அறியும் அறிவே அறிவு – 9

அறியும் அறிவே அறிவுபகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8

(தொடர்ச்சி…)

ramana_arunachalaஒரு முறை ரமணர் முன்னிலையில் சம்ஸ்க்ருதத்தில் புனையப்படும் பாடல்களின் இலக்கண விவரங்களைப் பற்றிப் பேச்சு வந்தது. இந்த நிகழ்ச்சி ரமணர் தமிழில் “உபதேச உந்தியார்” எழுதி முடிந்தபின், சம்ஸ்க்ருதத்தில் அதனையே “உபதேச சாரம்” என்று எழுதத் தொடங்குமுன் உள்ள இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்று நினைக்கிறேன். அப்போது அவருக்கு “ரமண மகரிஷி” என்று பெயர் வருவதற்கே காரணமாயிருந்த கணபதி முனி அவர்கள் பகவான் ரமணரிடம் அதில் வரும் அசை, சீர், தொகை பற்றிய விளக்கங்களைக் கொடுத்துவிட்டுச் சென்றாராம். சில மணி நேரங்கள் கழித்து அவர் ஆச்ரமத்திற்குத் திரும்பிவந்த போது, ரமணர் முதன்முதலாக சம்ஸ்க்ருதத்தில் நாலடி கொண்ட ஒரு பாடலைப் புனைந்து, அதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதியும் வைத்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார். ரமணாஸ்ரமத்திற்குச் செல்பவர்கள், அவரது தாயார் சந்நிதிக்குச் செல்லும் முன்பாக உள்ள ஹாலில் அமர்ந்தவாக்கில் இருக்கும் ரமணரின் சிலைக்கு மேலே அந்தப் பாடலைச் சுவற்றில் பொறித்துள்ளதை இன்றும் காணலாம். ரமணரது அந்த முதல் பாடலின் தமிழாக்கம்தான், நாம் அடுத்து காணப் போகும் “உள்ளது நாற்பது அனுபந்த”த்தில் உள்ள செய்யுள்.

இதயமாம் குகையின் நாப்பண்  ஏகமாம் பிரம்ம மாத்ரம்
அது “அகம் அகமா“ய் நேரே அவிர்ந்திடும்  ஆன்மாவாக
இதயமே சார்வாய் தன்னை  எண்ணி ஆழ்  அலது வாயு
அதனுடன் ஆழ் மனத்தால் ஆன்மாவில் நிட்டன் ஆவாய்

பொருள்: இதயமென்னும் குகையின் மத்தியில் இரண்டற்ற ஏகமாகிய பிரம்மமானது; தான் மாத்திரம் தனித்து அந்த வஸ்துவானது “நான் நான்” என்று ஆன்மாவாகத் தானே விளங்குகிறது. தன்னை எண்ணித் தனக்குள்ளே ஆழ்கின்ற மனத்தினால், அல்லது பிராணாயாம வழியினால் ஆழ்கின்ற மனத்தினால் இதயத்தையே சார்ந்து அடைவாய். அதனால் ஆன்ம ஸ்திதியில் நிலை பெற்றவன் ஆவாய். 

தன்னுள் தானே விளங்கும் பிரம்மத்தை அறிய முயற்சி செய்யும் வழிகள் என்று இரண்டு இங்கே கூறப்பட்டிருக்கின்றன. “நான்” என்று எண்ணும் மனம் இதயத்திற்குள் ஆழ்ந்து அதன் மூலத்தை நாடுவதுதான் இவ்விரண்டில் முக்கிய சாதனமாகும். மற்றது பிராணாயாம வழியில் மூச்சை உள்ளே அடக்கி, அதனால் அடங்கும் அகந்தையும், மனமும் இறுதியில் அற்றுப் போக தன்னுள் உள்ள ஒளியைத் தானே உணர்வது. 

சாதாரணமாகவே நாம் அமைதியாக இருக்கும்போது நமது மூச்சும் சீராக இயங்கும். இந்தக் காரண-காரியம் ஒரு சுழற்சி அடையும்போது மூச்சின் கட்டுப்பாட்டினால் மனம் அடங்கும் என்பதும் எதிர்பார்க்கப்படுவதே. 

praanaayaamam

பிராணாயாம வழிகளில் செல்லும் போது நமது அறிவு முடிவான “உள்ள நிலை”யைத் தெரியாதிருப்பதோ, அல்லது அதைத் தேர்ந்தெடுத்துச் செல்லாதிருப்பதோ மிக அபாயகரமானது ஆகும். ஏனென்றால் அகந்தை தூல நிலையிலிருந்து நுண்ணிய நிலைக்குச் சென்று நம்மை மேலும் சிக்கலில் ஆழ்த்தும். அதனாலேயே ரமணர் வேறு ஒரு பாடலில், “கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்” என்பார். தெரியாதவர்களுக்கு அகந்தை ஒன்றே; தெரிந்தும் தெளியாதார்க்கு அது பல வடிவங்கள் எடுத்து அவர்களை வாட்டும்.  

“தான்” எனும் தனது உண்மை நிலையைவிட்டு “நான்” எனும் அறிவானது தனித்து நிற்க இயலாது. அந்த அறிவை தேகத்தைவிட்டுத் தனியே பிரித்து, உள்முகமாக்கி அந்த அறிவு மூலமாகத் தன்னிருப்பிடமாகிய இதயத்தை அடைந்தால், தன்னிருப்பு இல்லாத அகந்தை அழிந்து ஆன்மா சுயமாக “நான்-நான்” என்று தன்னளவில் தானே சுடர்விட்டுப் பிரகாசிக்கும். அந்தச் சொரூபத்தை உணர்வில் அடையும்போது ஆன்ம நிஷ்டனாவாய் என்று ரமணர் இங்கு உபதேசிக்கிறார். 

இங்கு இதயம் என்று சொல்லப்படுவது நம் வாழ்நாள் முழுதும் துடித்துக் கொண்டு இருக்கும் பௌதிக இதயம் அல்ல. இங்கு குறிப்பிடப்படுவதை ஆன்மிக இதயம் என்று சொல்லலாம். “எங்கும் பரவியிருக்கும் பிரம்மத்தை எப்படி இதயம் என்று ஒரு பொருளில் அடக்கலாம்?” என்று கேட்ட ஒருவருக்கு ரமணர் சொன்னார்– “நீங்கள் சொல்வது உண்மையே. இதுவும் ஒரு பாவனைதான். நீங்கள் செய்யாத குற்றத்தை உங்கள்மேல் ஒருவர் திடுமென்று பழிசுமத்தும் போது ‘என்னையா அப்படிச் சொன்னீர்கள்?’ என்று உங்களையே சுட்டிக் காட்டி நீங்கள் கேட்கும்போது உங்கள் கை விரல்கள் எதைக் காட்டுகின்றன? உங்கள் நெஞ்சுக்கு அருகில் நடு மையக் கோட்டிற்கு சற்றே வலப்புறத்தே போகிறது அல்லவா? அதுதான் இந்த இதயம் என்று கொள்ளுங்கள்”

இங்கு அங்கு என்றில்லாத பொருளை இங்கும் உள்ளது என்று கொள்வது ஒரு உத்தி என்று கூடச் சொல்லலாம்.

ரமண அடியார்களில் ஒருவரான ஸ்ரீ சாது ஓம் சுவாமிகள் தனது தியானப் பாட்டில் இப்படிச் சொல்வார்:

இன்பமான ஒருபொருள்  இருக்கு துன்றன் நெஞ்சிலே
அன்பு கொண்டு  தேடினால்  அளவில்லாத சுகமடி
எங்கும் உள்ள கடவுளை  இதய குகையில் காணலாம்
இங்கு கண்ட பிறகுதான்  இருப்பதெல்லாம் அவன் மயம்
 

இனி அடுத்து வருவது “தேவி காலோத்தரம்” என்ற வடமொழி கிரந்தத்தில் உள்ள ஒரு ஸ்லோகத்தை ரமணர் மொழிபெயர்த்து அருளியுள்ளது.

அகக் கமலத்தே அமல அசல
அகம்  உருவம் ஆகும்  அறிவு ஏது? – அகத்தை
அகற்றிடுவதால் அவ்வகமாம் அறிவே
அக  வீடு அளிப்பது அறி

பொருள்: இதயத் தாமரையில் நிர்மலமாயும் சலனமற்றதாயும் “நான்” என்னும் போதசொரூப உருவமாக உள்ள அறிவு எதுவோ அந்த “நான்” என்னும் அறிவே, “தேகம் நான்” என்னும்  அகங்காரத்தை விடுவதினால், முக்தியை அளிக்குமென்று அறிவாயாக.

எவருக்கும் “நான்” என்ற உணர்வு உண்டு. ஜீவபோதம் கொண்ட அஞ்ஞானிக்கு “நான்” என்பது தன் உடல் அளவே. ஏனென்றால்  அங்கு அகங்காரம் இருக்கிறது. அது அகன்றிய ஞானிக்கோ, “நான்” என்பது அத்தகைய பற்று சற்றும்  இல்லாது நிர்மலமாய்த் தானாய்ப் பிரகாசிக்கும் பிரம்மானுபவ அறிவே. அந்த உணர்வு எந்த உடலுடனும் தொடர்புடையது அல்ல. ஆகவே எல்லா சீவராசிகளும் அந்த உணர்வுள் அடக்கம் ஆகும். ஆக “நான்” என்ற அகந்தை அழிந்து “தான்” என்ற உணர்வுடன் சதாசர்வ காலமும் இருப்பதே வீடுபேறு என்ற முக்தி நிலையாகும்.

இருக்கும் எல்லாப் பற்றினுள் தேகப் பற்றே ஆழமானதும் விடுதற்கு அரியதுமானதும் ஆகும். ஆகவே அந்தப் பற்று அகந்தையின் துணைகொண்டு தூலத்திலிருந்து மிக நுண்ணியது வரை வெவ்வேறு நிலைகளில் எதிர்ப்படும். அப்படி ஒவ்வொன்றும் வர வர, அவைகளை விவேகமும் வைராக்கியமும் உள்ளவன் எதிரிகளை வெட்டிச் சாய்ப்பதுபோல வெட்டிக்கொண்டே வர வேண்டும். 

இங்கு நம்மாழ்வார்  திருவாய்மொழியில் கூறியுள்ளதை  ஒப்பு நோக்கலாம் :

அற்றது பற்றெனில் – உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் – அற்றிறை பற்றே

பொருள்: எல்லாப் பற்றுக்களும் கழன்று விட்டதென்றால், கிடைப்பது பேரின்ப வீடு ஆகும். ஜீவபோதமாகிய அகந்தை அழிந்து நிலைபெற்று நிற்கும் அத்தன்மையே இறைப்பற்று ஆகும்.
 

அடுத்ததாக விவேக  சூடாமணியில் உள்ள சம்ஸ்க்ருத ஸ்லோகத்தின் தமிழாக்கத்தை ரமணர் அருளியிருக்கிறார்.

இழி உடல் யான் என்னால்  இகந்திடுக என்றும்
ஒழிவில் இன்பாம் தன்னை  ஓர்க – அழியும்
உடல்  ஓம்பலோடு தனை  ஓர உனல் ஆறு
கடக்கக் கராப்புணை கொண்டற்று 

பொருள்: அருவருப்புடைய இழிவான இத்தேகத்தை ஆத்மா என்று எண்ணுவதை விட்டு விடுக. எப்போதும் ஒழிவற்று இடைவிடாமல் இன்பமயமாய் விளங்கும் தன் சொரூபத்தை அறிந்திடுக. அழியும் தன்மையுள்ள உடலின் பாதுகாப்பில் காட்டும் அக்கறையுடன் கூடவே தனது ஆத்ம சொரூபத்தை அறிவதற்கு முயற்சி செய்வது ஓர் ஆற்றைக் கடந்து அக்கரை செல்வதற்கு முதலையைக் கட்டுமரமாகக் கொள்ளும் முயற்சி போன்றதாகும். 

ஓர் ஆற்றைக் கடக்க வேண்டிய ஒருவன் படகையோ அல்லது தெப்பக் கட்டையையோ பிடித்துக்கொண்டுபோய் அக்கரை அடையலாம். ஆனால் ஆற்றில் உள்ள முதலையின் மீதேறி அவ்வாறு ஒருவன் செல்ல முயன்றால் அவன் கதி என்ன ஆகும்? அது போன்றே ஆன்ம முத்தைத் தேடுபவன் முதலில் தேக அபிமானத்தை விட வேண்டும். இல்லையென்றால் அவனுக்கும் முதலையின் மீதேறியவன் அனுபவம்தான் கிடைக்கும். ஏனென்றால் தேக அபிமானம் கொண்டவனுக்கு அவனது உடல் உலகத்தில் உள்ளதால் உலகமும் தெரியும். உலகம் தெரியும்போது அவனது பார்வை வெளியேதான் செல்லுமே தவிர உள்முகப்படாது. உள்முக நோக்கில்லாது ஆன்ம அனுபவம் சித்திக்க வாய்ப்பில்லை.  

ஆக முதலில் தன்னை ஒருவன் உடல் அளவில் குறுக்கிக் கொள்ளக்கூடாது. அடுத்தபடியாக எது பரமார்த்திக உண்மையோ அந்த இடைவிடாது இலங்கும், ஆனந்த மயமான சொரூபத்தை தியானித்தல் அவசியம். தியானம் என்பது தனது இருப்பில் எப்போதும் இன்புற்று இருப்பதே. இங்குதான் மற்ற எண்ணங்கள் தலைதூக்கும். ஒவ்வொரு எண்ணமும் வரும்போது எந்த ஒரு எண்ணத்தையும் பின்பற்றிச் செல்லாது, அது யாருக்கு உண்டாயிற்று என்று விசாரித்து எண்ணங்களின் மூலத்தை நோக்கிச் செல்வதே ஒருவனின் முயற்சியில் முக்கிய அம்சம். அந்த நிலையிலிருந்து வழுவாமல் இருப்பதற்கே தியானம் அவசியம் ஆகிறது. இல்லையென்றால் மனம் மறுபடியும் உலகின் வெளிப்புறத் தோற்றத்தில் லயிக்க ஆரம்பித்துவிடும். 

என்றும் எப்போதும் பரமார்த்திக நிலை உள்ளதால் அதுவே நானாக இருப்பதே நமது நிலை என்று உணர்வதே முயற்சியின் முடிவு மட்டுமல்ல; ஆரம்பமும்தான். உடலே நான் என்னும் எண்ணம் கிளம்பாமல் இருப்பதற்கு உண்டான பல வழிகள் அடுத்த பாடலில் வருகின்றன. 

(தொடரும்…)

2 Replies to “அறியும் அறிவே அறிவு – 9”

  1. திரு ராமன் அவர்களே

    சாது ஸ்ரீ ஓம் அடிகளின் இந்த வரிகள் காலத்தை வென்று நிற்கும்.

    ///எங்கும் உள்ள கடவுளை இதய குகையில் காணலாம்
    இங்கு கண்ட பிறகுதான் இருப்பதெல்லாம் அவன் மயம்///

    பக்தனின் உள்ளம்தான் இறைவன் நிரந்தரமாக வசிக்கும் இடம் என்பதை உணர்ந்தவரே இறைவனை முழுமையாக உணர முடியும் என்பதை அழகாகச் சொல்கிறார். இறைவனை உள்ளத்துள் உணராதவன், பிரபஞ்சத்தில் தேடுவது விந்தையே.

    ///அதனாலேயே ரமணர் வேறு ஒரு பாடலில், “கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்” என்பார். தெரியாதவர்களுக்கு அகந்தை ஒன்றே; தெரிந்தும் தெளியாதார்க்கு அது பல வடிவங்கள் எடுத்து அவர்களை வாட்டும். ///

    எத்தனை சத்திய வாக்கு. கல்வி அகந்தையை அடக்க வலி கொலாவிட்டால் கல்வியால் என்ன பயன்? அத்தகு கல்வி பாரம்தான்.

  2. //இங்கு நம்மாழ்வார் திருவாய்மொழியில் கூறியுள்ளதை ஒப்பு நோக்கலாம் :

    அற்றது பற்றெனில் – உற்றது வீடுயிர்
    செற்றது மன்னுறில் – அற்றிறை பற்றே

    பொருள்: எல்லாப் பற்றுக்களும் கழன்று விட்டதென்றால், கிடைப்பது பேரின்ப வீடு ஆகும். ஜீவபோதமாகிய அகந்தை அழிந்து நிலைபெற்று நிற்கும் அத்தன்மையே இறைப்பற்று ஆகும்.//

    இதனை

    ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்றை விடற்கு’
    என்ற திருக்குறளுடனும் ஓப்பு நோக்க முடிகிறது.

    எழுதவும் சிந்திக்கவும் உணரவும் கடினமான விஷயம் பற்றி சுவாரஸ்யமாக எழுதுவது பாராட்டுதற்குரியது

    //கல்வி அகந்தையை அடக்க வலி கொலாவிட்டால் கல்வியால் என்ன பயன்? அத்தகு கல்வி பாரம்தான்.//

    கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன்
    நற்றாள் தொழார் எனின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *