தலைவர்களைத் தேசத்திற்குத் தந்த குரு

வியாபார நோக்கத்திற்காக மேலை நாடுகள் அம்மா தினம், அப்பா தினம், காதலர் தினம், காதைச் சொறிபவர் தினம், ஜலதோஷம் வந்த தினம் என்று தினங்களை அடையாளம் காட்டி், அந்த நாட்களைப் பணத்தைக் கொட்டிக் கொண்டாட நம்மை மறைமுகமாக வலியுறுத்திவருகிறார்கள். அவை நம் கல்லாப்பெட்டிகளைக் காலியாக்கும் நாட்களாகவே இருக்கின்றன.

நம் மரபிலும் இதே போல நாட்களை அடையாளம் கண்டிருக்கின்றனர். நம் முன்னோர்கள் அவர்களின் உய்வுக்குக் காரணமானவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், வழிபட்டு வலிமையும் பெற்று, வரப்போகும் சந்ததிக்கு இவ்வளமையான மரபை எடுத்துச் செல்ல முன்னிறுத்திய முக்கியமான நாட்கள் பல. அவை நம் கர்ம வினைப் பெட்டிகளைக் காலியாக்கும் நாட்களாகவே இருக்கின்றன.

இன்று குரு பூர்ணிமா.

ஹிந்துக்கள் தங்களுடைய குருமார்களைக் கொண்டாடி வணங்கும் நாள். நான்கு வேதங்களைத் தொகுத்தவரும், மகாபாரதத்தை இயற்றியவரும், பதினெண் புராணங்களை ஆக்கியவராகக் கருதப் படுபவரும் ஆன உலக குரு வியாச முனிவரின் பிறந்த நாளாகவும் சம்பிரதாயமாக இந்நாள் அறியப் படுகிறது. உலகம் முழுதும் இதுவரை தோன்றியுள்ள குருமார்களைப் போற்றும் வண்ணம் இக் கட்டுரையை இங்கு சமர்ப்பிக்கிறேன்.

ரங்கநாதானந்தரின் காலடியில்

ஆங்கில மூலம்: எல். கே. அத்வானி (நன்றி: lkadvani.in )
மொழியாக்கம்: பனித்துளி

இந்தியாவின் பண்டைய மற்றும் நவீன ஆன்மீக குருக்களிடம் இருந்து பலவற்றை அரசியல்வாதிகளும் ஏனைய துறைகளைச் சேர்ந்தவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.

எல்லைகளற்ற துறவி

the_monk_1சில நாட்களுக்கு முன்பு, ஒரு புதிய புத்தகம் எனது மேஜைக்கு வந்தது. The Monk Without Frontiers – Reminiscences of Swami Ranganathananda (எல்லைகளற்ற துறவி – ஸ்வாமி ரங்கநாதானதர் பற்றிய நினைவலைகள்). இது ராமகிருஷ்ண இயக்கத்தின் சமீப வெளியீடு. ஸ்வாமி ரங்கநாதானந்தர் அவதரித்து நூறாண்டுகள் (2008) ஆகிவிட்டதை நினைவுகூறும் பொருட்டு வெளியிடப்பட்டுள்ளது

ஸ்வாமி ரங்கநாதானந்தர் குறித்து என்னுடைய சுயசரிதையில் (My Country My Life, Rupa & Co வெளியீடு) இங்கனம் சொல்லியிருக்கிறேன்:

“…நம்முடைய வாழ்நாளில் இருப்பதிலேயே பிரகாசமான ஆன்மீகப் பொலிவை இந்திய சமூகத்தின்மீது ஒளிர்ந்த விளக்கு”.

கராச்சியில் நான் கழித்த முதல் இருபது வருடங்களில் (1927 – 47) இந்த மகானுடனான என்னுடைய அனுபவங்களைப் பற்றி என்னுடைய சுயசரிதையில் இருந்த சில தகவல்கள், இந்தப் புத்தகத்திலும் இருப்பதைக் காணும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. புது தில்லியில், 15 மே 2005ல் ராமகிருஷ்ண இயக்கத்தில் நான் பேசிய பேச்சின் சிறுபகுதியும் இந்த புத்தகத்தில் இருக்கிறது. ஸ்வாமிஜி உடலை நீத்த 26 ஏப்ரல் 2005 அன்று அவருக்கு இறுதி மரியாதை தெரிவிக்க பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் பிரதமர் ஐ. கே. குஜ்ரால் ஆகியோரும் வந்திருந்தனர்.

அந்த புத்தகத்தில் என்னுடைய அந்த சில அனுபவங்களைக் கண்டவுடன், அந்த அனுபவங்களை என்னுடைய இந்த வலைமனையில் உங்களோடு பகிர்ந்துகொள்ள எண்ணினேன். உங்களுடைய கருத்துக்களை எனக்குக் கண்டிப்பாக அனுப்புங்கள்.

——————

கராச்சியில் என் கடைசி மூன்று வருடங்களில் என் வாழ்க்கையையே மாற்றும் மற்றும் ஒரு ஆற்றலுக்கு ஆட்பட்டேன். ஸ்வாமி ரங்கநாதானந்தரின் பகவத் கீதை உபன்னியாசத்தைக் கேட்க ஒவ்வொரு ஞாயிறு மாலையும் ராமகிருஷ்ண ஆசிரமத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். மகாபாரதத்தில், வீரனான அர்ஜுனனோடு குருட்சேத்திரப் போர்க்களத்தில் கிருஷ்ணன் மேற்கொண்ட மனதை மயக்கும் தத்துவ உரையாடல்களைத் தெளிவாகவும், நேரடியாகவும் அத்தோடு ஆழமான பாங்கிலும் தெள்ளென அவர் விளக்கியது, ஸ்வாமிஜியின் கம்பீரமான ஆளுமையைப் போலவே என்னை வசீகரித்தது.

அப்போது ஸ்வாமிஜி, கராச்சி ராமகிருஷ்ண இயக்கத்தின் தலைவராக ராமகிருஷ்ண பரமஹம்ஸர் மற்றும் அவரது சீடரான விவேகானந்தரின் போதனைகளை ஆறு வருடங்களாகப் பிரச்சாரம் செய்துவந்தார். எங்கோ தொலைதூரத்தில் இருந்த பர்மாவில் பல்லாண்டுகள் சேவை செய்தபின் கராச்சிக்கு அவர் வந்தார். இத்தனைக்கும் அவருடைய ஆரம்பமோ கேரளாவிலிருந்து ! ஆன்மீக மற்றும் மானுட சேவையாலான பாதையை மிக இளைய வயதிலேயே தேர்ந்தெடுத்த ஸ்வாமிஜி, பந்தாக்களில்லாத எளிமையான, இனிய மனிதர். வெகுவிரைவிலேயே அவர் என்மேல் அலாதியான அன்பைக் காட்டினார். சேவைநோக்கமும், அர்ப்பணிப்பும், அத்தோடு ஞான கோபுரமாகவும் இருந்த அந்த ஆளுமை என்னை ஆட்டிப்படைக்கும் கவர்ச்சியாகத் திகழ்ந்தது.

“இந்தக் குணங்களை நானும் வளர்க்க வேண்டும்” எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

கராச்சி ராமகிருஷ்ண இயக்கம்

advani_and_swamijiஆரம்பத்தில் இந்த கீதை உபன்னியாசத்திற்கு வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகச் சிறியது – ஐம்பதிலிருந்து நூறுவரை இருப்பார்கள். ஆனால், இந்த எண்ணிக்கை வாரா வாரம் அதிகரித்துக்கொண்டே போய் ஆயிரத்தை எட்டியது ! ஆசிரமமானது முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் இருந்ததால், சில முஸ்லீம்களும் உபன்னியாசத்தைக் கேட்க வர ஆரம்பித்தனர். வந்தவர்களில் கிறுத்துவர்களும், கராச்சியின் முன்னாள் மேயராக இருந்த நஸர்வஞ்சி மேத்தா போன்ற பார்சிகளும் இருந்தனர். ஆசிரமமானது தன்னார்வத்தோடு சமூக சேவை செய்பவர்களினாலான தேன்கூடாக மாறியது, அதில் நானும் என் பங்கைச் செய்தேன்.

ஆங்கிலேயர்களுடைய போர்க்கால கொள்கையினால், 1943ம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சம் நினைவுக்கு வருகிறது. உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைத் திரட்டி பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட மக்களுக்குத் தருவதற்காக ஸ்வாமிஜி ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். மக்களின் தயாள உணர்வை அந்த வேண்டுகோள் தூண்டியதால், உடனடியாக ஐந்து லட்ச ரூபாய்கள் திரட்டப்பட்டன. அந்த மூலதனத்தைக் கொண்டு அரிசி வாங்கிய ஸ்வாமிஜி, ஸ்ரீலங்காவில் இருந்து வங்காளத்திற்குச் செல்லவிருந்த ஒரு நீராவிப்படகின் மூலம் அந்த அரிசியை ஏற்றுமதி செய்ய சிந்து மாகாண அரசின் அனுமதியைக் கோரினார்.

ஒரு அதிகாரி அவரிடம் சொன்னார், “நீங்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில், இதே காரணத்திற்காக முஸ்லீம் லீக்கும் அனுமதி கோரியுள்ளது. இந்த விஷயத்திற்காக அரசு அனுமதித்துள்ள கோட்டாவில், முஸ்லீம் லீக் பயன்படுத்தியது போக மீதி இருப்பதைத்தான் நாங்கள் தரமுடியும்”. சில வாரங்களில், அதே அதிகாரி ஸ்வாமிஜியிடம் சொன்னார், “முஸ்லீம் லீக் 60 டன் மட்டுமே அனுப்பியுள்ளது. கோட்டாவில் எஞ்சியிருப்பது முழுக்க இப்போது உங்களுடைய பங்குதான்”. ராமகிருஷ்ண ஆசிரமம் அனுப்பிய அரிசியின் அளவு 1240 டன்கள் !

மேன்மைமிக்க பல பெரியோர்களை ஸ்வாமிஜி ஆசிரமத்திற்கு அழைப்பது வழக்கம். அழைப்பை ஏற்று டாக்டர் ராதாகிருஷ்ணன் மடத்திற்கு தந்த வருகை மறக்க முடியாத நிகழ்வாக என் நினைவிற்கு வருகிறது. காசியில் உள்ள ஹிந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த அவர் அக்டோபர் 1945ல் மடத்திற்கு விஜயம் செய்தார். அவர் இரண்டு பிரசங்கங்களைச் செய்தார் – ஆசிரமத்தில் ஒன்று, டி.ஜெ. ஸிந்த் கல்லூரியில் ஒன்று. இரண்டு பிரசங்கங்களும் மிகப் பெரிய கூட்டத்தை வரவழைத்தன. அப்போது வாரணாசி ஹிந்து பல்கலைக்கழகத்திற்குக் கொஞ்சம் நன்கொடைகளைப் பெற்றுத்தர வேண்டும் என ராதாகிருஷ்ணன் ஸ்வாமிஜியிடம் வேண்டினார். கராச்சி வாழ் மக்கள் ரூபாய் 50, 000/- மதிப்புள்ள பணமுடிப்பைத் தந்தனர். அந்த அளவு பணம் கிடைப்பது அந்தக் காலத்தில் மிகவும் பொருள்வாய்ந்த நிகழ்ச்சி.

[டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1885 -1975) இருபதாம் நூற்றாண்டில் உலகப்புகழ் பெற்ற இந்திய தத்துவ மேதையாகவும், கல்வியாளராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாகவும் (1952 -62), இரண்டாவது ஜனாதிபதியாகவும் (1962 – 67) விளங்கினார்.]

கராச்சியில் சுவாமிஜின் உரைகேட்கும் கூட்டத்தினர்
கராச்சியில் சுவாமிஜியின் உரைகேட்கும் கூட்டத்தினர்

1947ம் ஆண்டு நான் கராச்சியில் இருந்து வெளியேறினேன். ஆனால், இனி ராமகிருஷ்ண இயக்கத்தின் பணிகளைத் தொடர முடியாது என்ற நிலை ஏற்படும்வரை ஸ்வாமிஜி அங்கேயே தொடர்ந்து சேவையாற்றினார். மிகுந்த இதயவேதனையோடு கராச்சி மையத்தை மூடிய ஸ்வாமிஜி ஆகஸ்ட் 1948ம் ஆண்டு கராச்சியில் இருந்து வெளியேறினார். அவரோடு எனக்கிருந்த தொடர்பு, பிப்ரவரி 2005ம் ஆண்டு, தனது 98ம் வயதில் அவர் உடலை உகுத்த நாள்வரை தொடர்ந்தது.

தில்லியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக அவர் 1960களில் இருந்தபோதும், அதன்பின்பு ஹைதராபாத் மடத்தின் தலைவராக அவர் நீண்டகாலம் பணியாற்றியபோதும் அவரை அடிக்கடி சந்திப்பேன். 2003ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த ஒரு கூட்டத்திற்காகச் சென்ற நான், அகில உலக ராமகிருஷ்ண இயக்கத்தின் தலைவராக அப்போது இருந்த அவரை, அந்த இயக்கத்தின் தலைமையகமான பேலூர் மடத்தில் கடைசியாகச் சந்தித்தேன்.

இந்த கடைசி சந்திப்பின்போது கராச்சியில் எங்களுடைய கடைசி நாட்களைக் குறித்தும், அப்போது நடந்த துயரமான நிகழ்ச்சிகளைக் குறித்தும், தேசப்பிரிவினையில் முகம்மது அலி ஜின்னாவின் பங்கு குறித்தும் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். எங்களது அந்த உரையாடலின்போது, 11 ஆகஸ்ட் 1947ல் பாக்கிஸ்தான் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் புகழ் பெற்ற ஜின்னாவின் பேச்சு குறித்து, முக்கியத்துவம் கொடுத்துப் பேசிய ஸ்வாமிஜி, “செக்யூலரிசம் என்றால் என்ன என்பது குறித்து மிகத் தெளிவான விளக்கத்தை ஜின்னாவின் அந்த உரையில் காணலாம்” என்றார். மே – ஜூன் 1945ல் பாக்கிஸ்தானில் ஜின்னா பற்றி நான் கூறிய கருத்துக்களை உருவாக்குவதில் ஸ்வாமிஜியுடன் நான் நிகழ்த்திய இந்த கடைசி உரையாடல், அடிமனத்தில் இருந்து, பெரிதும் பங்கு வகித்தது.

ஸ்வாமி ரங்கநாதானந்தர்

ஸ்வாமி ரங்கநாதானந்தர் நம்முடைய வாழ்நாளில் இருப்பதிலேயே பிரகாசமான ஆன்மீகப் பொலிவை இந்திய சமூகத்தின்மீது ஒளிர்ந்த விளக்கு. மேன்மையடைந்த ஆத்மா, ஆன்ம வேட்கையாளரான அவர், சமையல்காரராகவும், பாத்திரம் தேய்ப்பவராகவும் தனது ஆன்மீக வாழ்க்கையை ராமகிருஷ்ண மடத்தில் ஆரம்பித்து, ராமகிருஷ்ண விவேகானந்தர்களின் போதனைகளை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பரப்பிய பூஜிக்கப்பட்ட பிரச்சாரகர்.

தன் சொந்த முக்தியைப் பற்றிப் பேசி வருகிற வழக்கமான ஆன்மீக பிரச்சாரகராக அவர் இருந்ததே இல்லை. ஊக்கமளிக்கும் வகையில் அவர் வடிவமைத்த பொன்மொழி: “இறைசார் வேட்கையை மனிதம்சார் வேள்வியாக மாற்றுதல்”.

உலகம் சந்திக்கிற பல்வேறு வகையான வேதனைகளையும், சவால்களையும் மானுட உறவுகளை ஆத்மீகமாக திசை திருப்புவதனால மட்டுமே சமாளிக்க முடியும் என்பதை உலகத்திற்குச் சொல்வதுதான் அவருடைய வாழ்நாள் முழுவதும் வியாபித்திருந்த நோக்கமாக இருந்தது.

எழுதுவதிலும் பேசுவதிலும் ஸ்வாமிஜி திறன் மிக்கவராயிருந்தார். தொடர்ந்து பயணிப்பவராக இருந்த அவர், இந்தியாவிலும் உலகில் உள்ள மற்ற நகரங்களிலும் ஆயிரக்கணக்கான பிரசங்கங்களைச் செய்துள்ளார். தேசத்தை உருவாக்குவதில் ஆசிரியர்கள், நிர்வாகிகள், அறிவியலாளர்கள் மற்றும் வியாபாரிகளின் பங்கு என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த லௌகீக உலகில் இருந்து முற்றிலும் பற்றற்ற ஆன்மீக தலைவராக இருந்த ஒருவருடைய பிரசங்கங்களும் எழுத்துக்களும் அமைந்திருந்தன. வேறுபட்ட பிண்ணனிகளைச் சேர்ந்த அரசியல் மற்றும் சமூக தலைவர்களோடும் அவர் தொடர்புகொண்டிருந்தார். “மாறிவரும் சமூகத்திற்கான மாறாத மதிப்பீடுகள்” (Eternal Values for a Changing Society) என்ற நான்கு தொகுதிகள்கொண்ட புத்தகம் உலக மதங்களின் போதனைகளுக்கு மரியாதை செய்விக்கிறது.

swamj_ranganathanandaநான்கு தொகுதிகளாக ஸ்வாமிஜி எழுதிய பகவத்கீதையின் சுருக்கமான பதிப்பை சமீபத்தில் கவனிக்க நேர்ந்தது. கீதையின் அழகும் ஆற்றலும் (The Charm and Power of Gita) என்ற தலைப்புக் கொண்ட இந்த புத்தகத்தில், கீதையை சம்பிரதாயமான பார்வையோடு அணுகுவதற்கும், மனிதரை உருவாக்குவதும், தேசத்தைக் கட்டமைப்பதும் (man-making and nation-building) என்று விவேகானந்தர் அறிவித்த பார்வையோடு அணுகுவதற்குமுள்ள வித்தியாசத்தை ஸ்வாமிஜி விளக்குகிறார். “கடந்த காலங்களில் கீதையை மக்கள் ஒரு சமய ஆச்சாரத்திற்காகவோ அல்லது கொஞ்சம் மன நிம்மதி பெறுவதற்காகவோ வாசித்து வந்தனர். இந்த புத்தகம் முழுக்க முழுக்க நடைமுறை உபயோகத்திற்கானது என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே இல்லை. நாம் மட்டும் புரிந்துகொண்டிருந்தால் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த படையெடுப்புகளோ, நமக்குள் நடக்கும் ஜாதிப் பிரச்சினைகளோ, பிரபுத்துவ கொடூரங்களோ, பிரம்மாண்டமான ஏழ்மையோ ஏற்பட்டிருக்காது. நாம் கீதைக்கு முக்கியத்துவமே தரவில்லை; ஆனால், இப்போது தரவேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. மானுட கண்ணியத்தை, சுதந்திரத்தை, சமவாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு வளம்சார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கு நமக்கு ஒரு தத்துவம் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு பார்வையை, இந்த நடைமுறை அணுகுமுறையை கீதைக்கு இந்த நவீன உலகில் முதன்முதலில் அளித்தவர் ஸ்வாமி விவேகானந்தரே.”

செப்டம்பர் 2007 அன்று ஸ்வாமி ரங்கநாதானந்தரின் சரிதத்தை வெளியிடுவதற்காக, கேரளாவில் அவர் அவதரித்த திருச்சூருக்கு சிறிது தொலைவில் உள்ள பரனாட்டுக்கராவிலுள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அந்த சரிதையில், ஸ்வாமிஜியின் பல்லாண்டு சகாவான டாக்டர் டி.ஐ. ராதாகிருஷ்ணன் ஒரு சுவையான தகவலைப் பதிவு செய்துள்ளார். ஒரு முறை ஸ்வாமிஜி இஸ்லாம் மற்றும் முகம்மது நபியைக் குறித்து கராச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே வந்த ஒரு மனிதர் கடைசி வரிசையில் போய் உட்கார்ந்துகொண்டார். அவர் முகம்மது அலி ஜின்னா.

கிடைத்த தகவலின்படி, பிரசங்கம் முடிந்தவுடன் மேடைக்கு விரைந்த ஜின்னா, “ஸ்வாமிஜி, இதுவரை நான் என்னை ஒரு உண்மையான முஸ்லீம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். உங்களுடைய இந்த பேச்சைக் கேட்டபின்பு, நான் ஒரு முஸ்லீம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். உங்களது ஆசிகளோடு உண்மையான முஸ்லீமாக முயல்வேன்”. “நாங்கள் மதிக்கும் அந்த கிருத்துவானவர்” (The Christ We Adore) என்ற தலைப்பில் ஸ்வாமிஜி பேசியபோதும் இதே போன்ற அனுபவங்கள் கிறுத்துவர்களோடும் ஏற்பட்டது என்று இதே கட்டுரையின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

சுவாஜியின் இந்த உரையிலிருந்து ஒரு பகுதி : நன்றி – ஜடாயு வலைத்தளம்

“தெய்வ அவதாரங்களில் ஒருவர் என்று இந்துக்கள் கண்டுணர்ந்து போற்றத் தகுந்த பல அம்சங்கள் ஏசு கிறிஸ்துவின் வாழ்விலும், உபதேசங்களிலும் உள்ளன. அவரது வாழ்வு இனிமையும், மென்மையும், துயரமும், சோகமும் இழைந்து ஆன்மீகத்தால் நிரம்பியது. ஆனால், இந்துக்களாகிய நமக்கு அவரது முடிவு என்பது ஒரு சோகம், அவ்வளவு தான். ஆன்மிகம் ததும்பும் அழகுணர்ச்சி எதுவும் அதில் இல்லை. நமது தெய்வ அவதாரங்களான ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் இவர்களது வாழ்க்கை முடிவுகளும் பெரும் சோகம் ததும்பியதாகவே இருந்தன. ஆனால் அந்த முடிவுகள் மீது நாம் சமயத்தைக் கட்டமைக்கவில்லை. இந்த மரணங்களை இயற்கை நியதியாக ஏற்றுக்கொண்டு அவர்களது வாழ்வின் அற்புதமான தருணங்களின் மீதே நம் சமயம் கட்டப் பட்டிருக்கிறது. ஏசு என்பவர் சிலுவையில் அறையப் படாமலே இருந்தாலும், அவரது வாழ்வும், உபதேசமும் இந்துக்களுக்குப் பிரியமானதாகவே இருக்கும். ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கும், மேற்குலகிற்கும், இந்த சிலுவையில் அறைதல் என்ற துன்பியல் நிகழ்வு இல்லாமல், “ரத்தம் தோய்ந்த” தியாகம் இல்லாமல், ஏசுவின் வாழ்க்கை சாதாரணமானதாகவும், சக்தியற்றதாகவுமே தோற்றமளிக்கிறது. கிரேக்க துன்பியல் காவியங்களின் மரபில் தோய்ந்த மேற்குலகம் கிறிஸ்தவத்திற்கு இந்தத் தன்மை அளித்தது போலும்! ஆனால் இந்து மனத்திற்கோ வாழ்வு முழுவதும், உலகம் முழுவதுமே பிரபஞ்ச வடிவிலான இறைவனின் தெய்வ லீலை என்பதாகவே தோன்றுகிறது”.

தற்காலத்திற்கான ஆதிசங்கரர்

ஸ்வாமி ரங்கநாதானந்தர் கேரளாவில் உள்ள திரிசூரில் 1908ல் அவதரித்தார் என்பதை நான் படித்தபோது, அவர் பிறந்த ஊர் காலடிக்கு மிக அருகில்தானே இருக்கிறது என்பது மனதில் தோன்றியது. ஸ்வாமி ரங்கநாதானந்தர், தற்காலத்திற்கான ஆதிசங்கரர் என்றே நான் எண்ணுகிறேன். மாபெரும் துறவியும், ஞானக்கடலுமான ஆதிசங்கரர் பகவத்கீதை, உபநிஷதங்கள், புராணங்கள் போன்ற வைதீக நூல்களுக்கே உரித்தான சிக்கலான தத்துவ தரிசனங்களுக்கு மிகத் தெளிவான விளக்கங்களை அளித்தார். அவருக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின் ஸ்வாமி ரங்கநாதானந்தரும் தனது முன்னோடியின் அசாதாரண பண்புகளோடும், குணங்களோடும் தோன்றினார். எல்லா வகைகளிலும் ஸ்வாமி ரங்கநாதானந்தர் ஆதிசங்கரரை ஒத்தவரே.

கராச்சியிலிருந்து, டெல்லி ராமகிருஷ்ண இயக்கத்தின் தலைவராக ஸ்வாமி ரங்கநாதானந்தர் வந்து சேர்ந்த போது அவருடைய உபன்னியாசங்களைக் கேட்கச் சென்றிருக்கிறேன். பின் அவர் ஹைதராபாத்திற்கு பணிக்கப்பட்டார். ஆனால், எப்போதெல்லாம் அவர் டெல்லிக்கு வந்தாரோ அப்போதெல்லாம் அவரோடு தொடர்பு கொள்ளும் வாய்ப்புகள் எனக்கிருந்தன. இந்த தேசத்தை உருவாக்க உழைத்த மேன்மையாளர்களான பண்டித ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பேய்ஜி போன்ற பலர் மனவெழுச்சி பெறுவதற்காகவும், விவேகம் நிறைந்த ஆலோசனைகளுக்காகவும் ஸ்வாமிஜியைச் சந்திப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு. அது அவருடைய மகத்துவத்தையும், உச்சமான ஆளுமையையும் பேசுகிறது.

9 Replies to “தலைவர்களைத் தேசத்திற்குத் தந்த குரு”

  1. நல்ல கட்டுரை. குரு பௌர்ணமிக்கு ஒரு அழகான வணக்கம். சுவாமி ரங்கனாதானந்தர் வாழ்க.

  2. // இந்தியாவிலும் உலகில் உள்ள மற்ற நகரங்களிலும் ஆயிரக்கணக்கான பிரசங்கங்களைச் செய்துள்ளார். //

    சுவாமி ரங்கநாதானந்தரின் பல நூல்களைப் படித்திருக்கிறேன். அவருடைய உபநிஷத விளக்கங்கள் அற்புதமானவை. The Message of Brahadaranyaka Upanishad in the light of modern science என்கிற நூலை இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். சுவாமிஜியின் ஆழ்ந்தகன்ற அறிவுத் திறனும், பன்முக ஆளுமையும் வியக்க வைக்கின்றன. அவரது மனித நேயம், அனைவரிடத்தும் சமமாகப் பழகும் எளிமைப் பண்பு ஆகியவை பற்றியும் பல நினைவுப் பகிர்தல்கள் உள்ளன.

    சுவாமிஜியின் நூல்கள், அவரது உரைகளின் குறுந்தகடுகள் ஆகியவற்றை இணையம் மூலம் இங்கே வாங்கலாம் – https://www.sriramakrishnamath.org/Shopping/treess.aspx

    சுவாமிஜியின் புனித நினைவுக்கும், இந்து தர்மத்தின் மாமுனிவர்கள் அனைவருக்கும் இந்த நன்னாளில் எனது மலர் அஞ்சலிகள்.

    பொருத்தமான நேரத்தில் அழகிய கட்டுரைகளைத் தொடர்ந்து வழங்கும் தமிழ்ஹிந்து தளத்திற்குப் பாராட்டுக்கள்!

  3. Wonderful!! Thanks for this contribution. Revered Swamiji was a universal personality in truest sense. A monk without any sort of frontiers.

  4. // …. .. ….. ஒரு அதிகாரி அவரிடம் சொன்னார், “நீங்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில், இதே காரணத்திற்காக முஸ்லீம் லீக்கும் அனுமதி கோரியுள்ளது. இந்த விஷயத்திற்காக அரசு அனுமதித்துள்ள கோட்டாவில், முஸ்லீம் லீக் பயன்படுத்தியது போக மீதி இருப்பதைத்தான் நாங்கள் தரமுடியும்”. சில வாரங்களில், அதே அதிகாரி ஸ்வாமிஜியிடம் சொன்னார், “முஸ்லீம் லீக் 60 டன் மட்டுமே அனுப்பியுள்ளது. கோட்டாவில் எஞ்சியிருப்பது முழுக்க இப்போது உங்களுடைய பங்குதான்”. ராமகிருஷ்ண ஆசிரமம் அனுப்பிய அரிசியின் அளவு 1240 டன்கள் !…..//

    சாமியார்கள் என்றாலே கேவலமாகப் பார்க்கும் தமிழ்நாட்டு ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தத் தகவலைப் ப்ரிண்ட் போட்டு கொடுக்க வேண்டும்.

    இந்து சாமியார்கள் இப்படி எந்த சுயலாப நோக்கும் இல்லாமல் சேவைகள் செய்தாலும் அவர்களது பணிகளைப் பற்றி பெரிதாக தம்பட்டம் அடிக்காமல் இருப்பதால், சாமியார்கள் என்றாலே ஒட்டுண்ணிகள் என்ற எண்ணம்தான் இங்கே இருக்கிறது.

    1240 டன்கள் !

    நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. எப்பேற்பட்ட சாதனை இது. தனிநபராக இருந்த ஒரு சாமியார் இப்பேர்ப்பட்ட சாதனையைச் செய்திருக்கிறார். ஆனால், இதுவரை இவரைப் பற்றி எந்தத் தகவலும் பெரும்பாலான இந்தியர்களுக்குத் தெரியாது.

    ஒருவேளை இவர் இந்தியராகவும், இந்துவாகவும் இல்லாமல் இருந்திருந்தால் அன்பின் அடையாளமாக, துயர்துடைக்கும் தேவதையாக இந்த உலகம் முழுவதும் உள்ள மீடியாக்கள் கொண்டாடியிருக்கும். அழகிப்போட்டிகளில் இவரைக் குறிப்பிடுவது புத்திசாலித்தனமாகக் கருதப்பட்டு அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பர்.

    எப்பேர்ப்பட்ட சாதனையை இந்தியர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால், அந்தச் சாதனைகளை இந்தியர்களாகிய நாமே அறியாமல் இருக்கிறோம். நினைக்கவே மனம் வெம்புகிறது.

    //….ஆங்கிலேயர்களுடைய போர்க்கால கொள்கையினால், 1943ம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சம் நினைவுக்கு வருகிறது….//

    1943ல் ஆங்கிலேயருடைய தவறான பாலிஸி என்று அத்வானிஜி் கோடிட்டுக் காட்டியிருப்பது சாதாரண விஷயம் இல்லை. அந்தப் பஞ்சம் இயற்கைச் சீற்றத்தால் ஏற்படவில்லை. உலகப்போரை சாக்காக வைத்து இந்தியர்கள் மீது ஆங்கிலேயர்கள் நடத்திய மிகப் பெரிய இனஒழிப்பின் விளைவாக இந்த பஞ்சம் ஏற்பட்டது.

    இந்த பஞ்சத்தின் பின்னணியில் இருந்த இனவெறுப்பு நாம் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுப் பாடம். மார்க்கஸிஸ்ட்டுகளால் வடிவமைக்கப்படும் நமது பாடப்புத்தகங்கள் சொல்லாத பாடம். யாரும் மறக்கக்கூடாத உண்மைகளை இந்தப் பஞ்சம் தன்னகத்தே வைத்திருக்கிறது. இது தரும் பாடங்களை நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

    முக்கியமாக பணத்தாசை பிடித்த ஒரு சுத்தமான சுயநலமியை தந்தை என்று அழைத்துவரும் சாதிவெறியர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். இந்த சுயநலமிகள் வெள்ளைக்காரர்கள்தான் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள், நீதியுடன் நடந்துகொள்வர், இந்தியாவுக்கு சுதந்திரம் தந்தாலும் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டாம், நாங்கள் ஆங்கிலேயரின் கீழேயே அடிமைகளாக இருந்துகொள்கிறோம் என்று தீர்மானம் போட்டவர்கள்.

    இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேயர்களின் கால்களை நக்கிப் பிழைத்த சில இயக்கங்களின் தலைவர்கள்தான், அப்போதைய கள்ள மார்க்கெட்டை நடத்தி வந்தனர். போர்க்காலத்தில் சம்பாதித்த புத்திசாலிகளாக அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள்தான் வெள்ளைக்காரன் நல்லவன் என்று பேசினார்கள். தீர்மானம் போட்டார்கள். பகுத்தறிவு என்ற பெயரிலும், ஜாதி வெறியைத் தூண்டியும் எவாஞ்சலிக்க வெள்ளையர்களுக்காக ஊழியம் செய்தார்கள்.

    ஆனால், இவர்கள் அப்போதிருந்து இப்போதுவரை கேவலப்படுத்தி வரும் சாமியார்கள்தான் அப்போது பஞ்சத்தாலும், பசியாலும் செத்துக்கொண்டிருக்கும் மக்களுக்காக உழைத்தனர்.

    அன்பிற்குரிய வெங்காயங்களே ! இந்த பஞ்சங்களைக் குறித்து, இந்தியாவின் வரலாறு குறித்த உண்மைகளைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். எவாஞ்சலிக்க வெள்ளையர்கள் எவ்வளவு கொடியவர்கள், உங்களது தாத்தாக்களையும் பாட்டிகளையும் எப்படிப் பன்றியைவிடக் கேவலமாக நடத்தினார்கள் என்பது தெரியவரும்.

    இந்த இனஒழிப்பு குறித்த தகவல்களை இங்கேயும், இங்கேயும் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும், 1943ம் ஆண்டு நடந்த பஞ்சம் போல 1700லும் ஆங்கில ஆட்சியின்போது பஞ்சம் ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் கண்டுகொள்ளவில்லை. 1943ம் ஆண்டு நடந்த பஞ்சத்தின்போது மக்களுக்காகச் சேவை செய்த சாமியார்களைப் போன்று, 1700களில் ஏற்பட்ட பஞ்சத்தின்போதும் சாமியார்கள் சேவை செய்திருக்கும் வாய்ப்பு அதிகம்.

    பங்கிச் சந்திர சட்டோபாத்யாயா தாம் எழுதிய “ஆனந்த மடம்” நாவலில் சாமியார்களைக் கதாநாயகர்களாகக் காட்டியது, 1700ம் ஆண்டு பஞ்சத்தால் அடிபட்டுத் துடித்த இந்தியர்களுக்குச் சேவை செய்த சாமியார்களுக்கு நன்றி தெரிவிக்கும் செயலாக இருக்கக்கூடும்.

    இதை எல்லாம் ஆராய்ந்து உண்மைகளை வெளியே சொல்ல யாருமே இல்லையா?

    என் மனம் கதறுகிறது.

    நாம் நம் அனைவரையும் உயர்த்தும் நமது சாமியார்களை எப்படி நடத்திக்கொண்டிருக்கிறோம்? எவ்வளவு கேவலப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்? அவர்கள் மட்டும் சேவை செய்ய இறங்கியிருக்காவிட்டால் 1943களிலேயே நாம் ஒவ்வொருவருடைய பரம்பரையும் முடிந்து போயிருக்கும். (தமிழ்நாடும் பல பஞ்சங்களை ஆங்கிலேயர் காலத்தில் சந்தித்திருக்கிறது.) நம்மில் பலருடைய தாத்தாக்களோடு நமது வமிசங்கள் அழிந்துபோயிருக்கும். நாமே இருந்திருக்க மாட்டோம்.

    ஆனால், இந்த சாமியார்களைத்தான் நாம் கீழ்த்தரமாக நடத்துகிறோம். இன்றும்கூட மதிப்புமிக்க பொறுப்பில் இருக்கும் தலைமைகள் இந்த சாமியார்களை ஆண்டிகள், பண்டாரங்கள் என்று எழுதுகின்றன. நாமும் அதை ரசிக்கிறோம். இந்தக் கீழ்த்தர ரசனைக்கு பகுத்தறிவு என்றும் முட்டாள்தனமாகப் பெயர் தருகிறோம்.

    அந்தக் காலத்தில் இருந்து “ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார்” என்று கார்ட்டூன் போட்டு கேவலப்படுத்தி வரும் தினசரிகள் இந்த சாமியார்களின் தன்னலமற்ற பணியைப்பற்றி எப்போதாவது பேசியிருக்கின்றனவா?

    திராவிட இயக்கத்திற்கு ஜால்ரா போட்டு வரும் பத்திரிக்கைகள்தான் மாபெரும் ஞானியான ரஜனீஷை ஒரு சாமியார் என்பதாலேயே “செக்ஸ் சாமியார்” என்று வெட்கமில்லாமல் அழைத்தன.

    இப்போதுகூட போலிகளைக் குறிப்பிட போலிச் “சாமியார்” என்ற பெயரைத்தான் பயன்படுத்துகின்றன. குற்றம் சாட்டப்பட்ட ப்ரேமானந்தர் என்பவரின் பெயரை மற்ற இந்து சாமியார்களைக் கேவலப்படுத்த பயன்படுத்துகின்றன. ஆனால், ப்ரேமானந்தா கைது செய்யப்பட்ட அதே காலகட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த மாரநாத கிருத்துவ சபையை நடத்திய ஜான் ஜோசப் பாதிரியார், ப்ரேமானந்தாவை விட மோசமான கேவலமான வேலைகளைக் கொலைகளைச் செய்திருக்கிறார். (ஏசுவின்ஆசியைப் பெற பெற்ற தாயும், மகனும் உடலுறவு கொள்ள வேண்டும் என போதித்து, அந்தக் கேவலம் நடைபெறும்போது அதை வேடிக்கை பார்த்தார் என்று பத்திரிக்கைகள் அப்போது மட்டும் வெளியிட்டது ஒரு மென்மையான உதாரணம்.)

    ஆனால், எந்தப் பத்திரிக்கையும் அவரைப் பற்றிப் பேசுவதில்லை. அவரைப் பற்றிய தகவல்களை மிகவும் தேடியே கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. இணையத்தில் கிடைத்த ஒரே ஒரு தகவல் இதுதான்: Unholy Messenger

    இத்தனைக்கும் ராமாயணக் காலம் தொட்டே போலிச் சாமியார்களை இகழும் குணம் இந்து மதத்தினூடேயே இருந்திருக்கிறது. ஒருவனை போலிச் சாமியாராக ராமாயணம்தான் முதன்முதலில் அறிமுகம் செய்கிறது. இந்த திராவிட மாயைகளுக்கு அந்த உண்மைகள் கண்ணுக்குத் தெரியாது. ஏனெனில், வெம்பி அழுகிச் சிதறிய ஒரு சில சுள்ளிகளை முன் வைத்து, கற்பகதருவையே வெட்டிச் சாய்க்க ஆசைப்படும் மூடர்களுக்கு உண்மை பொருட்டல்ல.

    இருப்பினும், இன்றுவரை எந்த மதத்தவராக இருந்தாலும் ஒடோடிப் பணி புரிபவர்கள் இந்த ஹிந்து மத சாமியார்களே. இந்த சேவைகளின் பலன்களைப் பெற மதம் மாறவேண்டும் என்று யாரிடமும் அவர்கள் சொல்லுவதும் இல்லை.

    ஆனால், அன்று முதல் இன்று வரை தங்களைக் கேவலப்படுத்தி வரும் சமூகத்திற்கு, எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை செய்யும் துறவிகளை நாம் இன்றளவும் கேவலப்படுத்தித்தான் வருகிறோம்.

    கீழே நான் எழுதிய வாசகம் கோபத்தில் சொன்ன வாசகம் இல்லை. மிக அமைதியாக யோசித்தே சொல்லுகிறேன்.

    தமிழ்நாட்டுத் தெரு நாய்க்கு இருக்கும் நன்றிகூட தமிழரான நமக்கு இல்லை.

    ——– ————- ————- ————— ———- ————- ———– ———— ———– ———– ————

    இந்தக் கட்டுரை எழுப்பும் வேறு சில கேள்விகளும் இருக்கின்றன. இந்தப் பஞ்சம் நடந்த ஆண்டு 1943. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு நான்கு ஆண்டுகள் முன்பு. பாக்கிஸ்தான் தனி நாடாக உருவாகவில்லை.

    ஆனால், அப்போதே ஆங்கிலேய அரசாங்கம் முஸ்லீம் லீக்கிற்குச் சிறப்பு அதிகாரம் அளித்திருப்பதை இந்தக் கட்டுரை தெரிவிக்கிறது:

    // …. .. ….. ஒரு அதிகாரி அவரிடம் சொன்னார், “நீங்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில், இதே காரணத்திற்காக முஸ்லீம் லீக்கும் அனுமதி கோரியுள்ளது. இந்த விஷயத்திற்காக அரசு அனுமதித்துள்ள கோட்டாவில், முஸ்லீம் லீக் பயன்படுத்தியது போக மீதி இருப்பதைத்தான் நாங்கள் தரமுடியும்”. ..//

    கேள்வி 1: அதாவது முஸ்லீம் லீக்கிற்கு மிஞ்சித்தான் வேறு யாரும் எந்த வேலையும் செய்ய முடியும். இப்படிப்பட்ட ஒரு சிறப்புச் சலுகையை ஆங்கில அரசாங்கம் எதற்காக முஸ்லீம் லீக்கிற்கு சுதந்திரம் தரும் முன்பே வழங்கியது?

    அப்போதிருந்த முஸ்லீம் லீக்கினால் 60 டன்கள் மட்டும்தான் தர முடிந்திருக்கிறது. அதையும் இஸ்லாமியர்கள் நிரம்பிய இப்போதைய கிழக்கு வங்காளத்திற்குத்தான் அவர்கள் அனுப்பி இருப்பார்கள். 60 டன்கள் மட்டுமே அவர்களால் திரட்ட முடிந்தது என்றால், அங்கே முஸ்லீம் லீக்கிற்கு அப்போது செல்வாக்கே இல்லை என்பது தெளிவு.

    செல்வாக்கு இல்லாமல் போனதற்கு அங்கே இருந்த மக்கள் விகிதாச்சார வேறுபாடு காரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதாவது, ஹிந்துக்களின் எண்ணிக்கை முஸ்லீம்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமாகவோ, அல்லது ஏறத்தாழ சமமாகவோ இருந்திருக்க வேண்டும்.

    கேள்வி 2: இப்போது கராச்சியில் மட்டுமல்ல, ஒட்டு மொத்த பாக்கிஸ்தானில் இருக்கும் ஹிந்துக்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். “உங்கள் மதம் உங்களுக்கு, எங்கள் மதம் எங்களுக்கு” என்று மற்ற மதத்தவரையும் எங்கள் முகம்மதியம் மதிக்கிறது என்று சொல்பவர்கள், இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்குக் காரணங்கள் சொல்ல முடியுமா?

    கேள்வி 3: ஹிந்துக்கள் காஃபிர்கள் என்றும், மதவெறி பிடித்தவர்கள் என்றும் சொல்லுகிற இந்திய முகம்மதியர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஆயிரம் மடங்கு அதிகரித்துக்கொண்டே போவதில் இருந்து, எந்த மதம் உண்மையில் மற்ற மதத்தவரை அன்போடு மதிக்கிறது என்பதைச் சொல்ல முடியுமா?

  5. கணபதி,

    துறவிகள் மக்களின் துயர்தீர்த்த சம்பவங்கள் ஏராளம் நம் வரலாற்றிலும், இலக்கியங்களிலும் இருக்கின்றன. பஞ்சகாலத்தில் இறைவனை வேண்டி காசுகள் பெற்ற ஒரு சம்பவம் திருஞானசம்பந்தர் வரலாற்றில் உள்ளது.

    இந்தக் கட்டுரையில் முக்கியமான சமூக வரலாற்றுச் செய்திகள் இருக்கின்றன. நீங்கள் விளக்கிய பிறகு தான் அது புலப்படுகிறது. அருமையான கட்டுரை.

  6. சாதாரண விஷயங்களாக நாம் கருதுகின்றவற்றிலும் அசாதாரணங்கள் இருப்பதைக் கண்டவர் ஸ்வாமி ரங்கநாதானந்தர். ஆனால், அசாதாரணமான தனது ஆளுமையை சாதாரணமாகவே அவர் எடுத்துக்கொண்டதால் எந்தவித படோடோபங்களும் இல்லாது எளிமையாக வாழ்ந்தவர்.

    அனைத்திலும், தன்னிலும் ப்ரம்மத்தைக் கண்டவருக்கு மட்டுமே இப்படிப்பட்ட நடத்தை வாய்க்கும்.

    அந்தப் பெருந்தகையின் பாதாரவிந்தங்களைப் பணிகிறேன்.

    குரு பூர்ணிமா அன்று எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டிய ஒரு மகானின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்ட தமிழ் ஹிந்து தளத்திற்கும் நன்றிகள்.

  7. களிமிகு கணபதி அவர்க்ளின் உணர்வை நானும் அடைகின்றேன். மதிக்கின்றேன். போற்றுகின்றேன்.
    பனித்துளி குருபூர்ணிமாவில் சற்குரு ஒருவருக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளை நன்றியோடு நினைந்து மானசீகமாக வணங்கும் வாய்ப்பினை அளித்துள்ளார். நன்றி பனித்துளி. நீங்கள் நெருப்புக் கனலாக முந்தைய இடுகையில் சுட்டீர்கள். இப்ப்பொழுது மனத்துக்கு இதமாக நற்குருவைக் காட்டியுள்ளீர்கள் நன்றி

  8. அருமையான கட்டுரை இப்படிப்பட்ட யோகிகளை பற்றி எல்லாம் நம் பாட நூல்களில் வருவதில்லை. நம் அறியாமையை எண்ணி வருந்துகிறேன்.இப்போதாவது அறிய தந்த தமிழ் ஹிந்துவுக்கு நன்றி குருவுக்கு கோடி கோடி வணக்கங்கள்

  9. ஸ்ரீமத்சுவாமி ரெங்கநாதனந்தா் அவர்களிடம் அளவில்லா அன்பும் பற்றும் கொண்டு அவரது நூல்களைப்படித்து பல தெளிவுகளைப் பெற்றவன் நான் என்பதில் பெரும் உவகை அடைகின்றேன்.” The call of human Excellence ” என்ற புத்தகம் இன்றும்எ னது வீட்டு நூலகத்தை அலங்காித்துக்கொண்டிருக்கின்றது.சுவாமிஜி அவர்கள் பொதுத்தலைவார் ஆன போது ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் அவரது படத்தைப் போட்டு வாழ்க்கை குறிப்பும் வெளியிட்டிருந்தாா்கள்.அந்தப்படத்தை வெட்டி மேற்படிபுத்தகத்தில் ஒட்டி வைத்துள்ளேன். பலபேருக்கு படிக்கக் கொடுத்து பத்திரமாக வாங்கி வைத்திருக்கின்றே்ன. திருச்செந்தூா் வட்டம் உடன்குடியில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியா் மேற்படி புத்தகத்தை படித்து விட்டு ”கண்ணீா் மல்க ” அற்புதமான கருத்து தகவல்கள். இந்துமதத்தில் இவ்வளவு ஆழமான அற்புதமான அமிாதமயமான கருத்துக்கள் இருப்பது இதுவரை எனக்குத் தொியாமல் போவதே! என்று வேதனையோடு தொிவித்தாா். எனது ஆலோசனையின் போில் சுவாமி விவேகானந்தாின் ஞானதீபம் முழுவதையும் பள்ளி நூலகத்திற்கு வாங்கினாா். சுவாமி ரெங்கநாதனந்தா் ஒரு ஞானதீபம். கலங்கரை விளக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *