சி.பி.ஐ. நடத்துவது விசாரணையல்ல, வீட்டுப் பாடம்

cbi-logo

சோனியா காங்கிரஸின் காவல்நாயாக மாறிவிட்ட சென்ட்ரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (Central Bureau of Investigation) என்கிற சி.பி.ஐ. (C.B.I.) தனது நம்பகத்தன்மையை இழந்து நீண்ட காலம் ஆகிவிட்டது.

தனக்கு வேண்டாதவர்கள் மீது ஏவிவிடவும், எதிர்முகாமில் இருப்பவர்களைத் தனக்குச் சாதகமானவர்களாகத் திருப்ப நிர்பந்திக்கவும், எதிர்க்கட்சியில் மக்கள்செல்வாக்குடன் இருப்பவர்கள்மீது பொய்க் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்து அவர்களின் மீது அதிருப்தி எழச் செய்யவும் சி.பி.ஐ.யை சோனியா காங்கிரசும் அதற்குத் தலையாட்டி பொம்மையாக வாய்த்திருக்கிற சோனிப் பிரதமர் மன்மோஹன் சிங்கும் உபயோகிக்கத் தொடங்கிவிட்ட பிறகு, சி.பி.ஐ.யின் நடத்தையில் மக்கள் நம்பிக்கை இழந்தாயிற்று.

ஒரு காலத்தில் ஸி.பி.ஐ. என்றாலே தனி மரியாதை இருந்தது. தயை தாட்சண்யமின்றி, விருப்பு வெறுப்பு இன்றி, முறைகேடுகளைப் புலன் விசாரணை செய்து, எவருக்கும் அஞ்சாமல் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி, குற்றப் பத்திரிகையினையும் மிகவும் உறுதி வாய்ந்ததாகத் தயாரித்து, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வாங்கித் தரும் அமைப்பு என்கிற கருத்து மக்களிடையே நிலவி வந்த காலம் ஒன்று இருந்தது. 1969-க்குப் பிறகு, இந்திரா காந்தி தனது பிரதமர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள சி.பி.ஐ.யை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியதுமே சி.பி.ஐ.யின் நம்பகத்தன்மை நீர்த்துப் போகலாயிற்று. 1975-ல் இந்திரா காந்தி தனது பிரதமர் பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நெருக்கடி நிலையை நடைமுறைப் படுத்தியதும் சி.பி.ஐ. தனது தனித் தன்மையை இழந்து சுயமாக இயங்கும் உரிமையினைப் பறிகொடுத்தது. 1977-இல் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி நடத்திய சொற்ப கால ஆட்சியின்போது சி.பி.ஐ.க்கு அதன் சுய மரியாதை மீட்டுத் தரப்பட்டது. ஆதரவாளர்-ஆதரவு தராதவர் என்கிற பாகுபாடு இன்றி, ஊழல் பேர்வழிகள் எனத் தெரியவரும் அனைவரது செயல்களையும் புலன் விசாரணை செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு பிரதமர் மொரார்ஜி சி.பி.ஐ.க்கு அறிவுறுத்தியிருந்தார்.

நெருக்கடிக் காலத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி– குறிப்பாக கருணாநிதி செய்த ஊழல்கள்– குறித்து விசாரிக்க நீதிபதி சர்க்காரியா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அவரும் கருணாநிதி அறிவியல்பூர்வமாகச் செய்த ஊழல்களை அம்பலப்படுத்தினார். அதன் அடிப்படையில் கருணாநிதி தலை மீது கத்தி தொங்கலாயிற்று.

விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் சி.பி.ஐ. கருணாநிதியின் ஊழல்களை முறைப்படி புலன் விசாரணை செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் மக்களவைத் தேர்தல் நடந்து, ஆட்சி மாற்றமும் நிகழ்ந்துவிட்டது.

ஜனதா ஆட்சி பீடம் ஏறியதால் தனக்கு விடிவு காலம் பிறந்துவிட்டதாகப் பெருமூச்சுவிட்டார், கருணாநிதி. அப்போது மக்களவை தி.மு.க. உறுப்பினராக இருந்த க.ராஜாராமை மொரார்ஜி தேசாயிடம் தன் மீதான நடவடிக்கையைக் கைவிடுமாறு இடைவிடாது நச்சரிக்க ஏவினார், கருணாநிதி. சர்க்காரியா விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதைக் கிடப்பில் போட்டுவிடவேண்டும் என்ற கோரிக்கையை கருணநிதியின் சார்பில் மொரார்ஜியிடம் விடாமல் வற்புறுத்திக்கொண்டிருப்பதே ராஜாராமின் முழுநேர வேலையாகிவிட்டிருந்தது!

பாவம், ராஜாராம், நல்ல மனிதர். தப்பு வழிக்கெல்லாம் போகிறவர் அல்ல. அவரது போதாத காலம், அண்ணாவின் மறைவுக்குப் பிறகும் தி.மு.க.வில் நீடித்துக் கொண்டிருந்தார். நான் மிகவும் நெருங்கிப் பழகி வந்த அரசியல்வாதிகளுள் தற்கால அரசியல்வாதியாக இருக்கவே தகுதியில்லாத ராஜாராமும் ஒருவர். “கருணாநிதிக்காக மொரார்ஜி கிட்ட பிச்சை எடுக்கிறதே என்னோட மக்களவை உறுப்பினர் வேலையாகிப் போச்சு,” என்று அவர் சலித்துக்கொள்வார்!

கருணாநிதி இப்படிப் பலமுறை காவடி எடுத்தும், சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார், மொரார்ஜி தேசாய். எனவே தன்னைப் போலவே சுயநலத்திற்காக எதுவும் செய்யத் தயங்காத இந்திரா காந்திதான் தனக்கு ஏற்றவர் என முடிவு செய்து, “நேருவின் மகளே வருக, நிலையான (நேர்மையான அல்ல!) ஆட்சி தருக!” என்று கருணாநிதி தலைகீழாகக் கரணம் போட்டுவிட்டார்!

சரண்சிங் என்கிற வயோதிகரின் வாழ்க்கை லட்சியமே நாட்டின் பிரதமர் நாற்காலியில் ஒருநாளாவது உட்கார்ந்துவிட வேண்டும் என்பதாக இருந்து, இந்திராவும் அதை மோப்பம் பிடித்துவிட்டதால் மொரார்ஜி ஆட்சி கவிழ்ந்து, அதன்பின் அமைந்த சரண்சிங்கின் சொற்ப கால ஆட்சியும் அகன்று, மீண்டும் இந்திரா காந்தி பிரதமர் பதவியைக் கைப்பற்றிய போது, சி.பி.ஐ. மறுபடியும் பிரதமரின் விருப்பு வெறுப்புகளுகக்கு ஏற்ப இயங்கும் அமைப்பாகத் தரம் தாழ்ந்தது. எனினும் நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை. இந்திரா தனது தோல்வியிலிருந்து ஓரளவு பாடம் கற்றிருந்தார். சி.பி.ஐ. சரியாகச் செயல்படுவதற்கு அதுவே போதுமானதாக இருந்தது. ராஜீவ் காலத்திலும் அது ஓரளவு சுயாதிக்கத்துடன் இயங்க முடிந்தது. இடையே வி.பி.சிங் ஆட்சியில் ஸி.பி.ஐ. சுய மரியாதையுடனும் சரியான புலன் விசாரணை அமைப்பாகவும் இருந்தது. ராஜீவ் படுகொலை விவகாரத்தில் அது பல நிர்பந்தங்களுக்குத் தலைவணங்க நேரிட்டது. காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலர் தப்பிக்க, அது உடன்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சி.பி.ஐ. தனது சுய மரியாதையைத் திரும்பப் பெற்று சுதந்திரமாகச் செயல்படும் கெளரவத்தை மீண்டும் பெற முடிந்தது, வாஜ்பாய் என்கிற கனவான் பிரதமர் பவியை ஏற்ற பிறகுதான். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சிக் காலத்தில் சி.பி.ஐ. சுதந்திரமாகச் செயல்பட முடிந்த்து என்ற போதிலும், அப்போதே சோனியா மீதுள்ள ஆதாரபூர்வமான குற்றங்களைத் திரட்டி நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையினை சி.பி.ஐ. மூலம் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை வாஜ்பாய் கழிவிரக்கம் காரணமாக நிறைவேற்றத் தவறினார். தாம் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்குவதாகத் தமக்கு அபவாதம் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சியதாலும், என்னதான் இருந்தாலும் படுகொலையான முன்னாள் பிரதமரின் மனைவியாயிற்றே என்கிற தாட்சண்யத்தினாலும் வாஜ்பாய் தமது கடமையிலிருந்து தவறினார். அதன் பலனை நமது நாடு இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறது!

சோனியா காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்துவிட்ட பிறகு, ஸி.பி.ஐ. முற்றிலும் சுதந்திரம் இழந்து, ஆளும் தரப்பினர் வீட்டுக் காவல் நாயாகவே மாறிவிட்டது. சிறிதும் லஜ்ஜையின்றி அது ஆளும் தரப்பினரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பக் குற்றவாளிகளைக் கண்டறிவதும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதும், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையைத் திரும்பப் பெறுவதும், புலன் விசாரணையைக் கைவிடுவதுமாகப் பொதுமக்கள் தரும் நிதியிலிருந்து சம்பளம் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது!!

 1950-களிலும், 60-களிலும் ஏன் 70-களிலும்கூட சி.பி.ஐ.க்கு இருந்த அசைக்க முடியாத நம்பகத்தன்மை இன்று இல்லை என்பதோடு மிகமிகச் சாதாரண நிலையில் உள்ள மக்களின் ஏளனத்துக்குக் கூட அது ஆளாகி விட்டிருக்கிறது.

raja-at-cbi-office-for-questioning

இன்று ஆண்டிமுத்து ராசாவிடம் மிகவும் காலதாமதமாக ஸி.பி.ஐ. தனது விசாரணையைத் தொடங்கியிருப்பதும் அவரைக் கைது செய்யாமல் ரகசியமாக விசாரணை மட்டும் செய்துகொண்டிருப்பதும் மக்களிடையே அதிருப்தியைத்தான் தோற்றுவித்துள்ளது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு, அதற்கான கூலியும் பெற்றுக்கொண்டவர்தான் என்கிற எண்ணம் மக்கள் மனதில் வேரூன்றியிருக்கிறது. இந்த விவகாரத்தில் பெரும் லாபம் அடைந்தவர்கள் கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமின்றி சோனியாவின் இரு சகோதரிகளுமாவர் என்று சுப்பிரமணியசாமி, பிரதமர் மன்மோஹனுக்கு மிகத் தெளிவாகவே கடிதம் எழுதியுள்ளார். சோனியாவின் மகள் ப்ரியங்கா துபாயில் இருந்துகொண்டு தன் சித்திமார்களூடன் 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கிடைத்த அன்பளிப்பை முதலீடு செய்துகொண்டிருப்பதாகவும், லஞ்சம் கொடுத்துக் குறைந்த விலையில் 2-ஜி அலைக் கற்றையை வாங்கிய போலி நிறுவனங்கள், வாங்கிய சூட்டோடு பலமடங்கு கூடுதல் விலையில் பிற நிறுவனக்களுக்கு விற்று லாபம் பெற்றுவிட்டது மட்டுமின்றி, நமது நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்து விளையுமாறு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு ஸ்தாபம சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதில் பங்குதாரராக இருப்பதும் சுப்பிரமணிய சாமியின் மூலம் பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபற்றி பிரதமர் மன்மோஹனிடமிருந்து எவ்வித எதிர்வினையும் இல்லை! மாறாக, “எனக்கு உடம்பு சரியில்லை என்னை விட்டு விடுங்கள்!” என்று சோனியாவிடம் அவர் கெஞ்சத் தொடங்கியிருக்கிறார்! என் மகன் ராஹுல் பச்சாவுக்குப் பக்குவம் போதாது, ஆகையால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று சோனியா அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டியுள்ளது!

இந்நிலையில் ஆண்டிமுத்து ராசாவிடம் சி.பி.ஐ. மணிக்கணக்கில் உரையாடல் மேற்கொண்டிருக்கிறது என்றால் அது விசாரணையல்ல; வழக்கு என்று வந்துவிட்டால் இப்படி இப்படிச் செய்யுங்கள், இப்படி இப்படி பதில் சொல்லுங்கள் என்று கற்றுக் கொடுக்கும் வீட்டுப் பாடம்தான் என்று அரசியல் நோக்கு ஏதும் இல்லாத ஒரு சராசரி இல்லத்தரசி சர்வசகஜமாக என்னிடம் கூறி வியப்பூட்டினார்!

நம் நாட்டின் பெருமை வாய்ந்த புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ, இந்த அளவுக்கா கேவலப்பட்டுப் போக வேண்டும் என்று வருந்துவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை, எனக்கு.

4 Replies to “சி.பி.ஐ. நடத்துவது விசாரணையல்ல, வீட்டுப் பாடம்”

  1. அன்புள்ள மலர் மன்னன் அவர்களுக்கு

    இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் 3.1.2011 திங்கள் கிழமை பக்கம் ஒன்பதில் வெளியாகியுள்ள திரு எஸ் குருமூர்த்தியின் கட்டுரையில் , இந்தியர்கள் வெளிநாடுகளில் ரகசியமாக வைத்துள்ள கருப்பு பணம் ரூபாய் 20.80 லட்சம் கோடிகள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே சி பி ஐ விசாரணை என்று சொல்லி ஊரை ஏமாற்றும் முயற்சிகளில் ஈடுபடாமல் , முப்பது சதவீத வருமானவரியை கட்டும்படி உத்தரவிட்டு , பத்தினி வேடம் போடும் பெரிய அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோரை கருப்பு பணத்தை வெள்ளையாக்கி கொள்ள அனுமதிப்பதே புத்திசாலித்தனம் ஆகும். அரசுக்கு சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் வரியாவது கிடைக்கும். சி பி ஐ என்பது மத்திய ஆளும் கட்சியால் ஏவப்படும் ஒரு நாய் போன்ற அமைப்பு. குவாத்ரோச்சி கதைதான் இந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடக்கும். காங்கிரஸ் என்பது ஊழல் வளர்ப்பு பண்ணை ஆகும். அதனுடன் திராவிட பகுத்தறிவு பண்ணையார்களும் சேர்ந்துவிட்ட 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புதைகுழிக்கு தான் போகும். நகர்வாலா என்று ஒரு ஊழல் எழுபதுகளில் பேப்பரில் அடிபட்டது. அதன் முடிவில் நகர்வாலாவும், ஹெட் கேஷியர் மல்ஹோத்ரா என்பவரும் பரலோகம் போனார்கள்.அந்த ஊழலும் பரலோகம் போனது. அந்த நகர்வாலா மற்றும் மல்ஹோத்ராவுக்கு பதிலாக, இந்த 2 – ஜி ஊழலிலும் யாராவது சிலர் சிவலோகம், அல்லது வைகுண்டம் அல்லது பகுத்தறிவு உலக பிராப்தி அடைவதுடன் கதை சுவாரஸ்யமாக முடிந்துவிடும். காங்கிரஸ் மற்றும் தி மு க போன்ற தேச விரோத சக்திகள் வேரோடும், வேறடிமண்ணோடும் இந்த நாட்டை விட்டு ஒழிக்கப்படவேண்டியவை ஆகும்.

    பிரதாப்

  2. நன்றி ஐயா!
    இதில் பெரிய நகைச்சுவை: எதோ டைரி கிடைத்தது என்று சிபிஐ சார்பில் சொல்லியதுதான். தமிழ் சினிமா கூட இந்த 60 கள் காலத்து கதையைத் தாண்டி வந்துவிட்டது. சிபிஐ தான் இன்னும் டைரிக் குறிப்பிலிருந்து வெளி வரவே இல்லை. ஒரு வேளை மலையாள சினிமாவோ என்னவோ?

  3. சி.பி.ஐ. க்வட் ரோகி விஷயத்தில் நன்றாக மாட்டிக்கொண்டு விட்டது. தீர்ப்பு ஆயம் போஃபொர்ஸ் லஞ்சமாக பணம் கொடுத்திருக்கிறது என்று இப்போது சொல்லிவிட்டது.

    மொய்லி இதை விசாரிக்கிறாராம்..நன்றாக விசாரிக்கட்டும்.

    சி.பி.ஐ. யை எப்படி காக்கிறார் என்று பார்ப்போம்

  4. அரசு அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் தொழிலதிபர்கள் என வேடம் போட்டுத் திரியும் பண முதலைகளின், பல்வேறு விதமான, சட்டம், நீதி நேர்மைக்குப் புறம்பான அரிப்புக்களுக்குச் சொரிந்துகொள்ள உதவும், துடப்பைக் கட்டையாக, சிபிஐ, தலை சிறந்து, நாடு ஏளனமாய்ச் சிரிக்கும் நிலையில் உள்ளது. ஏழையின் சிரிப்பில் இயன்ற அளவும், அடிப்பதுதானே, காங்கிரஸ் மற்றும் கயமைக் கட்சிகளின் கொள்கை மற்றும் கொள்ளை போபோர்ஸ் கொள்ளையில்கூட, தீர்ப்பாயம் கூட, இவைகளுக்குச் சாதகமான சூழலைத்தான் அண்மையில் உருவாக்கயுள்ளது. என்னவென்றால், கொள்ளையடித்த பணத்துக்கு, வரி கட்டிவிட்டால், மக்களை ஏய்த்து, குற்றம் மற்றும் தண்டனைகளிலிருந்து தப்பிக்க விடலாம். வரி விகிதத்தை மாற்றியமைத்தாலும், எதோ காரணம் காட்டி, திருப்பித் தந்தாலும், கொள்ளை யடித்தது இவர்களுக்கு வீண் போகாமலும், பின்னாளில் அடிக்கப்போகும் கொளைகளுக்கு வசதியாகவும் இருக்கும். தாமாகவே முன்வந்து வரி எய்ப்பு செய்யும் பணியை செவ்வனே நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *