புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு

குமரி மாவட்டம். வெள்ளிமலைச்சாரலின் அடிவாரம்….மாலை வேளை தொலைவில் கேட்கிறதா உங்களுக்கு? ஹிந்து வித்யா பீட மாணவர்கள் பாடுகிறார்கள். “அகணித தாரா கணங்களின் நடுவே ஆதி பராசக்தி ஆடுகிறாள்…”

அவர்களில் எவரும் தொலை நோக்கி மூலமாக வானத்தை பார்த்தவர்களில்லை. ஆனால் தன் வாழ்நாள் முழுவதையும் வானோக்கி மூலமாக விண்மீன்களை காண்பதிலேயே செலவிட்ட ஒரு விஞ்ஞானி இதே முடிவுக்கு வந்து ஏறக்குறைய இதே வரிகளை கூறுகிறார் என்றால்…மேற்கத்திய மரபின் புனித பயணம் அது என்று சொல்லலாம். வான் நோக்கியின் நானூறு ஆண்டுகால புனிதபயணம் – பிரம்மத்தை வான்வெளியில் தரிசிக்க. galileo“Whereas you, Galileo, the son of the late Vincenzo Galilei, Florentine, aged seventy years, were in the year 1615 denounced to this Holy Office for holding as true the false doctrine…..” இன்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் ஒரு முக்கியக் கருத்தியல் புரட்சிக்கான தொழில்நுட்ப விதை போடப்பட்டது. அதிகமாகப் பெயர் அறியப்படாத ஒரு கணிதப் பேராசிரியர், தான் வடிவமைத்த ஒரு பொருளை நகர சபையாரின் முன்னால் வைத்தார். சில அடிகளே உள்ள, மரத்தாலான குழாயின் உள்ளே ஆடிச்செல்லுகளை வைத்து செய்யப்பட்ட அந்த அமைப்பு, விரைவில் மேற்கின் கருத்தியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என யார்தான் நினைத்துப் பார்த்திருக்க முடியும்? ஆம். நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் கலிலியோ கலிலி என்கிற கணிதப் பேராசிரியர் தமது வான் நோக்கியை வெனீஸ் நகரின் நகரசபையாருக்கு சமர்ப்பித்தார்.

ஆனால் அது அன்று வான் நோக்கியாக வாங்கப்படவில்லை. தொலைநோக்கியாக குறிப்பாக, கப்பல் படையெடுப்புக்களைப் பார்க்கும் இராணுவ உபகரணமாகத்தான் வாங்கப்படவிருந்தது. அறிவியலின் வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் இன்றைய வரலாற்று ஆசிரியர்கள், ’தொலைநோக்கியை முதன் முதலாக வானத்தை நோக்கி திருப்பி வான் ஆராய்ச்சி செய்தவரும் கூட கலிலியோ அல்ல’ என்கிறர்கள். ஆனால் கலிலியோவின் முக்கியத்துவம் அவர் முதன் முதலாக தொலைநோக்கியை இரவு வானின் விண்மீன்களையும் கிரகங்களையும் நோக்கும் கருவியாக பயன்படுத்தினாரா என்பதில் இல்லை. 1610 இல் அவர் தொலை நோக்கியை வான் நோக்கியாகப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றிருந்ததுடன், தாம் கண்டவற்றை ஒழுங்காகப் பதிவு செய்தார். galileo_galilei_discorsi_e_dimostrazioni_matematiche_intorno_a_due_nuove_scienzeஅதன் அடிப்படையில் வானத்தில் கோள்களின் இயக்கங்கள் குறித்து கணிக்கவும் செய்தார். முக்கியமாக, 1610 ஆம் ஆண்டு அக்டோ பர் 1 முதல் டிசம்பர் 30 வரை வெள்ளி கிரகத்தின் வளர்கலை-தேய்கலைகளை அவர் கவனித்து வரைபடங்களாக்கினார். தாலமியின் புவி மையக் கோட்பாட்டின் (Geo-centric theory) அடிப்படையில் வெள்ளியின் கலைகளை விளக்க முடியாது என உணர்ந்த கலிலியோ இதன் அடிப்படையிலேயே கோப்பர்நிக்கஸின் சூரிய மையக்கோட்பாட்டினை ஆதரித்து நூல் எழுதினார். பின்னர் நடந்தவை வரலாற்றின் முக்கிய மைல்கற்கள். அடிப்படை வாத மேற்கத்திய மதத்துடன் அறிவியலுக்கு ஏற்பட்ட மோதல் இன்றைக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று வானியலை பள்ளிச் சிறார்களுக்கும் சாதாரண மக்களுக்கும் கொண்டு செல்வது முக்கியமான விஷயமாகத்தான் இருக்கிறது. பிரபஞ்சமெங்கும் வெளிப்படும் அழகிலும் ஒழுங்குணர்விலும் ஒரு இறைத்தன்மையை உணருவதன் மூலம் பெறும் ஆன்மிக அனுபவம் அது. மத எல்லைகளைத் தாண்டி மானுடத்தை சிருஷ்டியுடன் இணைக்கும் ஆன்மிகம் அது. அறிவியலைப் பொது பிரக்ஞைக்குக் கொடுப்பது ஆரோக்கியமான சமுதாய சூழ்நிலை உருவாக முக்கியமான தேவை. இதில் பெரிய பங்காற்றியுள்ள ஒரு ஆளுமை ஜான் டோப்ஸன் (John Dobson). “விண்மீன் துறவி” (Star Monk) என அழைக்கப்படும் ஜான் டோப்ஸன் (John Dobson) இராமகிருஷ்ண மடத் துறவியாக இருந்து வானியலாளர் ஆனவர்.

johndobson2002
John Dobson

இன்றக்கும் தென் கலிபோர்னிய வேதாந்த நிறுவனத்தில் வானியல் மற்றும் பிரபஞ்சவியல் குறித்து ஆண்டுக்கு இருமாதங்கள் வகுப்புகள் எடுக்கிறார் தொண்ணூறு அகவையைத் தாண்டிய இந்த மாமனிதர். இவரது மிகப்பெரிய வாழ்நாள் சாதனை அனைவராலும் எளிதாக பயன்படுத்த முடிந்த, விலை குறைவான, சக்தி வாய்ந்த வான்நோக்கிகளை உருவாக்கியது. டோப்ஸன் வான்-நோக்கி (Dobson Telescope) என அழைக்கப்படும் இவர் வடிவமைத்த தொலைநோக்கிகளே அமெரிக்காவில் இளைய தலைமுறையினரிடையே வானியலில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் உந்து சக்தியாக அமைந்தது. இன்று அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகெங்கிலும் அவர் உருவாக்கிய “நடையோர வானியலாளர்கள்” (sidewalk astronomers) என்ற பொதுஜன வானியல் ஆர்வலர்கள் அமைப்பு பரவியுள்ளது. ஜான் டோ ப்ஸன் வானியலுக்கும் அதனூடாக நவீன இயற்பியல் காட்டும் பிரபஞ்ச தரிசனத்துக்கும் வேதாந்தத்துக்குமான இணைத்தன்மை குறித்து கூறுவதை கேளுங்கள்:

அனைத்தின் அடிப்படையான இருப்பினை, காலமும் வெளியுமாக வெளிப்படும் அதனை அன்னையாகக் கண்டார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். நாம் எதையும் செய்யவில்லை அனைத்தியக்கத்திலும் அன்னையே செயல்படுகிறாள்.

பார்க்க: சுவாமி விவேகானந்தரின் கவிதை “அன்னை காளி”

டோப்ஸன் லாவோட்ஸை மேற்கோள் காட்டுகிறார்: அவளில் சரண் புகுந்தேன் இப்போதும் என்றென்றும் அவளுக்கே தலை வணங்குவேன்.

சில கணங்களில் ஜான் டோப்ஸனின் அறிவியல் இசைதுதியாகவே மாறுகிறது:

அன்னையே ஹைட்ரஜன்! அன்னையே அகணித தாரா கணங்கள்! கடும் உலோகங்களை உதிர்ப்பவள் அவளே. பாறை மேலோடுகள் கொண்ட கிரகங்களாகுவதும் அவளே. அவளே புவியெங்கும் தாதுக்களானாள். அவற்றை சேகரித்து நம்மை ஜனித்தாள். சூரிய ஒளியாகி தாவரங்கள் மேல் தகித்தாள். பிராணவாயு வெளியேறியது. தாவரங்களை நாம் புசித்தபடி இப்பூமியின் பரப்பெங்கும் நாம் அவசர அவசரமாக ஓடுகிறோம். நமக்கு எல்லாம் தெரியுமென்ற எண்ணம். ஆனால் அனைத்துமாகி நிற்கும் அவளது ஆட்டத்தில் நாம் ஒரு அங்கமென்பதை மறந்தோம். காலத்திலும் வெளியிலும் மாற்றமற்ற அது தன்னை வெளிப்படுத்தவில்லையெனில் அசைவற்றத்தன்மையென்றொன்று இருக்குமா? அது இல்லையெனில் மின்சாரம் இருக்குமா? அபின்னமான அது தன்னை வெளிக்காட்டவில்லையெனில் ஈர்ப்புப் புலமும் எதிரெதிரானவையிடம் ஈர்ப்பும் இருக்குமா? இருமையிலிருந்து பன்மை வரவில்லையெனில் நமக்கு தனிமங்களின் அணு எண் அட்டவணை கிட்டியிருக்குமா? பன்மையினை இருமை பேணாவிடில் அணுக்கள்தாம் இருக்குமா? இப்படித்தான் நான் பிரபஞ்சத்தை பார்க்கிறேன். வெளி என்பது பலவற்றை பிரிக்கும் ஒன்றல்ல. ஒன்றானதை பலவானது போல காட்டிடும் ஒன்று. அவ்வெளியில் அந்த ஒருமை ஒளிர்கிறது அவ்வொளி எங்கும் எதிலும் பிரகாசிக்கிறது. [ஜான் டோப்ஸன், பிப்ரவரி 28 2002]

நிறுவன கிறிஸ்தவத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு புனித புயணத்தின் பரிணாம வளர்ச்சி இன்று பாரதத்தின் வேதாந்த மரபினில் இசைவு பெறுவது பொருத்தமான விஷயம் தான. ஆம் அறிவியலை பாட முடியும் – இங்கு இந்த மண்ணின் கலாச்சாரத்தில் இந்து மண்ணின் ஆன்மிகத்தில் – கவிதையாக இறைத்துதியாக…எளிய பஜனைப் பாடலாகக்கூட:

அகணித தாரா கணங்களின் நடுவே
ஆதி பராசக்தி ஆடுகிறாள்
சகல சராசரத்தும் தங்க சிலம்பொலிக்க
ஜெகதீஸ்வரி அவள் ஆடுகிறாள்
அகிலாண்டேஸ்வரி ஆடுகிறாள்

அகில உலகில் உள்ள ஆருயிர் இனங்களும்
ஆழப்பெருங்கடலில் வாழுயிர் இனங்களும்
அன்றன்றுணவு கொள்ள அத்தனைக்கு தந்தருளி
அன்னபூர்ணேஸ்வரி ஆடுகிறாள்
ஆதி பராசக்தி ஆடுகிறாள்

10 Replies to “புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு”

  1. அரவிந்தன், அற்புதம்! டாப்ஸனின் வரிகள் பெரும் புத்துணர்வும் உவகையும் ஏற்படுத்துகின்றன. வானியலை வெகுஜன அளவில் கொண்டு செல்லும் அமைப்புகள் இந்தியாவில் பெருக வேண்டும்.

    மக்களை கருத்துக் குருடர்களாக்கும் சோதிடம் என்ற போலிக் கருத்தாக்கத்தின் பின் சென்று ஏராளமான பணம் செலவழிக்கும் இந்து செல்வந்தர்கள், அதற்குப் பதிலாக இத்தகைய எளிய, விலைகுறைந்த வான் நோக்கிகளை வாங்கி (இவை அமெரிக்காவில், ஐரோப்பில் கடைகளிலேயே கிடைக்கும்) பள்ளிகளுக்குப் பரிசளிக்கலாம். பிரபஞ்ச சக்தியை உணர, அனுபவிக்க அவை உண்மையிலேயே துணை செய்யும்.

    பாரதி அறிவியலாளன் அல்ல, கவிஞன்.. ஆயினும் இதே பிரபஞ்ச தரிசனத்தைக் கண்டடைகிறான் –

    விண்டுரைக்க அறிய அரியதாய்
    விரிந்த வான வெளியென நின்றனை
    அண்ட கோடிகள் வானில் அமைத்தனை
    அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
    மண்டலத்தை அணு அணுவாக்கினால்
    வருவதெத்தனை அத்தனை யோசனை
    கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை
    கோலமே நினைக் காளியென்றேத்துவேன்

    நிலத்தின் கீழ் பல் உலோகங்களாயினை
    நீரின் கீழ் எண்ணிலா நிதி வைத்தனை
    தலத்தின் மீது மலையும் நதிகளும்
    சாரும் காடும் சுனைகளுமாயினை
    குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம்
    கூட்டி வைத்துப் பலநலம் துய்த்தனை
    புலத்தை ஈட்டி இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே !
    போற்றி போற்றி நினதருள் போற்றியே.

    (பார்க்க: பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள் – https://jataayu.blogspot.com/2006/12/blog-post_14.html)

  2. கட்டுரை புரியும்படி நன்றாக எழுதி இருக்கிறீர்கள். விஞ்ஞானி டாப்சன் குறித்து அறிந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி. ஆன்மீகவாதிகள் தான் விஞ்ஞானம் ஆன்மீகத்துக்கு இசைந்து போகிறது என்று சொல்வார்கள். ஒரு விஞ்ஞானியே இவ்வாறு சொல்வது ஆச்சரியம். தொடர்ந்து இது போன்ற மாமனிதர்களை அறிமுகப் படுத்துங்கள்.

  3. Arvindan,

    Excellent.. I was listening to Swami Paramarthanandas Bhagawat Gita . He was talking about Karma yoga and explaining how Vendanta never discard Human Intellectual. While explaining that he mentioned ” I am speaking to you using this microphone. Yes we appreciate and enjoy this invention.. But this microphone is made possible because of the potential called Natural Laws. Hence every Human Intellectual based invention is possible because of existing potential “.

    Regards
    S Baskar

  4. வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யா பீட சமய வகுப்பை வலையில் அறிமுகப்படுத்திய ஆசிரியருக்கு நன்றி .
    கோதையின் திருப்பாவை மழை பெய்வது பற்றி அழகாக பாடுகிறது
    ஆழி மழைக்கண்ணா ஓன்று நீ பார்க்கவும்
    தாயுமானவர் அண்டப்பகுதி உண்டைப்பெருக்கம் ……………. நூற்றோருகொடியின் மிகுபட விரியும் என்றார்
    இதிலெல்லாம் இருக்கும் விஞ்ஞானத்தை யார் ஆராய்ந்து வெளிக்கொணர்வார்கள்

  5. ஆர்வமூட்டும் கட்டுரை. வானியல் தரும் பரவச அனுபவம், இயற்கையின் பிரம்மாண்டம் புலப்படும் அந்த கணத்தில் பரவும் அந்த ஒரு அமைதி உண்மையிலேயே அற்புதமானது.
    விஞ்ஞானி டாப்சன் பற்றிய தகவலுக்கு நன்றி .

  6. //நிறுவன கிறிஸ்தவத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு புனித புயணத்தின் பரிணாம வளர்ச்சி இன்று பாரதத்தின் வேதாந்த மரபினில் இசைவு பெறுவது பொருத்தமான விஷயம் தான. ஆம் அறிவியலை பாட முடியும் – இங்கு இந்த மண்ணின் கலாச்சாரத்தில் இந்து மண்ணின் ஆன்மிகத்தில் – கவிதையாக இறைத்துதியாக…எளிய பஜனைப் பாடலாகக்கூட://

    நல்ல வரிகள். ஆன்மீகமும், அறிவியலும் இனைந்து உண்மையை உனர்த்தட்டும்.

  7. it is sho cking to read what is being broadcast by sun tv we live in france; so only thru your website we came to know about it; one has to publish small leaflets and distribute it on streets or keep them in small hotels/restaurants esply in small towns.

  8. ” ஜடாயு on December 11, 2009 at 8:24 am

    மக்களை கருத்துக் குருடர்களாக்கும் சோதிடம் என்ற போலிக் கருத்தாக்கத்தின் பின் சென்று ஏராளமான பணம் செலவழிக்கும் இந்து செல்வந்தர்கள்,”-

    அன்புள்ள ஜடாயு ,

    மக்களை கருத்து குருடர்களாக்குபவை எவ்வளவோ. ஜோதிடம் மக்களுக்கு நல்வழி காட்ட உருவானதே ஆகும். சில சோதிடர்கள் பொருளாசை மற்றும் பேராசை காரணமாக மக்களை தவறான பாதையில் அழைத்து செல்கின்றனர். எனவே, ஜோதிடம் என்பதை ஒட்டுமொத்தமாக ஒரு போலிக்கருத்தாக்கம் என்று சொல்வது சரியல்ல.

    கவலயில் ஆழ்ந்திருப்பவருக்கு சிறிது வாழ்வியல் நம்பிக்கையை தருவதற்காகவும் , இருண்ட சூழலில் இருப்பவனுக்கு சிறிது ஒளி கொடுத்து அவனை கைதூக்கி விடுவதற்கும் தான் ஜோதிடத்தினை நம் பெரியவர்கள் உருவாக்கினர். ஜோதிடம் ஒரு அற்புதமான வாழ்வியல் கலை. சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒரு துறையை ஒட்டு மொத்தமாக குற்றம் செய்வது கூடாது.

  9. “அண்டம் சுருங்கினில் அதற்கொரு அழிவில்லை.
    பிண்டம் சுருங்கினில் பிராணன் நிலைபெறும்.
    உண்டி சுருங்கினில் உபாயம் பல உள”

    என்று ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முன்பு எழுதிய திருமூலரைப் போன்ற ஒரு விஞ்ஞானி இருக்க முடியுமா? அவர் அந்நாளில் எந்த தொலைநோக்கியை உபயோகித்திருக்கக் கூடும்? அவரே இறுதியில் இந்தப் பாடலை
    “கண்டம் கருத்த கபாலியுமாமே” என்று முடித்தார்.

    எந்த வித அறிவியல் உபகரணங்களும் பெரிய அளவில் அபயோகப் படுத்தப் படாத அந்தக் காலத்திலும் நம் மாபெரும் ஞானிகள் வியக்கத்தக்க அறிவியல் உண்மைகளை மிக சுலபமாக கண்டறிந்துள்ளனர்.
    “அண்டம் சுருங்கினில் அதற்கொரு அழிவில்லை” என்னும் இந்த ஓரடி The Universe is ever expanding என்னும் Big Bang theory ஐ ஒத்துப் போகிறது. மேலே கூறப்பட்டுள்ள John Dobson மற்றும் Stephen Knapp போன்றோர் மென்மேலும் ஹிந்து மதக் கோட்பாடுகளை ஆணித்தரமாக நிறுவ வல்ல கண்டுபிடிப்புகளை கண்டறிவார்கள். நாமும் நம் பங்கிற்கு சும்மா அரசியல் ரீதியாக நம் மத எதிர்பாளர்களுக்கு பதில் சொல்வதிலே காலத்தைக் கழிக்காமல் இது போன்ற ஆராய்ச்சிகளில் இறங்க முற்படுவோரை மென்மேலும் ஊக்குவித்து சாதனை புரிய வித்திடுவோம். கட்டுரை வழங்கிய அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு அன்பு நன்றிகள்.

  10. ஐயா
    இந்த பாடல் அகத்தியர் இயற்றியது. ஸ்ரீ gnaananada தபோவனத்தில் பாடப்படுகின்றது. அன்றே அகத்தியர் பிரபஞ்ச ரகசியத்தை அறிந்திருந்தார்.
    இதைப்போல் பல கருத்து மிக்க பாடல்கள் தபோவன வழிபாட்டு பாடல்களாக
    அமைந்துள்ளது. நன்றி.

    ந.ர.ரங்கநாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *