அஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமை

இராமாயணம் ஓர் உன்னத ஞானமுத ஸாகரம். அதில் கதைத் தளம், கருத்துத் தளம், ஆன்மிகத் தளம் என்று மூன்று தளங்கள் உள. இவை இறுகி உறைந்த சிறைத் தளங்கள் அல்ல; கால நெடுஞ்சாலையில் முந்நீர் சுரபிகளாக வாழ்க்கையின் அழகையும் பயனையும் அர்த்தத்தையும் மேம்படுத்திக் கொண்டிருக்கும் ஆற்றல்மிக்க நீரோட்டங்கள். தோன்றிய நாள் முதல் இன்றுவரையிலும் தாகித்தும் ருசித்தும் அனுதினமும் அருந்தப்படும் அற்புத நூல் இராமாயணம். தனியாகவோ குழுக்களுடனோ சிரத்தையோடும் சிலிர்ப்போடும் இடையறாது பருகப்படும் அமுதநூல் இது. கலைகளிலும் கம்மியங்களிலும் இராமாயணம் பெற்ற எழிலும் விரிவும் பாரதப் பெருமிதங்களில் முக்கியமானது. இராமாயணத்தின் ஆழ-அகல-உயரங்கள் என்றும் வளர்பவை.

பாரதப் பண்பாட்டுக் கருவூலங்களின் மகோன்னதங்களில் ஒன்றான இராமாயணம், உலக அஞ்சல் பூங்காவில் இடம்பெறும் இனிமை உணரத் தக்கது.

 

1. திவ்ய ஞான பாரத தீபங்கள்

வான்மீகி அருளிய இராமாயணமும் வேதவியாசர் அருளிய மகாபாரதமும் இதிகாசங்கள் எனப்படும். இவற்றுள் இராமாயணம் ஆதிகாவியம் என்னும் புகழுடையது. சமஸ்கிருதத்தில் உருவானது.வான்மீகத்தைத் தமிழில் தந்தவர் கம்பர்; இந்தி மொழியில் தந்தவர் துளசிதாஸர்; இம்மூவரையும் மையங்கொண்டு மலர்ந்த பாரத அஞ்சல் பூக்கள் நான்கு.

வான்மீகி:

s1ஆதிகாவியம் என்னும் வான்மீகி இராமாயணம் வேதசாரமாகவே திகழ்கிறது. 14.10.1970-இல் வெளியிடப்பட்ட அஞ்சல் பூவில் வான்மீகி மகரிஷியின் உருவமும் இராமாயண ஆரண்யக் காட்சியும் அழகுற இடம் பெற்றுள்ளன. அமர்ந்தெழுதும் தோற்றத்தில், கையில் சுவடியும் தலையில் ஒளிவட்டமும் கொண்ட வான்மீகியின் சித்திரம் எழில்மிக்கது. ஆரண்யத்தில் இராமன் சீதையோடும் இலக்குவனோடும் நடந்திடும் காட்சி மேன்மை மிக்கது. இராமனின் முன்னால் சீதையும், பின்னால் இலக்குவனும் நடந்திடும் காட்சியிலும் பண்பினிமைச் சுட்டுண்டு. பட்டாபிஷேகத்தின் பட்டாடைக் கோலம் விடுத்து மரவுரி தரித்த துறவுக்கோலமும் அணிபுரவி ரதங்கள் ஆட்படைகள் மிக்க சேவைகளும் சூழ்ந்த தலைமை மையம் நீங்கிக் கானக விலங்குகளும் கடுமையான சோதனகளும் மிக்க வனவாசமும்- இந்நிலைக்கு வழிநடத்திய சிந்தனையோட்டமும் ததும்பும் இக்காட்சி அழியா அழகுடையது. அனைத்துலகப் பண்பாட்டுப் பரிணாமச் சாலையில் இதனை நிகர்த்த ஓர் உன்னத மானுட மாண்புச் சித்திரம் மிக அரிது; அவ்வண்ணம் பதிவுபெற்ற அஞ்சல்பூக்கள் இருப்பின் அவற்றோடு இதனை ஒப்பிட்டுக் காணல் மிகவும் அவசியம்.

கம்பர்

s2தமிழில் இராமகாதை தந்த கம்பரின் சித்திரம் 05.04.1965-இல் வெளியிடப்பட அஞ்சல்பூவில் இடம்பெற்றுள்ளது. தலையில் ஒளிவட்டத்துடன், கூப்பிய கரங்களுடன், நின்றகோலத்தில் காட்சிதருகிறார் கம்ப நாட்டாழ்வார். அவர் போர்த்திய மேலாடையும் பக்கவாட்டில் தெரியும் கொண்டையும் அழகுக்கு அழகு செய்கின்றன. காலம் 9-ஆம் நூற்றாண்டு என அஞ்சல் பூவின் அகத்திலே குறிப்புளது. விலை 0.15. கல்வியில் பெரியவர் கம்பர், கம்பநாடன் கவிதையிற் போல் கற்றோர்க் கிதயம் களியாதே, கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்- என்பன போலும் புகழ்மாலைகளால் சிறப்பிக்கப்பட்ட பெருந்தகை கைகூப்பிய அடக்கத்துடன் நிற்கும் காட்சி குறிப்பிடத்தக்கது. விநயத்தின் உச்சத்தில் ‘ஓர் ஞானவாசம் வீசிப் பிரகாசியா’ நிற்கும் நலத்தை நல்குகின்றது இவ்வழகிய அஞ்சல் பூ..

 

துளசிதாசர்

s3துளசிதாசர் பக்தர்; மகான்; மிகப் பெரிய கவி. மாயப் பிரபஞ்சம் கடப்பதற்கு மனைவியால் தூண்டப்பெற்ற பெருந்தகை. இவர் அருளிய இராமாயணம் ராம சரிதமானஸ் எனப்படும். 1584-இல் தொடங்கிய இந்த அற்புத நூலை இரண்டு ஆண்டு நான்கு மாதங்களில் நிறைவுசெய்தார் என்பர்.

1952 அக்டோபர் 1-ஆம் நாள் ஆறு கவிஞர்களின் சித்திரங்களை அஞ்சல் பூக்களில் தந்தது அஞ்சல் துறை. கபீர், துளசிதாஸ், மீரா, சூர்தாஸ், கலீப், ரவீந்திர நாத தாகூர் என்னும் அறுவர் வரிசையில் 1 அணா அஞ்சல் பூவில் இவர் இடம்பெறுகிறார். கார்மைன் (Carmine) எனப்படும் ஒருவகைச் செந்நிறத்தில் திகழ்கிறது அஞ்சல் பூ. பக்கவாட்டுத் தோற்றத்தில் அழகிய முகம், அருள் ஒழுகும் பார்வை, மார்புவரை மட்டுமே காட்சி. கண்களின் பிரகாசமும் தலையில் குடுமியும் கழுத்தில் துளசிமணி மாலையும் தனிச்சோபையுடன் ஒளிர்கின்றன.

s424.05.1975-இல், 400-ஆவது ஆண்டுச் சிறப்பு வெளியீடாக துளசிராமாயணமும் பாரத அஞ்சல் பூவில் இடம்பெற்றது. சுவடியின் ஒரு பக்கத்தின் சுலோகம் ஒன்றை அஞ்சல் பூவில் காணலாம். கருமை, மஞ்சள், செம்மை நிறங்களுடன் திகழும் இவ்வஞ்சல் பூவின் மதிப்பு 25 பை.

 

 

2. நேபாள நிவேதனம்

நேபாளம் பாரதத்தின் அண்மைநாடு; அஞ்சல் பூக்களில் இந்துசமயத்தின் எழிலையும் ஏற்றத்தையும் ஏந்தி நிற்பதை பெருமையாகக் கருதும் நாடு. இந்நாடு தந்த இனிய  இராமாயண நிவேதனங்கள் மூன்று.

 

இராமநவமி

s5இராமன் அவதரித்த பங்குனிமாத நவமியைச் சநாதன தர்மம் ஸ்ரீராமநவமி எனக் கொண்டாடுகிறது. இப்புண்ணிய தினத்தைப் போற்றி 1967-இல் நேபாளம் வெளியிட்ட அஞ்சல் பூ அழகியது. இராமனும் சீதையும் பக்கவாட்டுத் தோற்றத்தில் மார்பளவு மட்டுமே காட்சிதரக் காண்கிறோம். ஸ்ரீராமன் கைப்பிடித்த வில்லின் மேற்பாதியும் தெரிகிறது. இருவர் முகத்திலும் சாந்தம்; கண்களில் கருணை; தலைக்கோலங்களில் தனி சோபை; நெஞ்சைவிட்டகலா எழில் பூ இவ்வஞ்சல் பூ. இதன் பெறுமதி நேபாளப் பை.15.

 

சீதா ஜெயந்தி

s6சிறையிலிருந்தவள் ஏற்றம்பேசும் நூல் என வைணவம் இராமாயணத்தைப் போற்றும். இராவணனை இராவணனாகவும் இராமனை இராமனாகவும் ஆக்கிய அற்புத உரைகல் சீதாதேவி. அனைத்துக் கற்பு(இலட்சிய) வாழ்க்கையும் தமது பயணத்தில் ஓர் அசோக வனத்தை நேரிடும் என உணர்த்தும் உன்னத வாழ்க்கை அத்தேவியின் வாழ்க்கை. அத்தேவியை தன் ஆழ்மன மண்டலத்தில் பிறப்பிக்க உத்வேகம் கொள்ளும் திருநாள்தான் சீதா ஜெயந்தி. நேபாளம் சீதா ஜெயந்தியைப் போற்றும் வண்ணம் 1969-இல் ஓர் அஞ்சல் பூவை வழங்கியது. விலை நேபாளப் பை-15. பூவின் இடதுபுறம் சீதாதேவி அரசியின் கோலத்தில் அபயக் கரத்துடன் நிற்கின்றாள். பின்னணியில் ஒரு மரம்; சிறையிலிருந்த சீலம் நினைவூட்டுகிறது. வலதுபுறம் ஜானகி கோயில். அஞ்சல் பூவின் கம்பீரப் பொலிவு இதயத்தில் இனிமை நிரப்புகிறது.

 

ராஜரிஷி ஜனகர்

s7மாமன்னர் ஜனகர் ஆத்மஞானம் பெற்றவர். ராஜரிஷி என ஆன்மிக உலகில் மதிக்கப்படுபவர். சீதையைக் கண்டெடுத்து வளர்க்கும் பேறு அவருக்குக் கிட்டியது. அவர் நினைவாகவும் அஞ்சல் பூ வெளியிட்டுப் பெருமை பெற்றுக்கொண்டது நேபாளம். ராஜரிஷி ஜனகர் என்றே அடியில் பொறிக்கப்பட்டுள்ளது. ராஜ சிம்ஹாசனத்தில் வீற்றிருக்கும் ராஜரிஷியின் தோற்றம் உள்ளம் பிணிக்கும் தோற்றம்; எளிமையின் மகோன்னதம் (Sublimity), ராஜசிம்ஹாசனத்திலும் ஒளிர்கிறது. அஞ்சல் பூவின் விலை நேபாள ரூபாய் 2.50. ஆண்டு 1974.


 

3. இந்தோனீஷிய தூப நறுமணம்

இந்தோனீஷியாவில் நடந்த பன்னாட்டு இராமாயண விழா (Internationla Ramayana Festival)-விற்குச் சிறப்புசெய்யும் வகையில் 1971-இல் இந்தோனீஷியா இரு அஞ்சல் பூக்களை வழங்கியது. ஆண்டுதோறும் இராமாயண அறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் நன்முயற்சி இது. இவ்வகை விழாக்கள் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்துள்ளன; நிகழ்கின்றன. பாரதத்தில் மும்முறை– தாய்லாந்தில் இருமுறை– கானடா, நேபாளம், மலேஷியா, சூரிநாம், பெல்ஜியம், இந்தோனீஷியா, நெதர்லாந்து, சீனா, டிரினிடாட் & டுபேகா என்னும் நாடுகளில் ஒவ்வொருமுறை– நிகழ்ந்ததாக அறிகிறோம். இந்நிகழ்ச்சியை அஞ்சல் பூக்கள் தந்து சிறப்பிக்க வேண்டும் என்னும் சிந்தனை இந்தோனீஷியாவிற்குத் தோன்றியது போற்றத் தக்கது.

stamps1

முதல் அஞ்சல் பூ இந்தோனீஷிய ரூபாய் (Rupiah) 30 மதிப்புடையது. பச்சை நிறமும் மஞ்சள் நிறமும் விரவியது. இதில் தாவியோடும் மாரீசமானை நோக்கிய வண்ணம் இராமனும் சீதையும் நிற்கிறார்கள். இராமர் கைகள் வில்வளைத்து அம்பேற்றுகின்றது.

அடுத்த அஞ்சல் பூ இந்தோனீஷிய ரூபாய் 100 மதிப்புடையது. இராமன் வில்வளைத்து அம்பெய்துவிட்டான்; மாயமான் வடிவம் அரக்க வடிவம் பெற்று அலறித் துடிக்கின்றது. முதல் அஞ்சல் பூவின் இயற்கையரங்கின் இனிய வண்ணம் இரண்டாம் அஞ்சல் பூவில் நிறமாற்றம் கொள்கின்றது; கடுமை பெறுகின்றது. சிவப்பும் கருப்பும் சிந்துகின்றன. (இன்னொரு பொருளில் சொல்லப்பட்ட ‘சிவப்பும் கறுப்பும் வெகுளிப் பொருள’ எனும் தொல்காப்பிய நூற்பா இங்கும் பொருந்துகின்றது. இருபூக்களுமே கலைநுட்பம் உடையவை.

இந்தோனீஷிய இராமாயண உறவு தனி ஆய்வுக்குரிய விரிவான களம்; ஆழமான சுரங்கம்.

1962-இலேயே ‘இராமாயண நடனம்’ என்னும் கருத்தாட்சி கொண்ட் ஆறு அஞ்சல் பூக்களைத் தந்துள்ளது இந்தோனீஷியா. ஆறு அஞ்சல் பூக்களுமே தேச அடையாளமாக எரிமலையையும் தெய்வீகக் கலை என்னும் அடையாளமாகக் கோயில் கோபுரத்தையும் பின்னணியில் சித்தரிக்கின்றன. இராமாயணக் கதாபாத்திரங்களின் வேடம் புனைந்து நடனமாடும் நடனர்களின் நடனத் தோற்றங்கள் அஞ்சல் பூக்களில் அழகுற இடம் பெற்றுள்ளன.

s101. 30 ஸென் (Sen) மதிப்புடைய இளந்தவிட்டு நிற அஞ்சல் பூ ஜடாயு வேடம் புனைந்த நடனரின் சித்திரம் உடையது. Djatayu எனக் குறிக்கப்பட்டுள்ளது; ஈர்க்கும் இனிய கழுகு முகமூடியும் அகலவிரித்துத் தூக்கிய இரு கரங்களில் தொங்கும் வஸ்திரச் சிறகும் ஒரு கால் உன்னிய பறக்கும் தோற்றமும் அழகாகவே அமைந்துள்ளன.

 

 

 

 

s112. 40 ஸென் அஞ்சல் பூ இளம் உதா நிறம் உடையது. Hanoman என்பது குறிப்பு. அனுமன் என்பது தெளிவு. சற்று மடக்கி, அகல விரித்த கால்களின் விரைவும் போர்முகத்து பாவனையில் மடக்கிய கைகளின் முறுக்கும் கூர்த்த பார்வையுடன் சாய்த்த முகமும் உயிர்த்துடிப்புடன் உள. காலில் கட்டிய சலங்கையும் இடையில் கட்டிய கச்சையும் கையில் பூட்டிய கங்கணமும் கழுத்தில் அணிந்த மணிமாலையும் முகத்தில் ஏறிய முகமூடியும் விளங்க நடனர் சித்தரிக்கும் அனுமன்- காட்சி கவனத்தை நன்றாகவே ஈர்க்கிறது. உள்ளத்தில் நன்றாகவே பதிகிறது.

 

 

s1213. 1 ரூ. அஞ்சல் பூ நீலநிறப் பின்னணியில் purple நிறம் கொண்டது. தசமுக (Dasamuka) என்பது குறிப்பு. இராவணன் என்பது தெளிவு. நடனருக்குத் தசமுகங்கள் இல்லை; ஒரு முகம் தான். வலக்கையில் தூக்கிப் பிடித்த மேலாடையும் இடுப்பின்முன் வளைத்துக்கொண்டு வந்த இடக்கை மடக்கும் நிமிர்ந்த சிரசில் உயர்ந்த கிரீடமும் முகத்தில் விளங்கும் முறுக்கு மீசையும் அகம்பாவச் சித்திரத்தின் நடனக் கோலமாக விளங்கக் காண்கிறோம்.

 

 

 

s134. 1.50 ரூ. அஞ்சல் பூ பிங்க் (pink) நிறப் பின்னணியில் பச்சை வண்ணம் உடையது. Kidang Kenjana என்பது குறிப்பு. அறிந்தவர் அறிவிக்கலாம். அழகிய பெண்மணி இரு கரங்களாலும் தன் இடுப்பில் அணிந்த மேல்சால்வையை நளினமாகத் தூக்கி நிற்கிறார்.  தலைக் கிரீடத்தில் கொம்பு போலும் இருநுனி அலங்காரம்.

 

 

 

 

s815. ரூ.13 மதிப்புடைய அஞ்சல் பூ பசுமை நிறப் பின்னணியில் நீலநிறம் பெற்றுத் திகழ்கிறது. Devi Sinta என்பது குறிப்பு. சீதா தேவி என்பது தெளிவு. நடனரின் அடக்கமும் சாந்தியும் ததும்பிடும் எழில் தோற்றம். பணிவும் பக்தியும் பார்ப்போரிடம் சுரக்கச் செய்யும் உன்னதப் பொலிவு. ‘கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்’ எனத் ‘திரு‘-வுக்குத் தந்திடும் விளக்கமே அஞ்சல் பூவில் இறங்கிவந்து நிற்பதுபோலும் அற்புத வனப்பு.

 

 

 

s916. ரூ.5 மதிப்புடைய அஞ்சல் பூ மஞ்சட் சிவப்புப் பின்னணியில் இளந்தவிட்டு நிறமுடையது. குறிப்பு Rama. விளக்கம் தேவையில்லை.நடனரின் சித்தரிப்பு ‘ஸ்ரீராமன்’ எனும் புருஷோத்தமப் பாத்திரம். அம்பெய்திடும் திருக்கோலம். முதுகில் அம்பறாத்துணி. முகத்தில் அன்றலர்ந்த செந்தாமரைச் சீலம். சஞ்சலமற்ற நிர்மல சாந்தி. திருமுடி அழகும் திருவடி அழகும் தெரிதர அமைந்த நடன நுட்பம்.

 

 

 

[அடுத்த பகுதியில் நிறைவுறும்.]

6 Replies to “அஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமை”

  1. நல்ல தொகுப்பு. நமது அரசியல் சாசன துவக்க கால பதிப்புகளில் ராமர் படம் வெளியிடப்பட்டிருந்ததை நீதிமன்ற விவாதங்களில் வைத்தார்கள். (பாரிடாபாத் நீதிமன்றம் என நினைக்கிறேன்) எவரும் அதை மின்படியாக வலையேற்றம் செய்ய இயலுமா? தற்போதைய அச்சில் அப்படம் வெளியிடப்படுவதில்லை என்றும் அறிகிறேன். (போலி மத சார்பின்மை)

  2. Pingback: Indli.com
  3. இதிலிருந்து ஒன்று முக்கியமாகத் தெரிகிறது
    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளுக்குப் பிறகு ஹிந்து விரோதப் போக்கு வலுப் பெற்றது.
    ஏனென்றால் அதற்குப் பிறகு இராமாயண வரிசையில் ஒரு தபால் தலை கூட இல்லையே !

  4. இதே போல் எங்கள் வீட்டில் உள்ள பழைய வீட்டு வரி கட்டண ரசீது, நில பத்திரம் ஆகியவற்றில் காவிரி நடுவில் அரங்க விமானமும் அரங்கன் துயில் கொள்ளும் காட்சியும் சேர்ந்து முத்திரையாக நீல நிறத்தில் வட்ட வடிவத்தில் அச்சு வைத்து குடுப்பார்கள். அதே போல தான் திருவிதாங்கூர் சமஸ்தான ரிக்கார்டுகளும். இந்த புண்ணிய பூமி இன்று சுல்தான் வழி வந்த கொடூரர்களால் சூறைஆட படுகிறது. காங்கிரசில் இருக்கும் ஹிந்துக்களின் மூடத்தனமான அரசியல் வெறி இதற்கு பெரிய பக்க பலம்.

  5. நாக்கால் சில பலரால் நக்கி ஒட்டப்படுவதும் பலமான முத்திரை பதிக்கும் இரும்பினால் ஓங்கி குத்தப்படுவதும், ஆகிய சித்திரவகைகளுக்கு ஆளாகும் இவ்வஞ்சல் தலைகளில், வணங்கப்படும் தெய்வ உருவங்களை அமைப்பது, விசித்திரமான சித்திர வெளிப்பாடுதான். எனினும் மேற்கூறிய காரணங்களால், வேதனைப்படத்தான் முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *