நம்மைத் தேடி வரும் இறைவன்

tiruvannamalaiஇறைவனாவது, நம்மைத் தேடுவதாவது, என்று கேட்கத் தோன்றுகிறதோ? கவலையோ சந்தேகமோ வேண்டாம். அது உண்மை ஆகலாம். ஆனால் அப்படி நடப்பதற்கு நம் மனதில் இறைவனிடம் ஓர் ஆழ்ந்த நம்பிக்கை அவசியம் தேவை. இறைவனிடம் என்று இல்லை, வேறு எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அந்த வேலையை நம்பிக்கையுடனும் கவனத்துடனும் செய்தால் எப்படிப் பயன் கிடைக்குமோ அதே போலத்தான் இதிலும். மனம் பலனில் செல்லாது, பணியில் மட்டுமே மனது ஈடுபடுமானால் நல்விளைவுகள் உண்டல்லவா? கண்ணும் கருத்துமாக வேலை செய்யும்போது நம் மனம் எப்படி ஒருமையுடன் குவிந்திருக்குமோ, அதே போன்று இறைபணியில் இருக்கும்போதும் நாம் இருந்தால் நாம் இறைவனைத் தேடவே வேண்டாம். ஆழ்ந்து நினைத்தால்கூட போதும்; அவரே நம்மைத் தேடி வருவார். அது எப்படி என்று கேட்டுக் கொண்டிருப்பதை விட, அதை அனுபவத்தில் காண்பது மேன்மையானது. நமக்கேற்ற இறைப்பணி ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதைச் செய்யும்போது அதில் சந்தேகம் மட்டும் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அப்படிச் சந்தேகம் வந்தால் அதைப் போக்குவதிலும் சற்றே காலவிரயம் ஆகலாம். மேலும் அதனால் மனம் வேறு வழி சென்று குழப்பமும் வரலாம். இது போன்ற அனுபவம் எவருக்கும் உள்ளதுதானே? விதையை விதைத்தவன் அது முளை விட்டுள்ளதா என்று சந்தேகப்பட்டு தினமும் தோண்டிப் பார்த்துக் கொண்டிருந்தால் அது விளையுமோ? அதே போல்தான் இதிலும்.

இதை இப்போது நான் சொன்னாலும், எவருக்கும் சாதாரணமாக வரும் சந்தேகம் எனக்கும் முன்பு இருந்தது. ஆனால் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் என்னை மாற்றிவிட்டன. நடந்ததெல்லாம் தானாகவே மடை திறந்த வெள்ளம் போல் பெருகிப் பரவியது. அப்படிப் பரவும் போது, எனக்குப் பல உண்மைகளை உணர்த்திச் சென்றது. கடவுள் எங்கும் உள்ளார், அருள் எப்போதும் உண்டு என்று நாம் கேள்விப்பட்டாலும், அது நமது அனுபவமாக ஆகும்வரை நமக்குப் பல விதமான சந்தேகங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அவை அனைத்தையும் தீர்ப்பதுபோல் நிகழ்வுகள் நடக்கும்போது, நமது சந்தேகங்கள் ஆச்சரியமாக மாறலாம். நல்ல வேளையாக எனக்குச் சந்தேகங்கள் பெருத்த அளவில் இல்லாததாலோ என்னவோ, அனுபவங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அதைச் சொன்னால் பிறருக்கு உதவியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில், ஐந்து நிகழ்ச்சிகளை இங்கு விவரிக்கிறேன். அவை அனைத்துமே பகவான் ரமணர் போற்றிய அண்ணாமலையாரைத் தொழுது நாங்கள் நடத்தும் வார வழிபாடு சம்பந்தப்பட்டவை.

1993-ம் வருடம், சில நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6:30 மணிக்கு “ரமணா சத் சங்கம்” நடத்துவது என்று முடிவு செய்தோம். அதில் பகவான் ரமணர் இயற்றிய 108 செய்யுள்கள் அடங்கிய ‘அக்ஷர மண மாலை’யை அனைவரும் சேர்ந்து பாடுவதுதான் ஒரு முக்கியமான நிகழ்வு. ‘அக்ஷர மண மாலை’தான் அவரது முதல் கவிதைத் தொகுப்பு என்று முன்பே சொல்லியிருக்கிறேன். ரமணர் இயற்றியதெல்லாம் அநேகமாக யாராவது கேட்டுக் கொண்டதால்தான் இருக்கும். அக்கால கட்டத்தில் அவருடன் இருந்த சாதுக்கள் தெருத் தெருவாகச் சென்று பிக்ஷை எடுத்துக் கிடைக்கும் உணவைக் கொண்டுவர, அனைவரும் அதைப் பகிர்ந்து உண்பார்கள். அப்படிச் செல்லும்போது பாடுவதற்காக அவர்கள் பகவானை அணுகி ஒரு பாடல் இயற்றித் தரக் கேட்டார்கள். அவரோ தமிழிலும் வடமொழியிலும் எத்தனையோ பாடல்கள் ஏற்கனவே இருக்க, எதற்காக புதிதாக ஒன்று வேண்டும் என்று முதலில் மறுத்தார். ஆனாலும், அச்சமயம் ஒரு முறை கிரி வலம் செல்லும் சமயம் அவருக்கு செய்யுள் வரிகள் பொங்கிப் பொங்கி வர, அதை ஒருவர் எழுதிக்கொண்டே வந்தார். அப்படி எழுதப்பட்டு கிரிவலம் முடியும் சமயம் அத்தொகுப்பு நிறைவேறியது. அருணாசலரை மணமகனாகவும், பாடும் தன்னை மணமகளாகவும் வரித்து புனையப்பட்டதாலும், ஒவ்வொரு வரிகளின் முதல் எழுத்தும் தமிழ் எழுத்துகள் வரிசைப்படி வந்ததாலும் அதற்கு, ‘அருணாசல அக்ஷர மண மாலை’ என்று தலைப்பு கொடுக்கப்பட்டது. ஆக அதைப் பாடுபவர்கள், இறைவன், ரமணருக்கு அளித்ததையே பாடுவதாகவும் மேலும் மானசீகமாக கிரிவலம் வரும் பாக்கியம் பெறுபவர்கள் எனவும் கொள்ளலாம்.

satsang* சில பல காரணங்களை முன்னிட்டு ஒரு தேதி குறிப்பிட்டு அன்று அப்பாராயணத்தை ஆரம்பிப்பதாக இருந்தோம். நாங்கள் பெரிய முயற்சி எதுவும் எடுக்காமலேயே அன்று விசேஷமாக இரண்டு பெரியவர்கள் அதற்கு வந்திருந்தனர். ஒருவர் ரமணாஸ்ரமத்திலிருந்தே வந்திருந்தார்; மற்றவர், பால ரமணர் எங்கிருந்து அருணாசலரை ஜோதி வடிவாக திருவண்ணமலை வரும்போது கண்டாரோ, அதன் அருகில் உள்ள மற்றோர் ஆஸ்ரமத்திலிருந்து வந்திருந்தார். பகவானும் இவ்விரு ஆஸ்ரமத்தின் மற்ற சாதுக்களும் நேரிலேயே வந்து எங்கள் தொடக்க விழாவை வாழ்த்துவது போல் நாங்கள் மிக்க நன்றியுடன் மகிழ்ந்தோம். அவர்கள் கருணையால் அன்று தொடங்கப்பட்ட பாராயணம் இன்றும் எங்கள் இல்லத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. என்றும் அவ்வாறே நடைபெற அவர்களை மேலும் வேண்டுகிறோம். நடந்து வருகிறது என்றால், ஏதோ பெரிய அளவில் என்று நினைக்க வேண்டாம். இதுபோன்ற சத்சங்கங்களுக்கு வரும் பாக்கியம் சிலருக்குத்தான் உண்டு போலும்.

ramana* 108 செய்யுள்களைக் கொண்ட ‘அருணாசல அக்ஷர மண மாலை’ பாராயணத்தின் 108-வது வெள்ளிக்கிழமையும் தெய்வாதீனமாக ஏப்ரல் 14-ந் தேதி வந்தது. 1950-ல் அன்றைய தினம் இரவு 8:47 மணி அளவில்தான் பகவான் இப்பூவுலக வாசம் முடிந்து விதேக முக்தி அடைந்தார். 108 என்றாலே பாரத வழக்கப்படி ஒரு விசேஷமான எண்ணிக்கைதான். அதிலும் இப்படி ஒரு விசேஷமான 108-ன் ஒற்றுமை எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது. எங்கள் பாராயணத்தின் இறுதி அம்சமாக 5-நிமிட மௌன ஆராதனை உண்டு. அன்று வழக்கத்திற்கும் மேலாக, ரமணர் மேல் எழுதப்பட்ட சில பாட்டுகளையும் அதிகப்படியாகச் சேர்த்ததால் அன்றைய மௌன ஆராதனை சரியாக இரவு 8:47 மணி அளவில் நடைபெற்றது. அந்த இரவின் மௌன அமைதியை இன்று நினைத்தாலும் புளகாங்கிதம் அடைகிறோம்.

* 1993-ம் வருட இறுதியில் எங்களது அக்ஷர மண மாலை பாராயணத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட வெகுநாளைய ரமண பக்தர் ஒருவர் என்னை அணுகி, அவர்கள் சத்சங்கம் நடத்தும் இடத்திற்கு வந்து கலந்துகொண்டு ஒரு சொற்பொழிவும் செய்யச் சொல்லி வேண்டினார். முன்பே அவர்கள் சத்சங்கத்திற்குச் சென்று வந்தவன் என்ற முறையில், நான் சொற்பொழிவு கொடுத்தவன் அல்ல; வேண்டுமானால் பாராயணம் செய்கிறேன் என்றேன். அதற்கு அவர் வெகு காலமாக அப்படித்தான்(சொற்பொழிவு) அங்கு நடக்கிறது; நானும் அப்படியே செய்யவேண்டும் என்றதால் ஒத்துக்கொண்டு அதற்காகக் குறிப்புகளும் எடுக்க ஆரம்பித்தேன். இப்போது நான் ரமணர் பற்றி எழுதுவதற்கெல்லாம் அந்த முயற்சியே முன்னோடியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் குறிப்பிட்ட தினத்தில் எனது குறிப்புகளுடன் அங்கு சென்ற எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அவரே என்னிடம் நேராக வந்து அந்த வாரம்தான் காஞ்சி மஹா சுவாமிகள் விதேக முக்தி அடைந்திருந்ததால், சத்சங்கம் ஏற்பாடு செய்பவர் எப்போதும்போல் இல்லாது இன்று தானே வந்து பெரியவாளைப் பற்றி பேச வருவதாகவும், வேறு எந்த சொற்பொழிவும் வேண்டாம் என்று சொன்னதாகவும் சொன்னார். அதே போல் அவரும் வந்து பெரியவாளைப் பற்றியும் தனது அனுபவங்களையும் சிறிது நேரம் சொல்லி விட்டு, ஏதேனும் பஜனை பாடுங்கள் என்று அறிவித்துவிட்டுப் போய்விட்டார். அங்கு எவரும் பாடுவதாக இல்லை என்று தெரிந்துகொண்டபின், நான் அக்ஷர மண மாலை பாடலாமா என்ற போது அனைவரும் சம்மதித்தனர். அப்படியாக பாராயணம் செய்யலாமே, சொற்பொழிவு எதற்கு என்ற எனது முந்தைய கோரிக்கை அன்று அப்படியாக நிறைவேறியது.

* ஜனவரி 1996 -ல் மாநாடு ஒன்றுக்காக நான் மைசூர் மாநகரம் சென்றிருந்தேன். மாநாடு அமைப்பாளர்கள் மாலை நிகழ்ச்சியாய் ஒரு பஜனையை ஏற்பாடு செய்திருந்தனர். அது வெள்ளிக்கிழமையாய் இருக்கவே எனக்கு எங்கள் பாராயணத்தின் ஞாபகம் வந்தது. சீக்கிரமே அதை நான் மறந்தும் விட்டேன். மேடையில் பாடகர்கள் நிகழ்ச்சியை சுமார் 6.15-க்கு ஆரம்பித்தனர். 6:30 மணி வாக்கில் அவர்கள் ஒரு பாட்டைப் பாடினார்கள். அது கன்னடம் என்றும் புரிந்தது; அதில் ‘ குரு ரமணா’ என்று ஒரு தொடர் வருவதும் எனக்குப் புரிந்தது. ரமணரை மறுபடியும் எனக்கு நினைவுப்படுத்துவது போல் அவர்கள் பாட்டு அமைந்ததால், அதற்காகவே அவர்களுக்கு ஒரு பரிசு போல் ஏதாவது கொடுக்க பகவானின் படம் கூட கையில் இல்லையே என்று எண்ணி வருந்தினேன். அது என் எண்ணமாகவே இருந்தாலும், அப்புறம் அங்கு நடந்ததை நினைக்கும்போது எனக்கு இன்றும் ஆச்சரியமாகவே இருக்கிறது. நான் சென்னையில் புகழ் பெற்ற கல்வி நிறுவனம் ஒன்றிலிருந்து வந்தவன் என்பதைத் தவிர என்னைப் பற்றி அங்கு எவருக்கும் எதுவும் தெரிந்திருக்க நியாயமில்லை. திடீரென்று மாநாட்டு நிறுவனர் என் முன் வந்து, ஒரு வேண்டுகோள் வைத்தார். அவர்கள் மேடையில் பாடுபவர்களுக்காக நினைவுப் பரிசுகள் வாங்கி வைத்திருப்பதாகவும், நிகழ்ச்சியின் முடிவில் நான் மேடைக்கு வந்து அவைகளை அவர்கள் அனைவருக்கும் கொடுக்கவேண்டும் என்றபோது என் மன நிலை எப்படியிருந்திருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள். என்னை விடப் பெரியவர்கள் யாராவது இருப்பார்களே என்று நான் சிறிதே மறுதலித்தபோது, அவர் என்னை விடாது, நீங்களும் பெரியவர்தானே என்று சொல்லி சம்மதிக்க வைத்துவிட்டார். சற்று நேரம் முன் எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள் எனக்கு மட்டுமே தெரியுமாதலால் நானும் சம்மதித்து விட்டேன். இறுதியில் மேடைக்குச் சென்ற நான் என் எண்ணங்களையும் அங்கு நடந்ததையும் சொல்லி, பாடகர்களை பரிசை நினைவுப் பரிசாக மட்டும் கொள்ளாது பகவானின் பிரசாதமாகவும் கொள்ள வேண்டும் என வேண்டிக்கொண்டேன்.

shiva-lingam-parvatha-malai* 1996-ஆம் வருடம் தமிழ்நாட்டில் சில கோயில்களைத் தரிசனம் செய்யலாம் என்று யாத்திரை புறப்பட்டேன். ரமணரை சிறுவயதில் கவர்ந்த 63 நாயன்மார்கள் பற்றி எழுதப்பட்ட தலமான திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலும் அவைகளில் ஒன்று. நான் அங்கு சென்றதும் ஒரு வெள்ளிக்கிழமையன்றுதான். கோயிலுக்குள் கோயில்கள் இருக்கும் அமைப்போடு கொண்ட பெரிய கோயில் அது. அருணாசலர் சந்நிதி பற்றி விசாரித்துச் சென்ற எனக்கு பெரிய ஏமாற்றம்தான் காத்திருந்தது. ஜோதி சொரூபமான அருணாசலர் அங்கு இருளில் மூழ்கிருந்தார். சிவலிங்கம் எங்கிருந்தது என்று கூடப் பார்க்க முடியவில்லை. அதை என்னோடு வந்தவரிடம் கூட சொல்லாது கீழே அமர்ந்து வெள்ளிக்கிழமை பாராயணத்தை ஆரம்பித்து விட்டேன். சிறிது நேரம் சென்ற பின் அங்கு சிலர் வந்து போவதை உணர்ந்தேன். கண் திறந்து பார்த்தபோது மூன்று சிறுவர்கள் அருணாசலர் சந்நிதி முன் கற்பூரம் ஏற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்த எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பாராயணம் முடித்ததும், என் கூட வந்தவர், “தாங்கள் பாராயணம் செய்யும் பலனை அடைந்து விட்டீர்கள் போல இருக்கிறதே?” என்றார். என் மனதில் இருந்த ஏமாற்றம் பற்றி அவருக்கு நான் ஏதும் சொல்லாததால் அவர் கேட்டதின் பொருள் எனக்கு விளங்கவில்லை. என்ன என்று நான் வினவ, அவர் “நீங்கள் 32-வது பாடல் பாடும்போதுதான் அந்தச் சிறுவர்கள் வந்து ஒளி ஏற்றினார்கள்,” என்றார். அது என்ன பாடல் என்று நான் பார்த்தபோது இறைவன் எப்படியெல்லாம் வருகிறார் என்பதை நான் உணர்ந்தேன்.

அந்த அடிகள்:

“சூது செய்து என்னைச் சோதியாது இனி உன்
ஜோதி உருக்காட்டு அருணாசலா”

மேலே சொல்லப்பட்ட எதுவுமே எவரது அனுபவங்களாகவும் இருக்கமுடியும். இதற்கும் மேலே என்ன சொல்லிப் புரிய வைப்பது? ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளுங்கள்; உங்களுக்கும் இதனினும் மேலான அனுபவங்கள் அமையக்கூடும்.

6 Replies to “நம்மைத் தேடி வரும் இறைவன்”

  1. Well written Mr.Raman. Everyone will get such experiences, as you rightly said. But only a few can realise that its the almighty’s leela. People might brush these aside as mere coincidence…but we cant.

    Though everyone ‘feels’ such incidents, you have beautifully consolidated your experience.

  2. Excellent article. It is faith without doubt that can provide divine experiences. God is everywhere, even within us and we have to take steps to see him. Bhakthi, purity and righteousness can help you see God in all that you do and all that you see. It is a step by step process and for the common man, he has to orient his mind to see God in the photo frame that he stands before. Once it becomes established that the God could be brought into the photo frame, then you move to the next step. Hinduism gives great opportunities to the Bhaktha to do rituals by one’s own hands. Plucking flowers, making garlands and putting it on the Lord are the elementary stages of Bhakthi. Since my young ages, I am very happy to grind Sandal wood for putting a “pottu” for the Lord. I never liked to bring in a sandal tablet and make easy “sandhanam” to be used for pooja. At last, when you pass all the elementary stages and did your Karma satisfactorily, you will no more need a photo of Lord to visualise him/her. Then you will come to know the “Nirguna Brahman”.

  3. I have experienced a few things in my life when I was young which defy explanation. I think of them as ‘leela’ of the god as I didn’t pray for them!

  4. உண்மை அய்யா , இந்த கட்டுரை படிக்கும் போதே உடல் சிலிர்கிறது, சிறிய அலட்டல் இல்லாமல் நல்ல கருத்துக்கள் சொல்லியுள்ளிர்கள் . அடியவர்கடியவன் இறைவன் நிச்சயம் நம்மை தேடி வருவார், நன்றி அய்யா

  5. வணக்கம்

    கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

    ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

    இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், …. இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

    நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

    இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

    திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

    உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.

    அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

    லிங்க்ஐ படியுங்க.

    https://tamil.vallalyaar.com/?page_id=80

    blogs

    sagakalvi.blogspot.com
    kanmanimaalai.blogspot.in

    Video link
    https://sagakalvi.blogspot.in/2013/06/2013.html

    Thanks

    இறைவன் ஒருவர்

  6. நல்ல தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. என்னால் முடிந்த ஆன்மீக தகவல்களை இந்த இணையதளத்தின் மூலம் வெளியிடுகிறேன். திருமூலரும்,வள்ளலாரும் இறைவன் எங்கு இருக்கிறான் என்பதை இந்த பதிவில் இனைத்துள்ளேன்…
    https://www.tamilkadal.com/?p=2142

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *