திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்

கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில…

why-dmk-emerged1நடந்த சரித்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால் அது பற்றி பக்ஷபாதம் இல்லாது நடுநிலையில் நின்று ஆராய்வதும் எழுதுவதும் கருத்துச் சொல்வதும் இயலாது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அது நேர்மையான, தள்ளிநிற்கும் பார்வையாளர்கள் கூற்று. ஒப்புக்கொள்ளவேண்டிய கருத்துதான். ஆனால் தமிழ்நாட்டின் விவகாரமே வேறு. அதிலும் கடந்த ஐம்பது அறுபது வருட கால சமூகச் சித்திரம் மிகவும் மாறிய ஒன்று. மிகவும் மாறியது என்றால் தலைகீழாக மாறியது என்று கொள்ள வேண்டும். சுமார் எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன் கருணாநிதியின் 77வது பிறந்த நாளை ஒட்டி, அவரைப் பற்றி எழுத என்னைக் கேட்டார்கள். அக்கட்டுரையின் கடைசியில்

“…இன்றைய தமிழ் நாட்டின் சரித்திரத்தை உருவாக்கியவர்கள் என்று ராஜாஜி, ஈ.வே.ரா. காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். கருணாநிதி ஆகிய அறுவரைச் சொல்லவேண்டும். இந்த ஆறு சரித்திர நாயகர்களைப் பற்றிய நிர்தாக்ஷண்யமற்ற சரித்திரம் எழுதப்படவேண்டும். அது கட்சி சார்ந்தவர்களாலோ, அல்லது அதற்கு எதிர்முனையில் இருப்பவர்களாலோ எழுதப்படக் கூடாது…”

என்று எழுதியிருந்தேன். தமிழில் இதுகாறும் நேர்மையான, உண்மையான வரலாறுகள் எழுதப்பட வில்லை. எழுதப்படும் என்ற சாத்தியக் கூறுகள் கூட இப்போது காணப்படவில்லை.

இரண்டு நேர் எதிர் கோடிகளைச் சுட்டிக் காட்டினால் போதும். முதலில் சொல்லப்பட்ட ராஜாஜி, இது பற்றிக் கேட்டபோது தன் சுயசரிதையை எழுதுவதில் தனக்கு விருப்பமில்லை என்று மறுபேச்சுக்கு இடமில்லாமல் கூறியவர்.கடைசியாக வரும், நம்மிடையே ஜீவித்திருக்கும் இன்னமும் சரித்திர நாயகனாகவே வாழும் கருணாநிதியோ, தானே தன் நாயக வரலாற்றை தன்முனைப்போடேயே நிறையவே எழுதி வருகிறார். வரலாறு காணாத எழுத்து பிரவாஹம் அது என்று அவருக்கு மிகவும் பிடித்த வர்ணனையிலேயே தான் அதைக் குறிப்பிட வேண்டும். காலம் சொல்லிக்கொள்ளட்டும் என்று ஒருவர் நிராகரிக்க, மற்றவர் காலம் என்ன சொல்லவேண்டும் என்னும் தன் நிர்ணயத்தை எழுதி வருகிறார்.  தமிழ்ச் சமூகம் இரண்டு எதிர் எதிர் முனைகளில் நின்று ஒரு முனையைச் சேர்ந்தவர் மற்றவரைச் சாடுவதும் அல்லது ஸ்தோத்திர மாலை பாடுவதுமாகப் பிரிந்து கிடக்கிறது.

ஈ.வே.ரா என்றோ, கருணாநிதி என்றோ அவரவர் பெயரிலேயே குறிப்பிடுவது பண்பாடற்ற செயலாக தமிழர்களுக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளது. மனிதர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. பட்டங்களைத் தாண்டி மனிதர் அறியப்படுவது தடைப்பட்டுள்ள சூழலில் சரித்திரமும் உண்மையும் செலாவணியற்றுப் போயுள்ளன. யாரும் எப்படி அறியப்படவேண்டும் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது.

1949-ல் தமிழக அரசியலில் எரிமலையின் கொந்தளிப்பு போன்ற ஒரு நிகழ்வு. ஒரே குடைக்கீழ், குருவும் சிஷ்யனும் போல, தந்தையும் மகனும் போல நாம் கண்ட பகுத்தறிப் பகலவன் என்றும் தந்தை பெரியார் என்றும் அறியப்பட்ட ஈ.வே.ராவும், பேரறிஞர் என்று அறியப்பட்ட அண்ணாதுரையும் திடீரெனப் பிரிந்து எதிர் எதிர் முனைகளாயினர். இது எப்படி நிகழ்ந்தது, ஏன் நிகழ்ந்தது, என்பது நமக்குச் சொல்லப்பட்டது. நமக்குச் சொல்லப்படுவதுதான் நிகழ்ந்ததா என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். ஆனால் தமிழ்ச் சமூகத்தில், தமிழக அரசியலில் சொல்லப்படுவது சரித்திரமாக எழுதப்பட்டாலும், அது உண்மையா என்பதை அறிவதற்கான சுதந்திரச் சூழல் இல்லாமல் போய்விட்டது.

periyar_with_rajajiஒருநாள் திடீரென்று பெரியார், திருவண்ணாமலைக்கு வந்த அன்றைய கவர்னர் ஜெனரலும் தன் நெடுங்கால அரசியல் எதிரியும் அதற்கும் நீண்ட நெடுங்காலமாக தன் சொந்த நண்பர் என்றும் சொல்லிக்கொள்ளும் ராஜாஜியை, ரகசியமாக, திருவண்ணாமலைக்கே சென்று சந்தித்துப் பேச, அண்ணா அது பற்றிப் பொது மேடையில் கேட்க, “அது என் சொந்த விஷயம்,” என்று சொல்லி பதிலைத் தவிர்த்துவிடுகிறார். 72 வயதாகும் பெரியார் தன் உதவிக்காக சில வருஷங்களாகத் தன்னுடன் இருந்துவரும் 26 வயது மணியம்மையை பதிவுத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து அது நடந்தும் விடுகிறது. வாழ்நாள் முழுதும் பெண்ணுரிமை பற்றியும் திருமணம் என்ற சடங்கை எதிர்த்தும் பிரசாரம் செய்த பெரியார் இப்போது தன் முதுமையில் இளம் பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டது கழகத்தில் பெரும் எதிர்ப்பைக் கிளப்புகிறது. அதற்குப் பெரியார் சமாதானம் சொல்கிறார்– “எனக்கோ வயதாகிறது. முன்னைப் போல என்னால் கழக வேலைகளைக் கவனிக்க முடியவில்லை. எனக்குப் பின் பொறுப்பேற்க ஒரு வாரிசை ஏற்படுத்தி என் பொறுப்புக்களை கவனிக்கவே இந்த ஏற்பாடு. சில வருடங்களாக என்னுடன் பழகி என் நம்பிக்கைக்குப் பாத்திரமான, இயக்க நலனில் உண்மையான பற்றும் கவலையும் கொண்ட மணியம்மையை வாரிசாக்கிக்கொண்டு இயக்க நலனுக்கும் பொருள் பாதுகாப்புக்குமான ஒரு டிரஸ்ட் ஏற்பாடு இது,” என்று விளக்கம் தருகிறார்.

periyar_and_maniammaiஜூலை 9, 1949 அன்று ஈ.வே.ரா.வுக்கும் மணியம்மைக்கும் பதிவுத் திருமணம் நடந்தது. இதன் எதிர்வினையாக, திராவிடர் கழகத்திலிருந்து அநேகத் தலைவர்கள் அண்ணாதுரையின் தலைமையில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குகின்றனர். இதுநாள் வரை அவருடைய தலைமையில் கழகத்தை வளர்த்த, அவருக்கு அடுத்த படியில் இருந்த தலைவர்கள் யாரையும் ஈ.வே.ரா நம்பவில்லை. சில வருடங்கள் முன்னதாக வந்து தலைவருக்கு அன்றாட காரியங்களில் உதவியாக இருக்க வந்த ஒரு இளம்வயதுப் பெண்தான், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்றும், இயக்கத்திற்கும் கழகச் சொத்துகளுக்கும் வாரிசாக இருக்கத் தகுதியானவர் என்றும் தலைவர் நம்புகிறார். அதை வெளிப்பட அறிக்கையாகவும் உலகம் அறியத் தருகிறார். தலைவரின் இத்தகைய நடவடிக்கை, நம்பிக்கையின்மை, கழகத்தில் பெரும்பாலோரை கழகத்திலிருந்து வெளியேற வைத்துவிடுகிறது. அவ்வருட செப்டம்பர் மாதம் 18-ம் தேதி ராபின்ஸன் பார்க்கில் கூடிய ஒரு கூட்டத்தில் அண்ணாவின் தலைமையில் வெளியேறியவர்கள் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குகிறார்கள், திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில். அக்கூட்டத்தில் பெரியாரின் அண்ணன் மகன், ஈ.வி.கே.எஸ் சம்பத், மதியழகன், இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன், என்.வி.நடராசன், கே.கே நீலமேகம், அன்பழகன், சி.பி.சிற்றரசு போன்ற முன்னணித் தலைவர்கள் இருந்தனர்.

karunaanidhi-and..(Photo: thanks to mohanram)ஆனால், திமுக தொடங்கப்பட்ட அன்றைய கூட்டத்தில் அக்கட்சியில் இன்று பெரியாருக்கும் அண்ணாவுக்கும் அடுத்த மாபெரும் பெரிய தலைவராகக் கருதப்படும் கருணாநிதியின் பெயர் இருக்கவில்லை. அவர் இக்காலகட்டத்தில் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் சினிமா கதை வசனம் எழுதுபவராக வேலை பார்த்து வந்தார் மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில். வசனம் கருணாநிதி என்ற பெயரையும் கூட திரையில் காணமுடியாத ஆரம்ப நாள்கள் அவை. தன் குடும்பத்தோடு சேலத்தில் இடம்பெயர்ந்து தங்கியிருந்தார் அவர். அவருடன் இருந்தது கண்ணதாசன். அவர்கள் இருவரும் இக்கூட்டத்திற்காக சேலத்திலிருந்து வந்து விருதுநகர் நாடார் லாட்ஜில் தங்கியதாகவும், அண்ணா ‘உன்னை பிரசாரக் குழுவில் சேர்த்திருக்கிறேன்” என்று சொன்னதாகவும், மறுநாள் காலை தானும் கண்ணதாசனும் சேலம் திரும்பிவிட்டதாகவும் கருணாநிதி ’நெஞ்சுக்கு நீதி’யில் எழுதியிருக்கிறார். அக்காலங்களில் அவர் அவ்வளவாக பிரபலமாகியிருக்கவில்லை. நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத் போன்றோர் வரிசையில் அவரும் ஒரு முன்னணித் தலைவராக இருக்கவில்லை. இந்த வரிசையில் எங்கோ ஒரு கோடியில் இருந்தவர், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அரசு, கட்சி இரண்டையுமே தன் தலைமைக்குக் கீழ் கொணர்ந்து இப்போது நாற்பது வருடங்களாக, எவ்வித எதிர்ப்பும் இன்றி, அத்தலைமையில் நீடிக்கிறார் என்றால், தன்முன் இருந்த அத்தனை பேரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தன்னை முன்னால் நிறுத்திக்கொண்டது அவரது அசாத்திய சாமர்த்தியத்துக்கும், திட்டமிட்டுச் செயல்படும் திறமைக்கும், கையாண்ட யுக்திகள் நிறைந்த மூளைக்குமான அடையாளங்கள்.

annadurai2திராவிடர் கழகத்தை விட்டு நீங்கி திராவிட முன்னேற்றக் கழகம் என்று புதுக் கட்சி தொடங்கிய போது, பெரியாரைத் தவிர, பேச்சாற்றலும், செயல் ஊக்கமும் கொண்டவர் என வேறு யாரும் பெரியாரிடம் இல்லை. திராவிடக் கழகம் பெரும் மக்கள் கூட்டத்தை ஈர்த்ததும், கல்லூரிகளிலும் பல்கலைகழகங்களிலும் திராவிடக் கழகம் பரவி மாணவர்களையும் இளம் தலைமுறையினரையும் கவரக் காரணமாக இருந்தது அண்ணாதான். ‘பாப்பான் ஒழிக’ என்ற ஒற்றைக் கோஷத்துடன் பாமர அளவிலேயே அர்த்தப்படுத்தப் பட்டிருந்த திராவிடக் கழகத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடிவருடிகளின் கட்சி என்று பெயர்பெற்றிருந்த நீதிக்கட்சியிலிருந்து விடுவித்து, படித்தோர் மத்தியிலும் ‘பாப்பான் ஒழிக’ கோஷத்துக்கு ஒரு வரலாற்று, தத்துவார்த்த பின்னணிகளும் கூட உண்டு என்ற தோற்றத்தையும் கொடுத்தது அண்ணாதான். அதாவது, பெரியாரின் வெற்றுக் கோஷத்துக்கு தமிழக அரசியலில் விலை போகக்கூடிய, மக்களைக் கவரும் packaging செய்து கொடுத்தது அண்ணா. வெகு சீக்கிரத்திலே திராவிடக் கழகத்தை வெகுஜனங்களிடையே ஒரு இயக்கம் என்ற தோற்றத்தையும் தந்தது அவர்தான். இப்போது அத்தனை சாதக அம்சங்களும் அண்ணாவோடு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே போய்ச்சேரும். அத்தோடு பெரியாரது கூடாரமே காலியானது. கோபம் வராதா பெரியாருக்கு?

கோபம் வந்தால் ஈ.வே.ராவிடமிருந்து எப்படிப்பட்ட வார்த்தைகள் வந்து விழும் என்பது சொல்ல முடியாது. ஆத்திரத்தில் பேசுகிறார் என்று சமாதானம் கொள்ளலாமே தவிர பகுத்தறிவின், நியாயத்தின் பாற்பட்டதாக, இராது. புதிய கட்சி தொடங்கியவர்களையெல்லாம் ‘கண்ணீர்த் துளிகள்’ என்று கேலி பேசினார். அது பல ஆண்டு காலம் தொடர்ந்தது. அநேகமாக, அண்ணா முதலமைச்சராகப் பதவி ஏற்று, தன் தலைவர் ஈ.வே.ராவிடம் ஆசி பெறச்சென்ற கணம் வரை. பிறகு தான் ‘கண்ணீர்த்துளிகள்’ என்ற கேலி நின்றது. பதவியில் இருக்கும் யாரையும் ஈ.வே.ரா. பகைத்துக்கொள்ள மாட்டார். திமுக காங்கிரஸை எதிர்க் கட்சியாகத் தாக்கிய போது, ஈ.வே.ரா. காமராஜ் ஆட்சியைப் புகழ்ந்தார். ‘பச்சைத் தமிழர்’ என்றார் காமராஜை. ஏனெனில், காமராஜ் அமைச்சரவில் ஒரே ஒரு பாப்பான் தான் அமைச்சர். ஈ.வே.ராவின் அரசியல் தர்க்கத்திற்கு வேண்டியது அவ்வளவேதான். பல சமயங்களில் காங்கிரஸ் சார்பில் நின்ற ‘பாப்பானை’ ஆதரித்துப் பிரசாரம் செய்திருக்கிறார். இதே ஈ.வே.ரா. தான், “ஆகஸ்ட் 15, சுதந்திர தினம் அல்ல. துக்க தினம்” என்றார். “வெள்ளைக்காரன் இடத்தில் காங்கிரஸ் உட்கார்ந்து கொள்ளும். திராவிட மக்கள் தொடர்ந்து அடிமைகளாகத்தான் இருப்போம்,” என்றார். ஆனால் அண்ணா இது சுதந்திர தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றார்.

வெளித்தெரிந்து இதுதான் அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இடையேயான முதல் கருத்து பேதம். வெளித்தெரிந்தது என்பது மட்டுமல்லாமல், திராவிடக் கழகமும் சரி, திமுகவும் சரி, அல்லது இன்னும் இதன் மற்ற கிளைக் கட்சிகளும் சரி எல்லோரும் இக்கருத்து பேதம் இருந்ததை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் அண்ணாவுக்கும் அவர் கடைசிவரை தனக்கும் தன் கட்சிக்கும் தலைவராக மதித்த ஈ.வே.ரா.வுக்கும் இடையேயான வேறுபாடுகள் கருத்தளவிலும் சரி, மனித உறவுகளிலும் சரி, குண முரண்பாடுகளும் நிறைய இருந்தன. அது அநேகமாக, அண்ணா பெரியாரின் அழைப்பின் பேரில் கட்சியில் சேர்ந்த வெகு சீக்கிரத்திலேயே இருவருக்கும் அவரவர் சுபாவங்களும் சில முரண்பாடான போக்குகளும் ஒத்துவராமை வெளிப்பட்டு விட்டது. ஆனாலும் அண்ணா தொடர்ந்து 1949 வரை இருந்ததற்கும், பின்னர் பிரிந்து வேறு கட்சி ஆரம்பித்த பின்னரும் அதன் தலைவர் பெரியார்தான் என்றும் தான் கட்சியின் செயலாளர்தான் என்றும் பிரகடனம் செய்தது மட்டுமல்லாமல், கடைசி வரை அவ்வாக்கைக் காப்பாற்றவும் செய்தார் என்றால் அதற்கு அண்ணாவின் இயல்பான தாராள மனதை, கனிவை, முதியவருக்கு மரியாதை தரும் பண்பை, மன்னித்துவிடும் சுபாவத்தை யெல்லாம்தான் காரணங்களாகக் காண வேண்டும்.

இது வரை சொன்னவை அத்தனையும் அச்சில் வெளிவந்தவை; எல்லோருக்கும் தெரிந்தவை என்ற போதிலும் இன்று, பெரியாரின் போக்கை ஏற்கமுடியாது பிரிந்துவந்த திமுக-விலும் சரி, அதனிலிருந்து பிரிந்த அதிமுக-விலும் சரி, பின்னர் கிளைவிட்டுத் துளிர்த்துள்ள இன்னும் பல திக, திமுக, கிளைகளிலும் சரி, பெரியாரும் அண்ணாவும்தான் வணங்கப்படும் தெய்வங்கள். அவரவர் நினைவு தினங்களில் மாலை சார்த்தி வணங்கி நின்று போட்டோ பிடித்துக்கொள்ளும் சடங்குகளுக்கு உரியவர்கள். எல்லோருக்கும் ஈ.வே.ரா தந்தை பெரியார் தான். பகுத்தறிவுப் பகலவன் தான். அண்ணா பேரறிஞர் தான். இருவர் காட்டிய பாதையில் தான் எல்லா கழகங்களும் செல்வனவாகச் சொல்லிக்கொள்கின்றன.

ஆனால் அவ்வளவோடு சரி. மற்றபடி, பெரியாரின் இன்றைய திராவிடர் கழகமும், திமுகவும் அதிமுகவும் பெரியார், அண்ணா பற்றிய கடந்த கால சரித்திரத்தைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் பெரும் தணிக்கைக்குட்பட்டதாகவே இருக்கும். அந்தந்தக் கால கட்சி சார்பில்லாத செய்திப் பத்திரிகைகளில் வந்த செய்திகளை, ஏன் விடுதலை, திராவிட நாடு, முரசொலி பத்திரிகைகளில் வந்த செய்திகளைக் கூட அவர்கள் இருட்டடிப்பு செய்யவே விரும்புவார்கள். அது பற்றி அவர்கள் பேசமாட்டார்கள் என்பது ஒருபுறம் இருக்க, இத்தகவல்களை அக்கால கட்டத்தில் அறிந்தவர்களோ, பத்திரிகைகளிலிருந்து தகவல்கள் திரட்டியோ யாரும் எழுதக் கூடுமானால், அவர்கள் எதிரிகளாகவே பாவிக்கப்படுவார்கள். எம்மாதிரியான எதிர்வினைகளை அவர்கள் சந்திக்கக் கூடும் என்பது சொல்லமுடியாது.

முதலில் அண்ணாவே இப்போது உயிருடன் இருந்திருந்து தம் அந்நாளைய அனுபவங்களை எழுதக் கூடுமானால், அவர் கூட தன் தலைவர் பெரியாரைப் பற்றிய உண்மை விவரங்களை எழுதமாட்டார்தான். காரணங்கள் பல. அண்ணாவின் சுபாவம் அது. சுபாவத்தில் சாது. தலைவரிடம் கொண்ட மதிப்பும் மரியாதையும். தனக்கு இழைக்கப்படும் தீங்குகளை, அவமானங்களை மறக்கும் மன்னிக்கும் சுபாவம். ஆக, அண்ணா எழுதாமல் இருந்ததைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் எல்லா திராவிட வாரிசுக் கழகங்களும் கூட இதில் சாதிக்கும் மௌனம் பற்றி என்ன சொல்வது? They don’t want to wash their party’s dirty linen in pubic. நியாயந்தானே. அவர்களுக்கு தந்தை பெரியார் அப்பழுக்கற்ற பகுத்தறிவுப் பகலவன். அவர்கள் அவர் பற்றி மக்களுக்குக் கொடுத்துள்ள சித்திரத்தில் சுருக்கங்களோ, கறுப்புக் கோடுகளோ இருக்கக் கூடாது. அப்படியும் இது சிக்கல்கள் பல நிறைந்த காரியம் தான். எப்படி?

தந்தை பெரியாரைப் பற்றி தீட்டி வைத்துக்கொண்டுள்ள உருவத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற நினைத்து நடந்த உண்மைகளை மறைத்தால், அது அவர் அண்ணாவைக் கேவலமாக நடத்தியதை மறைத்து அண்ணாவுக்கு துரோகம் இழைத்ததாக ஆகும். பெரியாரிடம் அண்ணா பட்ட அவமானங்களைப் பற்றி உண்மையை எழுதினால் அது பெரியாரைப் பற்றிய கற்பனைச் சித்திரத்தை கோரமாக்கியதாகும். பெரியார் வழியில் அண்ணா வழியில் ஒருசேர நடப்பவர்களுக்கு இது இக்கட்டான நிலைதான். இரண்டு பேரும் மரித்தாயிற்று. இனி இருவரது கற்பனையான உருவச் சித்திரத்தைக் காப்பாற்றி கட்சியை வளர்ப்பதுதான் செய்யக் கூடிய காரியம். அதைச் செய்து வருகிறார்கள் எல்லா திராவிட கட்சியினரும். இவர்கள் எல்லாருமே உண்மைக்கும் உண்மையாகவிருக்கவில்லை. அவர்கள் துதித்துத் போற்றி வணங்கும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இருவருக்குமே கூட உண்மையாக விருக்கவில்லை.

ஆனால் நடந்த சரித்திரத்துக்கு உண்மையாகவிருப்பது என்று ஒன்று இருக்கிறது. சரித்திரம் எழுதுபவனது தலையாய கடமை அது. இருவருமே இரு வேறு விதங்களில் முரண்பாடுகளின் சொரூபங்கள். தமக்குள்ளேயே முரண்களைச் சுமந்த இவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டவர்கள் வேடிக்கையான குரு சிஷ்யர்கள்தான். அதுவே இருவரையும் மிக சுவாரஸ்யமான மனிதர்களாக்குகிறது. இந்த முரண்கள் ஒரு கட்டம் வரை சகித்துக்கொள்ளப்பட்டு, அதன் உச்சத்தை எட்டியபோது பிளவு தவிர்க்க முடியாததாகியது. அக்கட்டத்திலும் அண்ணா தவிர்க்க முயன்றவர்தான். அவரது விஸ்வாசமும் சாத்வீகமும் அத்தகையதுதான். ஆனால் அதையும் தன் முரட்டு சுபாவத்தால் முறித்துக் கொண்டவர் ஈ.வே.ரா. இவ்வளவையும் மீறி, இருவருமே தமிழ்நாட்டின் வரலாற்றை உருவாக்கியவர்கள். இவர்களது குணநலன்களை, கொள்கைகளை, சரித்திரத்தை, எதையும் மறைக்காது எழுதுவதனால் இவர்களது வரலாற்றுப் பங்களிப்பு எதுவும் குறைபடாது. அவரவரது குணநலன்களே அவர்கள் படைத்த வரலாற்றின் குணநலன்களையும் கட்டமைத்தது என்பதையும் அறிந்து கொள்ளச் செய்யும்.

இவையெல்லாம் அதிகாரபூர்வமாக இக்கட்சியினர் வாயிலாக வெளிவருவதற்கில்லை. ஆனால் ஆரம்ப காலத்திலிருந்து இத்தலைவர்களை நெருங்கி அறிந்தவர்கள் எழுதியவற்றிலிருந்து நாம் கொஞ்சம் இச் சொல்லப்படாத, இவர்கள் மறைக்க விரும்பும் பல தகவல்களை அறியலாம். சில பெயர்கள் உடன் ஞாபகத்துக்கு வருகின்றன. கோவை அய்யமுத்து, பி. ராமமூர்த்தி, திரு.வி.க., சாமி சிதம்பரனார், மா.இளையபெருமாள் போன்றோர் தம் அனுபவங்களை எழுதும் சந்தர்ப்பத்தில் பல தகவல்களைச் சொல்லிச் செல்கின்றனர். பழைய விடுதலை, திராவிடநாடு இதழ்களிலிருந்தும் இன்று கட்சியினரும், தலைவர்களும் அங்கீகரிக்க மறுக்கும் உண்மைகள் பெறப்படும். ஏன், கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதியிலிருந்தும் பெறலாம். உதாரணத்திற்கு ஒரு சம்பவம். கருணாநிதி விடுதலை பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் காலை ஈ.வெ.ரா, “எங்கே கருணாநிதி?” என்று கேட்க, “கருணாநிதி குளிக்கப் போயிருக்கிறார்,” என்று பதில் வரவே, கோபமுற்ற ஈ.வே.ரா. “அவன் இங்கே வேலை செய்யவந்தானா, இல்லை குளிக்க வந்தானாய்யா?” என்று கேட்கிறார். ஒவ்வொரு தடவையும் கட்சி வேலைக்கே அவரிடமிருந்து காசுபெறப் படும்பாடு பெரும் பாடாக விருந்ததையும் கருணாநிதி பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

ஈ.வே.ராவின் சிக்கனம் உலகம் அறிந்ததே. சிக்கனமாக இருப்பது என்பது வேறு. அதில் அவரது சிக்கனம் ஒரு தனி ரகம். அது பணம் வீணாகச் செலவாவதைத் தடுக்கும் சிக்கனம் அல்ல. பணத்தின் மீது கொண்ட அதீதப் பற்றுதலில் விளைந்த சிக்கனம் அது. இரண்டாவது தன்னிடம் வந்து சேர்ந்தவர்களை மதிக்காத போக்கு. இது அண்ணாவுக்கு வெகு ஆரம்பத்திலேயே தெரிய வந்த ஒன்று. அடிக்கடி ஈரோடிலிருந்து திருச்சிக்குப் பயணம் செய்யும் ஈ.வே.ரா திருச்சிக்கு டிக்கட் எடுக்க மாட்டார். கரூர் வரை ஒரு டிக்கட். பின்னர் கரூரில் இறங்கி கரூரிலிருந்து திருச்சிக்கு டிக்கட். இப்படி இரண்டு முறை குறைந்த தூரத்துக்கான டிக்கட் எடுத்தால் அதில் கொஞ்சம் காசு மிச்சமாகும். இப்படி ஒரு முறை அண்ணாவையும் கூட அழைத்துச் சென்றவர், அண்ணாவை கரூரில் இறங்கி திருச்சிக்கு டிக்கட் வாங்க அனுப்பி, அண்ணா டிக்கட் வாங்கி வரத் தாமதமாகவே, ஆத்திரமடைந்த பெரியார், “சோம்பேறி, வக்கில்லாதவன், ரயில் டிக்கட் வாங்கக் கூட முடியாதவனால் ஒரு கட்சியை எப்படி நடத்தமுடியும்,” என்றெல்லாம் விழுந்த அத்தனை வசைகளையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டவர் அண்ணா.

இதுதான் தந்தை பெரியார், தனக்கு தளபதியாக, தன் பெட்டிச் சாவியைத் தந்துவிட்டதாக பட்டம் சூட்டிய அண்ணாவை, தன் கழகத்திற்கு பெரிய ஜனத்திரளையே தேடித்தந்த அண்ணாவை, கழகத்தில் தனக்கு அடுத்த படியாகவிருந்த தலைவரை, தனக்கு முப்பது நாற்பது வயது இளையவரை நடத்திய முறை. கழகத்தில் அண்ணா தன் இனிய சுபாவத்தினாலும், பேச்சாற்றலாலும், கழகத்தின் கொள்கைகளுக்குத் தேடித்தந்த கௌரவத்தாலும், மக்களிடையே பெற்ற புகழாலும், கழகத்தில் அவருக்கு தானே வந்தடைந்த இரண்டாம் இடத்தை, தந்தை பெரியாரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர் மட்டுமில்லை. வயதிலும் கழகத்திலும் அண்ணாவுக்கு மூத்தவர்களாக இருந்தோருக்கும், குத்தூசி குருசாமி, டி.பி.வேதாசலம் போன்றோருக்கும் அண்ணாவுக்கு கழகத்தினுள்ளும் வெளியே மக்களிடமும் இருந்த செல்வாக்கைக் கண்டு பொறுக்கமுடியாதுதான் இருந்தது. அண்ணாவின் இளைய தலைமுறை திராவிடக் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் அண்ணாவிடமே நெருக்கமாக உணர்ந்தனர்.

அதோடு கழகத்தில் தன் விருப்பு வெறுப்புகளையே கொள்கைகளாகவும் நடைமுறையாகவும் ஆக்கியிருந்த தந்தை பெரியார், எவ்வளவுதான் தனக்குக் கட்டுப்பட்டிருந்தாலும், தனக்கென ஒரு பார்வையும் கொள்கைகளும் கொண்டிருந்த அண்ணாவை உள்ளூர வெறுக்கத் தொடங்கியிருந்தார் என்றும் சொல்லவேண்டும். மற்றவர்களையும் தூண்டி அண்ணாவை கேலியும் வசையும் பேசத் தூண்டவும் செய்திருக்கிறார் பெரியாரும் திராவிடத் தந்தையுமான ஈ.வே.ரா. குறிப்பாக பாரதிதாசன், அழகரிசாமி போன்றோர். அப்படி வசைபாடியும் உடல்நிலை கெட்டு மரணப் படுக்கையில் இருந்த அழகிரிசாமிக்கு நிதி திரட்டித் தந்தவர் அண்ணா. பாரதி தாசனுக்கும் தான். தனக்கு நிதி திரட்டித் தராமல், “பாட்டுப் பாடறவனுக்கெல்லாம்” திரட்டித் தரானே என்று ஆத்திரப்பட்டவர் தந்தை பெரியார். அழகிரிசாமியும் பின்னர் தன் செய்கைகளுக்கெல்லாம் வருந்தவும் செய்தார்.

அண்ணாவுக்கு கருப்புச் சட்டை அணிவது என்றாலே பிடிக்காது. கறுப்புச் சட்டைப் படை என்று ஒரு வாலண்டியர் அணி உருவாக்குவது என்ற தீர்மானத்தில் பிறந்த வழக்கம்தான் திராவிட கழகத்தவர் கருப்புச் சட்டைக்காரன் என்றாக வழி வகுத்தது. இதை, தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன் மேடையிலேயே குறிப்பிடும் போது என்ன சொல்கிறார்? “வெள்ளைச் சட்டை அணியும் குள்ள நரிகள் என்று அவர்களைச் சொல்வேன்” அண்ணா குள்ள உருவினர் என்பது எல்லோரும் அறிந்தது. தனக்கு அடுத்த தலைவரை ‘குள்ள நரி” என்று மேடையில் தந்தை சொல்வாரானால், இவருக்குமிடையேயான உறவு எத்தகையது?

raja-annamalaichettiarநீதிக் கட்சியைச் சேர்ந்த ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் தன் அறுபதாம் ஆண்டு நிறைவை சம்பிரதாயச் சடங்குகள், புரோகிதருக்குப் பசு, பொற்காசு போன்ற தானங்கள், வேள்வி என ஏராளமான செலவில் நடத்தவே, ஈ.வே.ரா வுக்குக் கோபம். தன்னைக் கண்டு கொள்ளாமல், பார்ப்பனருக்கு தானம், பூஜை என்று செலவழிக்கிறாரே என்று. அண்ணாமலைச் செட்டியாரின் இச்செய்கையைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் ஒன்று எழுதும்படி தந்தை பெரியார் அண்ணாவிடம் பணிக்க, அண்ணாவுக்கும் இதில் ஒப்புதல் இருந்ததால் அவரும் எழுத, இடையில் அண்ணாமலைச் செட்டியாரிடமிருந்து ஆயிரம் ரூபாயோ என்னவோ அன்பளிப்பாக வரவே, செட்டியார் பணம் அனுப்பியிருக்கிறார்; ஆதலால் ஏதும் அவரைக் கண்டித்து எழுதியதை நிறுத்தச் சொல்கிறார் பெரியார். ஆனால், அண்ணாவோ, “நான் எழுதியது எழுதியதுதான். இனி அதை மாற்ற இயலாது” என்று சொல்ல, பெரியார் நன்கொடைக்கு நன்றி சொல்லி ஒரு குறிப்பு எழுதினார் என்பது நடந்த கதை.

இது போலத் தான் சேலம் மகாநாட்டில் திராவிடர்க் கழகம் என்ற புதிய நாமகரணமும், நீதிக்கட்சிப் பெருந்தலைகள் தம் பட்டம் பதவிகளைத் துறக்கவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றியது அண்ணாவின் வலியுறுத்தல் காரணமாகத்தான். பெரியாருக்கு நீதிக்கட்சியினர் தரும் ஆதரவையும் பண உதவியையும் இழக்க வேண்டி வருமே என்ற கவலையும் அரித்துக்கொண்டிருந்தது. மிகுந்த ஊசலாட்டத்துக்குப் பின்தான் அண்ணாவுக்கு இளைய தலைமுறையினரிடம் வளர்ந்து வரும் கவர்ச்சியையும், கழகத்தின் பிராபல்யம் கருதியும் அண்ணாவின் தீர்மானத்துக்கு இயைந்தார். அண்ணாவின் இத்தகைய பார்வையின் தொடர்ச்சிதான் இந்திய சுதந்திர தினத்தை பெரியார் சொன்னதுபோல் துக்க தினமாக அல்ல, சுதந்திர தினமாகக் கொண்டாட வேண்டும் என்று பகிரங்கமாக அண்ணா எழுதியது. நிலைமை கட்டுக்கு மீறிப் போகிறது என்று பெரியாருக்குத் தோன்றத் தொடங்கிவிட்டது. முதலில் பெரியார் கருத்தை ஒட்டி எழுதி பின்னர் சில மாதங்களுக்குள் அண்ணா தன் கருத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டது,

இருப்பினும் அவருக்கு அண்ணா வருங்காலத்தில் கழகத்திலும் மக்களிடையேயும் ஒரு சக்தியாக வளர்ந்து வருவது உவப்பாக இருக்கவில்லை. தனக்கும் வயதாகிக்கொண்டிருக்க, தன் பாரம்பரிய குடும்பச் சொத்தும், கழகத்தின் பேரில் பைசா பைசாவாக சேர்த்து வைத்திருக்கும் சொத்தும், கழகமும் அண்ணாவிடம் போய்ச் சேராதிருக்கவேண்டுமே என்ற கவலை அவரை பீடிக்கத் தொடங்கியது. தனக்கோ மகன் இல்லை. மனைவியும் இல்லை. குடும்பச் சொத்து ஈ.வி.கே.சம்பத்துக்குப் போய்விடும். கழகச் சொத்தோ, தனக்குப் பின் வரும் தலைமையிடம் போய்விடும். இதைத் தடுப்பதற்கு உடனடியாக ஒரு வழி தேடியாக வேண்டுமே. தன்னிடம் சில வருஷங்களாக உதவியாக இருக்கும் பெண்ணை மணந்து கொண்டால் தான் கவலைப்படும் இரண்டு விளைவுகளையும் தவிர்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தவர் தந்தை பெரியார். தன் சொத்துக் கவலைகளுக்குத் தீர்வாக, ஒரு சிறு வயதுப் பெண்ணின் வாழ்க்கையை பலியாக்குவதில் அவருக்கு தயக்கம் இருக்கவில்லை. சமூகச் சீர்திருத்தம் என்றும் பெண்ணின் விடுதலை என்றும் வாழ்நாள் முழுதும் பேசி வந்த எழுபது வயது புரட்சிக்காரருக்கு வந்த கவலைகளும் அதற்கான தீர்வுகளும் இப்படியாகிப் போனது பரிதாபம்தான்.

ஆக, கொள்கைகள் அல்ல, சொத்து பற்றிய கவலைகள், தன் விருப்பு வெறுப்புகளும் தன்னிச்சையான சுய தீர்மான போக்குகளும்தான் என்றும் தெரிந்ததென்றாலும் அதன் பட்டவர்த்தனமான வெளிப்பாடாக நிகழ்ந்த பெரியார் மணியம்மை திருமணம், அதுவும் பார்ப்பனராகிய எந்த ஆச்சாரியாரை தன் சாதிக்கு சாதகமாகத்தானே சிந்திப்பார் என்று காலமெல்லாம் சொல்லி நிந்தித்து வந்தாரோ அந்த ஆச்சாரியாரிடமே, தன் கழகம், சொத்து, நம்பிக்கையான வாரிசு போன்ற கவலைகளுக்கு ஆலோசனை கேட்டது, அதுவும் ரகசியமாகச் சந்தித்துக் கேட்டது, பின் இதெல்லாம் ‘என் சொந்த விஷயம், உங்களுக்கு சம்பந்தமில்லை’ என்று உதாசீனமாகப் பேசியது எல்லாம் கழகத்தவர்க்கு பெரும் அடியாக விழுந்தது. பெரியாருக்கும் சரி, கழகத்தவர்க்கும் சரி இதுதான் ஒட்டகத்தின் முதுகு தாங்காத சுமையாகச் செய்த கடைசி வைக்கோற் புல். இரு தரப்பாருக்கும் பெரியார்-மணியம்மை திருமணம் ஒரு சௌகரியமான சாக்காகிப் போனது. அந்தச் சாக்குதான் வெளிச் சொல்லப்பட்டது, திரையின் பின்னிருந்த நீண்ட காலப் புகைச்சல் பற்றி எல்லோருமே மௌனம் சாதிக்கத்தான் செய்கின்றனர்.

கடந்த காலப் புகைச்சல் மட்டுமல்ல. பின் எழுந்த புகைச்சல்களும் கூடத்தான். அண்ணா ‘கண்ணீர்த் துளிகள்’ தலையங்கம் திராவிட நாடு பத்திரிகையில் எழுதியதும், ‘கண்ணீர்த் துளிகள்’ என்று புதிய கட்சியினரை பெரியார் கிண்டலும் வசையுமாகத் தொடர்ந்து இருபது வருட காலம் பேசித் தீர்த்ததும் தெரிந்ததுதான். ஆனால், பதவி ஆசை பிடித்துப் போய் பிரிந்தார்கள் என்று சொன்னார். பெரியாரைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும், கட்சி சொத்துக்களுக்காக வழக்கு தொடர வேண்டும் என்றெல்லாம் கட்சியில் எழுந்த கொந்தளிப்பை அடக்கி, பழைய கட்சி என்ன, புதிய திமுகவின் தலைமை நாற்காலி கூட பெரியாருக்காகவே காலியாகவே வைக்கப்பட்டுக் கிடக்கும் என்று கட்சியினரின் கோபத்தை அடக்கிய அண்ணாவின் பெருந்தன்மையையோ, அதற்கு எதிராக, பதவி ஆசை பிடித்துப்போய் பிரிந்தார்கள் என்று கழகத் தந்தை பெரியாரின் பழிச் சாட்டல் வசைப் பிரசாரம் எதையும் இன்று எந்த கழகத்தவரும் பேச விரும்பமாட்டார்கள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கடைசியாக தந்தை பெரியார் விடுத்த பிரம்மாஸ்திரம் தான், 1949 ஜூலை 13-ம் தேதி விடுதலை பத்திரிகையில் வெளியிட்ட அறிக்கை. அதில் தான் திருமணம் செய்துகொண்டதற்கான ஒரு புதிய காரணத்தைச் சொல்கிறார். அறிக்கையின் தலைப்பு:”திருமண எண்ணத் தோற்றத்துக்கு காரணமும், அவசர முடிவும்.” அதில் யாரோ (மறைமுகமாக அண்ணாவைக் குறித்து) தன்னைக் கொலை செய்யச் சதிசெய்து வருவதாகவும் அதற்கு சம்பத் உதவி வருவதாகவும் ஒரு குற்றச் சாட்டு. உடனே அண்ணா, தந்தை பெரியார் தன்னைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாக, அவதூறு வழக்கு தொடர்கிறார். நீதி மன்றத்தில் ஆஜரான பெரியார், தான் அண்ணாவைக் குறிக்கவில்லை என்று சொல்கிறார். அவ்வாறு வாக்குமூலம் அளித்தால் தான் வழக்கை வாபஸ் வாங்குவதாகச் சொல்லவே, வழக்கு தள்ளுபடியாகிறது. சம்பத்தும், ஈ.வே.ரா மணியம்மை இருவர் மீதும் அவதூறு வழக்குத் தொடர்கிறார். நீதிமன்றத்தில் ஈ.வே.ரா, மணியம்மை இருவருமே வருத்தம் தெரிவிக்கவே, வழக்கு வாபஸ் ஆகிறது.

ஆக, கடைசியில் இதனால் பெறப்படும் நீதி என்னவென்றால், இது சொத்து பற்றிய கவலைகள். கட்சியில் தனக்கு இளையவரின் புகழ்மீது கொண்ட பொறாமை உணர்வுகள். இதற்கெல்லாம் கொள்கைப் பூச்சு முலாம் பூசப்பட்டு பளபளக்கச் செய்கிறார்கள். மேலிருக்கும் முலாமை யாரும் கீறி விடாமல் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆகவே இந்தப் பழைய கதைகளை எந்த திராவிடக் குடும்பத்தினரிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் வசமே இருக்கும் பத்திரிகைகளை அணுகுவதும் கஷ்டம். பெரியார் திடல் போய் ஒரு பழைய விடுதலை இதழைப் பார்க்க முயன்றவர்களுக்குத் தெரியும். “எதுக்கு? யார் நீங்க? என்ன வேணுமோ எழுதிக்கொடுத்துப் போங்க. தேடிப்பார்த்து வைக்கிறோம்.” என்றுதான் பதில்கள் வரும்.

40-களில் 50-களில் விவரம் தெரிந்தவர்களுக்கு எவ்வளவு நினைவில் தங்கியிருக்குமோ அவ்வளவே வாய்மொழியில் வரச் சாத்தியம் உண்டு. அவர்களே இச்சரித்திரத்தை பதிவு செய்யக் கூடும். இவையெல்லாம் அதிகமாக பரவலாக வெளித்தெரியாத, மணவை ரெ.திருமலைசாமி நகர தூதன் இதழில் எழுதியது, எஸ் கருணானந்தத்தின் அண்ணா நினைவுகள், அரங்கண்ணலின் அண்ணா நினைவுகள், அண்ணா பேரவை இணைய தளம், டி.ம். பார்த்த சாரதியின் தி.மு.க வரலாறு. பி.ராமமூர்த்தி திராவிட கட்சிகள் பற்றி எழுதிய புத்தகம் ஒன்று, போன்றவற்றிலிருந்து உதிரி உதிரியாகக் கிடைப்பவை. விடுதலை, திராவிட நாடு இதழ்களிலிருந்தும் கூடத்தான். தேடி அலைபவர்கள் யாரிருக்கக் கூடும்? மலர் மன்னன் எழுதியிருக்கிறார், இச்சம்பவங்களை மையமாகக் கொண்டு. மற்றவர்கள் தம் நினைவுகளை எழுதும் சந்தர்ப்பத்தில் இவை பற்றியும் குறிப்புகள் வரும். ஆனால் மையம் இதுவல்ல.

மலர் மன்னன், மற்றவர்கள் இதுகாறும் பயணிக்காத பிரதேசத்தில் கால் வைத்திருக்கிறார். அவர் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியவர். அண்ணாவைப் பற்றி, நல்ல அபிப்ராயங்களும் மதிப்பும் கொண்டவர். அந்த நட்பும் நல்லெண்ணமும், அந்நாட்களில் அண்ணா, மூன்று மாத கால இடைவெளியில் முற்றிலும் நேர்மாறான நிலைபாட்டை வெளியிடுவதைக் குறிக்கத் தவறவில்லை. அண்ணா கனிவும் பாசமும் நிறைந்தவர். விரோதிகளுடன் கூட சிநேகம் கொள்ளும் மனத்தவர். அவரது குணத்திற்கும், பார்வைகளுக்கும், முற்றிலும் எதிரிடையான குணங்கள் கொண்ட வயதில் மூத்த ஈ.வே.ரா-வுடன் இவ்வளவு காலமாக, எல்லா அவமதிப்புகளையும் சகித்துக்கொண்டு இருந்ததன் காரணமென்ன என்பது ஒரு புதிர். அதே போல, கடுமையான விருப்பு வெறுப்புகளையே கொள்கைகளாகப் பிரசாரம் செய்துவந்த, பேச்சில் முரட்டுத் தனமும் நயமின்மையும் கொண்ட தந்தை பெரியார், தனிப்பட்ட முறையில் தன்னைச் சந்திக்கும் எந்த சாதி மனிதரிடமும், பெண்களிடமும், சிறுவர்களிடமும் கூட கனிவும் சாத்வீகமும் அளவுக்கு மீறிய மரியாதையும் காட்டும் மனிதராக இருந்ததன் புதிர். இத்தனிப்பட்ட நாகரிகமும் மேடையில் காணும் கொச்சையும் குரோதமும் ஒரே மனிதரிடத்தில் குடி கொண்டிருப்பதும் ஒரு விந்தை தான்.

தமிழ்தான் எங்கள் உயிர் மூச்சு என்று கோஷமிடும் இயக்கத்தின் தந்தை தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று பறைசாற்றியவர். பாப்பானை ஒழிப்பது தவிர வேறு சமூக சிந்தனை அற்றவர் சாதியை ஒழிக்கக் கிளம்பிய புரட்சிச் சிந்தனையாளர்.  சமூகத்தில் இழிதொழிலாக இருக்கின்ற இந்தத் தொழில்களை ஒழிப்பதற்கு அரசியல்வாதிகள் முன்வருவதில்லை. சமூகச் சீர்திருத்தவாதிகளும் முன்வரவில்லை. ஏன், பெரியார் அவர்களே கேட்டார்- “இந்தத் தொழில்களை வேறு யார் செய்வது? இளையபெருமாள், நீயே ஒரு மாற்றுக் கூறு என்று கேட்டார்.” (சித்திரை நெருப்பு – மா. இளைய பெருமாள் – பக்கம் 41). இதுதான் பெரியார். அவர் சாதியை ஒழிக்கப் பிறந்த பகுத்தறிவுப் பகலவன். தந்தை பெரியார். இந்தப் பெருமைகள் எல்லாம் இல்லாத காந்தி என்ன செய்தார், என்ன கற்பித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இருப்பினும், தமிழ் நாட்டின் வரலாற்றையே மாற்றியவர்கள் பெரியாரும் அண்ணாவும், இன்னும் சிலரும். இதை எப்படிப் புரிந்து கொள்வது?

திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்: கிழக்கு பதிப்பகம், ப. 160: விலை ரூ.80

16 Replies to “திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்”

  1. இதனைப் படித்து புரிந்துகொள்ளும் கண்மணிகளுக்கும் ரத்தத்தின் ரத்தமான உயிரின் மேலானவர்களுக்கும் கண்ணீர்த் துளிகள் ஆறாக பெருக்கெடுக்கும். அந்த உணர்வுகளை அவர்கள் அடுத்த தேர்தலில் காசு வாங்கிக் கொண்டாலும் இல்லாவிட்டாலும், தெரிவிப்பார்களென்று நம்புவோமாக.

  2. இன்றைய திமுகவின் கொள்கை-

    அழகிரி நாமம் வாழ்க,

    ஸ்டாலின் நாமம் வாழ்க.

    எப்படி இரண்டு தளபதிகளிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே இந்ட்ரைஅய் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களின் கவலை (உதாரணம்,- பொன்முடி, கருப்பசாமி பாண்டியன், சுரேஷ் ராஜன், சாத்தூர், எமற்கே பன்னீர்செல்வம்…)

  3. ஒரு வகையில் கருணாநிதிதான் ஈவேரா வின் உண்மையான வாரிசு. அநாகரிகமாக நடந்து கொள்வது, பிறரை மதிக்காத போக்கு, சுய தம்பட்டம், சுய நலம், பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் கூட இருந்தவர்களுக்கே குழி பறித்தது, நம்பியவர்களுக்கு துரோகம் செய்தல் போன்றவற்றிக்கு ஈவேரா வின் வாரிசு கருணாநிதிதான்.

  4. மலர் மன்னன் ஒரு பொக்கிஷம் . அவரும் வெங்கட் சாமிநாதனும் நூறாண்டு வாழ வேண்டுமாய் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  5. All are good. But what are we going to do about manual scavenging?

    Think we have to devise a plan…

  6. //Sri Kishan
    17 January 2010 at 6:40 pm

    All are good. But what are we going to do about manual scavenging?

    Think we have to devise a plan…//
    For the past more than 40 years the rulers were the proud students of E.V.R. Still ‘we’ have to devise a plan! Can you pl tell who this ‘we’ you are referring to.

  7. இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களனைத்தும் புதியவை அல்ல. திமுக உருவான காலகட்டத்தில் வெளிவந்த ஆனந்த விகடன், கல்கி இதழ்களிலேயே இத்தகைய செய்திகள் கிடைக்கும். தேடிப் படிக்க நாட்டமில்லாதவர்கள், கிழக்கு பதிப்பகத்தின் முந்தைய வெளியீடான “அண்ணாந்து பார்” என்ற புத்தகத்தையும் அருணன் பதிப்பகத்தின் “திமுக பிறந்தது எப்படி?” என்ற புத்தகத்தையும் படிக்கலாம்.

    ///இந்தப் பெருமைகள் எல்லாம் இல்லாத காந்தி என்ன செய்தார், என்ன கற்பித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.///

    திமுக/திக/அண்ணா/பெரியார் ஆகியவற்றோடு நிறுத்தியிருக்கலாம். பெரியாரை சிறுமை படுத்திக் காட்டி காந்தியை உயர்த்திப் பிடிப்பது இந்த விமர்சனக் கட்டுரைக்கு அவசியமற்றது. கடைசியில் முடிக்கும்போது இத்தகைய கேள்வியில் முடிப்பது இதனை பிரச்சாரக் கட்டுரையாக்குகிறது. நிற்க!

    தேசப்பிதா, மகாத்மா எல்லாம் பெருமைகள் கிடையாதா?

    காந்தி பற்றி பள்ளியில் படித்ததற்கும் தற்போது வரலாற்று புத்தகங்களில் படிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

    இந்தியர்களுக்குச் சற்றும் சம்மந்தமில்லாத இரு உலகப் போர்களிலும் இந்தியச் சிப்பாய்கள் பிரிட்டன் படைகளோடு சேர்ந்து போரிட வேண்டுமென்று காந்தி கூறியுள்ளார். இரு உலகப் போர் சமயத்திலும் புதிய சிப்பாய்கள் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டு சமருக்கு அனுப்பப்பட்டனர். இதற்கு காந்தி ’வெளிப்படையான’ ஆதரவு தெரிவித்துள்ளார். இளைஞர்கள் படைகளில் சேர வேண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அது மட்டுமல்ல இரு உலகப் போர்களின்போதும் இங்கு எந்தவித விடுதலைப் போராட்டங்களும் நடத்தக்கூடாதென்றும் கூறியுள்ளார்.

    காந்தியின் பிமச்சார்ய சோதனை பற்றி அவரே தனது சுய சரிதையில் எழுதியுள்ளார். 77 வயது முதியவர் காந்தி 17 வயதுடைய தனது பேத்தி மற்றும் ஒரு பெண்ணோடு ஒரு இரவு முழுவது நிர்வாணமாகப் படுத்துறங்கியது பெருமை தரும் செயலா என்ன! இதற்கு விமர்சனங்களைப் பொருட்படுத்தாது திருமணம் செய்து கொண்ட பெரியார் எவ்வளவோ பரவாயில்லை.

    தாம்பத்ய சுகத்தை அனுபவித்து முடித்துவிட்டு மணமாகாதவர்களுக்கெல்லாம் பிரமச்சார்யத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்று கற்பித்தார். பெண்கள் விஷயத்தைப் பொருத்தவரை ஒரு புதிரான மனிதராகவே விளங்கியுள்ளார் காந்தி.

  8. Anna & EVR had lot of differences.

    EVR wanted everyone to wear a black shirt.

    Anna disagreed.

    He suggested that the party form a brigade called “black brigade” & the dress be worn by them during agitations only.

    But EVR insisted that everyone wear it at all times.

    Anna collected money & handed it over to poet bharathidasan in a function.

    EVR was dead against it. He felt poets were useless to society.

    EVR did not attend the cremation of his close leuitinant pattukottai azhagirisami.

    This was openly criticised by mu.ka & anbazhagan in the condolence meeting.

    When EVR heard of this, he remarked ” Intha karunanidhi payala inime pesa koodhadhunnu sollunga”.

    Later when mu.ka became CM, EVR supported him shamelessly.

  9. கருப்பு
    சிவப்பு இயக்கங்களால்
    சாதியத்தின் வேரை கொஞ்சம் கிளற முடிந்ததின் விளைவு…
    நமஸ்காரம்
    வணக்கமாகியது…

    இடுப்பில் கட்டப்பட்ட துண்டு
    தோளுக்குப் போனதே
    பார்ப்பனியத்திற்கு வீழ்ந்த அடியல்லவா?

  10. நமஸ்காரம் வணக்கம் ஆனதில் உங்களுக்கு என்ன கிடைத்தது? இடுப்பில் இருந்த போதாவது மானத்தை காப்பாற்ற உதவிய துண்டு கருப்பு சிவப்பால் களவாடப்பட்ட கொடுமையை என்னவென்று சொல்ல?

  11. அண்ணா முடிவெய்திவிட்டார்! அண்ணா வாழ்க!

    அண்ணா முடிவெய்துவிட்டார். அண்ணா வாழ்க! அதாவது அண்ணா தொண்டு வாழ்க. தோழர்களே! நோய் வருவதும் முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். இதில் யாரும் தப்ப முடியாது ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும் என்றாலும், இவ்விஷயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிரதாயத்தை எல்லாம் தாண்டி மக்களின் உச்சநிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்றுவிட்டார்.

    யானறிந்த வரை, சரித்திரம் கண்ட வரை, அண்ணா முடிவுக்குப் பொது மக்கள் காட்டிய துக்க கொண்டாட்டத்தில் 4ல், 8ல் ஒரு பங்கு அளவுகூட வேறு எவருடைய முடிவுக்கும் காட்டிய தான நிகழ்ச்சி கிடையவே கிடையாது.

    இந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்று விட்டார்கள். இது அண்ணாவின் இரண்டாண்டு ஆட்சியில் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு, இவ்விஷயத்தில் மனித வாழ்வில் வேறு யாருக்கும் கிடைக்கமுடியாத பெருமையை அண்ணா அடைந்துவிட்டார் எனவே அண்ணாவின் நற்குண நற்செய்கை பெருமைக்கு இதற்கு மேல் எடுத்துக் காட்ட முடியாது.

    இன்று மக்களுக்கு உள்ள கவலை எல்லாம் நானறிந்த வரை அண்ணா முடிவடைந்து விட்டாரே, இனி ஆட்சி எப்படி இருக்குமோ என்பதுதான். நான் சொல்லுவேன் அண்ணா இறந்து விட்டார். அண்ணா வாழ்க என்பதற் கிணங்க, இனி நடைபெறும் ஆட்சியில் எந்தவித மாறுதலும் (திருப்பமும்) இல்லாமல் அவரது கொள்கை வளர்ந்தே வரும் ஆட்சியாளர்கள் தாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காகத் தமிழர்களாக ஆட்சி செய்கிறோம் என்கின்ற உணர்ச்சியோடு, மற்ற இனத்தார் காட்டும் இன உணர்ச்சியைத் தங்களுக்கு வழிகாட்டியாக வைத்துக் கொண்டு, அதன் படி நடந்து கொள்வார்கள் என்றே கருதுகிறோம். இயற்கையும் அவர்களை அந்தப்படி நடக்கச் செய்யும் என்பது உறுதி. அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

    அண்ணா நோய் வாய்பட்டிருந்த காலத்தில் மேன்மை தங்கிய கவர்னர் பெரு மானும், மாண்புமிகு மந்திரிமார் களும் பட்ட கவலையும் காட்டிய ஆறுதல் ஆதரவுகளும் சிகிச்சை செய் வதில் டாக்டர் சதாசிவம், கிருஷ்ண மூர்த்தி, முதல் வேலூர் டாக்டர்களும் எடுத்துக் கொண்ட மனிதத் தன்மைக்கு மேற்பட்ட முயற்சியும், 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தை ஒழுங் குபடுத்தி ஒழுங்காக நடத்தியதில் போலீஸ் அதிகாரிகளும், சிப்பந்திகளும் நடந்து கொண்ட பாதுகாப்புத் தன்மைகளும், ரேடியோ நிலையத்தாரும், பத்திரிக்கைக்காரர் களும், விஷ யங்களை அவ்வப்போது மக்களுக்குக் கூடியவரை தெரிவித்து வந்த நேர்மையும், மிக மிகப் பாராட்டத்தக்கதும் நன்றி செலுத்துவதற்கு உரியதுமாகும்.

    தமிழ் மக்கள் அண்ணாவிடம் காட்டிய அன்பு போலவே இன்றைய நமது மந்திரிகள் எல்லோரிடமும் காட்டி பரிவாய் நடந்து கொள்ள வேண்டு மென்று வேண்டிக் கொண்டு இதை முடித்துக் கொள்ளுகிறேன்.

    ——————————-

    04.02.1969 அன்று சென்னை வானொலி மூலம், பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வர் நள்ளிரவு 12.22 மணிக்கு 03-02-1969 இல் மறைவுற்றமைக்கு தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஆற்றிய இரங்கல் உரை

  12. தூத்துக்குடி திராவிடக்கழக மாநில மாநாடு
    1948-ஆம் ஆண்டில் பெரியார் அவர்கள் தூத்துக்குடியில் திராவிடக் கழக மாநில மாநாட்டைக் கூட்டினார்கள். அந்த மாநாட்டிற்குப் பெரியார் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அந்த நேரம் பெரியார் அவர்கள் அறிஞர் அண்ணாவிடம் வெறுப்புணர்ச்சிக் கொண்டு, அண்ணாவைப் புறக்கணித்து வந்த நேரம். புரட்சிக் கவிஞருக்குப் பண முடிப்பு தந்தது, எப்பொழுதும் கறுப்புச்சட்டையைப் போட மறுத்தது, 1947 ஆகஸ்டு 15-ம் நாளை மகிழ்ச்சி நாளாகவே கொண்டாடச் செய்தது, கொள்கைப் பரப்புப்பணிகளுக்கு மிகவாகச் செல்லாமலிருந்ததது ஆகியவை அண்ணாவிடம் பெரியாருக்கு வெறுப்புணர்ச்சி ஏற்படக்காராணமாக இருந்தவையாகும். பெரியார் கடுமையான சினங்கொண்டிருப்பதன் காரணமாக மாநாட்டிற்குப் போகலாமா? வேண்டாமா? என்ற ஐயப்பாட்டு எண்ணத்தோடு அண்ணா இருந்து வந்தார்கள். அறிஞர் அண்ணாவும், நானும் காஞ்சீபுரத்திலிருந்து புறப்பட்டு, மாநாட்டில் கலந்து கொள்வதைப் பொறுத்து அரைமனதோடு திருச்சி போய்ச் சேர்ந்தோம். திருச்சியில் தோழர ஈ.வெ.கி.சம்பத் வந்து தங்கியிருந்தார். பல சூழ்நிலைகளையும் ஆராய்ந்து பார்த்ததற்குப் பிறகு, மாநாட்டிற்குச் சென்று கலந்து கெள்ளவேண்டாம் என்று மூவரும் முடிவு செய்தோம். அறிஞர் அண்ணாவின் அரிய உரையைக் கேட்கும் பேராவலோடு மாநாட்டில் குழுமியிருந்த பெரும்பாலான மக்களுக்கு அண்ணா வருகை தராதது, பெருத்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் வாட்டத்தையும் அளித்தது. ஆனால் பெரியாருக்கும், அவரோடு நெருங்கியிருந்த கழகத்தொழர்களுக்கும் அந்தச் செயல் பொல்லாத சினத்தைப் பொங்க வைத்தது.

    ஈரோடு சிறப்பு மாநாடு
    சில திங்கள் கழித்துப், பெரியார் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களைத் தம் அன்பு வலைக்குள் மீண்டும் இழுத்துப போடவேண்டி, 1948-இல் ஈரோட்டில், திராவிடக்கழகத்தின் சிறப்பு மாநாடு ஒன்றினை, அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் கூட்ட ஏற்பாடு செய்தார். அறிஞர் அண்ணா அவர்களும் மாநாட்டில் கலந்து கொள்ள இசைவு அளித்தார். அந்த மாநாட்டை ஒட்டி நடைபெற்ற உர்வலத்தில்தான், அறிஞர் அண்ணா அவர்கள் அணி செய்யப்பட்ட, குதிரைகள் பூட்டப்பட்ட, கோச்சுவண்டியின் முன்னால் நடந்தே சென்றார்கள். பட்டுக்கோட்டை கே.வி.அழகர்சாமி கலந்து கொண்ட இறுதி மாநாடு அதுதான். தமிழ்த்தென்றல் திரு.வி.க. கலந்துகொண்டு மாநாட்டில் திராவிடக் கழகத்தின் முன்னணியினர் பலரும் கலந்து கொண்டனர். அறிஞர் அண்ணாவின் விருப்பதிற்கிணங்க, நான், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றினேன். கழகத்தின் பெட்டி சாவியை அண்ணாத்துரையிடம் கொடுத்துவிட்டேன் என்ற பெரியார் அறிவித்தது அந்த மாநாட்டில்தான்.

    பெரியாரின் திருமணம் என்ற பெயரால் ஒரு ஏற்பாடு
    1949-ஆம் ஆண்டில், பெரியார் அவர்கள், இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த திரு இராசகோபாலச் சாரியரரைத் திருவண்ணாமலையில் தனியாகச் சந்தித்துப் பேசினார், தம் சொந்தப் பிரச்சினை குறித்துப் பேசினேன் என்ற செய்தித்தாள்களில் செய்தி வெளியிட்டார். பின்னர் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும், பண்ணுருட்டியில் நடைபெற்றப் பொதுக்கூட்ட நிகழச்சியிலும் கலந்துகொண்ட அறிஞர் அண்ணா அவர்கள், மேடையிலேயே பேசும் போது, நேருக்கு நேராக திரு.இராசகோபாலாச் சாரியாரை ஏன் சந்தித்தீர்கள்? என்ன நோக்கம்? தங்களுக்கு என்று சொந்தப் பிரத்சினை என்ன இருக்க முடியும்? இயக்கத்திற்கு அப்பாற்பட்டதாக எந்த ஒரு பிரச்சினையும் திராவிடக் கழகத் தலைவராக இருக்கும் தங்களுக்கு இருக்க நியாயமில்லையே! என்று கேட்டார்கள். பெரியார் அவர்கள் இரண்டு இடங்களிலும் எந்த ஒரு விளக்கமும் கூறவில்லை.

    ஆனால், சில நாட்கள் கழித்துப் பெரியார் அவர்கள், இயக்கத்தின் பாதுகாப்புக் கருதியும், எதிர்கால நலங்கருதியும் திருமணம் என்ற பெயரால் இரு ஏற்பாடு செய்யப்போகிறேன். எனக்கு உதவியாளராகவும், எனது நம்பிக்கைக்கு உரியவராகவும், இருந்துவரும் மணியம்மையாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். இதனைத் தடுக்கவே அல்லது எதிர்க்கவே எவருக்கும் உரிமையில்லை என்னும் கருத்துப்பட அறிக்கையொன்று வெளியிட்டார்கள்.

    அந்த அறிக்கை இயக்கத் தோழர்கள் பெரும்பாலானோர்க்கும் பேரதிர்ச்சியையும், பெருங்குழப்பத்தையும், பெருத்த வருத்தத்தையும் அளித்தது எல்லோரும் செய்வது என்ன என்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் அறிஞர் அண்ணா அவர்கள், பெரியாரின் பெர்லின் பயணம்! என்னும் தலைப்பிட்டு, நீண்டதொரு கட்டுரையைத், திராவிடநாடு இதழில், பெரியாரின் போக்கை எதிர்த்தும், அவரின் திருமணம் என்ற ஏற்பாடு தவறானது என்பதைச் சுட்டிக்காட்டியும், கழகத்தின் நலங்கருதி அந்த ஏற்பாட்டைப் பெரியார் கைவிட வேண்டும் என்று வற்புறுத்தியும் வெளியிட்டார்கள்.

    அறிஞர் அண்ணாவின் அந்தக் கட்டுரை கழகத் தோழர்கள் பலருக்கும் ஆறுதலையும், விளக்கத்தையும், தெளிவையும் தந்தது. திராவிடக் கழகத்தின் முன்னணியினர் – செயல்வீரர்கள் பலரும் பெரியாரின் போக்கை எதிர்த்தும், அறிஞர் அண்ணாவின் கருத்தை ஆதரித்தும் நாட்டின் நாலாப் பக்கங்களிலிருந்தும் முடங்கல்கள் எழுதி திராவிடநாடு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அப்பொழுது நான் அண்ணாவிற்குப் பக்கத்துணையாக இருந்து, திராவிடநாடு இதழில், கட்டுரைகளை வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்தேன். பெரியாரின் போக்கை எதிர்த்து முடங்கள் எழுதியோரின் பெயர்களைத் தொகுத்து, அவற்றைப் பட்டியலாகத் திராவிடநாடு இதழில் வெளியிட்டேன். அந்தப் பட்டியலுக்குக் கண்டனக் கணைகள் என்ற தலைப்பை எடுத்துவிட்டுக் கண்ணீர்த் துளிகள் என்று போடும்படிக் கூறினார். நான் ஏன் என்று கேட்டேன். நம்மை ஆளாக்கிவிட்ட பெரியாரைக் கண்டிக்கும் வயதோ-உரிமையோ-தகுதியோ நமக்கு இல்லை. நாம் கண்டித்தால் நம்மீது நாட்டு மக்களுக்கு அனுதாபம் ஏற்படாது. பெரியாரின் போக்கு கண்டு, நாம் வருந்திக் கண்ணீர் விடுகிறோம் என்றால்தான், நாடு நம்மை மதிக்கும். நம்மீது அனுதாபம் வைக்கும்; நம்மை ஆதரிக்கும் என்றார். அறிஞர் அண்ணாவின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, அண்ணா அவர்கள் கூறியபடியே, கண்ணீர்த் துளிகள் என்ற தலைப்பின் கீழ்ப் பெயர்களின் பட்டியலை வெளியிட்டேன்.

    அப்பொழுது பெரியார் அவர்கள் மணியம்மையாரோடு ஏற்காட்டிற்குப் போய்த் தங்கிவிட்டார்கள். பெரியாரிடம் வேண்டுகோள் விடுக்க அறிஞர் அண்ணா அவர்களும், நானும், பிற முக்கிய நண்பர்களும் சேர்ந்து, தோழர் கே.கே.நீலமேகம் தலைமையில் ஒரு தூதுக்குழுவினையும், தோழர் எஸ்.குருசாமி தலைமையில் மற்றொரு தூதுக்குழுவினையும் ஏற்காட்டிற்கு அனுப்பிவைத்தோம். அவற்றால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. 1949 ஆகஸ்டு 9-ஆம் நாள், பெரியார் மணியம்மையாரைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டுவிட்டார் என்ற செய்தி எல்லா ஏடுகளிலும் வெளிவந்துவிட்டது. நம்பிக்கையெல்லாம் போய் நாங்கள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றோம்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றம்
    பெரும்பாலான கழகத்தவர்கள் அடுத்து எடுக்கக் கூடிய முடிவு பற்றிப் பலவகையான கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். நான், தோழர் ஈ.வெ.கி.சம்பத், தோழர் கே.கே.நீலமேகம், தோழர் சேலம் ஏ.சித்தையன், இளவல் செழியன் போன்றவர்கள் நாம் பெரும்பான்மையோர் வலிவைப் பெற்றிருப்பதால், திராவிடக் கழகம், அதன் பெயரில் உள்ள சொத்துக்கள், விடுதலை நிறுவனம் ஆகிய அனைத்தையும் கையகப்படுத்தி நாமே நிருவாகப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பல நாட்கள் வாதிட்டு வந்தோம். எங்களுடைய உணர்வையோ, கருத்துக்களையோ, திட்டங்களையோ அறிஞர் அண்ண அவர்கள் அறவே ஏற்றுக்கொள்ளவில்லை. திராவிடக் கழக அமைப்பையும், சொத்துக்களையும் அப்படியே பெரியாரிடத்தில் விட்டுவிட்டு, புதிய கழகத்தைப் புதிய கொடியுடன், புதிய அமைப்புடன் துவக்கலாம் என்றும், பெரியாரோடு மோதுதலைத் தாம் அறவே விரும்பவில்லை என்றும், பெரியாரிடம் கற்றுக்கொண்ட கொள்கைகளையும், குறிக்கோள்களையும் காப்பாற்றி வளர்ப்பதுதான், நம்முடைய கடமையாக இருக்கவேண்டும் என்றும், அண்ணா அவர்கள் வாதிட்டு வந்தார்கள். எந்த முடிவு எடுப்பது என்பதில் தெளிவு ஏற்படாமலேயே பல நாட்கள் கடந்தோடிவிட்டன. பெரும்பாலான கழகத் தோழர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கிடந்தனர். இறுதியில், அண்ணாவிடம் வாதிட்டு வந்த நாங்கள் எல்லோரும் வேறு வழியில்லாமல் அண்ணாவின் கருத்தை முழு மனதோடு ஏற்றுக்கொண்டோம். 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள், சென்னை பவளக்காரத் தெருவில், திரு.திருவொற்றியூர் சண்முகம் அவர்கள் வீட்டின் மாடிப் பகுதியிலுள்ள கூடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கழகம் துவக்கப்படவேண்டியதன் இன்றியமையாதக் காரணகாரிய விளக்கங்கள் அடங்கிய நீண்ட அறிக்கையைக் குழுமியிருந்த கழக முன்னணியினரிடம் படித்துக் காட்டி, நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை, அறிஞர் அண்ணா அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனை வரலாற்றுச் சிறப்புமிக்க பேறு படைத்த ஒரு செயலாக எண்ணி இன்றும் இறும்பூதெய்துகின்றேன்.
    (நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள்)

  13. 1947 ஆகஸ்டு 15

    இந்தியத் துணைக் கண்டத்தை – இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, அவைகளுக்கு 1947 ஆகஸ்டு 15-ல் விடுதலை வழங்குவது என்று பிரிட்டிஷ் வல்லரசு முடிவு செய்து அதனை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சினரும், முஸ்லீம் லீகினரும் அந்த முடிவை முழுமனதோடு வரவேற்றனர். நாட்டிலுள்ள பிற பெரும்பாலான அரசியல் கட்சிகளைச் சார்ந்தோரும், பொது மக்களும் இந்தியத் துணைக் கண்டத்திற்கக் கிடைக்கும் விடுதலையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றவில்லை; திராவிடக் கழகம் மட்டுமே இருந்துவந்தது. கழகத்தினர் எல்லோரும் ஆகஸ்டு 15-ம் நாளை வரவேற்பதா? அல்லது வெறுப்பதா? என்ற குழப்பமான நிலையில் இருந்தனர். அப்பொழுதி திராவிடக் கழகத் தலைவராக இருந்த பெரியார் இராமசாமி அவர்கள், கழகச் செயற்குழுவைக் கூட்டாமல், கழக முன்னணியினர் யாரையும் கலக்காமல், ஆகஸ்டு 15-ம் நாளைத் துக்க நாளாகக் கொள்ளும்படி அறிக்கை வெளியிட்டுவிட்டார்கள்.

    ஆகஸ்டு 15ஆம் நாளில் நடைபெறுவதாக இருந்ததெல்லாம், இந்திய ஆட்சிப் பொறுப்பிலிருந்து வெள்ளை ஏகாதிபத்தியம் விலகுவது என்பதும், இந்திய யூனியன் ஆட்சிப் பொறுப்பைப் பெரும்பான்மையான அரசியல் கட்சியான காங்கிரசு ஏற்பது என்பதும் ஆகும். இவற்றில் முக்கியமான நிகழ்ச்சி வெள்ளை ஏகாதிபத்தியம் விலகுகிறது என்பதுதான். அந்த நிகழ்ச்சியைப் பொறத்ததுத்தான் பிற நிகழ்ச்சிகளெல்லாம். வெள்ளையர் விட்டுப்பொகும் பொறுப்பை, ஏற்கும் சூழ்நிலையைக், காங்கிரசைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் அப்போழுது உருவாக்கவில்லை. காங்கிரசு பொறுப்பை ஏற்பது என்பது அப்பொழுது தவிர்க்க முடியாததொரு சூழ்நிலையாகும். ஆட்சிப் பொறுப்பைக் காங்கிரசிடத்தில் விட்டுப்போவதா என்பதுதான் அப்பொழுது நிலவிவந்தநிலைமையாகும். இவற்றையெல்லம் நன்கு ஆராய்ந்து பார்த்த அறிஞர் அண்ணா அவர்கள், வெள்ளையர் ஆட்சி வெளியேறுவது என்பது, உடனடியாக நிறைவேறவேண்டிய தலையாய நிகழ்ச்சியாகும் என்ற அசைக்க முடியாத முடிவுக்கு வந்தார்கள். காங்கிரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்பது என்பது விரும்பத்தகாததொன்று என்றாலும், அது தவிர்க்க முடியாததொன்றாக இருந்ததாலும், என்றைக்கேனும் ஒரு நாளைக்கு பிற முற்போக்குக் கட்சிகள் அந்தப் பொறுப்பை தாங்கும் நிலைமை ஏற்பட வழியிருந்த காரணத்தாலும வெள்ளையர் ஆட்சி வெளியேறுவது எல்லா வகையிலும் வரவேற்க வேண்டியதொன்றே என்று அறிஞர் அண்ணா அவர்கள் எண்ணினார்கள்.

    மேற்கண்ட அந்த முடிவோடு அண்ணா அவர்கள் சென்னை வந்து, செம்புதான் நேரு, 79-ஆம் என் கட்டிடத்தில், 30ஆம் எண் அறையில் இருந்த தோழர இரா. நெடுஞ்செழியன், இரா.செழியன், ப.வாணன் ஆகியோரைக் கலந்தாலோசித்தார்கள். வெள்ளையர் ஆட்சி வெளியேறுவதிலே நமக்குள்ள மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் கடைசி வாய்ப்பு 1947 ஆகஸ்டு 15 ஆம் நாளே ஆகும். ஆகவே அதனை மகிழ்ச்சிக்குரிய நாளாக கொள்ளவேண்டும் என்று அவர்கள் அணணாவிடம் தெரிவித்தார்கள்.

    ஆகஸ்டு 15 துக்கநாள் அல்ல, மகிழ்ச்சிக்குறிய நாளே என்ற கருத்தைப் பெரியாரிடம் தெரிவித்து அதற்காக முறையில் அவரிடம் விளக்கந் தந்து, எல்லோரும் கலந்து செய்யும் முடிவு ஒன்றினைக் காணவேண்டும் என்று விரும்பி அண்ணா அவர்கள், பெரியாரிடம் ஒரு நண்பரை இது குறித்துத் தூது அனுப்பினார்கள். பெரியார் அவர்கள், தாம் செய்துகொண்ட முடிவை மீண்டும் பரிசீலிக்க இணங்கவில்லை என்று அண்ணாவுக்கு விலை வந்து சேர்ந்தது. பிறகு வேறு வழியில்லாமல் அறிஞர் அண்ணா அவர்கள் ஆகஸ்டு 15 மகிழ்ச்சிக்குரிய நாளே என்னும் கருத்துப்பட நீண்டதொரு கட்டுரை எழுதி திராவிட நாடு இதழில் வெளியிட்டார். அதில், கழுகத் தலைவர் தம்மீது குற்றங் கண்டு நடவடிக்கை எடுக்க முனைந்தாலும், அதனை ஏற்கத் தாம் கயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

    அறிஞர் அண்ணா அவர்களின் முடிவே சரியான அறிவுக்கொத்த முடிவு என்று ஆன்றோராலும் சான்றோராலும் அன்றும் போற்றப்பட்டது; இன்றும் பொற்றப்படுகிறது.
    (மன்றம்: 01.05.1956)

    தூத்துக்குடி மாநாடும் ஈரோடு மாநாடும்

    1947 ஆகஸ்டு 15ஆம் நாள் வெள்ளையர் ஆதிக்கம் வெளியேறிய நாளாதலால், அது மகிழ்ச்சிக்குரிய நாளே என்று அறிஞர் அண்ணா அவர்கள் கூற, காங்கிரசால் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதால் அது துக்கத்திற்குரிய நாளே என்று பெரியார் இராமசாமி அவர்கள் கூற அப்பொழுது கழகத்திதோழரகள் கருத்தில் இரு வேறு பகுதியினராக பிரிந்தனர். பெரியார் கூறினாலும் அதைப் பற்றிச் சிந்தித்து அதில் தெளிவு பெற வேண்டும் என்று கருதினவர்கள் அறிஞர் அண்ணா அவர்கள் கூற்றையும், பெரியார் கூறிவிட்டதால் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கருதினவர்கள் பெரியார் அவர்கள் கூற்றையும் ஆதரித்து நின்றனர். அண்ணாவைப் பின்பற்றுவோர், பெரியாரைப் பின்பற்றுவோர் என்று இரண்டு பிரிவினராகக் கழகத் தோழர்கள் பட்டும் படாததுமாகப் பிரிந்திருந்தனர்.

    1948 இரடப்பகுதியில் தூத்துக்குடியில் திராவிடக் கழக மாநில மாநாடு கூட்டப்பெற்றது. பெரியார் அவர்களே முன்னின்று மாநாட்டிற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். அண்ணாவும் அவரைச் சார்ந்தோரும தம்மைக் கவிழ்க்கத் திட்டம் போட்டிருப்பதாகவும், அவர்கள் மாநாட்டிற்கு வந்து குழப்பம் செய்ய இருப்பதாகவும், அவர்கள் குழப்பம் செய்யும்போது தம்ப் பின்பற்றுவோர் அடி, உதை ஆகியவைகளை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கவேண்டும் என்றும் பெரியார் அவர்கள் மாநாட்டிற்கு முன்பு பொதுக் கூட்டங்களில் பேசியும், விடுதலையில் எழுதியும் வந்தார்கள்.

    இல்லாத ஒன்றைக் கற்பனை செய்துகொண்டு பேசியும், எழுதியும் வந்த பெரியாரின் கோக்கைக் கண்டு மனம் வருந்திய அண்ணா அவர்களும் அவரைச் சார்ந்த பிறரும் மாநாட்டிற்குப் போகாமல் இருந்துவிடுவது மேல் என்ற முடிவுக்கு வந்தனர். மாநாட்டில் கூடியிருந்த மக்களில் பெரும்பாலோர் அண்ணாவின் வரவை எதிர்பார்த்திருந்த தன்மையும் அண்ணா ஏன் வரவில்லை? என்று பலர் கேட்ட கேள்வியும் பெரியார் அவர்களுக்கு பொறாமையையும், எரிச்சலையும், சினத்தையும் மூட்டிவிட்டன. அது காரணமாகப் பெரியார் அவர்கள் மாநாட்டில் பேசம்போது அண்ணாவைக் கண்டவாறு இழித்துக்கூறவும் செய்தார்கள்.

    மாநாடு முடிந்ததற்குப் பிறகு பெரியாரைப் பின்பற்றுவோர், அறிஞர் அண்ணாவையும், அவரைப் பின்பற்றுவோரையும் கண்டகண்ட இடங்களில் ஏசவும், தூற்றவும், வெறுக்கவும் தலைப்பட்டனர். அறிஞர் அண்ணா அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாகக் கடமையைய் ஆற்றி வந்தார்கள்.

    பிறகு 1948 ஆகஸ்டு திங்கள் வாக்கில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மூண்டது. அறிஞர் அண்ணா பிறரும் தீவரப் பங்குகொண்டனர். கிளர்ச்சியின் படைத் தலைவராக அண்ணா அவர்கள் பொறுப்பேற்றார்கள். பெரியார் அவர்கள் அண்ணாவிடம் நெருங்கிய தொடர்பும், மிக்க பற்றம் வைக்க முற்பட்டார்கள்.

    அதே ஆண்டில் தூத்துக்குடி மாநாட்டிற்கு அண்ணா அவர்கள் வராததனால் ஏற்பட்ட குறையைப் போக்கப், பெரியார் அவர்கள் ஈரோட்டில் தனி மாநில மாநாடு ஒன்றைக் கூட்டி, அதற்கு அண்ணா அவ்ரகளை தலைமை தாங்கும்படி செய்தார்கள்.

    பெரியார் போக்கு அண்ணாவிற்குப் பல தடமைகளில் மனக்கசப்பை உண்டாக்கியிருந்தாலும், கடமையாற்ற கழகம் அழைக்கும்போதெல்லாம் அறிஞர் அண்ணா அவர்கள் முன்னணியில் நின்றே பணியாற்றி வந்திருக்கிறார்கள். எனவேதான் தூத்துக்குடி மாநாட்டிற்குக் கண்ணியம் காரணமாகச் செல்லாத அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோடு மாநாடு கடமை காரணமாக வருந்தி அழைத்தது.
    (மன்றம், 15.05.56)

  14. சஞ்சய், அண்ணா இறந்த 1969 ஆம் ஆண்டு தமிழகத்தில் டி வீ கிடையாது. அண்ணாவின் பிறகு 18 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தலைவர் எம் ஜி ஆர் இறந்தபோது, இறந்த தலைவரின் உடலையும், அது அடக்கம் செய்யப்படுவதையும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டதால் எல்லோரும் சென்னைக்கு வரவேண்டிய கட்டாயம் இல்லை. அவரவர் வீட்டிலேயே இருந்து கொண்டு , இறுதி அஞ்சலி செய்ய முடியும். எனவே, திராவிட இயக்கம் என்பது பகுத்தறிவற்ற போலிகள் , மோசடிக்காரர்கள் என்பது தங்கள் கடிதங்களில் இருந்து தெரிகிறது. மேலும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழன் காட்டுமிராண்டி என்று சொன்ன அசிங்கம் பிடித்தவனை தலைவன் என்று சொல்லும் சில நண்பர்கள் மனிதப் பிறவிகள்அல்ல என்பது தெளிவாகிறது. அண்ணா இறந்த அன்றும் பெருந்தலைவர் காமராசர் இறந்த அன்றும் ஒரே அளவு கூட்டம் தான் இருந்தது. நான் நேரில் கலந்து கொண்டேன்.

  15. விநாயகர் சிலையை உடைத்த வீர திருமகனின் சிலையை வீதி எங்கும் அமைத்து மாலையிட்டு கை தூக்கி வணங்குகின்றனர் ஒரு நபர் ஒரு நாள் காலை அதற்கு மாலை அணிவித்தார். யார் அது என்று கேட்டேன். அது பெரியார் என்றார். கல், மண், பைஞ்சுதை(=cement ) வர்ணம்(=paint ), ஜல்லி, கம்பி இவை அனைத்தும் சேர்ந்த ஒன்று அது. ஆனால் அதை அறியார் மட்டுமே அதனை பெரியார் என்று தனது பகுத்தறிவை pawn broker (=அடகு கடை)யில் அடகு வைத்தவர்கள் கூறுகின்றனர்.
    அவர் ஈரோட்டு சிங்கமாம்! சிங்கத்திற்கு மற்ற இன விலங்குகளை அடித்து தின்பதை தவிர வேறு வேலை ஏதாவது இருக்கிறதா? பசு போல பால் தருகிறதா? அல்லது காளை போல ஏர் உழுகிறதா? சிங்கதிருக்கு வீரம் இருந்தால் மட்டும் போதுமா? நெஞ்சில் ஈரம் இருக்க வேண்டாமா? அடுத்து அவர் வெண்தாடி வேந்தராம்! ஒருவருக்கு வயசானால் முடி வெளுக்கதான் செய்யும் அதே போல அவருக்கும் வெளுத்தது. அது என்ன வேந்தர்? தாடிக்கு ஒரு அரசனா? என்ன இது லூசு தனமாக இருக்கிறது. அடுத்து தொண்டு செய்யும் கிழம் தாடி அவர் மார்பில் வந்து விழும். ஒருவரது தாடி மார்பில் விழாமல் அவரது முதுகிலா விழும்? அட ஆண்டவா இதெல்லாம் ஒரு கவிதை! அந்த காகிதத்தை தின்னட்டும் ஒரு கழுதை.
    இந்த கிழவன் பார்த்து பார்த்து வளர்த்த அண்ணாதுரை கவி அரசர் கம்பனை கேவலபடுத்தி “கம்பரசம்” எழுதினர். ஆனால் அவருக்கு உலக தமிழ் மாநாட்டில் சிலை எழுப்பினார். ராமாயணத்தில் காமம் விஞ்சி இருக்கிறது என்று குற்றம் கூறும் இவர்கள் திருவள்ளுவரை மட்டும் போற்றுவதேன்? அவர் காமத்து பாலை எழுதவில்லையா? அதுமட்டுமல்ல் . 402 மற்றும் 1087 ஆகிய இரண்டு குறள்களில் முலை (=breast ) என்ற வார்த்தை வருகிறது. அது ஆபாச களஞ்சியம் என்று சொல்லி “தெருக்குறள்” என்று எழுதவேண்டியதுதானே! அரிதாரம் பூசியவர்களை அவதாரம் என்று நம்பும் மக்கள் இருக்கும்வரை நாடு உருபடாது. (அண்ணா ஒரு நடிகர் கதை மற்றும் பாடல் ஆசிரியர் )
    1. கடவுள் இல்லை இல்லவே இல்லை —-பெரியார்.
    ஒன்றே குலம் ஒருவனே தேவன் —– அண்ணா (திருமூலமந்திரதிலிருந்து
    திருடியது)
    2. சுதந்திர தினம் ஒரு துக்க தினம் — பெரியார்.
    சுதந்திர தினம் ஒரு மகிழ்ச்சி தினம் —அண்ணா
    3. மணி அம்மையினை மணந்தது சரி –பெரியார்
    மணி அம்மையினை மணந்தது தவறு ==அண்ணா
    4 தமிழ் ஒரு காட்டு மிராண்டு மொழி –பெரியார்
    தமிழ் ஒரு தன்னிகரற்ற மொழி ——-=அண்ணா
    இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருக்கும்போது பின்னவர் அந்த முன்னவருக்கு வாரிசாம்! முன்னவர் ஒரு சிக்கனத்தின் சிகரம். அதன் மூலம்
    அவர் சேர்த்து வைத்தது எத்தனையோ லகரம் “நல்லவாயன் சேர்த்து வைத்ததை நாறவாயன் சாப்பிடுவது போல கிழவன் சேர்த்து வைத்த Money யில் கீ. வீரமணி உருண்டு புரண்டு கொண்டிருக்கிறார். (He is a very lucky fellow)இது ஒன்றுதான் திராவிட கட்சியால் நாடு கண்ட பலன், and nothing else

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *