போகப் போகத் தெரியும் – 40: பூகோளத்திலும் முட்டை

திராவிட நாடு என்பது வரலாறு வழிப்பட்ட அரசுக்குரியாதா? தென்னகம் தழுவிய திராவிட அரசு அமைந்து விளங்கிய வரலாறு எதுவுமில்லை. இந்தியாவில் மீண்டும் மீண்டும் பல அரசு ஏற்பாடு நிலைகொண்டதென்றால் தென்னகம் அதற்கு விதிவிலக்கல்ல. எடுத்துக்காட்டாகத் தமிழக வரலாற்றினைப் போகிற போக்கில் சிறிது நோக்குவோம். சங்க காலத்தில் மூவேந்தரோடு குறுநில மன்னர் பலர் இருந்தும் தமிழ்கூறும் நல்லுலகத்திலமைந்த இந்தக் குறுநிலங்களும் பெருநிலங்களும் தமக்குள்ளே அமர் பல நிகழ்த்தியதும் சரித்திர உண்மைகளாம். களப்பிரர் ஆண்ட காலத்தைப் பற்றி நாம் யாதும் அறியோம். அவர்கட்குப் பின், பல்லவரும் பாண்டியரும் பகைத்து நின்றனர். மீண்டும் சோழர்கள் தலையெடுத்தபோதே தமிழகம் முதன்முதலாக ஒரு குடை நிழலில் ஒன்றுபட்டது. ஆனால் விஜயாலய சோழர்கள் தம்மைத் தமிழ் நாட்டுக்கே உரியவர் என்றோ திராவிட நிலத்துக்கே உரியவரென்றோ கருதவில்லை. பரதக் கண்டம் முழுமையும் ஓராட்சியில் ஒன்றுபட வேண்டுமென்று விழைந்தனர். ராஜேந்திரன் கங்கைகொண்ட சோழனானது அவ்வாறே.

இந்தியர்கள் ஒற்றுமை பயிலாத ஈனரென்று வெள்ளைக்காரன் தூற்றியதைக் கற்றுக் காலம்கடந்து கக்கும் திமுக தலைவர்களை நாம் ஒன்று கேட்போம். முன்னாளில் பல அரசுகள் இருந்ததைக் காட்டி ஏக இந்தியாவை எதிர்க்கிறீர்களே, அதே மூச்சில் திராவிட நாடு எப்படிக் கேட்பது? தமிழ்நாடு என்றுகூடக் கேட்க முடியாதல்லவா? பாண்டிய நாடு, சோழநாடு, கொங்கு நாடு, பல்லவநாடு என்றெல்லாம் கோரிக்கை வகுப்பதுதானே நியாயம்?

திராவிட நாட்டுக் கோரிக்கைக்கு இவை இளைத்தவையல்ல. 50 லட்சம் மக்கள் வாழும் ஈராக்கும், 60 லட்சம் மக்கள் வாழும் மலேயாவும் தனி அரசுகளாக இருக்கலாமென்றால் 100 லட்சம் மக்கள் வாழும் பாண்டியநாடு ஏன் தனியாக வாழக்கூடாது என்று கேட்கலாம். மதுரை முதலாளிகள்கூட சென்னைக்கும் கோவைக்கும் சேலத்துக்கும் போய் தொழில் நடத்துகிறார்கள்; கோவை வாழ்கிறது, மதுரை தேய்கிறது என்றெல்லாம் கோஷங்களை வகுக்கலாம். காரைக்குடி இரும்பும், குமரிக் கடற்கடை மோனசைட்டும் இருக்கும்போது நமக்கென்ன குறைவு என்று மேடை அதிர முழங்கலாம். வல்லியில் நாடகத் தோரணையில் வாய்ச்சொல் வீரம் வழங்குவதே அரசியல் என்றாகிவிட்டால் எதைத்தான் சொல்லக்கூடாது.
– பக். 11, 12 / சரித்திரப் புரட்டர்கள் / எஸ். ராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே. என்று அறியப்படும் எழுத்தாளர்.)

திராவிட இனத்தவரின் மொழி திராவிடம் என்பது கால்டுவல் தொடங்கி வைத்த கப்சா. மொழிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை இன வேறுபாடாகக் காட்டி இந்திய ஒற்றுமைக்கும் இந்து சமூகத்திற்கும் எதிராகச் சொற்சிலம்பம் ஆடியவர் இந்தப் பாதிரியார்.

பாதிரியாரிடமிருந்து கடன்வாங்கப்பட்டதே ‘திராவிட நாடு’ என்ற அரசியல் கோஷம். இந்த அரசியல் கோஷத்திற்கு ஏற்றபடி தயாரிக்கப்பட்டதுதான் சில ஆய்வாளர்களின் ‘ஆரியப் படையெடுப்பு’ என்ற நாடகம். இந்த நாடகமும் நாளடைவில் அரிதாரம் வாங்கக் காசில்லாமல் அவையோர் எவரும் இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.

மார்ட்டிமர் வீலரில் தொடங்கி ரோமிலா தாப்பர் வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்றபடி இந்த நாடகத்தின் கதையை மாற்றியிருக்கிறார்கள்.

முதலில் ஆரியர்கள் என்பது ஒரு இனம், அவர்கள் மொழி சம்ஸ்கிருதம் என்றார்கள் இவர்கள். அடுத்தமுறை, ஆரியர்கள் ஹரப்பாவில் குடியிருந்த திராவிட இனத்தவரைப் போரிட்டு அழித்தார்கள் என்று கதை மாற்றப்பட்டது. அடுத்த கட்டத்தில், ஆரியர்கள் திராவிடர்களை அழிக்கவில்லை, திராவிடர்கள் ஹரப்பாவிலிருந்து வெளியேறிய பிறகே ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள் என்று சொல்லப்பட்டது. ஆரியர்கள் படையெடுத்து வரவில்லை, அவர்கள் இங்கே குடிபெயர்ந்தனர் என்பது லேட்டஸ்ட் ஆராய்ச்சி.

திராவிட இயக்கத்தவர்க்கு சரித்திரம் தான் தெரியாது என்று யாரும் நினைக்கவேண்டாம் பூகோளத்திலும் அவர்கள் வாங்கியது முட்டைதான்.

நர்மதை நதிக்குத் தெற்கே உள்ள பகுதிகள்தான் ‘திராவிட நாடு’ என்று அறிவித்தார் சி.என். அண்ணாதுரை (ஆரிய மாயை). நர்மதை நதிக்குத் தெற்கே ஹிந்தி, குஜராத்தி, மராத்தி பேசும் மக்களும் குடியிருக்கிறார்கள் என்பதை அவர் அறியவில்லை. பூகோளப் படத்தைக்கூட புரட்டிப் பார்க்காமல் எழுதப்பட்டது இந்த அறிஞரின் புத்தகம்.

‘மாஸ்கோவுக்குப் போவேன், மாலங்கோவைப் பார்ப்பேன்’ என்று மானாவுக்கு மானாபோட்டு எழுதி மதிமயக்கத்தில் இருப்பதுதானே இவர்களுடைய சித்தாந்தம். இதில் அடிப்படையையும் ஆதாரத்தையும் தேடுபவரின் கதை கந்தலாகிவிடும்.

திராவிட இயக்கத்தவரின் கோரிக்கைகளில் இருக்கும் விஞ்ஞானப் பின்னணி பற்றித் தெரிந்துகொள்வதற்காக இதைக் குறிப்பிட்டேன்.

நாம் திராவிட இயக்க வரலாறு குறித்துப் பார்க்கலாம்.

vochidambaram-largeதேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 1936 ஆம் வருடம் நவம்பர் மாதம் 18ஆம் நாள் அமரர் ஆனார். அந்தக் கப்பலோட்டிய தமிழரின் நினைவைப் போற்றும் விதமாக சுதந்திர இந்தியாவில் (1949) தூத்துக்குடித் துறைமுகத்திலிருந்து எம்.வி. சிதம்பரம் என்ற கப்பல் ஓடத் தொடங்கியது. கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரியாரும் நம் தமிழக அமைச்சர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

எதையுமே தலைகீழாகப் பார்ப்பது தமிழகத்தின் பகுத்தறிவுப் பார்வை. சிதம்பரனார் பெயரில் கப்பல் விட்டதற்கு தாங்கள்தான் காரணம் என்று திராவிட கழகத்தினர் சொல்லிக் கொண்டார்கள் சிதம்பரனார் தங்களைச் சேர்ந்தவர் என்றும் தோள்தட்டினார்கள் அவர்கள். அவர்களுடைய வாதத்தில் எள்ளளவாவது எள்ளின் முனையளவாவது உண்மை இருக்கிறதா என்று பார்ப்போம்.

kapviswanathamநான் கண்ட வ.உ.சி’ என்ற தலைப்பில் நீதிக்கட்சியின் முன்னனித் தலைவரான கி.ஆ.பெ. விசுவநாதம் எழுதுகிறார்.

அரசியலிலே நாங்கள் இருவரும் மாறுபட்ட கொள்கையுடையவர்கள், மாறுபட்ட இயக்கங்களைச் சார்ந்தவர்கள். ஒருநாள் தட்டப்பாறையில் என்னைச் சந்தித்து , ‘உங்களைப் போன்றவர்கள் ஜஸ்டிஸ் கட்சியை விட்டு காங்கிரஸ் கட்சிக்கு வந்துசேர வேண்டும்’ என்று கூறினார்கள். எனது இளமை முறுக்கினாலும், இரத்தத் திமிரினாலும் அவர்களைக் கடுமையாகத் தாக்கி கடுஞ்சொற்களைக் கூறிவிட்டேன். இன்றைக்கு 61 ஆண்டுகள் ஆயின எனினும் இன்றைக்கும் அதை நினைத்தால் அது எனது உள்ளத்தை வருத்துகிறது.

அச்சுடு சொற்கள் ‘தங்கள் அறிவும், திறனும் உழைப்பும், தமிழர் நலனுக்காகப் பயன்படாமல் அறியாமையின் காரணமாகப் பிறர் நலனுக்குப் பயன்படுகிறது. அத்தவற்றை நானும் செய்யவேண்டுமா? என்பதுதான்.

இதற்காக அவர்கள் எனக்களித்த தண்டனை அவர்களின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று பலமணிநேரம் நிலைமையை விளக்கி எனது கருத்தை மாற்றி அவர் தவறு செய்யவில்லையென மெய்ப்பித்ததுதான்.

– பக் 23 / முத்தமிழ்க் காவலரின் வாழ்த்துகள் / மணவையார் பதிப்பகம்.

வ.உ.சி தேசியப் பற்றிலிருந்து விலகவில்லை என்பதை கி.ஆ.பெ விசுவநாதம் சொல்லக் கேட்டோம். இன்னும் சில விவரங்களைப் பார்க்கலாம்.

  • வ.உ.சி, 1912 இல் சிறையிலிருந்து விடுதலையானார்.
  • 1919 முதல் 1922 வரை அவர் கோயம்புத்தூரில் வாழ்க்கை நடத்தினார்.
  • 1919 இல் சென்னக்கு வந்த திலகரை வ.உ.சி சந்தித்துப் பேசினார்.
  • 1922 இல் வ.உ.சி கோவில்பட்டிக்குக் குடிபெயர்ந்தார். அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
  • 1927 இல் சேலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வ.உ.சி தலைமை உரை ஆற்றினார்.
  • 1928 இல் தொல்காப்பியத்தை உரையுடன் வெளியிட்டார்.
  • 1932 இல் வ.உ.சி தூத்துக்குடிக்கு வந்து வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
  • 1933 இல் தமிழகம் வந்த காந்தியடிகளை வரவேற்பதற்காக நடந்த ஏற்பாட்டுக் கூட்டத்தில் (காரைக்குடி) வ.உ.சி தலைமை தாங்கினார்.
  • 1934 இல் அருள்மிகு திருச்செந்தூர் முருகன் கோவிலில் வ.உ.சி எழுதிய திருக்குறள் அறத்துப்பால் உரை வெளியிடப்பட்டது.
  • 1935இல் சிவஞான போதத்திற்கு உரை எழுதினார்.
  • 1935 இல் தூத்துக்குடி வந்த காங்கிரஸ் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சிதம்பரனாரைச் சந்தித்து நலம் விசாரித்தார். சிதம்பரனார் வாழும் தூத்துக்குடிக்கு வந்தது தமக்குக் கிடைத்த புண்ணியம்’ என்றார் ராஜேந்திர பிரசாத்.

சிதம்பரனாரின் மறைவு பற்றி அவருடைய புதல்வர் சுப்பிரமணியம் கூறுகிறார்:–

‘தந்தையவர்கள் இறுதி நாள்களில் தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்தான் மறையவேண்டும் என்று விரும்பியதும், அங்கு தம்மைக் கொண்டுபோகச் சொன்னதுவும் போய்ச் சில நாட்கள் தங்கி மருத்துவம் பெற்றதுவும் உண்மையே. ஆனால் என் அன்னையார் மற்றும் உறவினர் விருப்பப்படி மீண்டும் இல்லம் கொண்டுவரப்பட்டார்கள். இல்லத்தில்தான் அவர்கள் அமரர் ஆனார்கள்.

 

சிதம்பரனாரின் இறுதிநாள்கள் குறித்து தினமணி வெளியிட்ட செய்தி:–

தூத்துக்குடி தேசபக்தர் ஸ்ரீ வ.உ.சிதம்பரம் பிள்ளை தேகநிலை வர வர மோசமாகிக்கொண்டே வருகிறது. நேற்று முதல் ஒரு கரண்டித் தண்ணீர் கூட இறங்கவில்லை. பேசவும் முடியவில்லை. ஆனால் கை ஜாடை காட்டுகிறார். சென்ற 4 தினங்களுக்கு முன் பாரதியாரின் சுதந்திர உணர்ச்சி ததும்பிய கீதங்களைக் கேட்கப் பிரியப்படுவதாகக் கூறினார். உடனே தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டிக் காரியதரிசி ஸ்ரீ பெ. கந்தசாமி பிள்ளை சில தொண்டர்களை அழைத்து வந்து ஸ்ரீ பிள்ளை முன்னால் நின்று பாடும்படிச் செய்தார். ஸ்ரீ பிள்ளை பாடல்களைக் காது குளிரக்கேட்டு வந்ததைக் கூறுகையில், ‘என்னைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தியவர்கள் முன்னால் நான் சுதந்திர இந்தியாவில் வாழ முடியவில்லையே,’ என்று கூறினார்.

 

வ.உ.சி யின் இறுதி ஊர்வலம் பற்றிய சுதேசமித்திரன் செய்தி இதோ:

அரிய தேசபக்தர் ஸ்ரீமான் வி.ஓ. சிதம்பரம் பிள்ளை தமது இல்லத்தில் காலமானார். நகரமெங்கும் செய்தி சீக்கிரத்தில் பரவி யாவரும் துக்க சாகரத்தில் ஆழ்ந்தனர். துக்கத்தைத் தெரிவிப்பதின் அறிகுறியாக ஆங்காங்கு கறுப்புக் கதர்க்கொடிகள் தொங்கவிடப்பட்டன. மளிகைக் கடை முதலாளிகள் கடைகளை அடைத்தனர். கறுப்புக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட விமானத்தில் ஸ்ரீமான் பிள்ளையின் பிரேதம் பல நூற்றுக்கணக்கான காங்கிரஸ்வாதிகளும் அபிமானிகளும் மௌனமமாகச் சூழ்ந்து வர தேசிய பஜனையுடன் இடுகாட்டிற்குக் கொண்டுபோகப்பட்டது.
– சுதேதமித்திரன் 21.11.1936.

 

வ.உ.சிதம்பரம் பிள்ளை தெய்வ விரோதமாகவும், தேச விரோதமாகவும் உள்ள கட்சியில் சேர்ந்தார் என்பது கலப்படமில்லாத பொய்.

நீதிக்கட்சியினர் முன்வைத்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அவர் ஆதரித்தார் என்பது மட்டுமே உண்மை. ஆனால் அவர் நீதிக்கட்சியிலோ ஈவெராவின் இயக்கத்திலோ தன்னை இணைத்துக்கொள்ளவில்லை.

திருச்சியில் 03.05.1936 இல் கூடிய பிராமணரல்லாதார் மாநாட்டுக்கு அவர் அனுப்பிய செய்தியில் கூட ‘காங்கிரஸ் முன்னேற்றத்திலும் பிராமணரல்லாதார்கள் முன்னேற்றத்திலும் சம அபிமானம் உள்ள என் போன்றவர்கள்’ என்றே குறிப்பிட்டுள்ளார்.

வ.உ.சி எழுதிய தொல்காப்பிய உரையைப் பதிப்பிக்க எவரும் முன்வராத நிலையில் வாவில்ல ராமசாமி சாஸ்திரி என்ற தெலுங்கு பிராமணர் அதை வெளியிட்டார் என்பது ஒரு முக்கியமான செய்தி.

1927 இல் சேலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய வ.உ.சி, ‘தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் மற்றும் தாழ்த்துகின்ற ஹிந்துக்கள்’ என்று பிராமணரல்லாதோரைப் பற்றிச் சொல்கிறார். அதாவது தாழ்த்தப்பட்டோரின் துன்பத்திற்கு பிராமணரல்லாத உயர் சாதியினரும் காரணம் என்பது அவருடைய வாதம். இது ஈ.வெ.ராவின் கோணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எல்லாக் கொடுமைகளுக்கும் பிராமணர்களைக் காரணமாகச் சொல்லிவிட்டு மற்ற சாதியினர் செய்யும் அநீதியைக் கண்டும் காணாமலும் இருப்பது ஈவெரா வின் வழக்கம். வ.உ.சி இந்த வலையில் விழவில்லை.

1934 இல் வெளியிடப்பட்ட திருக்குறள் பதிப்பின் முன்னுரையில் வ.உ.சி எழுதியதைப் பார்ப்போமா?

எனது நண்பர்களில் சிலர் என்னைப் பார்த்து, ‘நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். மகாத்மா காந்திக்கு ஜமன்லால் பஜாஜ் கிடைத்தது போல் உங்களுக்கு ரெட்டியார்கள் கிடைத்திருக்கிறார்கள்’ என்று சொல்வதுண்டு. அதற்கு, “நானும் கடவுள் ஞானத்திலும், தேசபக்தியிலும், பாஷாபிமானத்திலும் குறைந்தவன் அல்லவே,” என்று பதில் சொல்வதுண்டு.

அவருடைய வாய்மொழியாக அவருடைய சார்பு விளக்கப்பட்டு விட்டது. இதற்கு மேலும் இதை வளர்க்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

வ.உ.சிக்கு தென்னாப்பிரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட நிதியை மகாத்மா காந்தி தன்னிடமே வைத்துக் கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. இது தொடர்பான உண்மை இதுதான்–

தென்னாப்பிரிக்காவில் கொடுக்கப்பட்ட தொகை காந்தியிடம் தங்கிவிட்டது. தவறை உணர்ந்த காந்தி அதை வட்டியுடன் கொடுத்துவிடுவதாகச் சொன்னார். மிகவும் வறுமையான நிலையில் இருந்த வ.உசி வட்டியை வாங்க மறுத்துவிட்டு தொகையை மட்டும் பெற்றுக்கொண்டார். இருவரின் சிறப்பும் இதன்மூலம் வெளிப்படுகிறது.

திராவிடர் கழகத் தலைவரான ஈவெரா-வுக்கும் சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும் கடிதப் போக்குவரத்து இருந்ததாக ஒரு தகவல் திராவிடர் கழகத் தரப்பில் சொல்லப்படுகிறது. இது பற்றிய ஆராய்ச்சியை அடுத்த பகுதியில் வைத்துக்கொள்ளலாம்.

— தொடரும்.

மேற்கோள் மேடை:

Swami Vivekananda
Swami Vivekananda

வேதத்தின் எந்தப் பகுதியில் எந்த சூக்தத்தில் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது?  இங்கிருந்த பழங்குடியினரை அவர்கள் கொன்றொழித்தார்கள் என்ற கருத்து எப்படி உருவானது? இந்த மாதிரியான முட்டாள்தனமான செய்திகளைப் பரப்புவதால் என்ன பயன்?

– சுவாமி விவேகானந்தர்.

 
— தொடரும்.

 

நண்பர்களுக்கு,

நாம் 40வது பகுதியில் இருக்கிறோம். 45 பகுதிகளோடு முதல் பாகம் நிறைவடையும். இரண்டாம் பாகம் அதிலிருந்து ஒரு மாதம் கழித்துத் தொடங்கும். இடைப்பட்ட அந்த ஒரு மாதத்தில் இரண்டாம் பாகத்துக்கான தரவுகளைச் சேகரிக்கப் போகிறேன். முதல் பாகத்தைப் புத்தகமாகக் கொண்டுவருவதற்கான பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறேன். எல்லா வகையிலும் ஊக்கம் தந்த நண்பர்களுக்கும் தமிழ்ஹிந்துவுக்கும் நன்றி.

5 Replies to “போகப் போகத் தெரியும் – 40: பூகோளத்திலும் முட்டை”

  1. //எதையுமே தலைகீழாகப் பார்ப்பது தமிழகத்தின் பகுத்தறிவுப் பார்வை. சிதம்பரனார் பெயரில் கப்பல் விட்டதற்கு தாங்கள்தான் காரணம் என்று திராவிட கழகத்தினர் சொல்லிக் கொண்டார்கள் சிதம்பரனார் தங்களைச் சேர்ந்தவர் என்றும் தோள்தட்டினார்கள் அவர்கள்.//

    அயோக்கியர்கள். சரித்திரப் புரட்டர்கள் என்றுச் சரியாகத்தான் சொல்லியுள்ளார் எஸ்.ஆர்.கே.

    கடவுள் பக்தியும் தேச பக்தியும் ஒருங்கே கொண்டிருந்த சிதம்பரனார் இந்தத் தேச விரோதிகளைச் சேர்ந்தவர் என்றால் முட்டாள் கூட நம்பமாட்டான்.

    சிதம்பரனார் பெயரில் கப்பல் விட்டார்களாமா? இவர்களின் சேது சமுத்திரத் திட்டம் தான் சிரிப்பாய் சிரிக்கிறதே! எந்த வகையிலும் நடைமுறைப் படுத்த வாய்ப்பே இல்லாத ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து கடலில் மணல் வாறியே கோடிகள் குவித்தவர்களாயிற்றே! கடல் மண்ணிலும் கயிறு திரிப்பவர்கள்!

    சரித்திரப் புரட்டர்கள் மட்டுமல்ல, பூகோளப் புளுகர்களும் கூட என்று புரிய வைத்துவிட்ட்டீர்கள்.

    தங்களின் முதல் பாகம் விரைவில் புத்தக வடிவமாக வெளி வர வாழ்த்துக்கள்.

    நன்றி, அன்புடன்,

    B.R.ஹரன்.

  2. பொய்யர்களின் பேச்சை மட்டுமே கேட்டு வளரும் வாய்ப்புள்ள எங்களைப்போன்றவர்களுக்கு பல உண்மைகளை வெளிப்படுத்து அறியத்தருகிறீர்கள். மிகவும் நன்றி.

  3. முதல் பாகம் விரைவில் புத்தக வடிவமாக வெளி வர வாழ்த்துக்கள்.

    நன்றி, அன்புடன்,

    SEEMACHU

  4. //மாஸ்கோவுக்குப் போவேன், மாலங்கோவைப் பார்ப்பேன்’ என்று மானாவுக்கு மானாபோட்டு எழுதி மதிமயக்கத்தில் இருப்பதுதானே இவர்களுடைய சித்தாந்தம்.// – மானங்கெட்ட மடையர்கள் தீராவிடம் பேசுபவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *