இசைக்கூறுகள் – 2 : பாகம் 01- தாளம் மற்றும் ஸ்வரம்

isaikoorugal01தென்னக இசை நான்கு முக்கிய இலக்கணங்களின் மேல் நிற்கும் யானை போன்றது. சுரம், தாளம், சுருதி, ஸ்தாயி. பொதுவாகவே நம் இந்திய இசை தனிச் சுரங்களால் ஆனவை. இந்த நான்கும் இசையமைப்பாளரின் முக்கிய பொருட்களாகும். மர நாற்காலி, மேஜை செய்யும் தச்சன் மரம், ஆணி போன்றவற்றினால் ஒரு கட்டமைப்பை உருவாக்குவதுபோல் இசையமைப்பாளர் இந்த நான்கையும் பயன்படுத்துவர்.

நாம் கேட்கும்போது இவை எதுவும் தனித்து நிற்காது. தாளம் அடித்தளமாக அமைய, சுரங்கள் அணிவகுத்து நடைபோட, பாடல் ஸ்தாயி மேலும் கீழும் பயனிக்க இசை என்னும் சம்மேளனம் நடந்தேறும். ஒன்றை தனியாக கவனிக்கத் தொடங்கினால் மற்ற மாற்றங்களை கவனிக்கத் தவறிவிடுவோம். இவை அனைத்தும் சேர்ந்த விளைவே – விவரிக்க இயலாத கூட்டு ஒலியே – நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய சங்கதியாகும்.

நம்மைப் போன்ற சாதாரண இசை ரசிகர்களுக்கும், இந்த அடிப்படை ஞானமிருந்தால் ஆழமான இசை அனுபவத்தை பெற முடியும். இதைப் பற்றி நுணுக்கமான விவரணைகள் இசை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு வேண்டுமானால் முக்கியமாக இருக்கலாம், நம்மை போன்றோருக்கு தேவையான அளவு புரிந்தால் போதுமானது.

தாளம்

பல கலாசாரங்கள் வெவ்வேறு விதமாகத் தோன்றினாலும், அவை அனைத்தும் ஒத்துக்கொள்ளும் விஷயம் ஒன்றிருக்கிறது. அது இசை தொடங்கிய முதல் நேரம். தாளம் என்னும் அமைப்பினாலேயே இசை தொடங்கியதாக கூறுகின்றனர். இதற்குச் சாட்சியாக இந்திய இசை, ஆப்ரிக்க இசை, ஐரோப்பா இசை என பல கலாசார இசை வடிவங்களிலும், தாளமே மிகப் பழமையான சங்கதியாக இருந்து வந்திருக்கிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நம் உடம்பினுள் இருக்கும் தாள அமைப்பே, ஆதி காரணமாகும். நம் இதயத் துடிப்பு மிகத் துள்ளியமான தாள அமைப்பை அதனுள் வைத்திருக்கிறது. அடுத்து நம் உடம்பு அமைப்பினால் அமையும் சீரான நடை, சமச்சீர் விகிதத்தில் கண்ணாடி பிம்பம்போல் இருக்கும் உடம்பின் இரு பகுதிகள் என அனைத்தும் தாள கச்சிதங்களே ஆகும்.

தாள அமைப்பை நாம் குறியீட்டு பாஷயில் எழுதத் தொடங்கி பல நூற்றாண்டுகள் ஆகின்றன. தென்னக இசையாகட்டும், ஐரோப்பா இசையாகட்டும் இந்த குறியீட்டு வடிவத்தில் முதலில் தோன்றி இன்றளவும் கச்சிதமாக இருப்பது தாளம் மட்டுமே. தென்னக இசையில் துருவம், திரிபுடை, ரூபகம், ஜம்பை, ஏகம், மட்டியம், அட என ஏழு தாளங்கள் உள்ளன. இதில் நாம் கர்நாடக சங்கீதத்தில் ரூபக தாளம் மிகப் பரவலாக கேள்விப்பட்டிருப்போம்.

ஒவ்வொறு தாளத்தையும், ஐந்து வகையாகவும் பிரித்தனர். திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம். ஆக, முப்பத்தைந்து தாள வகைகள் நம் தென்னக மரபின் புழங்கி வந்திருக்கின்றன.

சரி தாளம் என்றால் என்ன? தாளம் இசையை நேர பகுப்பின் படி பிரிக்கும் ஒரு விதியாகும். உதாரணத்திற்கு, ராணுவ மற்றும் என்ஸிஸி அணிவகுப்புகளில் இருக்கும் ஒற்றுமை தாள அடிப்படையிலேயே அமைந்திருக்கும். LEFT, right, LEFT, right, ONE, two, ONE, two என அணிவகுப்பு செல்வதைப் பார்த்திருப்போம். LEFT என்றபோது வலது காலையும், right என்றபோது இடது காலையும் முன்னகர்த்தி செல்வோம். இதன்மூலம் நாம் இருவகை இயக்கங்களை ஒரே நேரத்தில் செய்கிறோம். அப்படி செய்யும்போதே ஒரு ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் நிகழ்கின்றது. இதைப் போன்று தொடந்து செய்து வந்தால் இரு பகுதிகளாக மட்டுமே பிரிக்க முடியும். ஒரே போன்ற இசை அமைப்பு மட்டுமே உருவாகியிருக்கும்.

இந்த தாள அமைப்பை பலவித வேகங்களுக்கு ஆட்படுத்தும்போதுதான் நமக்கு பல வடிவங்களிலும், உணர்வுகளிலும் இசை கிடைக்கின்றது. `த க தி மி ` என மெதுமாகச் சொல்வதற்கும், அதையே வேகமாக சொல்வதற்கும் நம் இயக்கங்களில் மாற்றங்கள் நடக்கும். தென்னக இசை என்றைக்கும் நாடகத்திற்கு, அதன் நடன ஆகிருதிகளுக்கும் பெரிய உறுதுணையாகவே இருந்திருக்கிறது. அதனால் முதல் சங்கம் வரை தொல்காப்பியம் போன்ற நூல்களில், இசையையும் நாட்டியத்தையும் பிரித்து பார்த்ததாக விவரங்கள் கிடையாது. இசை என்றபோதே நாட்டியம், நாடகம் போன்றவையும் வரையறுக்கப்படும். தாள வேகத்தில் நாடகம் மற்றும் நாட்டியம் பெரிய மாறுதல்களைக் கொண்டுவந்தது.

பொதுவாக தாளத்தை நம் உடம்பின் அசைவுகளோடும், இயக்கங்களோடும் ஒப்பிடுவர். `அவர் நடை சீரான தாளம் போன்று இருந்தது`, `மெல்ல மெல்ல நடந்து வந்தாள்`. இந்த வாக்கியங்களில் `மெல்ல மெல்ல` என்பது உடலியக்கத்தின் வேகத்தை சீராக காட்டுவதற்காக எழுதப்படுவது. இப்படி நகர்தல் இயக்கத்தை சித்தரிப்பது தாளம்.

சுரவரிசைகள்

ஏழு சுரங்கள் இருப்பது நமக்குத் தெரிந்ததே. அவற்றின் முழு பெயர்கள்:

ஸ – ஷட்ஜம்
ரி – ரிஷபம்
க – காந்தாரம்
ம – மத்யமம்
ப – பஞ்சமம்
த – தைவதம்
நி – நிஷாதம்

இவை கர்நாடக இசைக் கூறுகளில் முக்கியமாக வகிக்கின்றது. இந்த ஒவ்வொறு சுரமும் ஒரு ஒலியமைப்பே ஆகும். இவற்றிற்கு தனி அலைவரிசை உண்டு. நமது ஸ – ஐரோப்பா இசையில் Middle C என்றழைக்கப்படும் அலைவரிசையுடன் ஒத்துப்போகிறது. இதே போல் பண்டைய காலத்தில் தமிழிசையிலும் இதற்கான சமமான ஒலி அலைவரிசைகளை பகுத்துள்ளனர். அவை:

ஸ – குரல்
ரி – துத்தம்
க – கைக்கிளை
ம – உழை
ப – இளி
த – விளரி
நி – தாரம்

இதைச் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில்:

குரறுத்த நான்கு கிளைமூன் றிரண்டாங்
குரையா வுழையிளி நான்கு-விரையா
விளரியேனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார்
களரிசேர் கண்ணுற் றவர்

மிகக் கச்சிதமாக அந்தந்த சுரங்களின் மாத்திரைகளுடன் வருகின்றது. இந்த ஏழு சுரங்களில் ஸ, ப ஆகிய இரண்டும் ப்ருக்ருதி ஸ்வரங்கள் எனக் கூறப்படும். அதாவது இவை மாறுதல் இல்லாத சுரங்கள். அப்படியென்றால் என்ன? ஸ மற்றும் ப சுரங்கள் முழுமையான சுரங்கள் – இதன் அலைவரிசையில் சற்று கீழோ, அல்லது மேலோ மாறுதல் இருக்கும் போது அடுத்த சுரத்திற்குத் தாவிவிடும். சுரஸ்தானத்தில் ஒரே ஒரு ச, ப மட்டுமே இடம்பெற முடியும். இந்த சுரங்களில் இருக்கும் அலைவரிசை அல்லது அசைவு எண்கள் (Frequency Hz) கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

நி நி ச்
240 256 300 320 360 384 450 480

ஆரோகனம் – சுரங்கள் மற்றொன்றைவிட அதிகரித்துச் செல்லும்போது ஆரோகனம் என்று பெயர். தமிழிசையில் இதற்கு ஏறுநிரல் எனப் பெயர்.

ச ரி க ம ப த நி ச்

அவரோகனம் – சுரங்கள் ஒன்றுக்கொன்று குறையும்போது அவரோகனம் என்று பெயர். தமிழிசையில் இதற்கு இறங்கு நிரல் எனப் பெயர்.
அவரோகனம் – ச நி த ப ம க ரி ச

இதுவே ஒரு சுரஸ்தானம் (Octave) ஆகும். இப்படி ஏற்ற இறக்கங்களோடு இருக்கும் சுரக் கோர்வையை ராகம் என்பர். அடுத்த் பகுதியில் மீதமிருக்கும் சுருதி மற்றும் ஸ்தாயி பற்றி விரிவாக பார்க்கலாம்.

– தொடரும்

4 Replies to “இசைக்கூறுகள் – 2 : பாகம் 01- தாளம் மற்றும் ஸ்வரம்”

 1. நல்ல விளக்கங்கள். தொடர்ந்து படிப்பதால், பல வார்த்தைகள் புரிகின்றது. ஒரு சில வார்த்தைகளுக்கு ஆங்கிலத்திலும் எழுதினால், புரிய சுலபமாக இருக்கும.

  நன்றி.

 2. நல்ல கட்டுரை, தொடர வாழ்த்துகள்

  அவரோகனம் – ச நி த ப ம க ரி ச

  என்பதே சரி.

 3. //அவரோகனம் – ச நி த ப ம க ரி ச

  என்பதே சரி.
  //

  வினோத் – பிழைதான். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published.