தேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்

devankurichi-hillஎங்கேடா போய்த் தொலைஞ்ச என்ற அம்மாவின் அன்பு அழைப்பிற்கு “தேங்குறிச்சி மலைக்கும்மா” என்று பதில் சொல்லி தப்பித்திருக்கிறேன், றோம்.

அங்கு என்ன விசேஷம்? சிவபெருமான் அக்னீஸ்வரராக காட்சி தருகிறார். கோமதி அம்மனுக்கு தனி சன்னதியும் அருகில்.

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலின் தலபுராணம் இது…

ஆறாம் நூற்றாண்டில் நடந்த சம்பவம் இது – தே. கல்லுப்பட்டியை (இதில் உள்ள ”தே” என்ற எழுத்து தேவன்குறிச்சியைக் குறிக்கும். அதுதான் எங்கள் தாய்க்கிராமம்) அடுத்த ஆவுடையாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தேவர், தனது மாடுகளை தினமும் இந்த தேவன்குறிச்சி மலையை ஒட்டிய இடங்களில் மேய்த்து வந்திருக்கிறார். மாடுகள் எல்லாம் சரியான அளவு பால்கொடுத்து வர ஒரே ஒரு மாடு மட்டும் மிகக்குறைந்த அளவு பால் கொடுத்து வந்திருக்கிறது.

அவர் மாட்டைப் பின் தொடர்ந்து செல்ல அந்த மாடு மலையின் நடுவிலிருக்கும் ஓரிடத்தில் நிற்க, அதன் மடுவிலிருந்து பால் தானாக சுரக்கிரது. கோபம்கொண்டு அதை சத்தம்போட்டு விரட்டி அடித்துவிட, மாடு தடுமாறி அங்கிருந்த கல்லின்மீது காலை வைத்து மிதித்துவிட்டு ஓடுகிறது. மாடு பால் சுரந்த இடத்தைப் பார்த்த மாட்டின் உரிமையாளர் திகைத்துப் போகிறார். அந்தக் கல்லிலிருந்து ரத்தம் வடிகிறது. அந்தக் கல்லை சுற்றியுள்ள மண்ணை அகற்றிவிட்டுப் பார்க்கிறார். அங்கு லிங்க வடிவமாக சிவபெருமான் எழுந்தருள்கிறார்.

அதை ஒரு அடையாளமிட்டுவிட்டு வீட்டிற்குச் செல்கிறார். அவரது கனவில் சிவபெருமான் வந்து அங்கு தனக்கு ஒரு கோவில் கட்டும்படியும் அக்னீஸ்வரராக அங்கு இருப்பேன் எனவும், இனிமேல் தினமும் உனது வீட்டிலிருந்து வரும் பாலினால்தான் தனக்கு அபிஷேகம் நடக்கவேண்டும் எனவும் சொல்லிச் செல்கிறார்.

கிராம மக்கள் அனைவரும் இணைந்து இன்றிருக்கும் அக்னீஸ்வரர் ஆலயத்தை அமைக்கின்றனர். இன்றுவரை அவரது தலைமுறை வரிசுகள்தான் அபிஷேகத்திற்கு பால் தருகின்றனர்.

இதுதான் தலபுராணம்.

devan-kurichi-pond

கோவிலிற்குச் செல்ல வேண்டுமெனில் தே. கல்லுப்பட்டியிலிருந்து நடந்தும் (3 கி. மீ) அல்லது பேரையூர், சாப்டூர் செல்லும் நகரப் பேருந்திலும் செல்லலாம். மலையை ஒட்டிய பாதை. உங்கள் இடப்புறம் ஒரு குட்டை. தண்ணீர் நிறைந்திருக்கும் நேரம் அதில் ஒரு ஆமை மூழ்கி இருப்பதுபோலவும் அதன் தலையும், ஓடும் மட்டும் வெளித்தெரிவதுபோலவும் தெரியும் ஒரு பாறை இருக்கும். அதைத் தாண்டிச் சென்றால் குளத்து விநாயகர் ஆலயம். கோவிலின் உள்ளேயே சென்று விநாயகரை வலம் வரலாம். விநாயகர் கோவிலை ஒட்டியே திருக்குளம். தாமரை பூத்த தடாகம் என பாடல் கேட்டிருப்பீர்கள். ஆனால் இங்கு நேரிலேயே காணலாம். தடாகத்தை ஒட்டியே இறைவனுக்கு அபிஷேகத்திற்கு நீர் எடுக்கும் அருஞ்சுனையினைக் காணலாம். சுனையினை இரு பாகங்களாக தடுத்து ஒரு பாகம் இறைவனுக்கான பயன்பாட்டிற்கும், அடுத்த பகுதியை பக்தர்கள் அருந்திச் செல்லவும் அமைத்துள்ளனர். அவ்வளவு சுவையான சுனைநீர்.

சித்ராபவுர்ணமி அன்று கல்லுப்பட்டியிலிருந்தும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக உணவு கட்டிக்கொண்டு வந்து இந்த மலையடிவாரத்திற்கு வந்து இறைதரிசனம் பெற்று, கொண்டு வந்த உணவை அருந்திச் செல்வர்.

விநாயகர் கோவிலிலிருந்து வெளிவந்து சிவபெருமானை தரிசனம் செய்ய படிகள் ஏறிச் செல்லவேண்டும். நான் சிறுவனாய் இருந்தபோது தட்சிணா மூர்த்தி சிலைக்கு எதிரில் இருக்கும் பாறையை படிகள் போல் செதுக்கி இருந்தனர்.

படிகள் முடிந்ததும் எதிரே கொடி மரம். வலது பக்கம் நவகிரகங்கள். அதை ஒட்டி பீடத்தில் வணங்கிய நிலையில் அனுமார்.

devankurichi-kodimaramகொடிமரத்தை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கிச் சென்றால் பழமையான கல் மண்டபம். பஜனைகள், திருவாசகம் ஓதுதல், வள்ளலார் ஆத்ம ஞான சபையின் சொற்பொழிவுகள் இங்கே நடக்கும். அதைத் தாண்டி உள்ளே செல்ல சிவனார் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். கற்பூர ஆரத்தி எடுத்த பின்பு, சிவன் சன்னதியை அடுத்த தாயார் கோமதி அம்மனின் சன்னதிக்குச் செல்லலாம். துவார பாலகர் போல பைரவர் அங்கிருக்கிறார். அவரை வணங்கி உள்ளே சென்றால் கோமதியம்மனை தரிசித்து வெளியே வரலாம்.

கோமதியம்மனை தரிசித்து வெளியே வந்தபின்னர் குன்றின்மேல அமர்ந்த குமரனைக் காணலாம். வள்ளி, தெய்வயானையுடன் வேல் முருகனாய்க் காட்சி அளிக்கிறார். அவரது சன்னதியிலிருந்து வலதுகைப் பக்கமாக வலம் வர பசுமாடு சிவலிங்கத்திற்குப் பால் சொரியும் காட்சியை சிலைவடிவில் வைத்திருக்கின்றனர். அடுத்ததாக சண்டிகேஸ்வரரின் சன்னதி. நம்பிக்கையின் அடிப்படையில் அவருக்கு நமது உடையிலிருந்து ஒரிரு நூலை சமர்ப்பித்து வணங்கிவிட்டு, அடுத்ததாக ஏகாந்தப் பெருவெளியை நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கும் தட்சிணா மூர்த்தி பெருமானை வணங்கி வலதுபக்கம் சென்றால் கோவிலின் முகப்பில் பார்த்த நவகிரகங்களை வணங்கிவிட்டு மண்டபத்தில் அமரலாம். மாசற்ற இயற்கையான காற்று உங்களை தழுவிச் செல்லும்.

cow-milking-to-lord-sivaகோவிலை ஒட்டிய மலையின் உச்சியில் பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. அதன் மலை உச்சிக்கு செல்வதற்காக ஆர். எஸ். எஸ் இயக்கத்தைச் சேர்ந்த மக்கள் திரு. ராமன் என்பவர் தலைமையில் ஒரு பாதையை அமைத்துத் தந்தனர். கல்லுபட்டியைச் சேர்ந்த காந்திநிகேதன் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் இதற்கு உதவினர். அதுதான் இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. போகும் வழியில் ஆஞ்சநேயர் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் சிலை பள்ளிகொண்ட பெருமாள் உருவில் இருக்கும் மலைத்தொடரை வணங்குவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

மலை ஏறும் அனுபவம் மிக ரம்மியமான ஒன்று. கிட்டத்தட்ட 45 மணித்துளிகள் மலை ஏற வேண்டும். கடைசி ஐந்து நிமிடங்கள் மலை மிகவும் செங்குத்தாகச் செல்லும். செல்லும் வழியெங்கும் விதவிதமான செடிகளைக் காணலாம். கல்லுப்பட்டியின் ஏதோ ஓரிடத்திலிருந்து வரும் பாட்டின் ஒலி காற்றின் இலக்கில் ஏறி இறங்கிக் கேட்டுக்கொண்டிருக்கும். மலை உச்சியில் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு அருமையான இயற்கைக் காற்றையும் சுவாசித்துவிட்டு அங்கேயே அமர்ந்தால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை உணரும் ஒரு வாய்ப்பு அமையும். வயல் வெளிகளெல்லாம் சிறு சிறு கட்டங்களாகத் தெரிய, வடக்கே வன்னிவேலம்பட்டி கண்மாயும், மதுரையின் பசுமலையும், தெற்கே ராஜபாளைய்ம், குற்றாலம் செல்லும் சாலை நடுவே கோடுபோலத் தெரிய, வயல்கள் பச்சைப் பசேலெனத் தெரிய அந்த ரம்மியமான சூழலை வர்ணனையில் சொல்ல இயலாது. அங்கிருந்து காற்றில் அலையும் ஓவியம் போலத் தெரியும் கோபாலசாமி இரட்டை மலையைப் பற்றித் தனியே எழுதவேண்டும். மலை இறங்குவது ஓட்டமும் நடையுமாக இருக்கும். கிட்டத்தட்ட 20 நிமிடங்களில் கீழே இறங்கிவிடலாம். எப்படியும் உங்கள் ஆடையில் ஒன்றிரண்டு ஒட்டு முள்ளு செடியாவது ஒட்டியிருக்கும். நகர வாழ்க்கையில் இந்தச் செடிகளையெல்லாம் நாம் மறந்தே போனோம் என்று தோன்றும் கணம் அது.

தேவன்குறிச்சி மலையின் நடுவே குகையையும், அதில் மலையைக் குடைந்து சமணர்கள் படுப்பதற்காக செய்த கல்படுக்கைகளையும் காணலாம்.

தேவன் குறிச்சி மலையும் அதை ஒட்டிய பகுதிகளின் புகைப்படங்கள் இங்கே. மற்றும் இங்கே

10 Replies to “தேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்”

 1. அருமையான பதிவு குமார். பாராட்டுகள்.

  வற்றாயிருப்பு செல்லும்போதும் மதுரைக்குத் திரும்பும்போதும் கல்லுப்பட்டி பேருந்து நிலையத்திற்குள் நுழையாமல் பிரதான சாலையிலேயே பேருந்து நிற்க, அதுவரை நிலையத்துக்குள் காத்திருந்த மக்கள் கூப்பாடு போட்டுக்கொண்டே திபுதிபுவென ஓடி வந்து ஏறுவார்கள். அந்தச் சில நொடிகளில் தேங்குறிச்சி மலையைப் பார்க்கத் தவறியதேயில்லை. பேருந்து நிலையத்தையொட்டி மலைக்குச் செல்லும் சாலையில் என்றாவது பயணித்து அம்மலையுச்சிக்குப் போகமாட்டோமா என்று ஒவ்வொரு முறையும் தோன்றும். ஏனோ அந்த வாய்ப்பு இது வரை கிட்டவில்லை. பதிவிலிருக்கும் புகைப்படங்களைப் பார்த்ததும் வருகிற ஜூனில் விடுமுறைக்கு வரும்போது அவ்விடங்களுக்கெல்லாம் கட்டாயம் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

  வாழ்த்துகள்.

 2. Hi
  The legend is similar to the Thirmala legend. Even there the cow is supposed to have given milk to the lord balaji.

 3. பின்னூட்டத்தில் ‘பேரையூர் சாப்டூர் பற்றியும் அறிய ஆவலாயிருக்கிறேன். தகவல் இருந்தால் பதியவும். வித்தியாசமான பெயர் கொண்ட ஊர்கள்!’ என்று சொல்லியிருப்பவர் ‘வற்றாயிருப்பு’ சுந்தர்!

  அப்படியே உங்கள் ஊரைப்பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள், சுந்தர்!

 4. தேவன் குறிச்சி தேங்குரிச்சி ஆனா பதிவுடன் துவங்கி இந்த அருமையான மலையைப் பற்றி கூறி உள்ளீர்கள். மதுரை இவ்வளவு ஆண்டுகள் நான் வாழ்ந்தும் திருபரங்குன்றம் மற்றும் யானைமலையில் உள்ள குகைக் கோவில்களைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. தங்கள் கட்டுரையைக் கண்டபின் இம்மலைகுச் செல்லும் அவா வந்துள்ளது. நன்றி. தங்கள் பணியினைத் தொடர்க.

 5. நன்பர் ஜெயக்குமார் “தேவன்குறிச்சி கல்லுப்பட்டி” தங்களுடைய தமிழ்ஹிந்து இடுகையில் தேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள் படிக்க நேர்ந்தது. நல்ல அருமையான தெய்வதரிசம் பதிவு. நான் பேரையூர் பள்ளியில் படிக்கும் போது இங்கு அடிக்கடி நன்பர்களுடன் வந்து செல்வோம். இதை படிக்கும்போது பழைய நினைவுகள் வந்தது. எங்கள் ஊர் கூவலப்புரம்.
  தற்போது சென்னை.

  அன்புடன் சோ.ஞானசேகர்

 6. வணக்கம். நான் மலேசியா குடிமகன். இருப்பினும், என் டாட்டா பூர்விகம் மதுரை. அவரின் சொந்த ஊர் கொளிகுருசி என்று எங்களிடம் சொல்லி இருக்கிறார். அப்படி என்று ஊர் கிராமம் இருகிறதா ? நான் அங்கு சென்று என் குலதெய்வம் சங்கிலி கருப்பரை வணங்க விரும்புகிறேன் . அப்படி உங்களுக்கு கொளிகுருசி பற்றி தகவல் இருந்தால் தயவு செய்து எனக்கு மினஞ்சல் அனுப்பவும். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *