வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 3

முந்தைய பகுதி : வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 2 (திருக்குறள்)

சிலப்பதிகாரத்தில் வேதநெறி

சங்ககாலத்தை மருவி எழுந்த காப்பியமாகிய சிலப்பதிகாரம் பண்டைத் தமிழ் மக்களின் கலை இலக்கியப் பண்பாட்டின் மேன்மையைப் பறைசாற்றும் பேரிலக்கியமாகப் போற்றப்படுகின்றது. இந்தச் சிறப்பான காப்பியத்தில் தமிழ் மக்கள் வேதநெறியைத் தழுவி நின்ற பல செய்திகள் அறியவருகின்றன.

காப்பியம் திங்கள், ஞாயிறு, மாமழை ஆகிய வேதக்கடவுளரின் வணக்கத்துடன் தொடங்குகின்றது. காப்பிய நாயகர்களாகிய கோவலனுக்கும் கண்ணகிக்கும் ‘மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டிட’ அக்கினி சாட்சியாகச் செய்யப்படும் பிரசாபத்தியத் திருமணம் நடைபெறுகின்றது. சந்திரன் உரோகிணியைச் சேர நல்லோரையில் ‘அருந்ததி’ யனையாளாகிய கண்ணகியைக் கோவலன் கைத்தலம் பற்றுகின்றான். மணமகள் கண்ணகி, ‘போதிலார் திருவினாள்’ என்றும், ‘தீதிலா வடமீனின் திறமிவள் திறம்’ என்றும் போற்றப்படுகின்றாள்.

கோவலன் தந்தை மாசாத்துவான் ‘இருநிதிக் கிழவ’னாகிய ‘குபேரன்’ எனப் போற்றப்படுகின்றான். கோவலன், ‘செவ்வேள்’ என மாதரால் பாராட்டப்படுகிறான். புகார் நகர் செல்வசிறப்பாலும் போகத்தாலும் ‘நாகநீ ணகரொடு நாகநா டதனொடு’ உவமிக்கப்படுகின்றது. ‘பொதியி லாயினு மிமய மாயினும்’ என்றும், ‘காவிரி நாடன் றிகிரிபோற் பொற்கோட்டு, மேரு வலந்திரிதலான்’ எனத் தமிழகத்து நிலக்குறிகளோடு இமயமலை, மேரு எனும் வேதஇலக்கிய நிலக்குறிகளும் (Landmarks) பேசப்படுகின்றன.

பாயிரம் கண்ணகியை, பலர்புகழ் ‘பத்தினி’ என்று கூறுகின்றது. பத்தினி என்பது வேத வழக்கு. மறையவர் மனைகளில் நித்திய வேள்வி செய்யும் பொழுது அதனை அணையாது ஓம்புதல் அவன் மனைவியின் செயலாகும். அவ்வாறு நித்தியாக்கினி யோம்பும் மறையவனுக்கு உதவும் மனைவிக்கு ‘பத்தினி’ என்று பெயர்.*

* திருமார்பன் முதலான தேவருக்கெல் லாமறையோன் சிவனே யாமென்
றொருவாய்மை மறைகரைந்த துண்மையெனத் தெளிந்துலக முய்ய முத்தீ
மருவாருங் குழலுமைபத் தினிவளர்ப்ப விடக்கரத்து வயங்க வேந்திப்
பெருவாழ்வு தரவரசம் பலத்தாடும் பேரொளியைப் பேணி வாழ்வாம்”

(பேருர்ப் புராணம்- கடவுள் வாழ்த்து -2)

இதில் கூத்தப்பெருமான் மறையவன் என்பதற் கேற்ப அம்மை இடப்பக்கத்தில் நின்று முத்தி வளர்க்கும் பத்தினியாகக் கூறப்படுகின்றாள்.

சிலப்பதிகாரம், இந்திரன் மகனாகிய சயந்தன் உருப்பசி என்ற கந்தருவப் பெண்ணை இந்திரனுடைய அவைக்களத்துக் கண்டு இருவரும் காமவயப்பட அகத்தியன் சாபத்தால் சயந்தன் பொதியமலையில் மூங்கிலாகப் பிறந்ததும், உருப்பசி புகார்நகரில் கணிகையர் குலத்து முன்னோளாகிய மாதவியாகப் பிறந்ததையும் கூறுகின்றது. உருப்பசி வந்து சாபத்தால் பிறக்கையால் அவள் வழியுள்ளாரையும் இளங்கோவடிகள் வானவர்மகளிர் என்றார்.

வேதக் கடவுளாகிய இந்திரனுக்கு விழா எடுத்தலை இந்திரவிழவூரெடுத்த காதை கூறுகின்றது. இந்த விழவினைப் பற்றிப் பவுத்த காப்பியம் எனப்படும் மணிமேகலையும் கூறுகின்றது.

சிலப்பதிகாரம் வடக்கு திசையைப் ‘புண்ணிய திசை’ என்றது.(5:94) அதற்குக் காரணம் ‘இமையவர் உறையும் சிமையம்’ அத்திக்கில் உள்ளமையாகும். (5:97) திருமாவளவன் என்னும் சோழமன்னன் வடநாடு சென்று வெற்றி கொண்டு இமயமலை மேற்செல்ல வொட்டாமல் தடுத்தமையால் அதன் உச்சியில் புலிச் சின்னம் பொறித்து மீண்டான். வச்சிரநாடு, மகத நாடு அவந்தி ஆகிய நாட்டு அரசர்கள் சோழனோடு நட்புக் கொண்டனர்.(5: 95- 110)

இந்திரவிழாவுக்கு முன்னர் புகார் நகரிலுள்ள திருக்கோவில்களில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. அப்பொழுது, ‘மிக்க முதுமையுடைய முதல்வனாகிய வேதாவினுடைய வாய்மையில் தப்பாத நான்கு வேதங்கள் சொன்ன நெறியில் ஓமங்கள் ஒருபக்கம் நடந்தன.’ (5:174- 5)

இந்திரவிழாவில், மாதவியுடைய ஆடலைக் கண்டு மகிழ்வதுடன் “அமரர் தலைவனை வணங்குதும் யாமென” கந்தருவன் ஒருவன் தன் காதலியுடன், தெய்வயாக்கையை மறைத்து மானுடயாக்கையுடன், புகார் நகர் நோக்கி வருகின்றான். அவன் தன்னுடைய காதலிக்கு, கொடுமுடியையுடைய இமயமலையயும் வளவிய நீரையுடைய கங்கையாற்றினையும் அவந்தியென்னும் பதியினையையும் விந்தமலையும் விந்தாடவி யென்னும் காட்டினையும் வேங்கடமலையையும் நிலம் பொறாத விளையுடைய காவிரிநாட்டினையும் தன் காதலிக்குக் காட்டி அங்கங்குள்ள பயன்களை நுகர்வதற்கு ஆங்காங்குத் தங்கி வருகின்றான். (5::25-34) இக்கூற்றினால் வடநாடும் தென்னாடும் சமயம் , கலைப் பண்பாடுகளில் ஒற்றுமைப் பட்டு ஒன்றையொன்று தழுவியிருந்தமை தெளிவாகின்றது.

மாதவியாடிய பதினொருவகை ஆடலிலும் பாடலிலும் கண்ணன் பாகவதம் , தேவி பாகவதம் ஆகியவற்றின் தாக்கம் இருந்தமை அறியத்தக்கது.(6: 35 -66)

“தூய, மறையோன்பின் மாணியாய் வான்பொருட் கேள்வித் , துறைபோய்” (9:29-31) எனும் அடிகளுக்கு அடியார்க்குநல்லார், “இருமரபுந் தூய மறையோனுக்குப் பின்செல்லும் பிள்ளையாய் மிக்க கல்விகளையும் அவற்றின் பொருட்கேள்விகளையும் கற்றும் தரித்தும் துறைபோய்த் தந்தைதாயர் இறந்த பின்னர் அவர்க்கு நீர்க்கடன் முதலியவுஞ் செய்து” என உரை வரைந்ததுடன், ‘வான்பொருட்கேள்வி – மறைநூலும் அங்கமும். துறைபோதல்- அதற்குத் தக நிற்றல்* (*குறள்,391). மாணியாயெனவே செளளமும் உபநயனமும், துறைபோயெனவே கல்வி கேள்வி முதலிய பிரமசரியங் காத்தலுங் கூறி, மேல் “தேவந்தி யென்பாண் மனைவி” என்பதனால் விவாகமும் காருகத்தமுங் கூறினமையு முணர்க. “ எனக் குறிப்புரையும் வரைந்துள்ளார்.(அடியார்க்கு நல்லார் ஒரு தமிழ் வைதிகர். அவரைச் சமணர் என்று சில தமிழாசிரியர்கள் கூறுவது தவறு)

இதனால் பார்ப்பனர்களின் வருண ஒழுக்கம் இரட்டைக் காப்பிய காலத்திலேயே தமிழ்சமுதாயத்தில் நிலை பெற்றிருந்தமை புலனாகின்றது.. அந்தணர் ஒழுக்கத்தைப் பார்ப்பன வாகை எனச் சங்கத்தமிழ் புகழ்கின்றது. அந்த ஒழுக்கம் எத்தகையது என்பதைச் சிலப்பதிகாரம் ஒரு நிகழ்ச்சியை வைத்துப் பதிவு செய்கின்றது.

மதுரையைக் கண்ணகி அழலூட்டியபின், எரியாமல் நின்ற வெள்ளியம்பலத்துள், ஆரஞர் உற்ற வீரபத்தினிமுன் மதுராபுரித் தெய்வம் தோன்றி, அவளுடைய சினந் தணியுமாறு பேசுகையில் பாண்டியமன்னர்களது செங்கோன்மையை எடுத்தியம்புகின்றது.

“சோழ நன்னாட்டுப் பார்ப்பான், பராசரன்* என்போன், வேதக்கல்வியில் வல்லமையுடையவன், சேரமன்னனின் கொடைத்திறங்கேட்டு வண்டமிழ் மறையோனுக்கு வானுறை கொடுத்த* அச்சேரனைக் காண்கென, காடும் நாடும் ஊரும் போகி, நீடுநில மலயம் பிற்படச் சேர நாடு அடைகின்றான்.

அங்கு,
“ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பும்
அறுதொழி லந்தணர்”

என இக்குடியினருக்கு வகுக்கப்பட்டபடி, பார்ப்பன வாகை சூடி, அரசனளித்த பரிசுகளாகிய நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன், ‘செங்கோற் தென்னன்’ ஆட்சிக்குட்பட்ட , ‘திருந்து தொழில்மறையவர்’ வாழும் திருத்தங்காலூர் என்னும் ஊரில், ஊர்ப்பொதுவில் இருந்த அரசமரத்து மேடையில் களைப்பாறி யிருந்தான். தன்னுடைய,

“தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்,
பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
களைந்து”

மூவேந்தர்களையும் வாழ்த்தி இருந்தனன். அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அந்தணச் சிறார்கள் அவனைச் சூழ்ந்து கொள்கின்றனர். அக்குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்த பராசரன், “குண்டப் பார்ப்பீர்” என்னோடு சேர்ந்து மறையோதி, இப்பரிசுப் பொருள்கள் அனைத்தையும் கொண்டு செல்வீர்” என அழைத்தான். அப்பொழுது, வார்த்திகன் எனும் அந்தணனின் புதல்வன், ‘ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்’ (ஆலமர்செல்வன் பெயர் – தக்கிணாமூர்த்தி) மழலை மாறாத குழந்தையாயினும் பராசரன் சொன்ன மறைகளைச் சந்தம் பிழையாது கூறினான்.(“தளர்நா வாயினும் மறைவிளி வழாஅ, துளமலி யுவகையோ டொப்ப வோத, ‘தக்கிணன்’ றன்னைப் “) அதனால் முகமகிழ்ந்த பராசரன் தக்கிணாமூர்த்தியை மிகவும் பாராட்டித் தன்னிடம் இருந்த பரிசுப்பொருள்களான, “முத்தப் பூணூலதற்கொத்த புனைகலம், கடகம், தோடு முதலனைத்தையும் ஈந்து தன் பதிப்பெயர்ந்தான். ( சிலம்பு 23: 63-98)

தக்கிணாமூர்த்தி வழி வார்த்திகன் பெற்ற பெருஞ்செல்வத்தைக் கண்டு பொறாமை கொண்டோர், ‘படுபொருள் வெளவிய பார்ப்பான் இவனென, விடுசிறைக் கோட்டகத் திட்டனர்’. வார்த்திகன் மனைவி கார்த்திகை கலங்கிப் புலம்பினள். செங்கோன்மை பிறந்தமை கண்டு ஐயை கோயிற்கதவைடைத்துக் கொண்டனள். உண்மை அறிந்துகொண்ட பாண்டியன், வார்த்திகனுடைய பொருளை மீட்டுக் கொடுத்ததோடு அதனின் பெருவளம் நல்கி,

“கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்
இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள்
தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே”(சிலம்பு 23:)

அரசன் பார்ப்பனன் முன்னர் வீழ்ந்து வணங்கினான் என்று கூறாமல், இருநிலமடந்தைக்குத் திருமார்பு நல்கினான் என்று உரைத்த நயம் அறியத் தக்கது. அரசரும் வணங்கும் உயர்ந்த நிலையில் பார்ப்பனர் மதிக்கப்பட்டனர் என இதனால் அறியலாம்.

பராசரன் என்னும் பெயர் இன்றும் தமிழ்ப் பார்ப்பனர்களிடையே வழங்கி வருகின்றது. அந்தணர்களின் கோத்திரப் பெயர்களில் ஒன்றாகவும் வழங்கி வருகின்றது. மறையவர்கள் முத்தியாகிய ஒன்றையே விரும்பும் கொள்கையராகையால், ‘ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர்’ என்றார். ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி எனும் முத்தீயோம்பும் செல்வமே அவர்கள் போற்றும் செல்வம்.

அத்துடன், ‘பிரமவேள்வி, தேவவேள்வி, மனிதவேள்வி, உயிர்வேள்வி, பிதிர்வேள்வி’ ஆகியவற்றை வழுவாது ஓம்பும் ஒழுக்கமு உடையவர். (திருவள்ளுவர் இவ்வேள்விகளை,”தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங், கைம்புலத்தா றோம்ப றலை”(43) எனுங் திருக்குறளில் கூறியுள்ளார்.)

மறையோர் மெய்ஞ்ஞானக் கல்விச் செல்வத்தையே தேடிச் சேமிக்க வேண்டும்; உலகியல் போகத்தில் ஆழ்த்தும் பொருட் செல்வத்தைச் சேமித்தலாகாது. ஈதலும் அந்தணர் அறமாதலால் அதனைத் தக்காருக்கு உடனே ஈந்து விடல் வேண்டும். இந்த ஒழுக்கம் பராசரன் தான் பார்ப்பன வாகையில் ஈட்டிய செல்வத்தைத் தக்கிணாமூர்த்திக்கு ஈந்த செயலில் வெளிப்படுகின்றது.

அந்தணன் கல்வியை விற்றலாகாது. கல்விக்குப் பரிசாகக் கிடைத்த பொருளைக்காக்கும் பிராமணன் பிரமராக்கதனாவான். இக்கருத்தைக் கச்சியப்பமுனிவர்* ( *இவர் காஞ்சிப்புராண ஆசிரியர் சிவஞான முனிவரின் மாணாக்கர். திருவானைக்காப்புராணம், பேரூர்ப் புராணம், திருத்தணிகைப்புராணம், பூவாளூர்ப் புராணம் முதலிய புராணங்களின் ஆசிரியர்) . பேருர்ப்புராணத்தில், திருநீற்றுமேட்டுப் படலத்தில் ஓரந்தணன் வரலாற்றில் வைத்து விளக்குகின்றார்.

கங்கைக் கரையில் தன் மறைக்கல்வியை வெளிப்படுத்திப் பெற்ற மிகுந்த செல்வத்துடன் தன் இருப்பிடத்திற்கு செல்பவனுக்குத் தான் வேதஒழுக்கத்தில் தவறியதாக மனத்தில் பட்டது. அவன் பின் வருமாறு நினைக்கின்றான்.

“ உயர்ந்த வருணத்திலே பிறந்து, வேதம் ஓதி, வேள்விகள் செய்தும் தெளிந்த அறிவைப் பெற்றும் குற்றமுடைய வினைகளினின்று நீங்கியும் , இந்த நன்மைகளையெல்லாம் சிறந்த முத்தியைப் பெறுதற்குக் காரணமாக்காமல், மயக்கந்தரும் பாவம் வளர்ச்சியுற்று அரிய நரகத்திலே வீழ்ந்து துன்புறும்படித் தானமாகச் செல்வத்தைப் பெற்று இவ்வுலகத்திலே வருந்துவதற்கு ஏதுவானவற்றைச் செய்துவிட்டேனே! கற்ற கல்வியும் உரிய காலத்தில் வந்து உதவவில்லையே’ என்று அந்த அந்தணன் நொந்து கொள்கின்றான்*.

*“உயர்முதல் வருண முதித்ததும் வேத மொழுக்கொடு பயின்றுதெள் ளியதுஞ்
செயிருறு வினையிற் றீர்ந்துநற் கதியிற் சேர்வதற் கேதுவாக் காது
மயர்தரு பாவம் தளர்ந்தரு நரகின் மறிதரத் தானமிக் கேற்றிங்
கயர்வதற் கேது வாக்கினேன் கற்ற வறிவும்வந் துதவிய தின்றே.” (பேரூர்ப். 35:10)

தன்னிடமிருந்த பொருள்களையெல்லாம் தானமாக்க நினைந்து அவ்வெண்ணத்தைச் செயல்படுத்துமுன் இறந்து விடுகின்றான். பொருளைப் பாதுகாப்பாக வைத்த இடத்திலேயே பொருள்மேல் வைத்த ஆசையின் காரணமாக அரக்கனாய்த் திரிகின்றான். (பேரூர்ப் 35:13,27) மறையோதும் அந்தணனுக்குப் பொருள் நசை கேடு விளைக்கும் என்பது இப்புராணக் கதையின் கருத்து. இதனால் அந்தணவொழுக்கம் பற்றிப் புராணங்களின் கருத்தும் தெளிவாம்.

நல்லொழுக்கமும் கல்வியும் பொருளாசையும் அற்ற பார்ப்பார் நல்ல துணைவராவர் எனும் கருத்தில் மகட்கொடை நேர்ந்த அரசர்கள் மகளுடன் பார்ப்பாரையும் உடன் தருதல் சேரன் செங்குட்டுவன் காலவழக்காக இருந்தது.*

(*புன்மயிர்ச் சடைமுடிப் புலரா வுடுக்கை
முந்நூன் மார்பின் முத்தீச் செல்வத்
திருபிறப் பாளரொடு பெருமலை யரசன்
மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக்
கடவு ளெழுதவோர் கற்றா ரானெனின்” (25:126130)

எனும் இவ்வரிகளுக்கு,’பார்ப்பாருடனே மகட்டருதனோக்கி இருபிறப்பாளரொடு கல் தாரானாயினென்றான்’ என்றது பழையவுரை)

கங்கை முதலிய புனித நதிகளில் கிடைக்கும் கற்களால் பாணலிங்கம் அமைத்து வழிபடுதல் இன்றும் மரபாக உள்ளது. சிலப்பதிகாரம், ‘விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக், கற்கால் ‘ கொண்டு, கங்கைப் பேரியாற்றில் நீர்ப்படை செய்யும் வழக்கிருந்ததைக் கூறுகின்றது. (25:117-121)

கங்கையாற்றில் நீராடுவது புண்ணியச் செயலாகக் கருதப்பட்டமையும் சேரன் செங்குட்டுவன் தன் தாயாரைக் கங்கையில் புனிதநீராட்டினமையும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. (25:160-161)

நான்மறை வல்ல மறையோர் ,’மறைநா வுழுது, இறையோன் செவிசெறு வாக, வித்திப் பெரும் பயன் விளைத்தனர்..(28:186- 189)

இவ்வாறாகச் சிலப்பதிகாரம் வேத வழக்குத் தழுவிய நெஞ்சையள்ளும் காப்பியமாகத் திகழ்கின்றது.

மணிமேகலையும் வேதநெறியும்

இரட்டைக் காப்பியங்கள் என்று பேசப்படும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வேதவழக்கைக் குறித்த மட்டில் தம்முள் மாறுபட்டு நிற்கின்றன. சிலப்பதிகாரம் வேதநெறியை எவ்வளவு உயர்வாகப் பேசிற்றோ அதற்கு மாறான நிலையில் மணிமேகலை வேதநெறியையும் வேதநெறியில் நிற்போரையும் பழிப்பதில் தலைநிற்கின்றது.

மணிமேகலை பவுத்தமதப் பிரச்சார இலக்கியமாக இருப்பதே அதற்குக் காரணம்.

மணிமேகலை மறையைப் போற்றிக் காப்பாற்றும் கடப்பாடு உடைய மறையவர்களை ஒழுக்கங் கெட்டவர்களாகவும் கொலைவெறியர்களாகவும் மதுமாமிசம் விரும்புபவர்களாகவும் சித்திரிக்கின்றது. அவர்கள் மேல் எழுந்த வெறுப்பு அவர்கள் போற்றும் வேதத்தின்மீதும் வேதநெறியின் மீதும் விரியுமாறு பேசுகின்றது.

புறநானூறு பார்ப்பனர்கள் பிற உயிர்களுக்குச் சிறிதும் தீமை செயத்தகாத சாதியர் என்றும் பசுக்களொடு ஒத்த இயல்புடையவர்கள் என்றும் போர் நிகழும் காலத்தில் இரு அரசர்களாலும் காப்பாற்றப்படத் தக்கவர்கள் என்றும் பேசும்.

பார்ப்பனர்கள் புலவுத் துறந்த (உடலைப் பாதுகாத்தலை வெறுத்த) நோன்புடையர் என்றும் அவர்கள் மெய்யே பேசுவர் என்றும் அறங்கறைந்த நாவினர் மறையவர் என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் கூறும்.

சிலப்பதிகாரத்தில் அந்தணர்கள் நல்ல தோழர்களாகவும் அரசர்களால் கீழே விழுந்து வணங்கத் தக்கவர்களாகவும் காணப்படுகின்றனர்.

மணிமேகலையில் ஆபுத்திரன் என்பான் வரலாறு வேதியர் மீது வெறுப்பினைத் தோற்றுவிக்கவே படைக்கப்பட்டது. ஆபுத்திரன் கற்பொழுக்கத்தில் இழுக்கிய சாலி என்னும் பார்ப்பனி வயிற்றிற் பிறந்தவன். பார்ப்பனி சாலி என்பவள் காப்புக்கடை கழிந்து கொண்டோர்ப் பிழைத்த தண்டம் அஞ்சிச் சூன் முதிர்ந்த பருவத்துத் தான் செய்த தவற்றிற்குக் கழுவாயாகக் குமரியாடச் செல்கிறாள். அதாவது ஒழுக்கம் கெட்டவளாகி கருப்பமுற்றுத் தான் செய்த பாவத்துக்குப் பரிகாரமாகத் தீர்த்தநீராடச் செல்லுகின்றாள். *(கழுவாயாகத் தீர்த்தமாடச் செல்லுகின்றாள் என்பதிலும் புனிதநீராடல் என்னும் வைதிக நெறியை எள்ளல் தொனிக்கின்றது.) இருள்நெறியில் போகின்றவள், வழியிலே, தான் ஈன்ற குழவி என்றும் மனம் இரங்காதவளாகிப் பிறர்கண்ணுக்குத் தோன்றாத ஒரு தோட்டத்தில் அதனை வீசி எறிந்து விட்டுப்போகின்றாள்.

இப்படிக் கூறுவதன் மூலம் மேற்குலத்தவளாகிய பார்ப்பனி மகவிற்கும் இரங்காத வன்கண்மையுடையளாகக் காட்டி இதன் மூலம் பவுத்தப் புலவன் வைதிகத்தின் மீது தனக்குள்ள காழ்ப்பைக் காட்டிக் கொள்ளுகின்றான்.

தீவினைப் பாவத்திற்குக் கழுவாயாகப் புனித நீராடலை வைதிக மதம் கூறும். *(*சிலப்பதிகாரத்தில் மாங்காட்டுமறையவன், தேவந்தி, முதலியோர் வாயிலாகவும் சேரன் செங்குட்டுவன் தன் தாயாரை கங்கையாட்டியதன் வாயிலாகவும் புனித் நீராடுதலின் பெருமையைப் போற்றிய செய்திகளோடு இது மாறுபடுதலைக் காண்க)

சாலி வீசி எறிந்துவிட்டுச் சென்ற குழந்தையை ஒரு அந்தணன் எடுத்து வளர்க்கின்றான். அவனுடைய ஊரில் ஓரந்தணன் வீட்டில் வேள்வியிற் கொல்லப்படுவதற்கு என ஒரு பசு கட்டப்பட்டு நின்றது. அது கண்ணீர் உகுத்துக் கலங்குகின்றது. அதன் கலக்கத்தைச் சகியாத ஆபுத்திரன், அதனைக் காப்பாற்றத் துணிந்து அதனை அவிழ்த்துக் கொண்டுபோய்க் காட்டில் விட்டுவிடுகின்றான். அந்தணர்கள் பசுவினைக் காணாது அவ்வூரிலுள்ள ‘அடர்க்குறு மாக்கள்’ பலரைக் கூட்டிக்கொண்டு போய் ஆபுத்திரனைப் பற்றிஅடித்துத் துன்புறுத்துகின்றனர். வேள்விப் பசுவைத் திருடிய கள்வன் என ஆபுத்திரனை அந்தணர்கள் தூற்றியதோடு அமையாது அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் சோறிடுதற்கு மாறாக அந்தணர் கல்லும் மண்ணும் இடுகின்றனர். பிச்சைப் பாத்திரத்தில் கல்லிடுதற்குக் கயவருந் துணியார். ஆனால் அவ்விழி செயலை மறையோராகிய வேதியர் செய்கின்றனர்.

சிலப்பதிகாரமும் சங்க இலக்கியங்களும் காட்டும் புலனழுக்கற்ற,, புலவுத் துறந்த அந்தணாளர்கள், ஆனியற் பார்ப்பனமாக்கள், தீங்கு செயத் தகாத சாதியினர் என்பனபோன்ற பண்புகளுக்கு மாறாக மணிமேகலை, பார்ப்பனர்கள் இரக்க குணம் சற்றும் அற்ற கொடூர குணமுடையவர்களாகவும் இழிபண்புடையோராகவும் பார்ப்பனியர் கற்பொழுக்கம் கெட்டோராகவும் தம் மகவெனவும் பாராத கருணையற்ற கொலைக் குணம் உடையோராகவும் கூறுகின்றது..

இந்த மாறுபாடு காப்பியத்தில் வரும் ஒரு தனிபாத்திரத்தின் பண்பாகவன்றி. பார்ப்பனக்குலத்தின் குடிவரவாக மணிமேகலை பேசுகின்றது. இது வேதநெறியின் மீது பவுத்தர்கள் கொண்டிருந்த பகையினால் கூறப்பட்ட வசைமொழியேயன்றி வேறன்று. இந்த மனப்பாங்கை இன்று நம் நாட்டில் வாழும் கிறித்துவர்களும் இசுலாமியர்களும் திராவிடக் கட்சியினரும் பவுத்தர்களிடமிருந்து சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.

குலவொழுக்கம் கெட்ட பார்ப்பனியரையும் பார்ப்பனர்களையும் பற்றிப் பிற்காலத் தெழுந்த சைவ தலபுராணங்களும் பேசுகின்றன. இவையனைத்தும் பார்ப்பன குடியில் தோன்றிய ஒருவரின் ஒழுக்கச் சிதைவையும் அதன் விளைவையும் பேசுகின்றன.

அவையெல்லாம், வைதிக ஒழுக்கத்தின் மேன்மையை வலியுறுத்த,

“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”(134)

எனும் திருக்குறளுக்கு இலக்கியமாகவே படைக்கப்பட்டன. அந்தப் புராணக்கதைகள் தனி ஒரு பார்ப்பனன் அல்லது பார்ப்பனியின் ஒழுக்கக் கேட்டால் வரும் இழுக்கினை உரைத்துக், கல்வியினும் பார்ப்பனனுக்கு ஒழுக்கமே மேலான செல்வம் என்பதனை வலியுறுத்துவனவாம். (பேரூர்ப் புராணம்: சுமதி கதிபெறு படலம், திருநீற்று மேட்டுப்படலம்)

உலகியல் நெறியும், வேதநெறியும்

வேதநெறி உலகியல் சமுதாய அமைப்புக்களுக்கு உரியமதிப்பைக் கொடுக்கின்றது. சமுதாய நிறுவனங்கள் (social Institutions) அவ்வக் காலத்துத் தாமே சமூக இயக்கத்தின் ஏதுவாக இயற்கையில் உருவாகும் அல்லது சான்றோர்களால் சமுதாய நலன் குறித்து உருவாக்குப்படுவதாகும். அவை எக்காலத்துக்கும் உரியதெனக் கூற முடியாது. இயங்கும் சமுதாயத்தில் ஒருகாலத்தில் பயன்பட்ட சமுதாய நிறுவனங்கள் பின்னொரு சமுதாயக் கட்டமைப்பில் அமைப்பில் பயன்படாமற் போகலாம். அந்த நிறுவனங்கள் உலகியல் பயன்கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டன. வைதிகநெறி எக்காலத்துக்கும் பயன்படும் ஆன்மிக நெறிகளாம். ஆன்ம முன்னேற்றங் கருதிக் காலங்காலமாக ஆன்றோர்களாற் கைக் கொண்டொழுகப்படும் ஒழுக்கமாகும்.

சிலப்பதிகாரம் வேட்டுவவரியில் சாலினி, மறவர்கள், மறக்குடித் தாயமாகிய வழிவளங் கரவாது, அதாவது வழிபோவாரை அடித்துப் பறியாது’, அறஞ்செயும் குடிகள்போல நிரைகோடலும் ஆறலைத்தலும் செய்யாமையால்‘, வல்விலெயினர் மன்றுபாழ் பட்டன என்றும் கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன என்றும் கூறி மறக்குடித் தாயமாகிய களவே செய்து உண்ண வற்புறுத்தி அழைக்கின்றாள்.; உயிர்ப்பலியும் உதிரப்பலியும் கொடுப்பவருக்கே ஐயை எனப் பெயரிய தங்கள் குலதெய்வம் வழிவளஞ் சுரக்கும் எனச் சாலினி வாக்களிக்கின்றாள்.

இந்தமறத்தன்மை அவர்களது குடிவரவாகிய குலதன்மம். அதனால்தான் சங்க கால மன்னர்கள் இக்குடியினரை நாட்டெல்லைக் காவலுக்கு நியமித்திருந்தனர்; பயிருக்கு முள்வேலி இடுதல் போல. வேலி பயிரை மேயாதவாறு காத்தல் அரசன் கடமையாயிற்று.

மணிமேகலையில், மாதவியின் அன்னை, சித்திராபதி, “நாடகக்கலை கற்றுத்துறை போகிய நீ நற்றவம் புரிந்தது நாணுத் தகவுடைத்து” எனக் கூறியது, குலதருமத்தை எடுத்தோதி உலகியலை நிலைநாட்ட முயன்றதாகும். அறம் உணர்ந்த மாதவி தனக்கும் தன் மகளுக்கும் எந்தவொழுக்கம் உயர்வளிக்கும் எனத் தேறி குலவொழுக்கத்தைக் கைவிட்டுத் துறவொழுக்கத்தைப் பேணியது வேதநெறி பற்றியதாகும்.

இந்த மாற்றத்தை மேற்கொள மிக்க துணிவும் தியாகமும் வேண்டப்படும். ஊரலர் தாங்கும் மனோதிடமும் வேண்டும். “நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப, நாமும் அவர்தம்மை யார்ப்ப வார்ப்ப” என்று மணிவாசகமும் இந்நிலையை வற்புறுத்திற்று.

உயிர்கள் தாம் பிறந்த சூழ்நிலைகளை யொட்டியே வாழுதல் இயலும். இவ்வாறு பிறந்த சூழ்நிலையை ஒட்டி வாழும்போது ‘நான் எனது’ என்னும் உணர்வோடு கூடியே தன்னலத்துடன் வாழும் உயிர், பிற உயிர்களுடன் ஒட்டி உறவாடும்போது தன்னலத்தைப் பிற உயிர்களுக்காகச் சிறிதுசிறிதாகக் குறைத்துக் கொள்ளும். இதுவும் தன்னைச் சேர்ந்த உயிர்களுக்காகவே நிகழும். இதனால் அன்பு எனும் உணர்வு பிறக்கின்றது. எல்லா உயிர்களையும் நோக்கிய தன்னல மறுப்பே ‘அருள்’ எனப்படுகின்றது.

இதன் உச்சநிலை, “சொல்லுதற்கரிய நித்தியமான ஆன்மவர்க்கத்துக்கு, ஞானமும் செல்வமும் மிகவும் பெரிதாகிய ரூப அழகும், பெறுதற்கரிய சுவர்க்க பலமும், தம்மினு மிகப் பெருக வுண்டாக வேண்டும் என்று நினைத்திருக்கும் “ எண்ணுதற்கரிய பெருங்குணமாம். (ஞானாமிர்தம் 24:12 -15)

இந்த ‘எண்ணரும் பெருங்குணம்’ தன்னலம் கருதும் இயற்கைக்கு மாறானது. இது உயிர்களின் இயற்கைக் குணமன்று.

சுயநலமாகிய தற்காப்புணர்வே (selfpreservation) இயற்கையான வாழ்வூக்கி. தன்னலமறுப்பு செயற்கையே. இயல்புணர்வை அரிதில் வென்றோருக்கே அது கைகூடும். அத்தகைய அருளாளர்களுக்கே இறைவனருள் கிட்டும் என்கிறார் திருஞான சம்பந்தர்.

“உலகினி லியற்கையை யொழித்திட், டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற, ஆலவாயாவது மிதுவே”(3:120: 2)

இயற்கையோடு ஒட்டி அதற்கிணங்கி வாழ்வது உலகியல்நெறி. அதனை வென்று வாழ்வது வைதிகநெறி.

(தொடரும்)

3 Replies to “வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 3”

  1. Sorry for writing in English.
    This article is an eye opener.
    We can see that Silapathikaaram has been selectively fed to Tamilians.
    Ilango Adigal was a true saint -a true gnani of ancient India.
    The author of this well written article brings out the attitude of the author of Manimakhalai very well.
    At best the attitude of Manimekalai’s author can be termed as ” racist” if we consider the hate that shows .
    We can see why this ” Kappiyam” is loved by Dravidian “thinkers” of TN.
    May be they’d call Seethalai Saathanar Ayyayyan?!

  2. ungaL saevai thamiz ennum peyaraal paadhai maaRRappadum maakkaLukku avasiyam thaevai.

  3. சிலப்பதிகாரத்தில் காணும் வேத நெறிகளை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். மணிமேகலையில் தனி ஒரு பார்ப்பனரின் செயலை அவ்வினத்துக்குரியதாக ஆசிரியர் காட்டியிருப்பதாகக் கூறியுள்ளதிலிருந்து அந்த ஆசிரியரின் உள்நோக்கம் புரிகிறது. ஒரு இனத்தில் பிறந்த எவரும் தடம் மாற மாட்டார்களா என்ன? அப்படித் தடம் புரண்டவர் ஒருவரின் வாழ்க்கையை அவர் பிறந்த இனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளக் கூடாதல்லவா? இந்தக் காலம், அந்தக் காலம் என எல்லாக் காலங்களிலும் திசை மாற்றுப் பேர்வழிகள் இருக்கவே செய்கிறார்கள் என்பது தெளிவு. ஆயினும் சரியான பக்கங்களை அறியாதாருக்கு எடுத்து இயம்பும் உங்கள் பணி சிறக்க இறை அருள் சித்திக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *