தாமஸ் பெரி: சூழலியல் மூலம் பிரம்மத்தைத் தொட்ட கத்தோலிக்க துறவி

ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தாமஸ் பெரி (1915-2009) இறந்தார். அவர் ஒரு கத்தோலிக்க துறவி. தாமஸ் பெரிக்கு அஞ்சலி. ஒரு வெள்ளைக்கார கத்தோலிக்க துறவிக்கு ஒரு தமிழ் இந்து ஏன் அஞ்சலி செலுத்த வேண்டும்?

thomasberryஏனெனில் உரையாடலில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். கத்தோலிக்க நிறுவனத்தில் இருந்து கொண்டு மாற்றுமத நம்பிக்கைகளை அதிகபட்சம் சகித்துக்கொள்வதே பெரிய இறையியல் சாதனையாக இருக்கும் சூழலில் அவற்றினை சகிப்பதற்கும் ஒரு படி மேலே சென்று அவற்றிலிருந்து தமது ஆன்மிகத்தை ஆழப்படுத்த முடியும் என நம்பிய மிக அரிதான உண்மையான ஆன்மிக மானுடர்களில் அவரும் ஒருவர். மதங்களைத் தாண்டிய ஆன்மிகம் குறித்து டாக்டர். அப்துல்கலாம் சொல்லுவார். அத்தகைய அரிய மனிதர்களில் ஒருவர் தாமஸ் பெரி என நாம் நம்புகிறோம்.

ஏனெனில் நாம் இந்த பூமியின் புனிதத்தில் நம்பிக்கை வைத்துள்ளோம். ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் என்பது நம்முடைய பண்பாட்டின் இதயக்குரல். ஆபிரகாமிய மதங்கள் இதனை எதிர்க்கின்றன. மூடநம்பிக்கை என கருதுகின்றன. ஆனால் அறிவியல் ஆபிரகாமிய இறையியலின் அடிப்படைகளை ஆட்டம் காண வைத்துள்ளது. இதனை மிகச்சில இறையியலாளர்களே கிறிஸ்தவத்தில் உணர்ந்துள்ளனர். அத்தகையவர்கள் தங்கள் மதத்தின் குறைபாடுகளை உணர்ந்தனர். அதனை தாண்டிட முயன்றனர்.

தெயில் டி சார்டின் அத்தகையவர்களில் ஒருவர். அந்த மரபின் நீட்சியாகவே தாமஸ் பெரியை காணவேண்டும். புவியினை மதிக்கும் ஒரு ஆன்மிகத்தை உருவாக்க அவர் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். வத்திகானின் அதிகார பீடங்களில் எங்கோ சென்றிருக்க வேண்டிய அவர் தமது வாழ்க்கையை முழுக்க அமெரிக்காவில் ஒரு மூலையில் சூழலியல் பணிகளிலும் எழுத்துக்களிலுமாக கழித்தார். ஹிந்து தருமம் குறித்த அவரது படிப்பு நிச்சயமாக அவரது உலகப்பார்வையை மாற்றியது என்றே சொல்ல வேண்டும். அவர் எழுதினார்:

நமக்கு (மேற்கத்திய கிறிஸ்தவர்களுக்கு ஹிந்து தருமம் குறித்து) பளீரென தெரிகிற விஷயம் என்னவென்றால் இறையனுபவம் என்பது இந்தியாவில் நம்மைச் சூழ்ந்திருக்கும், நம் பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும், இயற்கையின் வடிவங்களிலிருந்து வேறுபட்டதல்ல….உபநிடதங்களிலிருந்து தெய்வீகம் ஒவ்வொரு வடிவத்திலும் இருக்கும் என்பதை நாம் அறிகிறோம் …இந்தியாவின் மிக முக்கிய கோட்பாடுகளில் ஒன்று அகிம்சை ஆகும். எதிர்மறையாக சொல்லப்படும் இந்த பண்பு பிரபஞ்சம் அனைத்திலும் உள்ள சிருஷ்டியைத் தழுவும் அன்பினை குறிப்பதாகும். [1]

அவர் ஒரு கத்தோலிக்க துறவியாக சீன மற்றும் இந்திய தத்துவங்களை படிக்க ஆரம்பித்தார். இது அவரை இயற்கையில் இருக்கும் இறை குறித்த உணர்வினை அளித்தது. பின்னர் அவர் தன்னை இறையியலாளன் (theologian) எனக் கூறுவதைத் தவிர்க்க ஆரம்பித்தார். தன்னை பூமியியலாளன் (Geo-logian) எனக் குறிப்பிட ஆரம்பித்தார். பாரத ஞான மரபு கூறும் “மாறும் பிரபஞ்சத்தின் பின்னால் இருக்கும் மாறா உண்மை” – எனும் உண்மையை அவர் தம்முடைய சூழலியல் பார்வையின் அடிப்படையாகக் கொண்டார்.

மேற்கத்திய அறிவியல் நிறுவன அமைப்பு அடிப்படையில் நிறுவன கிறிஸ்தவத்தன்மை கொண்டிருப்பதாலேயே இன்றைக்கு நாம் காணும் சூழலியலின் மிக மோசமான அழிவுகள் ஏற்படுகின்றன என அவர் கருதினார். 1973 முதல் அவர் “பூமி சார்ந்த ஆன்மிகத்தை” (Earth spirituality) தம்முடைய கல்லூரிப் பேருரைகளில் கற்பிக்க ஆரம்பித்தார். பூர்விக அமெரிக்க ஆன்மிகச் சடங்குகளை ஆராய்ந்த தாமஸ் பெரி அவற்றை கிறிஸ்தவ சடங்குகளுடன் ஒப்பிடலானார்.கிறிஸ்தவத்தின் சடங்குகள் சூழலியல் உணர்வினை இழக்க வைப்பதாக அவர் கருதினார்.

ஒமாகா (Omaha) பூர்விக அமெரிக்க குடிகளின் பிறப்புச்சடங்கை கிறிஸ்தவ பிறப்பு-முழுக்கு (Baptism) சடங்குடன் ஒப்பிட்ட அவர் ஒமாகா சடங்கு முழு பிரபஞ்சத்தையும் அணைக்கும் தன்மையுடன் இருப்பதாகவும் கிறிஸ்தவச் சடங்கோ மானுட மையத்தன்மை மட்டுமே கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். கிறிஸ்தவத்தின் வரலாற்று உணர்வு புவியோடு இசைந்த பாகனிய-ஷாமனிய மதங்களின் பிரபஞ்ச உணர்வை அழித்துவிடுகிறது என்பதை பெரி உணர்ந்திருந்தார். தாமஸ் பெரி இரண்டுமே தேவை என கருதினார். [2] (ஆனால் வரலாற்று உணர்வு என்பது என்ன? எனும் கேள்வி எழுகிறது. யாருடைய வரலாற்று உணர்வு?)

பூமியின் சூழலியல் குறித்த பிரச்சனைகளிலிருந்து மீண்டெழ பாரம்பரிய புனிதச்சின்னங்களின் புனிதத்துவம் மீட்கப்பட வேண்டுமென அவர் கருதினார். ஒவ்வொரு இறைவடிவமும் ஒவ்வொரு கலாச்சாரமும் சூழலியலின் இறைத்தன்மைக்குள் மனிதன் தன்னை இணைத்துக்கொள்வதற்கான ஒரு கருவியாக அவர் கருதினார். [3]

புவியின் காற்றாடல்களில் கலந்துவிட்ட தாமஸ் பெரியின் குரல் மேற்கத்திய உலகில் முக்கியமான (ஆனால் நிறுவன மத அமைப்புகளால் பெரிதாக கருதப்படாத அதிகாரமற்ற) ஒரு குரலாக என்றென்றைக்குமாக இருந்து கொண்டிருக்கும். இத்தகைய குரல்களே மானுடத்தின் பாலங்களாக அமைகின்றன. தாமஸ் பெரி எழுதுகிறார்:

பழமையான பூமி மானுட உறவானது இன்று ஒரு புதிய சூழலில் -அதன் ஆன்மிக மற்றும் பௌதீக இயக்கத்துடன்- மீட்டெடுக்கப்பட வேண்டும். மலைகளும் நதிகளும், அனைத்து உயிர்களும், வானும் சூரியனும் சந்திரனும் மேகங்களும் – இவை அனைத்துமாக ஒரு குணப்படுத்தும் புனிதத்தன்மை கொண்ட இருப்பினைக் கொண்டுள்ளன எனும் உணர்வு மனிதனுக்கு இன்றைக்கு அவனுடைய அக ஒருமைக்கும் புற தேவைகளுக்கு அவசியம் ஆகும். இந்த இருப்பே அல்லாவாகவும், பிரம்மமாகவும் , சூன்யதா என்றும் போதிசத்வ புத்தத்தன்மையாகவும், புனிதப் பெண்மையாகவும் ஏகமாகவும் உணரப்படுகிறது. இவ்வுணர்வே மானுடத்தின் மிக ஆழமான சுவாசமாகும். இது இல்லாமல் மானுடம் மூச்சுவிடும் காற்றையும் இழந்துவிடும். [4]

மேற்கத்திய இறையியல் குறுகிய அடிப்படைவாத கருத்தியலுக்குள் சென்று முடங்கிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. வளரும் உலகநாடுகளின் பூர்விக கலாச்சாரங்களை அழித்தொழிக்க மேற்கத்திய மதமாற்ற அமைப்புகள் பெரிய அளவில் நிறுவன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மூயன்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்து தருமம் போன்ற வளரும் சமுதாயத்தின் ஒரு சமயம் எப்படி இத்தகைய சக்திகளை எதிர்த்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்? எப்படி இந்த சர்வதேச சக்திகளுக்கு மேலாக அமைதியை பரப்பும் மானுட பன்மையை பாதுகாக்கும் ஒரு சக்தியாக செயல்பட முடியும்?

இந்த கேள்விகளுக்கான விடைகளில் ஒன்று: உரையாடல். வேதாந்தம் உண்மை என்றால் அது கலாச்சார எல்லைகளுக்கு அப்பால் உணரப்பட வேண்டும். செல்வத்தின் சக்தியாலோ அல்லது படைப்பலத்தின் சக்தியாலோ அல்லது அரசுகளின் ஆதரவாலோ அல்ல – உண்மையை ஆழமாக உணரும் மென்மையான குரல்கள் வேதாந்த சத்தியத்தை கலாச்சார எல்லைகளுக்கு அப்பால் பிரகடனப்படுத்த வேண்டும். அத்தகைய குரல்களை இனங்கண்டு நாம் நம் ஆன்மிக-பண்பாட்டு உரையாடல்களைத் தொடர வேண்டும். மானுடத்தின் காயங்களை குணப்படுத்தி ஒருங்கிணைக்கும் அந்த சக்தி பாரதப் பண்பாட்டில் உள்ளது என நாம் உறுதியாக நம்புகிறோம். அந்த நம்பிக்கையின் அக்கரை விகசிப்பாக தாமஸ்பெரியை நாம் காண்கிறோம்.

எனவே அவருக்கு தமிழ் இந்து.காம் இணைய தளத்தின் அஞ்சலி.

சுட்டிகள்:

[1] தாமஸ் பெரி, Forward to Religions of India, 2nd Edition, Anima publications, 1992, பக். i, iii
[2] Anne-Marie Dalton, A theology for the earth: the contributions of Thomas Berry and Bernard Lonergan, University of Ottawa Press, 1999 பக்.54-55
[3] தாமஸ் பெரி, Catching the Power of the Wind, Statement of the Occasion of the Thirtieth Anniversary of the United Nations at the Spiritual Summit Conference V, October 24, 1975
[4] தாமஸ் பெரி: 1975
அவரது இணைய தளம்: https://www.thomasberry.org

11 Replies to “தாமஸ் பெரி: சூழலியல் மூலம் பிரம்மத்தைத் தொட்ட கத்தோலிக்க துறவி”

  1. Appreciate Tamilhindu.com and Thomas Berry for explaining that the existence has no exceptions. Abrahamic cults differ with others by making exceptions and forbid eating the frutis of the wisdom tree; Sanathana Dharma is inclusive and loves forbidden fruits.

    May the seed of the wisdom tree fall on fertile minds !!

    May the peasant Aravindan make many pleasant aravindhams !!

  2. Dear Mr. Aravindan,

    // அவர் ஒமாகா சடங்கு முழு பிரபஞ்சத்தையும் அணைக்கும் தன்மையுடன் இருப்பதாகவும் கிறிஸ்தவச் சடங்கோ மானுட மையத்தன்மை மட்டுமே கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். //

    Such a pround and subtle insight. I myself have felt this many times, while watching temple Pujas in Tamilnadu and fetivals in my friends’ houses.

    Thanks a bunch for writing abt this great soul. It helps many like me to enlarge our vision and appreciate multi-faceted truth.

    -Francis Selva

  3. அரவிந்தனின் இந்தக் கட்டுரை விழிப்புனர்வை அடைந்த ஒரு துறவியை அடையாளம் காட்டுகிறது அவரது புத்தகத்தின் தலைப்பே எவ்வளவுதூரம் சூழலியளராக இருந்தார் என்பதைக் காட்டுகிறது. இயற்கையை வணங்கும் நமது இந்து தர்மத்தின் இறைவன் வாழும் இடமாகவும், ஞானிகள் மெய்ம்பாடு அடைந்த இடமாக கண்டதன் தொடர்ச்சியே இன்றைய சூழலியல் பாடத்தின் முண்ணோடி. அருமையான இந்தக் கட்டுரையை எழுதிய அரவிந்தன் நீலகண்டனுக்கும் வழங்கிய தமிழ் இந்துவுக்கும் வாழ்த்துக்கள்.

  4. Congrats and weldone Tamil hindu .com, keep it up! It is an interesting one.
    regards,
    sathianatrayanan

  5. Mr.Aravindhan,
    New for me to read blogs / e-books.
    Really nice to know about such great man..
    Congrats.

    Jeevan.R

  6. நம்முடைய இந்து மத்தில் அஷ்டமூர்த்தி வழிபாடு என ஒன்று உண்டு.கண்ணுக்குப் புலனாகாத இறைவன் தன்னருளை உயிர்கள் அறிந்து உய்வதற்காக ஐம்பூதங்களிலும் சூரியன் சந்திரன் நெருப்பு மற்றும் ஆன்மாவிலும் கலந்து நின்றுஅவற்றை இயக்குகின்றான் எனக் கூறும். “பிருதுவியாதி ஏழு இதர மூர்த்திகலிலும் வியாபித்து(=மேம்பட்டுள்ள) ஆன்மாவானது சிவமாகிய பரமான்மாவினது 8ஆவது மூர்த்தியாகும், அதனால் உலகம் சிவமே ” ( “ஆத்மாதஸ்யாஷ்டமீ மூர்த்தி: சிவஸ்யபரமாத்மந: வ்யாபிகேதர மூர்த்திநாம் விச்வம் தஸ்மாச் சிவாத்மகம்ii” ) சைவமஹாபுராணம்.

    பெரி கூறிய ஒமெகா சடங்குடன் இப்பகுதி ஒப்பு நோக்கி மகிழத் தக்கது

  7. அனேக கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.ஹிந்து மதம் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் தொன்மையான மதம்.அதன் மீது ஆதிக்கம் செலுத்தவோ, அதன் மதிப்பை குறைத்து விடவோ யாராலும், அல்லது ஒரு சமூகத்தாலோ முடியாது என்பது தெளிவான உண்மை.
    இப்படிக்கு ,
    ஸ்வர்ண லதா (பழனி),சென்னை .

  8. சூழலியல் மூலம் பிரமத்தைத் தொடுவது ஹிந்துத்வம் தானேயன்றி எப்படிக் கத்தோலிக்கமாகும்? உண்மையில் ஹிந்துத்வம் தவிர வேறு ஒரு சமயம் இவ்வுலகில் ஏது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *