கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

kannan_exhibition-001

இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாற்றில், தனிப்பட்ட ஒரு மனிதனோ, அல்லது சம்பவமோ மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லமுடியாது. ஆனால் கண்ணனுடைய தாக்கம் இந்திய வரலாற்றில், இலக்கியத்தில், பண்பாட்டில், கலாசாரத்தில் எல்லாவற்றிலும் இருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை கிருஷ்ணன் ஒரு மிக முக்கியமான அம்சம். கலாசார மையம். எவ்வித அறுபடுதலுமற்ற தொடர்ச்சியான ஆளுமை.

கிருஷ்ணனின் காலகட்டம்:

கிருஷ்ணன் பிறந்து சற்றேறக்குறைய 5200 ஆண்டுகள் ஆகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் தொல்லியல் நிபுணர்கள். கண்ணன் எப்படி வாழ்ந்தான் என்பதைப்பற்றி அறிவது மட்டுமல்லாமல், கண்ணனுடைய வாழ்க்கை இன்றைய வாழ்க்கைக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுவும் முக்கியம். அதற்காகவே இந்தியா முழுவதும் கண்ணனை மையப்படுத்திக் கண்காட்சிகள் நடத்தி வருகிறோம். இந்த கண்காட்சியின் முக்கியநோக்கமே கண்ணன் எப்படி என்றென்றைக்குமான ஒரு ஆளுமையாக இருக்கிறான் என்பதை உணர்த்துவதே. இந்த கண்காட்சியின் பெயர் The Glorious World of Kanna – கண்ணனின் பெருமைவாய்ந்த உலகம். இந்தக் கண்காட்சியில் கண்ணன் பிறந்து வளர்ந்த இடமான கோகுலம்,பிருந்தாவனம், துவாரகை ஆகிய இடங்களில் உள்ள திருக்கோவில்கள், அங்கு நடைபெற்ற அகழ்வாய்ச்சிகள், அப்போது கிடைத்த அரிய தகவல்கள் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லியிருக்கிறோம். அதன் மூலம் கண்ணனின் காலத்தைப் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

kannan_exhibition-2

அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கிரேக்கர்கள் கண்ணனை வழிபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அவை மிகவும் சுவைமிக்க ஆதாரங்கள். உதாரணத்திற்கு, மத்திய பிரதேசத்திலுள்ள் டெக்ஸ் என்னும் நகரத்தில் உள்ள ஒரு கருட ஸ்தம்பம் பற்றிச் சொல்லலாம். இந்த ஸ்தம்பத்தை உருவாக்கியவர் ஒரு கிரேக்கர். அவர் கண்ணனை ’என்னுடைய தலைவர், கடவுள் வாசுதேவ கிருஷ்ணன்’ என்று சொல்கிறார். அதேபோல் சமீபத்தில் ஆப்கானஸ்தானில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்ணன், பலராமனுடைய காசுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் என்பது அந்த காலத்தினுடைய காந்தஹார். காந்தாரி பிறந்த இடம். காந்தாரியின் சகோதரன் சகுனி பிறந்த இடம். ஆகவே கண்ணனுடைய தாக்கம் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது என்பது நமக்குத் தெரியவருகிறது.

இரண்டாவது, மஹாபாரதம் நடைபெற்ற காலகட்டம் வழியாகவும் கண்ணனின் காலத்தை நாம் யூகிக்கலாம். மஹா பாரதம் நடந்தது சுமார் 5000 ஆண்டுகள் முன்பு. துவாரகை என்பது தற்போதைய குஜராத்தில் உள்ளது. அதிலிருந்து ஏறக்குறைய ஒரு 150 கிலோ மீட்டர் டோல வீரா என்ற இடம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகத்திலேயே முழுவதுமாக ’உருவாக்கப்பட்ட ஒரு நகரம்’ என்று சொல்லலாம். உலகின் பத்து அதிசயங்களில் ஒன்றாக இதையும் சேர்த்துள்ளனர். டோல வீராவுக்கு நான் போயிருந்தபொழுது, ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த நகரம் மிக செழிப்பாக இருந்திருக்கவேண்டும் என்பதை உணர முடிந்தது. அங்கு பல்வேறு வகையாக கட்டடங்கள் இருந்திருக்கவேண்டும். உயர்வர்க்கத்தினருக்கு, நடுத்தர வர்கத்தினருக்கு, அங்காடிகளுக்கு என பல்வேறு கட்டடங்கள் இருந்திருப்பதற்கான சான்றுகளைப் பார்க்கமுடிந்தது. ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியான குடிநீர் இணைப்பு என்று, மிகவும் பிரமிப்பான வகையில் அந்த ‘உருவாக்கப்பட்ட நகரம்’ இருந்துள்ளது. இதனுடைய காலகட்டம் கிமு 3200 என்று தொல்லியலாலர்கள் கணித்துள்ளனர். அதாவது இன்றிலிருந்து கிட்டத்தட்ட 5200 ஆண்டுகளுக்கு முன்னால்!. இது ஏறக்குறைய கிருஷ்ணர் பிறந்த, வாழ்ந்த காலகட்டம்தான். ஆகவே டோல வீராவும் கண்ணனுடைய தலைநகராயிருந்திருக்கலாம், கண்ணன் சார்ந்த ஒரு இடமாயிருக்கலாம் என்று இப்போது சொல்லுகிறார்கள்.

கண்ணன் – ஒரு நேர்மறைப் பிம்பம்

கண்ணனைப்பற்றி மிகப்பிரபலமான ஒரு ஸ்லோகம் உண்டு. அது ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்று சொல்லுகிறது. ஜகத்துக்கெல்லாம் குரு என்பது கண்ணனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை. ஜகத்குரு என்று சொல்லும்பொழுது நமக்கு என்ன நினைவில் தோன்றவேண்டும்? ஒரு மனிதன், 125 ஆண்டுகள் முழுமையாக, வெற்றிகரமான வாழ்க்கையை நடத்திக் காண்பிக்க முடியுமென்பதை உலகுக்கு அறிவித்தவர் கண்ணன் என்பதே. அதாவது ஒரு மனிதனுடைய ஒட்டுமொத்த தீரம். இதைப்பற்றி மேல்நாட்டு அறிஞர்கள், ’கண்ணனுடைய வரலாறு மனிதனுக்கு மனிதநேயத்துக்கு மட்டுமல்ல; மனிதனுடைய வெற்றிக்கு ஒரு சான்றாக இருக்கிறது’ என்கிறார்கள். ஏனென்றால் கண்ணன் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றார். பதினெட்டு நாள் போரையும் எதிர்கொண்டு ஆயுதமெதுவும் எடுக்காமல், ஒட்டுமொத்த போரையும் உள்வாங்கி, பாண்டவர்களின் வெற்றிக்காக திறமையான திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்தவர். வகுத்ததோடு மட்டுமன்றி அர்ஜுனனுக்கு சாரதியாகவும் இருந்துகொண்டு போரில் நேரிடையாகப் பங்குபெற்றவர். அதாவது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எப்படி சமாளிக்கலாம் என்பதை, கூடவே இருந்து சொல்லிக்கொடுத்த ஒரு தலைவர். ஒரு தோழர்.

kannan_exhibition-3அதுமட்டுமில்லாமல் இன்றைய மேலாண்மை சார்ந்த பல்வேறு நேர்மறைக் கூறுகளை நாம் கண்ணனிடம் காணமுடியும். அந்த அளவிற்கு கண்ணனுடைய தாக்கம் அறிவுபூர்வமான தளத்தில் இருந்ததோடு, நடைமுறை வாழ்க்கையிலும் இயைந்து கிடக்கிறது. கண்ணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எங்கள் அமைப்பில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உங்களுக்குச் சொன்னால், கண்ணன் எப்படி நம் வாழ்க்கையில் கலந்திருக்கிறான் என்பது புரியும்.

கண்ணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, தினசரி வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சினையை சமாளிக்க ஏறக்குறைய 35 சூத்திரங்களை (formula) வகுத்திருக்கிறோம். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதற்கேற்ற ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தமுடியும். மிக மிக எளிமையான மற்றும் நடைமுறை சாத்தியங்கள் நிறைந்த சூத்திரங்கள். அந்த அளவிற்கு கண்ணனுடைய தாக்கம் இன்றும் செல்லுபடியாகிக்கொண்டிருக்கிறது. எனவேதான் கிருஷ்ண உள்ளுணர்வு நிலை (Krishna Consciousness) பற்றி ஓயாது பேசுகிறோம்.

kannan_exhibition-6

சில உதாரணங்களைச் சொன்னால் எப்படி கண்ணனின் வாழ்வு இன்றும் பொருந்தி வருகிறது என்பதனை உணர்ந்துகொள்ள முடியும். குருக்ஷேத்திரப் போர் நடந்தபோது பீஷ்மருக்கு திடீரென்று ஒரு ஆசை. கண்ணனின் ரௌத்ரமான, வீரமான பாவத்தைப் பார்க்க வேண்டும் என்கிறார். அது முடியாத காரியம். ஏனென்றால், கண்ணன் போரின்போது ஆயுதத்தை எடுக்கமாட்டேன் என்று சொல்லியிருக்கிறான். ஆனால் பீஷ்மர் அவ்வாறு வேண்டியது கண்ணனுக்கு தெரிந்துவிட்டது. பீஷ்மர் கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஒரு பக்தர். எனவே பக்தர் சொன்னதை கேட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் அதை எப்படி செய்வது? காத்துக்கொண்டிருக்கிறார். கால, தேச வர்தமானங்களுக்காக கண்ணன் காத்துக்கொண்டிருக்கிறார். பீஷ்மர் கேட்டது போரின் நான்காவது நாளில். கண்ணன் ஐந்தாவது நாளும் ஒன்றும் செய்யவில்லை. ஆறாவது நாளும் ஒன்றும் செய்யவில்லை, ஏழாவது நாள் காலை. அர்ஜூனனுடைய உயிராற்றல் மிகவும் குறைவாக இருந்தது. அர்ஜுனன் சரியாக வில்லைப் பயன்படுத்திப் போர் செய்யவில்லை.

இந்த சமயத்தில் கிருஷ்ணர் என்ன செய்கிறார் என்று பாருங்கள். ‘அர்ஜுனா நீ பயனற்றவன். உனக்கு ஒன்றும் தெரியவில்லை. என்னைப் பார், நான் போய் சண்டைபோட்டு பீஷ்மரை கொல்கிறேன், நீ பேசாமல் இரு’ என்று கூறிவிட்டு வேகமாக ஓடுகிறார். ஓடும்போது கண்ணெல்லாம் சிவந்துபோய்விடுகிறது. கையில் வில்லை எடுத்துக்கொண்டு போகிறார். எந்தமாதிரியான ரூபத்தை பீஷ்மர் பார்க்க ஆசைப்பட்டாரோ அந்த ரூபத்திலேயே சென்றார் கண்ணன். உடனே அர்ஜுனன் பின்னாலேயே ஓடிவந்து அவர் காலிலே விழுந்து ’கண்ணா! நீ இதுமாதிரி செய்யாதே, ஏனென்றால் எனக்கு கெட்டபெயர் வந்துவிடும்’ என்றுகூறி, அவரை அழைத்துக்கொண்டு போகிறான். அர்ஜுனனின் தேகத்தில் ஒரு புத்துணர்ச்சியும் வேகமும் வந்துவிடுகிறது. இதுவும் கண்ணனின் செயலே. இது ஒரு புறம் இருக்க, கண்ணன் உடனே பீஷ்மர் விரும்பிய ரூபத்தைக் காட்டிவிடவில்லை.அந்த நேரத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார். மேலாண்மை இயக்குநர் ஒருவர், தனக்குக் கீழே வேலை செய்யும் ஒருவரின் மேல் ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால்கூட உடனே எடுக்கக்கூடாது. தக்க சமயத்திற்காக காத்துக்கொண்டிருக்க வேண்டும். எந்த சமயத்தில் நடவடிக்கை எடுத்தால் தனது நிறுவனத்துக்குக் கெடுதல் வராதோ அப்போதுதான் செயல்படுத்தவேண்டும். கண்ணன் எந்தக் காலத்தில் இருந்து எந்தக் காலத்துக்கு அனாசாயமாகத் தாவுகிறான் என்பதைப் பாருங்கள்.

kannan_exhibition-5

சிசுபால வதத்தின்போதும் கண்ணனிடம் நாம் ஒரு அரிய பாடத்தைப் பெறமுடியும். அவன் நூறுமுறை மட்டுமே தீயமொழி பேசமுடியும். அதைத் தாண்டினால், உடனே அவனைக் கொல்வேன் என்றான் கண்ணன். எவ்வெப்பொழுதெல்லாம் சிசுபாலன் கண்ணனைப்பற்றித் தீயமொழி பேசுகிறானோ அப்பொழுதெல்லாம் அவனுடைய விரல் உயராது. அதாவது அதெல்லாம் எண்ணிக்கையில் வராது. நீ இடைப்பையன் என்பான் அவன். பேசாமல் நின்றுகொண்டிருப்பான் கண்ணன். நீ மாமாவை கொன்ற பாதகன் என்று சொல்வான். அப்போதும் பேசாமல் இருப்பார் கிருஷ்ணர். ஆனால் இதே சிசுபாலன் பீஷ்மரைப் பற்றி சொன்னவுடனேயே விரல் உயரும். தன்னைப்பற்றி என்ன சொன்னாலும் கண்ணனுக்கு கவலை இல்லை. தனக்கு பிடித்தமானவர்கள், தன்னுடைய சிஷ்யர்களைப் பற்றி சொன்னால் தாங்கமாட்டான். இதை நாம் இன்றைக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளமுடியும். ஒரு மேலாண்மை இயக்குநர் (எம்.டி.) தன்னை நேரடியாக எது சொன்னாலும் கவலைப்படக்கூடாது. நீ என்ன திட்டினாலும் எனக்கு கவலை இல்லை என்று இருக்கவேண்டும். ஏனென்றால் அவர் அதையெல்லாம் கடந்துவந்துவிட்டவர். ஆனால் தனது நிறுவனத்துக்கு நேர்மையாக வேலை செய்பவன் மீது யாரேனும் அவதூறு சொன்னால் அமைதியாக இருக்கக்கூடாது. மீண்டும் கண்ணனின் காலம் கடந்த பாய்ச்சல்.

இப்படி கண்ணனின் வாழ்க்கை முழுவதிலும் இருந்து நாம் இன்றைக்குத் தேவையான நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளமுடியும். கண்ணன் இந்தியக் கலாசாரத்தின் மையம் மட்டுமல்ல, எக்காலத்துக்கும் பொருந்திவரக்கூடிய நிகரற்ற ஓர் ஆளுமை.

ஆசிரியர் குறிப்பு:

டிகேவி ராஜன்

டிகேவி ராஜன் – தமிழ் உலகம் நன்கறிந்த பத்திரிகையாளர், தொல்லியல் ஆய்வாளர். தொல் இந்திய சமூகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தாக்கம் எப்படி இருந்தது என்பதைப் பற்றி நீண்ட காலமாக ஆய்ந்து வருபவர். ‘கண்ணனைத் தேடி’, ’லெமூரியாவைத் தேடி’, ‘நமது புதைக்கப்பட்ட பழங்காலம்’, ‘பழங்காலத்தைத் துளைத்துக்கொண்டு’ என்பன உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகளை நடத்தியவர். ’கண்ணனைத் தேடி’, ‘கண்ணனின் சுவடுகள்’ உள்ளிட்ட நூல்களையும் எழுதியிருக்கிறார். அமெரிக்க ஆய்வாளர் டபிள்யூ. கில்லரின் ‘அக்ரஹார பிராமண சாதி நகரமயமாக்கப்பட்டதன் விளைவுகள்’ என்பது உள்ளிட்ட கட்டுரைகளை மொழிபெயர்த்தவர். சன் டிவி தொடங்கப்பட்டடபோது மிகவும் பாராட்டப்பட்ட ‘சினிமா க்விஸ்’ என்னும் நிகழ்ச்சியை மிக அறிவுபூர்வமான தளத்தில் நடத்திக் காண்பித்தவர். தற்போது ‘கண்ணனின் பெருமைவாய்ந்த உலகம்’ என்னும் தலைப்பில், கண்காட்சியை இந்தியாவெங்கும் நடத்திவருகிறார்.

20 Replies to “கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்”

  1. Fantastic way to worship my Krishna !

    Dear Sri TKV Rajan, can you please give us another article or a series on those 35 sutras on life got from Krishna?

  2. மிக அருமையான கட்டுரை. திரு.டி.கே.வி.ராஜனின் உழைப்பு பாராட்டப்படவேண்டியது, மதிக்கப்பட வேண்டியது.
    கிருஷ்ணஜெயந்தியன்று இக்கட்டுரை வெளியாவது சாலப்பொருத்தம்.

    வாழ்த்துக்கள்.

    ஜெயக்குமார்

  3. டிகேவி ராஜன் சன் டிவியில் நடத்திய சினிமா க்விஸ் எனக்குப் பிடித்த நிகழ்ச்சிகளுள் ஒன்று. கலர் கலராக ஜிகினா காட்டாமல், அதனை மிக அறிவுபூர்வமாக நடத்தியவர். அந்த நிகழ்ச்சி திடீரென்று நின்றுபோனது பெரிய வருத்தமாக இருந்தது எனக்கு. வேறு ஏதேனும் டிவியில் வருமென்று கூட நினைத்தேன். டிகேவி ராஜனின் இந்தக் கட்டுரையைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.

  4. I was fortunate to meet Mr.TKV Rajan a couple of times, through our common friend. Only once I got a chance to talk with him for sometime. I was so impressed by him in the very first meeting. He talked about Krishna consciousness and showed many photos of his visit to Mathura, Brindhavan etc (he had just returned from those trips).He also shared his dream of creating a 3D viswaroopa dharisanam of Krishna and also shared a lot of information about his exhibitions.
    Remarkable man. Its almost 4 years since I met him, but still I cherish those memories.
    Very good article and thanks to Tamil Hindu for rekindling the memories of my conversation with Mr.TKV Rajan.

    Satish

  5. கிருஷ்னரின் அழகு,கம்பீரம், ஆற்றல் அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. நியூயார்க் நகரின் இச்கான் கிருஷ்னர் கோவிலில் கிருஷ்ன ஜெயந்தி கொண்டாட்டங்கள் , சுமார் இருநூறு பேர் இரவு ஆரத்திக்கு வந்திருந்தனர், அதில் சுமார் 40 பேர் வெள்ளையர்கள் மற்றும் கறுப்பர்கள். பலர் பஜனையில் தங்களை மறந்து ஈடுப்பட்டனர். புகைப்படங்கள் இங்கே

    https://picasaweb.google.com/ramkumaran/KrishnaJayanthiCelebration

  6. அருமையான கட்டுரை. மிக்க நன்றி.

  7. கண்ணன் நமது கலாச்சாரத்தின் அடையாளம் என்று சொன்னால் சிலர் கோபிக்கக்கூடும். தான் வாழ்ந்த காலத்தின் எல்லா படித்தரங்களிலும் அழகாக வாழ்ந்து போனவன் அவனது வாழ்க்கை ஐயாயிரத்து இருநுறு ஆண்டுகளுக்குப்பின்னும் மனிதனை வழிநடத்துகிறது என்றால் அவனை என்னவென்று சொல்வது . உலக நாகரீகத்தின் , மனித வரலாற்றின் ஆரம்பம் என்று கூறமுடியக்கூடிய துவாரகையை அராய்ச்சி செய்து புகழ் பெற நமது போலி மதசார்பின்மை வாதிகளின் புத்திக்கு தோன்றாதே. அது வோட்டு வங்கி சிறுபான்மையின் மனதை பாதிக்காதோ…?

  8. வணக்கம்

    //ஐயாயிரத்து இருநுறு ஆண்டுகளுக்குப்பின்னும் மனிதனை வழிநடத்துகிறது என்றால் அவனை என்னவென்று சொல்வது .//

    எனவேதான் அவனை கண்ண பரமாத்மா என்று நாம் அழைக்கிறோம்.

    கண்ணனின் வாழ்க்கை என்பது மனித குலத்தின் அணைத்து நிகழ்வுகளையும் அரவணைத்து செல்வதாகவே அமைந்திருந்தது. அவன் போலோருவன் வாழ்ந்து காட்டுவது என்பது எக்காலத்திலும் நடை பெறாத ஒன்றாகும். அதுவே அவதார மகிமை. ஹரே கிருஷ்ணா……

    ஏக வசனத்தில் கண்ணனை அழைப்பது என்பது ஒரு தனி சுகம், ஆம் அவன்தான் என்றும் தீராத விளையாட்டுப் பிள்ளை ஆயிற்றே. இன்னமும் லட்சம் ஆண்டுகள் ஆயினும் அவன் நமக்கு குழந்தையே,
    கிருஷ்ணா….கிருஷ்ணா…..!

  9. கண்ணன் என் சகோதரன் , நண்பன், குரு ,தந்தை, அம்மா, காதலன், முதலாளி, …………………..,சகலமும், கண்ணன், சர்வமும் கண்ணன் .

  10. சார்,
    வணக்கம். எனக்கு ஒரு கேள்வி , தாங்கள் தயவுகூர்ந்து விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். மகாபாரதத்தில் சகுனியின் பின் புலம் கதை என்ன? எனக்கு விளக்கம் தேவை.
    நன்றி.

  11. About Saguni:
    ~~~~~~~~~~~
    காந்தார நாட்டு மன்னன் சுவலன் இவரின் கடைசி மகன்தான் சகுனி.காந்தாரி திருமணம் குறித்து எழுந்த சர்ச்சை குறித்து விசாரித்து வர ஒற்றர்களை காந்தார நாட்டுக்கு அனுப்பினார். காந்தாரியின் முதல் கணவருக்கு ஆயுள் இல்லை என்றும்,அதனால் காந்தாரியை ஒரு ஆட்டுக்கடாவுக்கு [1] மணம் செய்வித்தும்,பிறகு அந்த ஆட்டை பலியிட்டதாகவும் ஒற்றர்கள் தெரிவித்தார்கள்,நுணுக்கமாய் அன்றைய சட்டப்படி பார்த்தால் காந்தாரி ஒரு விதவை.

    ஆடு மட்டும் பலி கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் கௌரவர்களின் தந்தை ஆட்டுகடாவாகியிருக்கும் என்று சோதிடர்கள் கூறியது பீஷ்மருக்கு அதிக கோபத்தைத்தூண்டியது.”என்னை சுவலன் ஏமாற்றிவிட்டான்,ஒரு விதவையையா? என் வீட்டுக்கு மருமகளாக கொண்டு வந்தேன்.உலகுக்கு தெரிந்தால் நகைப்புக்கு இடமாகுமே,சுவலன் குடும்பத்தை அழித்து அந்த ரகசியத்தை வெளிவராமல் செய்துவிடுகிறேன்” என்று சுவலனையும அவன் மகன்களையும் பிடித்து சிறையில் அடைத்தார்.ஒருகுடும்பத்தையே கொள்வது அதர்மம் என்பதை அறிந்த பீஷ்மர் தினமும் ஒரு கைபிடி அரிசி மட்டும் உண்ணக்கொடுத்தார்.”ஒருகுடும்பத்தையே கொள்வது அதர்மம் என்பதை அறிந்த பீஷ்மர் அந்த நியதியை மீறாமல் சிறிது உணவே தருகிறார்.இன்னும் கொஞ்சம் உணவை கேட்பதும் நமக்கு அதர்மம் எனவே பட்டினி கிடந்துதான் மடியவேண்டும்.உணவு தரப்படும்போது மகளின் வீட்டிலிருந்து ஓடுவதும்” அதர்மம் என்று சுவலன் அறிந்திருந்தார். நாட்கள் செல்லச் செல்ல,நிலைமை மோசமாகியது,சகோதரர்களுக்குள் உணவுக்காக சண்டை வந்தது,சுவலன் ஒரு யோசனை சொன்னான் “நம்மில் யாராவது புத்திசாலியானவன் ஒருவன் மட்டும் உணவை உண்டு பிழைத்து இந்த அநியாயத்தைச் செய்த பீஷ்மரை பழிவாங்கட்டும்” இந்த யோசனைக்கு அனைவரும் உடன்பட்டனர்.[2]

    வயதில் இளையவனான சகுனிதான் உணவை சாப்பிட தேர்ந்தெடுக்கப்பட்டான். கடும்பத்தில் சகுனியின் முன் பட்டினி கிடந்து ஒவ்வொருவராக மடிந்தனர். இறக்கும் முன் சுவலன் சகுனியின் கால்களில் ஒரு காலின் கணுக்காலை அடித்து உடைத்தான், “இனி நீ நடக்கும் போதெல்லாம் நொண்டுவாய், ஒவ்வோரு முறை நொண்டும் போதும் கௌரவர்கள் செய்த அநீதியை நினைவில் கொள், அவர்களை மன்னிக்காதே” என்றார். சகுனிக்கு தாயத்தின் மீது ஒரு சபலம் உண்டு என்று சுவலனுக்கு தெரியும், சாகும் தறுவாயில் தன் மகனிடம் “நான் இறந்த பிறகு என் கை விரல் எலும்புகளை எடுத்து தாயக்கட்டையை உண்டாக்கு, அதில் என் ஆத்திரம் முழுவதும் நிறைந்து இருக்கும் நீ எப்படி தாயக்கட்டையை போட்டாலும் நீ விரும்பிய படியே எண்ணிக்கை விழும் நீயே எப்போதும் வெற்றி பெறுவாய்” என்றார். சிறிது காலத்தில் சுவலனும், அவனது பிள்ளைகளும் இறந்து போயினர். சகுனி மட்டும் தப்பிப் பிழைத்து கௌரவர்களுடன் பீஷ்மரின் கவனிப்பில், பாதுகாப்பில் வாழ்ந்தான். கௌரவர்களின் நண்பனாகக் காட்டிக்கொண்டான், ஆனால் பீஷ்மர் தன் குடும்பத்தை அழித்தது போல பீஷ்மரின் குடும்பவீழ்ச்சிக்காக திட்டமிட்டுக்கொண்டே இருந்தான்.[2]

  12. கண்ணன் கலாச்சாரபிரவாகம் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.
    கட்டுரையாளர் டிகேவி ராஜன் அவர்களுக்குப்பாராட்டுக்கள். கட்டுரை வெளியாகி சில ஆண்டுகளுக்குப்பின்னர்தான் கண்ணில் பட்டது. அவர் தொடர்ந்து எழுதவேண்டுகிறேன்.
    வைணவர்கள் ஸ்மார்த்தர்கள் மட்டுமல்ல எம்மைப்போன்ற சைவர்களும் போற்றுகின்ற ஆசாரியன் கண்ணன். அவனை ஒரு மாபெரும் யுகபுருஷன் எனலாம். சிவனடியார் சிவயோகி யோகீஷ்வரன் என்றும் அழைத்தலும் பொருத்தமே.
    ஸ்ரீ விஷ்ணு மகாபாரதத்தில் வரும் சகுனியின் பூர்வகதையை சொல்லியிருக்கிறார். அக்கதையின் மூலம் ஸ்ரீ வியாசபகவான் அருளிய மகாபாரதமா அன்றி கர்ணபரம்பரைக்கதைகளா. என்பதையும் தெரிவித்தால் நலம்.

  13. Pingback: Nakkeran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *