சாதி எனப்படுவது யாதெனின்…

to-kovaiஜன்னலின் வழியாக குளிர்ந்த காற்று வீசியது. “ஆயிற்று, இன்னும் இரண்டு மணி நேரத்தில் கோவை வந்து விடும். சுவாமிகளை இன்று மாலைக்குள் சந்திக்கலாம். அந்த நினைப்பே மனதில் இனம்புரியாத பரவசத்தை ஏற்படுத்தியது. நெஞ்சில் பள்ளிகொண்ட ரங்கநாதனின் உருவம் பொறித்த டாலர் இனிமையாக வருடியது.

ரங்கன் என்னை ஆட்கொண்டு இன்றோடு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. அதற்குப்பின் இன்று தான் சுவாமிகளை சந்திக்கிறேன்.

அந்த நாள் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது…

அது என் அலுவலக நண்பன் ராமுவின் வீடு. மயிலாப்பூரின் பாரம்பரியமான வீடு. முற்றத்தில் ஜமக்காளத்தில் அந்த சாது அமர்ந்திருந்தார். அறுபது வயது இருக்கலாம். குரல் எடுப்பாக இருந்தது. பலரின் சந்தேகங்களுக்கு விடை அளித்தார். நானோ அவர் கண்ணில் படாமல் ஒரு தூணிற்குப் பின்னால் அமர்ந்து இருந்தேன். ராமுதான் வந்து என்னை அழைத்துப் போனான். “சுவாமி, இவன் என் நண்பன் கோபால். ஆன்மிகப் புத்தகங்கள் நிறைய படிப்பான். உங்களைப் பார்க்க அழைத்துக்கொண்டு வந்தேன்,” என்றான்.

ஸ்வாமிகள் என்னை அன்போடு பார்த்தார். உபநிடதங்கள் மற்றும் விவேகானந்தர் பற்றிப் பேச்சு வந்தது. நானும் எனக்கு தியானத்தின் மீது இருந்த அவாவைப் பற்றிச் சொன்னேன். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் மெல்ல குனிந்து அவரிடம், “சுவாமி, எனக்கு தியான மந்திர தீக்ஷை குடுக்கணும்..” என்று விண்ணப்பம் வைத்தேன்.

அவர் முகம் உணர்ச்சியற்று சிறிது நேரம் இருந்தது. என்னை உற்றுப் பார்த்தவர், “உன் ஜாதி என்ன?” என்றார்.

எனக்குள் ரௌத்திரம் ஏறுவதை உணர்ந்தேன். ராமுவும் சற்று தடுமாறித்தான் போனான்.

“ஏன் ஜாதி என்ன கெட்ட விஷயமா?” என்று அவர் தொடர்க்கேள்வி போட, சற்று தடுமாறி, “வன்னியர்” என்று கூறி முடித்தேன்.

“குல தெய்வம் என்ன?” சுவாமியின் அடுத்த கேள்வி.

“ரங்கநாதர்” என்று நான் முடித்தேன்.

“தியானம் எல்லாம் இப்போ வேண்டாம். நீ போய் உங்க குலகுருவைப் பார்த்து சமய தீக்ஷை வாங்கி அவர் சொல்லறபடி செய். அஞ்சு வருஷம் கழிச்சுப் பார்க்கலாம்.”

எனக்குப் புரியவில்லை. “சுவாமி எனக்குக் குலகுரு அப்படீன்னு யாரும் இல்லை,” என்று நான் தயங்கிக் கூற, சுவாமி சிரித்தார். தமிழ்நாட்டில குலகுரு இல்லாத ஜாதி கிடையாது. பெரியவங்களைக் கேட்டு விசாரி… ஹரி ஓம்!” இவ்வாறு முடித்து விட்டு சுவாமி என் கையில் இரண்டு வாழை பழங்களைக் கொடுத்தார்.

இப்படியும் ஓர் உபதேசமா? ஜாதி என்ன என்று கேள்வி வேறு! அதுவும் தலைமுறைக்கும் கேள்விப்படாத குருவைப் பார்க்க உபதேசம் வேறு. எனக்கு வெறுப்பாக இருந்தது. ஆனாலும் உள்மனத்தில், ‘செய்துதான் பார்’ என்று ஒரு ஹீனமான குரல் சொல்லியது.

வீட்டில் அப்பா குலகுரு என்றால் என்ன என்று என்னையே திருப்பிக் கேட்டார். தாத்தாதான் கும்பகோணத்தில் எங்கள் மடம் இருக்கிறது என்றும் அங்கே விசாரித்தால் தெரியும் என்று கூறினார். ஒரு ஞாயிற்றுக் கிழமை கிளம்பிவிட்டேன். மடத்தில் இருந்த ஒரு வயதான தம்பதிதான் எனக்கு கிருஷ்ண பட்டரின் விலாசம் தந்தனர்.

பட்டர் வெண்ணைக் கடை வைத்திருந்தார். நெற்றி முழுதும் நாமம். முகத்தில் தெய்வீக ஒளி தெரிந்தது. நான், “உங்களைப் பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு, அப்படியே தீக்ஷை வாங்க வந்தேன்,” என்று கூறி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னுடைய மடம், குலம் போன்றவற்றை உறுதிசெய்து கொண்டபின், என்னைப் பார்த்துச் சிரித்தார். “நாத்திகப் பிரசாரத்தில இரண்டு தலைமுறை மறந்து போனதை புதிப்பிக்க இந்த முப்பது வயதில் தீக்ஷைக்கு வந்திருக்கிறாய். யார் உன்னை தீக்ஷை வாங்கச் சொன்னார்?

நான் சுவாமி விவரம் சொன்னேன்.

“கல்யாணம் ஆயிடுச்சா?”

“ஆச்சு அய்யா. ரெண்டு குழந்தை.”

“போய் குளத்தில் குளிச்சுட்டு, ஆராவமுதனை தரிசனம் செஞ்சுட்டு வா!” என்று ஆணையிட்டார்.

sri-ranganatharநான் கோயிலில் இருந்து பூஜை சாமான்களோடு வந்தபோது அவர் தயாராக இருந்தார். எதிரே பெரிதாக இருந்த பள்ளிகொண்ட பெருமாள் படத்தைக் காட்டி, இனிமே அவன் ஒருத்தன் தான் உனக்கு எல்லாம். புரிஞ்சுதா? வேற்று தெய்வம் யாரையும் அண்டக் கூடாது. இப்போ அவன் திருவடி ஸ்பரிசம் உனக்குக் கிடைக்கப் போறது. மனிதனாப் பிறந்தாலும் கிடைக்காத இந்த அபூர்வ பாக்கியம் உனக்குக் கிடைச்சிருக்கு,” என்றபடி உமி அடுப்பில் பழுக்கக் காய்ச்சி வைத்திருந்த சங்கு சக்கரம் இரண்டையும் என் இரண்டு தோள்களில் அச்சாகப் பதித்தார். காதுக்கு அருகில் வந்து அஷ்டாக்ஷரத்தை மூன்று முறை சொல்லி, உனக்கு பிறவிப் படகு இந்த மந்திரம்தான். ரெண்டு வேளை பூஜையோட ஜபம் பண்ணு. ஒழுக்கமும், ஆசாரமும் சேர்ந்த வாழ்க்கை வாழ்ந்தாத்தான் பெருமாள் உனக்கு செவி சாய்ப்பான். பாகவதாளோட எப்பவும் சிநேகம் வச்சு அவாளை சேவிச்சுட்டு வா. மரக்கறி மட்டுமே சாப்பிடு. ஏகாதசி விரதம் இரு. பெருமாள் உன்னோடவே இருப்பார். வைகுண்ட ஏகாதசிக்கு இங்க வந்துடு.”

நான் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றபின், கிளம்ப எத்தனிக்கையில், என் தயக்கத்தை விட்டு அவரிடம் கேட்டேன், “குரு தேவா! இந்த உபதேசத்துக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்?”

பட்டர் சிரித்தார். ஆண்டவன் உபாசனைக்குன்னுதான் ஜாதியே உண்டாச்சு தெரியுமா? மேலும், உன் ஜாதியே பெருமாளுக்குக் கட்டுப்பட்டது. கடன்பட்டது. மேலும் எங்க குலமே உங்க ஜாதியோட ஈஸ்வர சம்பந்தம் பண்ணி வைக்கக் கடன்பட்டது. மத்தபடி ஜாதிங்கறது பெருமைக்கு இல்லை. இப்போ அதை எல்லாம் போட்டுக் குழப்பிக்காம பெருமாளை மட்டுமே நினை!”

meditationபட்டர் சொன்னபடி ரங்கனுக்கு மட்டுமே என்னை அர்ப்பணித்தேன். வாரா வாரம் ஏதாவது பஜனைக்குச் சென்றுவிடுவேன். அலுவல், குடும்பம் மற்றும் ஆன்மிகம் என்ற முக்கோணத்தில் வாழ்க்கை பயணித்தது. ஆனாலும் ஜெபத்தில் பெருமாளின் பிம்பம் நிலைக்க மறுத்தது. வைகுண்ட ஏகாதசியில் பட்டரிடம் இது குறித்துக் கேட்ட போது, “இனிமே தனியா படு. பொண்டாட்டியோட வேண்டாம்!” என்று கட்டளை வந்தது. அரங்கன் மனக்கண்ணில் நிலை நிற்க இப்போது சற்று ஒப்புக் கொண்டான். அதிலும் என் நாள்களின் ஏற்ற இறக்கம் போல அவனும் தெளிவாகவும் கலங்கலாகவும் தெரிந்தான்.

vishnu1இப்படியே மூன்று வருடம் சென்றது. ஒரு நாள் சனிக்கிழமை. விமரிசையாக பூஜை முடித்து, ஜெபத்தில் அமர்ந்தேன். ஒரு மாலை கூட ஜபம் முடியவில்லை. விரல் உருட்டுவது தானாக நின்றது. மந்திரம் நின்றது. உடல் விரைத்தது போலானது. சுற்றிலும் ஏதோவொரு ஒளி. என் கண்ணுக்கு எதிரே …ஆ! இது என்ன பேரதிசயம்? வெண்ணிற பாற்கடலின் நடுவே ஜோதி சொரூபமாய் ஆராவமுதன் அல்லவா காட்சி தருகிறான்! வழக்கமாகக் காணும் திருவுருவம் அல்ல இது. இதில் ஜீவனும் சலனமும் தெய்வீகமும் இருந்தது.

எத்தனை நேரம் அந்தக் காட்சியில் லயித்தேனோ தெரியாது. விழித்துப் பார்த்த போதுதான் தெரிந்தது, இரண்டு மணி நேரத்திற்கு மேல்!

அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழமை கும்பகோணத்துக்கு ஓடினேன். என்னைப் பார்த்தது பட்டர் ஏதோ புரிந்தவர் போலப் புன்னகைத்தார். “பாற்கடல் பொங்கிற்றா? பாம்பணை சீறிற்றா? அறிதுயிலாளன் கண் திறந்து நோக்கினானா?”

கண்களில் நீர் வழிய நான் ஆமோதிக்க, பட்டர் அருகில் வந்து என் தலையைத் தொட்டு ஆசிர்வதித்தார். “உனக்கும் பரம்பொருளுக்கும் இடையே இருந்த மாயை இப்போதான் விலக ஆரம்பிச்சிருக்கு. தொடர்ந்து சாதனை பண்ணு. இப்பிறவியிலேயே பெருமாள் உனக்குக் கிடைப்பான்!”

அடுத்த இரண்டு வருடங்களில் ரங்கன் என்னோடு பேசவும் செய்தான். இதற்குள் என் குடும்பமும் என் சொந்த பந்தம் எல்லாரும் என் முன்னேற்றத்தைக் கேள்விப்பட்டு பட்டரிடம் முத்திரை வாங்கிக் கொண்டனர். என் தாத்தா, கண்ணீருடன் என்னிடம், “அம்பது வருஷமா, நம்ம தேசத்தில நடந்த நாஸ்திகப் பிரசாரத்தில மயங்கி வாழ்க்கையை வீணடிச்சுட்டேன். சாகுற காலத்திலாவது வழி காட்டினாயே என் பேராண்டி!” என கையைப் பிடித்துக் கொண்டு அழுதார். என் குடும்பத்தில் எல்லோரும் பெருமையாக திருமண் வைத்துக் கொண்டு சதா உலாவினர். எங்கள் ஊரின் பழமையான கோயில் இப்போது தினசரி பூஜையால் பொலிவுற்றது.

நான் எனது ஜெபத்திலும் தியானத்திலும் இப்போது சமதளத்தில்தான் இருந்தேன். கண்ணைத் திறந்தவுடன் மறையும் ரங்கன் என்னை மிகவும் சோதித்தான். கீதையில் அவன் உறுதி கொடுத்த புத்தி யோகம் என்னில் வர மறுத்தது. பட்டரோ, கண்டவரை திருப்தியோடு இரு என்று என்னை சமாதானப்படுத்தினார். ஆனாலும் எனக்கு சமாதானம் ஏற்படவில்லை.

இந்த நேரத்தில்தான் ஒரு நாள் ராமு என்னைப் பார்க்க வந்தான். “கோபால்! போன வாரம் சுவாமியைப் பாத்தேன். உன்னைப் பத்தி விசாரிச்சார். உன் முன்னேற்றம் பத்தி சொன்னேன். உன்னை கோயம்புத்தூர் வரச் சொன்னார்.” அவன் என்னமோ சாதாரணமாய்த் தான் சொன்னான். எனக்குள் ஏதோ மின்னிற்று. ஸ்வாமிகள் சொன்ன அந்த ஐந்து வருடம்! அப்படியும் இருக்குமோ? அல்லது என் இன்றைய நிலையை அவர் அறிந்து விட்டாரோ? என் அடங்காத தாகத்தைத் தணிப்பாரோ? ராமுவோடு அந்த ஞாயிறு கோவை கிளம்பி விட்டேன்.

அது கோவையைச் சேர்ந்த ஓர் அன்னதான மடம். சுவாமி அரைக்கண் மூடிய நிலையில் சீடர்களுடன் அமர்ந்திருந்தார். நூறு பேருக்கு மேல் இருந்தனர். முன்னைவிட சற்று மெலிந்திருந்தார். இடையில் ஒரு சிறு காவித் துணி மட்டும். நாங்களும் அமர்ந்தோம். சுவாமி கண்ணைத் திறந்ததும் என் மீதுதான் பார்வையைப் பதித்தார். அப் பார்வையில் ஒரு சிரிப்பு மின்னலைப் போல் ஓடி மறைந்தது. “என்ன கோபால், உன் கண்ணன் புத்தியோகம் தரலையா?” சுவாமி புன்னகையோடு இன்னும் என்னைப் பார்த்தபடியே இருந்தார்.

ஆ! இது என்ன? என் மனதில் உள்ளது சுவாமிக்கு எப்படித் தெரிந்தது? என் கடந்த ஆண்டுத் தேடலின் முடிவு வந்து விட்டதோ?. வைரச் சுரங்கத்தை ஆண்டுக் கணக்காகத் தேடினவன் அதனை அன்டினதும் ஆண்டாண்டுச் சோர்வு நீங்கியது போல உணர்ந்தேன். சுவாமி தொடர்ந்தார்…

“பகவான், தன்னை இடைவிடாது அன்போடு பூசனை செய்யும் யோகிக்கு தன்னை வந்தடைய உதவும் புத்தியோகம் என்னும் அறிவை அளிக்கிறான். அது தானாகவே நிகழ்வது. அவனாகவே கொடுப்பது. பக்தி யோகிக்கு ஞானப் பாதையும் சேர்ந்து கிடைக்கும் தருணம் இது. அந்தத் தருணம் எப்போது வாய்க்கிறது என்பது பலருக்குத் தெரியாது.”

எனக்குப் புரிந்து விட்டது. என் கேள்விகளுக்கு விடை இதோ என் எதிரிலேயே இருக்கும் ஞானக் கோயிலில்தான் இருக்கிறது! கண்களில் நீர் பெருக, கால்கள் பின்ன நடந்து சென்று சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தேன். அடைக்கலம் கொடுக்கும் பாவனையில், “கிருஷ்ணா!..” என்று ஆசிர்வதித்தார்.

ராமுவைப் பார்த்து, “அந்த ஸ்லோகம் சொல்லு!” என்றார். ராமு ஆரம்பித்தான்

தேஷாம் சதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீத்தி பூர்வகம் |
ததாமி புத்தியோகம் தம் யேன மாம் உபயாந்தி தே ||

meditation3சுவாமி சிலாகித்தார். “ஆஹா! என்ன ஒரு கம்பீரம்! என்ன ஒரு கருணை! எல்லாரும் சற்று நேரம் இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தின் பேரில் தியானம் பண்ணுங்கள்!” என்று கட்டளை இட, எல்லாரும் கண்களை மூடினோம். சற்று நேரத்தில், என் புருவ மத்தியில் ஏதோ குறுகுறுப்பு.. யாரோ தொட்டது போல்! உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது. ரங்கன் அப்போது மின்னலைப்போல் தோன்றி மறைந்தான். எங்கும் ஒளி வெள்ளம்! காதில் மந்திர ஒலி! இது தேவர் யாரோ கூறுகின்றனரா அல்லது சாக்ஷாத் கண்ணனோ? இல்லை இல்லை! நிஜமாகவே என் காதில் கேட்கும் ஒலி! மூன்று முறை கேட்ட மந்திரம் நின்றுவிட்டது.

ஐம்புலன்களும் இழுத்துக் கட்டும் அறிவின் கீற்று இப்போது சூக்குமமாகத் தென்பட்டது. என் சுய விலாசத்திற்கு அருகில் அந்த அறிவு இருந்தது. இப்போது காட்சி மாறியது. கையில் சாட்டையுடன் கேசவன்! ஒரு விரலை உயர்த்திக் கொண்டு தன் நண்பனுக்கு உபதேசம் செய்து கொண்டு இருந்தான். அதே ஸ்லோகம்! புத்தி யோகம்!

யாரோ தொட்டது போல உணர்ந்து கண் திறந்தேன். எதிரே சுவாமி நின்றிருந்தார். எல்லாரும் கலைந்து விட்டிருந்தனர். நான் சுவாமியைப் பார்த்து, “சுவாமி அந்த மந்திரம்!… நீங்கள் தான் சொன்னதா?” என்று தடுமாறிக் கேட்க, “நீ ஐந்து வருஷத்துக்கு முன் கேட்ட தீக்ஷை குடுத்தாயிற்று. இனிமேல் அதுதான் உன் மோக்ஷப் படகு!” என்றார்.

சுவாமி தன் கையில் தயாராய் வைத்திருந்த ஜப மாலையை என்னிடம் கொடுத்தார். மறுபடியும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தேன்.

மாலையில் கிளம்பத் தயாரானோம். சுவாமியிடம் விடைபெற்று திரும்ப எத்தனிக்கையில், “சுவாமி ஒரு சந்தேகம்!” என்றேன். சுவாமி பார்வையாலேயே மேலே சொல்லும்படி சொன்னார். நான் தொடர்ந்து, “முன்பு எனக்கு ஜாதியின் அவசியத்தையும், குல ஆசாரத்தையும் மதிக்கச் சொன்னீர்கள். பட்டரும் அதையே சொன்னார். இன்னமும் அந்த ஆசாரங்கள் தேவையா?”

சுவாமி சிரித்தார். “இன்று வரை மட்டுமே அவற்றின் தேவை இருந்தது. நீ ஆன்மிக வாழ்வின் முதல் படியைக் கடந்து விட்டாய். இனி அவை உனக்குத் தேவை இல்லை. ஆனால் தன்னளவில் ஜாதிக்கு ஒரு தேவை உள்ளது.. அதுவும் மோக்ஷ சாதனமாக உதவக் கூடும்…  இனி எங்கும் எந்த ஜாதியையும் பற்றி இழிவாகப் பேசாதே!”

எனக்கும் ராமுவுக்கும் ஞானத்தின் இன்னொரு ஊற்றுக்கண் திறந்தது.

27 Replies to “சாதி எனப்படுவது யாதெனின்…”

  1. மிக அற்புதமான கதை. ஆழ்ந்த சிந்தனை.
    கதையை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் வகைளில் எழுதி உள்ளார். திரு நெடியோன் குமரன் அவர்களுக்கு நன்றி.

  2. அருமை! நன்றி! பஜனை என்று சொல்லாமல் நாம சங்கீர்த்தனம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்குமா!

  3. இது கற்பனையா அனுபவமா எல்லோர்ர்க்கும் இது சாத்தியமா. நான் அதிர்ந்து போனது தான் உண்மை. நெடியோன் உமக்கு கிடைத்தது எனக்கு கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்.

  4. திரு சோமசுந்தரம் , திரு s n k m, திரு சுலேகா ,

    பாராட்டுக்கு நன்றி. உபாசனையின் மகத்துவத்தைப் பற்றி விளக்கி எழுத இருந்த அவா இக்கதையின் மூலம் நிறைவேறியது. கூடவே உபாசனையோடு பின்னிப் பிணைந்த சமூக அமைப்புகளான சாதி, குலம் போன்றவை பற்றியும் சுய தெளிவுக்காகவும், என் தமிழ் சகோதரர்களுக்காகவும், இக்கதையில் இயற்கையான சேர்க்கை விளைந்தது. இக்கதையில் நான் எழுதாத பிற செய்திகளை மற்றொரு மறுமொழியில் (ராம் அவர்களுக்கானது ) எழுதியிருக்கிறேன்.நன்றி

  5. திரு ராம்

    இக்கதை என் வரையில் கற்பனையே என்றாலும், இதில் அனுபவ உண்மைகள் ஏராளம். மேலும் , திட சங்கல்பம் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் இது சாத்தியமே.

    முதலாவது ஏக பக்தி (ஒரு கடவுள் மட்டும்.) இதில் பிடிவாதம் இல்லாவிட்டால், இஷ்ட நிஷ்டை இருக்காது.

    இரண்டாவது , உருவ (சகுண) தியானம். நமக்கு மிகவும் பிடித்த இஷ்டதெய்வம், அதிலும் நமக்கு பிடித்த படம் அல்லது விக்கிரகம் ஒன்றின் மீது மனத்தை நிலை நிறுத்தி அதனை மனக் கண்ணின் முன் தோன்றச் செய்தல். இது தெய்வத்தின் மீதுள்ள பேரன்புடன் கூடிய பக்தியால் மட்டுமே முடியும். இது வெறும் யுக்தி அல்ல.பதஞ்சலி தம் சூத்திரங்களில் இந்த குவித்தல் பற்றி கூறியிருக்கிறார்.

    இந்த இரண்டாவது படி குரு தீக்ஷை வாயிலா அன்றி ஏற்பட முடியாது. இரண்டாவது படியில் உருவமும் மந்திரமும் சேர்ந்தே இருக்கும்.

    மூன்றாவது, மனக் கண்ணில் இயல்பாகவே நம் இஷ்ட தெய்வம் தோன்றுவது. இது முன்னேறிய சாதனையில் விளைவது. ஆசைகள் குறைந்த நிலை, சாத்வீக சங்கல்பங்கள் வேரூன்றிய நிலை. இந்த நிலையில் தான் நமக்கு அருள் என்றால் என்ன என்பது சூக்குமாக வெளிப்படும்.

    இதற்கு மேல் சாதனையில் குருவும் சீடனும் மட்டுமே உணர்ந்து கொள்ளும் நிகழ்வுகள் ஏற்படும்.அவை அனுபவிப்பதற்கே. மனம் அடங்கிய சூழல் அது. மனத்தால் விவரிக்க முடியுமா என்று நூலாளர்கள் கூறுகின்றனர். நானும் முயன்று கொண்டு தான் இருக்கிறேன்.

  6. ராம்

    விடையும் அந்த கீதை ஸ்லோகத்திலேயே உள்ளது – யோகத்தில் ஸ்திரமாக இருக்கும் எவர்க்கும் இது கிட்டும் என்பது கீதாசாரியன் வாக்கு – 100 % Guarantee தருகிறார்

    பக்தி யோகம் பன்னிரெண்டாவது அத்யாயம் (இருவதே ஸ்லோகங்கள் தான்) – தினமும் ச்ரத்தையுடன் வாசியுங்கள்

  7. குமரன் அவர்களே

    //முதலாவது ஏக பக்தி (ஒரு கடவுள் மட்டும்.) இதில் பிடிவாதம் இல்லாவிட்டால், இஷ்ட நிஷ்டை இருக்காது.//

    இதை என்னால் ஒத்துக்கவே முடியாது 🙂

  8. //இதை என்னால் ஒத்துக்கவே முடியாது //

    ஏன் என்று விளக்கவும்

  9. Pingback: Indli.com
  10. குமரன் அவர்களே

    ஒரு நானூறு பின்னூட்டங்கள் மூலம் விளக்கியாகிவிட்டது (பிரபஞ்சவியல் மூன்று கட்டுரையில்) – மறுபடியும் பிரச்சனை வரக் கூடாதே என்பதற்காக தான் ஒரு காமடி smiley யுடன் முடிக்க நினனத்தேன்

    நீங்கள் இப்படி சொல்லப் போக – என்னடா இது ஒரு ஆபிராமிய கொள்கை போல உள்ளது என்று கேள்விகள் எழ வாய்ப்பு உள்ளது – இதை விளக்க போய் நான் பட்ட கஷ்டம் 🙂 அத்தனை பின்னூட்டங்களையும் பார்த்து editors பட்ட கஷ்டம்

  11. வணக்கம்.

    //இதை என்னால் ஒத்துக்கவே முடியாது //

    அதற்க்கான காரணத்தையும் கொஞ்சம் கூறியிருக்கலாமே?

    /////நீங்கள் இப்படி சொல்லப் போக – என்னடா இது ஒரு ஆபிராமிய கொள்கை போல உள்ளது என்று கேள்விகள் எழ வாய்ப்பு உள்ளது – இதை விளக்க போய் நான் பட்ட கஷ்டம் 🙂 அத்தனை பின்னூட்டங்களையும் பார்த்து editors பட்ட கஷ்டம்////

    சகோதரர் சாரங் அவர்களே ஆபிரகாமியக் கொள்கை என்பது ஒரேஒரு தெய்வம் தான் அதுவும் அவர்கள் தொழுவதுதான் தெய்வம் என்கிறது. மற்றவை எல்லாம் ஆபிர்காமியப் பார்வையில் சைத்தான்கள்.

    இந்தக் கட்டுரையில் அத்தகைய பார்வை இல்லை. இவன் (ரங்கன்) மட்டுமே இறைவன் என்றோ மற்றவை சைத்தான் என்றோ இகழப் படவில்லை. மற்ற இறைவனை அண்டாதே என்பதுவே அறிவுரை.

    யோகத்தில் பிரத்தியாகாரம், தாரணை, தியானம், இவை மூன்றும் ஒருமித்து செயல்படுவதே சம்யமம் ஆகும். அப்போது ரங்கன் என்றில்லை, சிவனாயிருப்பினும் அவனை மட்டுமே த்யானித்து இருப்பதுதான் யோக சாதனைக்கு வழிவகுக்கும். மனதை வைத்தே எல்லா யோகங்களும், பக்தி யோகம் உட்பட.

    அவ்வண்ணமே ரங்கனைத்தவிர வேறு ஒரு துணையை நாடாதே என்று அறிவுறுத்தப் படுகிறது. தெய்வங்கள் பல இருக்கலாம் தியானிக்க வேண்டியது ஒருவனை மட்டுமே. என்பது எனது கருத்து.

  12. வணக்கம்

    /////முதலாவது ஏக பக்தி (ஒரு கடவுள் மட்டும்.) இதில் பிடிவாதம் இல்லாவிட்டால், இஷ்ட நிஷ்டை இருக்காது.

    இரண்டாவது , உருவ (சகுண) தியானம். நமக்கு மிகவும் பிடித்த இஷ்டதெய்வம், அதிலும் நமக்கு பிடித்த படம் அல்லது விக்கிரகம் ஒன்றின் மீது மனத்தை நிலை நிறுத்தி அதனை மனக் கண்ணின் முன் தோன்றச் செய்தல். இது தெய்வத்தின் மீதுள்ள பேரன்புடன் கூடிய பக்தியால் மட்டுமே முடியும். இது வெறும் யுக்தி அல்ல.பதஞ்சலி தம் சூத்திரங்களில் இந்த குவித்தல் பற்றி கூறியிருக்கிறார்/////

    சகோதரர் சாரங் அவர்களே அவசரத்தில் உங்கள் பின்னூட்டம் மட்டும் படித்து விட்டு இதற்க்கு முந்தைய பின்னூட்டம் இட்டுள்ளேன்.

    உங்கள் கேள்விக்கான விடையை கட்டுரை ஆசிரியர் தெளிவாகவே விளக்கி விட்டாரே, இதில் ஓரிறைக் கொள்கையே இல்லையே.

  13. அன்புள்ள பாஸ்கர்

    தயவு செய்து வேண்டாம் இந்த விவாதம் 🙂

    பிரபஞ்சவியல் (மூன்றாம் பகுதி) பற்றி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் எழுதிய கட்டுரையில் இதை பற்றி ஒரு நானூறு பின்னூட்டங்கள் உள்ளன – உங்களுக்கு அலாதி பொறுமை இருந்தால் படியுங்கள் அப்புறம் நான் சொல்லவந்தது என்ன என்று உங்களுக்க் தெளிவாகவே புரியும்

  14. அன்புள்ள நெடியோன் குமரன்,

    இதைக் கதை என்று என்னால் நம்பவே முடியவில்லை. உண்மையான கதையின் வெற்றியும் அதுவே. எனவே இந்த கதைசொல்லலில் உங்களுக்குப் பரிபூரண வெற்றி. என் வாழ்த்துகள்!

    தனிப்பட்ட முறையில் தியான, பக்தி, யோக அனுபவங்கள் உள்ளவர்களுக்கு இதில் இன்னும் சில விஷயங்களும் தெரியும், புரியும்.

    மொத்தத்தில், கண்ணில் நீர்மல்க ரசித்தேன்! மறுமுறையும் என் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

  15. விநாயகர் சதுர்த்தியும் கிருஷ்ணா ஜெயந்தியும்,சிவராத்திரியும், கந்த சஷ்டியும், நவராத்திரியும் (நிச்சயம் சரஸ்வதி பூஜை ), வருடா வருட குடும்ப தெய்வ வழிபாடு ,குல தெய்வ வழிபாடு இவ்வளவும் கொண்டாடும் குடும்பத்தில் பிறந்த ஒருவன் (இதில் பெருமளவு எல்லா இந்து குடும்பங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்) என்ன செய்ய வேண்டும் ? ஒரு தெய்வத்தை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு பிற எல்லா வழிபாடுகளையும் விட்டு விட வேண்டுமா? அப்படி செய்தால் தான் இறை தரிசனம் கிட்டுமா? இதனை தயவு செய்து யாரவது விளக்குங்கள்.

    இந்த கட்டுரையை படிக்கும் பொது எனக்கு மிக மகிழ்வான ஒரு உணர்வு, கட்டுரை ஆசிரியர் தன் அனுபவத்தை கூறுவதாகவே நினைத்தேன்.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அவர்கள் குரிப்பிட்டத்து போல கண்ணீர் மல்க ரசித்தேன்.
    அப்படி ஒரு நிலையை அடைய விழைகிறேன் அது சாத்த்யமா என்று தெரிய வில்லை. இதற்கான ஆரம்பம் எப்படி இருக்க வேண்டும்? தகுதிகள் என்ன ?
    திரு சாரங் சொல்வது போல் பக்தி யோகம் பன்னிரெண்டாவது அத்யாயம் தினம் பாராயணம் செய்தால் போதுமா?
    மிக பெரிதாக தெரியும் விசயங்களை சாதரணமாக அலசுகிறீர்கள் நினைத்தாலே கண்ணீர்தான் வருகிறது,என்ன செய்வதென்றே தெரியவில்லை. மிக பயங்கர மிரட்டலான கட்டுரை.

    பாராட்டுக்கள் என்றோ நன்றி என்றோ ஒரு வார்த்தையில் சொல்ல முடியவில்லை.

  16. nediyokumaran’s short story iis very simple and light with message hard and weight..
    but I wonder will such a thing happen in this modern age?
    But all the Swamijis are money minded only.they are keeen in devolope property…Balaji

  17. திரு பாபு

    உபாசனை என்பது இஷ்ட நிஷ்டையின் நீட்டித்த வெளிப்பாடு. உபாசனை என்பது தெய்வத்தை அடையும் முயற்சி. இதில் ஒரு தெய்வம் மட்டுமே தேந்தெடுக்க முடியும். மற்ற தெய்வங்களை மரியாதையோடு அணுகலாம். பக்தி என்பது ஒரு தெய்வத்துக்கு மட்டுமே.

    கீதையில் பன்னிரெண்டாம் அத்தியாயம் மட்டும் அல்ல, பதினெட்டு அத்தியாயத்திலும் இந்த இஷ்ட நிஷ்டை அல்லது ஏக பக்தி மிகவும் தெளிவாகவே பேசப்படிகிறது. உதாரணத்திற்கு

    மய்யேவ மன ஆதஸ்த்வ மயி புத்திம் நிவேசய |
    நிவசிஷ்யசி மய்யேவ அத ஊர்த்வம் ந சம்சயஹ|| ( 12/8)

    (என்னிடத்தில் மட்டும் மனதை நிறுத்தி , என்னிடமே புத்தியை செலுத்து. என்னை மட்டுமே அடைவாய்.இதில் சந்தேஹம் இல்லை.)

    இது பக்தி யோகம். ஒன்பதாவது அத்தியாயத்தில் ஏன் தன்னை மட்டுமே வழிபட வேண்டும் என்று விளக்கம் வருகிறது.

    மற்ற தெய்வங்களை வழிபடுவதால் குழப்பமா ? இதில் சங்கரரை நான் உதாரணமாக சொல்லுவேன். எல்லா கடவுளர் பெயரிலும் அவர் துதிகளை எழுதி வைத்த போதும், நாராயணனை மட்டுமே உபாசித்தார். உருவம் , குணமற்ற பிரம்மத்தை பற்றிப் பேசும் பிரம்ம சூத்திர முன்னுரையில் கூட நாராயணனைப் போற்றியே எழுதுகிறார். ராமானுஜர் கூட இதைச் செய்யவில்லை.

    அடைவது ஒன்றே ஆதலால் அடையும் வழியும் அழிப்பவனும் ஒன்று. இது உபாசனையின் அடித்தட்டு ரகசியம்.

    மற்ற விழாக்களின் பொது உங்கள் இஷ்ட தெய்வத்தின் கிரணத்தாலேயே மற்ற தெய்வங்கள் பலம் பெறுகின்றன என்று திடமாக எண்ணவும். இந்த எண்ணத்துடன் உபாசித்தால் இஷ்ட நிஷ்டை பங்கம் அடியாது. இந்த மாத ராமகிருஷ்ண விஜயம் இதழில் “பரமஹம்ச பூஜை ” என்ற உண்மைக் கதையைப் படிக்கவும். சுட்டி இங்கே

  18. பாபு அவர்களே

    நான் பக்தி யோகத்தை குறிப்பிட்டதன் காரணம் அதற்க்கு பல விசேஷங்கள் உண்டு

    அதில் தான் அசால்டாக கிருஷ்ணர் 100 % guarantee தருகிறார் – தவிர எனது சமீபத்து அனுபவமும் அதற்க்கு வழி வகுத்தது

    மேலும் பக்தி யோகத்தை விஸ்வ ரூப தரிசனத்தை காட்டிவிட்டு உடனே போதிக்கிறான் – அப்பேற்பட்ட தரிசனத்தை கண்ட எவரும் (மிரண்டு போயாவது) பக்தியை மட்டுமே நாம் செய்ய லாயக்கு என்ற முடிவுக்கு வருவர் – இப்படி கண்ணன் நேராக நிற்க நான் ஞான நிஷ்டைக்கு இப்போது செல்கிறேன் (ச்டிதப் பிரஜ்யனின் நிலை அடைகிறேன்) என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும் ?

    இதில் தான் தெளிவாக எது சிறந்த வழி என்று கூறுகிறான் – ஞானத்தை விட த்யானம் தானத்தை விட கர்மபல தியாகம்
    “கயானாத் த்யானம் விஷிஷ்யதே, தானத் கர்மபல த்யாக த்யாகாத் சாந்திரனந்தரம்

    இதில் தான் அத்வேஷ்டா சர்வ பூதானம் என்ற ஹிந்து மதத்தின் ஆணி வேர் கொள்கை விவரிக்கப்படுகிறது

    இதில் தான் வரிக்கு வரி தனுக்கு யார் பிரியமானவன் என்று காட்டுகிறான் கீதாசாரியன்

    இது தன்னளவில் ஒரு நிறைவை தருகிறது (இரண்டாவது அட்யாமம் மட்டும் படித்தால் சாங்க்ய யோகம் புரியவே புரியாது)

    இது மட்டும் தான் கீதையின் சாரம் என்று சொல்லவில்லை – இது இருவதே ச்லோககங்கள் உள்ளதாலும், அதன் கருத்து என்னும் படிக்கட்டில் முதல் சில படிகளாவது எளிதில் கடக்க முடியும் என்பதாலும் தான்

    இதை படித்தால் மட்டும் போதாது – இந்த இருவது ஸ்லோகத்தில் ஆழ்ந்து நடைமுறை படுத்தினால் அவன் அளிக்கும் gurantee உமை என்று விரைவில் தெரியவரும்

    நெடியோன் குமரன் அவர்களே – நீங்கள் சொல்வதை தான் நான் முன்பு சொல்லப்போய் எக்க சக்க சிக்கலில் மாட்டிக் கொண்டேன் – கொஞ்சம் நான் சொன்ன கட்டுரையின் பின்னூட்டத்தை புரட்டிப் பார்த்தால் உங்களுக்கே புரியும்

    இதே போக்கில் தொடர்ந்தாள் சிக்கல் உருவாவது நிச்சயம் என எனக்கு படுகிறது 🙂

    //ராமானுஜர் கூட இதைச் செய்யவில்லை.// அவர் திருவேங்கடமுடயானை மங்களாசாசனம் செய்து தான் தொடங்குகிறார்

  19. திரு நெடியோன் குமரன் (author),மற்றும் திரு சாரங் அவர்களுக்கு,

    விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி, முயற்சிக்கிறேன் .

  20. ஸகுண உபாசனை மூலம் இறை ஆற்றலை உணரச் செய்வது நிர்குண உபாசனை மூலம் முயல்வதை விட எளிது என்பதை விளக்குவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம் என எண்ணுகிறேன். இதுதான் பகவத்கீதையின் பன்னிரண்டாம் அத்தியாயத்தின் கருத்தும்.

    இது ஏன் எனில், நம்பிக்கைக்கு உகந்த நல்லோர் மூலம் ஓர் இறை வடிவம் உபதேசிக்கப்பெற்று அந்த உருவை மனதில் தேக்கி அதன் மூலம் மனதையும் புத்தியையும் ஒருமுகப்படுத்துதல் எளிது என்பதற்கே. இதன் நோக்கம் ஒரு உருவம் தான் ‘இறைவனது’, மற்ற இறை உருவங்கள் ‘சாத்தானது’ எனக்கொள்வதற்காக அல்ல.

    இது ஏன் எனில், “ரோஜாவிற்கு என்ன பெயரிட்டாலும் அது தனது ரோஜாத்தனத்திலிருந்து மாறாது” என்னும் உண்மைதான். மனதிற்குப் பிடித்த ஸாத்விகமான எந்த உருவையும் இறைவனாகக் கருதி வழிபடுவது என்பதே நமது பெரியோர்கள் நமக்குக் காட்டிய வழி. எந்த நல்லுருவை மனத்தில் தேக்கி வழிபட்டாலும், அது எல்லையற்ற, ஓர் உருவத்தில் அடைத்துவிட இயலாத, ஒன்று மட்டுமேயான இறை ஆற்றலை மட்டுமே வழிபடுவதாகும். ஏனெனில், இறையாற்றல் பல அல்ல, ஒன்று மட்டுமே, என்பதால்தான்.

  21. சாதி என்பது சந்து பொந்துகள் மாதிரி.
    அவற்றில் சென்று ராஜ பாட்டையை அடைய வேண்டும்
    அங்கேயே நின்று விடக் கூடாது
    அவைகளுக்கும் ஒரு உபயோகம் உள்ளது. அதுவும் ஒரு அனுபவம் தானே
    ஆணவமற்ற நிலையில் எந்த அனுபவமும் உயர்ந்ததே

  22. I do not understand what you want to tell. If you could elaborate it, the person like me could understand. To my understanding, there is no caste or creed to Vaishnavan. Can you send your reply to my email?

    Yours
    T. Ramadass

  23. வணக்கம் … இந்த ஜாதி என்பது இறைவனை அடைவதற்கு ஏற்பட்டது என்றால் … கெட்ட வாடை வீசும் மலத்தை .. ஒரு ஜாதியினர் அள்ளுகின்றனரே .. அவர்களுக்கு யார் தீட்சை கொடுப்பார் (எந்த ஜாதியினர் ?) . விளங்கவில்லை அய்யா …!

  24. //இந்த ஜாதி என்பது இறைவனை அடைவதற்கு ஏற்பட்டது என்றால் … கெட்ட வாடை வீசும் மலத்தை .. ஒரு ஜாதியினர் அள்ளுகின்றனரே .. அவர்களுக்கு யார் தீட்சை கொடுப்பார் (எந்த ஜாதியினர் ?) . விளங்கவில்லை அய்யா …!..//

    அவனவன் வினையை அவனவனே சுமக்க வேண்டும்.. அவனவன் மலத்தை அவனவனே எடுத்து ஒதுக்குப்புறமாகப் போட்டு மூடவேண்டும். கஷ்டமாக இருந்தால் ஆறு, வாய்கால், கண்மாய், ஏரி கரையோரம் எங்காவது ஒதுங்கலாம்.
    எதுவும் இல்லையென்றால் கையோடு செம்பை தூக்கிக்கொண்டு போகலாம். குழந்தைகள் மலத்தை தாய் எடுத்துப் போடுவது போல் வயதானவர்கள் மலத்தை பிள்ளைகள் எடுத்துப் போடவேண்டும்.. அப்போதுதான் தீட்சை வாய்க்கும். ஆள் வைத்து மலம் அள்ளினால் தீட்சை கிடைத்தாலும் அடைப்பு ஏற்பட்டு வாயு உச்சியைத் தாக்கி கபால மோட்சமோ, நிற்காமல் பேதியாகி சமாதியோ அடைய நேரிடும், பகவான் தரிசனம் கிட்டாது என்றார் சுவாமி நியாயானந்தா.. பகவானை பார்க்க முடியாது, கூடாது என்று மலம் எடுக்கச் சொன்னவனைப் பார்த்துச் சொல்லாமல் எடுத்தவனைப் பார்த்து சொல்லிவிட்டாரோ ?? டவுட்டாயிருக்குபா.

  25. ஒருவர் மலத்தை மற்றொருவர் சுமப்பது என்பது மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் இந்தியர்களுக்கு கொடுத்த சாபம்.

    தமிழ்நாட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் திராவிட இயக்கம் ஏன் இன்னமும் மனிதர் மலத்தை மனிதர் சுமப்பதை தடை செய்யவோ அதற்கான தேவையையே நீக்கவோ முயலவில்லை என்றும் சொல்லலாமே?

    //ஆனால் தன்னளவில் ஜாதிக்கு ஒரு தேவை உள்ளது.. அதுவும் மோக்ஷ சாதனமாக உதவக் கூடும்… //

    ஆனால் இதனை நான் ஒப்புகொள்ளவில்லை. ஜாதிக்கு தமிழ்நாட்டிலோ உலகத்திலோ எந்த தேவையும் இல்லை. ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். இப்போது எந்த தேவையும் இல்லை என்றே கருதுகிறேன்.

  26. பிரதாப்

    திராவிட இயக்கங்கள் பித்தலாட்டத்தின் மொத்த உருவங்கள். அறுபத்தேழு முதல் இரண்டாயிரத்து பத்து வரையிலும் சுமார் நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் இவர்கள் ஆண்டு கொண்டுள்ளபோதிலும் மனிதக்கழிவை மனிதன் சுமப்பதை தடுக்க ஏன் சட்டமியற்றி சீர்திருத்தம் செய்யவில்லை? யார் இவர்களை தடுத்தார்கள்?

    எந்த மதவாதியாவது குறுக்கே வந்தானா?

    தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று மேடைதோறும் முழங்கினார்களே, அதற்கான பயிற்சி கொடுத்துவிட்டு , இன்னமும் பயிற்சி பெற்றவருக்கு வேலை நியமன உத்தரவு ஏன் கொடுக்கவில்லை?

    வட இந்தியாவில் ஒரு பயிற்சி பெற்ற தாழ்த்தப்பட்ட தலித்துக்கு , பீகாரின் நிதீஷ் குமார் , கோயிலில் பூசகர் வேலை கொடுத்து இந்தியா முழுவதும் ஊடகங்களில் செய்தி வந்ததே? எந்த மதத்தலைவராவது இதனை எதிர்த்தார்களா? ஆனால் தமிழகத்தில் பயிற்சி பெற்றவரை நியமிக்காதது யார் குற்றம்?

    வீட்டு கொல்லையில் ஒரு விஷச்செடி இருந்ததாம். அந்த வீட்டு சொந்தக்காரனிடம் பக்கத்து வீட்டுக்காரன் , ஏனப்பா அந்த விஷச்செடியை வேருடன் வெட்டி எறிந்து விடலாமே என்று கேட்டானாம். அதற்கு வீட்டு சொந்தக்காரன் சொன்னானாம்:- ” இல்லை இல்லை, இந்தவிஷ செடிக்கு தண்ணீரும் , உரமும் போட்டு ஆடுகள் மாடுகள் மேய்ந்துவிடாமல் வேலிபோட்டு வைக்கப்போகிறேன்” அப்போதுதான் விஷச்செடி அழியும் என்றானாம்.

    இதுபோல தான் இருக்கிறது கழகங்களின் ஜாதி ஒழிப்பு. புதிய ஜாதிகளை வளர்த்துக்கொண்டு, பழைய ஜாதிகளின் பெயர்களை வேறு தாங்கள் நினைத்தபடி மாற்றிக்கொண்டு வருவதுடன், சாதியடிப்படையில் பல்வேறு துறைகளிலும் ரிசர்வேஷன் கொண்டுவந்து சாதீய அமைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதுடன்
    தேர்தல் பகுத்தறிவுகள் ஜாதியை ஒழிப்பதற்காக ஜாதிக்கட்சிகளுக்கு கூட்டணியில் இடம் ஒதுக்கி கொடுத்து , அவர்களுக்கு மேலும் உரம் போட்டு வருகிறார்கள். இவர்கள் ஜாதியை ஒழிக்கப்போகிறார்களாம். உலகமே சிரிக்கிறது.

    கடவுள் நம்பிக்கையும், பக்தியும் மூடநம்பிக்கைகள் என்று சொல்லி வந்த பெரியாரின் சீடர்கள் பதவிஆசையை பூர்த்தி செய்ய , “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” ஆனார்கள். பின்னர் அழிந்துவரும் சாதியமைப்பை தூக்கி பிடிக்க , சாதியடிப்படையில் இடஒதுக்கீடு செய்கிறார்கள்.

    சலுகைகள் எல்லோருக்கும் படிப்பு, மருத்துவ உதவி , சொந்தவீடு ஆகியவற்றுக்கு தேவை. படிக்கும் போது, நல்ல ஆசிரியரிடம் பாடம் படிக்க வசதிகளை செய்து கொடுங்கள், புத்தகம், கம்ப்யூட்டர், உடை , உணவு இவற்றை இலவசமாக கொடு. படித்தபின் வேலைவாய்ப்பில் எதற்கு ரிசர்வேஷன்?

    நீங்கள் எல்லா பள்ளிகளிலும் சி பி எஸ் இ பாடத்திட்டத்தை வைத்து , நல்ல ஆசிரியர்களை கொண்டு பாடம் சொல்லிக்கொடுத்தால், ஐ ஐ டி, ஐ ஐ எம் , ஐ ஏ எஸ் போன்ற தேர்வுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஏராளம் பேர் முதல் நூறு இடங்களை பெறுவார்கள். அதை விடுத்து , அரசுப்பள்ளியில் ஆசிரியர்களே பல பாடங்களுக்கு இல்லாதநிலையில் , தமிழாசிரியர்கள் இயற்பியல் பாடங்களை நடத்தும் நிலையிலும், இந்த மாணவர்கள் எப்படி போட்டிகளில் தேறுவார்கள்?

    உடல் நிலை பாதிக்கப்பட்ட எந்த அரசியல்வாதியாவது இன்று அரசு மருத்துவ மனைக்கு போகிறானா? அப்போலோவுக்கு அல்லவா போகிறார்கள் . இதனைப்பார்த்துவிட்டு சாதாரண ரிக் ஷா ஓட்டும் தொழிலாளி கூட , காசை கடன்வாங்கியாவது, தன்னுடைய குழந்தைகளுக்கு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு ஓடுகிறார்கள் என்பது பலருக்கு தெரியுமா? இது கழக அரசுகளின் சாதனை அல்லவா?

    பெரியாரில் ஆரம்பித்து கழகங்கள் செய்தகாரியங்கள் என்ன தெரியுமா?

    தாய்மொழியாம் தமிழை கல்வியிலும், அரசு நிர்வாகத்திலும் தீண்டத்தகாததாக ஆக்கினார்கள்.

    இறந்துகொண்டிருந்த சாதியமைப்பை உயிர்கொடுத்து ஊக்குவித்து , நிரந்தரம் செய்தார்கள்.

    இந்தி எதிர்ப்பு என்று பெயர் சொல்லி , மற்றவனைஎல்லாம் பிறமொழிகளை படிக்காதவாறு தடுத்து , தங்கள் வீட்டு பேரன்களும், பேத்திகளும் ஆங்கிலம் தவிர ஸ்பானிஷ், ஜெர்மன், ஜப்பான், கொரியா, இந்தி என்று பல மொழிகளை கற்க வைத்து தங்களது வியாபார சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தி வருகிறார்கள். இவர்கள் பேச்சை நம்பிய தமிழன் தெருவில் நிற்கிறான்.

    மதவாதிகள் சீர்திருத்தங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இவர்களே (கழகங்களே) உண்மையான பிற்போக்குவாதிகள். நாச சக்திகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *