ரோமன் பொலன்ஸ்கி கைது – தொடரும் வினையின் நிழல்

roman_polanski01உலகத்தின் சிறந்த கலைஞர்கள் ஒன்று கூடியிருக்கின்றனர். ஒரே குரலில் பேசுகின்றனர். கலைக்காக அல்ல. இந்த நூற்றாண்டின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக யார் கருதப்படுகிறாரோ, உலக சினிமாவைப் பேசுபவர்கள் யாருடைய பெயரை உச்சரிப்பதை கௌரவமாக கருதுவார்களோ அவரை சிறையிலிருந்து மீட்க.

ரோமன் பொலன்ஸ்கி ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்காகவும் உலகெங்கிலும் கௌரவமாகக் கருதப்படும் பல திரைப்பட விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டவை. அவரை செப்டம்பர் 26ஆம் தேதி அமெரிக்க அரசு ஸ்விட்ஸர்லாந்தில் வைத்து கைது செய்து இருக்கிறது – தலை மறைவாக தப்பி ஓடும் போது அல்ல. சுரிக்கில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றபோது. இந்தத் திரைப்படவிழாவில் அவரை கௌரவிப்பதற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க திட்டமிடப்பட்டிருந்தது இன்னும் கூடுதல் முரண்.

இவர் பல வருடங்களுக்கு முன் சமந்தா கெய்லி என்ற ஒரு சிறுமியுடன் பாலியல் தொடர்பு கொண்டதற்காக இவரை அமெரிக்க அரசு இப்போது கைது செய்து இருக்கிறது. இந்தக் குற்றத்தை அவர் இழைத்தது 1977 ஆம் ஆண்டு ஜேக் நிக்கல்ஸன் என்ற நடிகரின் வீட்டில். பொலன்ஸ்கியில் திரைப்படங்களில் இன்றளவும் முத்திரைத் திரைப்படமாக கருதப்படும் Chinatown வெளிவந்த காலகட்டம். ஜேக் நிக்கல்ஸனுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்த படம் – பொலன்ஸ்கிக்கும் ஜேக் நிக்கல்ஸனுக்கும் இடையேயான நட்பு இறுகக் காரணமாயிருந்தது. அந்த சமயத்தில்தான் வளரும் மாடலாக இருக்கும் சமந்தாவை Vogue பத்திரிக்கைக்காக ஃபோட்டோ செஷனுக்காக ஜேக் நிகல்ஸனுடைய வீட்டிற்கு கூட்டி வந்து பாலியல் உறவு கொண்டார் பொலன்ஸ்கி. அப்போது தனக்கு போதை தந்து தன்னை பாலியல் உறவுக்கு ஈடுபடுத்தியதாக போலன்ஸ்கி மீது சமந்தா குற்றம் சாட்டினார்.

1978ஆம் ஆண்டு நடந்த இந்த வழக்கில் தான் உறவு கொண்டது உண்மை என்றும் ஆனால் அது பலாத்காரம் அல்ல என்றும் பொலன்ஸ்கி வாதாடினார். இந்த வழக்கிற்காக சில காலம் மனநலச் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.

அந்த வழக்கின் முக்கிய முடிவு அறிவிப்பதற்குமுன் பொலன்ஸ்கி அமெரிக்காவிலிருந்து கிளம்பி ஃப்ரான்ஸுக்கு தப்பி விட்டார். அந்தக் காலங்களில் தேசங்களுக்கு இடையில் குற்றவாளிகளை எல்லை தாண்டி கைது செய்யும் உடன்படிக்கை வலுவாக இல்லை. அப்போது ஃப்ரான்ஸுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இருந்த ஒப்பந்தப்படி குற்றம் சாட்டப்பட்ட தன்னுடைய குடிமகனை அமெரிக்காவுக்கு ஒப்படைக்க மறுக்க ஃப்ரான்ஸுக்கு முழு உரிமை உண்டு. இப்போது ஸ்விஸ் அரசாங்கம் பொலன்ஸ்கியை கைது செய்திருப்பது, 1990-இல் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில். ஆதலால் அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்ட ஃபிரன்ச் குடியுரிமை பெற்ற பொலன்ஸ்கி, ஃப்ரான்ஸில் ஒரு சுதந்திர மனிதனாக, ஆதரச புருஷனாகவே இருந்தார்.

samanthaஇந்த சம்பவம் தனக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகவே சமந்தா கருதுகிறார். ஃப்ரென்ச் சமூகம் அவரை இருகரம் நீட்டி வரவேற்றது. அமெரிக்காவிலிருந்து தப்பிய பொலன்ஸ்கி, கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் அதன் பிறகு அமெரிக்க மண்ணை மிதிக்கவேயில்லை, ஆஸ்கர் விருது வாங்கிக் கொள்ளக்கூட.

2002 ஆம் அவர் இயக்கிய The Pianist என்ற திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை பொலன்ஸ்கி சார்பாக அகாடெமியே பெற்றுக் கொண்டது. நீதிமன்றத்திற்கு வெளியே இந்த வழக்கிற்கு முடிவு கொண்டு வர போலன்ஸ்கியும் சமந்தாவும் ஒரு சமரசம் மேற்கொண்டனர் – வெளியிடப்படாத ஒரு தொகை சமந்தாவுக்கு வழங்கப்பட்டது. சமீபத்தில் மனதளவில் பொலன்ஸ்கியை மன்னிப்பதாக அறிவித்த சமந்தா அவர் மீது இருந்த வழக்கையும் தொடராமல் விட்டுவிட விழைந்தார்.

ஆனால் இந்த வழக்கு முறையாக நடத்தப்படவில்லை என்றும் இதன் நீதிபதி தனது பொறுப்புகளைத் தவறாகப் பயன்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து இணையம் எங்கும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த சம்பவம் குறித்த ஆவணப்படம் ஒன்று 2008 ஆம் ஆண்டு Roman Polanski: Wanted and Desired என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இன்றைய தேதியில் இது மிக முக்கியமான ஆவணப்படம். இந்த வழக்கில் சட்டம் செய்ய தவறியது, மனித உணர்வுகளின் போராட்டம், ஊடகமும் சட்டமும் இரண்டு மனிதர்களை வைத்து எப்படி விளையாடியது என்பன குறித்த பார்வையை எந்த விதமான தீர்மாணமும் இல்லாமல் முன்வைக்கும் ஆவணப்படம். வாய்ப்பு கிடைத்தால் பார்க்கவும்.

அமெரிக்க பத்திரிக்கைகளால் பெரிதும் விமர்சிக்கப்பட்ட பொலன்ஸ்கி, ஐரோப்பிய பத்திரிகைகளால் கொண்டாடப்படுகிறார். ஃப்ரான்ஸின் கலசாசார அமைச்சரும், வெளியுறவுத் துறை அமைச்சர்களும் பொலன்ஸ்கியின் கைதை விமர்சிக்கிறார்கள். பொலாந்தின் அரசாங்கமும் ஃப்ரென்ச் அரசாங்கமும் அவரின் கைது குறித்து வருத்தம் தெரிவிக்கிறது. ஐரோப்பாவில் வேறு மனிதாரகவே அடையாளம் காணப்படுகிறார்.

பொலன்ஸ்கியின் அபிமானிகள் பெரும்பாலோனோர் ஸ்தாபிக்க நினைப்பது போல பொலன்ஸ்கி மனிதரில் புனிதரெல்லாம் கிடையாது. இருண்மை நிறைந்த சொந்த வாழ்க்கையில் பல இழப்புகளையும் மனசிக்கல்களையும் சந்தித்த பொலன்ஸ்கிக்கு பெண்கள் ஒரு மருந்தாக இருந்தது மறுக்க முடியாத உண்மை. இளம் பெண்கள் மீது அவருக்கு இருக்கும் மோகத்தை பொலன்ஸ்கியே வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படாதவரை சிக்கல் எதுவுமில்லை. ஆனால் செயல்கள் தனிமனித எல்லை மீறி பிற மனித எல்லைக்குள் நுழையும்போது அந்த வினையின் விளைவுகள் குறித்து பெரிதும் கவலை கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்கள் விஷயத்தில் இதற்கு முன்பும் பல முறை எல்லை தாண்டியிருகிறார்.

இப்போதைக்கு பொலன்ஸ்கி மீது இருக்கும் கைது வாரண்டை சுரிக்கிலேயே முடிவுக்கு கொண்டு வர அவரது வக்கில்கள் முயன்று வருகின்றனர். இந்த கைது கூட ஒரு விதத்தில் நல்லதுதான். தண்டனையிலிருந்து அவரை விலக்கியே வைத்திருந்த உலகம், தண்டனை என்ற பெயரில் அவரது களங்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. அவரது வயதையும் கலைக்காற்றிய பணியையும், பாதிக்கப்பட்ட சமந்தாவே அவரை மன்னித்ததையும் முன்வைக்கும் அவரது ஆதரவாளர்கள் மறப்பது ஒன்றே ஒன்றை தான் – குற்றம் என்று பொது விதியால் நிர்ணயிக்கப்பட்ட செயலை நிகழ்த்தி, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பியவரை, ஒரு பீடத்தின் மீதேற்றி சாமானியனை அவமானப்படுத்துகிறோம் என்ற உண்மைதான் அது.
பொலன்ஸ்கி இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற இயக்குநர்களில் ஒருவர் என்ற கருத்தில் நமக்கு மாற்று கருத்து இருக்க முடியது. இன்றைக்கும் பல வருடங்கள் முன் எடுக்கப்பட்ட அவரது திரைப்படங்கள் நமக்கு ஒரு புதிய அனுபவமாகத்தான் இருக்கின்றன. அவரை ஒரு கலைஞனாகப் போற்றுவோம். கொண்டாடுவோம். ஆனால் இந்த காரணங்களுக்காக அவரின் குற்றத்திற்கு சப்பைகட்டு கட்டுவது நம்முடைய சமூகத்தில் நாம் அதிகார அமைப்புகளின் குற்றங்களை எதிர்க்கத் திராணியில்லாமல் வேடிக்கை பார்க்கும் இழி நிலைக்கு ஒப்பானது. 30 வருடத்திற்கு மேலான இந்த குற்றத்திற்கு அன்றே தண்டனை அளிக்கப்பட்டிருந்தால் ஒரு வேளை இந்நேரம் பொலன்ஸ்கி வெளியே வந்தாலும் வந்திருப்பார். இத்தனை வருடம் கழித்து அவரை கைது செய்து இருக்கும் சட்டம் அவரை தண்டிக்கும் நோக்கிலே இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். உலக நாடுகளின் மற்றும் கலைஞர்களின் அழுத்தத்திற்கு வளைந்து கொடுக்குமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கலையின் ஒரு ரசிகனாக, பொலன்ஸ்கி போன்ற ஒரு கலைஞன் சிறையில் வயோதிகத்தில் வாட நேரிட்ட துரதிருஷ்டத்தை நினைத்து வருந்துகிறேன். ஆனாலும், அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாவது வழங்கப்படுவதே நியாயமாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன். அப்போது தான் அவர் இறக்கும் போது வாழ்க்கை இயக்கிய ஒரு முடிவுறாத திரைப்படத்தின் வில்லனாக அவர் பாத்திரம் சித்தரிக்கப்படாது.

சில சமயம் தண்டனைதான் மிகப் பெரிய மன்னிப்பு !

5 Replies to “ரோமன் பொலன்ஸ்கி கைது – தொடரும் வினையின் நிழல்”

  1. // ஒரு கலைஞன் சிறையில் வயோதிகத்தில் வாட நேரிட்ட துரதிருஷ்டத்தை நினைத்து வருந்துகிறேன். ஆனாலும், அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாவது வழங்கப்படுவதே நியாயமாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன் //

    சரியான பார்வை கிருஷ்ணன். தங்களுடன் உடன்படுகிறேன். இந்தப் பரபரப்பு வழக்கு பற்றி சுருக்கமாக, சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள், நன்றி.

  2. இவரு நம்ப வூருக்கு வந்தா , ஒரு பிரச்சினையும் இல்லாமா சந்தோசமா
    வாழாலாம்.

    ஏன் எனில் நம் அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கும் அரசு. மேலும் இங்கெ எளிதாக சாட்சிகளை பல்டி அடிக்க வைக்க முடியும். கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் போதும்.

    பொதுவாகவே இந்தியாவில் செக்ஸ் ஸ்கேன்டலில் சிக்கியவருக்கு அதிக ஆதரவு, பாது காப்பு கிடைப்பதோடு, புகழும் அதிகரிக்கும்.

    இந்த தளத்தில் எழுதப் படுபவற்றை படித்தாலே புரிந்து கொள்ளலாம்.

  3. உண்மை திருச்சியாரே …சங்கர மட மனிதரை பார்க்கவில்லையா.. பாலியல் மற்றும் கொலை புரிந்தவர்கள் சுதந்திரமாய் நடமாடும் பூமி இது. சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை ஏய்க்கும் தேசம் இது. நாம்தான் முயற்சி எடுத்து நல்லது கேட்டது சொல்ல வேண்டும்..

    அன்புடன்,
    பிராமணபிரியா

  4. சகோதரர் பிராமணபிரியா அவர்களே,

    //உண்மை திருச்சியாரே …சங்கர மட மனிதரை பார்க்கவில்லையா.. பாலியல் மற்றும் கொலை புரிந்தவர்கள் சுதந்திரமாய் நடமாடும் பூமி இது. சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை ஏய்க்கும் தேசம் இது. நாம்தான் முயற்சி எடுத்து நல்லது கேட்டது சொல்ல வேண்டும்..

    அன்புடன்,
    பிராமணபிரியா//

    சகோதரர் பிராமணபிரியா அவர்களே,

    நாம் மனிதத்தை மறந்து,

    சாதிக் காழ்ப்புணர்ச்சி, மதக் காழ்ப்புணர்ச்சி, மொழிக் காழ்ப்புணர்ச்சி, இனக் காழ்ப்புணர்ச்சிகள் நம் இதயத்தை ஆக்கிரமிக்க விட்டு,

    வெறும் உதட்டளவில் சமரச, சமத்துவம் பேசி வாழ்வதால்,

    அரசியல் செல்வாக்கு, சாதிச் செல்வாக்கு, மதச் செல்வாக்கு, மொழிச் செல்வாக்கு உடையவர்கள், இவற்றோடு பணபலமும் உடையவர்கள் சாட்சிகளை மாற வைத்து, சட்டத்தை வளைத்து விடுகின்றனர்.

    இந்தியாவின் நீதி அமைப்புகள் மிகவும் சிறப்பானவை.

    ஆனால் சாட்சிகளின் பல்டி சர்வ சாதாரணமானது.

    பணபலம், அரசியல் பலம், இன்னும் பலவகையான பலம் உடையவர்கள் சட்டத்தை வளைத்து விடுவதும், சாட்சிகளை பல்டி அடிக்க வைப்பதும் வழாக்கமாகி விட்டது.

    உதாரணமாக தா. கிருட்டிணன் இறந்த விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்.

    நாம் தா.கிருட்டிணன் இறந்த விவாகரம் என்று எழுதி உள்ளது ஏன் என்றால், அது முதலில் கொலை வழக்காக இருந்து, ஆனால் அதில் குற்றம் சாட்டப் பட்ட 13 பேரும் நிராபராதிகள் என்று விடுதலை ஆகி விட்டனர்.

    Indialawnews.com
    //Azhagiri, 12 others acquitted in kiruttinan murder case
    5/8/2008

    The District Sessions Court here today acquitted M K Azhagiri, son of Tamil Nadu Chief Minister M Karunanidhi and 12 others, including Maduri Mayor P M Mannan, in the Tha Kuruttinan murder case.
    Sessions Judge P Durga Prasad in his judgement observed that there was no reliable evidence against the accused and the prosecution had failed to prove the case. A detailed judgement on the case would be made in two days, he added.
    Mr Azhagiri, a key accused in the case, along with other accused, was present in the court when the judgement was delivered this evening, amid tight security//

    எனவே அது கொலை இல்லை என்று நாம் புரிந்து கொள்ள‌ வேண்டும்

    அப்போது காலையில் வாக்கிங் போன தா. கிருட்டிணன் இறந்தது எப்படி?

    தென்னை மரத்திலே தேங்காய் பறிக்கப் போனவன் மறதியாக அரிவாளை மரத்திலேயே விட்டு விட்டு வந்திருப்பான். அந்த அரிவாள், இவர் வாக்கிங் போகும் போது, இவர் மண்டையில் விழுந்து அவர் இறந்த இருக்கக் கூடும் என்றே நாம் யூக்கிக்க கூடும்.

    எனவே பணபலமும், அரசியல் செல்வாக்கும், சமூக செல்வாக்கும் உடையவர்களை தண்டனை பெற வைப்பது, மிகவும் அரிதான செயல்.

    எனவே பணபலமும், அரசியல் செல்வாக்கும், சமூக செல்வாக்கும் உடையவர்கள் மடத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, மக்கள் தலைவராக இருந்தாலும் சரி – எஸ்ஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.

    கடவுள் இருக்கிறார் என்று கூறி பில்லியன்களை சேர்த்து ஆணவத்தில் இருக்கிறார்கள் சிலர்.

    கடவுள் இல்லை என்று கூறி பில்லியன்களை சேர்த்து ஆணவத்தில் இருக்கிறார்கள் சிலர்!

    இடையில் நாம் மந்தை ஆடுகள் போலப் பிரிந்து மண்டையை மண்டையை ஆட்டி கடைசியில் பலி ஆடு ஆகிறோம்!

    சிந்தியுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *