பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1

முன்னுரை

மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே நாளில் ஒரு கடிதம் வரும். கடிதத்தில் கீழ்வருமாறு எழுதப்பட்டிருக்கும்-

“எனக்கு, போன வாரம் ஒரு கனவு வந்தது. கனவில் ஒரு பாம்பு வந்தது. மேலும் பாம்பு என்னுடன் பேச ஆரம்பித்தது. தன் புற்றில் ஒரு மண்டலம் பால் ஊற்றும்படியும், அந்த அதிசய நிகழ்வை 10 பேருக்கு கடிதம் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்தால் நான் ஒரு கோடீஸ்வரன் ஆகி விடுவேன் என்றும் பாம்பு கூறியது.

என்றும் எழுதப்பட்டிருக்கும். எழுதியவர் யார் என்ற விவரமும் இருக்காது.

இந்த கடிதம் கிடைத்ததும் அதை நீங்கள் மேலும் 10 பேருக்கு அனுப்பினால் நீங்களும் கோடீஸ்வரராக ஆகலாம். ஆனால் அப்படி அனுப்பவில்லையென்றால் நீங்கள் பாம்பு கடித்து இறப்பீர்கள்.

இதை அக்காலத்தில் “வெடியுப்பு பீரங்கிசாமி” கடிதங்கள் என்று அழைப்பார்கள்.

இந்தக் கடிதத்தின் வெற்றிக்குக் காரணம் மிகவும் எளிமையானது. அறிவுக்கு பொருந்தாத ஒரு விஷயம் அக்கடிதத்தின் அடித்தளமாக இருக்கும். அதே நேரம் மனிதர்களின், ‘சாசுவதமதமான மரண பயம்’ (Primal Fear)-இன் படி புத்தியை நம்பாமல், தன் மனம் கூறும் வழியில் அக்கடிதத்தை நகல் எடுத்து பலர் அனுப்பி விடுவார்கள். நல்லது நடக்கிறதோ இல்லையோ, கெட்டது நடக்காமல் இருக்க வேண்டும் என்ற ‘Survival Instinct’-ம் இதற்குக் காரணம்.

ஆனால் கல்வி அறிவும் தகவல் தொழில்நுட்பமும் அபரிமிதமாக வளர்ந்திருக்கும் தற்காலத்திலும், “வெடியுப்பு பீரங்கிசாமி” வேறு முகங்களில் இன்றும் உலா வருகிறார். அம்முகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதே இக்கட்டுரையின் நோக்கம்.

 

அச்சமுண்டு அச்சமுண்டு

இந்தக் கட்டுரையின் களத்திற்குத் செல்லும் முன் மரண பயத்தைப் பற்றிக் கூறியாக வேண்டும். சமீபத்தில் History Channel-இல் Primal Fear என்னும் ஆவணப்படத்தை பார்த்தேன். பயம் என்னும் குணாதிசயம் (Primal Fear) மனிதனுக்கு நன்மையே செய்து வந்துள்ளது என்பது இப்படத்தின் மையக்கருத்து. நீர், நெருப்பு போன்ற இயற்கைச் சக்திகள், பெரிய மிருகங்கள், விஷ ஜந்துக்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதில் பயம் முக்கிய பங்காற்றுகிறது. இந்தப் பயத்தினாலேயே மனிதன் பல ஆபத்துகளை தன் வாழ்க்கையில் சந்திக்கையில் வெற்றி பெறுகிறான்.

மேற்கூறிய பயம் ஏற்படுகையில் உயிரை காத்துக்கொள்ள மனித மூளையின் Amygdala என்னும் பகுதி உடலை தயார் செய்கிறது. குறிப்பாக ஆபத்து நெருங்கியவுடன் உடல் உறையும்; மயிர்க் கூச்செறியும்; அதிகப்படியான இரத்தம் கைகளுக்கும் கால்களுக்கும் செல்லும்; தற்காத்துக் கொள்ளவோ அல்லது தப்பி ஓடவோ இது உதவுகிறது.

 

அர்ஜுனனின் பயம்

bhagvat-gitaநம் முன்னோர்கள் பயத்தின் வேறொரு பரிமாணத்தை அலசியுள்ளார்கள். கீதையில் தன் உற்றார், உறவினர்களைக் கொல்ல வேண்டும் என்பதை அறிந்த அர்ஜுனன் போர்க்களத்திலிருந்து ஓட முற்படுகிறான்.

தான் உலகின் மிகச்சிறந்த வில்லாளி என்பதாலும் பகவான் தன் அருகில் இருப்பதாலும் கௌரவர்கள் பூண்டோடு அழிந்து போவார்கள் என்பதையும் கற்பனையில் காண்கிறான். 1-ஆம் அத்தியாயம் 27-ஆம் ஸ்லோகத்தில் தன் நிலையை கீழ்வருமாறு எடுத்துரைக்கிறான்–

“ஓ, கிருஷ்ணா, போர் செய்ய இங்கு திரண்டு நிற்கும் என் சுற்றத்தார்களைக் கண்டு என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது. காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.”

விஞ்ஞானிகள் கூறும் Survival Instinct-க்காக உருவாகும் பயம் இந்தக் கட்டுரையின் விஷயம் அல்ல. கற்பனை பயத்தைப் பற்றியும் (Imaginary Fear) அது அறிவுக்கு பொருந்தாத போது ஏற்படும் விளைவுகளையும் அலசுவது இக்கட்டுரையின் நோக்கம்.

அறிவுக்கு பொருந்தும் பயம் ஏற்படுகையில் மனித உடல் ஆபத்திலிருந்து தப்பிக்க உத்வேகம் பெறுகிறது. ஆனால் அதே பயம் உயிர் ஆபத்திற்காக அல்லாது மற்ற காரணங்களுக்காக ஏற்படும்போது உடல் செயல்பட மறுக்கிறது. தவறான முடிவுகளையும் எடுக்கிறது.

அர்ஜுனனுக்கு பகவான் அருகில் இருந்தார். தர்மத்தை நிலைநாட்ட கடமையைச் செய் என்றார். பயத்தைப் போக்கினார்.

ஆனால் நவீன சமூகத்தில் அறிவுக்குப் பொருந்தாத, அறிவியலின்படி ஒப்புக்கொள்ள முடியாத பயங்களை சில மனிதக் குழுக்கள் வைத்து கொண்டுள்ளன. மேலும் அந்தப் பயங்களைக் கருணையுடன்(?!!) மற்றவர்களுக்கும் பரப்புகின்றன. அந்தப் பயங்களை முட்டாள்தனம் என்று தெளிவாகவும் தீர்மானமாகவும் கூற விவரமறிந்தவர்களில் சிலர் முன்வருவதில்லை.

அளவுக்கதிகமான, அறிவுக்கு பொருந்தாத பயங்களை, யதார்த்தத்திற்கு ஒத்து வராத இலட்சியங்களை சாதாரண பொதுமக்களுக்கு அருள்வதன் மூலம் சமூகத்தின் ஒரு சாராரின் உளவியலுடன் விளையாடிக்கொண்டிருக்கிறோம்.

 

செத்துச் செத்து விளையாடலாமா?

endofdays1999 டிசம்பர் 31-ஆம் தேதி. ஒருபுறம் Y2K பிரச்சினையால் பெரிய பாதிப்பு உலகில் ஏற்படாது என்று அரசாங்கங்கள் அறிவித்துக் கொண்டிருந்தன. மறுபுறம் அந்த நாள்களில் “End of Days” என்ற திரைப்படம் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது. கிறிஸ்தவர்களின் பைபிளில் கூறியுள்ளதைப் போல சாத்தான் உருவாகி உலகத்தை அழிக்கப் போகிறது என்று சில பழமைவாத குழுக்கள் கிலியை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்தன. 2000-ஆம் ஆண்டும் வந்தது. போனது. எப்பொழுதும் போலவே உலகம் இருந்தது. பேசிய சிலர்தான் இறந்து போயிருப்பார்கள்.

 

 

 

cern-particle-accelerator2008 செப்டம்பரில் சுவிட்சர்லாந்தில் உள்ள CERN கழகத்தில் அணுவின் உள்ளே இருக்கும் ப்ரோட்டான்களில் இரண்டை மோத விட்டு விளைவுகளை அலச முடிவெடுத்தார்கள். இந்த அறிவியலைப் பற்றி ஒருதுளியும் அறியாத சிலர் இந்த ஆராய்ச்சியால் ஒரு கருந்துளை (Black Hole) ஏற்பட்டு, அது மொத்த பூமியையும் ஏப்பம் விட்டுவிடும் என்றார்கள். அன்றிலிருந்து பலமுறை இந்த மோதல் நடந்திருக்கிறது. பூமிக்கு ஒன்றும் ஆகவில்லை. இனிமேலும் ஒன்றும் ஆகாது.

 

2012-prophecy2012, டிசம்பர் 21-இல் உலகம் அழிந்து விடும் என்று ஒரு சிலர் புருடா விட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாயர்கள் (Mayans) வருடக்கணக்கை எழுதும்போது அது 2012 டிசம்பர் 21-இல் முடிகிறது. இன்றும் அந்தக் கலாசாரம் அதே நிலையில் இருந்திருந்தால் அடுத்த ஆண்டின் கணக்கை எழுதியிருப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு சிறிய விஷயத்தை “உலகமே அழியப்போகிறது” என்று புருடா விட்டு சிலரை நம்ப வைத்தும் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் பலே கில்லாடிகள். தங்களுடைய குப்பை நம்பிக்கைகளுக்கு அறிவியலை இழுப்பதையும் வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்கள்.

Galactic Alignment: 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி, நம் பால்வெளியின் நட்ட நடுவில் சூரியனும் பூமியும் ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாம்.

Geomagnetic Reversal triggered by Solar Flare: அதிகப்படியான சூரியக் கதிர்வீச்சால் வட மற்றும் தென் துருவங்கள் மாறி விடுமாம்.

Devastating Comet impact – பல வால் நட்சத்திரங்கள் பூமியுடன் மோதுமாம்.

Planet Nibiru: நிபிரு என்னும் கோள் பூமியை மோதி அழிக்குமாம்.

Earthquakes and Super Volcanoes பெரிய அளவில் பூகம்பங்களும் எரிமலைகளும் ஏற்படுமாம்.

இவர்களை மறுதலிப்பது நடக்காத காரியமாக மாறியுள்ளது. அறிவியலின்படி மேற்கூறியவற்றைக் குப்பைகள் என்று நிரூபித்தால் மேலும் பல விளக்கங்களை அளிக்கிறார்கள். இது முடிவில்லாத அக்கப்போராக மாறியுள்ளது.

மேற்கூறிய உதாரணங்களாவது ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு நடப்பவை. அந்த நிகழ்வு நடந்து முடிந்தபின் அந்தப் பயத்திற்கு அவசியம் இருப்பதில்லை. ஆனால் தினம் தினம் நம் வாழ்வில் அனுபவிக்கும் விஷயங்களில் அறிவுக்குப் பொருந்தாத, யதார்த்தத்திற்கு உதவாத பயங்கள் ஏற்பட்டால், அதைச் சமூகத்தில் ஒரு சாரார் ஏற்று கொண்டும் விட்டால், ஏற்படும் களேபரங்களை அடுத்து காணலாம்.

 

21 புராணங்கள்

வியாஸ மஹரிஷி பதினெண் புராணங்களை அருளினார். இன்று நவீனர்கள் புதிய 3 புராணங்களை மனித சமூகத்திற்கு அளித்துள்ளனர். இவை வித்தியாசமானவை. பதினெண் புராணங்கள் ஏற்கெனவே எழுதப்பட்டு படிக்கப்பட்டு வருகிறது. வேண்டும்போது யாரும் தனக்குப் பிடித்ததை எழுதி புராணங்களில் சேர்ப்பதில்லை. ஆனால் நவீன புராணங்களையோ தன் மனத்திற்கு தோன்றியபடி தினமும் எழுதிச் சேர்க்கிறார்கள். பொய்களை எழுதுவதால் எந்த வரையரையும் இதற்கு இல்லை.

(1) புவி சூடாதல் (Global Warming)
(2) அபத்தமான நோய்த் தகவல்கள்
(3) வேதி பொருட்களால் பக்க விளைவுகள் (Side Effects due to Chemicals)

இன்றைய பொதுஜன ஊடகங்களில் மேற்குறிப்பிட்ட 3 புராணங்கள் இல்லாது பிரசுரமாவதே இல்லை.

அறிவியலின்படி ஒரு விஷயம் இன்னும் முழுதாக அறியப்படவில்லை அல்லது ஊர்ஜிதப்படுத்தபடவில்லையென்றால் அதை “ஊகம்” என்ற வரையரைக்குள் வைப்பார்கள். ஆனால் இன்றைய பொதுஜன ஊடகங்கள் ஹேஷ்யங்களை முடிவான முடிவாக எழுதித் தள்ளி விடுகிறார்கள்.

நவீன அறிவியல், குறிப்பாக இந்த கட்டுரையில் அலசப்படும் விஷயங்கள் மிகவும் கடினமானவை. நியூட்டனின் விதிகள், மோட்டார்களின் இயக்கம் போன்று முடிவுகள் தீர்மானிக்கப்பட்டவை அல்ல. புதிய காரணிகள் கண்டுபிடிக்கப்படும் பொழுது அவற்றின் விளக்கங்கள் சரிசெய்யப்படுகின்றன. உதாரணமாக புவி சூடாதலை எடுத்துக்கொண்டால் அனுதினமும் புதிய விவரங்கள் அறியப்படுகின்றன. அதன்படி அதன் புரிதலும் சற்று முதிர்வடைகிறது.

ஆனால் அதே நேரத்தில் அந்த அறிவியலின் அஸ்திவாரத்தை பொய்கள் மற்றும் ஹேஷ்யங்களைக் கொண்டு கேள்விக்கு உட்படுத்த ஒரு கூட்டமே இயங்குகிறது. பரபரப்புச் செய்திக்காக இதை ஊடகங்களும் வெளியிட்டு விடுகின்றன. இவற்றிற்கான உதாரணங்களைப் பிறகு பார்க்கலாம்.

 

பகுதி-I – புவி சூடாதல் (Global Warming)

globalwarming

இன்று உலகையே கலக்கி கொண்டிருக்கும் ஒரே பரபரப்பு அறிவியல் இதுதான். பல்லாயிரம் வருடங்களின் தரவுகளும் கடல் அலையின் உயரமும் செடி கொடிகளின் வளர்ச்சியும் பனிமுகடுகளின் உருகும் வேகமும் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பெருங்கடல்களின் பனி உருகும் வேகமும் என்று இதன் காரணிகள் இயற்கை எங்கும் விரிந்து கிடக்கின்றன.

இது போதாதென்று ஆகாயத்திலிருந்து ஓசோன் அடுக்கு, சூரியனிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சு என்று பூமிக்கு வெளியேயும் இதற்கான காரணிகள் உள்ளன.

பொதுமக்களால் இந்த நீட்சியின் கருத்தை ‘டீலா நோ டீலா’ என்ற ரீதியில் விளங்கிக் கொள்ள முடிவதில்லை. இதனாலேயே இவ்வளவு தரவுகளையும் தனக்குத் தோன்றும் ஏதோ ஒரு புள்ளியில் சேர்த்துக்கொண்டால் எப்படிப்பட்ட அறிவியலையும் கேள்விக்கு உட்படுத்த முடிகிறது.

அறிவியல்: இன்றுள்ள பெரும்பாலான விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ள பட்ட முடிவுகளின்படி, கடந்த 200 வருடங்களில் தொழில்முறைசார் சமுதாயங்கள் தோன்றியவுடன் மனிதர்கள் வெளியேற்றும் கழிவுகள்- குறிப்பாக கார்பனின் அளவு- இயற்கையின் சமநிலையைப் பாதித்துள்ளது. காடுகளை அழிப்பது, வரைமுறையற்ற புகை வெளியேற்றம் போன்றவற்றால் உலகின் பல பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படப்போவது திண்ணம்.

ஊகங்கள்: இந்தப் புவி சூடாதலால் புவியில் உள்ள உயிர்களுக்கு பாதிப்பு என்றாலும் எப்படிப்பட்ட பாதிப்பு என்பதில் விஞ்ஞானிகளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அதாவது அதிக சூடாதலால் உலகின் பல பகுதிகளில் வறட்சி ஏற்படுமா அல்லது அதற்கு எதிரிடையாக உலகின் பல பகுதிகளில் குளிர் ஏற்படுமா என்பதில் கருத்தொற்றுமை இல்லை. அழிவை நோக்கிப் புவியும் உயிர்களும் செல்கின்றன என்றாலும் அந்த அழிவு எப்படிப்பட்டது, மற்றும் எவ்வளவு காலத்தில், என்பதில் முரண்பட்ட கருத்துகள் இருக்கவே செய்கின்றன.

 

புவி சூடாதலை ஆதரிப்போர் ஆட்டுவிக்கும் கூத்துகள்

புவி சூடாதல் ஓர் அறிவியல் முடிவு என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டாலும் அதில் ஒரு பகுதியினர் இந்த அறிவியலின் சில தரவுகளை நீட்டி முழக்கி, மிகைப்படுத்தி “பூமி நாளையே அழிய போகிறது” என்னும் தொனியில் முழங்குகின்றனர். சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

(1) தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒரு வசனம் வரும். “நாகப்பட்டினத்திலே…” என்று ஒருவர் ஆரம்பிப்பார். அதற்கு நாகேஷ் “புயல் வரப்போறதா! அதான் வருஷா வருஷம் வருதே, கழுத அதுக்கென்ன இப்போ?” என்று கூறுவார்.

ஒவ்வொரு வருடமும் காலநிலை மாறும்போதெல்லாம் தோன்றும் மிக மிகச் சாதாரணமான இயற்கை மாற்றங்களை ‘புவி சூடாதலுடன்’ தொடர்புபடுத்திப் பேச சிலர் முனைந்துள்ளனர். அமேரிக்காவில் சராசரியாக வருடத்திற்கு 100 ஹரிக்கேன்கள் ஏற்படுவதிலிருந்து 107 ஹரிக்கேன்கள் ஏற்பட்டாலும் ஒரிஸ்ஸாவில் புயல் சேதம் அதிகமானாலும் ‘புவி சூடாதலாலேயே’ இவை நிகழ்கின்றன என்று எழுதி விடுகிறார்கள். இன்றிருக்கும் அறிவியலின்படி இதை சரி என்றோ தவறு என்றோ கூற முடியாது என்பது அவர்களுக்கு வசதியாகி விடுகிறது.

(2) ஐரோப்பாவின் பல நாடுகளில் 2009-இல் உறைய வைக்கும் பனி ஏற்பட்டது அதே ஐரோப்பாவின் பல நாடுகளில் 2010-இல் அனல் காற்று தாங்கமுடியாத அளவில் வீசியது. இதிலும் அதே விஷயம்தான். அறிவியல் இன்னும் இது போன்ற காலநிலை மாற்றங்களில் ஏற்படும் அதிகப்படுதலை உறுதியாக புவி சூடாதலுடன் தொடர்புப்படுத்த முடியவில்லை. ஆனால் சிலர் இதை முடிவான முடிவாக எழுதி விடுகிறார்கள்.

global-warming-cru-email-scandal

(3) சிலர் ஒருபடி மேலே சென்று தவறான தகவல்களை தங்களுக்கு விரும்பிய வழியில் ஆராய்ச்சி முடிவாக அறிவித்து விடுகிறார்கள். பிரிட்டனில் CRU (Climate Research University)-இன் மின்னஞ்சல்கள் இந்தப் போக்கிரித்தனத்தை வெளிப்படுத்தின.

(4) ஐ.நாவின் InterGovernmental Panel on Climate Change (IPCC) போன வருடம் இமயமலையின் பனிமுகடுகள் (Glaciers) 2035-இல் முற்றாக உருகிவிடும் என்று ஆரூடம் சொன்னது. சர்ச்சை எழுந்தவுடன் 2350-ஐ 2035 என்று பிழையாக அச்சடிக்கப்பட்டு விட்டது என்று சப்பைக்கட்டு கட்டியது. ஆனால் அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த திரு.லால் வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காகவே அப்படி அச்சடிக்கப்பட்டது என்று பட்டவர்த்தனமாகக் கூறிவிட்டார்.

(5) கார்பனின் அளவை(புகையை)க் குறைக்க முற்பட்டால் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என்பதை சாமானியனும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சிலர் இதனால் இலாபமே பெருகும் என்று குழந்தைத்தனமாகக் கூறுகின்றனர். அமேரிக்க முன்னாள் துணை அதிபர் திரு.Al Gore, “An Inconvenient Truth” என்ற ஆவணப்படத்தை எடுத்தார். அதற்கு நோபல் பரிசையும் பெற்றார். அந்த ஆவணப்படத்திலும் கார்பனின் அளவைக் குறைப்பது இலாபத்தையே தரும் என்றார். இன்றைய அதிகப்படியான மின்சாரத் தேவைக்கு கரி அல்லது எண்ணெய்க்குப் பதிலாக வேறு இயற்கை முறையில் மின்சாரத்தைத் தயாரிக்க எக்கச்சக்கமான முதலீடுகள் தேவைப்படும். இந்த முதலீட்டினால் மின்சாரத்தின் விலை அதிகமாகும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இயற்கை முறையில் மின்சாரம் தயாரிப்பதை ஊக்கப்படுத்துவது சரி என்றாலும், அதற்கு அதிகப் பணம் செலவாகும் என்ற உண்மையை மறைக்க சிலர் முயல்கின்றனர். உதாரணமாக தமிழ்நாடு அரசு காற்றாலைகளின் மூலம் தயாரித்த மின்சாரத்தை ஒரு யூனிட்டிற்கு 11 ரூபாய் என்னும் விலையில்தான் தனியார் கம்பெனிகளிடமிருந்து வாங்குகிறது. ஆனால் கரியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதைவிடக் குறைவான பணமே செலவாகிறது.

மேற்கூறிய தகவல்களால் “புவி சூடாதல்” என்னும் அறிவியலை ஆதரிப்போரில் சிலர் தகவல்களை அதிகப்படுத்தியும், பணம் பதவி போன்றவற்றிற்காக தவறான தகவல்களை சமூகத்திற்கு அளிக்கிறார்கள் என்பதும் தெளிவு.

ஆனால் அதே நேரத்தில் அந்த அறிவியலையே கேள்விக்கு உட்படுத்துவது சிலரின் வாடிக்கையாக மாறியுள்ளது.

 

புவி சூடாதலால் பாதிப்பில்லை என்போர் ஆட்டுவிக்கும் கூத்துகள்

global-warming-polar-bear

மேலே பெரும்பாலான விஞ்ஞானிகள் என்று குறிப்பிட்டேன். ஏனெனில் சில விஞ்ஞானிகள் இவர்கள் கூறும் கூற்றுகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். நம்புவது அவரவர் உரிமை. ஆனால் அறிவியல் இவர்களுக்காக வளையாது. நான் ஓர் அறிவியலாளர் இல்லை என்பதால், இந்தக் குழுவினர் விடுக்கும் ஜம்பத்திற்கு பதிலடியாக, சுருக்கமாக New Scientist ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதன் இணைப்புக்கு இங்கே சுட்டவும்.

நான் ஏற்கெனவே கூறியபடி இந்தக் குழுக்களுக்கு பதில் கூறி மாளாது. பிரிட்டனில் பிரசித்த பெற்ற ஒரு பத்திரிகை 100 கேள்விகளைக் கேட்டு புவி சூடாதல் உண்மையில் அறிவியலே இல்லை என்றது. இதற்கு பதில் அளித்ததன் மூலம் அவர்களின் வாயை அடைக்க முடியாது. அவர்கள் மேலும் 200 கேள்விகளைக் கேட்பார்கள். உருப்படியான அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்ளாமல் இவற்றைப்போன்ற குப்பைக் கேள்விகளுக்கு பதில்களை மட்டுமே அளித்துக் கொண்டிருந்தால் முன்னேற்றம் ஏற்படாது.

முன்னேற்றங்கள் படிப்படியாகவே நிகழமுடியும். பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் ஓடும் வாகனங்களின் புகையைக் (கார்பனை) கட்டுப்படுத்துவதை பல காலமாக அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக ஐரோப்பாவில் Euro-1 Emission Norms என்பதில் ஆரம்பித்து 2014-ஆம் வருடம் Euro-6 Emission Norms என்ற பாதையில் செல்கிறது. இந்தியாவும் ஐரோப்பாவின் அளவுகோல்களை படிப்படியாக அனுசரித்து வருகிறது. (Bharat-I, Bharat-II etc).

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் முன்னேற்றங்கள் நடக்காமல் இருந்தாலும் படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்படவே செய்கின்றன.

 

ஜி.வி.ஐயரின் பகவத் கீதை

சமீபத்தில் ஜி.வி.ஐயர் தயாரித்த பகவத் கீதையின் ஒலிநாடாவைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் திரௌபதியை இயற்கையாக உருவகப் படுத்துவார். துரியோதன, துச்சாசனாதிகள் இயற்கையை முழுவதுமாகக் கண்டுவிடும் நோக்கில் அவளைத் துகிலுரிய ஆரம்பிப்பார்கள். எவ்வளவு முயற்சித்தாலும் இயற்கையின் முழுப் பரிமாணங்களையும் கண்டுபிடிக்க முடியாது.

க்ளோபல் வார்மிங்கின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான். இயற்கையின் அனைத்துப் பரிமாணங்களையும் நாம் கண்டுபிடிக்க முயன்று கொண்டுதான் இருக்கிறோம். அதில் சில வெற்றிகளையும் பெற்றாலும் இன்னும் கடக்க வேண்டிய பாதை நீண்டதாகவே உள்ளது. தற்பொழுதுவரை கண்டுபிடித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மனித சமுதாயத்தைக் காக்க முயற்சி செய்வதுதான் புத்திசாலித்தனமே தவிர முழு இயற்கையையும் மீட்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டு, “உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணனாகப்” புலம்புவது அறிவற்ற செயலே!

 

சுற்றுச்சூழலை சீரமைப்பது நடக்குமா?

இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் சிரமமான காரியம். ஒரு புறம் வளர்ச்சியினால் மட்டுமே தங்கள் நாட்டின் பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முடியும் என்ற நியாயமான பாதையில் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் செல்கின்றன. ஆகவே கார்பனின் அளவைக் குறைக்க மறுக்கின்றன.

மறுபுறம் அமேரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் தாங்கள் வெளியேற்றும் கார்பனின் அளவைக் குறைப்பதற்கு முன்வந்தாலும் அதற்குச் சமமாக வளரும் நாடுகளும் முன்வர வேண்டும் என்கின்றன. இந்த “நீயா நானா” போட்டியில் எந்த முடிவையும் எட்ட முடியாத நிலையே கோபன் ஹேகன் மாநாடு வரைக்கும் ஏற்பட்டுள்ளது.

ஒருபுறம் வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத் தன்மை, மறுபுறம் வளரும் நாடுகளின் நியாயமான முன்னேற்றத் தேவை; ஒருபுறம் எண்ணெய் நிறுவனங்களின் “ஆதரவு தேடும் படலம்” (Lobbying); மறுபுறம் இயற்கைச் சக்தி நிறுவனங்களின் (Alternative energy based Companies)ஆதரவு தேடும் படலம்” (Lobbying).

அமேரிக்க அதிபர் ஒபாமா சுற்றுச்சூழலை சமாளிப்பதை தன் முக்கியக் கொள்கையாக அறிவித்தே ஆட்சிக்கு வந்தார். ஆனால் தற்பொழுதைய தேர்தலில் தோற்றவுடன் இந்தத் துறைக்கான புதிய சட்டங்கள் இயற்றப் படுவது மிகவும் கடினமாகியுள்ளது.

இந்தப் போராட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுகளைக் குறைப்பதில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படுமா என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

 

இன்றைய நிலையில் அறிவியலை எதிர்ப்போரே முன்னிலை

ஒரு திரைப்படத்தில் வடிவேலு தன் உடலின் பல பகுதிகளில் தீக்குச்சி மருந்தையும், தீப்பெட்டியின் பட்டையையும் பொருத்திக் கொண்டு தன் உடலிலிருந்தே தீப்பொறி கிளம்பும் என்று உதார் விடுவார். ‘தீப்பொறித் திருமுகம்’ என்று தன்னை அழைத்து கொண்டு கீழ்வரும் வசனத்தைப் பேசுவார்–

“நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனுண்டா. ஆனா நாம பண்றது நாலு பேருக்கு புரியப்படாது, தெரியப்படாது. எத செஞ்சாலும் இந்த சமுதாயம் நம்மள உத்து பாக்கணும்”.

இன்று புவி சூடாதலை எதிர்ப்போரும் வடிவேலுவின் இந்த வழிமுறையை அற்புதமாக அனுசரிக்கிறார்கள். இவர்கள் போடும் கூச்சலில் அறிவியலை அனுசரிப்போரின் சத்தம் அடங்கியே விட்டது. “Global Warming” என்று கூகுள் ஆண்டவரிடம் கேட்டால் இந்த “அறிவியல் எதிர்ப்பு” மாமேதைகள் புரிந்துள்ள மகாத்மியங்களே கிடைக்கின்றன.

இதனால் அறிவியலுக்கு ஒரு குறையும் ஏற்படப்போவதில்லை. அறிவியலை விட்டு பொய்களை அனுசரிக்கும் மக்களுக்குத்தான் அழிவு சம்பவிக்கும்.

 

பகுதி-II – அபத்தமான நோய்த் தகவல்கள்

(தொடரும்…)

9 Replies to “பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1”

  1. நன்றி! கட்டுரையின் அடுத்த பகுதிகளைப் படித்தால் கொஞ்சம் புரியும் என்று நினைக்கிறேன். புவி வெப்பமாகுதல் என்று பலரும் சொல்லி வருகின்ற சமயத்தில் வரும் கட்டுரை, அதிக முக்கியத்துவம் பெறுகிறது. நன்றி!

  2. நேற்றைய வார்த்தை இன்றோ மறுநாளோ பொய்யாவதுதான் அறிவியல்.
    அறிவியல் கண்டுபிடிப்புக்கள் கூட தினமும் பொய்யாவதுதான், பிரேக் டவுன் எனப்படுவது; ரிப்பர் எனப்படுவதுதான் அறிவியலின் சப்பைக்கட்டு. எனவே தான், அறிவியல் உன்னதமானதாய் இருப்பதைவிட உபயோகமாயும் சில தடவைகளில் உபத்திரவமாகவும் இருக்கின்றது. பொய்கள் கூட, அறிவியலைப்போலவே உபயோகமாகவும் உபத்திரமாகவும் இருக்கின்றன. எனவே பொய்க்கும் அறிவியலுக்கும் உள்ள வித்தியாசம் குறைவுதான்.

  3. கார்பன் வெளியீட்டை தடுக்க வேண்டாம் என்கிறீர்களா? அடுத்த பகுதியில் தான் முழுவதுமாகப் புரியுமா?

  4. In the west, people don’t take simple initiatives individually to reduce carbon footprints, like cut down on meat consumption, use less electricity at homes, use more public transit system, etc. Instead, they want the government to do everything for them.

    They are happy if the government signs Kyoto protocol and spends a lot of money in the name of carbon-emission cutting. They are happy if Al Gore flies in his personal superjet to a remote Island to talk about global warming and carbon emissions. They are happy to drive 100 miles on their cars to watch “The Inconvenient Truth”.

    If all this is done, they feel good and are very happy to listen to blaring music, keep their homes at 85 degrees in winter and 15 degrees in summer, eat at steakhouse regularly and drive around in their SUVs and Hummers sporting bumper stickers that say “Iraq war is for oil”.

  5. புவி சூடாதலைப் பற்றின என் கருத்து இந்த பகுதியுடன் முடிந்து விட்டது.
    இந்த கட்டுரைக்கு விஷயம் எவ்வாறு கார்பனை கட்டுபடுத்த வேண்டும்?
    எந்த நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதல்ல.

    இந்த பகுதி One word Q-A மாதிரி.

    புவி சூடாதல் அறிவியலா? பொய்யா?

    அறிவியல்தான் என்போரில் சிலர் சில தவறுகள் செய்தாலும் இது
    அறிவியல்தான் என்பதை பதிவு செய்வது மட்டுமே இப்பகுதியின் நோக்கம்.

  6. சுற்றுசுழல் பாதிப்பு நாம் அனைவரும் இன்று கண்கூடாக பார்க்கும் ஒன்று. தமிழ் நாட்டில் ஓடும் அனைத்து நதிகளும் இதை உணர்த்தும். திருப்பூர் சாய கழிவுகள் ஏற்படுத்தி வரும் பாதிப்புகளை நாம் அனைவரும் அறிவோம், இக்கட்டுரையாளர் ஏதோ சுற்றுசூழல் ஆர்வலர்கள் இல்லாத ஒன்றை ஊதி பெரிதாக்குவது போல் எழுதி உள்ளார். அநேகமாக இவர் ஒரு தொழில் அதிபர் ஆக இருக்க வேண்டும். இவர்கள் பணம் சம்பாதித்து வாழ, என்ன வேண்டும் செய்யலாம் என்ற இவர்களை போன்றவர்கள் எழுதும் குப்பைகளை படித்து உங்கள் மனதையும் மாசு படுத்தி கொள்ளாதிர்கள்.
    – ஒரு சுற்றுசூழல் ஆர்வலன்.

  7. திரு பாலாஜி

    Freakanomics 2, இதில் புவி சூடாவதை அறிவியல் மூலமே தடுப்பது எவ்வளவு சுலபம் என்பதை தெளிவு படுத்தி உள்ளார் stephen levit. – இந்த முயற்சியை தடுப்பது al gore போன்ற பேர்வழிகள் தான் என்பதும் தெளிவாகும்

  8. The global warming can be directly related to current social break down. The joint family can be seen only in history books. The nuclear family led to individual flats which led to Concrete jungles with TVs/Fridges/ACs/Inverters/Cars for each individuals. What else can you expect other than warming up of environment? If you ponder further it is because of the conversion spree of abrahamic faiths which results in break up of families and the show of economic strength as the only measuring index for human growth.

    Is anyone studying from this angle?

  9. Balaji – If you have not read, I’d suggest Michael Crichton’s ‘State of Fear’.- a good book that deals with popular global warming myths.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *