ஏழாம் உலகம் – இரக்கம் கோரும் கொடூரங்கள்

Jeyamohan
ஜெயமோகன்

ஆச்சரியமான விஷயம். முழுக்க முழுக்க பிச்சைக்காரர்களைப் பற்றியே யாரும் நாவல் எழுதுவார்களோ! ஏழை பாளைகளுக்காகவே புரட்சிக்கு ஆயத்தம் செய்துகொண்டு இருப்பதாகச் சொல்லும் தமிழ்நாட்டு முற்போக்காளர்களே கூட பாட்டாளிகளின் அவல வாழ்வைக் கண்டு பொங்கி எழும்போது அதைக் காதல் சிமிழில் வைத்தே எழுதுவார்கள். ஆனால் பிச்சைக்காரர்களின் அன்றாட அவலமே நாவல் முழுதும் விரவியிருக்க ஜெயமோகன் எழுதுகிறார். அவரது நாவல், ஏழாம் உலகம் பழனி கோவிலை நம்பி அதைச் சுற்றி மொய்த்திருக்கும் பிச்சைக்காரர்களைப் பற்றியது. நாமும் எல்லா கோவில் கோபுர வாசல்களிலும், சன்னதித் தெருக்களிலும் மலைப் படிகளிலும் வழிநெடுக பிச்சைக்காரர்கள் மொய்த்திருக்கப் பார்த்திருக்கிறோம். அவர்களைப் பற்றிய நம் நினைப்புகள் எல்லாம், கதியற்றவர்கள், அல்லது சோம்பேறிகள், நம்மில் சிலருக்கு இருக்கக் கூடும் தர்ம சிந்தனைகளை வேண்டுபவர்கள், நம் வேண்டுதல்களை நிறைவேற்றக் கருவியாகிறவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, கை கால் ஊனமுற்றவர்கள், பிழைக்க வழியற்றவர்கள் இப்படி எப்படியோ ஒரு வகை. ஆனால் எப்படியிருப்பினும் அவர்கள் ஏழைகள்; ஒவ்வொரு வேளை பசியாறவும் நம் கைகளை எதிர்ப்பார்த்திருப்பவர்கள்.

ஆனால் ஏழாம் உலகம் நாவலில் நாம் காணவிருக்கும் பிச்சைக்காரர்கள் உலகைத் துறந்தவர்களும் இல்லை. ஏழைமை, அல்லது அங்கஹீனம் காரணமாக பிச்சை எடுக்க வந்தவர்களும் இல்லை. இவர்கள் தொழில் பிச்சைக்காரர்கள். வேலையாகக் கொண்டவர்கள். கோவில் பூசாரிகளால், பூ வியாபாரம் செய்யும் பண்டாரங்களால், பிச்சையெடுக்க அமர்த்தப்பட்டவர்கள். கோவில் பூசாரிகளும், பண்டாரங்களும் இப்பிச்சைக்காரர்களை வைத்து தமக்கு வருமானம் ஈட்டுபவர்கள். ஒரு வகை வியாபாரத்துக்கான உருப்படிகள்.

இவர்கள் பிறவியிலேயே கண் இழந்தவர்களோ, கால் கை விளங்காதவர்களோ அல்லர். குழந்தைகளாக இருக்கும்போதே பிச்சைத் தொழிலுக்காக இவர்கள் சந்தையில் வாங்கப் பட்டவர்கள். பின் பிச்சை எடுக்க தகுதி பெற, கைகால்கள் வெட்டப்பட்டவர்கள். அல்லது கண் விழிகள் பிடுங்கப் பட்டவர்கள். இப்படித்தான் தொழிலுக்குத் தயார் செய்யப்படுகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தின் இரக்கம் எழச்செய்ய வேண்டாமா? வேறு இடங்களில் இவர்களைக் கண்டும் வராத இரக்க சிந்தனைகள் கோவிலுக்குச் செல்லும் பக்தி உணர்வில் கட்டாயம் வருமே. புண்யமுண்டே. மனித சுபாவங்களையும் பலவீனங்களையும் அறிந்தவர்கள் இப்பிச்சைக்கூட்டத்தின் மேலாளிகள். வியாபாரச் சந்தை நுணுக்கங்கள் அறிந்தவர்கள்.

வேலுப் பண்டாரம் குழந்தையின் உடம்பு பூராவும் எண்ணை தடவி வெயிலில் படுக்க வைத்து விடுவான். பின் என்ன? குழந்தை வெயிலில் கிடக்கும் நேரம் முழுதும் வீல் வீல் என்று கதறிக்கொண்டு தான் இருக்கும்.

நாவலின் ஆரம்பப் பக்கங்களிலேயே வேலுப் பண்டாரத்தை நாம் சந்தித்து விடுகிறோம். அவனுக்கு நிறைய கவலைகள். அவனுக்கு திருவிழா சமயத்தில் பழனிக்குப் போயாக வேண்டும். திருவிழா சமயத்தில் சந்தைக்கு உருப்படி தயாராக வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்தாயிற்று. முத்தம்மையை கர்ப்பம் தரிக்க வைத்தாயிற்று. அவள் நேரத்தில் குழந்தையைப் பெற்றுத் தந்தால்தான் வேலுப் பண்டாரம் பிறக்கும் உருப்படியை சந்தைக்கு எடுத்துப் போக சரியாக இருக்கும். வயிறு என்னமோ அவளுக்கு உப்பித்தான் இருக்கிறது. ஆனால் நேரம் அல்லவா கடத்துகிறாள். வேலுப் பண்டாரத்தின் அவசரம் அவளுக்குத் தெரிவதில்லை. வேலுப் பண்டாரத்தின் மனைவியோ, “அவள் சமயத்துக்குப் பெற்றால் என்ன, பெறாவிட்டால் என்ன, அவளையே வித்துத் தொலைத்துக் கவலையை விடு,” என்று சொல்கிறாள். அவன் கேட்பதாக இல்லை. இன்னும் நிறைய உருப்படிகள் பெற்றுத்தரும் வயதில் இருப்பவளை விற்பதற்கு பைத்தியமா என்ன அவனுக்கு? முத்தம்மை வேலுப்பண்டாரத்துக்கும் அவன் மனைவிக்கும் இன்னும் மற்ற இந்த சந்தை வியாபாரிகளுக்கும் ஆடு, மாடு போல. நிறையக் கன்னு ஈன ஈன, வியாபாரத்தைப் பெருக்கும் தொழுவத்து ஜீவன்கள்.

euஇதற்கு அர்த்தம் வேலு பண்டாரம் இரக்கமோ அன்போ முற்றிலும் அற்றவன் என்பதல்ல. அவனும் இரண்டு பெண்களைப் பெற்ற அப்பன்தான். எல்லா அப்பாக்களையும் போல அவன் தன் பெண்களிடமும் மிகப் பாசம் கொண்டவன்தான். அவன் தன் முதல் பெண்ணின் கல்யாணத்திற்காக செய்து வைத்திருந்த நகைகளை இரண்டாவது மகள் எடுத்துக்கொண்டு ஓடி விட்டாள். முதல் பெண்ணைக் கட்டிக்கொடுத்த குடும்பத்தினர் அவனை மிகவும் அவமானப் படுத்தினர். அதை அவன் பொருட்படுத்தவில்லை. அவனது வழக்கமான வியாபாரத்திற்காக எடுத்து வளர்த்துக் காப்பாற்றி வந்த பிச்சைக்காரர்களுக்கு கொடுக்கக் கூட கல்யாணவிருந்தில் மிச்சம் எதுவும் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அந்தப் பிச்சைக்காரர்களுக்கு அவன் அவர்களை எப்படி நடத்துகிறான் என்பதன் பிரக்ஞையே கிடையாது. அவன்தான் அவர்களுக்கு மொதலாளி. வயிறு பசிக்கும் போது சோறு போடுகிறவன். அவர்கள் ஏழைமையில் திக்கற்ற நிலையில் காப்பாற்றி ஆதரவளிக்கிறவன். இப்படி ஆதரவற்று, ஏழைமையில் இருந்துகொண்டு மேலாளியின் ஆதரவுக்கு ஏங்கியிருக்கக் காரணம் என்ன என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியதில்லை.

கோவில் பூசாரியோ, ஏழைகளுக்காகவும் பாட்டாளிகளூக்காகவும் ரத்தம்சிந்திப் போராடுகிற கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவன். இப்படி கட்சியைச் சேர்ந்தவர்கள் நிறைய உண்டு. கொச்சுப் பிள்ளை என்று இன்னொரு கம்யூனிஸ்ட். கொச்சுப் பிள்ளையிடம் வேலுப் பண்டாரம் நீட்டி முழக்கி லெக்சர் அடிப்பான், பெருமையுடன். தான் இந்த ஏழை எளிய மக்களை, போக்கிடம் இல்லாது தவித்திருப்பவர்களுக்கெல்லாம் தன் ஆதரவில் கொண்டு வந்து, வேலை கொடுத்து பசியாற சோறும் போட்டு காப்பாற்றும் பொறுப்பைத் தன் மேல் சுமத்திக்கொண்டுள்ளதாக.

“பேசப்படாது, கேட்டேரா, கொச்சுப் பிள்ளை, ஆத்மாவில வலுதும் செறுதும் உண்டு. இப்ப மகாத்மா அப்படீங்கியோம். அது வலிய ஆத்மா, நாம சாதாரண ஆத்மா. நாம் நம்ம மாதிரி இன்னொரு ஆத்மாவ மதிக்கணும். சினேகிக்கணும். நம்ம விட செறிய ஆத்மாக்களை சம்ரட்சிக்கணும். நல்லது கெட்டது நடத்தி வைக்கணும். இப்ப இந்த உருப்படிகளுக்கு நாம இல்லேணா ஆருண்டு? பொது வழியிலே கிடந்து எரந்து பசிச்சு சாவும். இப்பம் நமக்கு கீழே இருக்கதனாலே அதுகளுக்கு ஒண்ணும் அறிய வேண்டாம். நேரத்தோடு நேரம் சோறு, வீடு, ரோகமானா மருந்து எல்லாம் உண்டு.”

இன்னொரு சந்தர்ப்பத்தில் இந்த கம்யூனிஸ்ட் தன் நடைமுறைக்கான சித்தாந்த விளக்கமும் தருவான். “எல்லாரும் அவங்க அவங்க உழைப்பத்தான் விக்கிறாங்க. நீ உன் உழைப்பை விக்கிறே. அரசாங்கம் அதன் சனங்க எல்லாரோடெ உழைப்பையும் விக்கிது. இந்த விக்கிறதும் வாங்கறதும் எல்லா எடத்திலேயும் உண்டு தான். இல்லாட்டி பணம் எங்கேருந்து வரும்?”

கோவில் பூசாரிக்கு எதுக்கும் முன்னாலே முத்தம்மையே துணியில்லாமே பிறந்த மேனிக்குப் பாத்தாகணும். ஒரு போலிஸ்காரன் கைகால் விளங்காத ஒரு பெண்ணை பலவந்தப் படுத்துகிறான். வேலுப்பண்டாரம் தன் உருப்படிகளில் ஒன்றை விற்ற ஆளுக்கு சிறுநீரகம் தேவையாயிருந்தது. “உருப்படியிலிருந்து அறுத்து எடுத்துக்கொள்வதற்காக ஏதாவது உருப்படி இருந்தா.. ” என்று கேட்டு வந்தவன் அவன். ஒவ்வொருவருக்கும் வித விதமான தேவைகள். அந்தத் தேவைகளை நியாயப் படுத்த தர்மங்கள், கட்சிக் கோட்பாடுகள்.

நாவலின் கடைசிப் பக்கங்களில் வேலுப் பண்டாரம் முத்தம்மையின் மகனையே முத்தம்மையின் மேல் திணிக்கிறான். கண் பார்வையற்ற முத்தம்மை, இதுவும் வழக்கம் போல வரும் இன்னொரு வாடிக்கை என்றே நினைக்கிறாள். ஆனால் தன் மேல் படுத்திருக்கிறவனுக்கு கையில் ஒற்றை விரலே இருப்பதை உணர்ந்ததும் அதிர்ந்து போகிறாள்.

இந்த உலகம் இரக்கத்திற்கு உரிய ஏழைமையால் வதைக்கப் படும் உலகம் என்று மட்டும்தான் நாம் சாதாரணமாக அறிந்திருக்கிறோம். ஆனால், ஜெயமோகன் தன் சொந்த அனுபவத்தில் பார்த்து, பின் கேட்டுஅறிந்த உலகம், கொடூரங்கள் நிறைந்தது. கொடுமைகள் நிறைந்தது. இப்படிக் கூட ஒரு உலகம் இருப்பது சாத்தியமா என்று நாம் திகைக்கக் கூடும். கேட்கவோ, படிக்கவோ கூட நம்மை உலுக்கி எடுக்கும் உலகம். கேட்பதற்குக் கூட நம் சகிப்புத் தன்மையை நிறைய சோதித்து விடும். மனிதன் தன் சக மனித ஜீவனை எவ்வளவு கேவலப்படுத்துவதன் மூலம் தன்னையும் கேவலப்படுத்தக் கூடியவன்; அது பற்றி பிரக்ஞையே இல்லாமல், பின் அதற்கு தார்மீக, அரசியல் சித்தாந்த ஜோடனைகளுடன் அலங்காரங்கள் செய்வான்; அவன் எவ்வளவு ஆபாசமானவன் என்பது தெரியும். ஆனால் முதலில் இதைப் படிக்கவேண்டுமே.

இது பழனி பற்றியது மாத்திரமான, கோவில்கள் மாத்திரம் சார்ந்த சமாசாரமாக இல்லை. நாற்பது வருடங்களுக்கு மேலாக இருக்கும். உயர் மட்ட காவல் அதிகாரிகளின் மகா நாடு ஒன்றில், பீஹாரைச் சேர்ந்த அதிகாரி, குழந்தைகளைத் திருடி எடுத்துச் சென்று அதன் கண்களை நோண்டி, கால் கைகளை வெட்டி ஊனமாக்கி பிச்சை எடுக்க தயார் செய்யும் பிச்சைக்காரர்கள் கும்பலைப் பற்றி அதுவும் சந்தைகளாக பரிணாமம் பெற்றுள்ளதைப் பற்றி சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆக, மனத்தளவில் ஜெயமோகனின் நாவலைப் படிக்க ஒருவாறான தயார் நிலையில்தான் நான் இருந்தேன். ஆனால் அதுவும் இந்நாவலைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு படிக்க முடியவில்லை. மனிதனின் உள்ளார்ந்த அரக்கத்தனம் எங்கெங்கெல்லாமோ எப்படியெல்லாமோ வெளிப்படுகின்றன.

இப்படியான உலகம் ஒன்று நம்மிடையே வெளித்தோற்றத்தில் நம் இரக்கத்தை வேண்டி இருந்து வருவதை தன் இயல்பான நகைச்சுவையுடனும், மொழியின் எல்லா வண்ணங்களுடனும் நம் முன்னே வைத்துள்ள ஜெயமோகனின் எழுத்துத் திறனின் நேர்த்திக்கு இது மற்றும் ஓர் உதாரணம்.

ஆனால் இந்த உலகமும், இதைக் காட்சிப்படுத்துகிறேன் என்று சொல்லி வந்த ‘நான் கடவுள்” சித்தரித்துள்ள உலகமும், ஒன்றல்ல.

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

9 Replies to “ஏழாம் உலகம் – இரக்கம் கோரும் கொடூரங்கள்”

 1. //மனிதன் தன் சக மனித ஜீவனை எவ்வளவு கேவலப்படுத்துவதன் மூலம் தன்னையும் கேவலப்படுத்தக் கூடியவன்; அது பற்றி பிரக்ஞையே இல்லாமல், பின் அதற்கு தார்மீக, அரசியல் சித்தாந்த ஜோடனைகளுடன் அலங்காரங்கள் செய்வான்; அவன் எவ்வளவு ஆபாசமானவன் என்பது தெரியும். //

  எவ்வளவு உண்மையான கருத்து.. சாத்தான் வேதம் ஓதுவது போல..

 2. நான் கடவுள் ‘தமிழ்ப்படம்’ ஆகையால் அதில் மசாலாக்கள் சேர்க்கப் படவேண்டும். அப்போதுதான் போணி ஆகும். நாவலை novel ஆக படம் பண்ணினால் நாவல் பழமோ பேரிச்சம் பழமோ தான் கிடைக்கும். இதனால் இந்தப் படத்துக்கு ஒரு சூப்பர் ஹிரோ தேவைப்பட்டார். சாமியார் ஆகினும் பறந்து பறந்து சண்டையிடுபவர், கம்பீரமானவர், மேலாண்மை மிக்கவர், உண்மை நிகழ்ச்சிகளுக்கு புறம்பாக போலிஸ் , ஜட்ஜ் எல்லோராலும் பயப்படுபவர் என்று. எல்லா பாலா படங்களிலும் இருக்கும் வழக்கம் போல அதிர்ச்சிகள், ஒரு பெரியவர் இன்னொருவரின் காலில் விழுதல் எல்லாம் எமோஷன்களும் தேவைப்பட்டன. ‘அவர்கள்’ படத்தில் கூட கடைசியில் வில்லன் ரஜினிக்கு ‘சாமி கண்ணைக் குத்துவதாக’ பாலசந்தர் எடுத்திருந்தார். கவிதைக்கு பொய் அழகு ; படத்துக்கு பொய் அவசியம்!!. பொய் இல்லாத படங்களான உச்சி வெயில், வீடு ஆகியவற்றின் கதி தூர்தர்ஷன்தன. ஆனானப் பட்ட மகேந்திரனே யதார்த்தத்தை பிடித்துக் கொண்டு காணமல் போனவர்தான். பாலசந்தர் யதார்த்தத்தை கொன்று புதைத்து விட்டு வெறியாட்டம் ஆடினார். அதனால் தான் அவரால் திரைச் சூழலில் நிற்க முடிந்தது. நம் தமிழ் மக்கள் அப்படிப்பட்டவர்கள்.

 3. // ஆனால் இந்த உலகமும், இதைக் காட்சிப்படுத்துகிறேன் என்று சொல்லி வந்த ‘நான் கடவுள்” சித்தரித்துள்ள உலகமும், ஒன்றல்ல. //

  சார், இந்த வருட சிறந்த திரைப்பட இயக்குனருக்கான தேசிய விருது பாலாவுக்குக் கிடைத்திருக்கிறது, நான் கடவுள் படத்திற்காக.

  நீங்கள் சொன்ன முகூர்த்தம்? :)))

 4. என் அபிப்ராயங்களுக்கும் தேசீய விருதுக்கும் ஏதும் சம்பந்தமில்லை. ஏழாம் உலகம் எழுதியவருக்கு சமரச நோக்கங்க்ள் ஏதும் இல்லை. பாலாவுக்கு நிறைய இருந்தது. அது படத்தில் தெரிகிறது. ’வெற்றிப்படமாக ஒரு தமிழ் படம் எதையெல்லாம் வேண்டுகிறதோ அந்த மசாலா எல்லாம் அந்தப் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏழாம் உலகம், படிக்கத் தூண்டுவதற்காக சேர்க்கப்பட்டது எதுவுமே இல்லை. பாலா சொன்னதையெல்லாம் சேர்த்த ஜெயமோகன் ஏழாம் உலக்த்தில் அதைச் செய்யவில்லை. அது தான் வித்தியாசம். ஏழாம் உலகம் எனக்கே படிக்க கஷ்டமாக இருந்தது. யூமா வாசுகியின் ரத்த உறவு போல. இருந்தாலும் எல்லோரையும் நான் இவற்றைப் படிக்கத் தூண்டுவேன். ஆனால் நான் கடவுள் அல்ல. எனக்கு வெறுப்பைத் தான் அந்த படம் தந்தது. அதில் நிறைய பிதற்றல்கள்

  தேசீய விருது போகட்டும் பராசக்தி காலத்திலேயே இன்னமும் இருக்கும் ஒருவரது படம் உளியின் ஓசை சிறந்த ஃபில்ம் ஸ்க்ரிப்ட்க்கு என்று நினைக்கிறேன். பரிசு பெற்றிருக்கிறது. பாமரத்தனமும் அதிகாரமும் ஒரே இடத்தில் ஒன்று சேரும்போது எல்லோரும் அங்கப் பிரதக்ஷைணமும் லக்ஷார்ச்சனையும் செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

  என் அபிப்ராயஙள் அரசின் அங்கீகாரம், சமூக நிறுவனங்களின் அங்கீகாரம் பிரபலங்களின் அங்கீகாரம் எல்லாவற்றுக்கும் எதிராகவே இருந்து வந்துள்ளன. அதுக்கு நான் என்ன செய்யமுடியும்.? நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேன் போங்கள். 77-வது வயதில் என் குணத்தை மாற்றிக்கொண்டு புது அவதாரம் எடுக்கமுடியாது அல்லவா.?. ஒரு வேளை மாறலாமோ என்னவோ. ஜெயகாந்தன் ஒரு உதாரணம்.

 5. //77-வது வயதில் என் குணத்தை மாற்றிக்கொண்டு புது அவதாரம் எடுக்கமுடியாது அல்லவா.?. ஒரு வேளை மாறலாமோ என்னவோ. ஜெயகாந்தன் ஒரு உதாரணம்.//

  வா….டக்கர்! இன்னா பஞ்ச் ஸார் இது!!!!

  வெசா பஞ்ச்!!!! சூப்பர்!

  வர்டா ஸார்…

  மன்னாரு

 6. நான் கடவுள் கதை தளமாக எடுத்துக்கொண்டது ஏழாம் உலகம் நாவலை. அதை தவிர நாம் இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க கூடாது. மிக அழகாக எல்லா விஷங்களும் கோர்வையாய் அமைந்து வந்த படம் அது. இதுபோல் ஒரு படம் நான் பார்த்தது இல்லை. நீங்கள் சொல்லும் மசாலா எதை இதில் சேர்த்திருக்கிறார்கள் என்று சொன்னால் நல்ல இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.