ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்

karainagar_1போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள் என்னும் கட்டுரையில் பிரம்ம‚ நீர்வேலி மயூரகிரி சர்மா அவர்கள், டச்சுக்காரர், ஒல்லாந்தர், போர்த்துக்கேசியர் ஆகிய கிறித்துவ வெறியர்களால் இந்து சமயத்திற்கு நேரிட்ட இழப்புகளையும் அழிவினின்றும் மீண்டநிலைகளையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

அந்த அழிவுகளும் இழப்புகளும் வரலாற்று நிகழ்வுகள். அவற்றைப் பதிவுசெய்து வைத்துள்ளது ஒரு புராணம். அதன் பெயர் ஈழத்துச் சிதம்பர புராணம். இந்தப் புராணம் மிக அண்மையில்– அதாவது, 1975-இல் வெளிவந்தது. இதன் ஆசிரியர், ஈழத்துக் கவிஞர் பரம்பரையை இலங்க வைத்த நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மூத்த திருக்குமாரர் புலவர்மணி சோ.இளமுருகனார். இந்தப் புராணத்திற்கு மிகச்சிறந்த உரை வழங்கியுள்ளார், புலவர்மணி அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் பண்டிதமணி பரமேசுவரியார் அவர்கள். இந்தக் கட்டுரையில் வரும் செய்திகளும் மொழியும் அம்மையாரின் உரையிலிருந்தே நன்றியுடன் எடுத்து அளிக்கப்படுகின்றன.

sivan_kopuram

இந்தப் புராணத்தின் முழுப்பெயர், திருத்திண்ணபுரச் சுந்தரேசர் புராணம் என்னும் ஈழத்துச் சிதம்பரபுராணமென்பதாகும். சிதம்பரத்தில் திருநடனம் செய்யும் கூத்தப் பெருமானே திண்ணபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றான் ஆதலினாலும் சிதம்பரத்தில் நடைபெறும் திருவாதிரைத் திருவிழாவைப் போலவே இங்கும் அவ்விழா நடைபெற்று வருதலினாலும் தென்னிந்தியாவுக்குச் சென்று சிதம்பரத்தைத் தரிசிக்கும் வாய்ப்பில்லாத ஈழத்தார் ஆண்டுதோறும் இங்கே மிகுதியும் வந்து தரிசித்துப் போகும் வழக்கமுடைமையாலும் ஓழத்துச்சொதம்பரம் என்னும் அப்பெயர் வழங்குவதாயிற்று.

sivan_swamy_1

வழக்கமான புராண இலக்கிய அமைதிகளோடு அமைந்த இந்தப் புராணத்தில், ஆசிரியர் தக்க இடங்களில் அந்நிய மதத்தாரால் ஈழநாட்டில் இந்துமதத்திற்கு (இந்து மதம் என்றால் ஈழநாட்டில் பெரும்பாலும் சைவத்தையே குறிக்கும்.) ஏற்பட்ட தொல்லைகளையும் பதிவு செய்து வைத்துள்ளார்.

எடுத்துக்காட்டாக, ஐந்திணை வருணனை என்பது புராண உறுப்புகளில் ஒன்று. நெய்தல் மருதங்களைச் சார்ந்த முல்லை நிலத்தை வருணிக்கின்ற ஆசிரியர், பசுக்களின் சிறப்பைப் பற்றிப் பேசுகின்றார். ஆவினைக் கொன்று தின்னுதல் பாவம் என்றும் அதனைச் செய்தவர் மீளா நரகத்தில் வீழ்வர் என்றும் கூறிய ஆசிரியர், அண்மைக் காலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டினார்.

gomathaஒல்லாந்தர்கள் இலங்கையை ஆட்சிசெய்த காலத்தில் தமது உணவின்பொருட்டு மக்களிடம் வீட்டுக்கொரு மாடாகப் பெற்றனர். ஆக்களைக் கோலினாலே தீண்டுதற்கும் விரும்பாத தமிழ்மக்கள் இக்கொலைப் பாவத்திற்குப் பயந்துகொண்டே மிக்க வருத்தத்துடன் அவர்களுக்கு அஞ்சி, தாம் வளர்த்த பசுக்களைக் கொடுத்தனர். யாழ்ப்பாணத்துத் திருநெல்வேலியைச் சேர்ந்தவரும் ஆறுமுகநாவலரின் முன்னோரில் ஒருவருமாகிய ஞானப்பிரகாசர் என்பவர், தமது முறைவருதலும் அக்கொலைப் பாவத்திற்கு அஞ்சி, முதனாள் இரவிலேயே தமிழகத்திற்குச் சென்று சிதம்பரத்தில் தங்கிப் பின் அங்கிருந்து வங்காளத்துக்குச் சென்றார். அங்கு வடமொழி கற்றுப் புலமை பெற்றார். தமிழிலும் வடமொழியிலும் நூல்களும் உரைகளும் செய்துள்ளார். திருவண்ணாமலைக்கு வந்து குன்றக்குடி ஆதீனத்தில் துறவு பெற்றார். சிதம்பரத்திற்குச் சென்று திருமடம் அமைத்து அங்கேயே சிவப்பேறு பெற்றார். ஞானப் பிரகாசர் மடமும் திருக்குளமும் இன்று அடையாளங் காணமுடியாத நிலையில் உள்ளன.

ஞானபிரகாசர் தமிழகத்துக்கு வரநேரிட்ட சூழலை இந்தப் புராணம்,

கையர்க ளிந்நிலம் ஆண்ட காலத்துத்
தெய்வநல் லாக்களைச் செகுக்க வேண்டினர்
ஐயகோ வறிவொளி முனிவ னஞ்சியே
மெய்ந்நெறித் தமிழகம் மேவி வாழ்ந்தனன்

என்று கூறுகின்றது.

[கையர்கள் கீழ்மக்களாகிய ஒல்லாந்தர்கள்
அறிவொளிமுனிவன் ஞானப்பிரகாசர் என்னும் சைவ முனிவன்]

வீடுகளிலும் திருமடங்களிலும் ஆன்றோர்கள் மக்களுக்கும் சிறார்களுக்கும் பண்டைச் சரிதைகள், சான்றோர் காதைகள் முதலியன கூறி அறிவும் ஒழுக்கமும் வளர்த்தனர் எனக் கூறுமிடத்தில்,

பறங்கியர் வந்த நாளிற் சிவநெறி பட்டபாடும்
அறங்களைச் சிதைத்த வாறும் அந்தணர் அடைந்த துன்பும்
மறங்கெழு தமிழ மன்னன் மற்றவர்க் கெடுத்த போரும்
நிறங்கெழு குரவர் ஞான முழுக்குரை நேர்ந்த வாறும்

சைவர்கள் விரத நாளிற் றம்முடைய சீல மெல்லாம்
பொய்யர்க ளறியா வண்ணம் மறைவினிற் புரிந்தவாறும்
செய்யநற்குழந்தை கட்குச் சீரிலாப் பெயர்கள் சூட்டிப்
பையவே யவரைத் தங்கள் பாழ்நெறிப் படுத்த வாறும்”

உண்டிக ளுடைகள் மேலாம் உத்தியோ கங்கள் நல்கிக்
கொண்டதஞ் சமயம் மாற்றக் கொள்கையிற் றோற்ற வாறும்
திண்டிறற் சைவ வீரர் அவர்க்கிடர் செய்த வாறும்
கண்தலம் நீர ரும்பக் காதையிற் கனியச் சொல்வார்

என கிறித்துவர்களின் சூழ்ச்சிகளை இப்புராணம் பதிவு செய்கின்றது.

new_madam1618-இல் ஈழத்தில் தமிழரசு போய்விட, போர்த்துக்கேசிய, ஒல்லாத அரசுகள் வந்தன. கிறித்தவர்கள் சைவக் கோயில்களை இடித்துச் சைவ சமயத்தையும் அழிக்கத் தொடங்கினர். சைவர்களைத் திருநீறு பூசாமலும் சைவமுறைப்படி சிவபூசைகள் விரதங்கள் சைவக் கிரியைகள் முதலியவற்றைச் செய்யாமலும் தடுத்தனர். அதனாலே சைவ மக்களும் அந்தணர்களும் பெரிதும் துன்பமடைந்தனர். தமிழ்மன்னர்கள் அவர்களைப் போரிட்டு வெல்ல முடியாமல் வருந்தினர். போர்த்துகேசிய ஒல்லாந்த பாதிரிமார்கள் சைவ சமயத்தவர்களுக்கு ஞானமுழுக்கும் கிறித்துவபோதனையும் அளித்து மதமாற்றம் செய்தனர்.

சைவர்கள் அமாவாசை, பவுர்ணமி முதலான விரதநாள்களில் உணவருந்திய வாழையிலைகளை வெளியே போட அஞ்சி வீட்டின் இறவாரங்களில் சொருகி மறைத்து வைத்தார்கள்.

அக்காலத்தில் குழந்தைகள் பிறந்தவுடனே கிறித்தவ குருமார்களுக்கு அறிவித்து அவர்களால் அக்குழந்தைகளுக்கு ஞானமுழுக்குச் செய்வித்துப் பெயரிடுவித்தல் வேண்டும் என்பது சட்டம். அக்குருமார்கள் இட்ட கிறித்துவப் பெயரையே வழங்கவேண்டும். அப்பிள்ளைகளை அவர்களது கிறித்துவ சமயப் பாடசாலைகளுக்கே அனுப்பிப் படிப்பித்தல் வேண்டும். இவ்வாறு போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் செய்த கொடுமைகளைத் திண்ணபுரத்து முதியோர் கதைகதையாகக் கூறுவர். இச்செய்திகள் இன்றும் செவிவழக்கில் அடிப்பட்டு வருகின்றன.

viyaavil-aiyanaar-koyilவியாவில் என்னும் தலத்து ஐயனார் கோயிலைப் பற்றிக் கூறுமிடத்து ஒரு சுவையான செய்தி வருகின்றது.. இக்கோயில் இற்றைக்கு 450 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கோயிற்பூசைக்கு தமிழகத்தில் உத்தரகோசமங்கையிலிருந்து மங்களேசுவர குருக்கள் என்பார் அழைக்கப்பட்டார். அவருடைய சந்ததியினரே இங்கு பூசை செய்துவருகின்றனர். 1680-இல் மங்களேசுவர குருக்களின் பேரன் கனகசபாபதி குருக்கள் பூசகராக இருந்தார். அப்பொழுது ஒல்லாந்தகர்களின் அட்டூழியம் பெரிதாக இருந்தது. திருக்கோயில் விக்கிரகங்களை நிலவறையில் வைத்து மறைவாக வழிபாடுகளை நிகழ்த்தி வந்தனர்.

இக்காலத்தில் கனகசபாபதி குருக்களுக்கு ஆண்குழந்தை பிறந்தது. ஒல்லாந்தர்கள் தமது சட்டப்படி அந்த அந்தணக் குழந்தைக்குத் ‘தாமன்’ என்று பெயர் வைத்து ஞானஸ்நானமும் செய்தனர். தாமன் என்பது ‘தாமசு’ என்பதன் மரூஉ. கனகசபாபதி குருக்கள், மறைவாக, ‘தாமன்’ என்ற அந்தப் பெயரையே ‘தாமோதரன்’ என மாற்றியமைத்து, தமது சைவசமய ஆசாரப்படி செய்யவேண்டிய வைதிகக் கிரியைகளை மறைவாகச் செய்தார். ஒல்லாந்தர்கள் ஆட்சி நடந்தவரைக்கும் புறத்தே ‘தாமனாகவும்’ பின்னர் தாமோதர ஐயராகவும் அவர் வளர்ந்து, ஐயனார் கோயில் குருக்களாகவும் ஆனார்!

போர்த்துக்கேசிய ஒல்லாந்தர்கள் பாடசாலைகளிற் படிக்கும் பிள்ளைகளுக்கு உணவும் உடையும் கொடுத்தும், படிப்பு முடிந்தவுடனே உத்தியோகம் கொடுத்தும், அவர்களைத் தமது சமயத்திற் சேர்க்கத் தொடங்கியபோது, ஒருசிலர் கிறித்தவர்களாக மாறினாலும், பெரும்பாலார் அவர்களை எதிர்த்துச் சட்டங்களை மீறியும் சில இன்னல்களைக் கொடுத்தும், சைவத்தைப் பாதுகாத்த வரலாறுகளைத் திண்ணபுரத்து முதியோர்கள் சொல்லும்போது கண்களிற் கண்ணீர் சிந்தும் என்று இப்புராணம் கூறுகின்றது.

ஈழத்துச் சிதம்பரம் என்னும் திருத்திண்ணபுரம் காரைநாடு எனும் தீவில் உள்ளது. தலத்திற் பாயும் ஆற்று வளத்தைச் சிறப்பித்துப் பாடுவது புராணங்களின் முக்கிய அம்சம். காரைநாட்டில் ஆற்று வளத்தைப் பாடுவதற்கு ஏதுவாக ஒரு சிற்றாறு கூட இல்லை. எனவே, திண்ணபுரத்தில் ஆற்றுவளம் பாடுவதற்கு இப்புராண ஆசிரியர் அற்புதமான உத்தி ஒன்றைக் கையாண்டார்.

arumuga-navalar-statueயாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் தம்முடைய சொல்லாலும் செயலாலும் தாமே வாழ்ந்துகாட்டியும் மேலைநாட்டவர் ஆட்சியால் அழியும் நிலையிலிருந்த சைவத்தையும் தமிழையும் பாதுகாத்தார். நாவலர் வாழ்ந்து காட்டிய “ஒழுகலாறு” ஈழத்துத் தமிழர் இன்றும் போற்றி மகிழ்வதற்குரிய சிறப்புடையதாக இன்றும் திகழ்கின்றது. காரைத் தீவு மக்கள் நாவலர் காட்டிய நன்னெறியில் ஒழுகிவருகின்றனர். ஆதலின், அந்த ‘நாவலர் ஒழுகலாற்றையே’ காரை நாட்டை வளப்படுத்தும் ஆற்றுவளமாக ஆசிரியர் கற்பித்துப் பாடுகின்றார்.

ஆறுமுகநாவலரை மலையாகவும், அவர் அனுட்டித்த சைவ ஒழுக்கநெறிகளை ஆறாகவும், அவ்வொழுக்கநெறிகளைப் பின்பற்றி ஒழுகிய தென்னிந்தியாவையும் இலங்கையையும் அந்த ‘ஒழுகலாறு’ பரந்து பாய்ந்த இடங்களாகவும் உருவகித்து, அவ்வொழுக்கம் காரை நாட்டினரால் போற்றப்பட்டதை அவ்வாற்றின் ஒருகிளை காரை நாட்டில் பாய்ந்துசென்று மக்களை வளப்படுத்தியது எனவும் இப்புராணம் பாடுகின்றது. உருவக அணிக்கு இந்த வருணனை சிறந்த சான்றாகத் திகழ்கின்றது. ஒழுகலாறு என்றால் ஒழுகிக் காட்டிய வழிகள் என்று பொருள். அவை சைவாசார அநுட்டானங்கள்.

arumuga-navalar-jayanthi-celebrationsகாவிரி, வைகை, கங்கை முதலிய ஆறுகள் வாழ்வினுக்கு ஆக்கம் செய்யுமென்றால், ‘நாவலன் ஒழுகல் ஆறு’ தோய்தல் வீடு நல்கும் என்றும் கங்கை நதியாகிய பெண் நீலகண்டனார் சடையிலேறி மங்கலமாக நிலைபெற்றிருப்பதை நாம் அறிவோம்; அதுபோல, நாவலர் காட்டிய ஒழுகலாறும் புண்ணியச்சைவர் தலையின்மேலே மங்கலமாகத் தங்குதல் வேண்டும் என்றும் இப்புராண ஆசிரியர் கூறுகின்றார்.

காரை நாட்டு ஆறாகிய நாவலரின் ஒழுகலாற்று நீரை உண்டு பயனளித்த கழனிகளாக, அந்தப் பேராற்றின் நீரை உண்டும் அதிலே முழுகியும் பயன்பெற்ற சைவச் சான்றோர்களின் வாழ்க்கைக் குறிப்புக்களை சந்ததியினருக்கு அளிக்கின்றார். இது புராண காவியத்தில் ஒரு புதியதிருப்பம் என உரையாசிரியர் கூறுவது அறியத்தக்கது. அத்தகைய சான்றோர் சிலருடைய வரலாற்றுக் குறிப்புக்கள் மிகச் சுவையானவை.

சான்றாக, காரை நகராகிய பெண் செய்த தவப்பயனாக வந்த அருணாசலம்:

arunachalam-vidhyalayamதிரு.அருணாசலம் தெல்லிப்பழை ஆசிரியப் பயிற்சிப்பள்ளியில் பயின்று வந்தார். அந்தப் பள்ளியின் சட்டப்படி, இரண்டாம் ஆண்டுத் தேர்வில் சித்தி பெற்று மூன்றாம் ஆண்டுப் படிப்பில் சேருமுன் அவர் ஞானஸ்நானம் பெற்றுக் கிறித்துவராக வேண்டும். அடுத்த நாள் ஞானஸ்நானத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அருணாசலம் மதமாற்றத்திற்குச் சிறிதும் மனங்கொள்ளாது, முந்தினநாள் இரவே பாடசாலை மதிலை ஏறிக் குதித்துத் தம் வீட்டிற்குப் போய் விட்டார். அவருக்கிருந்த சைவப் பற்று அவரை இவ்வாறு செய்யத் தூண்டியது.

ஆசிரியப் பள்ளியை விட்டு வெளியேறிய அருணாசலம் சைவக் கலாசாலை அமைக்க முப்பது ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். முப்பதாண்டு முயற்சிக்குப்பின் அரசாங்கம் கிறித்துவர்களுடன் கூட்டாகப் பள்ளி நடத்த அனுமதி அளித்தது.

அருணாசலத்தாராலும் அவருடைய வழிகாட்டலில் பிறராலும் முந்நூறுக்கும் மேற்பட்ட சைவப்பாடசாலைகள் தொடங்கப்பட்டன.

13 Replies to “ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்”

 1. இந்துமதமும், இந்துதேசியமும் எனது இரு கண்கள் என்று கூறிய, மறைந்த முத்துராமலிங்கத் தேவரை நினைவுகூறவைக்கிறது, இம் மாதிரியான கட்டுரைகள்.

 2. காரை நகர் சிவன்கோவில் தான் ஈழத்து சிதம்பரமா
  நன்றி

 3. ஓழத்துச்சொதம்பரம் – தட்டச்சுப்பிழையென்று நினைக்கிறேன்.

 4. பாரதத்துக்கு வெளியில் சைவம் தழைத்தது ஈழத்தில் தான் . இன்றைய ஈழத்தை எண்ணும் போது இதயம் கனக்கின்றது .தமிழர்க்காக ஆயுதம் ஏந்தி போராடிய பிரபாகரன் தாய் தமிழகத்தில் இருக்கும் நாத்திக வாத கும்பலை நம்பியதாலேயே கைவிடப் பட்டார் .தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டத்தை நாத்திக வாத கும்பல் முன்னின்று நடத்தியதாலேயே பொது மக்களின் ஆதரவை இழந்தது .

 5. ///தமிழர்க்காக ஆயுதம் ஏந்தி போராடிய பிரபாகரன் தாய் தமிழகத்தில் இருக்கும் நாத்திக வாத கும்பலை நம்பியதாலேயே கைவிடப் பட்டார் .தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டத்தை நாத்திக வாத கும்பல் முன்னின்று நடத்தியதாலேயே பொது மக்களின் ஆதரவை இழந்தது .///

  அது நாத்திக கும்பல் அல்ல ஈரோட்டான் அவர்களே. அது சுத்த கிருத்தவ கும்பல். நக்கீரன் இதழ் முற்றிலும் கிருத்தவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. பெயருக்கு அதன் ஆசிரியர் பெரிய குங்குமப் பொட்டோடு திரிகிறார். நான் முன்னமே கூறியபடி ‘கோவை அடுக்கு மொழி மன்னர்’ இப்போது புதிய ஏற்பாடு படிக்கிறார்.

  சிறுத்தைத் திலகமோ மத போதகர் கும்பலுக்கு அடி வருடுவதை தன் தொழிலாகவே கருதினார். கருஞ்சட்டைக் கூட்டமோ , கிடைத்த போது அள்ளும கும்பல். christianaggression.org என்ற வலைத் தளத்தில் புலிகளும் கிறித்தவமும் என்ற தலைப்பில் பல செய்திகள் உள்ளன. புலிகளே மதமாற்றிகளின் வலையில் வீழ்ந்து விட்ட பிறகு, கருஞ்சட்டை நரிகள் ஏன் விழாது ?

 6. முனைவர் முத்துக்குமாரசாமி அவர்களுக்கு,

  தங்களின் இக்கட்டுரை மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. தங்களின் இம்முயற்சி மிக்க மகிழ்வைத் தருகின்றது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவிக்கின்றேன்

  இலங்கையில் புராண படனம் இன்று வரை நிலைத்திருப்பது உண்மை தான். ஆனாலும் அப்படி இருப்பினும் கந்தபுராணம், பெரியபுராணம், திருவாதவூர்ப்புராணம் ஆகியன பிரபலம் அடைந்து கோயில்களில் படிக்கப்பெறும் அளவிற்கு தலபுராணங்கள் மரியாதையும் சிறப்பும் பெறவில்லை. அதற்கு அண்மைக் காலத்தில் உருவானமையும் காரணமாக இருக்கலாம். (பழைமையைப் போற்றும் அளவிற்கு புதுமையில் நம்மவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.) ஈழத்தில் எழுந்த புராண நூல்களுள் வரதராஜபண்டிதர் என்பவர் எழுதிய ஏகாதசிப்புராணம் என்ற நூல் இன்றும் விஷ்ணுவாலயங்களில் ஏகாதசிகளில் படனம் செய்யப்பட்டுச் சிறப்பிக்கப்படுகிறது.

  எனினும் ஈழத்துச் சிதம்பர புராணம் மிகவும் இலக்கியச் செழுமையும் திறனும் கொண்டதாக விளங்கக் காண்கிறேன். பல புதுமைகளையும் புராண ஆசிரியர் புகுத்தியிருப்பது இச்சிறப்பிற்கு அணி சேர்க்கிறது.

  காரை நகர் என்கிற ஊர் யாழ்ப்பாணக்குடாநாட்டிற்கு அருகிலுள்ள கடலின் நடுவே அருகருகே இருக்கும் ஏழு தீவுகளுள் ஒன்று. நான் வசிக்கும் ஊர் நீர்வேலியாகிலும் எனது தந்தையார் காரைநகரையே பிறப்பிடமாகக் கொண்டவர்.எம் முன்னோர்கள் கும்பகோணத்திலிருந்து வரவழைக்கப்பெற்று (ஏறத்தாழ இருநூறாண்டுகளுக்கு முன்னாக இருக்கலாம்)காரைநகரிலேயே களபூமி என்ற இடத்தில் குடியேறியிருந்தார்கள். (சிறப்பு என்ன என்றால் அவர்களும் வம்சாவளியைப் பாதுகாத்திருக்கிறார்கள்)

  காரைதீவு தன் வளமையாலும் செழுமையாலும் காரைநகர் என்ற சிறப்பினைப் பெற்றிருக்கிறது. மற்றைய தீவுகளைப் போலன்றி இத்தீவு நீண்ட பாலத்தினால் யாழ்ப்பாணத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அதனால் இங்கு செல்ல கடல் வழிப்பயணம் தேவையற்றதாக இருக்கிறது. இப்பாலம் பொன்னாலைப் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாலத்திற்கு மிக அருகிலேயே பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயில் உள்ளது.

  திருவத்தரகோச மங்கையிலிருந்து காரைநகரில் தாங்கள் கூறிய வண்ணம் குடியேறியிருந்த மங்களேஸ்வரக்குருக்களின் வம்சத்தினர் பரம்பரையாக தங்கள் காலத்தில் நடைபெற்று வந்த விஷயங்களை ஏட்டில் பதிவு செய்து வந்துள்ளனர். இவர்களின் ஏட்டிலிருந்து போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் அநியாய நடவடிக்கைகளைத் தெளிவாக அறிய முடிகிறது. இப்பரம்பரையைச் சேர்ந்த ஏறத்தாழ 95 அகவை நிறைந்த முனைவர்.க. வைத்தீஸ்வரக்குருக்களிடம் இதற்கான ஆதாரங்களும் ஏடுகளும் இருக்கின்றன.

 7. இலங்கையில் மதவெறியர்கள் ஆட்சி செய்த போது மக்கள் மிக மறைவாக தமது ஆசாரங்களைப் பேணி வந்தனர். சூலத்தை வழிபடும் வழக்கம் அக்காலத்தில் சிறப்படைந்தது. (ஏனெனில் சிவசூலம் போர்த்துகேயர் பார்வைக்கு சிலுவை போலத் தெரியும்) அது போலவே அடுப்பு நாச்சியார் வணக்கம் போன்றனவும் உருவாயின. இப்படி மிக மறைவாக அவர்கள் தமது வழிபாடுகளை ஆற்றி வந்ததாகக் கூறுவர். தற்செயலாகக் கண்டு பிடிக்கப் பெற்றவர்கள் சிரசேதம் முதலிய பயங்கரமான தண்டனைகளைப் பெற வேண்டியிருந்தது.

  கால ஓட்டமும் கடவுளின் கிருபையும் அப்படியான சிக்கல்களிலிருந்தும் பின்னர் தற்போதைய பெரும் பேரிலிருந்தும் இலங்கையில் இந்த மதத்தைக் காப்பாற்றி வைத்திருப்பதாகக் கருதமுடியும்.

 8. /ஈழத்துச் சிதம்பரம் என்னும் திருத்திண்ணபுரம் காரைநாடு எனும் தீவில் உள்ளது. தலத்திற் பாயும் ஆற்று வளத்தைச் சிறப்பித்துப் பாடுவது புராணங்களின் முக்கிய அம்சம்./

  காரை நாடு என்பது தவறு என்று நினைக்கிறேன். காரைநகர் என்று தான் அந்த ஊருக்குப் பெயர். அதனைச் சிலர் காரைதீவு என்றும் கூறுவர்.

  அருணாசலம் அவர்களின் கதை மிகவும் ரசனைக்குரியதாக உள்ளது.

  /எம் முன்னோர்கள் கும்பகோணத்திலிருந்து வரவழைக்கப்பெற்று காரைநகரிலேயே களபூமி என்ற இடத்தில் குடியேறியிருந்தார்கள்./

  இங்கு மாதா கோயில் ஒன்று உள்ளது. மாதா கோயில் என்றால் கத்தோலிக்கரின் மரியன்னை என்று தவறாகக் கருத வேண்டாம். அங்கே உள்ள அம்மை நம் தாய் கண்ணகை (கண்ணிலே நகையுடையவள்) இரவு நேரத்தில் வயல் நடுவே அந்தக் கோயிலில் மனிதர்களல்லாத போது யாரோ எவரோ வந்து பூஜை செய்வதாகச் சொல்கிறார்கள். நடுச்சாமத்தில் தூரத்தில் நின்று பார்க்கும் போது தீபாராதனைகள் நடப்பது தெரியுமாம். அருகே வந்தால் எதுவுமே இருக்காதாம். தேவபூஜை என்றும் இதனைச் சொல்கிறார்கள்.

  இக்கோயிலை கத்தோலிக்கரான போர்த்துக்கேயர் இடிக்க வந்த போது ‘மாதா கோயில்’ என்று சொன்னதால் கும்பிட்டு விட்டுச் சென்று விட்டார்களாம்..

 9. இங்கு ஈழத்துச் சிவாலயங்கள் பற்றிக் கட்டுரை எழுதுகிறவர்கள் எல்லாம் வேண்டுமென்றே சில உண்மைகளை மறைக்கிறார்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு போத்துக்கேயர் ஈழத்தமிழர்களின் கோயில்களுக்கு இழைத்த அநீதிகளை மட்டும் பேசும் இவர்கள் எவருமே, சிங்கள் பெளத்தம், செய்த, செய்கிற கொடுமைகளைப் பற்றி மட்டும் பேசுவதில்லை. உதாரணமாக, வரலாற்றுப் புகழ் பெற்ற நகுலேஸ்வரம் சிவன்கோயிலையும் அதன் கோபுரத்தையும் இலங்கை விமானப்படை பல முறை குண்டு வீசித் தாக்கியத்தையும், அதன் அழிவையும் பற்றிக் குறிப்பிடவில்லை. கட்டுரையாசிரியர், இலங்கையில் வாழ்வதால், எழுதப் பயப்படுகிறார்கள் போல் தெரிகிறது. அதில் நியாயமுண்டு. ஆகவே, ஈழத்தில் சைவ, மாலிய ஆலயங்களுக்கு நடந்த அழிவுகளை, இன்றும் நடைபெறும் ஆக்கிரமிப்புகளை யாராவது எழுதினால் நன்மை பயக்கும்.

 10. //அங்கே உள்ள அம்மை நம் தாய் கண்ணகை (கண்ணிலே நகையுடையவள்)///

  திரு. செந்தூர்,

  சிலப்பதிகார நாயகி, தமிழ்க் கண்ணகியைத் தான் இலங்கையில் கண்ணகையம்மன் என்று வணங்குவதே தவிர, கண்ணிலே நகையுடையவள் என்பதால் அல்ல. கண்ணகி/கண்ணகை அல்லது பத்தினித் தெய்வமாக வழிபடுவது, சிலப்பதிகார காலம் தொட்டு இலங்கையில் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான வழிபாடாகும். அது சரி, என்ன கண்ணில் நகை. 🙂

 11. //காரை நாடு என்பது தவறு என்று நினைக்கிறேன். காரைநகர் என்று தான் அந்த ஊருக்குப் பெயர். அதனைச் சிலர் காரைதீவு என்றும் கூறுவர்.//

  காரைச் செடி நிறைந்து காணப்பட்டதால், காரைநாடு என்றும் காரை தீவு என்றும் முன்னர் அழைக்கப்பட்ட தீவு பொன்னாலைப் பாலம் அமைத்த பின்னர் தான், 1922 இல் காரைநகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 12. அன்பார்ந்த ஸ்ரீ வியாசன்

  \\\ ஆகவே, ஈழத்தில் சைவ, மாலிய ஆலயங்களுக்கு நடந்த அழிவுகளை, இன்றும் நடைபெறும் ஆக்கிரமிப்புகளை யாராவது எழுதினால் நன்மை பயக்கும். \\

  தாங்கள் சொன்ன விஷயங்கள் பற்றி மிகத் தெளிவாக வ்யாசங்களும் வாசகர்கள் பகிர்ந்துள்ள உத்தரங்களும் இந்த தளத்தில் உள்ளன.

  தங்கள் பார்வைக்கு

  http://www.tamilhindu.com/2012/02/snatched-up-lands-of-eastern-srilanka1/

  http://www.tamilhindu.com/2012/02/snatched-up-lands-of-eastern-srilanka2/

  http://www.tamilhindu.com/2012/03/snatched-up-lands-of-eastern-srilanka-3/

  மேற்கண்ட வ்யாசங்களில் அன்பர் ஸ்ரீ ராஜ் ஆனந்தன் அவர்கள் கிழக்கு மாகாணப்பகுதிகளில் ஈழத்தில் தமிழ் பேசும் இஸ்லாமிய சஹோதரர்கள் எப்படி சிங்களக் காடயர்களுடன் கை கோர்த்து தமிழ் பேசும் ஹிந்துக்களது சிவாலயங்கள் விண்ணகரங்கள் மற்றும் அம்மன் ஆலயங்களை த்வம்சம் செய்துள்ளனர் தமிழ் பேசும் ஹிந்துக்களது காணிகளைக் கபளீகரம் செய்துள்ளனர் …………… தமிழ் பேசும் ஹிந்துமக்களது பாடசாலைகளைத் தகர்த்து நொறுக்கியுள்ளனர் என்று பதியப்பட்டுள்ளது.

  கூடவே கீழ்க்கண்ட வ்யாசத்தையும் அதன் கீழ் பதியப்பட்டுள்ள உத்தரங்களையும் வாசிக்குங்கால் தாங்கள் வினவிய சில கேழ்விகளுக்கு பதில் கிடைக்கும்.

  http://www.tamilhindu.com/2012/06/kathirgamam-muruga-worship-traditions/

  இன்னமும் ஒரு வ்யாசத்தின் உத்தரங்களினூடே ஈழத்தைச் சார்ந்த ஒரு புலம் பெயர்ந்த சஹோதரி அவர்கள் கிழக்கு மாகாணத்து ஆலயம் ஒன்றிலிருந்து பௌத்தர்கள் சிலர் ஜபர்தஸ்தியாக வினாயகர் விக்ரஹத்தை பெயர்த்தெடுத்து செல்லும் காணொளி / சித்திரம் பகிர்ந்ததும் நினைவுக்கு வருகிறது. அதன் உரலைத் தேட முனைந்தேன். கிட்டவில்லை.

  அன்பர் ஸ்ரீ வியாசன் அவர்கள் ஈழம் சம்பந்தமான பல தகவல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளார் என்பது நான் அறிந்ததே. தாங்கள் ஈழத்து ஹிந்துப்பண்பாடு பற்றி………..சைவ, வைஷ்ணவ, சாக்த மற்றும் பௌத்த சமயங்களை உள்ளடக்கிய ஹிந்துப்பண்பாடு பற்றி…… இங்கு வ்யாசங்கள் பகிர்ந்தால் பலரும் பயனுறுவோம். ஈழத்தில் காணப்படும் பௌத்த விகாரங்கள் பற்றிக்கூட தங்கள் தளத்தில் வாசித்தது நினைவுக்கு வருகிறது.

  தமிழ் ஹிந்து மக்களுடன் இணக்கம் என்பதை அறவே கொள்ளாதவர்களா சிங்கள பௌத்தர்கள்? அல்லது சிங்கள பௌத்தர்களில் ஒரு குறுங்குழுவினராவது தமிழ் ஹிந்துக்களுடன் இணக்கம் பேண விழைவது உண்டா……………….. என்பது பற்றியெல்லாம் கூட தங்களைப் போன்று ஈழத்தமிழர்களின் புனர்வாழ்வில் அக்கறையுள்ள……….. ஈழத்தைச் சார்ந்த அன்பர்களிடமிருந்து அறிய விழைகிறோம்.

Leave a Reply

Your email address will not be published.