தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 3

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – பகுதி 1 , பகுதி 2

(தொடர்ச்சி…)

நான் முன்னரே கோபாலகிருஷ்ண பாரதியாரையும் அவரது நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளையும் பற்றிச் சொன்னேன். அவரது கீர்த்தனைகளும், அந்த கீர்த்தனைகளில் சொல்லப்பட்ட நந்தன் கதையும் தான் பின் வந்த நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் கருவாயின. அவர் சொன்ன கதைதான், இன்று நாம் கேட்கும் தலித் சித்தாந்திகளின் பிரசாரத்துக்கும் உதவுகிறது. இந்தக் கதை முன்னர் சொல்லப்படாத விவரங்களும் பாத்திர சிருஷ்டிகளும் கொண்ட கதை.

கோபால கிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை தவிர்த்து இன்னும் சில சைவ நாயன்மார் கதைகளையும் கீர்த்தனை வடிவத்தில் தந்திருக்கிறார். திருநீலகண்ட யாழ்ப்பாணர் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம், இயற்பகை நாயனார் சரித்திரம் ஆக மூன்றும் கூட. கோபால கிருஷ்ண பாரதியார் தன் கதா காலட்சேபத்துக்கு கீர்த்தனைகள் இயற்ற தேர்ந்தெடுக்கும் சரித்திரங்களிலும் கூட தன்னைத் தனித்துக் காட்டிக் கொள்கிறார். தீவிர ஆசார சீலரை, பழமையின் உருவே ஆனவரைக் கவர்வது தலித்துகள்! அதிலும் ஒரு பெண்மணியின் கதையும் சேர்கிறது. இது நடப்பது நூற்றைம்பது வருடங்களுக்கு முன். தலித்துகளும் பெண்ணும் ஒரே கதாகாலட்சேப மேடையில். இன்று அரசியல் மேடைகளில் நிகழும் அதே கூட்டணி.

கோபால கிருஷ்ண பாரதி விட்ட இழையைத் தொடர்வது இன்னொரு பாரதி. சுப்பிரமணிய பாரதி (1882-1921). இந்த பாரதியாரும் அதே பிராமண குலத்தில் பிறந்தவர் தான். இந்த பாரதி செய்த மகா பாப காரியம் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த கனகலிங்கம் என்பவருக்கு பூணூல் அணிவித்து பிராமணன் என்று பிரகடனம் செய்து, சந்தியாவந்தன மந்திரங்கள் கற்பித்து மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்

இந்த வரலாற்றுச் செய்தி நமக்குத் தெரிவது கனகலிங்கமே எழுதிய எனது குருநாதர் என்னும் நூலிலிருந்து தான். ஆனால் வேடிக்கை என்னவென்றால்,. பாரதியார் தான் பூணூல் அணிவதில்லை. சந்தியாவந்தனம் செய்து வந்ததாகவும் செய்திகள் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் பிராமண ஆசாரங்களைக் கடைப்பிடித்தவராகவும் தெரியவில்லை. அதற்கும் மேல் ஒரு கீழ்சாதிப் பையனுக்கு பூணூல் அணிவித்து சமஸ்கிருத மந்திரங்களும் கற்பித்தால், அவனைப் பிராமணன் என்றால், அவர் சமூக நிந்தனைக்கு ஆளாகாமல் தப்பிப்பது எப்படி சாத்தியம்? அவருடைய பாடல்களிலும் அவர் பிராமணர்களையும் சமூகத்தில் நிலவும் சாதி வேறுபாடுகளையும் சாடுகிறார். “பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே” என்று உரக்கவே சொல்கிறார்.

bharathi-ninaivugal-book-coverபிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து தப்பி வாழ் அவர் புதுச்சேரியில் இருந்த போது ஒரு முறை வீசிய பெரும் புயலில் அங்கிருந்த குடிசைகள் வீசி எறியப்பட்டன. குடிசைகளை இழந்து தவித்துக் கொண்டிருந்தவர்களிடையே தான், அன்று இந்த நூற்றாண்டின் தலையாய கவிஞர் அக்குடிசைகளைச் சீர் செய்து திரும்பக் கட்டுவதில் அவர்களுக்கு உதவுவதில் ஈடுபட்டிருந்தார். இக்காட்சிக்கு சாட்சியாக இருந்தவர் அப்போது பத்து பதினோரு வயது சிறுமியாக இருந்த யதுகிரி அம்மாள். தான் இறக்கும் முன் எழுதிய பாரதி நினைவுகள் என்ற சிறு புத்தகத்தில் இதைப் பதிவு செய்திருக்கிறார். இச் சம்பவங்கள் நிகழ்ந்தது, இத்தகைய சிந்தனைகளை பாரதியாரிடம் நாம் காண்பது, ‘சமுதாய சீர்த்திருத்த’ இயக்கம் தொடங்குவதற்கும், இச்சிந்தனைகளுக்காக இன்று போற்றப் படும் தலைவர்கள் இது பற்றி சிந்திக்கக்கூடத் தொடங்குவதற்கும் பல ஆண்டுகள் முன்னராகும். அந்தத் தலைவர்கள் பாரதிக்குப் பின்னரே இது பற்றிச் சிந்திக்கவே தொடங்கினார்கள் – என்பது மட்டுமல்ல, அவர்கள் பாரதி காலத்திலேயே கூட பாரதிக்கு வயதில் மூத்தவர்கள். பாரதி மறைந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னர் தான் அவர்கள் சமுதாய சீர்திருத்தங்கள் பற்றி, சாதி வேறு பாடுகள் பற்றி சிந்திக்கத் தொடங்கினர் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய வரலாற்றுத் தகவல்.

நவீன தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட முதல் கதையே பாரதியிடமிருந்து தான் நமக்குக் கிடைக்கிறது. அந்த முதல் கதையே தாழ்த்தப்பட்ட சாதியினரின் விடுதலையைப் பற்றிய பிரசினையைத் தான் மையமாகக் கொண்டுள்ளது. ஆறில் ஒரு பங்கு என்ற அந்தக் கதையின் தலைப்பு, மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்காக இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதி மக்களைக் குறிக்கும். அதில் ஒரு பிராமணப் பையன் தான் விரும்பும் ஹரிஜனப் பெண்ணிடம், தான் அவளை மணக்கும் முன் தான் கவனிக்க வேண்டிய பல பிரச்னைகள் இருப்பதாகவும், அதன் பின்னரே அவளை மணக்க முடியும் என்றும் சொல்கிறான். தான் ஈடுபாடு கொண்டுள்ள தேச விடுதலை இயக்கத்தின் முக்கிய அம்சம் முதலில் தாழ்த்தப்பட்டுள்ள மக்களின் விடுதலை என்று சொல்லி, வங்காளம் சென்று அங்குள்ள புரட்சியாளர்களோடு சேர்ந்துகொள்கிறான். இதுதான் பாரதி எழுதிய முதல் கதை. தமிழ் இலக்கியத்திற்கும் அது தான் முதல் கதை. அந்தக் கதை தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை பற்றியதாக இருந்தது.

மகாத்மா காந்தியும் அவரது தலைமையிலான சுதந்திரப் போராட்டமும் நவீன தமிழ் இலக்கியத்தைப் பாதித்தன. நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளான அ.மாதவய்யா, புதுமைப் பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா எல்லோருமே தம் எழுத்துக்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் துயரங்களையும் அவர்களுக்கு சமூகம் இழைத்து வரும் அவமதிப்பையும் பற்றிப் பேசினர்.

great-modern-tamil-writers

இவர்களில் அனேகமாக அனைவரும் பிராமணர். புதுமைப்பித்தன் உயர்குல பிள்ளைமார் குலத்தவர். எனவே அவர்கள் எழுத்து சமூகத்தில் காணும் அனுபவத்தின் பார்வையாளராகத் தான் இருக்கும். ஆனால் அவரகள் பேசிய அந்த அவலம் அவர்களது அனுபவத்தில் சேர்ந்ததே. அப்பாற்பட்டதல்ல. அவர்கள் காலத்திய தலித்துகளின் அவல நிலை, அவர்கள் கதை எழுதுவதற்கான வெறும் கதைப் பொருள் மாத்திரமாகவோ அல்லது கோஷ அட்டைகள் தாங்கி அணிவகுத்துச் செல்வதற்கான விஷயமாகவோ மாத்திரம் இருக்கவில்லை

தமிழ் நாட்டின் இடது சாரி, அல்லது திராவிட கழக சித்தாந்திகளுக்கும், எழுத்தாளர்களுக்கும், அவர்கள் பேசிய பிரச்சினைகள் வெறும் கோஷங்களாகவே எழுந்து அங்கேயே தங்கிவிட்டன. கழக எழுத்தாளர்களுக்கு பிராமணர்களைச் சாடுவது மாத்திரமே சாதி ஒழிப்பாகியது. சமூக நீதியாகியது. கழகத்தவர்கள் சாதி ஒழிப்பில், சாதி விடுதலையில் தலித்துகளைப் பற்றிய சிந்தனையே இல்லாததால் அவர்கள் கணக்கில் அவர்கள் இடம்பெற் வில்லை. முற்போக்கு எழுத்தாளர்களின் எழுத்துக்களில் தலித்துகள் இடம் பெற்றால் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தில் ஜாதி வேற்றுமைகள் இருந்த இடம் தெரியாது தாமே மறைந்துவிடும் என்ற கொள்கை ஆக்கிரமித்துக் கொண்டது. இது இடது சாரி முற்போக்கு எழுத்தாளர்களுக்கு அவர்களுக்கு வழிகாட்டியாக கட்சி கொடுத்த கொள்கை. தமிழ் வாழ்க்கை கொடுத்த அனுபவம் அல்ல. அவர்கள் எல்லா எழுத்துக்களிலும், முன்னரே வார்க்கப்பட்டது போன்ற சம்பவங்களும் பாத்திரங்களும், அவர்கள் முன் எதிர்ப்படும் போராட்டங்களும் அப்போராட்டங்களை எதிர்கொண்டு பெறப்படும் தீர்வுகளும், கட்சியின் கட்டளையிட்ட கட்டத்தில் அடங்கிய சித்தாந்த வாய்ப்பாடு தந்தவையாக இருக்கும். அதனால் தான் இடது சாரிக் கட்சிகள் தோன்றிய இந்த கிட்டத்தட்ட 80 வருட கால கட்டத்தில் ஏதும் இலக்கியம் என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எழுத்து ஏதும் முற்போக்கு எழுத்தாளர்களிடமிருந்து வந்ததில்லை. அவர்களது சித்தாந்தமும் தமிழ் மண்ணில் வேர் கொண்டதுமில்லை.

இது தமிழ் நாட்டை மாத்திரம் பொருத்த உண்மையல்ல. இந்திய நாட்டின் பரப்பு முழுதிலுமே இடது சாரிகளைப் பொறுத்த வரையில் அவர்களது சித்தாந்தமும் வேர் கொள்ளவில்லை. அவர்கள் கொடுத்த சித்தாந்தமும் ஏதும் இலக்கியத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்ததில்லை. அது மட்டுமல்ல. அவர்களது 80 வருடங்களூக்கும் மேலாக நீட்சி கொண்ட அவர்களது அனைத்துத் தரப்பு போராட்டங்களும், பிரசாரங்களும் இந்த சமூகத்தின் ஜாதீய கட்டமைப்பை ஏதும் செய்து விடமுடியவில்லை. கழகங்களின் சாதி ஒழிப்பும், இதே கதியைத் தான் எதிர்கொண்டு வருகிறது. காரணம், அவர்களது சாதி ஒழிப்பு பிராமணர்களைச் சாடுவது என்ற அளவிலேயே நின்றதே ஒழிய சாதி ஒழிப்பு என்ற சிந்தனையே அவர்கள் திட்டத்தில் இருந்ததில்லை. முதலும் முடிவுமாக, பிராமண துவேஷம் தான் சமூக நீதி, சாதி ஒழிப்பு என்றெல்லாம் ஒப்புக்கொள்ளப்படும் கௌரவ போர்வை போர்த்திக்கொண்டது இதில் ஏமாந்தது தலித்துகள். அவர்கள் பிராமணர் அல்லாதார் என்ற கட்டமைப்பில் வாயடைக்கப் பட்டனர், நைச்சியமாக. இதன் விளைவு தலித்துகள் இன்னும் மோசமாக ஏமாற்றப்பட்டனர். மோசமாக அல்ல, பயங்கரமான விளைவுகளுக்காளாயினர். எண்ணற்ற சாதி அமைப்புகள் தோன்றி அந்தந்த சாதி ரீதியிலான பலப்படுத்தலும், தங்கள் உரிமை வலியுறுத்தலும் தான் தமிழ் சமூகத்துக்கு கழகத்தின் கொடையும் தொடர்ந்து தரும் பங்களிப்புமாக இருந்து வருகிறது. இதனால் கொடுமைப் படுத்தப் படுவது என்னவோ தலித் மக்கள் தான். இப்போது தலித் சமுகத்தின் மீது பயங்கர வன்முறை பல வடிவங்களில் கட்டவிழ்த்தப்பட்டு வருகிறது. கொலை, குடிசைக்குத் தீவைப்பு இத்யாதி.

அதிலும் சுதந்திரத்திற்குப் பிறகு நூற்றுக் கணக்கில் சாதிக் கலவரங்கள் வெடித்து, தலித்துகள் வாழும் குடிசைகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. தலித் குடும்பங்கள், பெண்களும், குழந்தைகளுமாக கொலை செய்யப்படுகின்றன அல்லது தீயில் பொசுக்கப்படுகின்றன.. இக்கலவரங்களில் தலித்துகளை கொடுமைப்படுத்துவது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக, அரசினால் பட்டியலிடப்பட்டு அரசின் ஆதரவு பெற்ற சாதிகளைச் சேர்ந்த மக்கள் தான். அவர்களுக்கு எதிராக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க தயங்குகிறது. கழகங்கள் தொடங்கிய சமூக நீதி எனப்பட்டதும் சாதி ஒழிப்பு எனப்பட்டதும், உண்மையிலேயே நீதியும் சாதி ஒழிப்புமாக இருந்திருப்பின், இந்த வன்முறைகள் நாளடைவில் குறைந்து வந்திருக்க வேண்டும். அல்லது அரசு உடன் தலையிட்டு இவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கவேண்டும். ஆனால் உண்மையில் இந்த சாதி ஒழிப்பு எனப்படுவதும், சமூக நீதி எனப்படுவதும் அதன் தொடங்கப் பட்ட தினத்திலிருந்தே, கிட்டத்தட்ட 80 ஆண்டு காலமாக, ஆயிரக்கணக்கில் பிரிவு படுத்தப்பட்டிரு8க்கும் ஜாதிகளுக்கு எதிராக அல்ல. அவையெல்லாவற்றையும் பிராமன்ணல்லாதார் என்ற ஒரே லேபிளில் அணி திரட்டி, பிராமணருக்கு எதிராக எழுப்பப்பட்ட துவேஷப் பிரசாரத்தின் முதலும் முடிவுமான நோக்கமே பிராமணரை அவர்கள் இருக்குமிடத்திலிருந்து கீழிறக்கி அதைத் தாம் கைப்பற்றுவது தான். ஆகவே, அதன் உண்மையான லட்சியத்தில் அவர்கள் வெற்றியடைந்தார்கள் தான். ஆனால் அவர்களின் உரத்த கோஷங்களில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லாததால் அவை கோஷங்களாகவே நின்றுவிட்டன. இப்போது தமிழ் சமூகத்தில் சுய ஜாதிப் பற்றும், ஜாதி வேற்றுமையும் முன் எப்போதையும் விட பலமடைந்திருப்பது மட்டுமல்லாமல் வன்முறையிலும் பற்றுக் கொண்டுள்ளது.

(தொடரும்…)

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

15 Replies to “தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 3”

  1. சாதி ஒழிப்பு என்னும் மாயையான ஒரு மாய மானை கையில் பிடித்துக்கொண்டு ஆட்டம் காட்டுகிற ஒரு கும்பல்தான் கழகங்கள். எந்தவொரு வன்முறை வெறியாட்டங்களும் தலித்துகளுக்கு எதிராக எந்தவொரு பிராமணர்களால் நடத்தப்பட்டதாக இதுவரை ஆவணங்கள் ஏதுமில்லை. ஆனால் பகுத்தறிவுக்கும்பல் பிராமணர்களை குறிவைத்தே தங்கள் அரசியல் வியாபாரத்தை(விபச்சாரத்தை) நடத்திக்கொண்டிருக்கின்றன.
    போர்க்குணம் கொண்ட சாதியாக பார்ப்பனர்கள் தங்களை எந்தவொரு காலக்கட்டத்திலும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயலவில்லை என்பதும் வரலாறு அறிந்தவர்கள் அறிவர். ஆனால் சிலர் அறிவு சார்ந்த வன்முறையினை பிராமணர்கள் உபயோகித்து மற்றவர்களை முன்னேறவிடாமல் தடுத்து விட்டதாகவும் அதனுடைய பின்விளைவே பார்ப்பன எதிர்ப்பு வலுவடைந்ததாக ஒரு வாதத்தை முன் வைக்கின்றனர். பார்பனர்களும் அதனை சரியான முறையில் எதிர்கொள்ளவில்லையா அல்லது முயலவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது ஒரு புதுவிதமான தீண்டாமை பரவிவருகிறது. அது அரசாங்கம் கொண்டாடும் பிற்பட்டவர்களை முன்னேற்றம் அடயச்செய்வதாய் கூறும் ரிசர்வேஷன் கொள்கை. அறிவுஜீவிகளும் தங்கள் பங்கிற்கு தலித் இலக்கியம் என கடை விரிக்கின்றனர். உண்மை எப்போது தன உருவத்தைக்காட்டும் என்பதை காலம்தான் காட்டவேண்டும்.

  2. பின்னூட்டமாக ஒரு வார்த்தை ” பாரதியாரைப் பற்றி வெளிவந்த அத்தனை புத்தகங்களிலும் மிகச் சிறியதும் என் அபிப்பிராயத்தில் மிக முக்கியமானதும் மனதை நேகிழ ததுவதும் ஆனா து யதுகிரி அம்மாள் தான் பத்து வயது சிறுமியாக பாரதியோடு பழகிய அனுபவங்களை பதிவு செய்துள்ள பாரதி நினைவுகள். பாரதி நினைவு தின வெளியீடாக எழுதக் கேட்டு எழுதியது. அச்சிலிருந்து புத்தகமாக வெளிவந்தபோது அதைப் பார்க்க அவர் இல்லை. நாம் எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று நான் சிபாரிசு செய்வேன்.

  3. இந்த பகுதியில் எனக்கு நிறைய உடன்பாடு உண்டு. திராவிட இயக்கம் அதிகாரத்தை பிராமணர்களிடமிருந்து மற்ற ஜாதிகளுக்கு மாற்றி இருக்கிறதே தவிர ஜாதி ஒழிப்பில் வெற்றி பெறவில்லை. ஜாதி ஒழிய வேண்டும் என்பதை விட பிராமணர் ஒழிய வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமோ என்று சில சமயம் தோன்றத்தான் செய்கிறது.

    பொதுவாக வட மாநிலங்களில் – குறிப்பாக cow belt என்று அழைக்கப்படும் உ.பி., ம.பி., பிஹார், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் – தமிழ் நாட்டில் இருப்பதை விட பல மடங்கு ஜாதிக் கொடுமைகள் நடப்பதையும், பிராதாரிகள் (biradaris) கையில் ஜாதி அடங்கிக் கிடப்பதையும் காண்கிறேன். இதற்கு காரணம் தமிழ் நாட்டில் திராவிட இயக்கம், மற்றும் ஈ.வெ.ரா. ஜாதி ஒழிப்பு ஜாதி ஒழிப்பு என்று – பேச்சளவில் மட்டுமே இருந்தாலும் – என்று இடைவிடாமல் சொல்லிக்கொண்டே இருந்ததுதானோ என்று எனக்கு தோன்றுகிறது. வட மாநிலங்களில் இப்படி சொல்லிக் கொண்டே இருந்தவர் எவருமில்லை, அதனால்தான் (பேச்சளவில் கூட) ஜாதி ஒழிய வேண்டும் என்ற பிரக்ஞை அங்கே குறைவாக இருக்கிறது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. வட மாநிலங்களில் நிறைய சுற்றிய பெரியவர் மலர்மன்னன், பெரியவர் வெ.சா. ஆகியோரும் இப்படி தமிழ் நாட்டில் ஜாதிக் கொடுமைகள் ஒப்பளவில் குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அப்படி குறைவாக இருக்கிறது என்று நினைத்தால் அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

    இதை உடன்பாடு இல்லாத பகுதி என்று கூட சொல்வதற்கில்லை. ஒரு observation என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

  4. அன்புள்ள ஸ்ரீ ஆர்.வி.,
    எனக்குத் தெரிந்து சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதற்கான பிரசாரமும் முயற்சிகளும் தமிழ் நாட்டில் சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொன்ன அவ்வையார் காலத்திலிருந்தே தொடர் நிகழ்வுகளாக நடைபெற்று வருகின்றன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் இந்த விஷயத்தில் தீவிரமாக இருந்து வந்துள்ளனர். ஸ்ரீ ராமானுஜரால் பெரும் சமூகப் புரட்சியையே முற்றிலும் அமைதியான வழியில் செய்ய முடிந்தது. காரணம் அரசியல் ரீதியாக அல்லாமல் ஆன்மிக முறையில் அவர் அதைச் செய்தார். 19 ஆம் நூற்றாண்டின் வள்ளலார் வரையிலும் ஆன்மிக முறையில் இது நடந்து வந்துள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் யாரேனுமொருவர் இதில் மிக மும்முரமாக இயங்கி வந்துள்ளார்.
    நான் அறிந்த வரையில் ஆர். எஸ். எஸ். பேரியக்கத்திலும், ஆரிய சமாஜத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் திராவிட இயக்கத்திலும் ஜாதி என்கிற பிரக்ஞையே காணப்பட்டதில்லை. பிற்காலத்தில் ஈ.வே.ரா. வின் பங்களிப்பாக பிராமண துவேஷம் ஆழ வேரூன்றியதால் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிராமணர்- பிராமணர் அல்லாதார் என்கிற பிரக்ஞை தோன்றிவிட்டது. வலதுசாரியை பிராமணர் அல்லாதார் பிரிவு என்றும் இடதுசாரியை பிராமணர் பிரிவு என்றும் சொல்வது வழக்கம். பிறகு பிராமணர் அல்லாதார் பிரிவில் அவரவர் ஜாதியுணர்வும் தலையெடுக்கலாயிற்று.

    எனக்கு நன்கு பரிச்சயமான தி.மு.கழகத்தில் 1967-ல் நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற ஒரு சிலரைத் தவிர யார் என்ன சாதி என்பதே தெரியாமல்தான் இருந்து வந்தது. ஒரு சுவாரசியமான விஷயம் சொல்கிறேன்:
    1967 தேர்தலில் தி. மு.க. அமோக வெற்றிபெற்று ஆட்சியையே கைப்பற்றி விட்டது. ராம. அரங்கண்ணல் சென்னை ம்யிலைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருந்தார். அண்ணாவின் திராவிட நாடு இதழில் பணியாற்றி நீண்ட நெடுங்காலம் அண்ணாவுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.
    மயிலையில் வெற்றிபெற்ற அரங்கண்ணலுக்கு யாதவர் சங்கம் என்கிற அமைப்பு பாராட்டுக் கூட்டம் நடத்தியது. அதைக் கேள்வியுற்ற அண்ணா, யார் என்ன சாதிங்கறதெல்லாம் இப்பத்தான் தெரிய ஆரம்பிக்குது என்றார்.

    ஆக சாதிகளின் புனரமைப்பும் அவற்றிடையே போட்டி பொறாமையுமே இப்போது நிகழ்ந்து வருகிறது. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடருமானால் போகப் போக இது மேலும் முற்றி பெரும் கலவரங்களில் முடிய வாய்ப்புள்ளது.

    நான் சொன்னதெல்லாம் எனக்குத் தெரிந்தவரையிலான தமிழ் நாட்டு நிலவரம். வட மாநிலங்களில் சாதிகளின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்கு தமிழ் நாட்டின் அளவுக்குப் பல நூற்றாண்டுத் தொடர் நிகழ்வு இருந்ததாகத் தெரியவில்லை. அவ்வப்போது ஆங்காங்கே பல ஆன்மிகவாதிகளும் சமூகநலத் தொண்டரும் இதில் ஈடுபட்டுள்ளனரேயன்றி ஒரு தொடர் நிகழ்வு தமிழ் நாட்டின் அளவுக்கு இல்லை என்றே கூறலாம்.

    திராவிட இயக்கத்தில் மாவட்டந்தோறும் இரண்டு நாள் மாநாடு வட்டச் சுழற்சியாய் நடந்துகொண்டேயிருக்கும். முதல் நாள் அரசியல் இரண்டாம் நாள் சமூக சீர்திருத்தம் என்று நடத்துவார்கள். சமூக சீர்திருத்த மாநாட்டில் சாதி ஒழிப்பைப்பற்றி அனைவரும் வாய் வலிக்க வலிக்கப் பேசுவார்களேயன்றி சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கும்வரை சாதிகள் நீடிப்பதை எப்படித் தவிர்க்க முடியும் என்பத்ற்கு அறிவுப்பூர்வமாக விடை கூற மாட்டார்கள்.

    சாதி அடிப்படையில் உடல் ரீதியாகவும் மன் ரீதியாகவும் கொடுமைக்குள்ளாவோர் தாழ்த்தப்பட்ட பிரிவினர்தான். இவர்களைப்பற்றி திராவிட இயக்கம் கவலைப்பட்டதில்லை. எனவே சாதியின் பெயரால் கொடுமைப் படுத்தும் நிகழ்வுகள் குறிப்பாகத் தென் மாவட்டங்களில் வட மாநிலங்களுக்கு இணையாக மிக அதிகமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

    குறிப்பாகக் கொடுமைகளை முன்வைத்துத் தாழ்த்தப்பட்டோருக்காகக் குரல் கொடுத்தும் களத்தில் இறங்கி வேலை செய்தும் தொண்டாற்றியது காங்கிரஸ் பேரியக்கம் காந்திஜியின் குரலுக்குக் கட்டுபடத்தொடங்கியபின் உருவான ஹரிஜன சேவை மனப்பான்மைதான். வேறு எங்கேயும்விடத் தென் மாநிலங்களில் இது தீவிரமாக நடைபெற்றது. தமிழ் நாட்டில் இந்தப் பணியில் பிராமணர்களின் எண்ணிக்கை மிகவும் கூடுதல்! திராவிட இயக்கத்தவர் இம்முயற்சியில் இறங்கியதில்லை.

    தமிழ் நாட்டுடன் ஒப்பிடுகையில் வட மாநிலங்களில் அவரவர் சாதியைப் பற்றிய அபிமானமும் பெருமிதமும் அதிகம் காணப்படுவது உண்மையே. தமிழ் நாட்டில் சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுணர்வு வெளிப்படையாகத் தெரியவராத நிலவரத்திற்குப் பல காரணிகள் உள்ளன. அவற்றுள் திராவிட இயக்கப் பிரசாரமும் ஒன்று எனக் கொளலாம். ஆக, தமிழ்ச் சமூகத்திலும் அவரவருக்கும் சாதியுணர்வு உள்ளுக்குள் இருந்துகொண்டுதானிருக்கிறது. அவ்வப்போது சில சிறு குழுவினர் என்னைப் பேசச் சொல்லி அழைப்பதுண்டு. சில சமயம் இந்தச் சாதி அமைப்புபற்றியும் என்னிடம் கேட்பார்கள். சாதிகளிடையே ஏற்றத் தாழ்வுகள்தான் இருத்தலாகாது, ஜாதிகள் ஏதேனும் ஒரு வடிவில் இருந்துகொண்டு தானிருக்கும். ஒவ்வொரு சாதிக்கும் சில பிரத்தியேக கலாசார அடையளங்கள் அனுபவித்து மகிழத்தக்க அளவில் இருப்பதுண்டு. அவற்றுக்காக சாதி அமைப்பைப் பாராட்ட வேண்டும் என்பேன்.
    -மலர்மன்னன்

  5. RV
    பூசி மெழுகுதல் என்பது இது தானா? பெரியார் பிரச்சாரம் பலனளித்ததாக உங்களுக்குத் தோன்றினால் தயக்கமின்றி அதை முன் வையுங்கள். உங்களுக்குப் பதிலெழுத எதுவாகவிருக்கும்.

  6. திரு RV அவர்களே

    நீங்கள் சொன்னதை சற்று மாத்தி எழுதினால் விடை கிடைக்கும்

    //
    உ.பி., ம.பி., பிஹார், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் – தமிழ் நாட்டில் இருப்பதை விட பல மடங்கு ஜாதிக் கொடுமைகள் நடப்பதையும்,
    //

    உ.பி., ம.பி., பிஹார், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் – தமிழ் நாடு, கேரளா, கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருப்பதை விட பல மடங்கு ஜாதிக் கொடுமைகள் நடப்பதையும்

    cow belt டில் கொடுமைகள் அதிகம் இருப்பது ஒரு econmist பார்வையில் பார்த்தால் அது கல்வி அறிவும் பொது அறிவும் எங்கெல்லாம் குறைவாக உள்ளதால் தான் என்பது தெரிகிறது

  7. மலர்மன்னன் அவர்கட்கு
    வாக்காளர்களையும் வேட்பாளர்களையும் சாதி பாராமல் தி மு க அரசியலைத் துவங்கிற்று என்றா சொல்கிறீர்கள்? சாதி அடையாளங்கலேத் தெரியாமல் கட்சி நடத்திவிட்டு தேர்தலில் திடீரென சாதியை பயன்படுத்தினார்களா?
    தி மு க மட்டுமென்ன காங்கிரஸ் கூட சாதி அடிப்படையிலேயே வேட்பாளர் தேர்வு செய்து வந்துள்ளது. மேடையில் சாதி ஒழிப்பு பேச்சும் தேர்தலில் சாதி அரசியலும் சாதி அமைப்பிற்கு சாகா வரமளித்துவிட்டன.
    தனி மனித ஒழுக்கம் சார்ந்த மாறுதலிற்கு அறைகூவல் விடுத்தீர்கள். மெத்த சரி. அது ஓன்று தான் வழி என்றாலும் கைக்கொள்ள கடினமாகத்தான் உள்ளது.

  8. இடஒதுக்கீடே இல்லை என்றாலும் நமது சமுதாயத்தில் ஜாதிகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அதை எவராலும் முற்றிலுமாக அழிக்க முடியாது. ஒவொரு ஜாதியினரும் தங்களது ஜாதியின் பெருமையைப் பேசிவருகின்றனர். ஒவ்வொரு ஜாதியிலும் எத்தனையோ நல்ல பாரம்பரியம் தொடர்ந்து வருகின்றது. ஜாதி ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்படவேண்டும். அதற்கான முயற்சி எடுத்தால் வெற்றி கிடைக்கும். அம்முயற்சியை இன்று நாடெங்கிலும் ஆர்எஸ்எஸ் இயக்கம் மட்டும்தான் செய்து வருகிறது. ஜாதியை ஒழிப்பேன் என்பதை எந்த ஜாதியினரும் ஆதரிப்பதில்லை. ஜாதி வேற்றுமைகள் பார்ப்பது தவறு என்று சொன்னால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றனர். ஜாதியைப் பற்றி பேசிடாமல் ஹிந்துப் பண்பாடு, ஹிந்து கலாசாரம், தேசபக்தி போன்ற உயர்ந்த விஷயங்களை மக்களிடம் எடுத்துவைப்பதன் மூலம் அனைத்து ஹிந்துக்களையும் ஜாதி உணர்வுகளுக்கு அப்பால் ஓரணியில் ஆர்எஸ்எஸ் இயக்கம் இணைத்து வருகிறது. அது மேலும் வலுப்படவேண்டும்.

    வித்யா நிதி

  9. //சாதி அடிப்படையில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைக்குள்ளாவோர் தாழ்த்தப்பட்ட பிரிவினர்தான். இவர்களைப்பற்றி திராவிட இயக்கம் கவலைப்பட்டதில்லை – மலர்மன்னன்//

    இதைவிட வெளிப்படையாக எப்படிச் சொல்ல வேண்டும்?
    தேவையின்றி எதுவும் நிகழ்வதில்லை; திராவிட இயக்கமும் அவ்வாறன ஒன்று. எதுவுமே நூற்றுக்கு நூறு நன்மையாகவோ தீமையாகவோ இருப்பதில்லை, விகிதாசாரம் பார்த்தே நன்மை செய்ததா தீமை விளைவித்ததா என முடிவு செய்ய வேண்டும் என்பதை நான் பல சந்தர்ப்பங்களில் எழுதியும் சொல்லியும் வந்துள்ளேன்

    எந்த சபையாக இருப்பினும் பூசி மெழுகாமல் மிகவும் வெளிப்படையாக எழுதுவதையும் பேசுவதையும் சுபாவமாகவே வழக்கமாகக் கொண்டிருப்பதால்தான் நான் யாருக்குமே வேண்டாதவானாகிப் போனேன்!

    //வாக்காளர்களையும் வேட்பாளர்களையும் சாதி பாராமல் தி மு க அரசியலைத் துவங்கிற்று என்றா சொல்கிறீர்கள்?-ஸ்ரீ ராம்கி//

    நாடு குடியரசான பிறகு முதன் முதலாக நடந்த 1952 தேர்தலின்போது தமிழ் நாட்டில் முதல் முதலில் பணபலம், ஜாதி ஆகியவற்றின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, தேர்த்லில் போட்டியிட இவற்றையே முக்கிய யோக்கியதாம்சங்களாகச் செய்துவிட்டவர் காமராஜர்.

    1957, 1962, 1967 ஆகிய தேர்தல்களில் ஜாதி அடிப்படையிலோ பண வசதியைக் கருத்தில்கொண்டோ தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை. 1967-ல் சில தொகுதிகளில் தற்சயலாக அவ்வாறு நிகழ்ந்திருக்கலாம். ஆனால் வேட்பாளர் தேர்வுக்கு அவை காரணமாக இருக்கவில்லை( இம்மூன்று தேர்தல்களின்போதும் அண்ணாவை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தேன். 1957-லோ பெரும்பாலும் அவருடனேயே இருந்தேன்). உதாரணமாக விருதுநகர் தொகுதியில் கிட்டத்தட்ட நாடார்களுக்குச் சமபலமாக நாயுடு சமூகத்தவர் உள்ளனர். காமராஜ நாடாரை எதிர்த்துப் போட்டியிட்ட பெ.சீனிவாசன், நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் அதற்காக அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

    // இடஒதுக்கீடே இல்லை என்றாலும் நமது சமுதாயத்தில் ஜாதிகள் இருந்து கொண்டுதான் இருக்கும்- ஸ்ரீ வித்யாநிதி//

    இது தெரிந்த விஷயம்தானே! இட ஒதுக்கீடு இல்லாத முற்காலங்களிலும் ஜாதி இருந்துகொண்டுதானே இருந்தது. ஆனால் இட ஒதுக்கீடு திட்டத்தால் ஜாதி உணர்வு முன்னெப்போதையும்விடத் தீவிரமாக உள்ளது. இன்று சங்கம் வைத்துக்கொள்ளாத ஜாதி ஏதும் உள்ளதா? முன்பெல்லாம் ஒருசில ஜாதிகளே முக்கியமாகத் தமது சமூகத்தினரின் பொருளாதாரப் பாதுகாப்புக்காக அறக்கட்ட்டளை போன்ற அமைப்புகளை வைத்திருந்தன. இன்று தேர்தலில் போட்டியிட தொகுதிகள் வேண்டி பேரம் பேசவும் இட ஒதுக்கீட்டில் கூடுதல் சதவீதம் பெறவும் ஜாதிகள் சங்கங்கள் நடத்துகின்றன. ஜாதி என்கிற அமைப்பு ஒற்றுமைக்குக் குந்தகம் இல்லாதவாறு இருக்கதான் முயற்சி எடுக்க வேண்டும். உண்மையைச் சொல்வதானால் ஜாதி என்கிற அமைப்பு இருப்ப்பதால்தான் ஹிந்துஸ்தானம் ஒட்டு மொத்தமாக முகமதியத்துக்கோ கிறிஸ்தவத்திற்கோ மாறாமல் இருந்து வருகிறது.

  10. இன்றைய தினம் சாதி அடிப்படையில் வளம் பொருந்தியவர்கள், ஒடுக்கப் பட்ட மக்களின் வாயில் பீ திணிக்கும் செயல் இந்தியாவில் எங்கு நடை பெறுகிறது என்றால் அது தமிழ் நாட்டில் தான்.

    திண்ணியத்தில் மனிதரின் வாயில் மனிதரே பீ திணிக்கவில்லையா? மதுரையில் ஒரு வழக்கறிஞருக்கு கூட அந்த கொடுமை நடை பெற்றதாக் செய்தி படித்தேன்.

    cow belt வட இந்தியாவில் தான் ஒடுக்கப் பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்மணி செல்வி. மாயாவதி முதல் அமைச்சராக இருக்கிறார். அதோடு ஒடுக்கப் பட்ட சமுதாயத்தை சேர்ந்த பலரையும் அவர் அமைச்சர் ஆக்கினார்.

    தமிழ் நாட்டில் தலைவனோ, தலைவியோ பார்த்து ஏதோ ஒரு அமைச்சராக வைத்தால் தான் உண்டு.

    பகுத்தறிவு பகலவன் தன்னுடைய இயக்கத்திற்கு ஒரு நாளாவது, ஒடுக்கப் பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் தலைவராக இருக்கட்டும் என்று விட்டுக் கொடுத்தாரா? பெரியார் தான் செல்வாக்கு பெற பார்ப்பனர்களின் மீதும், இந்து மதத்தின் மீதும் வெறுப்புணர்ச்சியைக் கக்கியதுதான் அவர் செய்தது.

    சமூக நீதி குமாஸ்தா வேலைக்கும், பொறியாளர் வேலைக்கும் மட்டும்தானா? ஒடுக்கப் பட்ட சமுதாயத்தை சேர்ந்தவருக்கு முதல்வர் பதவியை தராமல் கடந்த இருபது ஆண்டுகளாக இரண்டே இரண்டு பெற மாறி மாறி முதல்வராக இருப்பது ஏன்? முதல்வர் பதவி, அமைச்சர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்.

    ஒருவர் அதிக பட்ச நிலம் வைக்க நில உச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்தது போல ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் நாட்டிலே அதிக பட்சம் இத்தனை அமைச்சர் பதவிதான் வகிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

  11. \\\\\\\\\குறிப்பாக cow belt என்று அழைக்கப்படும் உ.பி., ம.பி., பிஹார், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் – தமிழ் நாட்டில் இருப்பதை விட பல மடங்கு ஜாதிக் கொடுமைகள் நடப்பதையும், பிராதாரிகள் (biradaris) கையில் ஜாதி அடங்கிக் கிடப்பதையும் காண்கிறேன். இதற்கு காரணம் தமிழ் நாட்டில் திராவிட இயக்கம், மற்றும் ஈ.வெ.ரா. ஜாதி ஒழிப்பு ஜாதி ஒழிப்பு என்று – பேச்சளவில் மட்டுமே இருந்தாலும் – என்று இடைவிடாமல் சொல்லிக்கொண்டே இருந்ததுதானோ என்று எனக்கு தோன்றுகிறது. வட மாநிலங்களில் இப்படி சொல்லிக் கொண்டே இருந்தவர் எவருமில்லை, அதனால்தான் (பேச்சளவில் கூட) ஜாதி ஒழிய வேண்டும் என்ற பிரக்ஞை அங்கே குறைவாக இருக்கிறது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு.\\\\\\\\\\\\\\\

    அப்படியா?

    \\\\\\\\இதற்கு காரணம் தமிழ் நாட்டில் திராவிட இயக்கம், மற்றும் ஈ.வெ.ரா. ஜாதி ஒழிப்பு ஜாதி ஒழிப்பு என்று – பேச்சளவில் மட்டுமே இருந்தாலும் – என்று இடைவிடாமல் சொல்லிக்கொண்டே இருந்ததுதானோ என்று எனக்கு தோன்றுகிறது. வட மாநிலங்களில் இப்படி சொல்லிக் கொண்டே இருந்தவர் எவருமில்லை\\\\\\\

    இதுவரை சரி ஆனால் இதற்கு மேல் பிழை.

    வட மாநிலங்களில் இப்படி சொல்லிக் கொண்டே இருந்தவர் எவருமில்லை. காரியத்தில் இறங்கி ஆகவேண்டியதை கவனித்தவர்களூம் அங்கே உண்டு. இன்றைய தேதியில் நிரபராதியை கழுவிலேற்றி குற்றவாளிகளுக்கு பட்டுக்குல்லா சார்த்தி ப்ரச்சினையில் குளிர் காயும் பணியை உகப்புடன் நடாத்துவது தமிழகம் மட்டுமே.

    ஒரு சதாப்திக்கு முன் வரை ஹிந்துஸ்தானத்தில் காலைக்கடன் கழிப்பது என்பது வீட்டுக்கு வெளியே தானென்றிருந்தது. நகரம் என்னும் நரகம் உருவான பின் வீட்டிற்குள்ளேயே காலைக்கடன் கழிப்பது துவக்கமாகியது. விக்ஞான முன்னேற்றம் குறைவான சமயமாதலால் கழிவகற்றும் வசதிகள் ஏதும் இல்லாததாலும் மனிதர்களைக் கொண்டு மனித கழிவு அப்புறப்படுத்துதல் எனும் ஈனமான பழக்கம் துவங்கியது. பிழைக்க வேறு வழியில்லாத அப்பாவி மக்கள் பிழைக்க வேண்டி இந்த காரியத்தையும் செய்ய தயாரானார்கள். மனித மலத்தை கூடையில் சுமந்து ஊருக்கு வெளியே அப்புறப்படுத்தும் முறை துவங்கியது. அடுத்தவன் மலத்தை சுமக்கும் சுமையுடன் தாழ்ந்த ஜாதி என்னும் புதிய சுமையையும் சுமக்க ஆரம்பித்தனர் வாலிமீகி மகரிஷியின் சந்ததியினர் என அறியப்படும் மக்கள். எழுபதுகளில் தமிழகத்தில் கூட பல இடங்களில் இந்த முறை இருந்தது எனக்கு நினைவில் உள்ளது.

    ஸ்ரீ பிந்தேஷ்வர் பாடக் என்னும் வடக்கத்திய ப்ராம்மணர் தன் வாழ்க்கையையே இந்த சமூஹத்தினரின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்துள்ளார். தேசம் முழுக்க ஸுலப் ஸௌசாலய் என்னும் நவீன கழிப்பறைகளைக் கட்டி இந்த மக்களைக் கொண்டே அவற்றை நிர்வாகமும் செய்யும்படி புதிய துவக்கத்தினை உண்டு செய்தார். ஹிந்து ஸமுதாயத்தின் ஆதார புருஷனான ராம கதையை எழுதியவரின் சந்ததிகள் தங்கள் வாழ்க்கையில் விடிவு பெற ஆரம்பித்தனர். இந்த நல்ல துவக்கத்தால் அடுத்த சந்ததிகள் பள்ளியில் படித்து இன்று நல்ல உத்யோகத்தில் கூட உள்ளனர். இவர்கள் ராமாயணத்தில் நல்ல ஞானம் உள்ளவர்கள். ராம நவமியையும் வால்மீகி ஜெயந்தியையும் விமர்சையாக கொண்டாடுகிறார்கள். ராம கதையை விவரிக்கும் படி குழந்தைகளை அலங்காரம் செய்து ஊர்திகளில் ஏற்றி ஜாங்கி எனும் விம்ர்சையான ஊர்வலம் நடத்துகிறார்கள்.

    ஹிந்துஸ்தானத்திலேயே முதன் முறையாக ஒரு தலித் முக்யமந்த்ரி பொருப்பேற்றது வடக்கிலே தான். உ.பி யின் முக்யமந்த்ரி ஸஹோதரி.மாயாவதி இந்த பெருமைக்கு சொந்தக்காரர். தக்ஷிண பாரதத்தில் தலித்களை பகடைக்காய்களாக உபயோகிக்கிறார்கள். அதே சமயம் உத்தர பாரதத்தில் இன்னமும் மிகப்பல இடங்களில் தலித்துகள் ஹிம்ஸிக்கப் படுகிறார்கள் என்பதும் உண்மை.

  12. // ஸ்ரீ பிந்தேஷ்வர் பாடக் என்னும் வடக்கத்திய ப்ராம்மணர் தன் வாழ்க்கையையே இந்த சமூஹத்தினரின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்துள்ளார். தேசம் முழுக்க ஸுலப் ஸௌசாலய் என்னும் நவீன கழிப்பறைகளைக் கட்டி இந்த மக்களைக் கொண்டே அவற்றை நிர்வாகமும் செய்யும்படி புதிய துவக்கத்தினை உண்டு செய்தார். //

    முற்றீலும் தவறான தகவல்..

    திரு பாடக் சுலப் பொதுக் கழிப்பறைகளை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகத் தொடங்கி நடத்தி வருபவர். அது ஒரு *சுகாதார* இயக்கம் மட்டுமே. அதற்கும் தலித்துகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உலக சுகாதார நிறுவனம் (WHO) கூட சுலப் இயக்கத்தைப் பாராட்டி அங்கீகரித்துள்ளது.

    தங்கள் ஊர்களில் சுலப் பொதுக்கழிப்பறைகளை விருப்பப் படுபவர்கள் யார் வேண்டுமானாலும் sponsor செய்யலாம், எடுத்து நடத்தலாம், அதில் வரும் வருமானத்தைக் கொண்டு மேலும் கழிப்பறைகளைக் கட்டலாம்.. அது ஒரு லாபநோக்கற்ற franchise முறை போல இயங்குகிறது. தில்லி ரயில்வே ஸ்டேஷன் சுலப் கழிப்பறைகளை பூணூல் அணிந்த ஏழைப் பிராமணர்கள் தான் கவனித்துக் கொள்கிறார்கள் என்று அங்கு போய்வந்த நண்பர் ஒருவர் சொன்னார்.

    ஒரு நல்ல விஷயத்தை நீங்கள் சொல்ல வந்து “பிராமணர் தலித் மக்களை சிஸ்டமேட்டிக்காக கழிப்பறை பணியில் ஈடுபடுத்துகிறார்” என்ற எண்ணம் உருவாக்கும்படியாக அமைந்து விட்டது.. கவனமாக எழுதவும்.

  13. அன்புள்ள மலர்மன்னன்,

    // எனக்குத் தெரிந்து சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதற்கான பிரசாரமும் முயற்சிகளும் தமிழ் நாட்டில் சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொன்ன அவ்வையார் காலத்திலிருந்தே தொடர் நிகழ்வுகளாக நடைபெற்று வருகின்றன. // இது ஒரு digression. ஆனால் அதே அவ்வையார்தான் குலத்தளவே ஆகுமாம் குணம் என்றும் பாடியதாக சொல்கிறார்கள்.

    // நான் அறிந்த வரையில் ஆர். எஸ். எஸ். பேரியக்கத்திலும், ஆரிய சமாஜத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் திராவிட இயக்கத்திலும் ஜாதி என்கிற பிரக்ஞையே காணப்பட்டதில்லை. பிற்காலத்தில் ஈ.வே.ரா. வின் பங்களிப்பாக பிராமண துவேஷம் ஆழ வேரூன்றியதால் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிராமணர்- பிராமணர் அல்லாதார் என்கிற பிரக்ஞை தோன்றிவிட்டது. வலதுசாரியை பிராமணர் அல்லாதார் பிரிவு என்றும் இடதுசாரியை பிராமணர் பிரிவு என்றும் சொல்வது வழக்கம். பிறகு பிராமணர் அல்லாதார் பிரிவில் அவரவர் ஜாதியுணர்வும் தலையெடுக்கலாயிற்று. // திராவிட இயக்கத்தையும் இங்கே கவனிக்காமல் சேர்த்துவிட்டீர்களோ? இல்லை அண்ணாவுக்கு ஜாதி பிரக்ஞை இருந்ததில்லை என்று சொல்ல வருகிறீர்களா? ஈ.வே.ரா.வுக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் என்ன தொடர்பு? ஈ.வெ.ரா. கம்யூனிஸ்ட்களை எதிர்த்தவர் என்றல்லவோ கேள்வி? இது போன்ற விஷயங்களை தெரிந்தவர்கள் உங்களைப் போன்ற வெகு சிலரே, முடிந்தால் கொஞ்சம் விளக்குங்களேன்!

    // ஒரு தொடர் நிகழ்வு தமிழ் நாட்டின் அளவுக்கு இல்லை என்றே கூறலாம். // எனக்கு தொடர் நிகழ்வு தமிழ் நாட்டிலும் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது. ராமானுஜர் 12 -ஆம் நூற்றாண்டு என்கிறார்கள். சாரங் சொல்வது போல படிப்பறிவு இதை விட முக்கியமான காரணமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறேன். ஆனால் படிப்பறிவு எல்லா (தென்) மாநிலங்களிலும் ஒரே மாதிரி வேலை செய்யவில்லை என்பதும் உண்மை…

    // தமிழ் நாட்டில் சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுணர்வு வெளிப்படையாகத் தெரியவராத நிலவரத்திற்குப் பல காரணிகள் உள்ளன. அவற்றுள் திராவிட இயக்கப் பிரசாரமும் ஒன்று எனக் கொளலாம். // அதைத்தான் நானும் கேட்டேன். உங்கள் கருத்தோடு சில சமயமாவது ஒத்துப் போவது மகிழ்ச்சி!

    // சாதிகளிடையே ஏற்றத் தாழ்வுகள்தான் இருத்தலாகாது, ஜாதிகள் ஏதேனும் ஒரு வடிவில் இருந்துகொண்டு தானிருக்கும். ஒவ்வொரு சாதிக்கும் சில பிரத்தியேக கலாசார அடையளங்கள் அனுபவித்து மகிழத்தக்க அளவில் இருப்பதுண்டு. அவற்றுக்காக சாதி அமைப்பைப் பாராட்ட வேண்டும் என்பேன். // மிகவும் சரி!

    // தேவையின்றி எதுவும் நிகழ்வதில்லை; திராவிட இயக்கமும் அவ்வாறன ஒன்று. எதுவுமே நூற்றுக்கு நூறு நன்மையாகவோ தீமையாகவோ இருப்பதில்லை, விகிதாசாரம் பார்த்தே நன்மை செய்ததா தீமை விளைவித்ததா என முடிவு செய்ய வேண்டும். // பெரியவர் பெரியவர்தான்! மிகவும் சரி!

    // எந்த சபையாக இருப்பினும் பூசி மெழுகாமல் மிகவும் வெளிப்படையாக எழுதுவதையும் பேசுவதையும் சுபாவமாகவே வழக்கமாகக் கொண்டிருப்பதால்தான் நான் யாருக்குமே வேண்டாதவானாகிப் போனேன்! // தவறாக சொல்கிறீர்கள். பல விதங்களில் உங்களோடு மாறுபடும் நான் உங்களை மதிக்க முதல் காரணமே நீங்கள் அப்படி வெளிப்படையாக பேசுவதும் எழுதுவதும்தானே! என்னைப் போன்ற அநேகம் பேர் மதிப்பவர் நீங்கள்.

    // நாடு குடியரசான பிறகு முதன் முதலாக நடந்த 1952 தேர்தலின்போது தமிழ் நாட்டில் முதல் முதலில் பணபலம், ஜாதி ஆகியவற்றின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, தேர்த்லில் போட்டியிட இவற்றையே முக்கிய யோக்கியதாம்சங்களாகச் செய்துவிட்டவர் காமராஜர். // காமராஜா இப்படி? நம்பவே முடியவில்லையே! இன்னும் விவரமாக எழுதுங்களேன்!

  14. ஸ்ரீ ஜடாயு, நமஸ்தே

    \\\\பூணூல் அணிந்த ஏழைப் பிராமணர்கள் தான் கவனித்துக் கொள்கிறார்கள் என்று அங்கு போய்வந்த நண்பர் ஒருவர் சொன்னார். \\\\ உண்மையான மற்றும் நான் அளிக்க மறந்த தகவல்.

    தவறான ஒரு பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு மக்கள் ஸமூஹத்தை விடுவிக்க ஸ்ரீ பாடக் அவர்கள் எடுத்த முயற்சி ஸுலப் ஸௌசாலய். துவக்கத்தில் இந்த முயற்சியின் முதல் பயனாளிகள் தவறான பணியில் ஈடுபடுத்தப்பட்ட மக்கள். பின்னர் ப்ராம்மணர் உட்பட ஸமூஹத்தின் அனைத்து பிரிவினரும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது விஷயம்.

  15. ஸ்ரீ ஆர்.வி., என்னை மிகவும் வேலை வாங்குகிறீர்கள். எழுத்தே தொழில், அதுவே வருவாய்க்கு வழி என்று இருப்பவன் நான் (பெரிய பத்திரிகைகள் எனக்கு ஹிந்துமத வெறியன் என்கிற முத்திரை குத்தி சாதிப் பிரஷ்டம் செய்து விட்டதால் வருவாயும் மிக மிகக் குறைவே!). மேலும் தேய்மானம் மிகுந்துவிட்ட கருவியைத் தூக்கி எறிந்துவிடலாமா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கருவியைக் கடுமையாக வேலை வாங்கும் விதமாக நிறைய விவரங்களை எதிர்பார்க்கிறீர்கள். மட்டுமல்ல, நீங்கள் கேட்பவையெல்லாம் நான் ஏற்கனவே பல கட்டுரைகளில் சொன்னவையும்தாம்.

    1. குலம் வேறு, சாதி வேறு. குலம் என்பது தனி நபர், தனிப் பரம்பரை சார்ந்தது. அது தலைமுறை தலைமுறையாக வரும் ஒரு குடும்பச் சங்கிலி. குலத்திலும் இன்னும் உள்ளே போனால் கோத்திரம் என்கிற உட்பிரிவு வரும். சாதி என்பது ஒரு சமூகக் குழு. இது ஒரு கணிதம் போல.

    2. ஈ.வே.ரா. அவர்களிடம் யார் முதன் முதலில் அறிமுகம் ஆனாலும் அவரது முதல் கேள்வி, என்ன சாதி என்பதாகவே இருக்கும். இதனால் அவர் சாதி உணர்வுக்கு முதலிடம் கொடுத்தவர் என்பதல்ல. அது அந்தக் காலப் பழக்கம். இயல்பாகவே அம்மாதிரி கேள்வி எழுந்துவிடும். கவிஞர் சுரதாவை அறிந்தவர்கள் அவரிடம் இதே சுபாவம் இருந்ததை அறிவார்கள். (சுரதா ஈ.வே.ரா. வின் தீவிர ஆதரவாளர்!) ஈ.வே.ரா. வுக்கு பிராமண துவேஷம்தான் இருந்தது. தலித்துகள் மீதும் அதே அளவு வெறுப்பு இருந்தது. ஆனால் மற்ற சாதியினரை ஒட்டு மொத்தமாகத்தான் பார்த்தார். அவர்கள் மத்தியில் சாதி வித்தியாசம் பார்த்ததில்லை. திராவிடர் கழகத்தினரிடையேயும் இவ்வாறான போக்கே இருந்தது. சிதம்பரத்தில் கிருஷ்ணசாமி உடையார் என்கிற பெயரில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவர்தான் அங்கு திராவிடர் கழகத் தலைவர். தீவிர ஈ.வே.ரா. பக்தர். அவருடைய மகன் என் சினேகிதன். ஒருமுறை அவர் வீட்டுக்குச் சென்றிருந்த போது, தம்பீ இப்பல்லாம் நாங்க எங்க கிராமத்துக்குள்ள அக்ரகாரத்துல செருப்புப் போட்டுக்கிட்டு நெஞ்சை நிமித்திக்கிட்டுத்தான் போறோம், தெரியுமா? என்று பெருமிதத்துடன் என்னிடம் சொன்னார். ரொம்ப சந்தோஷம், அதே போல பள்ளு பறைகள் உங்க தெருக்கள்ள போய் வறாங்களா ஐயா என்று கேட்டேன். அதெப்படி தம்பி அவனுங்களை அப்படி வரவிட முடியும், கொழுப்பேறிடாதா என்றார். அப்போ நீங்க பெருமைப்பட்டுக்கறதுக்கு ஒண்ணுமில்லை என்றேன். போடா வெளியே என்றார்!

    மற்றபடி திராவிடர் கழகம் தி.மு.கழகம் ஆகியவற்றில் தொடக்க காலங்களில் யார் என்ன சாதி என்கிற பிரக்ஞை இல்லாமல்தான் இருந்தது.

    3. தொட்க்கத்தில் ஈ.வே.ரா. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்தான். தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னோடிகள் பலர் ஈ.வே.ரா.வுடன் இருந்தவர்கள்தாம். பழைய குடியரசு இதழ்களைப் படித்தீர்கள் எனில் கம்யூனிஸ்ட் சார்புக் கட்டுரைகள் பல அவற்றில் இடம்பெற்றிருப்பது தெரியவரும். எந்தவொரு விஷய்மாக இருந்தாலும் முழுமையாகத் தெரிந்துகொண்டு அதுபற்றிப் பேசுவதே முறை. முழுமையாக முடியாவிடினும் பரிச்சயமாவது இருத்தல் அவசியம். இல்லேயே சந்தேகம் கேட்டுத் தெளிவதுபோல் கேட்பதுதான் நமது மரபு. தர்க்கிப்பது அல்ல.

    4. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வு களைதல் தமிழ் நாட்டில் ஒரு தொடர் நிகழ்வுதான். சில சமயம் வீரியத்துடனும், சில சமயம் மிதமாகவும் நடந்து வருவது அது. ஆதாரங்கள் நிறைய உண்டு. வீரியமாக நடந்தது மட்டுமே கவனம் பெறுகிறது. மேலும் சாதி அமைப்பில் ஏற்றத் தாழ்வு ஏற்பாடு என்பது ஒரே நிலையில் இருந்து வந்த அம்சம் அல்ல. நிலைமைக்கேற்ப இது மாறி மாறி வந்துள்ளது. தமிழ்ச் சமூக நிலவரம் பற்றிய ஆய்வுகள் நிறைய வந்துள்ளன. படித்துப் பார்த்தால் தெளிவடையலாம். வெறும் அக்கப் போர் பத்திரிகைகளையும் பொழுதுபோக்குப் பத்திரிகைகளையும் படித்தால் அரைகுறையான் புரிதல்கள்தான் சாத்தியம் (உங்களைச் சொல்லவில்லை. பொதுவாகத் தமிழனுக்கு இன்றுள்ள வாசிப்பு சுபாவத்தைத்தான் சொல்கிறேன்).

    5 தேர்தல் சமயங்களில் வேட்பாளாராகப் போட்டியிட விரும்பி விண்ணப்பிப்பவர்களிடம் காமராஜர் கேட்கும் முத்ல் கேள்வி எவ்வளவு செலவழிப்பாய், உன் தொகுதியில் எந்த சாதிக்காரன் அதிகம், உன் சாதிக்காரன் எத்தனைபேர் என்பதுதான். ஆரம்பத்திலிருந்தே அவர் தேர்தலை இப்படித்தான் எதிர்கொண்டு வந்தார். இந்தப் போக்கை நியாயப்படுத்தியும் வந்தார். இதை நான் நேரில் கண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. சிதம்பரம் தொகுதியில் பிள்ளைமார்களும் வன்ன்னியர்களும் மிகுதி. ஆனல் பணம் என்னவோ பிள்ளைமார்களிடந்தான். 1957-ல் காமராஜர் வழக்கம்போல் புது காங்கிரஸ்காரரும் செல்வந்தருமான வாகீசம் பிள்ளையை நிறுத்தினார். தொகுதி மிராசுகள் சிலர் அவருக்கு எதிராக கோபால கிருஷ்ண பிள்ளை என்கிற இன்னொரு செல்வந்தரைச் சுயேற்சையாக நிறுத்தினார்கள். அண்ணா பொன்.சொக்கலிங்கம் என்பவரை தி.மு.க. வேட்பாளராக நிறுத்தினார்.

    தி.மு.க.வுக்கு தேர்தலில் போட்டியிடுவது அதுதான் முதல் நேரடி அனுபவம். தொகுதி ஆய்வுக் கூட்டம் சிதம்பரத்தில் அண்ணா முன்னிலையில் நடந்த போது ஜாதி நிலவரம்பற்றியும் தவிர்க்க முடியாதபடி கட்சி முன்னணியினரிடமிருந்து பேச்சு எழுந்தது. அப்படியெனில் வாகீசம் பிள்ளை, கோபால கிருஷ்ண பிள்ளை இருவரும் ஒரே சாதியாதலால் பிள்ளைமார் ஓட்டுகள் பிரியும், வன்னியர் ஓட்டுகள் பொன் சொக்க்கலிங்கத்துக்கு விழுந்து சொக்கலிங்கம் ஜயித்துவிடலாம்போல் இருக்கிறதே என்று அண்ணா சிரித்துக்கொண்டே சொன்னார். அப்போது சொக்கலிங்கம் மெல்லிய குரலில் நானும் பிள்ளைதான் அண்ணா என்று தயக்கத்துடன் சொன்னார்! அட பாவி, நீ வன்னியன் என்றல்லவா இத்தனை நாளாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அண்ணா, வாய் கொள்ளமல் சிரித்தபடி! சொக்கலிங்கம் உள்ளிட்ட அனைவரும் அடக்க மாட்டாமல் சிரித்தோம்! அந்தத் தேர்தலில் சொக்கலிங்கம் இரண்டவதாகக் கூடுதல் வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். உடனே வன்னியன் என்கிற நினைப்பில்தான் சொக்கலிங்கத்துக்கு அண்ணா வாய்ப்பளித்தாரா என்று குதர்க்கமாகக் கேட்டுவிடலாகாது. வெறும் நகைச் சுவையாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் சாதி அடிப்படையினை அண்ணா ஒரு தகுதியாக நினைத்திருப்பின் வேட்பாளர் தேர்வின்போதே சொக்கலிங்கத்திடம் அவரது சாதியைப் பற்றிக் கேட்டுத் தெளிவுறத் தீர்மானித்திருப்பார்!

    அண்ணாவுக்கு சாதி வேற்றுமையுணர்வு மட்டுமல்ல, பிராமண துவேஷமும் ஒரு சிறிதும் இருந்ததில்லை. அவருக்கு சமயங்களில் மிகவும் ஒத்தாசையாக இருந்த நண்பர்களில் பலர் பிராமணர்களே. அது வெறும் சம்பிரதாயமான நட்பு அல்ல. காமராஜர் காலத்தில் ஈ.வே.ராவின் செல்வாக்கு காரணமாக தமிழக அரசில் பிராமண அதிகாரிகள் மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தனர். பக்த்வத்சலம் சொற்ப காலமே முதல்வராக இருந்ததால் அவர்களுக்கு நியாயம் செய்ய அவருக்கு அவகாசம் இருக்கவில்லை (பக்தவத்சலத்துக்கு பிராமண துவேஷம் இல்லை). அண்ணா அவர்கள் முதல்வரான பிறகுதான் பழி வங்கப்பட்ட பல பிராமண அதிகாரிகளுக்கு விமோசனம் பிறந்தது. இதற்கு ஏராளமான சான்றாக் இன்றும் பலர் உள்ளனர். உதாரணத்திற்கு ஒருவர்: வைகுந்த் ஐ.பி.எஸ். (ஓய்வு). அண்ணா முதல்வராக இருக்கையில், பக்தவத்சலம் காலத்திலேயிருந்தே தலைமைச் செயலராக இருந்து வந்த, கண்டிப்பு மிக்க சி.எஸ். ராமகிருஷ்ணன் ஐ சி எஸ். மீது தவறிழைத்து ஒதுக்கிவைக்கப்பட்ட அதிகாரிகள் சாதி பெயரைச் சொல்லி பாலக்காட்டு ஐயரான ராமகிருஷ்ணன் மீது புகார்களை அடுக்கினார்கள். அண்ணா அந்தப் புகார்களை ஒட்டு மொத்தமாகக் கிழத்துக் குப்பைக் கூடையில் எறிந்தார். நெகிழ்ந்துபோன ராமகிருஷ்ணன் அண்ணாவை எபோதுமே அண்ணா என்றுதான் அழைத்து வந்தார், உத்தியோக நிமித்தமாக அண்ணாவுடன் பேசும்போதுகூட! இதனை நேரில் கண்டு மகிழ்ந்தவன் நான். ராமகிருஷ்ணன் தமிழக அரசில் பதவி வகித்த கடைசி ஐ.சி.எஸ். அதிகாரி.
    -மலர்மன்னன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *