பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2

மூலம்: எம்.டி.நளபத்
தமிழில்: ஆழிநோக்கி

முந்தைய பகுதி

nicolassarkozy1பிரேசில், வியட்நாம், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட உயர்ந்த தரம் கொண்ட பொருட்களை வளர்ச்சி அடைந்த நாடுகள் பல ஏற்றுக்கொள்வதில்லை. அந்த நாடுகள் எல்லாம் தங்களை தற்காத்துக்கொள்ள முயல்கின்றன. தற்காத்து கொள்வதில்கூட தவறு இருப்பதாகச் சொல்லமுடியாது. ஆனால் கரிம வெளியேற்றம் என்று கூறி வர்த்தகத்தடையை உருவாக்கி வளரும் நாடுகளை தலையெடுக்கவிடாமல் செய்துவருவதிலேயே வளர்ந்த நாடுகள் குறியாக உள்ளன. பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியும் அமெரிக்காவை சேர்ந்த செனட்டர்கள் பலரும் இப்படி தடைவிதிப்பதில் முன்னணியில் உள்ளனர்.

jairamபருவ நிலை மாற்றம் என்பதை சாக்காகப் பயன்படுத்தி வளரும் நாடுகளை வளர்ந்த நாடுகள் நசுக்குவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. இதற்காக ஜி-77 மற்றும் பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்த நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் முனைப்புடன் உள்ளார். இந்த நாடுகளுடன் சீனாவும் கைகோர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். விரிவாக்கப்பட்ட இந்த குழு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும். எப்படி ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளின் நலனைப் பார்க்க உறுதியாக உள்ளதோ அதைப்போல இந்தியா, பிரேசில் தென் ஆப்பிரிக்கா, சீனா ஆகியவையும் உறுதியாக இருக்கவேண்டும். டென்மார்க்கை பொருத்தவரை அது வளரும் நாடுகளுக்குச் சாதகமாக இல்லை என்றே கூறலாம். சீனாவையும் இந்தியாவையும் நெருக்கடி கொடுத்து பணியவைக்க வளர்ந்த நாடுகள் முயற்சிக்கின்றன.

டென்மார்க் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் பார்ப்போம். டென்மார்க்கின் காலனியாக கிரீன்லாந்து உள்ளது. அங்குள்ள சுதேசி மக்களிடையே மதுப்பழக்கம் அதிகமாக உள்ளது. அதேபோல தற்கொலை செய்துகொள்ளும் சதவீதமும் அதிகம் உள்ளது. அமெரிக்காவில் காணப்படும் தற்கொலை அளவைவிட கிரீன்லாந்தில் தற்கொலை அளவு 25% அதிகமாகும். 31% பெண்கள் தங்கள் வாழ்வில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் டென்மார்க் அரசு கண்டுகொள்வதே இல்லை. மனித உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகளின் கவனத்தை இது ஈர்க்கவில்லையா? அமெரிக்காவில் உள்ள அமைப்புகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அமைப்புகளும் கிரீன்லாந்து விவகாரத்தில் மௌனம் சாதித்து வருகின்றன. ஆப்பிரிக்காவில் பிரான்ஸ் ராணுவத்தின் தலையீடு உள்ளது. ஆதிக்கம் உள்ளது. கிரீன்லாந்து மக்களும் பிரெஞ்சு ஆப்பிரிக்க மக்களுக்கும் நீதிகிடைக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பது யாருக்கும் தெரியாது.

கோபன்ஹேகன் மாநாட்டின் தோல்வி என்றால் இந்த மாநாடு கரிம வெளியேற்றத்துக்கு அப்பால் எதையும் பார்க்கத் தவறிவிட்டது என்பதுதான். கரிம வெளியேற்றத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. இதேபோல எத்தனையோ மோசமான செயல்பாடுகள் காரணமாக புவிமாசுபடுகிறது. குறிப்பாக கார்பனைவிட மீத்தேன் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆர்டிக் பகுதியிலிருந்தும் சைபீரியா பகுதியிலிருந்தும் மீத்தேன் வெளியிடப்படுகிறது. உறைபனி படிப்படியாக உருகத் தொடங்கிவிட்டது, உணவுக்காக மிருகங்களை வளர்ப்பதற்கு அதிக செலவாகிறது. அதுமட்டுமல்லாமல் அதனால் அதிக பாதிப்பும் ஏற்படுகிறது. உதாரணமாக ஒரு பவுண்டு மாட்டுக்கறியை உற்பத்தி செய்ய 2, 700 கேலன் தண்ணீர் செலவாகிறது. 9 பவுண்டு உணவு தானியம் தேவைப்படுகிறது.
algoreநோபல் பரிசு வென்ற அல்கோர் சுற்றுச்சூழலை பாதிப்புக்கு இலக்காக்குவதில் அசைவ உணவின் பங்கை கணக்கில் எடுத்துக்கொள்ள முன்வரவில்லை. அசைவ உணவை உண்பதால், அசைவ உணவை உருவாக்குவதால், அதை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்து, செல்வதால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடுகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களை உரிய முறையில் திருத்திக் கொள்ளாமல் வளரும் நாடுகளுக்கு உபதேசம் செய்கின்றன. வளரும் நாடுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன.

குறைந்த அளவில் மின்சாரம் தேவைப்படுகின்ற அளவுக்கு கட்டிடங்களை வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக கட்டிடக்கலை வல்லுனர்கள் மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய வகையில்தான் கட்டிட வடிவமைப்புகளை உருவாக்கித் தருகிறார்கள். டென்மார்க்கில் ஒரு கலங்கரை விளக்கம் சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் கார்பன் வெளியேறுவதில்லை. கார்பனை வெளியேற்றாத கட்டிடங்கள் கட்டப்படுவதை ஊக்குவிக்கவேண்டும். கார்பனைத் தாண்டி வளரும் நாடுகள் மீது குறை சொல்வதைத் தாண்டி இந்தியா நோக்கவேண்டும். செயல்படவேண்டும்.

arctic_snowஅல்கோரும் அவரது ஆதரவாளர்களும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுக்கு நெருக்கடி கொடுப்பதை நாம் முறியடிக்கவேண்டும். அல்கோரின் உணவும் அவரின் பிரயாண ஏற்பாடுகளும் பருவ நிலையை காப்பதற்கு உகந்த வகையில் இல்லை. பசுமை தொழில்நுட்பங்களை ஏழை, எளிய நாடுகளுக்கு வளர்ச்சி அடைந்த நாடுகள் விற்கப்பார்க்கின்றன. இது மேலோட்டமாகப் பார்த்தால் சிறப்பானதாகத் தோன்றுகிறது. ஆனால் வளரும் நாடுகளின் பொருளாதார முதுகெலும்பை முறிக்கும் வகையில் இவை உள்ளன. கார்பன் வெளியேற்றத்திற்கு இந்தியாவும் சீனாவும்தான் முக்கிய காரணம் என்று வளர்ந்த நாடுகள் நேரடியாகவோ, வெளிப்படையாகவோ குற்றம் சாட்ட முற்பட்டுள்ளன. வளர்ச்சி அடைந்த நாடுகளின் நிபந்தனைகளுக்கு இந்தியாவும் சீனாவும் கட்டுப்பட்டால் இந்த இரண்டு நாடுகளிலும் தொழில் உற்பத்தி பாதிக்கப்படும். 60 கோடி மக்கள் வறுமைக் கடலுக்குள் ஆழ்த்தப்படுவார்கள்.

ஆர்டிக் பகுதியிலும் சைபீரியா பகுதியிலும் உறைபனி உருகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு மீத்தேன் தான் காரணம். ஏனெனில் பெரும்பாலான வளர்சி அடைந்த நாடுகளின் பெரும்பாலோனோர் உணவுகளில் மாமிசத்திற்கு முக்கிய இடம் உண்டு. இந்த உலகைக் காக்கவேண்டும், ஆனால் அசைவ உணவு பழக்கத்தை தவிர்க்க வேண்டும். சைவ உணவு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று ராஜேந்திர பச்சோரி கூறியது மிகவும் சரியானது. கோடான கோடி மக்கள் புகை பிடிப்பதை தவிர்க்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல அவர்களை சைவ உணவின் பக்கம் திருப்பவும் தீவிர பிரச்சாரம் செய்யவேண்டும். புகைப்பிடிப்பதற்கு எதிரான பிரச்சாரம் நல்ல பலனைத் தந்துள்ளது. கோடிக்கணக்கானோர் இந்த தீய பழக்கத்தை விட்டுவிட்டனர். இதே போல அசைவ உணவு பழக்கத்தையும் பல கோடி மக்களை விட்டொழிக்கச் செய்யவேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்திலும் வட அமெரிக்காவிலும் உள்ள மக்களைப் பற்றி அந்தந்த நாடுகளில் உள்ள அரசுகள் குறைவாக மதிப்பீடு செய்துள்ளதாகத் தெரிகிறது. அங்குள்ள மக்கள் புகைப் பிடிப்பதை நிறுத்துவதிலும் சைவ உணவையே உட்கொள்வது என்பதிலும் அக்கறைக் காட்ட தொடங்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள கடல்கள் இனிமேல் கார்பனை கிரகித்துக் கொள்ள முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டன. எனவே அமெரிக்க அதிபர் ஒபாமா போன்றவர்கள் சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப செயல்படவேண்டும். கார்பனைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கக் கூடாது.

அப்படி பேசிக்கொண்டிருந்தால் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளை நசுக்குவதற்காக வளரும் நாடுகள் இதை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கும். வளர்ந்த நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளைப் பின்பற்றினால் சீனாவால் தாக்குப்பிடிக்க முடியாது. மற்ற வளரும் நாடுகளும் கடும் பாதிப்புக்கு இலக்காகும். இப்போது உள்ள வனப்பரப்பை 15% அதிகரித்தாலே பூமியை காப்பாற்றிவிட முடியும். தீய வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும். இதை செய்வதற்கு பதிலாக சீனா தொழில் வளர்ச்சியில் ஈடுபடக்கூடாது என்று முட்டுக்கட்டைப் போட்டால் எதிரிடையான விளைவுகள்தான் ஏற்படும்.

வீட்டில் ஒரு வேப்பமரம்

காடுகளில்தான் மரங்களை நடவேண்டும் என்று எண்ணக்கூடாது. அவற்றை சாலையோரங்களில் நடலாம். வீட்டு மாடிகளில் அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களில் செடிகளை நடலாம். உலகம் முழுவதும் பசுமை மயமாக இருக்கவேண்டும். வனப்பரப்பை அதிகரிப்பதுடன் மற்ற இடங்களிலும் மரங்களை வளர்க்கவேண்டும். கார்பனை இனிமேல் கிரகித்துக்கொள்ள முடியாது என்ற நிலைக்கு கடல்கள் வந்துவிட்டன. இதையும் நாம் மாற்றியமைக்கவேண்டும். இதை மாற்றியமைக்க கடல்களில் கடற்பூண்டுகளை வளர்க்க வேண்டும். ஆனால் கோபன்ஹேகன் செயல்திட்டத்தில் இதைப்பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஏனெனில் இந்த நடவடிக்கைகளால் பெருநிறுவனங்களுக்கு ஆதாயம் இல்லை. பசுமையின் பெயரால் வர்த்தகத் தடைகளை விதிப்பதாலும் அதிக செலவு பிடிக்கக்கூடிய தொழில் நுட்பங்களைத் திணிப்பதாலும் வளர்ந்த நாடுகள் மேலும் மேலும் பயன்பெறமுடியும்.

இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகியவை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். எல்லா இடத்துக்கும் ஒரே தீர்வு பொருந்தும் என்று எண்ணக்கூடாது. சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு மாறுபடும். இதில் நெகிழ்வுடன் நடந்துகொள்ள வேண்டும். அதிக செலவு பிட்க்கக்கூடிய தொழில் நுட்பங்களைப் பொருத்தமில்லாத இடங்களில் பயன்படுத்தினால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும்.

கோபன்ஹேகனில் சொகுசு ஓட்டல்களில் தங்கியுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் பிரதிநிதிகள் தங்களது கவனத்தில் மகாத்மா காந்தியின் செய்தியை கொள்வார்களேயானால் இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு சுலபமாக கிடைக்கும். நீங்கள் ஏதேனும் ஒரு காரியத்தைத் தொடங்கினால், நீங்கள் இதுவரை சந்தித்துள்ள ஏழைகளில் பரம ஏழையாக உள்ளவருக்கு அதனால் பயன்கிடைக்குமா? என்று சிந்தித்து பார்த்து காரியத்தை தொடர்ந்து நிறைவேற்றுங்கள் என்பதுதான் மகாத்மா சொன்ன அறிவுரை ஆகும். கோபன்ஹேகன் மாநாடு வளர்ச்சி அடைந்த நாடுகளைப் பாதுகாக்கின்ற அரணாக நின்றுவிடக்கூடாது. ஏழை, எளிய மக்களின் வாழ்வை உயர்த்தவேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். பல்வேறு நாடுகளில் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பங்களைத் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெருநிறுவனங்களின் ஏகபோக உரிமையாக உள்ள அதிக செலவு பிடிக்கக்கூடிய தொழில் நுட்பங்களை திணிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கக்கூடாது. வளரும் நாடுகளை நசுக்கிவிட்டு உயர்ந்தோங்க வளர்ந்த நாடுகள் முயற்சிப்பதை ஏற்க முடியாது. வளர்ந்த நாடுகல் தங்கள் நலனைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டினால் வளரும் நாடுகள் இதற்கு எதிராக அணிதிரள்வதைத் தடுக்கமுடியாது.

(முற்றும்)

நன்றி: விஜயபாரதம் (1-1-2010) இதழ்

2 Replies to “பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2”

  1. எத்தியோப்பியாவில் நடத்தலாம். :)) ஏழை நாடு, விசா செலவு என்பதெல்லாம்
    அபத்தமான காரணங்கள். கோஷம் போட கூட்டம் கூட்டமாக வர விசா எளிதில் கிடைக்கவில்லை என்பதற்காக சொல்லப்படும் சப்பாணிக் கருத்துக்கள்.

    கோபன்ஹேகனில் நிகழ்ந்தது ஒரு நல்ல சாவு. நான் எதை எதிர்பார்த்தேனோ/ விரும்பினேனோ அது நடந்தது- ஐரோப்பிய சதி இந்தியா+சீனாவால் முறியடிக்கப்பட்டது. வளரும் நாடுகள் என்ற வகையில் இருந்து விலக்கி சீனாவுக்கு ”நன்கொடை” (அது ஒன்றும் நன்கொடை கிடையாது- ”கையூட்டு”) தருவதை அவாய்ட் செய்யலாம் என்று திட்டமிட்ட அமெரிக்க, ஐரோப்பிய சதி தோற்றது. இது மட்டும் நடந்திருந்தால் இந்தியாவை எளிதாகப் பணிய வைத்திருக்க முடியும். இந்தியா மட்டுமே தனியாளாய் வளர்ந்த நாடுகளின் கைமுறுக்கலுக்கு தாக்குப்பிடிக்க முடிந்திருக்காது. சில ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட்ட்கள், சில ஐநா பதவிகள், சில மிரட்டல்கள் என்று இந்திய அரசியல் தரகர்களை எளிதாக விலைக்கு வாங்கியிருக்க முடியும். நம் பொருளாதார வளர்ச்சிக்கு வளர்ந்த நாடுகளுக்குக் கப்பம் கட்டும் திட்டம் உறுதியாகி இருக்கும். கார்பன் உச்சவரம்பு என்ற நூற்றாண்டு கார்பன் கப்பம் திட்டம் கார்பன் வரியாக எளிய இந்தியனின் காலில் இரும்புக்குண்டாய்ப் பூட்டப்பட்டிருக்கும். நல்லவேளை சீனா வளரும் நாடு என்று தன்னை இந்தியாவுடன் இணைத்துக்கொண்டது. இந்தியாவும் தன் நிலையை அறிந்து சீனாவுடன் கைகோர்த்தது. இது நடந்த மறுகணமே கோபன்ஹேகனின் மரணம் உறுதிசெய்யப்பட்டு விட்டது. ஆயிரம் பேர் கூடி எளிதில் கரையப்போகும் நான் -பைண்டிங் கமிட்மெண்ட் என்ற மண்ணாங்கட்டியைத் தான் கட்ட முடிந்தது என்பதில் எனக்குப் பரம திருப்தி.

    சீனாவுடன் சேர்ந்து கூட்டு அணுஆலை என்பது மிகவும் ரிஸ்கியான விஷயம். இந்தியா உலகத்திலேயே அதிக நிலக்கரி வளத்தைக் கொண்டுள்ள முதல் மூன்று நாடுகளில் ஒன்று. ஆனால் 1% மட்டுமே வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. கார்பன் துகள்களை வடிகட்டும் நவீன தொழில்நுட்பத்தில் கவனத்தையும் உழைப்பையும் இந்தியா செலுத்த வேண்டும். இந்தியாவில் எரிசக்தித்தேவையில் ஆகப்பெரும்பங்கை நிலக்கரிமூலமே நிரப்பிக்கொள்ள முடியும். நிலக்கரி, நீர்மின்நிலையங்கள், சூரியசக்தி ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக வேண்டுமானால் அணுசக்தியை யோசிக்கலாம்- அதன் கழிவுகளைப்போட சரியான இடத்தைத்தேர்ந்தெடுக்க முடிந்தால் (கடல் அல்ல).

    அருணகிரி

  2. அருமையான கட்டுரை! தனி மனிதர்கள் எவ்வாறு இதற்கு என்ன செய்ய முடியும் என்பதயும் எழுத வேண்டும். நண்பர்கள் அனைவரையும் இந்த கட்டுரைகளை படித்து நடக்க முயல வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *