நல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு!

nitish-kumar_sushilkumar-modi

நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்த்திருந்த பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. முதல்வர் நிதிஷ் குமார் வெற்றிவாகை சூடுவார் என்று பலரும் கூறியிருந்தாலும், கடைசிநேரம் வரை ‘மின்னணு   வாக்குப்  பதிவு இயந்திர’ உபயத்தால் சந்தேகம் இருந்தது. அப்படியே வென்றாலும்கூட முந்தைய நிலையைவிட பலம் குறையலாம்   என்று ‘மதச் சார்பற்ற’ ஊடகங்களால் பரப்பப்பட்டு வந்தது. அனைத்து ஹேஷ்யங்களையும் மீறி, மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. மொத்தமுள்ள 243  தொகுதிகளில் 206  தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க. கூட்டணி வென்று, நாட்டையே வியக்க வைத்துள்ளது.

nithishkumar-and-sushilkumar-modi-2இந்த மகத்தான வெற்றிக்கு நிதிஷ் குமார்தான் அடிப்படைக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆர்ப்பாட்டமில்லாத ஆட்சி, மக்கள் நலனில் அக்கறை கொண்ட செயல்பாடு, குற்றவாளிகளை கருணையின்றி ஒடுக்கியது, ஊழலுக்கு வாய்ப்பளிக்காதது, யாரும் அணுகக் கூடிய எளிமை ஆகிய அம்சங்கள் நிதிஷ் குமாரின் வெற்றிக்கு வித்திட்டிருக்கின்றன. அவருக்கு பக்கபலமாக பா.ஜ.க. உதவியுள்ளது. இந்த வெற்றிக்குப் பின்புலத்தில் பலரும் அறியாத பா.ஜ.க.வின் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி இருப்பதையும் பதிவு செய்தாக வேண்டும். நிதிஷுக்கு கூறப்பட்ட அனைத்துச் சிறப்பம்சங்களும் இவருக்கும்  உண்டு.

1999-இல் சென்னையில் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழுவுக்கு சுஷில்குமார் மோடி வந்திருந்தபோது ‘விஜயபாரதம்’ வார இதழுக்காக  அவரைப் பேட்டி எடுத்தது நினைவுக்கு வருகிறது. அப்போது பீகாரின் முடிசூடா மன்னராக லாலு வீற்றிருந்தார்; ஜாதி அரசியலும் மதச்சார்பின்மை கோஷமும் அவரது ஊழல்களை மறைக்க போதுமானவையாக இருந்தன. ஆயினும், ‘லாலுவை மிக விரைவில் வீழ்த்துவோம்’  என்று நம்பிக்கையோடு சொன்னார் சுஷில். அந்த நம்பிக்கை பலிக்க 2005  வரை அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. 2005-இல் ஆட்சியைக் கைப்பற்றிய நிதிஷ்-சுஷில் கூட்டணி, தங்கள் சுயநலமற்ற, வெளிப்படையான ஆட்சியால், அதைத் தக்கவைத்துக் கொண்டதுடன், முந்தைய வெற்றியை முறியடிக்கும் சாதனையையும் படைத்துள்ளது!

பாரத சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால்   பொறிக்கப்படும் மகத சாம்ராஜ்யம்,  தற்போது பீகார் என்று அழைக்கப்படும் பகுதியில்தான் தோன்றியது. பாடலிபுத்திரம்தான் (தற்போதைய பாட்னா) அர்த்தசாஸ்திரம் தந்த சாணக்கியரை உலகுக்கு அளித்தது. நாலந்தாவும், விக்கிரமசீலாவும் இங்கு உயர்ந்தோங்கி விளங்கிய  பல்கலைக்கழகங்கள். மகான் புத்தரும் மகாவீரரும் தோன்றிய புண்ணிய பூமி பீகார். அத்தகைய பீகார்- விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ்  கட்சியின் வலுவான தளமாக விளங்கிய பீகார்- ‘மாட்டுத் தீவன  ஊழல்’ புகழ் லாலு பிரசாத் யாதவ் வசம் சிக்கிக்கொண்டு  15  ஆண்டுகள் வனவாசம் அனுபவித்தது. அப்போதுதான் வாராது வந்த மாமணியாக நிதிஷ் குமார் லாலுவுக்கு சரியான மாற்றாக உருவானார்.

சமதா கட்சித் தலைவாரக இருந்த அவரை பீகார் மக்களுக்கு முதல்வராக    அடையாளம் காட்டியவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய்தான். தனது அமைச்சரவையில் இடம் பெற்ற நிதிஷை 2000-ஆம் ஆண்டு தேர்தலின்போது முதல்வராகப் பொறுப்பேற்குமாறு அவர்தான் அறிவுறுத்தினார். ஆனால், போதிய பெரும்பான்மை இல்லாததால், ஒரு வார காலத்தில் அவர் பதவி விலக வேண்டி வந்தது. பீகார் மக்களுக்கு நன்மை விளைய மேலும் 5  ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்?

லாலுவின் காட்டாட்சி, யாதவ ஜாதி அபிமானம், கட்டுக்கடங்காத ஊழல்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற காரணங்களால் வெறுப்புற்ற பீகார் மக்கள், 2005  தேர்தலில் லாலுவை (அவரது பினாமியாக ஆண்ட மனைவி ராப்ரி தேவியை)  வீட்டுக்கு அனுப்பி, நிதிஷை முதல்வராக்கினர். சுஷில்குமார் மோடி துணை முதல்வரானார்.

நிதிஷ் அரசு, சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை முதல் கடமையாகக் கொண்டது. அதன் விளைவாக, தாதாக்கள் ராஜ்யமாக இருந்த பீகாரின் தோற்றம் மாறியது. அதிகாரபலம் கொண்டவர்களையும்கூட குற்றவாளிகள் எனில் தயங்காமல் சிறைக்குள் தள்ளியது, நிதிஷுக்கு மக்களிடையே நற்பெயரை ஏற்படுத்தியது. ஆட்சியில் களங்கமின்மை, மக்களின் மனுக்கள்  மீது உடனடி நடவடிக்கை, தான் சார்ந்த (குர்மி) ஜாதிக்கு அப்பாற்பட்டு செயல்பட்டது, மத்திய அரசின் பாராமுகத்தையும் தாண்டி வளர்ச்சிப்பணிகளில் காட்டிய கவனம் ஆகியவை, நிதிஷை மக்கள் நாயகனாக உயர்த்தின. ஆயினும் அவர் என்றும் அடக்கத்தின் எளிய வடிவமாகவே காட்சியளித்தார். 

அதன் விளைவே தற்போதைய இமாலய வெற்றி. சென்ற தேர்தலில் 143  இடங்களில் வென்ற தே.ஜ.கூட்டணி,  நல்லாட்சிக்கான பரிசாக மீண்டும் ஆட்சியை, நான்கில் மூன்று பங்குக்கு மேல் (206 /243) பெரும்பான்மையுடன்  தற்போது வென்றுள்ளது.  குறிப்பாக நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிட்ட 141  இடங்களில் 115  இடங்களை வென்றுள்ளது.  கூட்டணிக்  கட்சியான பா.ஜ.க.வோ, போட்டியிட்ட 102  தொகுதிகளில்  91  இடங்களைக் கைப்பற்றியுள்ளது! இவர்களின் வெற்றிவிகிதம் 84  சதவிகிதம்!

மாறாக லாலுவின்   ராஷ்ட்ரிய  ஜனதாதளம் 22 (54), பஸ்வானின் லோக் ஜனசக்தி 3(10), இளவரசர் ராகுலின் காங்கிரஸ் 4 (9) இடங்களில் மட்டுமே வென்றன. (அடைப்புக் குறிக்குள் முந்தைய தேர்தலில் வென்ற இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன). ஒருகாலத்தில் பீகார் அரசியலில் முத்திரை வகித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகப் பெரும் தோல்வியை இத்தேர்தலில் சந்தித்துள்ளன.

தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றவிட்ட இப்போதும் அடக்கமாகவே நிதிஷ் காட்சி தருகிறார். ”இந்த வெற்றிக்கு எந்த மாயமும் மந்திரமும் காரணமில்லை.  மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை தேர்தலில் வெளிப்பட்டிருக்கிறது” என்கிறார் நிதிஷ். கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வின் தலைவர்களுள் ஒருவரான அருண் ஜேட்லியோ, ”இந்த வெற்றி சிறந்த நிர்வாகத்திற்குக் கிடைத்த வெற்றி” என்று பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.

தேர்தலுக்கு முன் பீகாரில் வலம் வந்து கொக்கரித்த ராகுல் இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. தேர்தல் பிரசாரத்தில் வரைமுறை மீறி, “மத்திய நிதியை நிதிஷ் அரசு பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டது” என்று அபாண்டமாகக் குற்றம் சாட்டிய பிரதமர் மன்மோகன் சிங், ”பீகார் வளர்ச்சிக்கு மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து பணி புரியும்” என்று இப்போது வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

உண்மையில் நிதிஷ் பெருமளவில் எந்த மாற்றத்தையும் பீகாரில் நிகழ்த்திவிடவில்லை. 15  ஆண்டுகால லாலு தர்பாரால் சீரழிந்த பீகாரை அவ்வளவு சீக்கிரம்  சீர்திருத்திவிடவும் முடியாது; ஆனால் அதற்காக உண்மையாக உழைத்தார். நிலைகுலைந்திருந்த காவல்துறையை மேம்படுத்தியது, அரசு அலுவலகங்கள் முறைப்படி இயங்கச் செய்தது, நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியது ஆகியவற்றால் பீகாரின் சூழலில் படிப்படியான மாற்றத்தை அவரால் கொண்டுவர முடிந்தது. நிதிஷின் ஆட்சி, பீகாரில் மாற்றம் நிகழ்வதை உறுதிப்படுத்தியது. 

இயன்ற வளர்ச்சிப்பணிகளை செய்த நிதிஷ், பீகாருக்கு தன்னால் அரிய பணிகளைச் செய்ய முடியும் என்று அவற்றின் மூலமாக நிரூபித்தார்.  தங்கள் முதல்வர் நாணயமானவர் என்ற நற்பெயரை நிதிஷ் பெற்றார். அதுவே அவரது வெற்றிக்கு அடிப்படையானது.

nithish-with-vajbayeeதவிர ஆட்சியில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதை அவர் தவிர்த்தார். கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வை அரவணைத்துக்கொண்டு, ஊடகங்கள் நிகழ்த்திய ‘மதவாதப் பூச்சாண்டி’ விஷமப் பிரசாரத்தைக் கண்டுகொள்ளாமல், நல்ல கூட்டணி சகாவாகத் தன்னை அவர் நிலைநாட்டினார். சிற்சில உரசல்கள் ஏற்பட்டபோதும், அதனால் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்குபவர்களாக அத்வானி, ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருடன் சுஷில்குமார் மோடியும் விளங்கினர். ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவர் சரத் யாதவுக்கு கூட்டணியின் உறுதிப்பாட்டில் பெரும் பங்குண்டு என்பதை கண்டிப்பாக நினைவுகூர வேண்டும். நல்லாட்சியுடன் நல்ல கூட்டணியும் அமைந்ததால், மகத்தான வெற்றி இப்போது சாத்தியமாகி இருக்கிறது.

நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே நல்லது நடக்கும் என்பதற்கு பீகார் முதல்வர் நல்ல உதாரணம். நாட்டுமக்கள் நலன் கருதி உழைப்போருக்கு பீகார் தேர்தல் முடிவுகள் நற்செய்தி எனில் மிகையில்லை.

 

ஊடகங்களின்  லாலு மனப்பான்மை

nitish_lallu

பீகார் தேர்தல் முடிவுகளை வெளியிட்டபோது தங்கள் பாரபட்ச அணுகுமுறையை  பெரும்பாலான ஊடகங்கள் மீண்டும் வெளிக்காட்டின.  இந்த மகத்தான வெற்றி குறித்த செய்திகளை வெளியிடும்போதுகூட, ஊடகங்கள் குசும்பு செய்தன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பீகார்  தேர்தல் பிரசாரத்திற்கு  வராததால் தான் வெற்றி கிடைத்தது என்று பிரசாரம் செய்த ஊடகங்கள், பீகாரிலேயே  உள்ள சுஷில்குமார் மோடியின் அரும்பணியைக் கூறாமல் தவிர்த்தன.

பா.ஜ.க.வைக் கட்டுக்குள் வைத்த நிதிஷ், மதச்சார்பின்மையைக் காத்ததால்தான் இந்த வெற்றி கிடைத்ததாம். ஐக்கிய ஜனதாதளத்தின் வெற்றிச் சதவிகிதம் 82%;  உடனிருந்த பா.ஜ.க.வின் வெற்றி விகிதமோ 89%. இதைச் சுட்டிக்காட்ட எந்த ஊடகமும் தயாரில்லை.

சில ஊடகங்கள் ‘சரியான தலைமையின்றித் தள்ளாடும் தே.ஜ.கூட்டணிக்கு புதிய தலைவர் கிடைத்துவிட்டார்’ என்று பா.ஜ.க.வை பக்கவாட்டில்  குத்தின.  ஆனால்,  அதிலுள்ள விஷமத்தைப் புரிந்துகொண்ட நிதிஷ் குமார், ‘பிரதமர் பதவியை நோக்கி நான் பயணிக்கவில்லை’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி,  ஊடகங்களின் திருக்கல்த்தனத்தை மட்டுப்படுத்தினார். 

நிதிஷும் பா.ஜ.க.வும் சேர்ந்து நிகழ்த்திய அரசியல் அற்புதத்தை நிதிஷின் தனிப்பட்ட சாதனையாகவே பல ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன.  தேர்தல் முடிவுக்குப் பிறகு வாய் திறந்த லாலு, ”நிதிஷுக்கு வாழ்த்துக்கள்; ஆனால் பா.ஜ.க.வுக்கு வாழ்த்துக் கூற மாட்டேன்” என்று சொன்னதுதான் நமது ஊடகங்களைக் காணும்போது நினைவில் இடறுகிறது.

 
 

 

நடந்துள்ள   நல்ல நிகழ்வுகள்

nitish-addressing-for-poor-and-non-educated-women

பீகார் சட்டசபைக்கு ஆறுகட்டமாக தேர்தல் நடந்தது. அக். 31-இல் துவங்கிய தேர்தல் நவ.20-இல் முடிவுற்றது. மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தலையும் மீறி, நக்சல் ஆதிக்கம் மிகுந்த மாவட்டங்களிலும் கூட மக்கள் அச்சமின்றி ஆர்வத்துடம் வாக்குச்சாவடி வந்து வாக்களித்துள்ளனர்.

இதில் மிகவும் முக்கியமான அம்சம், தேர்தலில் பெண்களின் உற்சாகமான பங்கேற்பு. பெண்களில் பெரும்பகுதியினர் நிதிஷுக்கே வாக்களித்துள்ளனர். மகளிர்நலத் திட்டங்களில் நிதிஷ் காட்டிய  அக்கறைக்குக் கிடைத்த பரிசு இது. இத்தேர்தலில்தான், 33  பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்!

இத்தேர்தலில் லாலு குடும்பத்தினர் எவருமே வெற்றி பெறவில்லை. அரசியலையே குடும்பச் சொத்தாக்கிய லாலுவுக்கு மக்கள் கொடுத்துள்ள அடி இது. லாலுவின் மனைவியும் முன்னாள் பினாமி முதல்வருமான ராப்ரி தேவி, தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோற்றார். லாலுவின் மைத்துனர் சாது யாதவ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோற்றார்.

தலித் மக்களைப் பகடையாக்கி அரசியல் நடத்திய ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரர்கள் இருவரும் லோக்ஜனசக்தி சார்பில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினர்.  சிறையில் இருந்தபடி அரசியல் நடத்திவந்த பப்பு  யாதவ் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். மற்றொரு சிறைத் தண்டனைக் குற்றவாளி ஆனந்தின் மனைவி லவ்லி ஆனந்தும் தோல்வியுற்றார்.

a kid offers a cap to nitish after namaaz

2005  தேர்தலின்போது தே.ஜ.கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகள் பெரும்பாலும் லாலுவுக்கு எதிரான வாக்குகள்.  இம்முறையோ, நிதிஷ் அரசு மீதான நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் வாக்குகள் கிடைத்துள்ளன. இது ஆக்கப்பூர்வமான விஷயம். 2005-இல் மொத்த வாக்குகளில் 38 சதவிகிதம் பெற்ற தே.ஜ.கூட்டணி, 2010-இல் 40  சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. லாலு, காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்பப்பட்ட யாதவர்களும் முஸ்லிம்களும் கூட, நல்லாட்சி என்ற அடிப்படையில் மத, ஜாதி எல்லைகளைத் தாண்டி வாக்களிதுள்ளதும் இத்தேர்தல் கூறும் பாடம்.

இனிமேலும், முஸ்லிம் வாக்குகள் போய்விடுமே என்று பயந்து அரசியல் நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலையை பீகார் தேர்தல் முடிவு போக்கியுள்ளது என்றால் தவறில்லை. நல்லாட்சி நடத்தினால், இஸ்லாமியர்களும் மதத்தைத் தாண்டி சிந்தித்துச் செயல்படுவார்கள் என்பதை ஏற்கனவே குஜராத்தில் மோடியின் வெற்றி நிரூபித்தது; பீகாரில் நிதிஷின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.

 
 

நிதிஷ் குமார் –  ஓர்  எளிய அறிமுகம்

 
nithish-2

பீகாரின்  பக்தியார்புரில், கவிராஜ் ராம்லக்கன் சிங் – பரமேஸ்வரி தேவிக்கு, 1951, மார்ச் 1-இல் பிறந்தவர் நிதிஷ் குமார்.  இவரது தந்தை விடுதலைப் போராட்ட வீரர்; நவீன பீகார் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்த அனுக்ரக நாராயண் சின்ஹா என்ற காந்தீயவாதியின் அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்தவர் ராம்லக்கன் சிங். ஆரம்பத்திலிருந்தே காந்தீயக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட நிதிஷ், மதுவையும் புகைபிடித்தலையும் தொடாதவர். எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படிப்பில் பட்டம் பெற்ற நிதிஷ், மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டார். சோஷலிசக் கொள்கையுடன் அரசியல் நடத்திவந்த ராம் மனோகர் லோகியா,  கர்ப்பூரி தாகூர் ஆகியோரை தனது அரசியல் குருவாகக் கொண்டார். 

இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடிநிலையை   எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயண் நடத்திய போராட்டத்தில் (1974 – 1977)  நிதிஷ் பங்கேற்றார். அவரது இளமைத் துடிப்பு, அரசியலில் அவரைப் பிரபலப்படுத்தியது. 1980-இல் நடந்த தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற அவர், அதனால் நிலைகுலையவில்லை. அவரது அரசியல் பயணம் எதிர்பார்ப்பின்றித் தொடர்ந்தது. அந்தக் காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத்  யாதவ் ஆகியோருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. 1985-இல் முதன்முறையாக,  சுயேச்சையாகப் போட்டியிட்டு பீகார் சட்டசபை உறுப்பினர் ஆனார்.  1987-இல் லோக்தளத்தின் இளைஞர் பிரிவு தலைவரானார்.

1989-இல் ராஜீவின் போஃபர்ஸ் ஊழலை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கிய வி.பி.சிங்கின் தலைமையில் ஜனதாதளம் உதயமானது. அதில் லோக்தளம்   இணைந்தது. அப்போது பீகார் ஜனதாதளத்தின் பொதுச்செயலாளர் ஆனார் நிதிஷ். அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற அவர்,  வி.பி.சிங் அமைச்சரவையில் விவசாயத் துறை இணை அமைச்சர் ஆனார். அடுத்து வந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் 2004  வரை அவர் உறுப்பினராகத் தேர்வானார்.

ஆட்சிகள் மாறிய சூழலில், ஜனதா தளத்தின் முன்னணித்  தலைவராக உயர்ந்த அவர், பீகாரில் லாலுவின் மோசமான ஆட்சிக்கு எதிராகக் குரல்  எழுப்பி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத்  யாதவ்  ஆகியோருடன் சமதா என்ற கட்சியாகப் பிரிந்தார். சமதா கட்சி  வாஜ்பாய் தலைமையிலான   தே.ஜ.கூட்டணியில் இடம் பெற்றது. வாஜ்பாய் அமைச்சரவையில் நிதிஷ் ரயில்வே, தரைவழிப் போக்குவரத்து, விவசாயத் துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். 1999-இல் நடந்த ரயில் விபத்திற்குப் பொறுப்பேற்று தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர்  நிதிஷ். பிறகு சமதா உள்ளிட்ட ஜனதாக் கிளைகள் இணைத்து ஐக்கிய ஜனதாதளம் உருவானபோது  அதன் நாடாளுமன்றத் தலைவரானர் நிதிஷ்.

2001-இல் நடந்த பீகார் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டபோது பிரதமர் வாஜ்பாய் அறிவுரைப்படி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், ஒருவார காலத்தில் பதவி விலகினார். பிறகு பீகாரில் லாலுவின் ஆட்சியை அகற்ற, தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

2005-இல் நடந்த தேர்தலில் 143  தொகுதிகளில் வென்று தே.ஜ.கூட்டணி சார்பில் ஆட்சியைக் கைப்பற்றிய நிதிஷ், பீகாரில் சீர்குலைந்திருந்த ஆட்சி நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தி, வளர்ச்சியை நோக்கி மாநிலத்தை அழைத்துச் சென்றார். அதன் விளைவாக 2010  சட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் மூன்றாவது முறையாக பீகார் முதல்வர் ஆகியிருக்கிறார்.

இவரது மனைவி மஞ்சு குமாரி சின்ஹா, பள்ளி ஆசிரியை. இவர் அண்மையில் (2007) இறந்தார். இவரது மகன் நிஷாந்த், பொறியியல் பட்டதாரி. அரசியலில் குடும்ப உறுப்பினர்கள் நுழைவதை நிதிஷ் ஊக்குவிக்கவில்லை.  ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதிஷ் மிக எளிமையானவர்; யாரும் இவரைச் சிரமமின்றி அணுக முடியும்.

அரசியல் என்பது பிழைக்கும் வழியல்ல; மக்களுக்கு சேவை செய்வதற்கான மார்க்கம் என்று நம்பும் இயல்பான அரசியல்வாதி நிதிஷ் குமார்.

20 Replies to “நல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு!”

  1. சேக்கிழான், நல்ல அலசல்.

    பீகார் தேர்தல் முடிவுகள் முக்கியமாக 4 விஷயங்களை அழுத்தமாக சொல்லியுள்ளது என்று நினைக்கிறேன்.

    1. மக்கள் வளர்ச்சி அரசியலுக்கு வாக்களித்து, சாதி அரசியலுக்கு சாவுமணி அடித்துள்ளார்கள். ஜ.த-பாஜக கூட்டணியில் சாதிக்கணக்குகளே இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சாதியை ஒரு supplementary, secondary strategy ஆகவே கையாண்டார்கள். ரா.ஜ.த போன்று primary strategy ஆக அல்ல்.

    2. ராகுலில் ’மேஜிக்’ படு பரிதாபகரமாகத் தோல்வி அடைந்தது. அரசியல் விடலைத் தனத்தைத் தலைமைப் பண்பாக முன் நிறுத்திய காங்கிரசின் வாரிசு அரசியலுக்கு நல்ல பாடம் புகட்டினார்கள் மக்கள். ஆனால் வழக்கம்போல காங்கிரசில் யாரும் இந்தத் தோல்விக்கு ராகுல்-சோனியா தவிர்த்து உலகத்தில் உள்ள மற்ற எல்லாக் காரணங்களையும் கண்டுபிடிப்பார்கள்.

    3. பாஜக போடியிட்ட தொகுதிகளில் சுமார் 90% அனாயசமாக வென்றிருக்கிறது. குறிப்பாக, நரேந்திர மோடி பிரசாரம் செய்யாமலே இந்த வெற்றீ கிடைத்திருக்கிறது (மோடி பிரசாரம் செய்திருந்தால் இன்னுமே சில சீட்கள் அதிகம் கிடைத்திருக்கும் என்றும் இப்போது மோடி-அபிமானிகள் சொல்லலாம்). இது பாஜக தன்னளவில் பீகாரில் ஒரு சக்திவாய்ந்த கட்சியாக மாறியிருப்பதை உறுதி செய்திருக்கிறது.. சுஷில் மோடி, ராஜிப் பிரதாப் ருடி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

    4. முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகள் என்று சொல்லப் பட்ட பலவற்றில் ஜ.த-பாஜக கூட்டணி வென்றுள்ளது. முஸ்லிம்களை தாஜா செய்யும் அரசியலுக்கு பின்னடைவு, அவர்களும் ஒட்டுமொத்த வளர்ச்சியையே கருத்தில் கொண்டு ஓட்டளிப்பார்கள் (குஜராத் போல) என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

  2. சேக்கிழான் அவர்களே

    முழுமையான அலசல். நிதிஷ் தேர்தலுக்கு முன்பாக மோடி வரக்கூடாது என்று நடத்திய போலி மதச் சார்பின்மை நாடகம் படு மோசமானது. அது அவரது நம்பகத்தன்மையைக் குறைத்து விட்டது. இவரை நம்பி பா ஜ க தனது தனித் தன்மையையும் ஓட்டு வங்கியையும் இழக்காமல் பாதுகாக்க வேண்டியது அவசியம். நவீன் பட்நாயக்கைப் போலவே துரோகம் செய்யத் தயங்காத ஒரு அரசியல்வாதியாகவே நிதிஷ் தெரிகிறார். பீஹார் செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவு. மொத்தத்தில் இந்த தேர்தல் முடிவு சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றே “பீஹார் பழைய தமிழகம் போல மாறி வருகிறது, தமிழ் நாடு பீஹாராகத் தேய்ந்து கொண்டிருக்கிறது” பீஹார் மாறுகிறது, வளர்கிறது, தமிழ் நாடு ஓட்டுக்குக் காசு வாங்கும் பிச்சைக்கார தேசமாக, கொலையும், கொள்ளையும், லஞ்ச லாவண்யங்களும், ஆள் கடத்தலும் அதிகரித்து வரும் பீஹாராக மாறி வருகிறது. பீஹார் மக்கள் இன்று மாறியுள்ளார்கள், நல்ல தலமையைத் தேர்ந்தெடுக்கும் முதிர்ச்சி பெற்றிருக்கிறார்கள் தமிழ் நாடு மக்களோ எலக்‌ஷனுக்கு எவ்வளவு காசு கொடுப்பார்கள், எத்தனை பிரியாணி பொட்டலம் தருவார்கள், எதை இலவசமாகத் தருவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்து நிற்கும் பிச்சைக்கார மாநிலமாக மாறி விட்டிருக்கிறது

    அன்புடன்
    ச.திருமலை

  3. மோடி வந்திருந்தால் நிச்சயம் இந்த வெற்றி கிடைத்து இருக்காது, அதனால்தான், நிதிஷ் முதலிலேய மோடி தேர்தல் பிரசாரத்திற்கு வருவதை தடை செய்தார், நிதிஷ் குமார் மத சார்பு அற்றவர், மோடி முஸ்லிம்களின் எதிரி, குஜராத்தில் முஸ்லிம்களை கொலை செய்வதற்கு துணை போனவர்

  4. தமிழ் ஹிந்துவின் பிரசுரமாகும் ஒவ்வொரு கட்டுரையையும் ஒரு புத்தகமாகவே வெளியிடலாம். வாழ்த்துக்கள்.

    பீகார் மக்கள் பல ஆண்டுகளாக அசுரர்களின் சகிக்கமுடியாத கொடுமையை அனுபவித்து, நல்வாழ்வு கிடைக்காதா? என்று ஏங்கினார்கள், தவமிருந்தார்கள். அதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள்.

    தமிழக மக்கள் இன்னும் அந்த அளவுக்கு கொடுமைகளை அனுபவிக்கவில்லையோ? அதனால்தான் சில்லறை காசுக்கும், பிரியாணி பொட்டலதிற்கும் ஓட்டை விலை பேசுகிறார்கள்.

    “வெயிலில் காய்ந்தவனுக்குதான் நிழலின் அருமை தெரியும்”. தமிழன் இன்னும் கொஞ்ச நாளுக்கு காயட்டும்…

  5. அன்புள்ள முபாரக்,

    மோடிக்கும் குஜராத் வன்முறைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. கோத்ராவில் ரயில் பெட்டி கொளுத்தப்பட்டபோது அதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர். உயிருடன் எரிக்கப்பட்டனர்.ஆண், பெண்,சிறு குழந்தைகள் என்று அனைவரும் வேறுபாடு இல்லாமல் கொல்லப்பட்டனர். இது போன்ற வன்முறைகள் மிக கொடூரமான முறையில் நிகழும்போது அதன் எதிர்விளைவுகளை கட்டுப்படுத்துவது என்பது எந்த கொம்பனுக்கும் இயலாது.

    சம்பந்தமே இல்லாத மோடியை கொலைகாரர் என்று சொல்பவர்கள் ரயில் பெட்டியில் டீசல் மற்றும் இதர எரிபொருளை ஊற்றி பல அப்பாவிகளை கொலை செய்தவர்களை கண்டிப்பதோ அத்தகைய காட்டுமிராண்டிகளை உருவாக்கியவர்கள் யார் என்பதுபற்றியோ பிரரைகொலை அல்லது படுகொலை செய்வதன் மூலம் கடவுள் அருள் பெறலாம் என்று நினைக்கும் ஒரு மூடக் கும்பலுக்கு என்ன தண்டனை தருவது அவர்களை எப்படி திருத்துவது என்பதுபற்றியோ வாய் திறந்து பேசுவது கிடையாது.

    கடவுள் நம்பிக்கை என்பது மிக புனிதமானது. மனித இனத்துக்கு அது தேவையானதே ஆகும். ஆனால் கடவுள் பெயர் இது மட்டும் தான். கடவுளின் இல்லம் இது மட்டுமே . கடவுளின் மொழி இந்த புத்தகத்தில் மட்டுமே உள்ளது என்று உளறுபவர்கள் தாங்கள் அறிந்தோ, அறியாமலோ, எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல, யாதும் அறிந்த கடவுளை குறுகிய எல்லைகளுக்குள் அடைத்து இறைவனை கேவலப்படுத்துகிறார்கள். எல்லா மொழிகளும் இறைவனின் மொழிகளே ஆகும். இது ஒன்று மட்டுமே இறைவனின் மொழி என்று சொல்பவர்கள் மற்ற சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிபேசும் மக்களால் வெறுக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள்.

    தன மதம் மட்டுமே உயர்ந்தது என்று சொல்பவர்கள் பிற மதத்தினரின் வெறுப்பை பெற்று, பிற மதத்தினறாலே அழிந்துபோவார்கள். கடவுள் நம்பிக்கை மனித இனத்துக்கு நல்லது என்று சொல்லலாம். அது தவறில்லை.ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களை பார்த்து அவர்கள் நரகத்திற்கு போவார்கள் என்று சொல்வது தவறு.

    தவறு செய்பவர்களுக்கு இறைவன் தக்க கூலி கொடுப்பான் என்று கடவுள் மீது நம்பிக்கை உள்ளவன் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியை தூக்கி கொண்டு பிறரை கொலை செய்ய அலையமாட்டான். கடவுள் நம்பிக்கை இல்லாதவனே ஆயுதங்களுடன் பிறரை அழிக்க முற்படுகிறான். தங்களை காத்துக்கொள்வதற்காக ஆயுதம் எடுப்பது வேறு, பிறரை அழிக்க ஆயுதம் எடுப்பது வேறு.

    வன்முறையாளர்கள் ஒரு பெரிய அழிவை உருவாக்கும் நேரத்தில், பதிலுக்கு சில வன்முறைகள் நிகழ்ந்தே தீரும். அதனை விவரம் அறிந்தவர்கள் யாரும் ஆதரிப்பதில்லை. ஆனால் விவரம் அறிந்தவர்களால் அதனை தடுக்க முயற்சிகள் செய்தாலும் முடிவதில்லை.

  6. மிக சரியாக சொன்னீர்கள் பிரதாப்! பாராட்டுக்கள்!

  7. a welcome victory for development. hope other states too will learn from this lesson.
    special thanks should be given to modi also. without him this victory would not have been possible.

  8. நன்றி! எளிமையான மக்கள் முதல்வர்களை தமிழ் ஹிந்துவில் விளக்கி தமிழ் ஹிந்து பெருமை தேடிக் கொண்டது. இது மிகையாக தெரியலாம். ஆனால் தமிழக மக்கள் புரிந்து கொள்ள, தமிழ் ஹிந்து படிக்கும், தமிழகத்தில் வாக்களிக்கும் உரிமையும் உள்ளவர்கள் புரிந்து கொள்ள உதவும். நம்மை, நாட்டை வளர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்ல விட்டாலும் , வீழ்ச்சியை நோக்கி பயணம் அமைந்து விடக் கூடாது. இதை
    புரிந்து கொண்டு தமிழக வாக்காளர்கள் செயல் பட வேண்டிய நேரம் இது. பாரதிய ஜனதா கட்சி இன்னும் தமிழகத்தில் மாற்றம் ஏற்படப் பாடு பட வேண்டும். ஒன்று படுவோம். பாரத தாய்க்கு பெருமையை ஏற்படுத்துவோம்.

  9. முபாரக்,இறைவனின் (அல்லாவின் என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்; எனக்கு ஆட்சேபனை இல்லை) திருவிளையாடாலைப் பாருங்கள். பீகார் துணை முதல்வர் பெயர் மோதி லால் மோடி.
    ஆங்கிலத்தில் எழதினால் இரண்டு மோடி. என் செய்ய?

  10. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் , ஒரு மாநில மக்கள் தேர்தலில் ஒரு புதிய அரசினை தேர்ந்து எடுக்கும்போது பல அளவுகோல்களை வைத்துள்ளனர். இந்த அளவு கோள்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் வேறுபடும். நாட்டின் ஒருமைப்பாடு, கலாச்சாரம், சுதந்திரம், ஜனநாயகம், வேலைவாய்ப்பு, சட்டம் ஒழுங்கு, பொருளாதாரநிலை, விலைவாசி உயர்வு , ஊழல், மின் சப்ளை , குடிநீர் விநியோகம், சுகாதார வசதிகள், ரேஷன் பொருள்கள் விநியோகம் போன்ற பல துறைகளிலும் உள்ள நிலைகளை கருத்தில் கொண்டு இந்திய வாக்காளர்கள் முடிவு எடுக்கின்றனர். அவசர நிலை அமுலில் இருந்த பொழுது பல அத்துமீறல்கள் நடைபெற்றதால் , அப்போதைய சர்வாதிகார அரசு அடுத்த தேர்தலில் தூக்கி எறியப்பட்டது.

    ஒரே சமயத்தில் சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நாளில் தேர்தல் நடந்தபோது சட்டசபையில் ஒரு கட்சிக்கும் ,நாடாளுமன்றத்திற்கு வேறொரு கட்சிக்கும், சீர் தூக்கிப்பார்த்து வாக்களித்த மக்கள் நம் மக்கள். பீகார் மாநிலத்தில் மோடி சென்று பிரச்சாரம் செய்திருந்தால் , இன்னும் ஒரு இருபது தொகுதிகளில் கூடுதலாக நிதீஷ் அணி வெற்றிபெற்றிருக்கும். இப்போது இருக்கும் இந்திய அரசியல்வாதிகளில் பதவியில் இருப்பவர்களில் நரேந்திர மோடி, நிதீஷ் குமார், மற்றும் நவீன் பட்நாயக் ஆகியோர் சிறந்த முதல்வர்களாக கட்சிவேருபாடு இல்லாமல் எல்லோராலும் மதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் ஜனவரி 1980 பாராளுமன்ற தேர்தலில் இந்திரா காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு ஓட்டளித்து பெரிய அளவில் வெற்றி பெறச்செய்துவிட்டு, நான்கு மாத இடைவெளிக்கு பிறகு 1980 மே மாதம் நடை பெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் எம் ஜி ஆருக்கு மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற செய்தனர் நம் மக்கள். நவீது போன்ற அன்பர்கள் தங்கள் குறுகிய பார்வைகளை விட்டு, ஒரு பாவமும் அறியாத நல்ல தலைவர்கள் மீது அபாண்டமான பொய்க்குற்ற சாட்டுக்களை கூறுவதை நிறுத்தினால் நல்லது.

  11. //மோடி முஸ்லிம்களின் எதிரி, குஜராத்தில் முஸ்லிம்களை கொலை செய்வதற்கு துணை போனவர்-முபாரக், குவைத்//

    குஜராத்தில் வஹாபிய முகமதிய மத வெறியர்கள் வேண்டுமானால் மோதியை முகமதியர்களின் எதிரி என்று சொல்வார்களேயன்றி சாமானிய முகமதிய மக்கள் அவரை அவ்வாறு கூறமாட்டார்கள். பாரபட்சமின்றி முகமதியர் பகுதிகளிலும் வளர்ச்சிப்பணிகளில் மோதியின் அரசு கவனம் செலுத்துவதை அவர்கள் அறிவார்கள். இங்கே வேலூர் அருகில் மேல் விஷாராத்தில் முகமதியர் பெரும்பான்மையானதால் ஊராட்சி நிர்வாகம் அவர்கள் கைக்குப் போய்விட்டதன் பலன் ஹிந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் அவசியப் பணிகள் மேற்கொள்ளப்படுதற்குக் கூட வேண்டுமென்றே காலதாமதம் செய்யப்படுகிறது!

    சமீபத்தில் நடந்த குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப் பல முகமதியருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். குஜராத் மாநில முகமதிய மக்கள் மோதி துவேஷ பொய்ப் பிரசாரத்திற்கு இனி செவி சாய்க்க மாட்டார்கள்.

    பிஹார் மாநில அரசு நிர்வாகம் மக்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதால் தேர்தல் பிரசாரத்திற்கு வெளியிலிருந்து எவரையும் வரவழைத்து ஆதரவு திரட்ட வேண்டியிருக்காது என்றுதான் முதலில் காரணம் சொன்னார்கள். ஆனால் மோதி துவேஷ ஊடகங்கள் அவரை சிறுமைப் படுத்த வாய்ப்புத் தேடி அலைவதால் வேண்டுமென்றே பிரசாரத்திற்கு குஜராத் முதல்வரை அழைப்பீர்களா என்று கேட்டு, நிதிஷ்குமார் வாயிலிருந்து மோதி வரத் தேவையில்லை என்று சொல்லவைத்து அதை ஒரு பிரச்சினையாகப் பெரிதுபடுத்தி மகிழ்ந்தன. இந்த உண்மையை பாஜக தலைவர்கள் அமபலப்படுத்தத் தவறிவிட்டனர். ஊடகங்களின் இந்த விஷமத்தனத்தை அவ்ர்கள் நன்கு வெளிப்படுத்தி யிருக்க வேண்டாமா?

    முந்தைய தேர்தலின்போது நிதிஷ் ஆட்சி எப்படி இருக்கும் என்கிற அனுமானம் மக்களுக்கு இல்லாத நிலையில் நரேந்திர மோதியின் பிரசாரம் தேவைப்பட்டது. பயன்படுத்திக் கொண்டனர். நடந்து முடிந்த தேர்தலில் அதற்கு அவசியம் இருக்கவில்லை. ஏனெனில் ஐக்கிய ஜனதா- பாரதிய ஜனதா கூட்டாட்சியின் செயல்பாடு மக்கள் நல நிர்வாகமாக இருப்பது பிஹார் மக்களுக்குத் தெரிந்துவிட்டது.

    பிஹார் துணை முதல்வர் பெயர் சுசீல் குமார் மோதி. பாஜகவைச் சேர்ந்த இந்த மோதியும் நல்லவர், வல்லவரே. பிரசாரத்திற்கு இந்த மோதியே போதும் என்றனர் உள்ளூர் பாஜகவினர். ஆனால் அது நரேந்திர மோதி வரக் கூடாது என்ற எண்ணத்தினால் அல்ல. எனினும் அகில பாரத பாஜகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வேண்டுமென்றே பூசி மெழுகுவதுபோல் பேசி நரேந்திர மோதி மீது தங்களுக்குள்ள பொறாமையை வெளிப்படுத்திக் கொண்டனர்.

    ஸ்ரீ நரேந்திர மோதி மிகச் சிறந்த பேச்சாளர். உடனுக்குடன் பதிலடி கொடுப்பதில் வல்லவர். தேர்தல் பிரசாரத்திற்கு அவர் சென்றிருந்தால் பாஜகவுக்கு மேலும் சில இடங்கள் கிடைத்திருக்கக் கூடும். வெறும் அபிமானம் காரணமாக இதைச் சொல்லவில்லை.
    -மலர்மன்னன்

  12. பா சிவசுப்பிரமணியன்

    இந்திய இஸ்லாமியர்களுக்கும் வஹாபிய இஸ்லாமியர்களுக்கும் உள்ள வேறுபாடுகள் பல. மலர்மன்னன் அவர்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள செய்திகளுக்கு சாட்சியாக 5 -12 -2010 வாராந்தரி ராணி தமிழ் வார இதழில் பக்கம் 6 ல் வந்துள்ள செய்தியை கீழே தருகிறேன்.
    ” ராமர் ரதத்துக்கு இஸ்லாமிய சாரதி”

    அயோத்தியின் பெயரால் இரண்டுபட்டுக்கிடக்கும் மதவாதிகளுக்கு அறிவுச்சூரியனாக திகழுகிறார், முகமது மொய்னுதீன் ( வயது 75 .) புது டெல்லி நொய்டாவில் தசரா பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் நடக்கும் ராமர் சீதை ரத ஊர்வலத்தில், குதிரை வண்டி ஓட்டுவது இவரே.

    இவரின் குதிரை ஊர்வலத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பணம் தர, டெல்லியில் நிறையப்பேர் உண்டு.

    ஆனாலும் தசரா-ராம லீலா நிகழ்ச்சியில் பங்கேற்க இவர், யாரிடமும் சம்பளம் வாங்கியதில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இதை ஒரு இலவச சேவையாக செய்து வருகிறார்.

    “ராமபிரானுக்கு என் அப்பா செய்த சேவையை நான் இப்போது தொடருகிறேன். அவ்வளவுதான்.”, என்றபடி பெருமிதப்படும் மொய்னுதீன், ராமலீலாவின் போதும் தொழுகையை விடுவதில்லை.

    “நான் ஐந்து வேலையும் தொழும் இஸ்லாமியன். தசரா பண்டிகை காலத்தில் மட்டும் என் கடைசி நேர தொழுகை, ராம்லீலா மைதானத்தில் அமையும். அப்போது எனக்குள் உண்டாகும் சிலிர்ப்பு , வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது” என்று நெகிழ்கிறார்.

    இதுவே இந்திய முஸ்லிம்களின் முதிர்ச்சியும், பண்பும் ஆகும். வஹாபிய இஸ்லாம் விரைவில் இந்திய திரு நாட்டை விட்டு மட்டுமல்ல சவூதி போன்ற நாடுகளில் இருந்தும் விரட்டப்படும். ஏனெனில் வன்முறைக்கு மனித சமுதாயத்தில் எதிர்காலத்தில் இடமிருக்காது.

    பிற மதத்தினர் , கடவுள் இல்லை என்று சொல்லித்திரியும் சில பொய் நாத்திகர்கள், கடவுள் நம்பிக்கை இல்லை என்கிற சில உண்மையான நாத்திகர்கள், கடவுள் நம்பிக்கை இருப்பதால் ஒரு லாபமும் மனிதனுக்கு இல்லை எனவும், கடவுள் நம்பிக்கை இல்லாததால் மனிதனுக்கு ஒரு நஷ்டமும் இல்லை, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று வெட்டி ஆராய்ச்சிகள் செய்ய வேண்டாம் எனவும் கருதுகிற ஆக்னேய வாதிகள் ( Agnostic) இவர்கள் அனைவரும் நரகத்திற்குத்தான் போவார்கள் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் அனைவரையும் அழிக்க திட்டமிடும் எந்த சக்திகளும் கடவுள் அருளாலே தாங்களே அழிந்து போவார்கள். இது சத்தியம். வஹாபிகள் மட்டுமல்ல, அது போன்ற வேறு எந்த இயக்கமானாலும் இதுவே முடிவு.

  13. குஜராத்தில் ஏதோ ஒன்றிரண்டு அபேக்ஷகர்கள் அல்ல. முன்னூறுக்கும் மேற்பட்ட முகமதியர்கள் ஸ்ரீ நரேந்திர மோடியின் பெயரால் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    ஸ்ரீ பா சிவசுப்பிரமணியன் நீங்கள் எழுதியது போல பிற மதங்களை மதிக்கும் பல முகமதியர்கள். வாராணசியில் வசித்து சமிபத்தில் இறைவனடி சேர்ந்த உஸ்தாத் பிஸ்மில்லா கான் இது போன்றவர். முசல்மானாக இருந்தும் காசியில் இருந்த படியால் தன் மகளுக்கு அன்னபூர்ணா என்று பெயர் இட்டு இருந்தார்.

    தமிழக நாதஸ்வர வித்வான் ஸ்ரீ ஷேக் சின்ன மௌலானா மற்றும் அவரின் சிஷ்யர்களான ஷேக் மகபூப் சுபானி அவர் பத்னி கலீஷாபி மகபூப் கோவில் கோவில்களாக நாதஸ்வரம் வசித்து வருகிறார்கள். முசல்மானாக இருந்தும் மற்ற முசல்மான்கள் போல் அல்லது இந்த அம்மணி மங்கள கரமாக நெற்றியில் குங்குமமும் சிந்தூரமும் அணிந்து வுள்ளார். கிழே தந்த இணைப்பில் படித்து பார்க்கவும்.
    https://www.kutcheribuzz.com/features/interviews/sheik.ஆசப்

  14. குறிப்பாக இசைஞானம் மிக்கவர்களும் பொதுவாகக் கலையுள்ளம் படைத்தவர்களும் ஹிந்து கலாசார மரபைக் கடைப்பிடிப்பவர்களாகவே உள்ளனர். பிஸ்மில்லா கானை வசதி மிக்க தில்லிக்கு வந்துவிடுமாறு வற்புறுத்தியபொழுது, அங்கு கங்கா மய்யி இல்லை, மந்திரும் (ஸ்ரீ காசி விச்வநாதர் ஆலயம்) இல்லையே என்றார். இசைவாணர் நெளஷாத்திடம் அவரது இசைத் திறமை குறித்துக் கேட்டபொழுது எல்லாம் சரஸ்வதி மாக்கீ தயா என்றார். அருமையான பின்னணி இசைப் பாடகர் தலத் மஹ்மத் அவரது தனித் தன்மையான நடுங்கும் குரலில் பாடும் திறன்பற்றிக் கேட்டபோது பாடத் தொடங்குமுன் மானசீகமாக கலைவாணியைப் பிரார்த்தனை செய்தபிறகே பாடத் தொடங்குவதாகக் கூறினார். பல ஆண்டுகளுக்குமுன் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து கல்கத்தாவுக்குப் பாட வந்த அலி சகோதரர்கள், காளி மாதாவின் அருளாலேயே அவளது பூமியில் பாட வாய்ப்பு வந்திருப்பதாகவும் ஆகவே தங்களது அன்றைய இசை நிகழ்ச்சியை காளி மாதாவுக்குக் காணிக்கையாக்குவதாகவும் அறிவித்தனர். இங்கே தமிழகத்தில் குணங்குடி மஸ்தான் ஹிந்து தெய்வங்களைத் துதித்துப் பாடல்கள் இயற்றினார். மதத்தால் நான் முகமதியளாக இருக்கலாம். ஆனால் கலாசார மரபின் பிரகாரம் நான் ஹிந்துவே. எனது மரபை நான் எதற்காக விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டவர் இஸ்மத் சுக்தாய் என்ற எழுத்தாளர். எனது கலாசார மரபின் பிரகாரம் எனது உடலுக்கு எரியூட்டப்பட வேண்டும் என உயில் எழுதி மவுல்விகளின் கோபத்திற்குள்ளானார். இஸ்மத் சுக்தாய் மும்பைத் திரைப்படத் துறையில் திரைக்கதை- உரையாடலில் மிகவும் பிரபலமாக விளங்கியவர். ஸ்ரீ க்ருஷ்ணர் மிகச் சிறந்த சீர்திருத்தவாதி, பெண்களை மதிக்கத் தெரிந்தவர் என்றெல்லாம் வாதிட்டு அவரே என் இஷ்ட தெய்வம் என பகிரஙகமாக அறிவித்தவர் சுக்தாய். இன்றளவும் உள்ளத்தால் ஹிந்துவாய் வாழும் முகமதியர் பலர். தில்லியில் வசிக்கும் அஸ்மா சலீம் என்ற பெண்ணை நான் முறைப்படி ஹிந்துவாகத் தாய் மதம் திரும்பச் செய்தேன். அவளைப் பின்பற்றி அவளது குடும்பத்தார், நண்பர்கள் எனப் பலரும் தாய் மதம் திரும்பிவிட்டனர். இவர்கள் அனைவரும் என்னை அப்பாஜான் என்றே அழைக்கின்றனர்.
    -மலர்மன்னன்

  15. இந்த பிகார் வெற்றி பற்றி சில அறிவுஜீவிகள் அலசல்களை அளித்துள்ளனர். அதில் நிதிஷ் குமார் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினரையும், சுஷில் மோடி உயர்சாதியினரையும் அண்டக்கட்டிக் கொண்டதாகவும் அதனால் தான் வென்றனர் என்றும் ஒரு ‘அறிவுப்பூர்வ’ அலசல். மேலும் 39% ஆதரவு பெற்றோர் மக்களின் முழு ஆதரவு பெற்றதாக எப்படி ஏற்றுக்கொள்வது என்றும் கேட்கிறார்கள்.

    நான் 29.67% ஓட்டுக்களைப் பெற்ற காங்கிரசு கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களைச் சேர்த்து 37.25% என்ற கணக்கில் UPA II அமைத்த போது அது மாபெரும் வெற்றி, மக்கள் தீர்ப்பு என்று கொண்டாடினீர்களே அது எப்படி என்றேன். பிகார் தொகுதி மறுசீரமைப்பில் பாஜகவுக்கு சாதகமாக தொகுதிகள் சீரமைக்கப்பட்டன என்றார் அவர். என் ஆங்கில, தமிழ் வலைப்பூக்களிலும்(blog) இந்த அறிவுஜீவிப் பிரச்சாரம் பற்றி எழுதியிருக்கிறேன். வளர்ச்சிப் புள்ளிவிவரம் பற்றியும் எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழாக்கம் சற்றே கால தாமதம் ஆகிறது.

  16. பிரதாப்

    பீகார் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் திரு எல் கே அத்வானி அவர்கள் எல்லா கூட்டங்களிலும் பேசும்போது திரு நரேந்திர மோடி அவர்களின் குஜராத் சாதனைகளை மிக விரிவாக பேசினார். பீகார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஜே டி யு நிதீஷ் குமாரின் வெற்றிவிகிதம் என்பது சதவீதம். பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி விகிதம் தொண்ணூறு சதவீதத்திற்கும் மேல். எனவே நரேந்திர மோடியை கூப்பிட்டு பிரச்சாரம் செய்திருந்தால் இன்னும் பெரிய வெற்றி கிடைத்திருக்கும்.

    பீகாரிலுள்ள இஸ்லாமிய மக்களிடம் லல்லு மற்றும் சோனியா காங்கிரசார் செய்த பொய் பிரச்சாரங்கள் எடுபடவில்லை. இந்த நாட்டில் உள்ள 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் , வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விலைவாசி கட்டுப்பாடு , நல்ல போக்கு வரத்து வசதிகள் , இடைவிடாத மின்சார சப்ளை , நல்ல தரமான கல்வி, குறைந்த செலவில் மருத்துவ வசதி , oozhalatra nirvaakam இவற்றையே எதிர்பார்க்கிறார்கள். உலகம் முழுவதையும் ஒரே மதத்தை பின்பற்றச்செய்ய வேண்டும் என்று அலையும் மூளைகெட்ட மதவெறியர்களை கடவுள் நரகத்தில் தள்ளுவார். உலகம் உள்ளவரை பல மொழிகள், பல உணவு வகைகள், பல உடைகள், பல வழிபாட்டுமுறைகள், பல விளையாட்டுக்கள் என்று எப்போதும் பன்மை இருந்து கொண்டு தான் இருக்கும்.

    எல்லோரும் சப்பாத்தி தான் சாப்பிட வேண்டும் என்றோ அல்லது எல்லோரும் கேழ்வரகு தான் சாப்பிடவேண்டும் என்றோ எந்த மனிதனாவது பிறரை கட்டாயப்படுத்தினால் நாம் அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுவோம் அல்லவா ? அதே போலவே இறை நம்பிக்கை அல்லது இறைநம்பிக்கை இன்மை என்று எதுவாயினும் தனது விருப்பத்தை பிறர் மீது வலுக்கட்டாயமாக திணிக்க நினைப்பவர்களும், அவர்களுக்கு துணை போகிறவர்களும் மனித சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு, கடைசி இருப்பிடமாக மனநோய் மருத்துவ மனையில் சேர்க்கப்படுவார்கள். இது உறுதி.

  17. பிஹார் தேர்தலில் போட்டியிட்ட பாதிபேர்களுக்குமேல் கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டவர்கள். இது (NDA) கூட்டணியில் மிகவும் அதிகம்.. மேலும் இப்பொழுது சிறுபான்மையினருக்கு இடம் ஒதுக்குவது என்பது அவர்கள் எண்ணிக்கையைவிட அதிகமானஅளவில் எல்லா கட்சிகளும் தேர்தலில் போட்யிடி அனுமதிக்கிறது. இதனால் பெரும்பான்மையினருக்கு பிரச்சனைகள் கூடுமே அன்றி குறையாது. மேலும் இப்படி மும்முனை போட்டி நான்குமுனை போட்டி என்று உருவாகிவருவதால் தேர்தலில் வெற்றிபெரும் கட்சிகள் சொற்ப சதவிகித வாக்குகளை பெற்றே ஆட்சியைபிடிக்கிறது. இதனால் பெரும்பான்மை பலம் என்பது அர்தமற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது. எனவே இன்று நிலைமை கிரிமினல்களுக்கு தீனி சிறுபான்மையினர்களுக்கு தீனி (கட்டிதழுவல்) இவற்றுடன் நல்ல ஆட்சியையும் நடத்தினால்தான் சொற்ப சதவிகிதத்ததிலாவது ஆட்சியைபிடிக்கமுடியும் என்பது நிருபணமாகிவருகிறது.
    இந்தமாதிரியான கூட்டு மாநிலஅளவில் ஒரளவுக்கு கட்டுபடுத்தி நல்ல ஆட்சி நடத்தமுடிகிறது. ஆனால் மத்திய அரசு இந்த கூட்டை கட்டுபடுத்தமுடியாமல் நல்ல ஆட்சி அளித்தும் தோல்வியை தழுவுகிறது. இதற்க்கு உதாரணம் ஜனதாதள அரசும் பாரதியஜனதா அரசும். ஆனால் சோனியாவின் வருகைகுபின் அன்னிய தேசவிரோத சக்திகளால் இந்தகூட்டு நன்கு தீனிபோட்டு கேள்வியே கேட்ககூடாது என்று கட்டுபாடுஇல்லாமல் வளர்துகொண்டிருக்கிறது. நல்ல ஆட்சி நடத்துவதைவிட ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் தான் முழுபொழுதையும் காங்கிரஸ் செலவிடுகிறது. நடந்துமுடிந்த தேர்தலில் தோல்வியை தழுவவேண்டிய காங்கிரஸ் மின்அணு ஓட்டுபெட்டியில் தில்லுமுல்கள் செய்து வெரும் 24 சதவிகித வாக்குகளை பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்து என்பதுதான் உண்மை.

  18. பிரதாப்

    சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு குஜராத் கலவரங்கள் குறித்த தனது புலனாய்வினை முடித்து விட்டு இறுதி அறிக்கையை கொடுத்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வந்துள்ளது. நரேந்திர மோடி மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் , உண்மை எப்படியும் ஒரு நாள் வெளிவந்து தான் தீரும். பொய் பிரச்சாரம் நீண்டநாள் நீடிக்காது என்பதே ஆகும்.

  19. இந்நிலை தமிழ்நாட்டு அரசியலிலும் வரவேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *