வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்

பெங்களூர் அல்சூர் ஏரி ஒரு ரம்மியமான இடம். மரங்கள் செறிந்த அழகான சாலைகள் சூழ்ந்த அந்த ஏரிக் கரையின் ஒருமூலையில் பாரம்பரியமிக்க Madras Engineering Group என்ற ராணுவ மையம் உள்ளது. இன்னொரு மூலையில் Lakeview Mahaganapathi என்று மாடர்னாக அழைக்கப் படும் பழைய குளக்கரை விநாயகர் இருக்கிறார்.. இன்னொரு மூலையில் ஒடுக்கத்தூர் மடமும் (இது ராமலிங்க வள்ளலாரின் சீடர் ஒடுக்கத்தூர் சுவாமிகள் நிறுவியது) அதற்குள்ளேயே அமைந்துள்ள அழகிய தண்டாயுதபாணி சுவாமி கோயிலும் உள்ளது..

அந்தக் கோயிலுக்கு முன்பு உள்ள ஒரு சிறு பூங்கா போன்ற இடத்தில் பழைய, துருப்பிடித்த கார்களுக்கு மத்தியில் ஒரு பீடத்தில் மொத்தையாக ஒரு உருவம் கோணியால் மூடப் பட்டுக் கிடந்ததைப் பார்த்திருக்கலாம், கடந்த 2-3 வாரங்கள் முன்பு வரை.

”உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்று உரைத்த உலக குருவான மகரிஷி ஒருவரின் திருவுருவம் தான் அது. ராமன் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் போனது போல, பதினொன்று ஆண்டுகள் யாருக்கும் தன்னைக் காட்டாமல் கோணிக்குள் அமர்ந்து செய்த அக்ஞாதவாசத்திலிருந்து வெளிவந்திருக்கிறார் தெய்வப் புலவர்.

இந்த தேசம் முழுவதும், ஏன் உலகம் முழுவதும் போற்றி வணங்கதற்கு உரிய தெய்வீக, கலாசார அடையாளங்கள் திருவள்ளுவரும், திருக்குறளும் . அதனை உணராது குறுகிய மொழிவெறியால் உந்தப் பட்ட சில மூடர்களின் செயல்பாடுகளாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் திருவள்ளுவரின் சிலை கர்நாடகத் தலைநகரில் இப்படிக் கண்காணாது மூடப் பட்டிருந்தது வெட்கத்திற்குரிய விஷயம்.

bangalore_thiruvalluvarபா.ஜ.க தலைமையில் சென்ற வருடம் மாநில அரசு அமைந்த சில மாதங்களிலேயே, இந்தப் பிரசினையை சுமுகமாகத் தீர்த்து, கன்னடர் – தமிழர் நல்லுறவுக்கு உரம் சேர்க்கும் வகையில், இந்தச் சிலை திறந்து வைக்கப் படவேண்டும் என்று தேசிய உணர்வுள்ள பெருமக்கள் பலரிடமிருந்தும் கோரிக்கை முன்வைக்கப் பட்டது. அது பலித்திருப்பது சந்தோஷமான விஷயம். திருவள்ளுவர் சிலைத் திறப்புக்கு வழிவகுத்து, ஒரு விழாவையும் சிறப்பாக நடத்தி முடித்து, அதோடு சென்னையில் கன்னடக் கவிஞரும், மகானுமான சர்வக்ஞரின் சிலைத் திறப்புக்கும் ஏற்பாடு செய்திருக்கும் கர்நாடக, தமிழக அரசுகளும் முதல்வர்களும் பாராட்டுக்குரியவர்கள். பெங்களூரில் சிலை திறப்பை எதிர்த்து பந்த் அறிவித்து, கலவரம் செய்ய முயன்று காவல்துறையால் கட்டுப் படுத்தப் பட்ட கருங்காலிகள் கண்டனத்திற்குரியவர்கள்; கன்னடத்துக் கரும்பில் முளைத்த கணுக்கள் அவர்கள்.

குடகு மலையில் தோன்றும் காவிரி என்கிற கன்னடத்தி, மலைமுகடுகளில் இளநடை பயின்று தன் யௌவனத்தின் முழுப் பொலிவுடன் தமி்ழச்சியாகித் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனை ஆதுரத்துடன் சென்று தரங்கம்பாடியில் தழுவிக் கொள்கிறாள், பின்னர் கடலோடு கலந்து உலகப் பிரஜையாக உருமாறி விடுகிறாள். இயற்கையே செய்திருக்கும் ஏற்றமிகு ஏற்பாடு!

சங்க இலக்கியங்களில் “கருநாடு” என்று குறிக்கப் படுவது கர்நாடகமே என்று ஒரு சாரார் கருதுகின்றனர். அறுபத்து மூன்று நாயன்மார்களும் கன்னட வீரசைவ மரபில் பூர்வாசாரியார்கள் என்று போற்றப் படுகிறார்கள். அதே ரீதியில், தமிழின் தலைசிறந்த புலவர்களில் ஒருவரான துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் பசவண்ணரின் சீடரான அல்லம பிரபுவைக் குறித்து ‘பிரபுலிங்க லீலை’ என்ற அழகிய பிரபந்தத்தை அருளியுள்ளார். ஸ்ரீராமானுஜர் மைசூர் மேல்கோட்டை பகுதியில் வாழ்ந்து ஹொய்சள ராஜ வம்சத்திற்கே குருவாக விளங்கி, அந்த வம்சத்தின் மன்னனை ”விஷ்ணுவர்த்தனன்” ஆக்கினார். தமிழகத்தின் புவனகிரியில் பிறந்து, கும்பகோணத்தில் வாழ்ந்த ஸ்ரீராகவேந்திர சுவாமி கர்நாடகம் எங்கிலும் கல்பதருவாக வணங்கப் படுகிறார்.

வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்தில் தோன்றிய சாளுக்கிய, பல்லவ மோதல் தவிர்த்து கன்னடர் தமிழர் நல்லிணக்கத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. பிற்கால சோழ அரசுகள், சாளுக்கியருடன் திருமண உறவு பூண்டு, தங்கள் வம்சங்கள் தழைக்க வகை செய்தன. மாலிக்காபூரின் ஆக்கிரமிப்பால் சிதைந்த மதுரை மாநகரை விஜயநகர மன்னர் கம்பண உடையார் படைகொண்டு சென்று மீட்டு, அன்னை மீனாட்சியின் ஆலயத்தை மீண்டும் நிர்மாணித்தார். பின்னர் தமிழகத்தை நெடுங்காலம் ஆண்டவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகளாக இருந்த நாயக்க மன்னர்கள். தமிழகத்தின் ஏராளமான பழங்கோயில்கள் விஜயநகர அரசுளின் திருப்பணிகளை இன்று வரை பறைசாற்றி நிற்கின்றன.

அதோடு, கலை, இலக்கியம் என்று பல துறைகளிலும் இரு சாராருக்குமிடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. திருநெல்வேலிச் சீமையில் பிறந்த ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் மைசூர் மன்னரின் அரசவையில் கர்நாடக சங்கீத பூஷணமாக ஜொலித்தார். மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், டி.பி.கைலாசம் ஆகிய புகழ்பெற்ற கன்னட இலக்கியவாதிகள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். தமிழ்ப் படைப்பாளிகளில் விட்டல் ராவ், எம்.கோபாலகிருஷ்ணன் என்று கன்னடத்தைத் தாய்மொழியாய்க் கொண்டவர்கள் உடன் நினைவுக்கு வருகிறார்கள்!

திருவள்ளுவரை நமக்கெல்லாம் தெரியும். யார் இந்த சர்வக்ஞர்?

”வள்ளுவ தேவன் வசனத்தை மெய்யாக
உள்ளுவ தேவன் உளன் ” (பெருங்கதை, 2001)

என்ற பாடலின் படி “வள்ளுவ தேவன் வசனம்” என்பது திருக்குறளுக்கு அமைந்த பல பெயர்களில் ஒன்றாகிறது.

இதே ரீதியில், கன்னட மொழியில் அறநெறிகளைக் கூறும் “வசனங்களை” இயற்றியவர் சர்வக்ஞர் என்ற 16ஆம் நூற்றாண்டுப் புலவர். குறள் இரண்டடிப் பாடல்களைக் கொண்டிருப்பது போன்று இவரது பாடல்கள் த்ரிபதி என்று மூன்றடிகளைக் கொண்டிருக்கும். இப்படி 2000 வசனங்களை இவர் இயற்றியுள்ளார்.

சர்வக்ஞர் என்ற சொல்லுக்கு அனைத்தும் அறிந்தவர் என்று பொருள். ஒருவன் எப்படி அனைத்தும் அறிந்தவனாக முடியும்?

ஸ்ர்வக்ஞனெம்வனு கர்வதிந்தாதவனே?
ஸர்வரொளு ஒந்தொந்து நுடி லிது வித்யெயெ
பர்வதவே ஆ ஸ்ர்வக்ஞ.

(க = ka, = ga; ட = ta. = da; த = tha, = dha; ப = pa, = ba; ……)

சர்வக்ஞன் என்பவன் கர்வத்தினாலா அப்படி ஆனான்?
எல்லாரிடமும் ஒவ்வொரு சொல் கற்று, வித்தையின்
பர்வதமாகவே ஆனவல்லவோ சர்வக்ஞன்!

கெலவம் ல்லவரிந் கலிது
கெலவம் மாள்பவரிந் கண்டு – மத்தே
ஹலவம் தானே ஸ்வத: மாடி திளியெந்த ஸர்வக்ஞ.

சிலவற்றை அறிந்தவரிடமிருந்து கற்க.
சிலவற்றை செய்பவர்களைக் கண்டு கற்க.
மற்ற பலவற்றையும் தானே சுயமாக எண்ணித் தெளிந்திடு சர்வக்ஞா.

“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற வள்ளுவர் வாய்மொழியைத் தன் வாழ்வில் ஒழுகி, அதனைத் தன் தாய்மொழியில் தந்திருக்கிறார் இந்தக் கவிஞர் !

அன்னவனு இக்குவது நன்னியனே நுடிவுது
தன்னந்தே பரர பகெதொடே கைலாஸ
பின்னானவக்கு ஸ்ர்வக்ஞ.

அன்னம் இடுவது உண்மை மொழிவது
தன்னிலும் பிறரை மதிப்பது
இதுவே கைலாசத்திற்கு
இனிய வழியாகும் சர்வக்ஞா.

sarvajna_statue”ஈதல் இசைபடவாழ்தல்” என்ற பொய்யாமொழியுடன் இயைகின்றன இந்த வரிகள்.

வள்ளுவரைப் போன்றே சர்வக்ஞரின் வாழ்க்கை பற்றியும் விவரங்கள் தெளிவாகத் தெரிய வரவில்லை. வள்ளுவர் ஆதி என்ற புலைச்சிக்கும், பகவன் என்ற அந்தணர்க்கும் மகனாகப் பிறந்தவர் என்ற தமிழ்நாட்டுக் கர்ண பரம்பரைக் கதை போன்றே ஒரு சைவ அந்தணருக்கும், மாலி என்ற சூத்திரப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர் சர்வக்ஞர் என்ற கதை உள்ளது! கர்நாடக மாநிலத்தின் தார்வாட் என்ற ஊரில் பிறந்து ஊரூராகத் திரியும் துறவியாகவே தன் இறுதி நாள் வரை சர்வக்ஞர் வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது.

”ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர் நோய்”

என்று வள்ளுவர் நொந்து கொள்வதைப் போலவே இவரும் பாடுகிறார் –

மூர்க்கனிகே புத்தி நூற்கால ஹேளிரு
கோர்க்கல்ல மேலே மளே ஹுயிரே
நீர்க்கொம்புதுந்தே ஸர்வக்ஞ.

மூர்க்கனுக்கு புத்தி நூறுமுறை சொல்வது
பெருங்கல் மேலே மழை விழுவது போல.
நீர் தங்குமா அதில் சர்வக்ஞா?

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்ற முதுமொழியின் எதிரொலியாக உள்ளது அவரது இந்த வசனம் –

எல்ல ல்லவரில்ல ல்லவரு ஹளில்ல
லவில்ல ல்லவரித்து ஸாஹித்ய
எல்லரிகில்ல ஸர்வக்ஞ.

எல்லாம் அறிந்தவர் இல்லை. அறிந்தவரும் வெகுவாக இல்லை.
அறிவு இல்லாமலிருக்கலாம் அறிந்தவரிடத்தும். (எனவே) இலக்கியம்
எல்லாருக்குமானது அல்ல சர்வக்ஞா.

1500 ஆண்டுக் கால இடைவெளியில் வாழ்ந்த இருபெரும் புலவர்கள், ஞானிகள் இன்றும் இந்த தேசத்தை, இதன் மக்களை இணைக்கிறார்கள்.

தர்மம் எப்போதும் மக்களை இணைக்கிறது, வாழவைக்கிறது. அதர்மம் அடித்துக் கொள்ளச் சொல்லி, அழிக்கிறது.

17 Replies to “வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்”

  1. /தர்மம் எப்போதும் மக்களை இணைக்கிறது, வாழவைக்கிறது./
    சத்தியமான வார்த்தை. ஸ்ரீ அரவிந்தருடைய இந்த வார்த்தகைளை நினைவில் வைத்துக் கொண்டால், ‘பகுத்தறிவு’ என்று இன்றைக்கு நம்பவைக்கப் படும் போக்கிற்கும், தர்மத்தை உள்ளபடிக்கே அறிந்து கொள்கிற ஞானத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முடியும்.
    “What men call knowledge is the reasoned acceptance of false appearances. Wisdom looks behind the veil and sees. Reason divides, fixes details and contrasts them; Wisdom unifies, marries contrasts in a single harmony. ”

    சர்வக்ஞருடைய மூன்றடிக் கவிதைகளை இது வரை அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்ததில்லை. முதல் முதலாக, இந்தப் பதிவில் தான், மூன்று மூன்றடிக் கவிதைகளைப் படிக்கிறேன்.

    நன்றி.

  2. சர்வஞ்ஞன் என்னும் சொல்லுக்கு முற்றறிவுடையவன் என்பது பொருள். இது பரமேஸ்வரனுக்குரிய பெயர். இந்தத் திருநாமம் உடைய கன்னட ஞானி பற்றித் தமிழகமக்கள் அதிகம் அறியார். மிகச் சிறந்த முறையில் இவரை அறிமுகம் செய்த ஜடாயு அவர்களுக்கு மிக்க நன்றி. அரசியல் துறை தோற்றுவித்த தமிழ் -கன்னடப் பிளவை ஆன்மீக-இலக்கியம் களைந்தது. இந்த ஒற்றுமை நீடிக்க இறைவன் அருளுக. தருமம் மக்களை எப்பொழுதும் இணைக்கின்றது. எப்பேர்ப்பட்ட உண்மை. இது மொழி, இனம் முதலிய வேற்றுமைகளையெல்லாம் களையும் இணைப்பு. நிலைத்த இன்பம் தரும் இணைப்பு

  3. My eyes become wet seeing his statue being re-opened.

    My obeisance to Hindu cultural-nationalism.

  4. அருமையான கட்டுரை ஆழமான கருத்துக்கள். மிகவும் முக்கியமான தேச ஒற்றுமையையும் தர்மத்தின் காலத்தால் அழியாத தன்மையையும் தந்த தங்களுக்கு நன்றி. இக்கட்டுரையால் சர்வக்ஞர் குறித்து தெரிந்து கொண்டேன். பெங்களூரில் திருவள்ளுவரின் சிலை திறப்பு இந்து கலாச்சார தேசியத்தின் வெற்றி இந்திய மக்கள் அனைவருடையவும் வெற்றி பாரத அன்னையின் வெற்றி..

  5. //மூர்க்கனிகே புத்தி நூற்கால ஹேளிதரு
    கோர்க்கல்ல மேலே மளே ஹுயிதரே
    நீர்க்கொம்புதுந்தே ஸர்வக்ஞ.

    மூர்க்கனுக்கு புத்தி நூறுமுறை சொல்வது
    பெருங்கல் மேலே மழை விழுவது போல.
    நீர் தங்குமா அதில் சர்வக்ஞா?//

    //அன்னம் இடுவது உண்மை மொழிவது
    தன்னிலும் பிறரை மதிப்பது
    இதுவே கைலாசத்திற்கு
    இனிய வழியாகும் சர்வக்ஞா//

    WOW, SARVANGKHAR shall be a Great philosopher !

    We all should thank Mr. Jataayu.

    Jattayuji, can you continue to give us more verses from Sarvankhar and the translation in Tamil as well?

    Tiruchchi kkaaran!

  6. Jataayu’s translation of Sri Sarvaknjya is wonderful.

    Unless informed it sounds original on its own. That is identity of a great translation.

    I refrain from opining about the article as that will have many superlative accolades.

    Jataayu rocks !!

  7. //கருங்காலிகள் கண்டனத்திற்குரியவர்கள்; கன்னடத்துக் கரும்பில் முளைத்த கணுக்கள் அவர்கள்//

    சரியான கூற்று.

  8. அன்புள்ள ஜடாயு,

    தமிழ் ஹிந்து பக்கம் ரொம்ப நாளைக்கப்புறம் இப்போது தான் வருகிறேன். முதலில் உங்கள் எழுத்து. சந்தோஷமாக இருக்கிறது. சர்வகஞரைப் பற்றியும் அறிமுகம் கிடைத்தது. உங்கள் கன்னட மொழிப் பரிச்சயம் பற்றியும் தெரிந்தது. இரட்டை மகிழ்ச்சி.

    இன்று, நம்மைவிட கன்னடியர்கள் பல துறைகளிலும் சிறப்பாக பங்களித்துள்ளார்கள் அதில் சந்தேகமில்லை. ஆனால் அனந்த மூர்த்தி போன்றவர்களிடமும் கூட கொஞ்சம் கொஞ்சம் வட்டாள் நாகராஜ் இருப்பது தெரிகிறது. தமிழர்கள்மீது, இங்கிருந்து பார்க்கும் போது, பொதுவாக அவர்களிடம் ஒரு வெறித்தனமான் பகைமை இருக்கிறதே. தில்லியில் இருந்த போது என்னிடம் நெருக்கமாக பழகிய நண்பர்களாக இருந்தவர்கள் தில்லி பல்கலைக் கழக கன்னட பேராசிரியர்கள்.

    நம் கழகங்கள் விதைத்த விதைதானோ ஒரு வேளை.

  9. நல்ல கட்டுரை ஜடாயு.தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கே இந்தக் கதி என்றால் தெருத்தெருவுக்கு சிலைகள் அமைக்கும் அரசியல்வாதிகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது, அவர்களது சிலைகளுக்கு வரும்காலத்தில் நடக்கப்போகும் அவமதிப்புகளை நினைத்தால்…சர்வக்ஞர் என்ற ஒருவரைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அறிமுகம் செய்தமைக்கு நன்றி…

  10. Sri Venkat Swaminathan is always RIGHT!
    The sympathisers of DK/DMK used to hoist their flags wherever they went and settled and this kind of exhibitionism and preferred alienation resulted in sowing the seeds of hatred toward them and gradually, that extended to the Tamils in general. Persons like the so called intellectuals Anantha murthy and Girish Karnard fall under a different category. Generally speaking, I have heard people saying, why do they bring their local political identity where they have come insearch of their livelhood? The kazagam mania is the root cause for local people to loath Tamils, as far as Karnataka is concerned. Other factors developed in course of time.

    My association with Bangalore begins from 1948. I have witnessed the animosity gradually developing among Kanadigas particulary against the Tamils. The exodus of weavers from nearby erstwhile Salem district to the nearby Bangalore and other towns and cities in Karnataka added insult to injury because they were seen as rivals in menial job market by sons of the soil. Bangalore was already a city of Tamils from the days of British Raj becasue the British encouraged Tamils to settle in and around Cantonement area. Sri Jataayu mentions about Madras Regiment in Halesuru (Ulsoor) area in his beautiful article; this area is heavily populated with Tamils and The Madras Regiument was nothing but Saupers and Miners dvision, that is fodder for the guns sent in advance to the front before the British soldiers were to follow! And these saupers and miners were Tamils only! Especially Dalits from North Arcot and Maravars from southern districts of Tamilnadu. This area was also military settlement of skilled workers and technicians (Madras Engineering of Defence), who are again mostly Tamils. Bangalore was also littered with textile mills in those days and most of the workers were Tamils. In constructuion, again it was Tamils doing the job! Later on, HAL was the major player providing job opportunity to Tamils. Even today, you can find large number of Tamils in HAL (after his retirement from defence service, my son-in-law is absorbed by HAL where he went on deputation only!). At the time of IT boom, againg it was Tamils taking the lead! It took time for Kannadigas to wake up to the situation. Historically, as Jataayu rightly mentions, most of the parts of Karnataka were part of Tamilnadu only but that is NOT going to help now. Mysore is referred as Erumainadu in Tamil inscriptions. Short of hands among Kannadigas in labour related jobs and in the IT later on, resulted in Tamils settling in large number in and around Bangalore. You can find Tamils considerably even in coffee estates of Karnataka. Presence of Tamils in every strata helped politicians to exploit the situation. They could easily garner support from Kannadigas whipping parochial sentiments at various levels in the social set up. In my opinon, unveiling the statue of Tiruvallluvar after many years of hiidng under jute bags will open another spot to insult Tamils whenever any kind of regional tension arises in future between Tamilnadu and Karnataka. Poor Tiruvalluvar may be subjected to disrespect; I need not tell how. My personal opinion is this kind of statue culture should stop. Have a garden of trees or a waterbody named after the person if you want to rever and respect him/her. Spread Kural distributing its translation in the language of the state FREE (pamphlet containing select kurals from various chapters )if you want to introduce Tiruvalluvar. If you feel a statue is a must, depict a Kural instead of Valluvar. Tirukural has very many scenario to depict in a statue. You can even hold art exhibitions with paintings and drawings of Scenic Kural.
    My experience with most of the Tamils in Bangalore is they sre not keen to learn Kannada; Sri Jataayu may be an eception! Tamils speak Tamil in markets, vendors and petty shopkeeprers and use Hindi and English to get things done. Necessity to learn Kannada to speak is less. This agitates a Kannadiga mind. I have one Kannadiga friend here in Chennai; his complaint: I can manage with my Tamil in Bangalore whereas he cannot manage with his Kannada in Chennai!
    MALARMANNAN

  11. Thanks for the article. I am new to this site.
    Hats off to all who are contributing very good articles.
    I do agree with the observation of shri.Malarmannan.

  12. சர்வக்ஞர் பற்றி இவ்வளவு அருமையான தகவல் தந்து உள்ளீர்கள். உடனே நான் சர்வஞரின் மற்ற கவிதைகளும் தமிழில் கிடைக்குமா என்று ஏங்குகிறேன். மிக அருமையான கருத்துகள் மூன்று வரிகளில். திரிவிக்கிரமன் மூன்று அடிகளில் உலகத்தை அளந்த மாதிரி இவர் நச்சென்று கருத்துகளைத் தருகிறார். முடிந்தால் தமிழில் வலைத்தளத்தில் இவர் தொகுப்பு கிடைக்குமா என்று தெரிய ஆவல். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன். மிக்க நன்றி.

  13. ஸ்ரீ ஜடாயு அவர்களின் கட்டுரை எப்போதும் போல இப்போது அருமை. தமிழ் நாட்டிற்கும் கருனாடகத்திற்கும் இடையே இருந்த நல்லுரவை பின்புலமாகக்கொண்டு ஸ்ரீ சர்வக்ஞர் மற்றும் திரு வள்ளுவர் இருவரின் கருத்துக்களில் ஒரு சிறு ஒப்பாய்வையே தந்துள்ளார் ஸ்ரீ ஜடாயு. கன்னடர்களும் தமிழர்களும் ஒருதாய்வயிற்றுப்பிள்ளைகள் மொழி பண்பாடு சமயம் ஆகியவற்றில்.

    ஆனால் ஒரு சிறு தவறான தகவல் சரிசெய்துகொள்ளுங்கள் ஸ்ரீ ஜடாயு அவர்களே.
    “அறுபத்து மூன்று நாயன்மார்களும் கன்னட வீரசைவ மரபில் பூர்வாசாரியார்கள் என்று போற்றப் படுகிறார்கள். அதே ரீதியில், தமிழின் தலைசிறந்த புலவர்களில் ஒருவரான துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் பசவண்ணரின் சீடரான அல்லம பிரபுவைக் குறித்து ‘பிரபுலிங்க லீலை’ என்ற அழகிய பிரபந்தத்தை அருளியுள்ளார்”.

    நாயன்மார்களை வீரசைவர்கள் பேற்றுகின்றனர் என்ற முதல் கருத்து சரியானது.அதை தொடர்ந்தவரிகள் தவறு.
    பிரபு லிங்கலீலை என்ற வீரசைவ காவியம் கன்னடமொழியில் சாமரசன் என்ற புலவரால் எழுதப்பட்டது, அதனை தமிழில் அருளியவர் கற்பனைக்களஞ்சியம் ஸ்ரீ லஸ்ரீ துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். துறையூர் சிவப்பிரகாசசுவாமிகள் அவருடைய குரு ஆதிசிவப்பிரகாச சுவாமிகள் ஆவார். இவரே பேரூர் ஸ்ரீ சாந்தலிங்க சுவாமிகளுக்கும் குரு. ஸ்ரீ பிரபு லிங்க லீலையின் பாட்டுடைத்தலைவர் ஸ்ரீபிரபுதேவர் (அ) அல்லமப்பிரபு ஸ்ரீ பசவேஸ்வரரின் சீடர் அல்லர். பசவரே வணங்கிய அருளாளர். ஸ்ரீ சிவபிரானின் கணேஸ்வரர்களில் ஒருவரான ஸ்ரீ குகேஸ்வரரின் பிம்பம் என்று கருதப்படுகிறார். ஸ்ரீ பிரபுதேவர் லிங்கம் என்றால் பசவர் நந்தி. அக்கமகாதேவி அவரை தமது பிரபு என்றே குறிப்பிடுகிறார். இந்த நூல் ஆங்கிலத்தில் பேராசிரியர் பசவராஜ் நாயக்கர் அவர்களால் மொழி பெயர்க்கப்ப்ட்டுள்ளது. அதனை flipkart ல் வாங்கிப்படித்துவருகிறேன். தமிழில் ஸ்ரீலஸ்ரீ அடிகளாசிரியர் ஸ்ரீ சிவப்பிரகாசசுவாமிகளின் பிரபு லிங்கலீலைக்கு உரைஎழுத ம்யிலம் பொம்மபுரம் ஆதீனம் வெளியிட்டுள்ளது. அதன் படிக்கு காத்துக்கொண்டிருக்கிறேன்.
    அன்பன்
    விபூதிபூஷண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *