம் பிடிக்கத்தான் காலச்செலவு ஏற்பட்டது. வார்த்தையில் படம்பிடிப்பது இவ்வளவு வேலை வாங்கவில்லை.

சன்ன மழைத்தூறல்; சாத்திவைத்த சன்னல்கள்
முன்னோட்ட மேக முழக்கங்கள் – இன்னும்
சருகுதிரும் தாழ்கிளையில் தன்னுள்தான் ஆழ்ந்து
குரலுடைந்து கூவும் குயில்

6 Replies to “நகரம் நானூறு – 6”

 1. //
  சருகுதிரும் தாழ்கிளையில் தன்னுள்தான் ஆழ்ந்து
  குரலுடைந்து கூவும் குயில்
  //

  மிக அழகான, சோகம் ததும்பும் வரிகள் ஹரிகி. இரண்டாவது புகைப்படமும் மிக நன்றாக வந்திருக்கிறது!

 2. நல்ல கவிதை.

  //குயில் (mating call). பருவம் கடந்து போனபின்பும் இந்தக் குயில் கூவிக்கொண்டிருக்கிறது. பருவம் கடந்தபின்னும் துணையைத் தேடிக்கொண்டிருக்கும் இந்தப் படிமம் எத்தனையோ சேதிகளைச் சொல்கிறதில்லையா//

  உண்மை. எனக்கு மன‌தில் பட்டது கலியானத்திற்கு காத்திருக்கும் இளைஞர்களும், இளைஞிகளும்..

 3. சேது, நன்றி.

  ஜெயக்குமார், இந்தப் படிமத்தில் பல நிகழ்வுகள் தொக்கி நிற்கின்றன. Missing the bus என்பது எப்படி வாழ்க்கையின் எத்தனையோ சம்பவங்களோடு இணைசேர்க்கப்படுகிறதோ அப்படி. கல்யாணத்துக்குக் காத்துக் கிடக்கும் ஆண், பெண் இளைஞர்கள் ஒருபக்கம் இருக்கட்டும். தன் காலம் முழுவதையும் தன்னுடைய ஆற்றலுக்குத் துளியும் தொடர்பில்லாத வேலையில் கழித்துவிட்டு, காலம் கழிந்த பின்னால் ‘இப்படிச் செய்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டு கிடக்கும் முதியவர்களும் இந்தப் படிமத்தில் அடங்குவர்.

  ஒரு வார்த்தை பேசிவிட்டுப் போனதற்கு இருவருக்கும் நன்றி. பேசாமல் இருந்தாலும் ரசிப்பவர்களுக்கும், மற்றவர்களுக்கும் நன்றி.

 4. ஹரிகி ஸார்,
  படத்தின் நடுக்கத்தை குயிலின் நடுக்கம்.. குளிரின் நடுக்கம்.. தென்னையின் நடுக்கம் தென்றலின் நடுக்கம் :‍) என்றீர்கள். கவிநயம்…

  படத்தில் நடுக்கம் உள்ளதே தவிர கவிதையில் கம்பீரமெ உள்ளது.

  நன்றி

 5. ஜே, குயிலைப் படம் எடுப்பது மிகவும் சிரமமான காரியம். ‘தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ என்ற சந்தேகம் தோன்றினால் அடுத்த வினாடியே பறந்துவிடும். இப்படி எத்தனையோ முறை முயன்று எடுத்தவை மேலே உள்ள இரண்டு படங்களும். பத்தடி தொலைவில், கொட்டும் மழையில், அதன் பார்வையில் பட்டுத் தொலைத்துவிடக்கூடாதே என்ற உணர்வோடு எடுத்தது. கேமிராவை நடுக்கமின்றிப் பிடிக்கும் அளவுக்குக் கை பழகிவிட்டது. படத்தை அதற்கு உரிய ரெசல்யூஷனில் பார்த்தீர்கள் என்றால், குயிலின்மேல் மழைத்துளி பட்டுத் தெறித்துக் கொண்டிருப்பதும் தெரியும். பின்புலத்தில் மழை விழுந்துகொண்டிருக்கிறது. அவற்றை இந்த ரெசல்யூஷனில் காட்ட முடியவில்லை. காமிரா ஓரளவுக்குப் பழகிவிட்டது.

  எப்படியிருந்தாலும் உங்களுடைய குறும்புக்கும், கவிதையைப் பற்றிய வார்த்தைக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published.