காசியில் ஒரு நாள்

காலையில் பெய்த மழையினாலா அல்லது எப்போதுமே இப்படித்தானா என்று தெரியவில்லை.  கல் பாவிய அந்தச் சிறிய பாதையெல்லாம் நசநச வென்றிருக்கிறது.  எதிரே வரும் மனிதர்கள் அருகில் வரும் சைக்கிள் அல்லது மாடு…. இல்லாவிட்டால் ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருக்கும் கடையின் பலகைகள் இப்படி எதிலாவது இடித்துக்கொள்ளாமல் தம்மால் நடக்க முடியவில்லை.  இடையிடையே பயமுறுத்தும் மோட்டார் சைக்கிள்கள் வேறு! இப்படி இடித்துக்கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்ற ரீதியில் நடக்கும் மக்கள்.  வாரனாசியில் சிறிய சந்துகளைப் பற்றி.. நிறையப் படித்திருந்தாலும் பார்க்கும் போது ஆச்சரியத்தைத் தவிர்க்க முடியவில்லை.

உலகப்புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.  ’இந்தச் சந்தில் போனால் 5 நிமிடம்’ என்று உள்ளூர்காரர் சொன்னதை நம்பி கடந்த 15 நிமிடங்களாக நடந்து கொண்டிருக்கிறோம்.  ஒவ்வொரு சந்தின் முடிவிலும் கோணல் மாணலாக எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களையும் அம்புக்குறிகளையும் கடந்து சற்றே பெரிதாக இருக்கும் அந்தக் குறுகிய தெருவில் ஒரு நுழைவுவாயில்.  பிரம்மாண்டம், ஆடம்பரம் எதுவும் இல்லாத அந்த நுழைவாயிலின் அருகிலிருக்கும் போலீஸ் சோதனைச் சாவடிகள், கெடுபிடிகள் எல்லாம் அதுதான் கோயில் என்பதைத் தெரிவிக்கின்றன.

kashivishwanathவெள்ளை சலவைக்கல் விரிந்திருக்கும் ஒரு பரந்த முற்றத்தில் நடுவே நான்குபுறமும் வாயில்கள் கொண்ட ஒரு மண்டபம் அதுதான் சன்னதி நடுவே தரையின் நடுவில் தரையிலேயே மூர்த்தி. சுற்றி நான்கு புறமும் பூஜை செய்யும் அர்ச்சகர்கள், அவர்கள் தங்கள் உடலாலும், பூஜைப் பொருட்களாலும் நுழைவு வாயிலை மறைத்துக்கொண்டிருப்பதாலும் அதற்கு வெளியே மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நிற்பதாலும் நமக்கு சன்னதி, ஸ்வாமி எதுவும் தெரியவில்லை.  அபிஷேகம் ஆரத்தி முடிந்து கூட்டம் கலைந்தபின் அருகில் சென்று பார்க்கிறோம்.  வெள்ளியிலான நாக கவசம் அணிவிக்கப்பட்டு, பளீரென்று சிவப்பு மஞ்சள் மலர்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார் விஸ்வநாதர்.  தரிசனத்துக்குப் பின்னர் வெளியே வந்த நாம் இப்போது மற்றொரு சந்தின் தொடக்கத்திலிருக்கிறோமென்பதைப் புரிந்து கொள்ள சில நிமிடங்களாகின்றன.

மகாகவி பாரதியார் இங்கு சிலகாலம் வாழ்ந்திருக்கிறார்.  அந்த இடத்தில் அவருக்குச் சிலையிருப்பது அறிந்து பார்க்கத் தேடிச்செல்கிறோம்.  அதிகம் பேர் அறியாத அந்த சிலையிருக்குமிடத்தை அருகிலிருக்கும் பால் கடைக்காரர் ஆக்கிரமித்திருக்கிறார்.  நெஞ்சுபொறுக்குதில்லையே …. இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்து… என்று புலம்புவதைத் தவிர வேறு வழியில்லை.  நண்பர்கள் சொல்லியிருந்த மணிகர்ணிகா கட்டம் அருகிலிருப்பதை அறிந்து போனோம்.

‘இந்த மணிகர்ணிகா கட்டத்தில் குளிப்பது மிகப் பெரிய புண்ணியம், சிவபிரான் ஸ்நானம் செய்த கட்டம், இதன் அருமை பலருக்குத் தெரியாது.  நீங்கள் கட்டாயம் குளியுங்கள் புண்ணியம்’ என்று சொன்ன அந்த ரிக்‌ஷாக்காரரை அனுப்பிவிட்டு குறுகிய பாதையின் முடிவிலிறங்கும் படிக்கட்டுகளைக் கடந்து கங்கையைப் பார்க்கும் நமக்கு ஏமாற்றம்; கலங்கிய கறுப்பு வண்ணத்தில் மிக மோசமாக, குப்பைகளுடன் வரும் கங்கை நகரின் கழிவுநீரை நதியுடன் இணைக்கும் ராட்சத சைஸ் குழாய்கள் – நிர்வாகம் எப்படி இந்தப் படித்துறையில் குளிக்க அனுமதிக்கிறது?  என்பதை விட, புண்ணியம் தேடும் வெறியில் புத்திசாலித்தனத்தையே இந்த மனிதர்கள் இழந்து விட்டிருக்கிறார்களே என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

மணிகர்ணிகா கட்டம் அருகிலேயே காசிநகரின் இடுகாடு. தினசரி 50-100 உடல்கள் தகனம் செய்யப்படும் இந்த இடத்தில் வசூலிக்கப்படும் கட்டணம்’ உலகப்புகழ் பெற்றது.  விலை உயர்ந்த சபாரி சூட், கையில் தங்கப்பட்டையில் கடிகாரம், சட்டைப் பையில் தங்கப் பேனா, கையில் தொடர்ந்து ஒலிக்கும் செல்ஃபோன் என ஒரு பிஸினஸ் மேன் போலக் காட்சியளிக்கும் அந்த மனிதர்தான் இந்த இடத்தின் ராஜா.  ஆமாம்; அவர்தான் தலைமை வெட்டியான் சத்திய நாராயண சௌத்திரி. பரபரப்புடன் இயங்கும் அவரின் கீழ் ஆறு உதவியாளர்கள் எரியும் சிதைகளை கவனித்துக்கொண்டிருந்தனர்.

மெலிந்த உயர்ந்த உருவம், தீர்க்கமான முகம், பளிச்சென்ற கண்களுடனிருக்கும் அந்தச் சிறுவன், ‘படகில் சென்று சுத்தமான கங்கையில் நிம்மதியாகக் குளிக்க விரும்புகிறீர்களா?’ என்று பணிவான ஆங்கிலத்தில் கேட்டவிதம் எவரையும் ‘யெஸ்’ சொல்ல வைக்கும்.  படகில் ஏறிய பின்னர்தான் தெரிகிறது ஓட்டப்போவது அந்தப் பையன் இல்லை, அவரது குடும்பப் படகுக்கு அவர் மார்க்கெட்டிங் அதிகாரி என்பது’. பரந்து விரிந்திருக்கும் அந்த கங்கைக் கடலின் சீறி வரும் புது வெள்ளத்தில் சீரான வேகத்தில் படகு சென்று நிற்கும் இடம் ஒரு மணல் திட்டு. ஒரு கரையில் ஸ்நான கட்டங்களும் மறுகரையில் பழைய பனாரஸ் நகருமிருக்கும் கங்கை நதியின் நடுவே, இது போல பல திட்டுக்கள்.  சொன்னது போலவே நதி சுத்தமாக ஓடுகிறது.  இறங்கிக் குளிக்க வசதியாக, பாடகிலிருந்து கயிறு கட்டிக் தருகிறார்கள், எப்படி பாதுகாப்பாகக் குளிக்க வேண்டும் என சொல்லித் தருமிந்த படகோட்டிகள் கங்கையிலேயே பிறந்து வளர்ந்து மடிபவர்கள்.

மாலையில் கங்கா ஆரத்தியை நதியிலிருந்தே பார்க்கலாம் என அழைத்துப் போகிறார்கள்.  சில்லென்ற காற்றின் சுகத்தில் படகுப் பயணத்தை அனுபவித்துக்கொண்டே ஆரத்தி கட்டத்தை நெருங்குகிறோம்.

படிகளிடையே பலகையினால் நிறுவப்பட்ட சிறிய மேடையின் தங்கமாய் மின்னும் ஒரு குட்டி மண்டபம் உள்ளே முகம் மட்டும் தெரியும் கங்காமாதா அருகில் பூஜை சாதனங்கள்.  பக்கவாட்டில் பக்கத்துக்கு இரண்டாக நாலு சிறிய மேடைகள்.  அதிலும் பூஜை பொருட்கள். இரவு ஏழு மணி நெருங்குகிறது.  படிகளில் கூட்டம் வழிகிறது. மின்விளக்கு வெளிச்சத்தில் தகதகவெனப் பளபளக்கும் ஆரஞ்சு நிறப் பட்டாடையில் பூஜை மேடை அருகே கம்பீரமாக நிற்கும் இளைஞர்கள். டாணென்று ஏழுமணிக்கு அறிவிப்பைத் தொடர்ந்து நடுமேடையில் வந்தமரும் தலைமைப் பூசாரி பூஜையைத் தொடங்குகிறார்.  தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

ganga_aarti_at_varanasi_ghatsஇசைக் குழுவில் ஆரத்திப் பாடல் ஒலிக்கிறது.  ஒவ்வொன்றாக ஏழுவிதமான தீபங்கள், படியிலிருந்து கங்கையை நோக்கி மூன்று திசைக்களுக்கும் காண்பிக்கப்படுகின்றன.  ஒவ்வொரு முறையும் ஐந்து பேரும் இசையுடன் இணைந்து துல்லியமான அசைவுகளைக்கூட ஒரு பிசிறில்லாமல் தேர்ந்த நடனக் கலைஞர்களைப் போல நேர்த்தியாக செய்யும் அந்தக் காட்சி நம்மைப் பிரமிக்கவைக்கிறது.  கனமான அந்த கொதித்துக் கொண்டிருக்கும் தீபங்களை ஒருகையில் தூக்கிச் சுழற்றிக் கொண்டே மறுகையில் கனமான மணியை அடித்துக்கொண்டே ஒரு காலில் மண்டியிட்டு நான்கு பேரும் ஒரே நேரத்தில் வினாடி பிசகாமல் திரும்புகிறார்கள்.

இறுதியில் பல அடுக்கு விளக்குகளுடன் ஆரத்தி.  உச்சஸ்தாயியில் இசைக்குழுவின் குரல்.  பக்திப் பரவசத்தில் மக்களின், ‘கங்காமாதாகீ ஜே’ என்று ஓங்கி ஒலிக்கும் குரல்களின் பின்னணியில் மூன்று முறை சுழற்றப்படும் அந்தப் பெரிய தீபம் மக்களை நோக்கிக் காட்டப்பட்டு, பிறகு அணைக்கப்படுகிறது.  காத்திருக்கும் மக்கள் தங்கள் கைகளில் புஷ்பங்களுடன் இலைகளில் வைத்திருக்கும் சிறு தீபங்களை மிதக்க விடுகிறார்கள்.  சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கில் நம் படகைக் கடந்து செல்லும், மிதக்கும் அந்த மின்னும் நட்சத்திரங்களை ரசித்த வண்ணம் கவனமாக அருகில் நிற்கும் படகுகளில் மாறிமாறி நடந்து கரையிலிருக்கும் அந்த ஆரத்தி இசைக் கலைஞர்களை நெருங்குகிறோம்.  ஆர்மோனியம் வாசித்துக்கொண்டே பாடியவரையும் தபேலா வாசித்த கலைஞரையும் பாராட்டக் கை நீட்டும் நாம், அவர்கள் முகத்தைப் பார்த்ததும் சற்று அதிர்ந்து போகிறோம்.  தினசரி பல ஆயிரம் கண்கள் பார்க்கும் அந்த அற்புதமான ஒளி வழிபாட்டுக்கு உயிர் தரும் இசையை வழங்கும் அந்தச் சகோதரர்களால் அதைப் பார்க்க முடியாது.  ஆம்; அவர்கள் விழிகளில் ஒளியில்லை.

மனித வாழ்க்கைதான் எவ்வளவு ஆச்சரியங்களைக் கொண்டதாயிருக்கிறது !

14 Replies to “காசியில் ஒரு நாள்”

  1. நன்றாக விவரித்துள்ளீர்கள். காசி மீது அருவருப்பை தூண்டி காசிக்கு பக்தர்களைப் போகாமல் செய்யவும் இந்து மதத்தின் புனித இடம் மீது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவும் கருணாநிதியின் டி விக் கம்பெனி ஒரு சதி டாக்குமெண்டரியைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டேன். உங்கள் கட்டுரை மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. நன்றி

    அன்புடன்
    ச.திருமலை

  2. kasi is the oldest city of the world and she wears the ganges as a garland.bharathi the poet was touched by kasi and he became a nationalist.
    ramanan`s effort to locate the bharathi memorial is laudable.ramanan`s picture of the holy city is clear and his style is lucid.
    i request tamilhindu to bring out such articles to spread tranquility.why blame others when we lack knowledge about our culture and heritage.

  3. Thank youThiru Ramanan
    We felt we were present in the holiest of holy places.We may or may not be able to see the place and experience the arti in our lifetimes but your narration took us there.Thankyou very much.
    The information about the musicians who couldnt see was very touching.

  4. நன்றாக விவரித்துள்ளீர்கள். காசி மீது அருவருப்பை தூண்டி காசிக்கு பக்தர்களைப் போகாமல் செய்யவும் இந்து மதத்தின் புனித இடம் மீது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவும் கருணாநிதியின் டி விக் கம்பெனி ஒரு சதி டாக்குமெண்டரியைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டேன். உங்கள் கட்டுரை மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. நன்றி

    அன்புடன்
    N. Suresh Narayanan

  5. இந்தமாதிரி பயனுள்ள கட்டுரைகளை வெளியிடுவது நல்லது.
    உடல்பயிற்சி செய்கின்ற ஆரோக்கியமான மனிதரிடம் நோய் அண்டுவதில்லை.நம் மத நம்பிக்கையை நாம் வலுப்படுத்தலாம்

    (comment edited & published)

  6. அய்யா தங்கள் சொன்ன ஒவ்வுன்றையும் நான் எனது குடும்பத்துடன் அனுபவித்து இருக்கிறேன். அதை இன்று நினைத்து கண்ணீர் விடுகிறேன்.

    இந்து வகை பிறந்த ஒவுருவரும் கங்கை கரையில் குளித்து கசிவிச்வனதரை தரிசித்து கங்க பூஜாவை ஒருமுறையேனும் கண்டு வாருங்கள் வாழ்வில் உங்கள் துன்பம் எல்லாம் தேறும்.

    நன்றி .

  7. நல்ல கருத்துக்கள். நல்ல பார்வை. இதே போல் உள்ளே உள்ள தமிழர்களுக்கு பயன் உள்ள சங்கங்கள் மடங்கள், வழிகாட்டிகள் போன்ற விசயங்கள் ஒரு ஆக்கமாக தொடுக்க முடியுமா?

  8. குறைகள் சொல்லத்தான் தெரியுமா என்று கேட்காதீர்கள். ச.திருமலை 25.11.09 அன்று 9.38 காலை எழுதிய மறு மொழியும், என். சுரேஷ் நாராயணன் அதே 25.11.09 பிற்பக்ல் 3.38 மணிக்கு எழுதிய மறு மொழியும் ஒரு எழுத்து பிசகாமல் ஒன்றேயாக இருப்பதன் மாயம் என்ன?

    இனி விஷயத்துக்கு வரலாம். நான் 1955-ல் முதன் முதலாக காசி சென்றிருந்தேன். அப்போழுதும், கங்கை மலர்களும் கழிவுகளும் மிதக்கும் பிரவாஹமாகத் தான் இருந்தது. பின் 1996-ல் என்று ஞாபகம். 40 வருடங்களாக கழிவுகளைச் சுமந்து செல்லும் நதியாகத் தான் இருந்தது. நாங்கள் படகில் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குச் சென்று கொண்டிருந்தோம் என்னுடன் படகில் இருந்த ப்ல்கலைக் கழக பேராசிரியர்கள், பேராசிரியைகள், நாடகத் துறைக்காரர்கள், காசி வாசிகள் அந்த நீரைக் கையில் ஏந்தி பக்தியுடன் பருகி, தலையிலும் தெளித்துக்கொண்டார்கள். எனக்கு அருவெறுப்பாக இருந்தது.

    நான் நாஸ்திகனும் இல்லை. ஆஸ்திகனும் இல்லை. ஆனால் கங்கா மாதா என்று வணங்கும் ஒரு கலாச்சாரம் என் மனதை நெகிழ்ச்சியடையச் செய்கிறது. அப்படிப் போற்றும் ஒரு சமூகம், ஹரித்வாரிலிருந்து தொடங்கி காசி வரை உள்ள கரையோர நகரங்களின் கழிவுகள் அனைத்தையும் அந்த கங்கா மாதாவின் மீது கொட்டும் ஹிந்து வை என்ன சொல்ல. அவனை எப்படி நான் மதிக்க முடியும்?

    எந்த மசூதி, எந்த மாதாக் கோயில் இப்படி அசுத்தப்படுகிறது? எந்த மசூதியின் சர்சின் உள்ளே கடைகள் பரப்பப் பட்டுள்ளன?

  9. Its regrettable that the money minded and selfish people crowd up the Kaasi and spoils both its cleanliness and Holyness.

    Why dont we arranage a system of allowing Limited people every day? This applies even to Thirupathi as well.

    ———————–

    bhagavat gIta kincitadhItA
    gangAjalalava kaNikApitA
    sahrdapi yena murAri samarca
    kriyate tasya yamena na carcA

    For him, who has studied the Bhagavatgita, even a little,
    who has drunk a drop of the Gangawater, and who has
    performed
    the worship of the destroyer of the Murari (viz
    Srikrishna)
    at least once, there is no tiff with Yama

    ——————–

    kurute gañgáságaragamanam
    vrataparipálnam athava dánam,
    jòánavihènaç sarvamatena
    muktim na bhajati janmaùatena.(17)

    One may, in pilgrimage, go to where the Ganges meets the
    ocean, called the Gangaasaagar, or observe vows, or distribute
    gifts away in charity. If he is devoid of first-hand-experience-ofthe-
    Truth, according to all schools of thought, he gains no
    release, even in a hundred lives.

    —————————-

    Thanks.

  10. Excellent article. Gutter inspectors like Vijay TV,Kalaignar TV etc should read these type of positive articles.Once again my congratulations .

  11. குறைகள் சொல்லத்தான் தெரியுமா என்று கேட்காதீர்கள். ச.திருமலை 25.11.09 அன்று 9.38 காலை எழுதிய மறு மொழியும், என். சுரேஷ் நாராயணன் அதே 25.11.09 பிற்பக்ல் 3.38 மணிக்கு எழுதிய மறு மொழியும் ஒரு எழுத்து பிசகாமல் ஒன்றேயாக இருப்பதன் மாயம் என்ன?

    இனி விஷயத்துக்கு வரலாம். நான் 1955-ல் முதன் முதலாக காசி சென்றிருந்தேன். அப்போழுதும், கங்கை மலர்களும் கழிவுகளும் மிதக்கும் பிரவாஹமாகத் தான் இருந்தது. பின் 1996-ல் என்று ஞாபகம். 40 வருடங்களாக கழிவுகளைச் சுமந்து செல்லும் நதியாகத் தான் இருந்தது. நாங்கள் படகில் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குச் சென்று கொண்டிருந்தோம் என்னுடன் படகில் இருந்த ப்ல்கலைக் கழக பேராசிரியர்கள், பேராசிரியைகள், நாடகத் துறைக்காரர்கள், காசி வாசிகள் அந்த நீரைக் கையில் ஏந்தி பக்தியுடன் பருகி, தலையிலும் தெளித்துக்கொண்டார்கள். எனக்கு அருவெறுப்பாக இருந்தது.

    நான் நாஸ்திகனும் இல்லை. ஆஸ்திகனும் இல்லை. ஆனால் கங்கா மாதா என்று வணங்கும் ஒரு கலாச்சாரம் என் மனதை நெகிழ்ச்சியடையச் செய்கிறது. அப்படிப் போற்றும் ஒரு சமூகம், ஹரித்வாரிலிருந்து தொடங்கி காசி வரை உள்ள கரையோர நகரங்களின் கழிவுகள் அனைத்தையும் அந்த கங்கா மாதாவின் மீது கொட்டும் ஹிந்து வை என்ன சொல்ல. அவனை எப்படி நான் மதிக்க முடியும்?

    எந்த மசூதி, எந்த மாதாக் கோயில் இப்படி அசுத்தப்படுகிறது? எந்த மசூதியின் சர்சின் உள்ளே கடைகள் பரப்பப் பட்டுள்ளன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *