சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப் பகுதி]

முந்தைய பகுதிகள்: பகுதி 1பகுதி 2பகுதி 3,  பகுதி 4.

(15)

chandralekhaஇனி சந்திரலேகா பக்கம் திரும்பவேண்டும். சந்திரலேகா இந்திய நடன உலகத்திலேயே விக்கிரநாசினியாகப் பெயர் பெற்றவர். அதாவது, இந்திய நடனம், அதன் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை, அதன் எல்லா வகை வடிவங்களிலும் எதையெல்லாம் தன் சிறப்பாகக் கருதுகிறதோ அவை அத்தனையையும் மறுப்பவர் சந்திரலேகா. இந்திய நடனம் கொண்டுள்ள மத ரீதியான உறவுகள், அதன் முக்கிய சிறப்பான அங்கங்கள் என்று கருதுபவை, எந்த உன்னதத்தை நோக்கி அது பயணப்படுவதாகச் சொல்கிறதோ அது, எல்லாவற்றையுமே உதறியவர் அவர். நடனம் அதன் அடிப்படைகளுக்குச் செல்லவேண்டும் என்பது அவர் பிரகடனம். அதாவது, உடல் சார்ந்தது. உடலின் மூலாதாரமான சக்தியைச் சார்ந்த்து தான் நடனம். மற்றவைகள் எல்லாம் பின்னால் வந்து சேர்ந்தவை; தன் பிரகடனங்கள் எல்லாவற்றுக்கும் பரதன் தான் ஆதாரம் என்பார் அவர். எனக்கு என் அறியாமை என்னை விட்டுப் போவதில்லை. கலை– எந்தக் கலையுமே, அதன் சாதனத்தை மீறிச் செல்வதுதான்; ஓர் உன்னத நிலையை எட்டுவது தான்; நடனமும் அதன் சாதனமான உடலை மீறிய ஒன்றை நமக்குச் சொல்லவேண்டும் அது கலையானால் என்று நம்புகிறேன். இதைத்தான், பரதனிலிருந்து தொடங்கி எல்லா ஞானிகளும், கலைஞர்களும் நமக்குச் சொல்லிவருகிறார்கள். பரதனின் நாட்டிய சாஸ்திரமே, ஒரு புராணக் கதையாகத் தான் தொடக்கம் கொள்கிறது. அது ஐந்தாவது வேதம் எனப்படுவதன் காரணம், எந்த எளியவனுக்கும் புரிந்து அவனை மகிழ்விக்கும் சாதனம் ஒன்று வேண்டும் என்று தேவர்கள் வேண்ட, அதனால் உருவாக்கப்பட்டது என்பது பரதத்தின் பூர்வாங்கம். சந்திரலேகாவின் விக்கிரவிநாசம் பரதத்தின் தவறான பிற்சேர்க்கைகளை, அதன் மூட நம்பிக்கைகளை உடைக்கும் நோக்கம் கொண்டதாகத் தெரியவில்லை, மாறாக, இது கற்காலத்தை நோக்கிய ஒரு பயணமாகத்தான் தோன்றுகிறது.

tishani-doshi-and-shaji-john-in-shariraநான் அவருடைய மண்டல என்னும் நடனத்தை மாத்திரமே பார்க்கும் அதிர்ஷ்டத்தை, அல்லது துரதிர்ஷ்டத்தைப் பெற்றவன். மண்டலம் வெறும் உடற்பயிற்சியை நடனம் என்றும் கலை என்றும் நடனம் என்றும் அலங்காரமான வார்த்தைகளில் நம்மை பிரமிக்கவைக்கும் மொழியில் உச்சாடனம் செய்து மேடையில் காட்சிக்குத் தந்து மயக்கும் காரியமாகவே எனக்குப் பட்டது. இதை விட, ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஃப்ளோர் எக்சர்ஸைஸஸ் (Floor Exercises) என்ற பெயரில் செய்யப்படும் மனித உடல் விளையாட்டு மாயங்கள் அழகானவை. நம்மை வியப்பில் ஆழ்த்துபவை. அதையெல்லாம் விட முக்கியமாக அவை மிகுந்த நேர்மையுடன் ‘உடல் பயிற்சி’ என்றே ஓர் எளிமையான பெயரில் சொல்லப்படுகின்றன.

a-scene-from-chandralekhas-shariraசந்திரலேகாவின் சொற்களில் பிரமாதப்படுத்தப்படும் உடல் காட்சிகளை விட ஒலிம்பிக் ஃப்ளோர் எக்ஸர்ஸைஸஸ் எனக்கு அதிக அழகுடையனவாக, என்னை மகிழ்விப்பனவாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இதையெல்லாம் பார்த்த பிறகு, யாமினியிடம் ஓடோடிச் சென்று, “அம்மா, நீங்கள் வேறு ஒன்றும் புதிதாகச் செய்யவேண்டாம், உங்கள் பழைய ‘கிருஷ்ண சப்த’மே போதும்,” என்று உரத்துச் சொல்லத் தோன்றுகிறது எனக்கு. உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்களேன்; பீம் சேன் ஜோஷியின், ‘ஜோ பஜே ஹரி கோ ஸதா’ கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதிலிருந்து, சந்திரலேகா சொல்வது போல, ‘பின்னால் வந்த எல்லாப் புனிதச் சேர்க்கைகளையும், மத உறவுகளையும், உன்னதத்தை நோக்கிய எழுச்சிகளையும் ஒவ்வொன்றாகச் சுரண்டி எடுத்துவிட்டால், பின் என்ன மிஞ்சும்? வெறும் அர்த்தமற்ற சத்தங்களே. அது தான் சந்திரலேகாவுக்கு சங்கீதமாக இருக்கும்.

 

bharatham03இதையெல்லாம் பார்த்த, கேட்ட பிறகு, சாதனா போன்ற ஒருவரின் நடனத்தைப் பார்க்கும் பாக்கியம் நமக்கு இல்லாது போய்விட்டதே என்ற வருத்தம் தான் இப்போது எனக்கு மேலிடுகிறது. அவர் நடனத்தைப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள் இருப்பின் அவர்கள் தான் அது பற்றிச் சொல்ல வேண்டும். அவர்தான் ஓர் உண்மையான கலைஞராக, எப்போதும் ஒரு தேடலிலேயே தன் வாழ்க்கையைச் செலவிட்டவராக, ஒரு நிதானத்தோடேயே சிந்தித்துக்கொண்டிருந்தவராக எனக்குப் படுகிறது. அவர் இது பற்றியெல்லாம் எழுதியிருப்பதைப் படித்த பிறகு, அவர் வார்த்தைகளில் உண்மையும் இருப்பதாக, அவர் பகட்டோ டாம்பீகமோ அற்ற ஒரு கலா வியக்தியாக எனக்குத் தோன்றுகிறார்.

 

frfrancis-barbozaபைபிள் கதைகளை பரத நாட்டியத்தில் சொல்ல முயன்ற ஃப்ரான்ஸிஸ் பார்போஸா (Fr.Francis Barboza)-வைப் பற்றிச் சொல்லவேண்டும். அவர் ஏதும் புதிய பாதை கண்டு பயணித்தவர் என்று சொல்ல முடியாது. அவரது நடனத்தின் மையப் பொருள் பக்தியாகத் தான் இருந்தது. அத்தோடு அவர் பரதத்தின் அடிப்படைகளை, இலக்கணத்தைத் துறந்தவர் இல்லை. ஒரு சில மாறுதல்கள். தில்லானா ஆடும் போது அவர் சஞ்சாரி பாவத்தைக் கையாள்கிறார். அது ஒன்று. இரண்டு, வெகு காலமாக, ஹிந்து மத கதைகளையும், நம்பிக்கைகளையும் மட்டுமே பேசிக்கொண்டிருந்த ஒரு நடனத்தை அவர் கத்தோலிக்க மத பக்தியைச் சொல்லக் கையாள்கிறார் என்பதும் ஆகும். ஏன் பரதம் ஹிந்து மதம் சார்த்தே இருக்கவேண்டுமா அது ஒரு விதியா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். அது அவ்வாறு தான் சரித்திரத்தில் அதன் ஈடுபாடாக இருந்திருக்கிறது அதுவும் பன்னெடுங்காலமாக என்பதைத் தவிர விதி என்று ஏதும் இல்லை. பக்தியும் கிறித்துவத்துக்கு அந்நியமான ஒரு வெளிப்பாடு இல்லை தான். சில கிறித்துவ மத ஞானிகள், கவிஞர்களை எடுத்துக்கொண்டால, பக்தி கிறித்துவத்துக்கு அந்நியமில்லை தான். ஹிந்து மதத்தில் உள்ளது போன்று அவ்வளவு வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடவில்லை நூற்றாண்டுகள் பலவாக. இருந்தாலும், பாதிரியார் ஃப்ரான்ஸிஸ் பர்போஸா அவர் மதம் சார்த்த பெரியவர்கள், மத ஆச்சாரியார்கள், பின்னும் மற்றோர் என்ன சொல்வார்களோ என்ற தயக்கங்கள் இல்லாது, அந்நிய மத வெளிகளிலும் புகுந்து அதன் ஈடுபாடுகளிலும் மனம் கொள்வது வரவேற்க வேண்டிய விஷயம் தான். இந்த அளவு துணிச்சலோ, முனைப்போ நம் வீட்டு முற்றத்தில் கூட நம்மால் காண முடியவில்லையே. 

 

(16)

art-lover-nehru-congratulating-mrinalini-sarabhai-after-the-manushya-performance-in-delhi-courtesy-darpana-archivesமிருணாளினி சாராபாய் கதகளி பாணியில் மனுஷ்ய என்றொரு நடனத்தை அமைத்துள்ளதாகக் கேள்விப்படுகிறேன். கதகளி பாணி என்றால் அதன் ஆஹார்யத்தைத் தவிர்த்து என்றும் அது மிக நன்றாக வந்துள்ளதாக டாக்டர் சார்லஸ் ஃபாப்ரி (Dr. Charles Fabri) அதைப் பாராட்டியுள்ளார். ஃபாப்ரி சொல்கிறார் என்றால் அதைக கவனத்துடன் கேட்கவேண்டும். ஒடிஸ்ஸியின் புனர் ஜன்மத்திற்கும் அதன் அங்கீகாரத்திற்கும் சார்ல்ஸ் ஃபாப்ரியின் பங்களிப்பு முக்கியமானது. கதகளி ஆஹார்யத்தை ஒதுக்கியது என்றால் அது சுவாரஸ்யமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். ஜெர்மன், மொகலாயப் பாத்திரங்களை பச்சா, கத்தி பாத்திரங்களாக்கி, கதகளி பாணியையே கேலிக்கூத்தாக்கிய International Centre for Kathakali யின் காரியங்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்கவில்லை.

 

mrinalini-sarabhai-with-her-daughter-mallika-sarabhaiஆனால் தொலைக்காட்சியில் தாகூரின் சண்டாலிகாவை மிருணாளினி சாராபாய் நாட்டிய நாடகமாக்கியதைப் பார்த்திருக்கிறேன். அது சரியான பாதையில் எடுத்து வைத்துள்ள காலடி என்றும், மிகவும் உண்மையான, சிரத்தையோடு செய்யப்பட்ட ஒன்று என்றும், எனக்குத் தோன்றியது. மற்றவர்களும் அத்தகைய எளிமையுடன் உண்மையுடன் சிரத்தையுடன் முயலவேண்டும் என்றும் நான் விரும்புவேன். அதை ஒரு மகத்தான படைப்பு என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் சுற்றி நான் பார்க்கும் பாலைவெளியைப் பார்க்கும் போது, சண்டாலிகாவுக்கு கை வலிக்கும் வரை கரகோஷம் செய்யலாம் என்று தான் தோன்றுகிறது. அவருடைய மற்ற புதிய நடனப் படைப்புககளைப் பற்றி எனக்குத் தெரியாது.

 

 

(17)

narendra-sharmaஎன்னை மிகவும் கவர்ந்த நரேந்திர சர்மாவைப் பற்றி, மிருணாளினி சாராபாய்க்குப் பிறகுதான் பேசவேண்டும் என்று நான் நினைத்திருந்ததால் அவரைக் கடைசியாக எடுத்துக்கொள்கிறேன். நரேந்திர ஷர்மா, பழக்கம், சம்பிரதாயம், மரபு இப்படியெல்லாம் கவலைப்பட்டுக் கொள்வதில்லை. உதய் ஷங்கரின் அல்மோராவிலிருந்து நீளும் நிழல் அவரது என்று சிலர் சொல்லக்கூடும். இருக்கலாம். அது பற்றிச் சொல்லும் தகுதி எனக்கில்லை. ஏனெனில் நான் உதய் ஷங்கரின், அவரது குழுவினரின் நடனங்கள் எதையும் நேரில் பார்த்ததில்லை. இருபது வருடங்களுக்கு முன் 1960-களில் எப்போதோ அவரது படம் பிடிக்கப்பட்ட கல்பனாவைப் பார்த்த மங்கிய நினைவுகள், பின் சில புகைப்படங்கள் தான் எனக்குத் தெரிந்தது. அது அப்படி உண்மையாக இருந்தாலும், “அதனால் என்ன இப்போது?” என்று தான் எனக்குக் கேட்கத் தோன்றுகிறது. இருபது வருடங்களாக என்று சொல்லலாமா, உதய் ஷங்கர் விட்ட இடத்திலிருந்து அவரிடமிருந்து பெற்றதை முன்னெடுத்துச் செல்கிறாரே, ஒரு மரபு என்றாவது ஒன்றைத் தொடக்கியுள்ளாரே, போதாதா? அதே சமயம் உதய் ஷங்கரின் வாரிசு ஆனந்த ஷங்கரோ வேண்டிய அளவு வரும்படி தரும் பல-சாதனக் காட்சிகளில் (Multi-media shows) தான் காட்சி தருகிறார்.

எழுபதுகளில், நரேந்திர ஷர்மாவின் ‘ஓநாய்ச் சிறுவன்” (Wolf Boy) நாட்டிய நாடகத்தைப் பார்த்த் போது வித்தியாசமான, ஒரு புதிய தடத்தில் அவர் கால் பதிப்பதைப் பார்த்த அனுபவம், இன்றும் ஒரு புத்துணர்வாக மனதில் பதிந்திருக்கிறது. இதோ ஒரு மனிதர், கலைஞராக தான் வாழும் காலத்தை புரிந்துகொள்ள முயல்பவராக, அத்துடன் சம்பாஷிப்பவராக, அதைத் தன் வழியில் எதிர்கொள்கையில், ஒரு புதிய மொழியையும், அதற்கான இலக்கணத்தையும் உருவாக்கியதை, ‘ஓநாய்ச் சிறுவன்’ நாட்டிய நாடகத்தில் பார்த்தேன். இதற்கு நேர் எதிராகத்தான் உமா ஷர்மா-வின் ‘ஸ்திரீ’, இன்றைய பெண் சமுதாயத்தின் கொழுந்துவிட்டெரியும், அல்லது உள்ளுக்குள் குமைந்து வதங்கும் பிரச்சினையைக் கையிலெடுத்த போதிலும், அவர் மரபும் சம்பிரதாயங்களும், தயாரித்து வைத்திருந்த பழங்கஞ்சியையே, (cliches) புதிய லேபிள் ஒட்டி, அட்டைப் பெட்டிகளில் அடைத்து வழங்கியதைப் பார்த்தேன். நரேந்திர ஷர்மாவின் முயற்சிகளில்தான், ஒரு கலைஞன் தான் வாழும் காலத்தோடு உரையாடுவதை, அதை எதிர்கொள்வதைப் பார்த்தேன். ஒரு கலைஞனாயின் அவன் தன் கலைப் படைப்புகளில் தான் வாழ்ந்த காலத்து அனுபவங்களின் பதிவுகளை விட்டுச் செல்கிறான். அதை நரேந்திர ஷர்மாவின் ஓநாய்ச் சிறுவனில் பார்த்தேன். இப்படித்தான் ஒரு கலைஞன் தன்னை, தன் கலை உணர்வுகளை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்கிறான்; கலைஞனாக அவன் வளர்ச்சியும் பரிணாமமும் ஒரு தேக்க நிலையில் ஸ்தம்பித்துவிடவில்லை எனில்.

இன்னும் ஓர் உண்மை. ஓநாய்ச் சிறுவன், a single swallow does not make a summer என்பார்களே அது போல அது ஒரு நாள் விநோதமாக இல்லை தான். அதன் பிறகும் அவர் பல புதிய நடன முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து பார்க்க முடிந்திருக்கிறது தான். ஆனாலும் அவை எதுவும் ஓநாய்ச் சிறுவன் அளித்த புத்துணர்வை, பாதிப்பைத் தரவில்லை. அது உண்மைதான். ஆனாலும் அவர் முயற்சிகள் தொடர்கின்றன; அவற்றில் ஏற்றத் தாழ்வுகள் இருந்த போதிலும்.

narendra-sharmae28099s-dance-troupe-reflects-the-concern-for-environmentசமீபத்தில் நிகழ்ந்த ரவீந்திர ந்ருத்திய நாடக விழா-வில், என்னை மிகவும் கவர்ந்தது, கேலுசரண் மஹாபாத்ரா ஒடிஸ்ஸியில் அளித்த பதாவளி தான். அதற்குப் பிறகு என்னை மிகவும் எதிர்பார்க்க வைத்தது, நரேந்திர ஷர்மாவிடமிருந்து என்ன பார்க்கப் போகிறோம் எனபது தான். அவருடைய நாட்டிய நாடகத்தில் அவ்வப்போது திரையில் சந்தர்ப்பத்தை விளக்க வாசகங்கள் தரப்பட்டது எனக்கு என்னவோ போல் இருந்தது. ஆனால் மேடையில் இடையிடையே வைக்கப்பட்டிருந்த சின்னச் சின்ன மரச் சதுர மேடைகள் (Wooden blocks) நடனக் கோலத்திற்கு உதவியாகவும் புதுமையாகவும் இருந்தன. அது எனக்கு முன்னர் பார்த்திருந்த மார்த்தா கிரஹாமின் நடன நிகழ்ச்சியை நினைவுப்படுத்தியது. இங்கு இந்த முயற்சிகள் நரேந்திர ஷர்மாவை, தன் கருத்து வெளிப்பாட்டிற்கு ஏற்ற நடன அமைப்பை உருவாக்குவதற்கான புதிய வழிமுறைகளைக் காணும் சிந்தனைகள் கொண்டவராகக் காட்டியது. அதே விழாவில் பார்த்த பத்மாவின் நடன பங்களிப்பு பாமரத்தனமாகவும், மிருணாளினி சாராபாயினது புதியதாகவும் சோதனை அம்சங்கள் கொண்டதாகவும் இருந்த போதிலும் எந்த பாதிப்பையும் தராத ஒன்றாகவும் இருந்தது.

இதே மூச்சில் மணிப்பூரிலிருந்து வந்திருந்த ஒரு பாலே முயற்சியை தொலைக்காட்சியில் பார்த்தேன். அது எனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக, கைகொட்டி வரவேற்கத்தக்கதாக இருந்தது. சுற்றுச் சூழலின் நாசத்தைக் கருத்தாகக் கொண்டிருந்த அந்த பாலே, மணிப்பூரின் பாரம்பரிய வீரசாகச விளையாட்டுகள் பலவற்றையும், அநேக நாட்டுப்புற நடனங்களையும் தன்னுள் கொண்டு, மிக வேகமும் வீர்யமும் கொண்ட நடன அசைவுகளால் அகன்ற நடன மேடை முழுதுக்கும் தன்னை விஸ்தரித்துக் கொண்டதும் தன்க்குக் கிடைத்த வெளியை பல தளங்களில் தன்னை விஸ்தரித்துக்கொண்டதும், கிடைக்கும் வெளிக்கும் விஸ்தாரத்துக்கும் ஏற்ப தன்னை புனர் சிருஷ்டித்துக் கொள்ளும் பாங்கும் வியக்க வைத்தன.

நரேந்திர ஷர்மாவின் ஓநாய்ச் சிறுவன் நடன நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்த் இன்னும் பலவும், அவற்றின் தர வேறுபாடுகளையும் மீறி குறிப்பிடத்தக்க புது சிருஷ்டிகள் என்று சொல்ல வேண்டும். இம்முயற்சிகள் மற்றவர்களுக்கு புதிய வழிகளில் சிந்திக்கத் தூண்டவேண்டும்; அவரவர் சிருஷ்டி மனதுக்கு ஏற்ப புதிய நடன இலக்கணத்தையும் மொழியையும் உருவாக்கும் எண்ணத்தைத் தரவேண்டும் என நான் நினைக்கிறேன்.

சம்பிரதாய மரபார்ந்த பாணிகளில் கூட, நர்த்தகர்களும் நர்த்தகிகளும் தாம் வாழும் உலகையும் கடந்து வரும், எதிர்நோக்கும் அனுபவங்களையும் சொல்லவேண்டும் என்ற மனதுடையவர்களாகவும் தமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடங்களையும் விதிமுறைகளையும் மறந்து, தாம் கற்றதிலிருந்து பெற்ற ஆளுமையில் தாம் சொல்ல வந்தது எவ்வாறு வெளிப்பாடு பெறும் என்று மாத்திரம் யோசிப்பார்களானால், தாமாக அவர்கள் ஒரு சொல்முறையை, பாணியை தமக்கென உருவாக்கிக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். இன்னமும் ஒரு முக்கியமானதும் சிறப்பானதுமான விஷயம், அவர்கள் அறியாமலேயே தாம் கற்றதிலிருந்தே ஒரு புதிய மொழியை அவர்கள் உருவாக்கிக்கொள்வதைக் கண்டு அவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்; பாம்பு அவ்வப்போது சட்டை உரித்துக்கொள்வது போல. எலியட்டின் பாழ்நிலம் (Waste Land) இன்னமும் கவிதை தான். அது இங்கிலீஷ் பாஷைதான்; அவர் என்னென்னவற்றையெல்லாம் கடாசி எறிந்திருந்தாலும். அதே போல நரேந்திர ஷர்மா நரேந்திர ஷர்மாதான். இந்தியன் தான். மெர்ஸி கன்னிங்ஹாம் இல்லை அவர்.

சங்கீத நாடக் அகாடமியும் நரேந்திர ஷர்மா போன்ற கலைஞர்களின் ஓநாய்ச் சிறுவன் இன்னும் மற்ற முயற்சிகளின் சிறப்பையும் அவை பழம் தடத்திலிருந்து விலகி புதிய பாதைகளில் பயணிப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்; அங்கீகரிக்கவேண்டும். ரவீந்திர ந்ருத்ய நாடக் விழாவில் அவருக்கும் இடம் தந்திருப்பதும் அங்கீகாரம் தான். சக்கர் (சுழலல்), பேர் கா காம் (கால் வேலை) போன்றவை நிறைந்த சுற்றுச்சுவரைத் தாண்டி வெளியில் காணும் உலகில் கால் பதித்திருப்பவர் நரேந்திர ஷர்மா. சமீபத்தில் அஸ்தாத் தபூ, சங்கீத நாடக் அகாடமியின் திட்டங்களிலும் பார்வையிலும் தம் போன்றவர்களின் கலைக்கு ஏதும் இடமில்லாது இருப்பதைக் கண்டு வருந்தியிருக்கிறார். அஸ்தாத் தபூவின் சில புதிய முயற்சிகள் அரூப வகையானவை, கோவா தெருக்கள் போன்றவை; கிண்டல் நிறைந்தவை. இவையெல்லாம், அகாடமி அங்கீகரித்து விருதுகள் வழங்கி ஆசீர்வதிக்கும் ‘தத்காரை’யும் ‘பேர் கா காமை’ ம், ‘சக்கரை‘யும் விட பல மடங்கு சிருஷ்டி பூர்வமானவை. அர்த்தம் பொருந்தியவை.

வுப்பர்தால்களையும், ஆல்வின் அலேஸ்களையும், மெர்ஸி கன்னிங்ஹாம்களையும், இன்னும் இதுபோன்ற பலரைப் பற்றிப் பேசுவதை கவனமாகவே ஒதுக்கியிருக்கிறேன். இவர்கள் அனைவரது நடன உலகப் பங்களிப்புகளை தில்லியிலும் இன்னும் பல பெரிய நகரங்களில் உள்ள நம் நடனக் கலைஞர்கள் பார்த்தவர்கள் தான். அவர்கள் வந்தார்கள். தம் புதிய சிருஷ்டிகளை ஆடிக்காட்டினார்கள். நம்மவர்கள் பார்த்தார்கள். அத்தோடு கதை முடிந்தது. அவர்கள் வந்து வீசிய புயலில் நம்மவர்களின் புடவைத் தலைப்புகளோ, துப்பட்டாக்களோ லேசாகக் கூட அசைந்ததாகத் தெரியவில்லை.

yamini-krishnamurthy1இவ்வளவும் சொன்ன பிறகு ஒரு சிறிய ஆனால் மிக முக்கியமான விளக்கம் ஒன்று சொல்லத் தேவைப்படுகிறது. நான் இதுகாறும் சொன்னதற்கு அர்த்தம், நமது பாரம்பரியமும், அது சார்ந்த நடன பாணிகளும் கைவிடப்படவேண்டும் என்றோ அவை ஜீவித்திருக்கும் நியாயத்தை இழந்தவை என்றோ சொல்கிறேனா?

என்னை இத்தகைய பழிச்சொல்லிலிருந்து சிதம்பரம் கனக சபையில் ‘காலைத் தூக்கி நின்றாடும் தெய்வம்’ தான் காப்பாற்ற வேண்டும். சம்யுக்தா பாணிக்கிரஹி, தன் பல்லவியை கீர்வாணியில் ஆடுவாரோ இல்லை ஆரபியில் தான் ஆடுவாரோ, ஆனால் தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கவேண்டும். யாமினி கிருஷ்ணமூர்த்தியும் ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் “மரகத மணி….”-க்கு ஆடுவதை நான் மறுபடியும் பார்க்கவேண்டும். இவையெல்லாம் நம் பாரம்பரியத்தின் வளத்தைச் சொல்லும், அழகு கொழிக்கும் பொக்கிஷங்கள். இவற்றை வேண்டாம் என்று சொல்பவன் ஒரு மூர்க்கனாகத் தான் இருக்கவேண்டும். 

[முற்றும்.]

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

வெ.சா தனது கலை, இலக்கிய விமர்சனப் பயணத்தைத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுறும் இந்தத் தருணத்தில் இந்திய நடனங்கள் பற்றிய இக் கட்டுரைத் தொடரை வெளியிடுவதில் தமிழ்ஹிந்து.காம் பெருமையடைகிறது.

4 Replies to “சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப் பகுதி]”

  1. தில்லி சங்கீத நாடக அகாடமி இந்தக் கட்டுரைத் தொடரை வெளியிட்டிருந்தால் தான் ஆச்சரியப்பட்டிருப்பேன். :)))

    இணையத்தில் “எதிர்க்கட்சிக்கு எங்கள் சவால்!”, “ஒபாமாவை ஒன்று கேட்கிறேன்…” வகை விமர்சனங்களுக்கு நடுவில் வித்தியாசமான மிகவும் நுணுக்கமான நெத்தியடி விமர்சனக் கட்டுரை. எதுவுமே தெரியாத என்னைக்கூட அடுத்தமுறை நடன நிகழ்ச்சிகள் பார்க்கும்போது இன்னும் கொஞ்சம் யோசிக்கவைக்கும் கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது. வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் வெளியிட்ட தமிழ்ஹிந்துவுக்கும் நன்றி.

  2. நான் மிகவும் வெகுவாக ரசித்த கட்டுரைத்தொடர் இது. இத்தனை வருடங்களாய் இந்தக் கட்டுரைத்தொடர் வெளிவராமல் இருந்ததே மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். இந்திய இசைக்கலையைக் குறித்தும் வெ.சா எழுத வேண்டும். வெளியிட்ட தமிழ்ஹிந்துவுக்கு நன்றி.

  3. இந்த அளவு அப்பாவிகளாகவும் மனிதர்கள் இருப்பார்களா என்ன? வெங்கட் சாமிநாதன் பர்போஸா பாதிரி குறித்து எழுதியதை படித்த போது அப்படித்தான் தோன்றியது.

  4. நீங்கள் எழுதியது நல்லதாயிற்று, அரவிந்தன். பர்போஸாவைப் பற்றி நான் அறிந்தது, 1980-க்களில் எப்போதோ ஒரு இடை வருடத்தில் தில்லியில் ஒரு நாள் மாலை பார்த்த அவ்ரது நடன நிகழ்ச்சியோடும் அப்போது அவர் பற்றி அறிந்த தகவல்களோடும் நின்று விட்டது. அதற்கு மேல் என் டேடா பேஸ் அப்டேட் ஆகவில்லை. என்ன செய்ய? அவர் பற்றி நீங்கள் சொல்லும் தகவல்கள் எல்லாம் எனக்கு புதிது. அனேகம் பேருக்கு புதிதாகத் தான் இருக்கும். ஆகவே இதுபற்றி விவரமாக நீங்கள் எழுதுவது தான் நல்லது.

Leave a Reply

Your email address will not be published.