சொற்றமிழ் சூடுவார்

thalam“நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பில் மிக்க
அர்ச்சனை பாட்டே யாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்”

என நம்பியாரூரரைச் சிவபெருமான் பணித்தான் எனப் பெரியபுராணம் கூறுகின்றது.

தூமறை பாடும் வாயாருக்கு நாள்தோறும் அன்பினொடு சொற்றமிழ் சூட்டுவோர் ஓதுவார் எனப்படுவர். தமிழ்நாட்டில் உள்ளபழமையான சிவன் திருக்கோயில்களில் நாள் வழிபாட்டின்போது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கத் திருமுறை விண்ணப்பம் செய்வோர் ஓதுவார் எனப்பட்டனர். ஓதுவார் பரம்பரை வரலாற்றுப் பழமையானது. சங்ககால பாணர் மரபு “ யாழ்முறிய பாண்மடிய” என நம்பியாண்டார் நம்பிகள் கூறுமாறு திருஞான சம்பந்தப் பெருமானாரது காலத்துக்குப் பின் மறைந்தது. அதன் பின்னர்த் தமிழிசையின் தொன்மையையும் அடையாளத்தையும் மரபையும் ஓதுவார் பரம்பரையே தாங்கி நிற்கின்றது.

பேணிக் காப்பாரின்றி எண்ணற்ற சிவன் கோயில்கள் தமிழகத்தில் சிதிலமடைந்து வருவதுபோல ஓதுவார் பரம்பரையும் போற்றுவாறின்றி மங்கி வருகின்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஓதுவார் பரம்பரைக்குப் புத்துணர்ச்சியூட்டி அழிந்து போகாமல் காப்பதற்கு உரிய முயற்சிகளும் அவ்வப்போது மேற்கொள்ளப் படுகின்றது.

பூம்புகார், தாசில்தார்பண்ணை திரு.இராஜசேகரன் என்னும் தமிழறிஞர், “சொற்றமிழ் சூடுவார்” (தமிழக ஓதுவாமூர்த்திகளின் வரலாறும், திருமுறைப் பணிகளும்) என்னும் நூலினை எழுதித் தாமே வெளியிட்டுள்ளார். இந்நூலில் ஓதுவார்களின் நீண்ட நெடிய தொன்மையையும் அவர்கள் தோற்றுவித்த இசைப் பாரம்பரியத்தையும் புகழ்மிக்க ஓதுவார்களின் வாழ்க்கையையும் அவர்களின் ஆசிரியர் மாணாக்கர் பாரம்பரியத்தையும், இப்பாரம்பரியத்தைக் காப்பாற்றி வந்த நிறுவனங்களையும் மிகச் சுவையாகவும் ஓரளவு விரிவாகவும் பதிவு செய்துள்ளார். இது ஓதுவார் பரம்பரையைக் குறித்த சிறந்த ஆவணம்.

தேவாரம் ஓதுகின்ற பரம்பரை, தேசிகர் எனும் இனமாக மலர்ந்தது. திருமுறை ஓதுதலேயன்றி தேசிகர்கள் சைவக் குடும்பத்தினருக்கு வைதிகக் காரியங்களையும் செய்து வந்துள்ளனர். ஆச்சாரிய அபிடேகம் பெற்றுப் பிற, சைவ இனத்தவருக்குக் குருவாகவும் இருந்துள்ளனர். திருமுறை இந்த வகையில் திராவிட வேதம் என்னும் உரிமைக்கு உரியதாயிற்று. திராவிட வேதம் பயின்ற தேசிகர்கள் மறையோதும் அந்தணர்களுக்குச் சமமாகச் சைவர்களால் மதிக்கப்பட்டனர்.

இந்த நூலில் திருமுறையோதும் தேசிகர் மரபும் பொன்னோதுவார் மூர்த்திகள், நெல்லை சுந்தரமூர்த்தி ஓதுவார் போன்ற தேவார ஓதுவார் மரபும் எம்.எம் தண்டபாணி தேசிகர், குடந்தை சுந்தரேசனார் போன்ற பண்ணிசைவாணர்களின் மரபும் விரிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிராது போயிருந்தால் ஓதுவார் பலரின் பேரும் புகழும் மறைந்தே போயிருக்கக் கூடும்.

இந்த நூலின் ஆசிரியர் திரு இரா. இராஜசேகரன் அவர்கள். வழக்கறிஞர். இவர் சைவம், திருமுறைகள் ஆகியவற்றின் மேல் உள்ள காதலால் இந்தவரலாற்று ஆவணத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னும் சிறிய அளவில் கட்டுரையாகவும் ஒலிநாடாவாகவும் ஓதுவாமூர்த்திகளின் வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சிகள் நடந்துள்ளன. அவற்றை உரிய முறையில் நன்றியுடன் இவர் பயன்படுத்திக் கொண்டார்.

சென்ற நூற்றாண்டில் சமய உணர்ச்சிமிக்க செல்வர்கள் தேவாரப் பள்ளிகளை நாடெங்கும் தோற்றுவித்து திருமுறையிசையை வளர்த்தனர். தேவாரப்பாடசாலையில் தேவார இசை மட்டுமேயன்றி உலகியலுக்கு வேண்டும் கணிதம் முதலிய பாடங்களும் கற்பிக்கப்பட்டன. பொன்னோதுவா மூர்த்திகள் பட்டுச்சாமி ஓதுவார் போன்றோர் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும் வல்லோராகத் திகழ்ந்தனர்.

திருமுறை இசையில் ஈடுபாடு கொண்டோர் பெருமைப்படத்தக்க பல செய்திகள் இந்நூலில் உள்ளன. தற்காலத்தில் திருமுறை இசையில் ஈடுபாடு கொண்டோர் கைக்கொள்ளத்தக்க மரபுகளும் புகழ்மிக்க ஓதுவார்களின் வரலாற்றைக் கூறும் போக்கிலேயே இந்நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

“செயல்முறை ஆவணம்” என்ற பகுதியில், தமிழ்வேதத்தின் ஆக்கங் கருதி இனிச் செய்ய வேண்டுவன பற்றி ஆசிரியர் கூறும் கருத்துக்களை திருமுறைகளில் ஈடுபாடு கொண்டோர் மனத்தில் இருத்த வேண்டுவனவாகும்.

இனி இந்நூலைப் படித்தபோது என் சிந்தனையில் எழுந்த சிலகருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இதில் கொடுக்கப்பட்டுள்ள சில தகவல்களின் உண்மையைப் பற்றி எனக்குச் சந்தேகம் எழுகின்றது. பொய் ஒன்றைப் பலரும் பலமுறை பலசந்தர்ப்பங்களிற் கூறுவதால், பொய், உண்மை போன்ற வேடம் அணிந்து கொள்ளுகின்றது.

ஓதுவார்களின் பெருமைகளை எடுத்தோதும் இந்த நூலில் தேவையில்லாமல் மறைவாகவும் சில இடங்களில் வெளிப்படையாகவும் பிராமண, வடமொழிப் பகைமை வெளிப்படுகின்றது. அதனால் உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகள் உண்மைபோலப் பேசப்பட்டு இந்த நூலுக்குக்கு உரிய பெருமையைக் குறைக்கின்றன.

தேசிகர்
தேசிகர்

திருவையாறு தியாகராஜசுவாமிகள் ஆராதனையில் திரு எம்.எம். தண்டபாணிதேசிகர் கலந்துகொண்டபோது நிகழ்ந்த சம்பவம் குறித்து இந்நூலாசிரியர் எழுதியுள்ளது குறித்து எனக்குச் சில ஐயங்கள் உண்டு. அந்த நிகழ்ச்சி எந்த ஆண்டு நிகழ்ந்தது என்று கூறாமல் ‘ஒருசமயம்’ என்றே கூறப்பட்டுள்ளது.

தியாகராஜசுவாமிகள் ஆராதனையில் தேசிகர், “சித்தி விநாயகனே” என்ற தமிழ்ப் பாடலைப்பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினார் என்றும் அதற்கு அங்குள்ள வித்துவான்கள் பெரும் கண்டனமும் எதிர்ப்பும் எழுப்பினார்கள் என்றும் அவர்களில் அரியக்குடி இராமாநுஜ ஐயங்கார் அவர்களும் ஒருவர் என்றும் அன்றைய நிகழ்ச்சிக்குச் செட்டி நாட்டரசர் இராஜா அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தலைமையேற்றிருந்தார் என்றும் இந்நிகழ்ச்சி தமிழிசை இயக்கத்திற்கும் இசைத்தமிழ் எழுச்சிக்கும் தமிழிசைச்சங்கம் தொடங்குவதற்கும் உந்துதலை – உணர்வினை ஏற்படுத்தியது என்றும் இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். (நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவன். அப்பொழுது திரு தேசிகர் அவர்கள் இசைக்கல்லுரி முதல்வராக இருந்தார். இசை ஆர்வத்தால் நான் இசைக்க்ல்லூரி நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் செல்லுவேன். வைகல் ஞானஸ்கந்தன், விஜயலட்சுமி ஞானஸ்கந்தன், தாராபுரம் சுந்தரராஜன் முதலியோர் அப்பொழுது அங்கு பயின்றனர். ‘சித்தி விநாயகனே’(இராகம்?) என்றபாடலைப்பாடி தேசிகர் பாடித் தொடங்கிய இசை நிகழ்ச்சி ஒன்றுகூட நானறியேன். )

இந்த நூலை எழுதியவர் தியாகராஜர் ஆராதனை விழாநிகழ்ச்சிகளை, நிகழ்முறைகளை நேரில் கண்டறிந்திடாதவர் என்றே எனக்குத் தோன்றுகின்றது.

முதலில் அன்றைய விழா தியாகராஜர் ஆராதனை என்பதை கவனத்தில் இருத்தவேண்டும். தியாகராஜர் ஆராதனை என்பது பொதுவான ‘சபா’ இசை நிகழ்ச்சியல்ல. ஆராதனை என்பது வழிபாடு. ஞானசம்பந்தப் பிள்ளையார் குருபூசையில் முதன் மூன்று திருமுறைகளை விண்ணப்பிக்காமல் வேறுபாடல்களைப் பாடச் சைவர்கள் சம்மதிப்பார்களா? அருணகிரிநாதர் ஆராதனையில் அருணகிரிநாதர் அருளிச்செயல்களையே பாடுதல் வேண்டும். மாணிக்கவாசகர் ஆராதனையில் திருவாசகமே ஓதுதல் வேண்டும்.

அரசியல்வாதிகள் இல்லத்திருமணத்தில்தான் தலைவர்கள் மணமக்களை வாழ்த்துதலை விட்டு விட்டு அரசியலைப் பேசி நிகழ்ச்சியைப் பாழடிப்பர்.

தியாகராசர் ஆராதனையில், இராக ஆலாபனையும் சுரங்களும் பாடக்கூடாது. கீர்த்தனைகளையே பக்திச்சுவையுடன் பாடவேண்டும் என்பது நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.. ஆராதனையில் தமிழ்ப் பாட்டென்ன, முத்துசாமிதீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகளும் கூடப் பாடுவதில்லை. இந்த இங்கிதம் தண்டபாணிதேசிகருக்கு இல்லை என்பது ஆசிரியர் கருத்தா? தேசிகர் அத்தகைய இங்கிதம் தெரியாதவர் அல்லர்.

இந்த நிகழ்ச்சி உண்மையெனின், அங்கு ஒரு ஒருசலசலப்பும் முணுமுணுப்பும் ஏற்பட்டிருக்கும். அதற்குக் காரணம் வெளிப்படை. அந்த எதிர்ப்பு எத்தகையதாக இருந்தது என ஆசிரியர் கூறவில்லை.

தேசிகருக்குப் பெருமை சேர்ப்பதாக ஆசிரியர் கருதிக்கொண்டு சிறுமையே சேர்த்துள்ளார்.

எதிர்ப்புத் தெரிவித்தோர் கூட்டத்தில் அரியக்குடியும் இருந்தார் என விதந்து கூறியதில், மறைமுகமான பிராமணதுவேஷமும் உள்ளது. அரியக்குடியார் தமிழிசைக்குச் செய்துள்ள தொண்டு இசைவேட்கை உள்ளவர்கள் அறிவர். திருப்பாவை, அருணாசலக் கவிராயரின் இராமநாடக் கீர்த்தனை முழுவதற்கும் சுவரமும் மெட்டும் அமைத்து இசையரங்குளில் அரங்கேற்றியவர் அரியக்குடியார். தமிழிசைச் சங்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

nataraja1இந்த ஐயத்திற்குரிய நிகழ்ச்சியை , ‘வார்த்தை’ ஆகஸ்ட் மாத இதழ் எதிர்வினையில் ஒருவர், “கட்டுரை ஆசிரியர் தமிழை நீசபாஷை சூத்திர பாஷை என்று சொன்னவர்களை அறியமாட்டார். திருவையாறு தியாகராஜ உற்சவத்தில் தண்டபாணி தேசிகர் தமிழில் பாடி சந்நிதானத்தைத் தீட்டாக்கிவிட்டார் என்று சொன்னார்கள்” என்று எழுதி உள்ளார். எந்த ஒரு வதந்தியும் எழுத்தில் வந்துவிட்டால் அதற்கொரு நம்பகத்தன்மை ஏற்பட்டுவிடுகின்றது. உண்மையை அறிந்தவர்கள் அவ்வுண்மையைத் தங்களுக்குள் வைத்துக் கொள்கின்றனர் அல்லது அருகில் உள்ளவர்களுக்கு மட்டும் அறிவிக்கின்றனர். நாளடைவில் பொய்மை வென்றுவிடுகிறது.

உ.வே.சா அவர்கள் தம்முடைய நல்லுரைக்கோவை என்னும் நூலில், சவுக்ககாலத்தில் தேவாரம் பாடவும் ‘ரக்தி’ சங்கீதத்தில் பயிற்சி ஏற்படவும் பண்டைநாளில் ஓதுவார்களுக்கு முத்துசுவாமி தீட்சிதரின் கீர்த்தனைகளும் சில கற்பிக்கப்படும் என்று எழுதியுள்ளார்கள்.

இந்தக்கருத்துக்குச் சொல்லப்பட்ட விமரிசனம் உ.வேசா அவர்களும் தீட்சிதரும் பிறந்த சாதிமேற் கூறப்பட்ட விமரிசனமாகத்தான் உள்ளது. திருமுறை இசையைக் காட்டிலும் தீட்சிதரின் கீர்த்தனைகளில் இசை வெகுதூரம் வளர்ந்துவிட்டது என்பதும் தீட்சிதர் கீர்த்தனைகள் திருமுறைகளுக்கு எதிரானவை அல்ல என்பதும் தீட்சிதர் சுந்தரமூர்த்தி நாயனார் மேல் பத்திகொண்டு அவரைப் போற்றி ‘டக்கா’ என்னும் அபூர்வராகத்தில் ஒருகீர்த்தனை இயற்றியுள்ளார் என்பதும் இந்தப்புத்தகத்தை எழுதியவர் அறியாத செய்திகள்.

இந்த நூல் எழுதிய ஆசிரியர், ஓதுவார்களுக்கும் திருமுறைகளுக்கும் இந்தநூலை எழுதியதன்மூலம் அரிய தொண்டு ஆற்றியுள்ளார் எனினும் பொறாமையால் அல்லது துவேஷத்தால் எழுந்த பொய்த்தகவல்களைத் தருவதால் கரியும் பூசியுள்ளார்.

4 Replies to “சொற்றமிழ் சூடுவார்”

  1. முனைவ‌ர் கோ.ந.முத்து குமார‌ சாமி அவ‌ர்க‌ளுக்குக்கு என்னுடைய‌ ந‌ன்றி!

    தியாகராசர் வைணவ பாரம்பரியம் உடையவர் என்றாலும் அவர் எல்லா கடவுள்கள் மேலும் பாடல்கள் பாடியுள்ளார். தியாகராசரின் தாய் மொழி தெலுங்கு. கவிதை என்பது, அதாக மனதில் இருந்து வருவது. அது பெரும்பாலும் தாய் மொழியிலேயே சிறப்பாக வரும்.

    இதை சாக்காக வைத்து மொழி உணர்வைத் தூண்டி அரசியல் செய்வதை அடித்து நொறுக்கிய முனைவ‌ர் கோ.ந. முத்து குமார‌ சாமி அவ‌ர்க‌ளுக்கு என்னுடைய‌
    ந‌ன்றி!

  2. பெருமதிப்பிற்குரிய முனைவர் அவர்களே

    இக்கட்டுரையை இப்போதுதான் கண்டேன். ஓராண்டாக நான் காணாதது வியப்பே.
    /// எந்த ஒரு வதந்தியும் எழுத்தில் வந்துவிட்டால் அதற்கொரு நம்பகத்தன்மை ஏற்பட்டுவிடுகின்றது. உண்மையை அறிந்தவர்கள் அவ்வுண்மையைத் தங்களுக்குள் வைத்துக் கொள்கின்றனர் அல்லது அருகில் உள்ளவர்களுக்கு மட்டும் அறிவிக்கின்றனர். நாளடைவில் பொய்மை வென்றுவிடுகிறது.///

    மிகச்சரியான கருத்து. நம்மில் பலர் நமக்குத் தெரிந்த உண்மையை வெளிப்படுத்தாததால் கோயபல்ஸ் போல பொய்யர்கள் உரைப்பதே உண்மை என்று ஆகிப் போகிறது. ஆனால், நாம் இப்படி உண்மைகளை வேயப்படுத்தும்போதோ நம்மவர்களே ” இது உங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை” என்று ஏளனம் செய்கின்றனர். ஆனாலும் உண்மையை வெளிப்படுத்தத் தயங்கக்கூடாது.

  3. ஸ்ரீ முத்துக்குமாரஸ்வாமி மஹாசய, இந்த வ்யாசத்தையும் மற்றும் “திருமுறையிசையில் அழகியல் மாற்றம்” என்ற வ்யாசத்தையும் பலமுறை வாசித்து விட்டு இந்த உத்தரமெழுதுகிறேன். ஒருபுறம் மனதில் நிறைவிருப்பினும் மறுபுறம் நம் பாரம்பர்யங்களை அடுத்த தலைமுறைக்கு நாம் சரியான படி எடுத்துச்செல்கிறோமா என்ற விசனமும் மேலும் பல சம்சயங்களும்.

    \\தூமறை பாடும் வாயாருக்கு நாள்தோறும் அன்பினொடு சொற்றமிழ் சூட்டுவோர் ஓதுவார் எனப்படுவர்.\\

    சிவாலய ஆராதனைகளில் ஆராதனை முடியுங்கால் சதுர்வேதத்திலிருந்தும் சில ரிக்குகளை (சில பாடல்கள்) சிவாசார்யர் இறைவனுக்கு சமர்பிப்பர். பின்னர் த்ரவிடவேதமவதாரய என்றதும் கரதாளத்துடன் கூடி ஓதுவார் மூர்த்திகள் திருமுறை ஓதுவார். அதன் பின்னரே ஆராதானை பூர்த்தி பெறும்.

    திருமுறை ச்ருதி (வேதம்) துல்யமானது என்பதால் தான் ஆராதனையின் போது அதை த்ரவிடவேதம் என்றும் வேதத்துடன் சேர்த்தும் ஓதுகிறார்கள் அன்றோ?

    ஒரு முக்யமான சாம்யதை. வேத பாராயணம் செய்வதை தூய தமிழில் வேதம் ஓதுதல் என்பர். திருமுறை ச்ருதி துல்யமானது என்பதால் திருமுறையை இறைவனுக்கு சமர்ப்பிக்கும் போதும் திருமுறை ஓதப்பட்டது என்றே சொல்கிறார்களன்றோ. ஆகவே திருமுறை ஓதுபவர்களை ஓதுவார் என்றும் ஓதுவார் மூர்த்திகள் என்றும் சொல்வதும் திருமுறை மறை என்பதால் அல்லவா.

    வேதம் ப்ரம்மத்தை இது என்று காட்டாது “நேதி” “நேதி” – இதுவன்று இதுவன்று என்று சொல்வதாகவும் ஆனால் தமிழ் மறைகளாம் திருமுறையும் திவ்யப்ரபந்தங்களும் மாறாக பரம்பொருள் இது இது என சுட்டிக்காண்பிப்பதாகவும் சான்றோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். பின்னிட்டும் த்ரவிடவேதங்களை மறை என்பதன் காரணம் யாது? மறைத்துப் பகர்வது என்பதன்றி “மறை” என்ற சொல்லுக்கு வேறு பொருள்களும் இருக்கலாமோ?

    இன்னொன்று முறையாக வேதம் பயின்று வேதமோதி வாழ்க்கை நடாத்துபவரின் முகத்தில் பொலியும் ப்ரம்மதேஜஸ். திருமுறையை ஓதி ஓதி அதில் உளங்கனிந்த ஓதுவார் மூர்த்திகளிலும் அந்த ப்ரம்மதேஜஸை முகப்பொலிவை கண்டிருக்கிறேன். ஸ்ரீ தண்டபாணி தேசிகரும் தேஜஸ்வியான ஓதுவார் மூர்த்திகளன்றோ?

    ஸ்ரீ தண்டபாணி தேசிகர் சம்பந்தமான வ்யாசத்தில் கண்ட அபவாதத்தை நானும் கேட்டிருக்கிறேன். மனது வருந்தியிருக்கிறேன். அவர் பெயர் சொன்னாலே, “வருகலாமோ”, “சிவலோக நாதனைக்கண்டு சேவித்திடுவோம் வாரீர்”, “காணவேண்டாமோ தில்லையைக் காணவேண்டாமோ” போன்ற நந்தனார் திரைப்படப்பாடல்களே (ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாராதியார் அவர்களுடையதோ) நினைவில் வருகின்றன. மஹாதேஜஸ்வியான இந்த பெருமகனார் இங்கிதம் தெரியாதவரா என கேழ்வி எழுந்ததுண்டு. தங்களிடமிருந்து கிடைத்த விடைக்கு நன்றி.

  4. சிதம்பரம் தீட்சிதர்கள் தேவாரத் திருமறை ஏடுகளை பொதுமக்களுக்கு வழங்காமல், நிலவறையில் வைத்துப் பூட்டி வைத்து, கரையான் பூச்சிகளுக்கு இரையாக்கிவிட்டனர், பின்பு ராஜராஜ சோழ அரசரே அவற்றை தேவார மூவரின் விக்ரகங்களை நிறுத்தி மீட்டனர் என்பதிலும் சாதீய ரீதியான காழ்ப்புணர்வில் திரிபுகளுடன் பரப்பப்படும் கதையே.

    நடராசப் பெருமானுக்கு ஆராதனை செய்யும் கிரிசையில் வேத மந்திரங்கள் சிலவற்றை ஓதி விட்டு, பின்பு அந்த தீட்சிதர்கள் தேவாரப் பதிகங்களைப் பாடி ஆராதனையை நிறைவு செய்து வந்தனர் என்பது உண்மை வரலாறு.

    அப்படியென்றால் அந்தக் கரையான், சோழ அரசரின் தலையீடு எல்லாம்?

    உண்மை வரலாற்றில் மாற்று மதக் கருத்துக்களின் தாக்கத்தில் பிழை நோக்கில் திரிபட்ட புனைவு அது.

    முதல் சான்று. தில்லைத் தீட்சிதர்கள் தமிழ்த் தேவாரங்களைக் காப்பாற்றுபவர்கள் இல்லை ஆயின் ‘தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’ என்றப் பாராட்டு வரிகள் பாடப்பட்டு இருக்காது.

    இரண்டாவது விடயம் அக்காலத்தில் தமிழ் மக்களிடையே நிலவி வந்த ஒரு மூடநம்பிக்கைப் பழக்கம். அதாவது ஆடிப் பெருக்கு போன்ற புது வெள்ளம் பாயும் பண்டிகைக் காலங்களில் பாமர மக்கள் சில வேத வரிகள், தேவார வரிகள், சித்தர் பாடல்கள் எழுதியிருக்கும் சில ஏடுகளை நதி நீரில் போட்டு காவிரித் தாய்க்கு நன்றிச் சீராக சமர்ப்பிப்பது வழக்கம். அதுவே பின்னாளில் பனைச்சுருள், கருகமணி வளையல்களை நதியில் விடுவதாக மாறிப் போனது. நிலச்சுவான்தார்கள் தங்கள் அந்தஸ்தைப் காட்டிக் கொள்ளத் தங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் சிவாலயங்களின் காப்பகத்தில் இருக்கும் அரிய ஓலைச் சுவடிகளின் திரட்டுகளை கட்டுக் கட்டாக நதியில் போடுவர்.

    அப்படி தேவாரச் சுவடிகளும் பூம்புனலில் அடித்துப் போய்விடக் கூடாது என்ற அக்கறையில்தான் மாணிக்கவாசகர் காலத்திலேயே தில்லை ஆலயத்தில் ஏட்டுக் காப்பகம் (தில்லைக் கூத்தன் முத்திரைக் கையொப்பமிட்ட) கட்டளை (Trust) உருவாக்கப்பட்டு அந்தத் தமிழ்க் கருவூலத்தில் காக்கும் பொறுப்பு தீட்சிதர் பெரு மக்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

    ஊரின் நிலச்சுவான்தார்கள் கேட்டும் கிடைத்திராத, அரிய தமிழ்ச் சுவடிகள் அரசரே கேட்டும் உடனே தரப்படவில்லை என்று ஒரு பெருமையை உண்டாக்க சோழ அரசரால் அரங்கேற்றப்பட்ட ஒரு நிகழ்வே அந்த தேவார மீட்பு வைபவம்.

    அதுமட்டுமன்றி வருவோர் போவோர்க்கெல்லாம் எளிதாக அவ்வேடுகள் கைப் பட்டிருந்தால் பதிகங்கள் மாற்றப்பட்டிருக்கும். இடைச்செருகல்கள் பெருகியிருக்கும்.

    அந்த கரையான் அரித்தல் கதை?

    சிவாலயங்களின் ஆகம, சிற்ப சாத்திர விதிகளின்படி ஒவ்வொரு ஆலயத்திலும் இருக்கும் சில சிறப்பு மூர்த்தி, மண்டப அமைப்புகள் பற்றிக் கவனம் கொள்ள வேண்டும்.

    உதாரணத்திற்கு ஆயிரங்கால் மண்டபங்கள், வெள்ளைக் கோபுரம், கிளிக் கோபுரம் போன்றவை சில ஆலயங்களில் மட்டுமே. பல சுயம்பு சிவன் கோயில்கள் அகத்தியர் கோயில் என்றக் குறிப்புடன் காணப்படும். மேலும் சிவன் கோயில்களில் அர்த்த ஜாம பூஜை முடிந்து நடை சாத்திய பின்பு கருவறைக்கு கதவுகள் தாளிடப்பட்டு, அதன் திறவுகோல்கள் அதே ஆலயத்தின் பைரவர் சன்னிதியில் சமர்ப்பிக்கப்படும்.

    இரவு முழுவதும் பைரவத் தேவரே ஆலயப் பாதுகாப்புக்குப் பொறுப்பு என்பதாக ஐதிகம் (வழமை).

    அதுபோல வால்மீகி முனிவர் வழிபட்ட த் தலங்கள் என்று ஒருசிலத் தலங்கள் உள்ளன. அங்கெல்லாம் இருக்கும் பண்டாரக சிற்றறைகள் வால்மீகி/வான்மீகி அறை எனப்படும். முக்கியமான பொருட்கள் அவ்வறைகளில் வைத்துக் காக்கப் பெறும்.

    வன்மீக அறை என்பதைத் தமிழ்ப் படுத்தினால் கரையான் அறை.

    பொதுவாக பாம்புகள் கரையான் புற்றுகளில்தான் வாழும் என்பர்.

    தில்லைத் தலம் ஆதிசேனின் அவதாரமான பதஞ்சலி முனிவர் நாட்டிய சூத்திரத்திற்கு நடராஜப் பெருமானின் அருளால் நூல் வரைந்தது தலம். அவரது நூலும், தேவார ஏடுகளும் வைத்துக் காக்கப்பட்ட காப்பக அறையை கரையானிடம் கொடுத்ததாகத் திரித்து விட்டனர் பாமரர்களும், அப்போதும் இருந்த நாத்திகக் கும்பல்களும்.

    சிதம்பர ரகசியங்களில் இதுவும் ஒன்றோ எனப் புலப்படுகிறது.

    திருச்சிற்றம்பலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *